உதிரத்தின் நிறம் உரிமை


மூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான சவால்கள் இடம் பெறுவதுண்டு. அதன் வரிசையில் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் வித்தியாசமான சவால் ஒன்று பரபரப்பு முகம் காட்டியது. அது பேட்மேன்எனும் இந்தி திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியும்கூட. பிரபலங்கள் பலர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் பேட்-களை கையில் ஏந்தி நிழற்படம் எடுத்து, அது தொடர்பாக எழுதி பதிவிட்டு, தம் நட்புகளை அதேபோல் செய்ய அழைப்பதேபேட்மேன் சேலஞ்ச்”. நானும் என்னை அதில் இணைத்துக் கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. நான் அப்போதுதான் முதன்முறையாக நாப்கினை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறேன். கைகளில் தொடுகிறேன்.

ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால திருமண வாழ்வில் மனைவியும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மகளும் மாதந்தோறும் பயன்படுத்தி வந்தாலும் ஒருமுறைகூட அதை தொட்டுப் பார்த்ததோ, கையில் எடுத்து பாவித்ததோ இல்லை. அது குறித்து ஒவ்வாமை ஏதும் இல்லையென்றாலும், அறிந்துகொள்ளவோ, தொட்டுப் பார்க்கவோ அவசியம் எதுவும் எற்படவில்லை என்பதுதான் உண்மை. இத்தனையாண்டு காலம்  வீட்டிற்குள் தொடும் தொலைவில் இருந்து தொட்டுப் பார்த்து உணர்ந்திடாத பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். எப்போதும் அது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு பொருளாக உணர்ந்தது தவிர்த்து மேலதிகமாக எதுவும் அறிந்திருக்கவில்லை.

நாப்கினும் மாதவிடாய் நிகழ்வும் ஏன் இத்தனை இரசியமானதாக, அந்நியப்பட்டதாக இருக்கின்றது ஆண்களுக்கு. ஒவ்வொரு உயிரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தரும் கருப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் (ஆரோக்கியம் தவிர்த்து) தீட்டுஎன்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு.

சாதி, மதம், ஏழை, பணக்காரன், பெரிய பதவிகள், அதிகாரமிக்கவர்கள், அடிமைகள், பலம் பொருந்தியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவதொரு சூழலில் தம் மாதவிடாய் தருணத்தில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், ஏதுவான சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில்கூட விழிப்புணர்வு கொள்ளாத, கவனம் செலுத்தாத சமூகமாக இருக்கிறோமோ என்றே தோன்றுகிறது.

நாப்கின்  பேட்களை கையில் ஏந்தி அதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் வந்து கொண்டிருந்த சூழலில் இப்ப யாருக்கு நாப்கின் தெரியாம இருக்கு? எதுக்கு இந்த விளம்பரம்? நாப்கின் ஆரோக்கியமானதா? மாதவிடாய் எல்லாம் இந்தக் காலத்தில் அத்தனை மறைவானதல்ல!’ என சிலரிடமிருந்து சலிப்பு, பகடி, எதிர்வினைகள் வரத் துவங்கின. அவரவர் காணும் உலகம் அவரவருக்கு உண்மையானது போலத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறொன்றாகவும் இருக்கலாம்.

மிழகத்தின் கடைக் கோடியில் இருக்கும் ஒரு சிறு நகரம். ஏறத்தாழ 1500 பெண்கள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியொன்றின் நிகழ்ச்சிக்காக தலைமையாசிரியர் அறையில் காத்திருந்தேன். ஏறத்தாழ ஓய்வு வயதினை நெருங்கும் தலைமை ஆசிரியை. மாலை பள்ளி விடும் நேரம். தேர்வு நெருங்குவதால் கூடுதல் நேரம் கட்டாயப் படிப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவியொருத்தி முதுகை இழுக்கும் பெரிய புத்தகப் பையோடு  வந்தாள். ”மேம்... ரொம்ப தலை வலிக்குது, வீட்டுக்குப் போகனும்!” என்றாள். தலைமையாசிரியை உங்களுக்கெல்லாம் இதே வேலையாப் போச்சு. வீட்டுக்குப் போகனும்னா நாளைக்கு உங்கம்மாவைக் கூட்டிட்டு வரனும்... சரியா!?” என்றார். வலி தாங்க முடியவில்லை என்றாள் அந்தப் பெண். “உங்கம்மா வருவாங்கன்னா போ, இல்லைன்னா ஒழுங்கா படிக்கிற வேலையப் பார்எனக் கடிந்தார். அதன் பின்னும் வீட்டுக்குப் போகவேண்டுமெனக் கேட்டவளின் கண்களில்  கண்ணீர் பெருக்கெடுத்தது. மீண்டும் மறுத்து, இருந்துதான் ஆகவேண்டுமென உத்தரவிட்டார். அந்தத் தருணத்திய அழுகையும் அதிகாரமும் பெரும் உறுத்தலாய் இருந்தது.



