Aug 4, 2018

உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :1


ஒரு கட்டுரை குறித்து ”அருமை... மிகவும் அருமை” என்பது போன்ற பின்னூட்டங்கள் மட்டும் உவப்பளிப்பதில்லை. இசைவான மற்றும் மாற்றுப் பார்வையை அளிப்பதுவும், இன்னொரு தளத்திற்கு நகர்த்துவதுமான உரையாடல் என்பதே அந்தக் கட்டுரையின் வெற்றியெனக் கருதுவேன்.

உதிரத்தின் நிறம் உரிமை – எனும் கட்டுரை குறித்து ஃபேஸ்புக் / வாட்சப்பில் பகிரப்பட்ட கருத்துகள் தொகுப்பு -1


*******

My wife crying After reading this. She wants to say thanks to you. She will call you soon

*

ஒவ்வொரு பெண்ணும் ஒரு கொடுமையான அனுபவத்தை கடந்துதான் வந்திருகக் வேண்டும். ஆனால் நான் எல்லாவற்றையும் கொஞ்சம் உடைக்கப் பழகிக் கொண்டேன். அந்த கட்டுக்கோப்புகளை நான் தாண்டும்போது தட்டிக் கொடுப்பது ஆணாக இருந்தாலும் தடுப்பது பெண்கள்தான்.

அலுவலகத்தில் கையில் எடுத்துக் கொண்டு பாத் ரூம் போனால் உடன் இருக்கும் தோழிகள்தான் கிண்டலடிப்பார்கள் மறைத்துக் கொண்டு போ என்று. ஆண்கள் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை

இந்த சமூகம் இந்த விஷயத்தில் திருந்தும் என்பது நம் காலத்தில் இல்லை. இன்னமும் flex அடித்து சீர் செய்கிறார்கள்

*

உண்மையில் உங்க பேட்மேன் சேலன்ஜ் அப்போதான் அதுல என்ன இருக்குன்னே பார்த்தேன்...திருமணமான இந்த 14 ஆண்டுகளில்... நானும் செஃல்பி எடுத்தேன்... ஆனா போடல... ஏன்னு எனக்கும் தெரியல...

*
ஏற்கனவே தெரிந்த/அறிந்த விஷயம் என்றாலும், பிற்போக்காகத்தண்நாம் அதைக் கையாள்கிறோம்.

என்னுடைய பத்து வயதில் என் அப்பா இதைப்பற்றிய புரிதலை எனக்கு ஏற்படுத்தினார்.

"தீட்டு என்பதெல்லாம் இல்லை. மாதத்திற்கு ஒருமுறை ரத்தம் சுத்திகரிக்கப்படும்போது தேவையற்ற ரத்தம் வெளியேறுகிறது. அதில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அந்த நேரத்தில் பெண்களை தொடக்கூடாது என்கிறார்கள்" இதுதான் அவர் கூறியது.

என் இரண்டு பெண்களுக்கும் (தற்போது 14,7 வயது) சிறு வயதிலேயே மாதவிடாய் பற்றி என்னால் முடிந்த அளவு சொல்லி மனதளவில் அவர்களை தயார்படுத்தி இருக்கிறேன். இது என் அப்பாவிடமிருந்து நான் கற்றது...

நீங்கள் இதை ஒரு சமூகத்திற்கே கற்றுக் கொடுக்க முயல்கிறீர்கள்.
இந்தக் கட்டுரை படிப்பவர் மனதில் ஒரு புரிதல்/மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

*

From this article I got one point about my research. Thanks Anna

*

This should taught by mothers to their sons. Then these issues will solve meticulously. Even I remember the days my mom scolded me asking about this.

*

மாத விடாய் நாட்களின் தாக்கம் கூட ஒவ்வொரு பருவத்திலும் மாறுகிறது. அதையெல்லாமும் கூட குடும்பத்தினருக்கு சொல்லிக் கொடுக்கணும். பதின் பருவக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் பாடமாகச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல எத்தன பள்ளிகளில் இது நடக்குதுன்னு தெரியல. இங்கல்லாம் பெண் குழந்தைகள் பயமில்லாமல் தெளிவா எதிர் கொள்ளறதப் பாக்கறப்போ, நான் முதல் முறை அழுததுதான் நினைவுக்கு வருது. ஆனால் இப்போஎனக்கு நடக்கும் உடல் மாறுபாடுகளை என் குழந்தைகளிடம் பகிர்கிறேன். மகளுக்கு இன்னும ஆரம்பிக்கலைன்னாலும், எல்லாமே தெரியும்.

பள்ளித்துறையின் சமீபத்திய மாறுதல்கள் நம்பிக்கை கொடுக்குது. பாக்கலாம்...

*

The understanding has to come from small age. That is why i like the work you people are doing. If we teach the kids it will improve a generation

*

எம் பையன் எனக்கும் மகளுக்கும் நாப்கின் வாங்கி வருகிறான். அந்த நாட்களைப் பற்றிய ரகசியம் வீட்டில் இல்லை. எங்கள் வலி பற்றிய வெளிப்படை பேச்சு வீட்டில் உண்டு

*
உண்மை நிகழ்வுகளை உன்னதமான எழுத்துக்களால் உனக்கே உண்டான வடிவில். பெரும்பாலான பெண்களிடம் இன்றைக்கும் இருக்கும் தயக்கத்தை மிகவும் அழகாக எடுத்துரைத்து மனதில் எழுச்சியை ஏற்படுத்தியதற்காக பாராட்டுக்கள்

*

நேர்த்தியாக வெளிப்படுத்துதல்...
வீண் வார்த்தைகள், கற்பனை புனைவுகள் கடும் சொற்கள் ஏதுமின்றி படித்து, சிந்திக்கவைப்பது உங்களது எழுத்தின் சிறப்பு

*

Melted down. Thanks for the sharing

*

இதில் நானும் இன்னும் ஒரு குற்றவாளி தான் சார் .... வேண்டுமென்று தவிர்ப் பதில்லை இருந்தாலும் இது பற்றி கண்டு கொள்வதில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்கள் அம்மா & அக்காவெல்லாம் அந்த நாட்களில் தனி அறை , தனி படுக்கை , காலையில் குளித்து முடித்து பின் சமையல் , என்னென்னவோ வாங்க எத்தனை முறை கடைகளுக்கு அனுப்பினாலும் இந்த நாப்கின் வாங்க மட்டும் சொல்லாமல் , அவர்களே வாங்கி வந்து வீட்டில் ஒதுக்குப்புறமாக வைப்பது , இது போல பல வகைகளில் தள்ளியே இருந்ததால் அதைப் பற்றிய எந்த அறிவும் & யோசனையும இல்லாமல் கடந்து வந்து விட்டு இப்போது வூட்டம்மா அந்த அளவு கட்டுப்பாடு இல்லாமல் சாதாரண நாட்கள் போல கடப்பதை பார்த்து மகிழ்ச்சி தான் இருந்தாலும் அந்த நாட்களில் அவர்கள் வலியை உணர எண்ணினாலும் அது பற்றி பேசியதே இல்லை என்பது தான் எனக்கு குற்றவாளி போன்று உணர வைக்கும் சார் , ஆனாலும் அடுத்த முறையாவது அந்த நாட்களில் விசாரிக்க வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் செய்ததில்லை, இந்தக் குற்ற உணர்ச்சியால் தான் அந்த பேட்மேன் சேலஞ்ச்ல கூட கலந்து கொள்ள மனம் இடம் தரலை

*
இன்றளவிலும் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் பெண்களாகிய எங்களுக்கு உங்களவு யோசிக்கவோ கேக்கவோ பேசவோ வருத்தப்பட ஆளில்லை என்பதே நிதர்சனமான உண்மை பெண் ஜென்மத்திற்க்கே உண்டான வலிகள் வேதனைகள் அனுபவித்தே ஆகவேண்டும் அவ்வளவுதான்

*
அந்த ஆரோக்கிய சூழல் பள்ளியில் மட்டுமல்லாமல் , சமூகத்திலும் , குறிப்பாக வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆண்களின் பங்கு சரிசமமானது.

