நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்


உங்களைவிட சக்தி வாய்ந்த அதிகாரத்தால் நிர்பந்திக்கப்பட்டு, உங்களுக்கு சற்றும் ஒப்புதலில்லாத உறுத்தல் நிறைந்த ஒரு அநியாயத்தைச்செய்ய நேர்ந்தால் அந்த உறுத்தலோடு எத்தனை நாட்கள் உங்களால் நிம்மதியாக உறங்கிட முடியும்….? இங்கே அந்தக் காரியம் எனக் குறிப்பிடுவது ”ஒரு கொலை” எனின்!

கேரள தேசத்தில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தை காவல்துறை ஒடுக்கிவந்த சி.ஆர்.பி பிரிவினரால் 1970ல் நண்பர் மூலமே காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு விடியலில் சிறைபிடிக்கப் படுகிறார் பழங்குடி மக்களுக்காகப்போராடும் தோழர் வர்க்கீஸ். சி.ஆர்.பி பிரிவில் சாதாரணக் காவலராகப் பணியாற்றிய 27 வயது ராமச்சந்திரன் நாயருக்குள் இருக்கும் பொதுவுடமைத் தத்துவமும், வர்க்கீஸ் மேல் இருக்கும் ஆதர்சமும் அவரையறியாமல் வர்க்கீஸ் மேல் ஒரு வாஞ்சையை உருவாக்குகிறது. காலையில் பிடிக்கப்பட்டு மாலை வரை அங்கிங்கென அலைக்கழிக்கப்பட்ட வர்க்கீஸை காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்த்த சூழலில், உயரதிகாரிகள் மூலம் ஒரு பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ராமச்சந்திரநாயர் உட்பட்ட நான்கு காவலர்களில் யாரோ ஒருவர்தான் வர்க்கீஸை சுட்டுக்கொல்லவேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள். நால்வரில் சுட மறுக்கும் ஒரே நபர் ராமச்சந்திரன்நாயர் என்பதால் அவரே சுட்டுக்கொல்லவேண்டும், இல்லாவிடில் அவரும் சேர்த்து சுட்டுக்கொல்லப்படுவார் எனும் மரண அச்சுறுத்தல் முன்னிறுத்தப்படும் போது வேறுவழியில்லாம் தன் ஆதர்சம் மிகுந்த வர்க்கீஸை சுட்டு வீழ்த்துகிறார்.

மீறப்பட்ட சட்டம், மறுக்கப்பட்ட நீதியென அந்தக் கொலை அவருக்குள் ஆறாத ரணமாய் உருவெடுக்கிறது. இருந்தும் அதைச் சுமந்துகொண்டே 28 ஆண்டுகள் அதே காவல்துறையில் பணியாற்றுகிறார். 

இந்தப் புத்தகம், மனதில் கனமாகப் படிவதற்கான முக்கியக் காரணம், அதில் இருக்கும் நேர்மை. நேர்மையை அடையாளப்படுத்தும் மிக முக்கியக்காரணி எந்த ஒரு இடத்தில் அந்த எழுத்து ராமச்சந்திரன்நாயர் மேல் எந்தப் புனிதத்தனத்தையும், கதாநாயகத்தன்மையையும் மயிரிழையளவுக்கும் புகுத்தப்படவில்லை. ஒழுக்கம், நேர்மை, தவறிழைக்காமை மட்டுமே அடையாளங்களாக் கொண்டு சித்தரிக்கப்படும் கதாநாயக நிழல் சற்றும் அவர் மேல் புகுத்தப்படவில்லை. ஆனாலும் புத்தகத்தை வாசித்துப் பல நாட்களுக்குப்பிறகும் மனதிற்குள் கதாநாயகனாகவே சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். அந்தப் பிம்பம் கட்டமைக்கப்பட்டது வெற்று நேர்மைகளால் மட்டுமே என்பதால் மட்டுமே.

காவலர் சங்கம் அமைக்கப் போராடியது, சபரிமலையில் கூடுதல் பைசா சம்பாதிக்கச் செய்யும் வரம்பு மீறல்கள், தனக்கு பிடிக்காத கடைக்காரனைப் பழிதீர்க்க செய்த சதித்திட்டம், சாலையில் நடந்துசெல்லும்போது வாங்கிய தர்ம அடி, அவ்வப்போது கை நீட்டி வாங்கிய கையூட்டு, கையூட்டாய் கிடைத்த சரக்கை நிறுத்திய போது அதற்கு மாற்றாக கிடைத்த காசு கொடுத்த குறுகுறுப்பு, 1985ல் தமிழகத்திற்கு சேலம் அருகே சேந்தமங்களத்துக்கு தேர்தல் பணிக்கு வந்த போது சாராயம் காய்ச்சுபவனிடம் வாங்கிய கையூட்டு-கோழிக்கறி-சாராயம், அங்கே இருந்த பெண்ணோடு கூடிக்கிடந்தது, ஆந்திராவில் பயிற்சிக்காலத்தில் உண்மைகளை மறைத்து ஓராண்டு ஒரு பெண்ணோடு வாழ்ந்தது, ஊருக்கு வந்து அதே பெண்ணுக்கு தன் முகவரி குறிப்பிடாமல் உண்மைகளைத் தெரிவித்து கடிதம் எழுதியது என ஒளிவு மறைவில்லாமல் அவர் ஒரு சுயநலம், பொதுநலம், அன்பு, குரோதம், காமம், கோபம், கோழைத்தனம் என எல்லாமும் நிறைந்த ஒரு மனிதனாக மட்டுமே தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார்.

ஒரு சிக்கலில் காவல்நிலையம் வரும் தன் தந்தையிடம், உதவி ஆய்வாளருக்கு கையூட்டு தர வேண்டுமென்று பொய்சொல்லி பணம் பிடுங்கும் போலீஸ்கார மகன், குடிபோதையில் நியூசென்ஸ் வழக்கில் கைதான ஒருவனை 250 ரூபாய் கையூட்டுக்கு ஆசைப்பட்டு சட்டப்பிரிவை மாற்றிப்போட்டு கிரிமனல் வழக்கில் சிக்கவிடும் போலீஸ்காரர், வழக்கு கொடுக்க வந்தவர் சிறிது நாட்களில் விசாரணைக்கு வந்த போலீஸ்காரரிடமிருந்து தன் மனைவியை மீட்டளிக்க புகாரளித்து என சமூகத்தில் இருக்கும் அத்தனை இயல்பான மலினங்களும் போலீஸ்காரர்களிடமும் குவிந்தே கிடக்கும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

தன்னைப்பற்றி எழுதிய குறிப்புகளில், அந்த எழுத்தில் இருக்கும் நேர்மையையொட்டியே அதில் இருக்கும் நிஜத்தை அப்படியே மனதில் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஒரு மனிதன், ஒரு போலிஸ்காரன் எப்படி இருப்பான் என்பதை அப்படியே அப்பட்டமாக பதிவுசெய்துள்ளார் ராமச்சந்திரன் நாயர்.

சிக்கல்களில் தன்னைக் காப்பாற்றிய அதிகாரிகள், தன்னை குறிவைத்து தண்டித்த உயரதிகாரிகள், நேர்மைத்திறனை நிலைநிறுத்திய அரசியல்வாதிகள், அலட்டிக்கொண்ட அரசியல் தலைவர்கள், தனக்கேற்பட்ட தற்காலிக பணிநீக்கங்கள், தடுக்கப்பட்ட சம்பள உயர்வுகள் என ஒரு கலகக்காரனாகவே தன்னைக் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

1970 பிப் 18ல் தன் கையால் உயிர் நீத்த வர்க்கீஸ் அவருக்குள் முரட்டுத்தனமாக வாழ்ந்துகொண்டேயிருக்கிறார். 1977ல் வர்க்கீஸின் வலது கரமாக அறியப்பட்ட தோழர்.வாசு-விடம் நிகழ்ந்த சம்பவம் குறித்து தெளிவாக எழுதிக்கொடுக்கிறார். அவர் மூலம் அது முற்றிலும் வெளிச்சத்துக்கு வந்து தானும், தன்னை அந்நிலைக்கு ஆட்படுத்திய அதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் என நம்பிக்கிடக்கிறார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொதெல்லாம் வர்க்கீஸை தாங்கள் கொலை செய்தது குறித்து காவல்துறை சகாக்களிடம் புலம்பிக்கொண்டேயிருக்கிறார். பெரும்பாலும் அது ஒரு முடிவுறா விவாதமாகவே, அதும் காவல்துறை அப்படிச்செய்ததில் என்ன தவறு என்ற இடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது.

வயது கூட, எல்லாம் வடிகிறது, நெஞ்சில் அழுத்தம் கூடுகிறது ஒரு வழியாய் 34 ஆண்டுகளாய் பணியாற்றிய உடுப்பிலிருந்து 1998 ஜூன்-ல் ஓய்வு பெற்றபிறகும் வர்க்கீஸ் மனதுக்குள் உருவேறிக்கிடக்கிறார். 1977ல் தோழர்.வாசுவிடம் கொடுத்த கடிதக்குறிப்பு ஏன் வெளிவரவில்லை என்ற ஆச்சரியம் மடிந்து கிடக்கும் வேளையில், 1998 அக்டோபர் மாத்யமம் வார இதழில் அது வெளிவருகிறது, ஊடக வெளிச்சம் அவர் மேலும், அவருக்குள் அடங்காமல் திரியும் வர்க்கீஸ் மரணத்தின் மேலும் படிகிறது.

1970ல் நிகழ்த்தப்பட்ட கொலைக்குற்றம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்காக உருவெடுக்கிறது. வழக்கை விசாரிக்கும் மத்திய புலனாய்வுத் துறை (CBI) ராமச்சந்திர நாயரையே முதல் பிரதிவாதியாக்குகிறது. உடன் இருக்கும் பிரதிவாதிகளுக்கு உயர்வான நிலையில் அரசுச் சக்கரம் உடனிருக்க வழக்கு நடக்கும் வேளையில், தன் குறிப்புகளை புத்தகமாக்குகிறார்.

என்னைச் சுடுவதற்கு வற்புறுத்திய போலீஸ் அதிகாரிகளோடு ஒரு நாளாவது நான் சிறையில் இருக்க வேண்டும். அதற்காக எதையும் தாங்கிக்கொள்வேன் என்ற ஆசை நிறைவேறாமலேயே ராமச்சந்திரன் நாயரின் உயிர், வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே பிரிந்தது.

வாசித்து முடிக்கும் போது அவரின் வாழ்க்கையோடு அப்படியே முழுக்க முழுக்க பயணித்த உணர்வு மேலும்புகிறது

அதே சமயம், வர்க்கீஸ் கொலைக்கு நியாயம் கிடைக்க ராமச்சந்திரன்நாயர் ஆழ்ந்து விரும்புவதின் காரணம் வெறும் சட்டத்தின் மீது கொண்ட பிடிப்பு மட்டுமேயல்ல என்பது புலனாகிறது. காரணம், அவரே சட்டத்தை 100% மதித்தவர் அல்ல என்பதை சூழலின் பொருட்டு சட்டத்தை மீறியது, வளைத்தது என பட உதாரணங்களின் மூலம் தெளிவாக்கியிருக்கிறார். ”தன் பார்வையில் ஆதர்சம் மிகுந்த நாயகனாய் பரிமளிக்கும் ஒருவனை தன்கையாலே வஞ்சக மிரட்டலில் கொலை செய்ய வைத்ததின் மனக்குறையே” அவர் வெளிச்சமிட முனைந்தற்கான காரணமாய் தோன்கிறது.

ராம்சந்திரநாயரின் பிம்பங்களாய் எல்லா மாநில காவல்துறையிலும் ஆயிரங்களில் இருப்பர், எல்லோரும் தாங்கள் வாழ்ந்ததற்கான சாட்சியங்களை முன்னிருத்தினால், எத்தனை முடிச்சுகள் அவிழும், நம் தமிழகத்தில் கூட சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த நாகப்பா, வீரப்பன், கோவை மோகன்ராஜ் என நீளும் பட்டியல்கள் உண்டு. ஆங்காங்கே வாழும் ராமச்சந்திரநாயர்கள் வாய் திறக்காமல் இன்னும் எத்தனை இரவுகள் உறங்குவார்கள் என நினைக்கும் போது ஒரு இனம்புரியா உணர்வு வந்து சூழ்கிறது, அப்படி நிகழ அவர்களிடம் ஏதோ ஒன்று சிறப்பாய் இருக்க வேண்டும். இல்லாவிடில் எல்லாம் காற்றில் அலையும் கதைகளாகவே கரைந்துவிடும்.

--------------------------------------------------
குறிப்பு:

மலையாள படைப்பை தமிழில் ஆகச்சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாக தந்திருக்கும் குளச்சல் மு.யூசுப் மிகவும் போற்றுதலுக்குரியவர்.

வெளியீடு மக்கள் கண்காணிப்பகம் (0452-2531874) பக்கம்: 211 விலை: ரூ.120

------

07 ஆகஸ்ட் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை. நன்றி திண்ணை!


-0-

7 comments:

Chitra said...

வாசித்து முடிக்கும் போது அவரின் வாழ்க்கையோடு அப்படியே முழுக்க முழுக்க பயணித்த உணர்வு மேலும்புகிறது


..... இதுதான் வாசிப்பனுபவம். எழுத்தாளரின் வெற்றி கூட.

.....நல்ல பகிர்வுங்க. நன்றி.

சத்ரியன் said...

//வயது கூட, எல்லாம் வடிகிறது..//

கதிர்,
வாசிப்பு அனுபவத்தைப் பகிர்வதிலும் உங்களின் செய் நேர்த்தி புலப்படுகிறது.

அகல்விளக்கு said...

நல்ல அறிமுகம் அண்ணா...

நிச்சயம் படிக்கவேண்டியவனவற்றுள் சேர்த்துள்ளேன்... :)

settaikkaran said...

//ஒழுக்கம், நேர்மை, தவறிழைக்காமை மட்டுமே அடையாளங்களாக் கொண்டு சித்தரிக்கப்படும் கதாநாயக நிழல் சற்றும் அவர் மேல் புகுத்தப்படவில்லை//

உண்மையைச் சொல்கிறவர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய கடமை, நிஜத்துக்கு முலாம் பூசி நகாசு வேலை செய்யாமல் இருப்பதே! அதை இந்த நூலில் நீங்கள் கண்டறிந்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிற விஷயம். இல்லாவிட்டால், உண்மையான நிகழ்வுகளின் தொகுப்புகளிலும் சற்றே பொய்தாளிக்கிற வியாபாரக்குயுக்தி அதிகரித்து விட்டதோ என்று ஆதங்கப்படுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும்!

நல்ல பகிர்வு கதிர்!

சிவாஜி said...

நல்ல பகிர்வு. நன்றிங்க சார்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
இதுதான் வாசிப்பனுபவம். எழுத்தாளரின் வெற்றி கூட.

Kumky said...

நல்ல வாசிப்பனுபவம்...

மிகை குறை இல்லாத பகிர்தல்...

ஆனால் புத்தகம்தான் கிடைத்த பாடில்லை...

ஆவன செய்யவும்.