யாரோ அழைக்க அந்த தலைமையாசிரியை வெளியில் செல்ல, துவண்டு நின்றிருந்த பெண்ணிடம்என்னம்மா... ரொம்ப முடியலையா!?” எனக்கேட்டேன். என்னிடமிருந்து கேள்வியை எதிர்பாராதவளாய் மேலும் கீழும் தலையை ஆட்டியவளிடம், ”வயிறு வலிக்குதாம்மா!?” எனக் கேட்டேன். லேசாய் அதிர்ந்தவளின் முகம் மின்னலாய் வெட்டும் வலியில் துடிப்பதை உணர முடிந்தது. கண்ணீர் கரகரவென வடிய, லேசாக விசும்பத் தொடங்கியபடி ஆமோதித்தாள். சட்டென வெளியில் வந்தேன். அந்த தலைமையாசிரியை திரும்பிக் கொண்டிருந்தார். “மேடம்... அந்தக் குழந்தைக்கு ப்ரீயட்ஸ் பெய்ன்னு நினைக்கிறேன்!” அந்த மாணவியை வேண்டுமென்றேதான் குழந்தை எனச்சொன்னேன். என் மகள் வயதிருப்பவளை குழந்தையெனச் சொல்வதே அந்த இடத்தில் எனக்குப் பிடித்தமானதாக இருந்திருக்க வேண்டும்.. “இதே வேலையாப் போச்சுங்க சார்!” என்றபடி உள்ளே நுழைந்து என்ன ப்ரீயட்ஸா!?” என்றார். அதிகாரம் அப்போதும் மட்டுப்படவில்லை. அதுதான் அவருக்கு பழக்கப்பட்ட மொழியாக இருக்கலாம். அந்த மொழி சரி தவறு என்று, பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது. அந்தப் பெண்ணிற்கு அனுமதி கொடுத்தார். முகத்தை துடைத்துக்கொண்டே என்னிடம் நன்றி பகிர்ந்தபடி நகர்ந்து சென்றாள்.

கீதா இளங்கோவன் இயக்கியிருக்கும் மாதவிடாய் ஆவணப்படம் நினைவிற்கு வந்த்து. ‘இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்ட அந்தப் படம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், சமூகத்திற்கான படம். எல்லாம் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும்கூட சில கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தள்ளிவைக்க முட்டு வீடுஎனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த தனிப் பாத்திரங்களும் இருப்பதை அந்தப் படத்தின் வாயிலாக அறிந்தபோது சபிக்கவே தோன்றுகிறது. ஏதேதோ அடிப்படையற்ற காரணங்களைச் சொல்லி இதுபோல் கடைப்பிடிக்கும் முட்டு வீடு உள்ளிட்ட எதுவுமே மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

மனதால் இறுகத் தொடங்கினேன். ஏன் அந்த மாணவிக்கு தலைமையாசிரியையிடம் நேர்கொண்ட பார்வையில் எனக்கு ப்ரீயட்ஸ், ரொம்ப வலிக்குது, வீட்டுக்குப் போகனும்எனக் கேட்க முடியவில்லை. அந்த அறையில் நான் இருந்தது, தயக்கத்தைக் கொடுத்திருக்குமா!? ஒருவேளை கல்விக்கூடம் எதையும் தயங்காமல் சொல்வதற்கான வாய்ப்பை, சொல்லும் தைரியத்தை உருவாக்கித் தராமல் போயிருந்தால், வெறும் புத்தக அறிவால் அள்ளும் மதிப்பெண்களை வைத்து என்ன செய்யவியலும்.

