Aug 10, 2011

நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்


உங்களைவிட சக்தி வாய்ந்த அதிகாரத்தால் நிர்பந்திக்கப்பட்டு, உங்களுக்கு சற்றும் ஒப்புதலில்லாத உறுத்தல் நிறைந்த ஒரு அநியாயத்தைச்செய்ய நேர்ந்தால் அந்த உறுத்தலோடு எத்தனை நாட்கள் உங்களால் நிம்மதியாக உறங்கிட முடியும்….? இங்கே அந்தக் காரியம் எனக் குறிப்பிடுவது ”ஒரு கொலை” எனின்!

கேரள தேசத்தில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தை காவல்துறை ஒடுக்கிவந்த சி.ஆர்.பி பிரிவினரால் 1970ல் நண்பர் மூலமே காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு விடியலில் சிறைபிடிக்கப் படுகிறார் பழங்குடி மக்களுக்காகப்போராடும் தோழர் வர்க்கீஸ். சி.ஆர்.பி பிரிவில் சாதாரணக் காவலராகப் பணியாற்றிய 27 வயது ராமச்சந்திரன் நாயருக்குள் இருக்கும் பொதுவுடமைத் தத்துவமும், வர்க்கீஸ் மேல் இருக்கும் ஆதர்சமும் அவரையறியாமல் வர்க்கீஸ் மேல் ஒரு வாஞ்சையை உருவாக்குகிறது. காலையில் பிடிக்கப்பட்டு மாலை வரை அங்கிங்கென அலைக்கழிக்கப்பட்ட வர்க்கீஸை காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்த்த சூழலில், உயரதிகாரிகள் மூலம் ஒரு பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ராமச்சந்திரநாயர் உட்பட்ட நான்கு காவலர்களில் யாரோ ஒருவர்தான் வர்க்கீஸை சுட்டுக்கொல்லவேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள். நால்வரில் சுட மறுக்கும் ஒரே நபர் ராமச்சந்திரன்நாயர் என்பதால் அவரே சுட்டுக்கொல்லவேண்டும், இல்லாவிடில் அவரும் சேர்த்து சுட்டுக்கொல்லப்படுவார் எனும் மரண அச்சுறுத்தல் முன்னிறுத்தப்படும் போது வேறுவழியில்லாம் தன் ஆதர்சம் மிகுந்த வர்க்கீஸை சுட்டு வீழ்த்துகிறார்.

மீறப்பட்ட சட்டம், மறுக்கப்பட்ட நீதியென அந்தக் கொலை அவருக்குள் ஆறாத ரணமாய் உருவெடுக்கிறது. இருந்தும் அதைச் சுமந்துகொண்டே 28 ஆண்டுகள் அதே காவல்துறையில் பணியாற்றுகிறார். 

இந்தப் புத்தகம், மனதில் கனமாகப் படிவதற்கான முக்கியக் காரணம், அதில் இருக்கும் நேர்மை. நேர்மையை அடையாளப்படுத்தும் மிக முக்கியக்காரணி எந்த ஒரு இடத்தில் அந்த எழுத்து ராமச்சந்திரன்நாயர் மேல் எந்தப் புனிதத்தனத்தையும், கதாநாயகத்தன்மையையும் மயிரிழையளவுக்கும் புகுத்தப்படவில்லை. ஒழுக்கம், நேர்மை, தவறிழைக்காமை மட்டுமே அடையாளங்களாக் கொண்டு சித்தரிக்கப்படும் கதாநாயக நிழல் சற்றும் அவர் மேல் புகுத்தப்படவில்லை. ஆனாலும் புத்தகத்தை வாசித்துப் பல நாட்களுக்குப்பிறகும் மனதிற்குள் கதாநாயகனாகவே சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். அந்தப் பிம்பம் கட்டமைக்கப்பட்டது வெற்று நேர்மைகளால் மட்டுமே என்பதால் மட்டுமே.

காவலர் சங்கம் அமைக்கப் போராடியது, சபரிமலையில் கூடுதல் பைசா சம்பாதிக்கச் செய்யும் வரம்பு மீறல்கள், தனக்கு பிடிக்காத கடைக்காரனைப் பழிதீர்க்க செய்த சதித்திட்டம், சாலையில் நடந்துசெல்லும்போது வாங்கிய தர்ம அடி, அவ்வப்போது கை நீட்டி வாங்கிய கையூட்டு, கையூட்டாய் கிடைத்த சரக்கை நிறுத்திய போது அதற்கு மாற்றாக கிடைத்த காசு கொடுத்த குறுகுறுப்பு, 1985ல் தமிழகத்திற்கு சேலம் அருகே சேந்தமங்களத்துக்கு தேர்தல் பணிக்கு வந்த போது சாராயம் காய்ச்சுபவனிடம் வாங்கிய கையூட்டு-கோழிக்கறி-சாராயம், அங்கே இருந்த பெண்ணோடு கூடிக்கிடந்தது, ஆந்திராவில் பயிற்சிக்காலத்தில் உண்மைகளை மறைத்து ஓராண்டு ஒரு பெண்ணோடு வாழ்ந்தது, ஊருக்கு வந்து அதே பெண்ணுக்கு தன் முகவரி குறிப்பிடாமல் உண்மைகளைத் தெரிவித்து கடிதம் எழுதியது என ஒளிவு மறைவில்லாமல் அவர் ஒரு சுயநலம், பொதுநலம், அன்பு, குரோதம், காமம், கோபம், கோழைத்தனம் என எல்லாமும் நிறைந்த ஒரு மனிதனாக மட்டுமே தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார்.

ஒரு சிக்கலில் காவல்நிலையம் வரும் தன் தந்தையிடம், உதவி ஆய்வாளருக்கு கையூட்டு தர வேண்டுமென்று பொய்சொல்லி பணம் பிடுங்கும் போலீஸ்கார மகன், குடிபோதையில் நியூசென்ஸ் வழக்கில் கைதான ஒருவனை 250 ரூபாய் கையூட்டுக்கு ஆசைப்பட்டு சட்டப்பிரிவை மாற்றிப்போட்டு கிரிமனல் வழக்கில் சிக்கவிடும் போலீஸ்காரர், வழக்கு கொடுக்க வந்தவர் சிறிது நாட்களில் விசாரணைக்கு வந்த போலீஸ்காரரிடமிருந்து தன் மனைவியை மீட்டளிக்க புகாரளித்து என சமூகத்தில் இருக்கும் அத்தனை இயல்பான மலினங்களும் போலீஸ்காரர்களிடமும் குவிந்தே கிடக்கும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

தன்னைப்பற்றி எழுதிய குறிப்புகளில், அந்த எழுத்தில் இருக்கும் நேர்மையையொட்டியே அதில் இருக்கும் நிஜத்தை அப்படியே மனதில் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஒரு மனிதன், ஒரு போலிஸ்காரன் எப்படி இருப்பான் என்பதை அப்படியே அப்பட்டமாக பதிவுசெய்துள்ளார் ராமச்சந்திரன் நாயர்.

சிக்கல்களில் தன்னைக் காப்பாற்றிய அதிகாரிகள், தன்னை குறிவைத்து தண்டித்த உயரதிகாரிகள், நேர்மைத்திறனை நிலைநிறுத்திய அரசியல்வாதிகள், அலட்டிக்கொண்ட அரசியல் தலைவர்கள், தனக்கேற்பட்ட தற்காலிக பணிநீக்கங்கள், தடுக்கப்பட்ட சம்பள உயர்வுகள் என ஒரு கலகக்காரனாகவே தன்னைக் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

1970 பிப் 18ல் தன் கையால் உயிர் நீத்த வர்க்கீஸ் அவருக்குள் முரட்டுத்தனமாக வாழ்ந்துகொண்டேயிருக்கிறார். 1977ல் வர்க்கீஸின் வலது கரமாக அறியப்பட்ட தோழர்.வாசு-விடம் நிகழ்ந்த சம்பவம் குறித்து தெளிவாக எழுதிக்கொடுக்கிறார். அவர் மூலம் அது முற்றிலும் வெளிச்சத்துக்கு வந்து தானும், தன்னை அந்நிலைக்கு ஆட்படுத்திய அதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் என நம்பிக்கிடக்கிறார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொதெல்லாம் வர்க்கீஸை தாங்கள் கொலை செய்தது குறித்து காவல்துறை சகாக்களிடம் புலம்பிக்கொண்டேயிருக்கிறார். பெரும்பாலும் அது ஒரு முடிவுறா விவாதமாகவே, அதும் காவல்துறை அப்படிச்செய்ததில் என்ன தவறு என்ற இடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது.

வயது கூட, எல்லாம் வடிகிறது, நெஞ்சில் அழுத்தம் கூடுகிறது ஒரு வழியாய் 34 ஆண்டுகளாய் பணியாற்றிய உடுப்பிலிருந்து 1998 ஜூன்-ல் ஓய்வு பெற்றபிறகும் வர்க்கீஸ் மனதுக்குள் உருவேறிக்கிடக்கிறார். 1977ல் தோழர்.வாசுவிடம் கொடுத்த கடிதக்குறிப்பு ஏன் வெளிவரவில்லை என்ற ஆச்சரியம் மடிந்து கிடக்கும் வேளையில், 1998 அக்டோபர் மாத்யமம் வார இதழில் அது வெளிவருகிறது, ஊடக வெளிச்சம் அவர் மேலும், அவருக்குள் அடங்காமல் திரியும் வர்க்கீஸ் மரணத்தின் மேலும் படிகிறது.

1970ல் நிகழ்த்தப்பட்ட கொலைக்குற்றம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்காக உருவெடுக்கிறது. வழக்கை விசாரிக்கும் மத்திய புலனாய்வுத் துறை (CBI) ராமச்சந்திர நாயரையே முதல் பிரதிவாதியாக்குகிறது. உடன் இருக்கும் பிரதிவாதிகளுக்கு உயர்வான நிலையில் அரசுச் சக்கரம் உடனிருக்க வழக்கு நடக்கும் வேளையில், தன் குறிப்புகளை புத்தகமாக்குகிறார்.

“என்னைச் சுடுவதற்கு வற்புறுத்திய போலீஸ் அதிகாரிகளோடு ஒரு நாளாவது நான் சிறையில் இருக்க வேண்டும். அதற்காக எதையும் தாங்கிக்கொள்வேன்” என்ற ஆசை நிறைவேறாமலேயே ராமச்சந்திரன் நாயரின் உயிர், வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே பிரிந்தது.

வாசித்து முடிக்கும் போது அவரின் வாழ்க்கையோடு அப்படியே முழுக்க முழுக்க பயணித்த உணர்வு மேலும்புகிறது

அதே சமயம், வர்க்கீஸ் கொலைக்கு நியாயம் கிடைக்க ராமச்சந்திரன்நாயர் ஆழ்ந்து விரும்புவதின் காரணம் வெறும் சட்டத்தின் மீது கொண்ட பிடிப்பு மட்டுமேயல்ல என்பது புலனாகிறது. காரணம், அவரே சட்டத்தை 100% மதித்தவர் அல்ல என்பதை சூழலின் பொருட்டு சட்டத்தை மீறியது, வளைத்தது என பட உதாரணங்களின் மூலம் தெளிவாக்கியிருக்கிறார். ”தன் பார்வையில் ஆதர்சம் மிகுந்த நாயகனாய் பரிமளிக்கும் ஒருவனை தன்கையாலே வஞ்சக மிரட்டலில் கொலை செய்ய வைத்ததின் மனக்குறையே” அவர் வெளிச்சமிட முனைந்தற்கான காரணமாய் தோன்கிறது.

ராம்சந்திரநாயரின் பிம்பங்களாய் எல்லா மாநில காவல்துறையிலும் ஆயிரங்களில் இருப்பர், எல்லோரும் தாங்கள் வாழ்ந்ததற்கான சாட்சியங்களை முன்னிருத்தினால், எத்தனை முடிச்சுகள் அவிழும், நம் தமிழகத்தில் கூட சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த நாகப்பா, வீரப்பன், கோவை மோகன்ராஜ் என நீளும் பட்டியல்கள் உண்டு. ஆங்காங்கே வாழும் ராமச்சந்திரநாயர்கள் வாய் திறக்காமல் இன்னும் எத்தனை இரவுகள் உறங்குவார்கள் என நினைக்கும் போது ஒரு இனம்புரியா உணர்வு வந்து சூழ்கிறது, அப்படி நிகழ அவர்களிடம் ஏதோ ஒன்று சிறப்பாய் இருக்க வேண்டும். இல்லாவிடில் எல்லாம் காற்றில் அலையும் கதைகளாகவே கரைந்துவிடும்.

--------------------------------------------------
குறிப்பு:

மலையாள படைப்பை தமிழில் ஆகச்சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாக தந்திருக்கும் குளச்சல் மு.யூசுப் மிகவும் போற்றுதலுக்குரியவர்.

வெளியீடு மக்கள் கண்காணிப்பகம் (0452-2531874) பக்கம்: 211 விலை: ரூ.120

------

07 ஆகஸ்ட் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை. நன்றி திண்ணை!


-0-

Aug 9, 2011

எச்சங்கள்


மூச்சுத்திணறத் தழுவி தளரும் இருள்
தொலைத்த காதலை மீட்டும் பிறைநிலா
பாசமாய்ப் பிணைந்து பிரியும் குளிர்காற்று
எங்கெங்கோ தெரியும் சில வெளிச்சப்புள்ளிகள்
கைபேசி குறைசப்தத்தில் வழியும் இளையராஜா
ஏதோ தெருவில் தன் இருப்பை உ(கு)ரைக்கும் நாய்
உலகையே இரண்டாய்வெட்ட முயலத் துடிக்கும் இடி
உச்சியில் பொட்டென விழுந்து சிதறும் ஓர் மழைத்துளி
எப்போதாவது ஊரை வெளிச்சத்தில் குளிப்பாட்டும் மின்னல்
எங்கிருந்தோ கரைந்துவந்து காதுகளில் தீரும் ஒலிப்பான் ஒலி
ஏதோவொரு சன்னலில் மெதுவாய்க் கசியும் மழலையின் சிணுங்கல்
மின்சாரம் தொலையும் நள்ளிரவுகளின் மொட்டைமாடி உலாத்தல்களில்
மிதந்துகொண்டேயிருக்கிறது வாழ்க்கையின் சில எஞ்சிய கொண்டாட்டங்கள்

-0-

Aug 7, 2011

ஈரோடு புத்தகத் திருவிழா - சில பகிர்வுகள்

இப்போதுதான் சமீபத்தில் ஈரோடு பெருந்துறை சாலையில் இருந்த ராணா திருமண மண்டபத்தில் புத்தகத் திருவிழா ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் 7 வருடங்கள் கடந்துவிட்டது என்பதை வியப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. வளர்ச்சியின் அடையாளமாகவே ராணா திருமண மண்டபத்திலிருந்து வ.உ.சி. பூங்காவிற்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.



ஈரோடு பகுதி மக்களுக்காக திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் மக்கள் சிந்தனைப் பேரவையும் அமைத்துக் கொடுத்திருக்கும் இந்தப் புத்தகத் திருவிழா இந்தப் பகுதி மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை.

வெறும் கண்காட்சி, சந்தை எனப் பெயர் வைக்காமல் திருவிழா எனப் பெயரிட்டது அற்புதமான ஒரு முடிவும் கூட. இந்தப் பகுதியில் கொண்டாடும் எந்தவொரு பண்டிகையையும் விட அதிகமாக ஆவலோடு காத்திருந்து கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஈரோடு புத்தகத் திருவிழா.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு இதுவரை ஐந்து நாட்கள் சென்று வந்து விட்டேன். அதுவும் பலதரப்பட்ட நேரங்களில்.  தனிப்பட்ட முறையில் கவிஞர். மகுடேஸ்வரன் அவர்களை ஒரு சந்தர்ப்பத்திலும், மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களை பிறிதொரு சந்தர்ப்பத்திலும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் தமிழ்மணம் பரிசாக அளித்த புத்தகங்களே இன்னும் வாசிக்காத சூழலில் முடிந்தவரை புத்தகம் வாங்குவதை தவிர்த்தாலும் இதுவரை 8 புத்தகங்கள் அலமாரியை வந்தடைந்துவிட்டன. முந்தைய ஆண்டுகளில் புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இன்னும் சில வாசிக்கப்படாமல் கிடப்பதை நினைக்கும் போது பச்சை வெக்கம் படரத்தான் செய்கிறது.



புத்தகத் திருவிழா குறித்த சில துளிகள்:
  • பெரும்பாலான நேரங்களில் நல்ல கூட்டம் இருந்தது. ஓரிரு முறை அலையலையாய் நகரும் மக்களிடையே இடித்துக்கொண்டுதான் கடக்க வேண்டியிருந்தது. 
  • பலமுறை பல பதிப்பகங்களின் அரங்கிற்குள் நுழைய முடியாத அளவிற்கு கூட்டம் நின்று புத்தங்களை மேய்ந்து தின்று கொண்டிருந்தது. 
  • முதல்முறையாக 200 அரங்குகள் நிறுவப்பட்டுள்ளன. அரங்குகளுக்கு இடையே கடந்த ஆண்டைவிட அதிகமாக விடப்பட்டிருக்கும் நடைபாதை இடைவெளி வசதியாக இருக்கிறது. 
  • தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் நடத்தப்படும் கூட்டத்திற்கு வந்து குவியும் கூட்டம் பல்லாயிரக்கணக்கில். 
  • ஒவ்வொரு நாளும் மாலை சிந்தனை அரங்கில் நிகழ்த்தப்படும் உரைவீச்சு அடுத்த நாள் காலை முதல் குறுந்தகடாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஒலி வடிவில் ரூ.50 / காணொளி வடிவில் ரூ.60 
  • சிந்தனை அரங்கில் நான் பார்த்ததில் தமிழருவிமணியன் உரை நிகழ்வின் போது 6000 பேருக்கு மேல் மக்கள் இருந்தனர். சில நாட்களில் அதைவிடவும் கூடுதல் கூட்டம் வந்ததாகவும் தகவல். 
  • முந்தைய ஆண்டுகளில் நிகழ்த்தப் பட்ட உரைவீச்சுகளின் குறுந்தகடுகளும் கிடைக்கின்றன. இவை ஒரு அரிய பொக்கிசம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 
  • தினமணி அரங்கில் தினமணி நாளிதழ் & இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இரண்டிற்கும் சேர்ந்து ஒரு ஆண்டுச் சந்தா ரூ.550க்கு கிடைக்கிறது. 
  • பிரபல இலக்கிய பதிப்பகங்கள் தவிர்த்து, குழந்தைகளுக்கான ஆங்கிலப்புத்தகங்களை வைத்திருக்கும் அரங்குகளிலும் கூட்டம் வழிகிறது. 
  • பல விற்பனை அரங்குகளில் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து காகித அட்டை பைகளைத் தருகின்றனர்.  
  • மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்க ரூ.250க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக ஆர்வலர் என்ற சான்றிதழ் மக்கள் சிந்தனைப் பேரவையால் வழங்கப்படுகிறது.
  • குழந்தைகளின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 ரூபாய் மதிப்புள்ள அழகிய உண்டியல் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா தேதி பொறிக்கப்பட்டிருக்கிறது.
  • மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் உண்டியலில் சேர்க்கும் காசை அடுத்த வருடம் புத்தகத் திருவிழாவில் உடைத்து அதில் இருக்கும் தொகைக்கு புத்தகம் வாங்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • உடுமலை.காம் அரங்கு ஏன் இடம் பெறவில்லை என சில இணைய நண்பர்கள் விசாரித்தனர்.
  • குறிப்பிட்ட ஒரு சில பதிப்பக அரங்குகள் நான் பார்த்த பொழுதெல்லாம் காலியாகவே கிடந்தன.
  • எதிர்பார்த்து வந்த சில புத்தகங்கள் வரவில்லை என்றும் சில நண்பர்கள் சலித்துக்கொண்டனர்.

தன்னலம் சிறிதும் பாராது இந்தக் கொங்கு தேசத்தில் அறிவுத் தீபம் ஏற்ற முனைந்து, பல முயற்சிகளின்பால் இந்த திருவிழாவை தொடர்ந்து நிகழ்த்திவரும் மக்கள் சிந்தனைப் பேரவையும் திரு. ஸ்டாலின் குணசேகரனுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை எத்தனை முறை பகிர்ந்தாலும் அது தீராத கடனாகவே இருக்கும்

-0-

Aug 5, 2011

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இணைய உலகமே? - யாருக்கு யாரோ புகழ் "சாம்ஆண்டர்சன்"




இரண்டு வருடங்கள் இருக்கும், இந்தக் கொடுமையைப் பாருங்கள் எனப் பரிந்துரைக்கப்பட்ட சுட்டியில் இருந்த சினிமாப்பாடலையும்,  நடனத்தையும் பார்த்துவிட்டு உபரியாக அந்தப் பாடலின் கீழ் இடப்பட்ட பின்னூட்டங்களையும் கண்டு அதிர்ந்துபோனது நிஜம். அதன் கீழ் இருக்கும் பின்னூட்டங்களைக் கண்டு வயிறு வலிக்கச்சிரித்தாலும் அதில் இருக்கும் அறுவெறுப்பு சகிக்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. Youtube சுட்டிகள் ஒவ்வொன்றையும் பார்த்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதும் ஆச்சரியமாக இருந்தது. ”யாருக்கு யாரோ” புகழ் ”சாம் ஆண்டர்சனை” தமிழ் இணைய உலகம் தவிர்க்க இயலாமால் அவ்வப்போது பயன்படுத்தி சிரித்துச் சிரித்து சலித்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பது புரிந்தது.


சென்ற வார ஆனந்தவிகடனில் வந்த சாம்ஆண்டர்சன் குறித்த ஒரு நகைச்சுவை பேட்டிதான், பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை மீண்டும் சாம் ஆண்டர்சனை எடுத்துச் சென்றது. அதுவரை அவர் ஈரோடு எனத்தெரிந்தாலும் அவரைக் கண்டுபிடிப்பது இயலாததாகவே இருந்தது அல்லது பெரிதாக முயலவில்லை. விகடன் பேட்டியில் இருந்த சதர்ன் கூரியர் என்ற வார்த்தைதான் மீண்டும் அவரைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

”யாருக்கு யாரோ படம்”

செவ்வாய்க்கிழமை (02.08.11) காலையில் வந்தவுடன் இன்று எப்படியாச்சும் அந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று Youtubeல் ஒருவழியாய் வரிசையாய்ப் பார்த்து முடித்தவுடன், ”என்ன ஆனாலும் சரி இந்தாளை இன்னிக்கு எப்படியாச்சும் புடிச்சிடனும்”னு ஒரு கிறுக்குத்தனம் வந்தது. அப்போது நண்பர் கார்த்தியும் வந்து சேர, ஒரு வழியாய் சதர்ன்கொரியர் எண் பிடித்து அங்கிருக்கும் நண்பரிடம் சாம்ஆண்டர்சன் எண் வாங்குவது என முடிவு செய்து, உள்ளுக்குள் ஓடிய ஆயிரம் கேள்விகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, அந்த நண்பருக்கு போன் அடித்தேன். அவர் போனை எடுத்ததும் ”சாம்ஆண்டர்சன் உங்ககூடத்தான் இருக்கார!?” எனக் கேட்கும் போதே என் வார்த்தைகளை என் சிரிப்பே தின்று தீர்த்தது. ஒருவழியாய் அவரின் தொடர்பு எண்ணைப்பெற்று, அவரை அழைக்கலாமா வேண்டாமா என பல தயக்கங்களுக்குப் பிறகு ஒரு அசட்டுத்துணிச்சலில் அழைப்புவிடுத்தேன். 

வாகனத்தில் செல்லும் இரைச்சலோடு சாம்ஆண்டர்சன் போனை எடுத்தார். எனக்கு ”ஹலோ” சொல்லும் முன்னே மீண்டும் சிரிப்பு வந்து தொலைத்தது. சாம்ஆண்டர்சனா எனக் கேட்டு, அவர் ஆமாம் சொல்லுங்க என்று சொல்லும்முன்னே மீண்டும் எனக்கு சிரிப்பு கொப்பளித்து வந்தது. ஒருவழியாய் சமாளித்து பேச முற்பட, “என்ன விசயம், நீங்க யாரு சார்?” எனக்கேட்டார்.

கார்த்தியிடம் போனைக் கொடுத்து ”நீங்க பேசி சமாளிங்க” என்றுசொல்ல, அவரும் மறுத்து எஸ்கேப் ஆகிவிட, நான் டரியலாகி நின்றேன்

சட்டென “உங்கள் ரசிகன்” என்று அப்பட்டமாக அவரை ஓட்ட மனது வரவில்லை,

”இந்தமாதிரி இந்தமாதிரி விகடன்ல உங்க பேட்டி பார்த்தேன், நெட்ல உங்க படம் பார்த்தேன்” என ஒருமாதிரி சொதப்பி பேசத் துவங்கினேன்.

“நெம்பர் யாரு குடுத்தாங்க, நீங்க யாரு” என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் உளறி, ஒருவழியாய் “உங்களைச் சந்திக்கமுடியுமா, ஒரு பேட்டி எடுக்கனும்” என்றேன்.

அவரின் சந்தேகம் அப்போதுதான் அதிகரித்தது “நான் கூரியர் டெலிவரில இருக்கேன், எதுக்கு சார் பேட்டி எடுக்கனும், நீங்க யாரு, எங்கேயிருக்கீங்க,” என அவர் மடக்க.

என் பெயர் முகவரி எல்லாம் சொல்ல அவரே “சார் உங்க ஆபிஸ்க்கு வந்து நானே கூரியர் குடுத்திருக்கேன்” என்று சொல்லி பேச்சைக் கொஞ்சம் எளிதாக்கினார்.

உங்களை சந்திக்க முடியுமா என மீண்டும் கேட்க அவர் கூரியர் டெலிவரியில் திண்டல் பகுதியில் இருப்பதால், ”டெலிவரி முடிச்சிட்டு, சாப்டவே 4 மணிக்குத்தா வருவேன், நால்ர மணிக்கு உங்க ஆபிஸ்க்கே வர்றனே” என்றார்.

போனை வைத்த பிறகு, பேசியது நிஜம்தானா என்னை நானே ஒருநிமிடம் கேட்டுக்கொண்டேன். நண்பர் கார்த்தியிடம் ”சாம்ஆண்டர்சன் மாலை 4 மணிக்கு வர்றதா ஒப்புக்கொண்டார்” எனச் சொல்லிவிட்டு, சந்திப்பு குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, அவரைச் சந்திக்கும் தைரியத்துக்கு மக்களிடம் பாராட்டு வாங்கி காத்திருக்க ஆரம்பித்தேன். துணைக்கு லவ்டேல் மேடி, ஜாபர், கார்த்தி, கருவாயன் சுரேஸ் என ஆள் அம்போடு எப்போது 4 மணி ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம்.

மணி நாலைத் தாண்டியது, சாம்ஆண்டர்சன் மட்டும் வந்த பாடில்லை. மீண்டும் போன் அடிக்க, “சார் இப்போதா வீட்ல சாப்ட்டேன், ஒரு பத்து நிமிசம்” எனத் தள்ளிப்போட்டார். ஆவலோடு காத்திருந்த நண்பர்கள் காதில் புகைவழிய முறைக்க, 10……15….. 20 நிமிடம் ஆனது, அவர் வரவில்லை.

மீண்டும் அழைக்க இன்னொரு 5 நிமிடம் என்றார். ”வர்றேன்னு சொல்லிட்டு ஏமாத்துறாரோ” எனச் சந்தேகம் வந்தது. அதற்குள் லவ்டேல் மேடி “தல, சாம்ஆண்டர்சன் வராட்டி, இன்னிக்கு நீங்க தான் ட்ரீட்” என மிரட்ட ஆரம்பித்தார். ட்ரீட் என்பது ஒரு டீயும், க்ரீம் பன்னும்தான் என்றாலும் சாம்ஆண்டர்சன் வராமால் போனால், ட்விட்டர், ஃபேஸ்புக் உலகத்தில் எப்படி முகத்தைக் காட்டுவது என்ற குழப்பம்தான் (ங்கொய்யால இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)

ஒரு வழியாய் 5.15 மணிக்கு வந்து சேர்ந்தார், இணைய உலகம் பார்த்து ரசித்துக் கொண்டாடி, திட்டி மகிழ்ந்த ”ராசாத்தி ஏ ராசாத்தி” பாடல் நாயகன்.

PIT சுரேஷ் - சாம் ஆண்டர்சன்
கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள், அவர் ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்து அந்தப் படம் தியேட்டரிலும், ஜீ தொலைக்காட்சியிலும் கூட ஓடியது என்றால். நேரில் பார்த்தபோதுதான் அடையாளம் புரிந்தது நானும் அவரை சில முறை பார்த்திருக்கிறேன் என்பது.

நாங்கள் ஐந்து பேர் குழுவாக அமர்ந்திருப்பதைக் கண்டவுடன் அவரிடம் ஒரு திடுக்கிடல் தோன்றியது. ஒரு வழியாய் அறிமுகப்படலம் முடிந்து அவரின் சினிமா, இப்போது செய்துவரும் பணி, சமீபத்தைய விகடன் பேட்டி குறித்து பல விசயங்கள் உரையாடினோம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் அந்தப் படத்தின் இயக்குனர் அவரின் பெரியப்பா. மத்திய அரசு சார் நிறுவத்தில் இசைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவருக்கு ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசை, அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது கதாநாயகன் கிடைப்பதில் ஏதோ சிக்கல் வர, இவரை நடிக்கச் சொல்லியிருக்கார். தயாரிப்பு அவர்கள் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு. 

சாம் ஆண்டர்சன், லவ்டேல் மேடி, ஜாபர்

நடிப்பு என்பது துளியும் வராத அவரை வைத்து ஒரு வழியாய் படத்தை இயக்கியிருக்கிறார். முதல் காட்சியில் கதாநாயகியின் கையை பிடிக்கும் போது, நம்ம ஆள் பயத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். அது போன்ற பல சுவாரசிய சம்பவங்கள்

படத்தை வலிந்து சில திரையரங்குகளில் வெளியிட்டு ஓட்ட முயற்சி செய்து அதுவும் வெற்றியடையவில்லை. ஜீ டிவி அதை வாங்கியது ஒரு சிறு ஆறுதல். இரண்டு கதாநாயகி வேண்டும் என தீர்மானித்து வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்ய, அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போதே ஆயிரத்தெட்டு பந்தா செய்ய அவரை மாற்றி அவசர அவசரமாக வேறு பெண்ணை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்

நண்பர் ஜாபர் கேட்ட சில கேள்விகளில் குறிப்பாக ”படத்தின் தவறுகள் என்ன”வென்று கேட்டபோது, வெள்ளந்தியாக அவர் சொன்னது ”எல்லாமே தவறுதான் சார், அதிலும் நடிக்கவே தெரியாத நான் நடித்ததுதான் பெரிய தவறு” என்றார்.

படம் எடுத்த செலவுகள் குறித்துப்பேசும் போது, அப்போது செலவிட்ட தொகைக்கு ஒரு ரூட் பஸ் வாங்கியிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. படத்தை சென்சாரில் மட்டுமே பாராட்டியிருக்கிறார்கள், பார்த்தவர்கள் பலரும் எப்படியாவது தொடர்புகொண்டு கிண்டலடித்திருக்கிறார்கள் அல்லது திட்டியிருக்கிறார்கள். அனைவருக்கும் அவர் சொன்னது, சொல்ல விரும்புவது “ஒன்னுமே தெரியாம ஒரு முயற்சி எடுத்தேன், அது சொதப்பிடுச்சு, எல்லோருமே எடுத்தவுடனே 100 மார்க் வாங்கிடமுடியுமா, அந்தப் படத்திற்குப் பிறகுதான் பலவிசயங்கள் கற்றுக்கொண்டேன், இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். திட்றவங்க திட்டிட்டுப்போறாங்க சார்,” என்பதுதான்.

அடுத்து விகடன் பேட்டி குறித்து கேள்விகள் திரும்ப, விகடனும் எங்கெங்கோ தேடி ஜீ டிவி மூலம் தொடர்பு கிடைத்து தன்னிடம் பேசியதாகவும். விகடனில் வெளிவந்த பேட்டியில் பெரும்பாலானவை அவர்களாகவே நகைச்சுவைக்காக எழுதிக்கொண்டதாகவும் அப்பாவியாகச் சொன்னார். ஆனால், விகடன் பேட்டி வெளிவந்த பிறகு அவர் கூரியர் கொடுக்கச் செல்லுமிடத்தில் புதிது புதிதாக மக்கள் அடையாளம் கண்டு பேசுவதாகக் கூறினார்.

இணையத்தில் YouTubeல் அவரின் படக் காட்சிகளை பல லட்சம் முறை பார்த்திருப்பது, கேவலாமாகத் திட்டி கருத்துகள் வந்திருப்பது, சாம்ஆண்டர்சன் ரசிகர் குழு என்ற பெயரில் ஆர்குட்டில் 1800 பேர் & ஃபேஸ்புக்கில் 400 பேர் இருப்பது, அவருக்கென விக்கிப்பீடியாவில் ஒரு பக்கத்தில் அவரைப்பற்றிய குறிப்பு என்று பொய்யான தகவல்கள் இருப்பது, அவருடைய ”யாருக்கு யாரோ” ராசாத்தி ஏ ராசாத்தி பாடல் ”ராமசாமி” குறும்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது…. என்பது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்துக் கேட்கும் போது “அப்படியா சார், இப்படியெல்லாம் இருக்கா, விக்கிப்பீடியானா என்ன சார்” என அப்பாவியாக் கேட்ட போது கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

இணையம் குறித்து மருந்துக்கும் தெரியாத மனிதனையா, இந்த இணைய உலகம் இவ்வளவு குத்திக் குதறுகிறது (அ) கொண்டாடுகிறது?. ஒரு வகையில் அவரைக் குறித்து தரம் தாழ்ந்த வார்த்தைகளை அந்த மனிதன் பார்க்கவில்லையென்பதை நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்கியதாகச் சொன்னார், ஆனால் அதன் பயனர்பெயர் கூட அவருக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இன்னொரு படம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் எப்போது எப்படி என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யமுடியவில்லை என்றும் கூறினார்.

லவ்டேல் மேடி, நான், கார்த்தி, சாம் ஆண்டர்சன்
ஒரு சினிமாவில் நடித்திருக்கிறோம் என்ற பந்தா சிறிதும் இல்லாத வெகுளித்தனம் மட்டுமே நிறைந்த அவரைப் பார்க்கும் போது, சந்திக்கும் முன் வரை இருந்த கிண்டலும், குறும்பும், குறுகுறுப்பும் அன்பாக உருவெடுத்தது. சினிமாவில் நடித்துவிட்டோம் இனி எப்படியாவது சினிமாவிலேயேதான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் தினம் தினம் முகவரிகள் தேடித்தேடி கூரியர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இன்னொரு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் முடிந்தவரை நல்லபடியாக செய்யவேண்டும் என்ன எண்ணமும் ஆவலும் இருக்கிறது!
 
நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அவரைச் சந்தித்து இரண்டு நாட்கள் கழிந்தபின்பு இன்று YouTubeல் அந்தப் பாடலை பார்க்கும்போது சிரிப்பு பொங்கிவரத்தான் செய்தது ஆனால், அதற்கு கீழே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பார்க்க மனம் விரும்பவில்லை!
-0-

Aug 1, 2011

தேர் நோம்பி

சொந்த இடத்திலிருந்து அருகாமை நகரங்களுக்கு நகர்த்தப்பட்டவர்கள், எத்தனை பிடுங்கல்களை முன்னிருத்தி நகரத்திலேயே உழன்று கொண்டிருந்தாலும் அவர்களை அவ்வப்போது சொந்த ஊரை நோக்கி நகர்த்துபவைகளில் குறிப்பிடத் தகுந்தவை பொதுவான பண்டிகை நாட்களின் விடுமுறைகளும், அப்பகுதி கிராமத்து திருவிழாக்களும்தான்!

திருவிழாக்கள் கடவுளை முன்னிருத்தியே என்றாலும் அதில் மிஞ்சி நிற்பது கூடிமகிழும் மனிதர்களின் உறவுகள்தான். எங்கேங்கோ நகர்ந்து போனவர்களும்கூட, பால்யத்திலிருந்து பழகி, சூழலின் காரணமாய் பிரிந்த நட்புகளை சந்திக்க முடியுமோ என்ற சிறு நம்பிக்கையோடு ஏங்கி வருவது உள்ளூர் திருவிழாவிற்குதான்.

ஒவ்வொரு ஊருக்கும் திருவிழாவின் முக்கிய அடையாளங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். தீ மிதிப்பது, தேர் இழுப்பது, ஆயிரக்கணக்கான கிடாவெட்டு, விளக்கு அலங்காரம்,  கம்பம் பிடுங்குதல் என ஒவ்வொரு ஊர் திருவிழாவிற்கு ஒரு அடையாளம் இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்வதும், நவீன வடிவங்களுக்கு ஆட்படுவதும் தவிர்க்க இயலாததாகிவிட்டது.


பண்டிகை, திருவிழா என்பதின் கொங்கு வட்டாரச்சொல் நோம்பி. தீவாளி நோம்பி, தை நோம்பி என்றே பொதுவான பண்டிகைகளும் அழைக்கப்படும். ஏழெட்டு வருட இடைவெளிக்குப் பிறகு திகட்டத் திகட்ட ஒரு தேர் நோம்பியை வேடிக்கை பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.

தேர் இழுப்பது இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்வு. முதல் நாள் தேர் இழுப்பது தொடங்கி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர் நிறுத்தப்படும். அன்று தேர் நிறுத்தப்படும் இடத்திற்கு ஆலயத்துக்குரிய மவுசு கிடைத்துவிடும். தேரைச் சுற்றி திடீர்க் கட்டில் கடைகள் முளைக்கும். மூட்டையில் இருக்கும் உப்பை, ஒரு தட்டில் கொஞ்சமாகக் கொட்டி சில மிளகுகளைப் போட்டு, கொஞ்சம் குங்குமம் மஞ்சள் தூவி, தேர் கும்பிட வருபவர்களிடம் ”உப்புப்போட்டு சாமி கும்பிடுங்க” என நிர்பந்திப்பர். ஏன் உப்பு போடுகிறோம் என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. உப்புத் தட்டை விற்க விதவிதமான யுக்திகளை திடீர் கடைக்காரார்கள் கையாள்வர். உப்பு வாங்குபவர்களுக்கு கட்டிலுக்கு அடியில் செருப்பு விட்டுச்செல்ல சிறப்புச் சலுகை வழங்கப்படும்.

அடுத்தநாள் மாலை தேர் அங்கிருந்து கிளம்பி, நிலை சேர்வதுதான் சிறப்பான கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது. தேர் நிலை சேரும் சமயத்தில் எல்லா உப்புக் கடைகளையும் தேர்முட்டி அருகே மாற்றம் செய்து, அங்கும் அதே வியாபார யுத்தத்தில் தொடரும்.


இது போன்ற நோம்பிகளின் போது சாமி கும்பிடுவதைவிட, அங்கு வரும் கொண்டாட்டம்தான் பெரிதும் மகிழ்ச்சிக்குரியது. கொண்டாட்டம் என்பது கூட்டத்தில் கூட்டமாய் இருப்பதும், கூட்டத்திற்குள் இருந்துகொண்டு தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை ரசிப்பதுவும்தான். விதவிதமான உடைகளில் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து குவியும் மக்களைக் காண்பதே கண்ணுக்கும், மனதுக்கும் மிகப்பெரிய மலர்ச்சி. பள்ளி நாட்களுக்குப் பின் பிரிந்துபோய், திருமணமாகி, கணவன் குழந்தை குட்டிகள் என வரும் பெண்கள், அதே போல் வரும் சக தோழிகளை அடையாளம் கண்டு, உயரம், பருமன், நரை எல்லாம் அளந்து பார்த்து, அரங்கேறும் மகிழ்ச்சியை அளக்கக் கருவிகளும், கணவர் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகையில் சிதறும் வெட்கத்தை அள்ளிட மூட்டைகளும் போதாது.


நோம்பிக்குக் குவியும் கடைகள், கடைகளை மொய்க்கும் எல்லாத் தரப்பு மக்களும் தங்களை கொஞ்சம் புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக அமைகிறது. அதுவரை முக்கிய சாலையாக வாகனம் மட்டுமே உருண்டோடிக் கொண்டிருந்த சாலையில் வெள்ளமாய் அலையும் மனிதர்களை, கடைகளால் கரைகளாய் நின்று ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கும்.

”
வாங்கம்மா. வாங்கக்கா, எதெடுத்தாலும் பத்து ரூபாய்தான். பத்து ரூபாங்றது நீங்க ஒரு நாளைக்கு டீக் குடிக்கிற காசுதான். டீக்குடிக்கிற காசுல வீட்டுக்குத்தேவையான அருமையான பொருளை வாங்கிட்டுப்போங்க! இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்கள் விளம்பர வாகனம் புறப்படப் போகிறது. உடனே வந்து வாங்கிக்கொள்ளுங்க” என பதிவு செய்யப்பட்ட குரல் ஒரு கடையில் கரகரத்துக் கொண்டிருந்தது. நான்கு பக்கமும் நடப்பட்ட மரக்குச்சிகள் தாங்கிப்பிடிக்க மேலே ஒரு கூடாரத் துணியோடு எல்லாக் கடைகளுக்குள்ளும் குறைவில்லாமல் பொருட்கள் இரைந்து கிடந்தன.


விற்க விற்க தீராத திருவிழாக்கடைகள் எப்போதும் ஆச்சரியத்தை விதைப்பவை, எப்போதுதான் இந்தக் கடையின் பொருட்கள் எல்லாம் தீர்ந்து போகும். கூட்டமாய் வந்து மொய்த்து பொருட்களை எடுத்துப் பார்க்கும் கைகளை கவனமாக உற்றுக் கவனித்துக்கொண்டே விலை சொல்லிக் கொண்டிருந்தார்கள் கடைக்காரர்கள். சாலையோரம் நிற்கும் தள்ளுவண்டிகளில் சதுரமாய் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட வண்ண வண்ண அல்வாக்களின் மேல்பகுதியில் அடர்த்தியாய் படிந்து கொண்டேயிருந்தது குப்பைகள். பழுத்துச் சிவந்து கிடக்கும் மாம்பழக் கடையை கடக்கும் போது ஏனோ கார்பைட்கல் நினைவிற்கு வந்தது.

 
பெண்களின் தலையில் பயன்படுத்தும் பொருட்கள் வண்ணமயமாய் கொட்டிக் கிடந்த கடைகளில், எல்லாவித வயதுப் பெண்களும் குவிந்து கிடந்தார்கள். சாலையில் வளையத்தை அடிப்பக்கமாய் வைத்து இரும்புக் குழாயில் விதவிதமாய் கோர்த்த ஊதிகளில் ஒவ்வொன்றாய் சம இடைவெளியில் எடுத்து எடுத்து குழந்தைகள் கடக்கும் போதெல்லாம் சிரத்தையாய் ஊதிச் சோதித்துக்கொண்டிருந்தார் அந்த வியாபாரி. ஊதும் போது முளைக்கும் கொம்பும், ”ங்ங்ங்ங்கொய்ய்ய்ய்” என வீறிடும் சத்தமும் வாங்கித்தராத அம்மாக்களால் குழந்தைகளிடம் அழுகையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

 
தாவணிகள் எல்லாம் சுடிதார்களாய் உருவெடுத்திருந்தன. சின்னப்பையன்கள் கூட அரை டவுசரில் யாரும் தென்படவில்லை. மீசை அரும்பிய சில்வண்டுகள் கூட்டம் கூட்டமாய் ஜீன்ஸ் பேண்டும், இறுக்கமான சட்டையுமாய் தளர்ந்த நடைபோட்டுக் கொண்டிருந்தன. குழுவாய் நகர்பவர்களின் மொத்த நோக்கம் கவன ஈர்ப்பாகவே இருந்தது, அவ்வப்போது அது வெற்றியும் பெற்றுக் கொண்டிருந்தது.

 
டாஸ்மாக் ஆண்டவர் அருளாசியால் தளர்ந்து துவளும் உடலை உறுதியாக இருப்பதாகக் காட்டும்  முயற்சியில், யோசித்து யோசித்து நாட்டியமாய் நகரும் ஓரிரண்டு குடிமகன்கள், நிறம் வெளுத்த காக்கியில் கையில் நீண்ட தடியோடு மேம்போக்காய் கவனித்துக்கொண்டு நகரும் காவல்துறையினர் என எங்கும் விதவிதமான மனிதர்கள் வியாபித்துக் கிடந்தனர். இருமருங்கிலும் இருக்கும் கடைகளை இரண்டு மூன்று முறைகள் என சலிக்கச் சலிக்க சுற்றித் தீர்ந்த குழுக்களில் ”கால் வலிக்குது வீட்டுக்குப் போகலாம்” என அலுக்கும் முணுமுணுப்பு கசிந்து கொண்டிருக்கவும் செய்தது.

 
நிலைகொண்டிருந்த தேரை இழுக்கும் ஏற்பாடுகளின் முன்னேற்பாடாய் , ஒருவர் பறையடித்தபடி சென்றவர் பின்னே, ”ஓரமா நில்லுங்க” என குச்சியை சாலையில் தட்டியவாறு கூட்டத்தை இருபக்கமும் கரைசேர்க்கத் துவங்கினார். ஊர் முக்கியப் பிரமுகர்கள் முன் நடக்க பெரியதொரு கூட்டம் தேரைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலியை இழுத்துவர வித்தியாசமான ஓசையோடு தேர் மனித வெள்ளத்தினூடே நகர்ந்தது தன் இருப்பிடம் நோக்கி!

 
தேர் கடக்க, கூட்டம் களைய என நோம்பியின் வர்ணம் நீர்க்கத் துவங்கியது. சைக்கிள்களில் பெட்டி வைத்து ”ப்ப்ப்பூஃத்த்த்த்த்….ப்ப்ப்பூஃத்த்த்த்த்…”. என குச்சி ஐஸ் விற்கும் ஐஸ்காரர்கள் ஒருவரையும் காணோம். மினிடோர் வாகனத்தில் ஏற்றப்பட்ட நவீன பெட்டிகளோடு சாலையின் முகப்பில் பத்திற்கு மேற்பட்ட ஐஸ் வாகனங்கள் விதவிதமான பெயர்களைத் தாங்கி நின்று கொண்டிருந்தன. கடக்கும் குழந்தைகளைக் கலைத்து தன் பக்கம் ஈர்க்க அதிலிருந்த மணி ”ணங்… ணங்..” என அவ்வப்போது அடிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. வர்ணப்படம் பதித்த சின்னச்சின்ன கப்புகளில் ஏதோ ஒரு சுவை வர்ண ஐஸ்கிரீம்களை குழந்தைகளின் கைகளில் திணித்து விட்டு, வேட்டிக்குள் இருக்கும் பைக்குள் கைவிட்டு காசு எடுத்துச் தரும் தாத்தா, அப்பிச்சிகளிடம் காசுகளை வாங்கிக்கொண்டனர். ஒரு கட்டில் கடையில் மண்ணால் செய்யப்பட்ட உண்டியல்களில் குபேரன் சிரித்துக் கொண்டிருந்தார். காசு போட்டால்தான் உண்டி நிரம்பும் என்ற தத்துவார்த்தச் சிரிப்பாக இருக்கும் அது!.


கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் இருந்த விளையாட்டு கூடத்துப்பக்கம், பிள்ளைகள் பெரியவர்களை இழுத்துச்சென்று கொண்டிருந்தன. வர்ணம் உரிந்த விதவிதமான பெட்டிகளில் அமர்ந்து சுற்றும் தூரியும், கொஞ்சம் தத்தித்தத்தி வட்டத்தில் தாவிச் செல்லும் ட்ராகன் ரயிலும், தட்டாமாலை சுற்றும் தூரியும் என குழந்தைகள் பட்டாளம் இடம் பிடிக்க திமிறிக்கொண்டிருந்தன. எது விளையாடினாலும் இருபது ரூபாய் என எதோ பெயர் மட்டும் அச்சடித்த காகிதங்களைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு பக்கம் மரத்தூண்களை நட்டு, இடையில் அச்சுவைத்து, நான்கு செவ்வக
மரப்பெட்டிகளை அமைத்து, பெட்டிக்கு நால்வராய் அமர்த்தி கைகளால் தொங்கித் தொங்கிச் சுற்றும் ராட்டினத்தூரி நினைவுக்கு வந்தது. மடியோடு சேர்த்து காக்கிப் பையைக் கட்டியிருக்கும் தூரிக்காரர் நினைவுக்கு வந்து போனார். தூரி சுற்றும்போதே, ஒரு பெட்டியில் இருக்கும் பெண் தன் கைக்குட்டையை நிலத்தில் போடுவதும், வேறு பெட்டிகளில் இருக்கும் ஆண்கள் அடுத்த சுற்றில் அதை எடுக்க முனைவதும் என உயிர்ப்பாய் இருந்த கலகலப்பு, டீசல் ஜெனரேட்டர் மின்சாரத்தில் ”டொக் டொக் டொக்கடடொக்” என ஓடும் இயந்திர தூரிகளில் தொலைந்து போனதாகத் தோன்றியது.

ஒருவழியாய் எல்லாம் முடிந்து களைத்து சலித்து நகரும்போது, பசித்த மனது நிரம்பியதுபோல் இருந்தது. மனது நிரம்பியிருந்தாலும், நிறைவாக இல்லாத ஒரு உணர்வு உள்ளுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. நீர்த்துப் போன நிகழ்காலக் கலப்படச்சுவையும் காரணமாய் இருக்கலாம்!






-0-

குறிப்பு:
31ஜூலை 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை. நன்றி திண்ணை!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...