*
தங்களால், என்னால் இவ்வளவு உணர்ந்து கொள்ள முடிந்தமைக்கு நன்றி.

ஆனால் சென்னை வெள்ள பேரிடர் துயரத்தின்பொழுது சென்னைGST bhavan யில் உள்ள அதிகாரிகள் ஒண்றிணைந்து whatsapp group எற்படுத்தி இச்சிறியோனையும் அக்குழுவில் உள்ள நல்லிதயமீக்க நண்பரினால் இணைக்கப்பட்டேன்.
எவ்வாறு இக்குழு உருவானதெனில் அத்துறையில் உள்ள கருணையே வடிவான உயர் பெண் அதிகாரி அப்பேரிடாரின் பொழுது கூவம் அற்றங்கரையின் பாலத்தில் நின்று கவனித்தப் பொழுது குடிசைவாழ் பெண்களின் மேற்குறித்த துயரத்தை மனதில் உள்வாங்கி whatsapp group தொடங்கி சென்னையின் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் நாப்கின்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையானப் பொருட்கள் வழங்கி இறுதியில் whatsapp group அவரால் நல் உள்ளங்களுக்கு வாழ்த்துச் சொல்லி முற்றுப் பெற்றது சார்.
இச்சிறியோனும் அவர்களால் அன்றுணர்ந்தேன் வலியை இரு பெண் குழந்தைகளின் தகப்பனாக..

*
Excellent ....
இதை எழுதக்கூட ஒரு தைரியம் வேணும்....
கடவுளையே சபிக்கத் தோணும் பல கடினமான நேரங்கள்ல....
என்ன செய்ய....

*

படித்தவர்களே சில நேரங்களில் சில இடங்களில் பேச முடியவில்லை

*
இன்றைக்கும் எங்கள் நிறுவனத்தில் மாதவிடாய் ஏற்பட்டதை வெளிப்படையாக சொல்ல தயங்கும் பெண்களே அதிகம்.

*
People don’t have awareness about mensuration .. let us forward max

*

இங்கே பல பெண்களின் நிலைப்பாடு இது தான்..மெனோபாஸ் காரணமாக பதினைந்து நாட்களாக உதிரப் போக்கு அவஸ்தை மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு முடிந்து இன்று ஓரளவு பரவாயில்லை என்று பணியில் வந்தேன் .திங்கள்தான் பணியில் சேரலாம் என்று இருந்தேன் ..கடுமையாகத் தான் பேசினார்கள் எங்கள் தலைமை ...கண்களில் நீரொடு கடமை யாற்ற வேண்டிய சூ ழல் .நீங்க அந்த பெண் கிட்ட கேட்டத்தும் அவள் ரியாக்சனும் நெகிழ வைத்து விட்டது .பெண்கள் எல்லோரும் இதைக் கடந்து வந்தாலும் சக பெண்களிடம் ஏன் இப்படி இருக்கிறார்கள்..சில இடங்களில் மாமியார் தொல்லை..சில இடங்களில் கணவர் .சில இடங்களில் உயரதிகாரிகள்...

பெண்களுக்கான பிரச்சனைகளை இவ்வளவு அழகாக பெண்களால் கூட சொல்ல முடியாத அளவு அருமையாக நட்புணர்வுடன், தந்தையுள்ளத்துடன் எழுதிருக்கீங்க...

*

படிப்பவர்களை யோசிக்கவும் பின்பற்ற வைக்கவுமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது

*

இந்த விடயங்களில் நம் வீடுகளில் பெண்களுக்குப் பெண்களே தனிமைப்படுத்துகிறார் களே... அம்மாக்கள் நாசூக்காகவும்.... மாமியார்கள் அதட்டலாகவும் ... பிறகு நாம் என்ன செய்ய ...

*


பள்ளிக்கு செல்லும் குழந்தை மாலை வரை ஒரே நாப்கினை பயன்படுத்தினால் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகம் என்பதால் 20162ல் ஜேஸீஸ் மண்டலம் 17-ன் தலைவரின் சிறப்பு திட்டமாக நாப்கின் லெண்டிங் மிசின் இன்சினேட்டர் மிஷின்களை அரசு பள்ளிகளில் நிறுவும் திட்டத்தை கொண்டு வரப்பட்டது. அது 2016 ஆம் ஆண்டு தேசிய தலைவரின் திட்டமாக அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் செயல் படுத்த பட்டது.

*

பெரிய படிப்பில்லாதவராக இருந்தாலும் எங்க அப்பா, இதில் ரொம்ப அட்வான்சாக இருந்தாங்க. நான் சிறுவனாக இருந்தபோது அம்மா மறைத்து வைத்திருந்த நாப்கினை எடுத்து இது என்ன என கேட்க, அம்மா என்னை திட்டிவிட்டு அதை பிடுங்கி வேறு மறைவான இடத்தில் வச்சிட்டாங்க.

அப்பா தோட்டத்தில் இருந்து வந்தவுடன் இதை நான் சொல்ல, உடனே அப்பா அந்த நாப்கினை எடுத்து வந்து எனக்கு புரியும் வகையில் சொன்னாங்க.

*

நான் எனது வகுப்பறையில் குழந்தைகள் இது பற்றி வெளிப்படையாக ,உரிமையாக , தைரியமாக வெளிப்படுத்த வழிகாட்டி உள்ளேன்

*

ஆணுக்குத் தெரிந்தாலும் தெரியக்கூடாத விஷயமாக ஏன் பார்க்கிறது இச்சமூகம்.!!!

*

முகத்திரையை கிழிக்கும் அற்புதமான விவரணை ங்க அண்ணா....

*

Excellent uncle... my husband mugam sulikkum pothu ennaku romba kastamaa irrukum...periods pathi naan ethana mura sonnaalum atha purinkittathe illa...

*

Fantastic..Happy to come know that important and positive thought processes are going on...This will simply help both the gender to uplift mankind..

*

very touching anna. But here college girls are conveying freely. This trend should spread in nook and corners

*



Aug 2, 2018

உதிரத்தின் நிறம் உரிமை


மூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான சவால்கள் இடம் பெறுவதுண்டு. அதன் வரிசையில் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் வித்தியாசமான சவால் ஒன்று பரபரப்பு முகம் காட்டியது. அது பேட்மேன்எனும் இந்தி திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியும்கூட. பிரபலங்கள் பலர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் பேட்-களை கையில் ஏந்தி நிழற்படம் எடுத்து, அது தொடர்பாக எழுதி பதிவிட்டு, தம் நட்புகளை அதேபோல் செய்ய அழைப்பதேபேட்மேன் சேலஞ்ச்”. நானும் என்னை அதில் இணைத்துக் கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. நான் அப்போதுதான் முதன்முறையாக நாப்கினை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறேன். கைகளில் தொடுகிறேன்.

ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால திருமண வாழ்வில் மனைவியும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மகளும் மாதந்தோறும் பயன்படுத்தி வந்தாலும் ஒருமுறைகூட அதை தொட்டுப் பார்த்ததோ, கையில் எடுத்து பாவித்ததோ இல்லை. அது குறித்து ஒவ்வாமை ஏதும் இல்லையென்றாலும், அறிந்துகொள்ளவோ, தொட்டுப் பார்க்கவோ அவசியம் எதுவும் எற்படவில்லை என்பதுதான் உண்மை. இத்தனையாண்டு காலம்  வீட்டிற்குள் தொடும் தொலைவில் இருந்து தொட்டுப் பார்த்து உணர்ந்திடாத பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். எப்போதும் அது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு பொருளாக உணர்ந்தது தவிர்த்து மேலதிகமாக எதுவும் அறிந்திருக்கவில்லை.

நாப்கினும் மாதவிடாய் நிகழ்வும் ஏன் இத்தனை இரசியமானதாக, அந்நியப்பட்டதாக இருக்கின்றது ஆண்களுக்கு. ஒவ்வொரு உயிரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தரும் கருப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் (ஆரோக்கியம் தவிர்த்து) தீட்டுஎன்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு.

சாதி, மதம், ஏழை, பணக்காரன், பெரிய பதவிகள், அதிகாரமிக்கவர்கள், அடிமைகள், பலம் பொருந்தியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவதொரு சூழலில் தம் மாதவிடாய் தருணத்தில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், ஏதுவான சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில்கூட விழிப்புணர்வு கொள்ளாத, கவனம் செலுத்தாத சமூகமாக இருக்கிறோமோ என்றே தோன்றுகிறது.

நாப்கின்  பேட்களை கையில் ஏந்தி அதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் வந்து கொண்டிருந்த சூழலில் இப்ப யாருக்கு நாப்கின் தெரியாம இருக்கு? எதுக்கு இந்த விளம்பரம்? நாப்கின் ஆரோக்கியமானதா? மாதவிடாய் எல்லாம் இந்தக் காலத்தில் அத்தனை மறைவானதல்ல!’ என சிலரிடமிருந்து சலிப்பு, பகடி, எதிர்வினைகள் வரத் துவங்கின. அவரவர் காணும் உலகம் அவரவருக்கு உண்மையானது போலத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறொன்றாகவும் இருக்கலாம்.

மிழகத்தின் கடைக் கோடியில் இருக்கும் ஒரு சிறு நகரம். ஏறத்தாழ 1500 பெண்கள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியொன்றின் நிகழ்ச்சிக்காக தலைமையாசிரியர் அறையில் காத்திருந்தேன். ஏறத்தாழ ஓய்வு வயதினை நெருங்கும் தலைமை ஆசிரியை. மாலை பள்ளி விடும் நேரம். தேர்வு நெருங்குவதால் கூடுதல் நேரம் கட்டாயப் படிப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவியொருத்தி முதுகை இழுக்கும் பெரிய புத்தகப் பையோடு  வந்தாள். ”மேம்... ரொம்ப தலை வலிக்குது, வீட்டுக்குப் போகனும்!” என்றாள். தலைமையாசிரியை உங்களுக்கெல்லாம் இதே வேலையாப் போச்சு. வீட்டுக்குப் போகனும்னா நாளைக்கு உங்கம்மாவைக் கூட்டிட்டு வரனும்... சரியா!?” என்றார். வலி தாங்க முடியவில்லை என்றாள் அந்தப் பெண். “உங்கம்மா வருவாங்கன்னா போ, இல்லைன்னா ஒழுங்கா படிக்கிற வேலையப் பார்எனக் கடிந்தார். அதன் பின்னும் வீட்டுக்குப் போகவேண்டுமெனக் கேட்டவளின் கண்களில்  கண்ணீர் பெருக்கெடுத்தது. மீண்டும் மறுத்து, இருந்துதான் ஆகவேண்டுமென உத்தரவிட்டார். அந்தத் தருணத்திய அழுகையும் அதிகாரமும் பெரும் உறுத்தலாய் இருந்தது.



யாரோ அழைக்க அந்த தலைமையாசிரியை வெளியில் செல்ல, துவண்டு நின்றிருந்த பெண்ணிடம்என்னம்மா... ரொம்ப முடியலையா!?” எனக்கேட்டேன். என்னிடமிருந்து கேள்வியை எதிர்பாராதவளாய் மேலும் கீழும் தலையை ஆட்டியவளிடம், ”வயிறு வலிக்குதாம்மா!?” எனக் கேட்டேன். லேசாய் அதிர்ந்தவளின் முகம் மின்னலாய் வெட்டும் வலியில் துடிப்பதை உணர முடிந்தது. கண்ணீர் கரகரவென வடிய, லேசாக விசும்பத் தொடங்கியபடி ஆமோதித்தாள். சட்டென வெளியில் வந்தேன். அந்த தலைமையாசிரியை திரும்பிக் கொண்டிருந்தார். “மேடம்... அந்தக் குழந்தைக்கு ப்ரீயட்ஸ் பெய்ன்னு நினைக்கிறேன்!” அந்த மாணவியை வேண்டுமென்றேதான் குழந்தை எனச்சொன்னேன். என் மகள் வயதிருப்பவளை குழந்தையெனச் சொல்வதே அந்த இடத்தில் எனக்குப் பிடித்தமானதாக இருந்திருக்க வேண்டும்.. “இதே வேலையாப் போச்சுங்க சார்!” என்றபடி உள்ளே நுழைந்து என்ன ப்ரீயட்ஸா!?” என்றார். அதிகாரம் அப்போதும் மட்டுப்படவில்லை. அதுதான் அவருக்கு பழக்கப்பட்ட மொழியாக இருக்கலாம். அந்த மொழி சரி தவறு என்று, பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது. அந்தப் பெண்ணிற்கு அனுமதி கொடுத்தார். முகத்தை துடைத்துக்கொண்டே என்னிடம் நன்றி பகிர்ந்தபடி நகர்ந்து சென்றாள்.

கீதா இளங்கோவன் இயக்கியிருக்கும் மாதவிடாய் ஆவணப்படம் நினைவிற்கு வந்த்து. ‘இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்ட அந்தப் படம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், சமூகத்திற்கான படம். எல்லாம் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும்கூட சில கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தள்ளிவைக்க முட்டு வீடுஎனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த தனிப் பாத்திரங்களும் இருப்பதை அந்தப் படத்தின் வாயிலாக அறிந்தபோது சபிக்கவே தோன்றுகிறது. ஏதேதோ அடிப்படையற்ற காரணங்களைச் சொல்லி இதுபோல் கடைப்பிடிக்கும் முட்டு வீடு உள்ளிட்ட எதுவுமே மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

மனதால் இறுகத் தொடங்கினேன். ஏன் அந்த மாணவிக்கு தலைமையாசிரியையிடம் நேர்கொண்ட பார்வையில் எனக்கு ப்ரீயட்ஸ், ரொம்ப வலிக்குது, வீட்டுக்குப் போகனும்எனக் கேட்க முடியவில்லை. அந்த அறையில் நான் இருந்தது, தயக்கத்தைக் கொடுத்திருக்குமா!? ஒருவேளை கல்விக்கூடம் எதையும் தயங்காமல் சொல்வதற்கான வாய்ப்பை, சொல்லும் தைரியத்தை உருவாக்கித் தராமல் போயிருந்தால், வெறும் புத்தக அறிவால் அள்ளும் மதிப்பெண்களை வைத்து என்ன செய்யவியலும்.

கிராமத்து, சிறு நகரத்து அரசுப் பள்ளி மாணவிக்கு மட்டுமே இப்படியான தயக்கங்கள் இல்லை. பெரு நிறுவனத்தில் தொடர் விவாதத்தில் நீண்ட நேரமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண் உயரதிகாரிக்கு அவரையும் அறியாமல் மாதவிடாய் ஏற்படுகிறது. அலுவலகப் பதட்டத்தில் நாப்கின் எடுத்து வரவில்லை. இருக்கையிலேயே உதிரப் போக்கு ஏற்பட்டு ஆடை நனைந்ததை உணர்ந்தும், எழுந்து செல்ல தைரியம் வரவில்லை. யாரும் பார்த்தால் என்னவாகும் எனும் பதட்டத்தில் ஏறத்தாழ ஒன்னேகால் மணி நேரம் அதே இருக்கையில் முகம் வெளிறி அமர்ந்திருந்ததைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படித்து, பெரும் பதவியில், அதிகாரத்தின் உயரத்தில் இருந்தாலும்கூட ஒரு பெண்ணை ப்ரீயட்ஸ் குறித்த அபத்த நம்பிக்கைகள் முடக்குகின்றன. உடலில் இயல்பாக நிகழும் ஒன்று, தன் கட்டுப்பாட்டில் இல்லாது வந்து ஏற்படுத்தியிருக்கும் கறைகளோடு சபை நடுவே எழுந்து போக தடுக்கும் விதிகள் யாவை!?.

நாப்கின் பரவலாக நகர்ப்புறங்களிலும், வசதி வாய்த்தவர்களுக்கும் கிடைத்து வரும் அதே காலத்தில்தான் லஷ்மிகாந்த் காயத்ரி திருமணம் நடக்கிறது. சில நாட்களிலேயே காயத்ரி தன் மாதவிடாய் காரணமாக பழைய துணியோடு ஒதுங்குகிறாள். முதலில் புரியாத லஷ்மிகாந்த ஒருவழியாக அது பெண்களுக்கான ஐந்து நாட்கள் டெஸ்ட் மேட்ச் என்ற பெயராய் புரிந்து கொள்கிறான். பழைய துணியோடு ஒதுங்கியவளின் ஆரோக்கியம் குறித்த அக்கறை மற்றும் அவள் மீதுள்ள காதலுக்காக கடையிலிருந்து நாப்கின் வாங்கி வருகிறான். நாப்கின் விலையான 55 ரூபாய் அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தின் ஒரு மாத பால் செலவு எனக்கூறி பயன்படுத்த மறுத்ததால், கடையிலும் திருப்பிக்கொடுக்க முடியாத லஷ்மிகாந்த் தான் பணிசெய்யும் இயந்திரவியல் கூடத்திற்கு தன்னுடனே எடுத்துச் செல்கிறான்.  அங்கு ஒரு தொழிலாளிக்கு விபத்து நடக்க, கொட்டும் இரத்தத்தைத் நிறுத்த தன்னிடமிருந்த நாப்கினைப் பயன்படுத்துகிறான். அந்தச் செயலுக்காக உடன் பணி புரிபவர்களிடமிருந்து கிண்டலும், மருத்துவரிடமிருந்து பாராட்டும் கிடைக்கின்றன.

விலை மிகுந்த நாப்கினுக்கு நிகரான நாப்கினை சுயமாய், குறைந்த  செலவில் தயாரித்துவிட்டால் மனைவி பயன்படுத்தி நலமாக இருப்பாள் எனக் கருதி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறான். பஞ்சு, துணி ஆகியவற்றை வாங்கி, நாப்கின் தயாரித்து பயன்படுத்தக் கொடுக்கிறான். அது பயன்பாட்டில் தோற்றுப் போகிறது. மாதவிடாய் காரியத்தில் கணவன் வருவதை விரும்பாத காயத்ரி, இனி பெண்கள் விசயத்தில் தலையிட வேண்டாமென கடுமையாக எச்சரிக்கிறாள்.

புதிதாகப் பருவமடைந்த பக்கத்து வீட்டு சிறுமிக்கு கொடுத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறான். அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து தரம் எப்படியிருக்கிறதெனக் கேட்கிறான். அவர்கள் பயன்படுத்தாமலே பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். தன்னுடைய உடலில் ஒரு பலூன் பொருத்தி அதில் ஆட்டின்  இரத்தத்தை நிரப்பி, செயற்கையாக ஒரு மாதவிடாய் அனுபவத்தை ஏற்படுத்தி, அதிலும் தோற்கிறான். தேவையில்லாத செயலை விடாப்பிடியாக செய்து அனைத்து இடங்களிலும் ஒரு கோமாளிபோல் பார்க்கப்படுவதை அவமானமாக உணரும் காயத்ரி சண்டையிட்டு பிரிந்து செல்கிறாள். எனினும் நாப்கின் உருவாக்குவதிலிருந்து பின்வாங்கவில்லை லஷ்மிகாந்த்.

நாப்கினில் பயன்படுத்தும் மூலப்பொருளான செல்லுலோஸ் பைஃபர் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள ஒரு பேராசிரியருக்கு வேலைக்காரனாக பணியாற்றுகிறான். ஒருகட்டத்தில் லஷ்மிகாந்த் செல்லுலோஸ் பைஃபரை வெளிநாட்டிலிருந்து புத்திசாலித்தனமாகத் தருவித்து, தானே வடிவமைத்த இயந்திரத்தின் உதவியுடன் மிகக் குறைந்த விலையிலான நாப்கினை உருவாக்கி விடுகிறார்.

அது பயன்பாட்டில் நிரூபணமாகிறது. தன் தயாரிப்பை  டெல்லி ஐஐடி கண்காட்சியில் வைத்து வாழ்க்கையை மாற்றும் கண்டுபிடிப்புஎனும் விருதினை வெல்கிறார். தேசமும், உலகமும் அவர் பக்கம் பார்வைகளைத் திருப்புகின்றன. தன்  கண்டுபிடிப்பை லாபத்திற்கு விற்காமல், கிராமப்புற ஏழைப் பெண்களுக்காக பயன்படும் வகையில் வழங்குகிறார். அது கிராமம் கிராமமாக ஒரு புரட்சி போல் பரவுகிறது. நியூயார்க்கில் இருக்கும் யுனிசெஃப் நிறுவனத்தில் உரை நிகழ்த்துகிறார். ஊருக்குத் திரும்பியவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது  கிடைக்கிறது.


அக்‌ஷய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் இணைந்து நடித்து  இயக்குனர் பால்கி இயக்கிய இந்தி திரைப்படமான பேட்மேன்நேர்த்தியான திரைக்கதையில் நிறைவடைகிறது. ஆனால் அது கற்பனைக் கதையன்று. கோயம்புத்தூரில் தம் வாழ்க்கையைப் பணயம் வைத்து தானே வடிவமைத்த இயந்திரம் மூலம் நாப்கின் தயாரித்து சாதித்துக்காட்டி இன்று உலகளவில் பெரும் புகழ் பெற்றிருக்கும் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் கதைதான் பேட்மேன்.

ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சார்ந்த பல செயல்களும் போராட்டம் என்றால், அந்தப் போராட்டங்களைச் சமாளிக்கும் ஒரு எளிய வழிக்காக ஒரு மனிதனும் தன் வாழ்நாளை பணயம் வைத்து விளையாடி வென்றிருக்கிறான். முதலில் பெண்கள் தம் மாதவிடாயைக் கடக்க சமூக ரீதியாக இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளை இனியேனும் உடைக்க வேண்டும். இதில் ஆண்கள் முழு மூச்சாய் கை கொடுக்க வேண்டும். உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு இயற்கையான இந்த நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். அதன் முழு ஒப்புதலே அந்த பேட்மேன் சவாலுக்காக நானும் ஒரு நாப்கினை கையில் ஏந்தி நின்றது.

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

-

நேர்கோடு இதழில் வெளியான கட்டுரை

*



Jun 27, 2018

ஒகேனக்கல்லில் ஒரு நாள்


பதினைந்து ஆண்டுகள் இருக்கும் ஒகேனக்கல் சென்று. பதின் வயதில் ஒருமுறை பைக்கில், இருபதுகளின் இறுதியில் ஒருமுறை உறவுகளோடு... இந்த முறை 15 நிமிட அவகாசத்தில் திட்டமிட்டு, மூன்று மணி நேரத்தில் பயணம் துவங்கினோம்.

நண்பர் பழமைபேசியின் வருகையையொட்டி வருடம் ஒருமுறை இப்படி பயணம் உண்டு. இந்த முறை என் கல்லூரித் தோழன் சீனி உடன் இணைந்துகொண்டான். 24 வருடங்கள் கழித்து நாங்கள் சந்தித்துக்கொள்கிறோம். உடன் ஆரூரன் மற்றும் ஜெயபாலன்.

ஈரோடு - பவானி - மேட்டூர் - மேச்சேரி - பெண்ணாகரம் - ஒகேனக்கல். மேட்டூர் அணைக்கட்டு அருகே மலையேறும்போதே மழை வெளுத்து வாங்கியது. முதல் கொண்டை ஊசி வளைவு சென்று திரும்பும்போது சொட்டு மழையில்லை. திரும்பி மேலே ஏறுகையில் வெளுத்து வாங்கியது. வெறும் 100 மீட்டர் தொலைவிற்குள் இத்தனை பெரிய மாயம். சாலையில் செல்ல முடியாமல் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களிடம் ஒரு 100 மீட்டர் நகர்ந்துட்டா மழை இல்லை என்று சொல்லக்கூட அவகாசம் தராத மழை.

பதினாறு கண் மதகிற்கு புதிய பாலம் கட்டியிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். மீண்டும் மழை தொடங்கியது. கிட்டத்தட்ட மேச்சேரிக்கு அருகே வரையிலும் மழை. மேச்சேரி - பெண்ணாகரம் சாலை அற்புதமாக இருக்கின்றது. ஒகேனக்கல்லை அடைய இரவாகிவிட்டது. அந்த ஊர் நண்பர் தங்குவதற்கு ஒரு விடுதியை பரிந்துரை செய்தார். தங்குவதற்கு வசதியான இடம் தான்.

ஒகேனக்கல் : ஒரு அருவியை மையப்படுத்தி காவிரி ஆற்றை மட்டுமே நம்பியிருக்கும் ஊர். ஒரு சாலை, இரண்டு மூன்று வீதிகள்... அவ்வளவுதான். ஒகேனக்கல்லை ஊர் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. விடுதி, உணவகம் என சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் மையம். இரவிலும் அதிகாலையிலும் அமைதி காக்கிறது. பகலில் பரபரப்பாகிவிடுகிறது. ஆண்டு முழுதும் பயணிகள் வந்து போகிறார்கள்.

அங்கிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கும் ஊட்டமலை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கிறார்கள். மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல், பரிசல் தயாரித்தல், ஆயில் மசாஜ், உணவு தயாரித்துக் கொடுத்தல் ஆகியவையே முக்கிய வாழ்வாதாரங்கள். சாலையோரம் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளின் முகப்பிலும் அரசு உதவியுடன் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.


மகிழ்ச்சியானது அங்கு காத்திருக்கும் கல்லூரிப் பேருந்துகள். தர்மபுரிப் பகுதிகளிலிருக்கும் பல்வேறு கல்லூரி நிறுவனங்களின் பேருந்துகள் அந்தக் கிராமம் வரை இயக்கப்படுவது நம்பிக்கை தரும் ஒன்று.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் அரட்டை. பேசுவோம் பேசுவோம் பேசிக் கொண்டேயிருப்போம். ஃபேஸ்புக், ப்ளாக் ஆகியவற்றில் இயங்குவதால் பேசவா விசயம் கிடைக்காது. ஆக எங்கள் சந்திப்புகள் என்பது பலவற்றையும் கலந்து கட்டி பேசிக்கொண்டேயிருப்பது. நல்ல சாப்பாடு, அருவிக் குளியல் மற்றும் ஆயில் மசாஜ் இந்தப் பயணத்தின் கூடுதல் நோக்கம்.

ஆற்றின் நடுவில் இருக்கும் ஒரு தீவிற்கு அழைத்துச் செல்வதாக இரவே சொன்னார்கள். அந்த உள்ளூர் நண்பரும் அதையே பரிந்துரை செய்தார். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் வரையில் ஆற்றில் வெள்ளம் இருந்ததாக அறிந்தேன். அன்று குறைந்திருந்தது. ஆட்டோவில் பரிசலை ஏற்றிக்கொண்டு, எங்களை ஏற்றிக்கொண்டு வனத்தின் வழியே சற்று பயணித்து பரிசலை ஆற்றில் விட்டு அதன் வழியே நீரோட்டத்தின் வழியே பயணித்து வரலாம். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இந்த மாதிரியான பயணங்கள் அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவர்கள் தம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அனுபவத்தில் இயக்குகிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து பயணிகளாகச் செல்வோருக்கு அது பாதுகாப்பானதாக இல்லை.


கேரளாவின் வனத்திலிருந்து, கபினி அணையை அடைந்து அங்கிருந்து கபிலா நதியாகப் பயணித்து காவிரியில் கலந்து பிலி குண்டு வழியே தமிழகத்திற்குள் நுழைந்து ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு விரைகிறது இளம்பச்சை நிறத் தண்ணீர். எந்தச் சலனமும் காட்டாமல் மௌனம் காக்கும் இடத்தில் ஆழம் ஐம்பது அடிகள் வரை கூட இருக்கலாம் என்கிறார் பரிசல்காரர். மௌனமாய் இருக்கும் இடத்தில் உள்ளே நீர் விரைந்து நகர்ந்து கொண்டிருக்கலாம். பாறைகள் தென்படும் இடத்தில் சலசலக்கும் தண்ணீர் தன் வேகத்தையும், வெறியையும் காட்டுகிறது. நீரால் நீர் அழுந்தி தாழ் நிலம் நோக்கிப் பாயும் வேகம் அது.

நதியின் இரு மருங்கிலும் நாம் பெயரறிந்திராத ஆயிரக்கணக்கான மரங்கள். அடி பெருத்து, வேர் அரித்து என்றும் நதியோடு பிணைந்து கிடக்கும் மரங்கள். மென் பச்சை நிறத்தில் சுழித்தும் சீறியபடியும், மௌனித்தும் நதி தன் போக்கில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒருபுறம் தமிழக எல்லை, மறுபுறம் கர்நாடகா என பச்சைகளின் நடுவே பாயும் நதி மிகப் பெரும் ஆசான். அதன் மௌனத்திலும் இரைச்சலிலும் கற்க ஆயிரம் பாடங்கள் உண்டு.

காவிரி நதி பிரிந்தும் பிணைந்துமென வேடிக்கை காட்டுகிறது. பிரிகின்ற இடங்களில் நடுவே ஒரு தீவு போன்ற நிலப்பரப்பை விட்டுச் செல்கிறது. அவையெங்கும் மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இனம் புரியாதொரு அமைதி நிலவுகிறது. தண்ணீரின் அளவு அதிகரித்தால் அந்த தீவுகளும் மெல்ல மூழ்கத் தொடங்கும்.



இப்போதுதான் அந்தப் பயணத்தின் முழு வடிவம் ஓரளவு புரிகிறது. பரிசலில் பயணித்து அந்தத் தீவில் தங்கியிருந்து திரும்புதல். இரவுகளில் தங்க ஏற்பாடுகள் செய்ய முடியும் என்கிறார்கள். கேம்ப் ஃபயர்என்கிற ஆசையை, பரிசல்காரர்கள் பலரும் பகிர்கிறார்கள். அங்கேயே சமைத்தும் தருகிறார்கள். நடுவே தீவு இரு பக்கத்திலும் ஆறு சலசலக்கிறது. பார்க்க அனுபவிக்க பெரும் சுவாரஸ்யம்தான்... ஆனால் காலின் கீழே ஒரு நதி நகரும் உணர்வுதான்!!!

மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பவில்லை. கபினியின் நீர் திறப்பு குறைந்துள்ளது. ஆகவே திடீர் வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை என்பது நம்பிக்கை. எனினும் சுற்றுலாப் பயணிகளில் பலர் வெகு எளிதாக ஆற்றை, அதன் வலிமையைக் குறைத்தும் மதிப்பிடலாம். எப்போதும் கர்நாடக அணையிலிருந்துதான் நமக்கு நீர் வரும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தமிழக வனத்திலேயே மழை பெய்து, ஓரிரு நாட்கள் பெரும் வெள்ளம் வந்தது நினைவிற்கு வந்தது.

பரிசல் இயக்குவோர் உள்ளூர்க்காரார்கள் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு ஆற்றைக் கையாள்கிறார்கள். அந்தப் பகுதியெங்கும் பரிசலில் வந்து வலை வீசி மீன் பிடிக்கிறார்கள். பரிசலில் மீன் பிடிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. துடுப்பு போட்டு நதியின் போக்கிற்கு எதிராகவும் கூடச் செல்ல முற்படுகிறார்கள். அவர்களால் எந்தச் சூழலையும் கையாள முடியும். பிறப்பு முதலே ஆற்றோடு புழங்குகின்றவர்கள். நீர் மட்டம் குறித்து அவர்களுக்கு ஒவ்வொரு அங்குலத்திலும் அளவு தெரியும். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாதிரியான சூழல்கள் மிக நிச்சயமாக கையாள்வதற்கு உகந்ததல்ல.

தீவு முழுக்க தாரை தாரையாய் நீர் ஓடிய தடங்கள். முந்தைய நாள்வரை ஓடிய நீர் ஆங்காங்கே தேங்கியபடியும். மரத்தின் வேர்கள் மிரட்டும் வண்ணம் முறுக்கிக் கிடக்கின்றன. எங்கோ வெட்டப்பட்ட மிகப் பெரிய மரமொன்று தீவின் மத்தியில் இரண்டு மரத்திற்கு இடையே சிக்கிக்கொண்டு கிடக்கின்றது. தண்ணீர் வருகையில் நனைவதும், வெயில் வருகையில் உலர்வதுமான வாழ்க்கை.


எங்களைப் போன்றே இருபது முப்பது பேர் நான்கைந்து பரிசல்களில் வந்து தீவில் உலவிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் சமையல் நடக்கிறது. பரிசலில் மசாஜ் செய்வோரை அழைத்து வந்தவர்கள் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். தீவின் கரையோரம் குளித்துக்கொள்ளலாம். குளிக்கும் இடத்தில் மணலாகவும், தண்ணீரின் வேகம் குறைவாகவுமே இருக்கின்றது. சுவாரஸ்யமான, சுகமான அனுபவம்தான். ஆனால் காவிரி எனும் பெரும் நதியின் மத்தியில் இருக்கிறோம் என்பது மட்டுமே செல்லமாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த தீவின் இன்னொரு குறிப்பிடத் தகுந்த அழகு பரவிக் கிடக்கும் கூழாங்கற்கள். தூக்கவே முடியாத பருவத்திலிருந்து தேய்ந்து மணலாகும் பருவம் வரையென அழகழகான கூழாங்கற்கள். கையோ காலோ உரசினால் அத்தனை மிருதுவாக இருக்கிறது. தங்களுக்குள் நதியின் குளுமையை எப்போதும் பதுக்கி வைத்திருப்பவை அவை.


கைகள் ஒவ்வொரு கல்லையும் வருடும்போது, அது உடைந்து புரண்ட இடம் எதுவாக இருக்கும், அதன் பயணத்தொலைவு எவ்வளவாக இருக்கும், எத்தனை நூற்றாண்டுகள் உருண்டிருக்கும் என்பதிலேயே மனம் உழலத் தொடங்குகிறது. இயற்கையின் ஆகச் சிறந்த படைப்புகளில் என்னளவில் கூழாங்கற்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு.

அனுமதியின்றி ஆற்றின் நடுப்பகுதிக்குள் உட்புகுகிறோம் எனும் கூச்சம் அந்த தீவில் நுழைவோரில் எத்தனை பேருக்கு இருக்குமெனத் தெரியவில்லை. சமதளத்து நிலத்தை ஒழுங்கீனங்களோடு கையாளும் அதே சராசரி மனோபாவத்துடனேயே இங்கும் அந்த துண்டு நிலத்தைக் கையாள்கிறார்கள் என்பதற்கு நிறையச் சான்றுகளை விட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வீசப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக்களும், கண்ணாடிப் பாட்டில்களும் பட்டவர்த்தமான உதாரணங்கள்.



பிஸ்கட் காகிதங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், சீகைக்காய் பாக்கெட்டுகள் என எல்லாவித ப்ளாஸ்டிக்களையும் தயவு தாட்சயண்யம் இன்றி விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அங்கு புழங்கும் மனிதர்களின் எண்ணிக்கைகளை ஒப்பிடும்போது இவை அநியாயமான அளவு. அவையாவும் மேட்டூர் அணைக்கு வந்து காவிரி வழியாகவும், கால்வாய்கள் வழியாகவும் நம்மை ஏதோ ஒரு மட்டத்தில் நெருங்கவே செய்யும்.

பாட்டில் பொறுக்கிறவர்கள் அவ்வப்போது வந்து எடுத்துச் சென்றுவிடுவார்கள் என பரிசல்காரர் சொல்கிறார். எனினும் நிறைய பாட்டில்களைக் காண முடிந்தது.

கண்ணாடிப் பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. முழுப்பாட்டில்களாக விட்டு கூழாங்கற்கள் நகர்வில் உடைந்தவை சில பாட்டில்களாக இருக்கலாம். பெரும்பாலான பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டு உடைக்கப்பட்டவை. குடித்துவிட்டு அந்தக் குப்பியை ஓங்கியடித்து உடைப்பதில் இருக்கும் வன்மம் இதுவரை புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் பரிசல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுமார் 400 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.


ஒகேனக்கல் தேவைக்கு மட்டுமல்லாது கர்நாடகா மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கும், இங்கிருந்து மூங்கில் பரிசல்கள் செய்து அனுப்படுகின்றன. பச்சை மூங்கில்களை மெலிதாகச் சீவி, அந்த சிம்புகளைக் கொண்டு பரிசல்கள் வேயப்படுகின்றன. அதன்மேல் உறுதியான பாலித்தீன் ஷீட் போர்த்தப்பட்டு தார் பூசப்படுகிறது. மேலும் அதன் மேல் மற்றொரு ஷீட் போர்த்தப்பட்டு அதன் மீதும் தார் பூசப்படுகிறது.



இப்படித் தயாரிக்கப்படும் பரிசல்கள் 4500 முதல் 6000 ரூபாய் வரை விலை போகின்றன. ஒகேனக்கல்லிற்கு மறுபுறம் இருக்கும் கர்நாடக வனத்தில் இருக்கும் மூங்கில்களே இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இரண்டு நபர்கள் முழு மூச்சாக வேலை செய்தால் ஒரு நாளில் ஒரு பரிசல் தயாரிக்க முடியும் என்கிறார்கள்.

இவற்றிற்கு மாற்றாக ப்ளாஸ்டிக் பரிசல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை தோல்வியடைந்ததாகவும் சொல்கிறார்கள். ப்ளாஸ்டிக் பரிசல்கள் இயக்குவதற்கு எளிதாக இருந்தாலும், காற்று வீசும்போது கட்டுப்படுத்த முடிவதில்லையென்பதால் மீண்டும் மூங்கில் பரிசல்களுக்கு மாறிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

தீவிலிருந்து மதியம் அறைக்குத் திரும்பும்போதே பசி ஆட்சி செய்து கொண்டிருந்தது. நண்பர் ஜெயபாலனின் சகோதரர் அளித்த விருந்தோம்பல். பசியும் ருசியும் போட்டி போட... மீனும் சோறும் என இரையெடுத்த மலைப்பாம்பு போல ஆனோம். மாலையே கிளம்பும் திட்டமிருந்தது. ஓய்வெடுத்துவிட்டு அருவியா, அருவிக்கு போய்விட்டு வந்து ஓய்வா என்பதில் அருவியைத் தேர்ந்தெடுத்தோம்.



வார நாள் என்பதால் மிக குறைவான மக்கள் நடமாட்டம் மட்டுமே. போகும் வழியெங்கும் சாப்பாடு செஞ்சு தரனுமா? மீன் பொரிச்சுத் தரனுமா என பெண்கள் கேட்கிறார்கள். மீன் மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்தால் விரும்பிய வண்ணம் சமைத்தும் தருகிறார்கள். ஆயில் மசாஜ் வேண்டுமா என வரிசையாய் ஆண்கள் கேட்கிறார்கள்.

இந்த வருடம் மே மாத சீசன் மிக நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர். பொதுவாக மே மாத வருமானம் தான் பெரும்பாலானோருக்கு ஒரு வருடத்தின் செலவுகளைத் தீர்மானிக்கின்றன. வழக்கமாக மே மாதம் வறட்சியில் காய்ந்து போயிருக்கும். இந்த முறை கோடை மழை தமிழக வனப்பகுதிகளில் நன்கு பெய்ததால், அருவியில் நீர் இருக்க, சீசன் மிகப் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்திருக்கிறது. மற்றபடி வார நாட்கள் மட்டுமே ஓரளவு பயணிகள் வந்து போகின்றனர்.

நீர் வரத்து மட்டுப்பட்டிருந்ததால் அருவியில் குளிக்க அனுமதியளித்திருந்தார்கள். அருவிக்குச் செல்லாமல் ஓரமாய் பிரிந்தோடும் சிற்றோடை நீரில் அமர்ந்தபடி தண்ணீரை அள்ளியள்ளி மேலே விட்டுக்கொண்டபடி சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

படியிறங்கினால் அருவி. இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதி. கூட்டம் இல்லாததால் மகிழ்வாய் பொறுமையாய் குளிக்க முடிந்தது.

அருவிக்கு மேற்புறத்தில் தொங்கு பாலம் அமைத்து அருவியைப் பார்வையிட அனுமதிக்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும்போது, பிரவாகம் எடுத்துச் சரியும் அருவிக்கு முன், நாங்கள் குளித்த அருவி மிகச் சிறியதாகத் தெரிகிறது.


பேரருவியாய்ப் பாயும் நீர் புகையாய் மேலெழும்புகிறது. ஒஹேஎன்றால் கன்னடத்தில் புகை என்றும், அதன் அடிப்படையில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாக பரிசல்காரர் சொன்னது நினைவிற்கு வந்தது.

காடுகளையும் வனங்களையும் கடந்து, தன்னத் தானே சலித்து, ஒவ்வொரு கணத்திலும் தன்னைப் புதிதாக்கிக்கொள்ளும் காவிரி தமிழக எல்லைக்குள் முதன்முதலாக ஒகேனக்கல்லில் வீறு கொண்டு விழுகிறது. அது விழும் கணம் தோறும், அது சார்ந்த ஒவ்வொருவரின் வாழ்வும் நிமிர்ந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர் பாசனத்தில் வாழ்வமைந்த எனக்கு என்றுமே காவிரி மிகுந்த பிரியத்திற்குரியது. இந்த முறை என்னவோ இன்னும் நெருக்கமாய் மாறியிருக்கிறது. <3 span=""> நனைந்த மனதோடு வீடு நோக்கி...

பயணத்தில் உடன் வந்த நண்பர்களுக்கு நிறைந்த பிரியங்கள்.... வாசிப்பினூடே வருவோருக்கும்!

Jun 15, 2018

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? - விமர்சனம்

கிளையிலிருந்து வேர் வரை வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடக்கவுள்ள நிலையில், பூங்கொடி பாலமுருகன் அவர்களின் விமர்சனம்

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? நெஞ்சைப் பிளந்து, உணர்ச்சிகளைக் கிளறி கண்கள் பனிக்கச் செய்யலாம்; கதறியழவும் வைக்கலாம்; கடல் பார்த்த சிறு பிள்ளை போல் கைதட்டி மகிழ வைக்கலாம்; செய்யும் பிழைகளை விரல் நீட்டிச் சுட்டலாம்; நாம் காணாத உலகங்களை கண்ணெதிரே நிறுத்தலாம்; கண்ட காட்சிகளை கவிதைப்படுத்தவும் செய்யலாம்; இன்னும் எத்துணையோ செய்யலாம். அத்துணையும் திறம்பட செய்கிறது ஈரோடு கதிர் அவர்களின் கிளையிலிருந்து வேர்வரை நூல்.

இலக்கியவாதிகள் மட்டும் புரிந்து கொள்ளும் ரகம் இல்லை. பாமரனும் புரிந்து கொள்ளும் வரம் இந்நூல். இதில் எங்கும் மிகைப்படுத்துதல் தென்படவில்லை. கதிர் அவர்கள் கண்ணோரம் கண்டவற்றை , காதோரம் கேட்டவற்றை, தன் நெஞ்ச குமுறல்களை சொல்லாக்கி இந்நூலை தந்திருக்கிறார். ஒவ்வொரு தலைப்பையும் இயல்பாய் கடக்க இயலாமல் நம் வாழ்வின் ஏதாவது தருணத்தைத் தொடர்புபடுத்தி நினைவுகளில் மூழ்கி பின் சற்று ஆசுவாசப்படுத்திய பிறகுதான் அடுத்த தலைப்பில் பயணிக்க இயலுகிறது.

* தந்தையிடம் கொஞ்சம் கூடுதலாய் தாய்மையை பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்ற நிதர்சனத்தை நமக்கு உணர்த்திதான் நூலையே ஆரம்பிக்கிறார்.

* இயந்திரங்கள் வாழ்வை எளிமைப்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்திய பின்னரும் ஏன் இவ்வளவு பிசியாக இருக்கின்றோம் ? என்ற கேள்விக்கு நம்மை பதில் தேட வைக்கிறார்.

* அளவிடமுடியாத அன்புநூல் பிணைக்கப்பட்ட ஆயாவின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தமுடியாத வெறுமையை நம்மிடம் கடத்துகிறார்.

* சாவதற்கு தேவைப்படும் காரணங்களை விட வாழ கூடுதலாய் ஒரோரு காரணமாவது இருக்ககூடும் என்று கூறி வாழ்தலின் தேவையை வலியுறுத்திச் சொல்கிறார்.

* வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு என நயம்பட உரைத்து சிறகை விரித்து வானம் ஏகி வானத்தை வசப்படுத்த நம்மை விளிக்கிறார்.

* கனத்த இதயத்துடன் பக்கங்கள் கடக்கையில் தீடீரென்று கைப்பிடித்து தேர்நோம்பிக்குக்கு கூட்டிச்சென்று கண்கண்ணாடியும் , ஊதலும் வாங்கி குடுத்து ராட்டினத்தில் ஏற்றி விட்டுவிடுகிறார்.

* புத்தகம் நெடுகிலும் வாழ்வின் அழகியல் தென்படுகிறது. இன்பமும் துன்பமும் எப்படி இயற்கையி்ன் நியதியோ அதுபோல கனத்தமனதுடன் புத்தகத்தில் பயணிக்கும் போது ஒரு இலகுவான கட்டுரையால் மனதை லேசாக்குகிறார். உதாரணத்திற்கு ஆயாவின் இழைப்பை உள்வாங்கி மனம் கனமுற்று இருக்கையில் அட பழுத்த இலைதானே உதிர்ந்து இருக்கிறது, கவலைப்படாதே பயணம் செய்வோம் என லீ குவான் யூவின் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

* தட்டில் விழும் சோற்று பருக்கையின் வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லையே என வருத்தப்பட்டு, தவறாய் இந்த தலைமுறையை வளர்கிறோமோ என சுய கழிவிரக்கத்தில் இருக்கும் போது ஓரம்போ ஓரம்போ என்று நுங்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து நம் கையில் திணித்து மனதை இலகுவாக்குகிறார்.

இப்படி புத்தகம் முழுவதும் இருளும் ஔியும் இயைந்ததுதான் வாழ்க்கை என்று இயல்பாய் சுட்டிக்காட்டிக்கொண்டே வருகிறார்.
மனம் கனத்த வேளையில் கண்ணீரை மறைக்க தனியறை சென்று விடுவேன். பிள்ளைகள் முன் உற்சாகமான அன்னையாய் மட்டுமே வலம் வருவேன். ஆனால் கதிர் அவர்கள் அப்பத்தா சிறுகதை தொகுப்பில் கோடி என்ற சிறுகதை படிக்கும்போது அவரின் உணர்வுகளை சொல்லில் வடித்திருப்பதை படிக்க படிக்க என்னையறியாமல் கேவி கண்ணீர் கொட்டியது. அதைக்கண்ட மூன்று வயதே ஆன என் மகள் தாவி என்னை அவள் நெஞ்சில் சாய்த்து அழாதீங்க அம்மா என்ற தாயாய் தேற்றிய கணம் நெஞ்சில் ஓவியமாய் தங்கிவிட்டது.

புத்தகத்தில் அவரின் தார்மீக கோபங்களையும் தெளிவுறுத்திக்கொண்டே தான் வருகிறார். முத்தாய்ப்பாய் தண்ணீரையும் , உணவையும் வீணடிக்காத சமூகத்தை உருவாக்க வேண்டுகோள் வைக்கிறார்.

மொத்தத்தில் இந்த புத்தகத்தை வாசித்தேன் என்பதைவிட நேசித்தேன் என்றே சொல்லலாம். வாழ்த்துகளும் , நன்றிகளும் பேரன்பும் ப்ரியங்களும் கதிர் ஸார்.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...