கிராமத்து, சிறு நகரத்து அரசுப் பள்ளி மாணவிக்கு மட்டுமே இப்படியான தயக்கங்கள் இல்லை. பெரு நிறுவனத்தில் தொடர் விவாதத்தில் நீண்ட நேரமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண் உயரதிகாரிக்கு அவரையும் அறியாமல் மாதவிடாய் ஏற்படுகிறது. அலுவலகப் பதட்டத்தில் நாப்கின் எடுத்து வரவில்லை. இருக்கையிலேயே உதிரப் போக்கு ஏற்பட்டு ஆடை நனைந்ததை உணர்ந்தும், எழுந்து செல்ல தைரியம் வரவில்லை. யாரும் பார்த்தால் என்னவாகும் எனும் பதட்டத்தில் ஏறத்தாழ ஒன்னேகால் மணி நேரம் அதே இருக்கையில் முகம் வெளிறி அமர்ந்திருந்ததைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படித்து, பெரும் பதவியில், அதிகாரத்தின் உயரத்தில் இருந்தாலும்கூட ஒரு பெண்ணை ப்ரீயட்ஸ் குறித்த அபத்த நம்பிக்கைகள் முடக்குகின்றன. உடலில் இயல்பாக நிகழும் ஒன்று, தன் கட்டுப்பாட்டில் இல்லாது வந்து ஏற்படுத்தியிருக்கும் கறைகளோடு சபை நடுவே எழுந்து போக தடுக்கும் விதிகள் யாவை!?.

நாப்கின் பரவலாக நகர்ப்புறங்களிலும், வசதி வாய்த்தவர்களுக்கும் கிடைத்து வரும் அதே காலத்தில்தான் லஷ்மிகாந்த் காயத்ரி திருமணம் நடக்கிறது. சில நாட்களிலேயே காயத்ரி தன் மாதவிடாய் காரணமாக பழைய துணியோடு ஒதுங்குகிறாள். முதலில் புரியாத லஷ்மிகாந்த ஒருவழியாக அது பெண்களுக்கான ஐந்து நாட்கள் டெஸ்ட் மேட்ச் என்ற பெயராய் புரிந்து கொள்கிறான். பழைய துணியோடு ஒதுங்கியவளின் ஆரோக்கியம் குறித்த அக்கறை மற்றும் அவள் மீதுள்ள காதலுக்காக கடையிலிருந்து நாப்கின் வாங்கி வருகிறான். நாப்கின் விலையான 55 ரூபாய் அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தின் ஒரு மாத பால் செலவு எனக்கூறி பயன்படுத்த மறுத்ததால், கடையிலும் திருப்பிக்கொடுக்க முடியாத லஷ்மிகாந்த் தான் பணிசெய்யும் இயந்திரவியல் கூடத்திற்கு தன்னுடனே எடுத்துச் செல்கிறான்.  அங்கு ஒரு தொழிலாளிக்கு விபத்து நடக்க, கொட்டும் இரத்தத்தைத் நிறுத்த தன்னிடமிருந்த நாப்கினைப் பயன்படுத்துகிறான். அந்தச் செயலுக்காக உடன் பணி புரிபவர்களிடமிருந்து கிண்டலும், மருத்துவரிடமிருந்து பாராட்டும் கிடைக்கின்றன.

விலை மிகுந்த நாப்கினுக்கு நிகரான நாப்கினை சுயமாய், குறைந்த  செலவில் தயாரித்துவிட்டால் மனைவி பயன்படுத்தி நலமாக இருப்பாள் எனக் கருதி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறான். பஞ்சு, துணி ஆகியவற்றை வாங்கி, நாப்கின் தயாரித்து பயன்படுத்தக் கொடுக்கிறான். அது பயன்பாட்டில் தோற்றுப் போகிறது. மாதவிடாய் காரியத்தில் கணவன் வருவதை விரும்பாத காயத்ரி, இனி பெண்கள் விசயத்தில் தலையிட வேண்டாமென கடுமையாக எச்சரிக்கிறாள்.

புதிதாகப் பருவமடைந்த பக்கத்து வீட்டு சிறுமிக்கு கொடுத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறான். அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து தரம் எப்படியிருக்கிறதெனக் கேட்கிறான். அவர்கள் பயன்படுத்தாமலே பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். தன்னுடைய உடலில் ஒரு பலூன் பொருத்தி அதில் ஆட்டின்  இரத்தத்தை நிரப்பி, செயற்கையாக ஒரு மாதவிடாய் அனுபவத்தை ஏற்படுத்தி, அதிலும் தோற்கிறான். தேவையில்லாத செயலை விடாப்பிடியாக செய்து அனைத்து இடங்களிலும் ஒரு கோமாளிபோல் பார்க்கப்படுவதை அவமானமாக உணரும் காயத்ரி சண்டையிட்டு பிரிந்து செல்கிறாள். எனினும் நாப்கின் உருவாக்குவதிலிருந்து பின்வாங்கவில்லை லஷ்மிகாந்த்.

நாப்கினில் பயன்படுத்தும் மூலப்பொருளான செல்லுலோஸ் பைஃபர் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள ஒரு பேராசிரியருக்கு வேலைக்காரனாக பணியாற்றுகிறான். ஒருகட்டத்தில் லஷ்மிகாந்த் செல்லுலோஸ் பைஃபரை வெளிநாட்டிலிருந்து புத்திசாலித்தனமாகத் தருவித்து, தானே வடிவமைத்த இயந்திரத்தின் உதவியுடன் மிகக் குறைந்த விலையிலான நாப்கினை உருவாக்கி விடுகிறார்.

அது பயன்பாட்டில் நிரூபணமாகிறது. தன் தயாரிப்பை  டெல்லி ஐஐடி கண்காட்சியில் வைத்து வாழ்க்கையை மாற்றும் கண்டுபிடிப்புஎனும் விருதினை வெல்கிறார். தேசமும், உலகமும் அவர் பக்கம் பார்வைகளைத் திருப்புகின்றன. தன்  கண்டுபிடிப்பை லாபத்திற்கு விற்காமல், கிராமப்புற ஏழைப் பெண்களுக்காக பயன்படும் வகையில் வழங்குகிறார். அது கிராமம் கிராமமாக ஒரு புரட்சி போல் பரவுகிறது. நியூயார்க்கில் இருக்கும் யுனிசெஃப் நிறுவனத்தில் உரை நிகழ்த்துகிறார். ஊருக்குத் திரும்பியவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது  கிடைக்கிறது.


அக்‌ஷய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் இணைந்து நடித்து  இயக்குனர் பால்கி இயக்கிய இந்தி திரைப்படமான பேட்மேன்நேர்த்தியான திரைக்கதையில் நிறைவடைகிறது. ஆனால் அது கற்பனைக் கதையன்று. கோயம்புத்தூரில் தம் வாழ்க்கையைப் பணயம் வைத்து தானே வடிவமைத்த இயந்திரம் மூலம் நாப்கின் தயாரித்து சாதித்துக்காட்டி இன்று உலகளவில் பெரும் புகழ் பெற்றிருக்கும் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் கதைதான் பேட்மேன்.

ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சார்ந்த பல செயல்களும் போராட்டம் என்றால், அந்தப் போராட்டங்களைச் சமாளிக்கும் ஒரு எளிய வழிக்காக ஒரு மனிதனும் தன் வாழ்நாளை பணயம் வைத்து விளையாடி வென்றிருக்கிறான். முதலில் பெண்கள் தம் மாதவிடாயைக் கடக்க சமூக ரீதியாக இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளை இனியேனும் உடைக்க வேண்டும். இதில் ஆண்கள் முழு மூச்சாய் கை கொடுக்க வேண்டும். உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு இயற்கையான இந்த நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். அதன் முழு ஒப்புதலே அந்த பேட்மேன் சவாலுக்காக நானும் ஒரு நாப்கினை கையில் ஏந்தி நின்றது.

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

-

நேர்கோடு இதழில் வெளியான கட்டுரை

*



No comments: