Feb 9, 2016

கனவை நோக்கிய நெடும்பயணம்





கற்பனை செய்ய முடியாததொரு வேகத்தில் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலம் என்று எதைச் சொல்ல? இதோ இப்போது லாவகமாய் நழுவும் இந்த நொடியா, தத்தித் தாவும் நிமிடமா, கடக்கும் மணிப்பொழுதா, தன் போக்கில் கரையும் இரவும் பகலுமா? இவை எவற்றையும் கணக்கில் கொள்ள முடியாதபடி, ஆண்டுகளே அவசரமாய்த் தீர்கின்றன. சமீபத்தில் நடந்தது என நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் யோசித்துப் பார்த்தால் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்பொழுதுதான் நிகழ்ந்ததுபோல் இருப்பவையெல்லாம் எப்பொழுதோ நடந்து முடிந்து போனதாக இருக்கின்றன.

நாள், வாரம், மாதம், வருடம் என்பதில் எதுவும் மாறிவிடாத போதும், காலம் மட்டும் எப்படி விரைந்து ஓடுகின்றது!? இன்றைய நாட்களில் ஆக்கிரமிப்புகள் கூடிப்போய்விட்டதுதான் நாட்கள் வேகமாக ஓடுவதான தோற்றத்தைத் தருகிறதோ எனத் தோன்றுகிறது. நாள் துவங்கும்போதே ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று எனக் களைத்து நிமிர்கையில், நாள் தீர்ந்து போய்விடுகின்றது.

எப்போதும் இதுபோல் இருந்ததில்லையே. வாழ்ந்த காலம் வேறாகவும் வாழும் காலம் வேறாகவும்தான் இருக்கின்றன. வாழப்போகும் காலம் இன்னும் வேறானதாக, ’இப்படித்தான் இருக்கும்’ எனக் கற்பனை செய்யமுடியாததாக இருக்கலாம். இப்படியாக யோசிப்பதும், பேசுவதும் நிகழ்காலத்தின் மீது எப்போதும் புகார் வாசிக்கும் ஒருவித மனநிலையா!? அப்படியாகவே இருப்பினும்,  நிகழ்காலம் குறைகளற்றதாக எப்படி இருக்க முடியும்.

கால் நூற்றாண்டு காலம் பின்னோக்கி எந்த ஒரு தினத்திற்குச் சென்று பார்த்தாலும், அப்படியான நாட்களை ஆக்கிரமிக்க ஒன்றுமே இல்லையென்பதுதான் உண்மை. வாழ்க்கையில் ’இது வேண்டும், இப்படியாக இருக்க வேண்டும்’ எனும் கனவுகள் இல்லை. பெரிய தேவைகளற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். கனவுகள் இரவுகளொடும், உறத்தோடும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.

இன்றைய நாட்களை எந்நேரமும் எதுவோ ஒன்று ஆக்கிரமித்திருக்கின்றது. புதிய உருவாக்கங்கள் வாழ்வின் அங்கங்களாக மாறத்தொடங்கிவிட்டன. நேற்று அடைந்தது இன்றும், இன்று அடைவது நாளையும் பழையதாகிவிடுகின்றன. புதிதாய், மிகப் புதிதாய்த் தேவை எனும் வேட்கையோடு பயணம் நீள்கிறது. புதிது புதிதாய் வேண்டும் எனும் தேடலை, ஆசையை, இவை தேவையில்லாத ஆசை / பேராசை எனும் வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது.

ஆக்கிரமிப்பு மிகுந்த நாட்களை இலகுவானதாய்க் கடந்திட மிகுந்த திட்டமிடலும், ’எதிர்காலத்தில் இப்படியாக வேண்டும்’ எனும் தீர்க்கமான கனவும் அவசியமாக இருக்கின்றது. திட்டமிடாத அன்றாடங்கள் நெருக்கடி மிகுந்ததாக இருக்கின்றன. எதிர்காலத்தில் இது வேண்டும், இப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவற்ற வாழ்க்கை குழப்பம் சூழ்ந்ததாகவே அமைகின்றது.

ஒவ்வொரு நாளும் நம் முன் புதிய வாய்ப்புகளை முன்னிறுத்துக்கின்றன. சில நாட்கள் சிலவற்றை முற்றிலும் புறந்தள்ளி ’இவை பயன்பாட்டுக்கு உகந்ததன்று’ என முடக்குகின்றன. இவை இரண்டையும் சமன் செய்து வாழ்க்கையை நகர்த்திட, எதிர்காலம் குறித்த நம்பிக்கை மிகுந்த கூரிய பார்வையும், அந்த பார்வைக்கான கற்றலும், அதைச் செயல்படுத்துவதற்கான உழைப்பும் அவசியம்.

எதிர்காலத்தில் நமக்கு எது தேவை என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்து இப்போது கவலைப்பட வேண்டியதில்லை. அப்படியான கவலைகளற்ற கனவுதான் பாரதிக்கு இருந்திருக்க வேண்டும். பாரதியின் துணிச்சல்மிகு கனவுகளில் என்னை எப்போதும் உலுக்கிக் கொண்டிருப்பவை இரண்டு

”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற கவிதை வரிகள் நினைக்கும் கணந்தோறும் வியப்பேற்படுத்துவது ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பு எப்படி பாரதியால் அப்படியொன்றை தன் விருப்பமாக, கனவாகக் கொண்டிருக்க முடிந்தது என்பதுதான்.

தனக்கு வேண்டுவதைக்கூட ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதிலிருந்து எளிதாகத் தேடி எடுத்துக்கொள்ளவே தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில் ’காசியில் பேசும் உரையை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி வேண்டும்’ என நினைக்க எத்தனை துணிச்சலும் பேராவலும் இருந்திருக்க வேண்டும். ’அப்படியான கருவி எப்படியிருக்கும், எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எதன் மூலம் இயங்கும்’ என எதையுமே கற்பனை செய்திட முடியாத காலத்தில், தான் விரும்பும் காரியத்தைச் செய்ய ஒரு கருவி வேண்டும் எனக் கற்பனை செய்வது அல்லது கனவு காண்பது நிகழ்ந்திருக்கின்றது.

இக்கருவி செய்யும் கனவை விடவும், கூடுதலான வேட்கை நிறைந்த கனவொன்றும் பாரதியிடமிருந்து தெறித்ததை மறந்துவிட முடியாது. அடிமை விலங்கொடிக்க தேசம் முழுதும் வேள்வி நடந்த காலகட்டத்தில் விடுதலையை அடைந்தே விட்டதாகவே கனவு கண்டிட்ட துணிச்சல்தான் அது.

”ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”
எனும் கனவோ, தீர்க்கதரிசனமோ பாரதிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

பின்வருவதை முன் உணர்வதே தீர்க்கதரிசனம் எனில், பாரதியிடம் தீர்க்கதரிசனம் எனும் வல்லமை இருந்தது; பின்னால் வருமா வராதா என்று தெரியாதபோதும், அது தனக்கு வேண்டுமெனும் தீராத கனவு இருந்தது. கனவு அவரால் அடையக்கூடியதாகவோ, அவர் காலத்திற்குள்ளேனும் அடைக்கூடியதாகவோ இல்லாவிடினும், அவர் கண்ட கனவை காலம் மெய்யாக்கியது.

தீவிரமும், வேட்கையும், தேடலும் நிறைந்தவொரு கனவுதான் நமக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. ஒரு கனவை தீர்மானிப்பது மட்டுமே போதுமானதாக இல்லை. தீர்மானித்த கனவின் பாதையில் தெளிவு கொள்ளுதல் முதல் தேவை. கனவை நோக்கிச் செல்வதென்பது ஒரு நெடும்பயணம். அந்த நெடும்பயணத்தை எங்கு துவக்குகிறோம் என்பதிலிருந்து, கடக்கும் தொலைவின் ஒவ்வொரு படிநிலையையும் உணர்ந்து, தெளிந்து, மகிழ்ந்து பயணித்தல் அவசியம்.

கனவை நோக்கிய நெடும்பயணத்தில் ஒவ்வொரு நிலையை எட்டுவதையும் ”வெற்றி” என்கிறோம். அப்படியான எட்டல்களும், கருதும் வெற்றிகளும் இணைந்த தொகுப்புதான் அந்தப் பயணப்பாதை. கிட்டும் ஒவ்வொரு வெற்றியும் பயணத்திற்கான உந்து சக்தி. அடையும் ஒவ்வொரு தோல்வியும் அனுபவச் சேர்க்கை.

ஒட்டுமொத்தக் கனவை நோக்கிய பயணமோ, அதிலிருக்கும் இலக்குகளை நோக்கிய பயணமோ, அது முதலில் கோருவது நேர்மையான, அர்ப்பணிப்பு மிகுந்த பங்கேற்பை மட்டுமே. அதில் பிறழ்ச்சி ஏற்பட்டால் பயணம் மிகப்பெரிய தொய்வைச் சந்திப்பதை தவிர்க்கமுடியாது. கோரும் உழைப்பை பொய்யின்றி, சமரசமின்றி, வெற்றுச் சமாதானங்களின்றி முழுத்திறனோடு அளிக்கவேண்டும்

உதாரணத்திற்கு உழைப்பு கோரப்படும்போது அளிக்கப்படும் பதில்கள்….. ”நான் செய்கிறேன் / செய்வேன்” (I will do) அல்லது ”செய்ய முயற்சிக்கிறேன்” (I will try to do”)  என்பதுதான். ஒரு காரியத்தில் ”நான் செய்கிறேன்” என்பதை முழு ஒப்புக்கொள்ளலாகக் கருதலாம். ”செய்ய முயற்சி செய்கிறேன்” என்பதில் உண்மை முயற்சிகள் இருக்கலாம்; அல்லது மகிழ்வூட்டும் பதிலாகவோ, கேட்பவரை திருப்தி செய்வதற்கான பதிலாகவோ இருக்கலாம்.

“நாளை வருகிறாயா!?” எனக் கேட்கப்படுவதில், ”ஆமாம் வருகிறேன்” எனப் பதில் சொல்பவர்களில் 80% பேர் அவ்விதமே வருகிறார்கள். ”ஐ வில் ட்ரை” எனச் சொல்பவர்களில் 80% பேர் வருவதே இல்லை. முயற்சி செய்தலை நிகழ்த்தாமல், முயற்சி செய்கிறேன் என்பதை ஒரு தப்பித்தலுக்கான பதிலாக மட்டும் பிரகடனப்படுத்துகிறார்கள்

பயிலரங்கு ஒன்றில் ”Try” குறித்து உரையாடுகையில் நான்கு பேரைச் சுட்டி, ”எழுந்து நிற்க முயற்சி செய்யுங்கள்” என்றேன். நால்வரும் எழுந்து நின்றனர். ”ஏன் எழுந்து நிற்கிறீகள்?” எனக் கேட்டேன். சற்று குழம்பியபடி ”நீங்க தானே எழுந்திருக்கச் சொன்னீர்கள்!?” என்றனர். நான் ”எழுந்து நில்லுங்கள் என்றா!?” சொன்னேன் என அழுத்தமாகக் கேட்டேன். தங்களுக்குள் கிசுகிசுப்பாய் பேசிவிட்டு “இல்லை…. எழுந்திரிக்க ட்ரை பண்ணச் சொன்னீங்க!”

“எழுந்திருக்க ட்ரை பண்ணுங்கனுதானே சொன்னேன். எழுந்திரிக்கச் சொல்லலையே….!”

“ட்ரை பண்ணினாலே எழுந்து நிற்க வேண்டியதாகி விடுகிறது”

உண்மையில் முயற்சித்தல் என்பது எழுந்து நிற்பதல்ல, எழுந்து நிற்க முயற்சி செய்தல் மட்டுமே. அதாவது கால்களை சற்று வலுப்படுத்தி, உடலை இருக்கையிலிருந்து மேல் நோக்கி பெயர்த்துதல். முயற்சி என்பது வெறும் ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிடுதல் எனில், அதை மட்டுமே செய்துவிட்டால் போதும். இருக்கையிலிருந்து ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிட்டு அதோடு நின்றுவிட முடியுமா!? அப்படி நிற்பதை உடல் ஏற்றுக்கொள்ளாது. அந்த ஒரு அங்குல உயரத்தில் எவ்வளவு நேரம் சமநிலை பாவித்துத் தொடரமுடியும். இங்குதான் ’செய் அல்லது செத்துமடி’ எனும் பாடத்தை உணர்த்துகிறது முயற்சி.

எழுந்து நிற்க முயற்சி செய்ததில் நாற்காலியிருந்து சுமார் ஒரு அங்குலம் உயரத்தில் கால்களின் பலத்தில் மட்டுமே நிற்கிறோம். அச்சூழலில் வலி தவிர்க்க, சமநிலை காப்பாற்ற இருக்கும் வழிகள் ஒன்று வீழ்ந்துவிட வேண்டும் அல்லது எழுந்து நின்று விடவேண்டும். வீழ்வதற்காக முயற்சி செய்யவில்லை, எழுவதற்காகத்தான் அந்த முயற்சியினை மேற்கொண்டோம் என்பதால் அது நம்மையுமறியாமல் நிகழ்ந்து விடுகின்றது.

செயல்களில் காட்டும் அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும், தீவிரமும் வெற்றிகளைக் கையகப்படுத்தும். வெற்றிகளின்  தொகுப்பு தானாகவே கனவினை வசப்படுத்தும்.

-

நம் தோழி பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரை

-

Feb 8, 2016

கீச்சுகள் தொகுப்பு 62



உறக்கம் திருடும் குளிர் தோய்ந்த நடுநிசிக்கு என்ன பெரிதாய் தேவையிருக்கப் போகிறது ஏதோ ஒரு நிறைவின் கொண்டாட்டமோ குறைவின் பசியோ தவிர்த்து

-

தை மாத விடியலில் வந்திருக்கும் மழைத்தூறல் நம்பும்படியாக இல்லை என்பதைவிட நல்லதுக்கு அல்ல என்று மட்டும் புரிகிறது!

-

நான் சொல்றத புரிஞ்சுக்க, சரியா?”என நாம் சொல்லும்போதே புரிந்துகொள்ளவே இயலாத அண்டவெளிக்கு அவர்கள் சென்றுவிட்டனர் என்பதையும் புரிந்துகொள்வோம்

-

காணும் ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் ‘அது அந்தக் குழந்தையின் முகம்’ என ஒப்புக்கொள்ளாமல் யாரோ ஒருவரைத் தேடி, யாரோ போல் இருப்பதாய் சொல்கிறோம்!

-

இப்பவே கேலண்டரை எடுத்துப் பார்த்துட்டு அடச்சே தீவாளி சனிக்கிழமை வருதுனு ஸ்கூலுக்கு போற புள்ளைய என்ன சொல்றது!

-

கொம்பில்லா கலப்பின மாடுகளுக்கு பூ, பொட்டு வச்சு பொங்கல் கொண்டாடுறது, எமி ஜாக்சனுக்கு பாவாடை தாவணி போட்டு தமிழ்ப்பொண்ணா வேசம் கட்டுன மாதிரி

-

மாடுகள் ஏதுமில்லை எஞ்சியிருக்கும் அதன் வாசனையோடு வந்து குவியும் கிராஃபிக்ஸ் மாடுகளின் வாழ்த்துகளோடுதான்... இந்த நாளைக் கடக்க வேண்டும்!

-

வேட்டி தினம் என்பது அன்றைக்கு மட்டும் வேட்டி கட்டி போட்டோ போடுவதற்காக அல்ல... அவ்வப்போது வேட்டி கட்ட வேண்டும் என நினைவூட்டுவதற்காக!

-

வேண்டாம், முடியாது என்பதை வேண்டாம், முடியாது என நயமாகச் சொல்வதுதான் இருவருக்கும் நல்லது!

-

பிரியத்தின் முத்தம் கதகதப்பாகவும், கோபத்தின் முத்தம் குளிர் சூடியதாயும்!

-

50 பைசா காசும் அருங்காட்சியகத்துக்குப் போயிடுச்சா? மார்வாடி டீக் கடைக்காரன் 1 ரூ கேட்டப்போ 2 அம்பது பைசா கொடுத்ததுக்கு அல்பமா பாக்குறான்!

-

புது வருசத்துக்கு எதும் கெட்ட பழக்கத்தை விடணும் நினைச்சா வருசா வருசம் சபதம் எடுக்கிற கெட்ட பழக்கத்தை விடுங்க! :)

-

இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை! ”So..!?” அதனுடைய நீள, அகலத்துக்கும் மகிழ்ச்சியா இருந்துடணும்

-

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்

-

ஒரு குழந்தையின் வார்ப்பு அந்தக் குழந்தைக்காக மட்டுமே செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. இன்னொரு குழந்தை என்பது இன்னொன்றுதான்.

-

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த உலகத்தை சன்னல் வழியே மட்டும் பார்ப்பீர்கள்!

-

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வயதாகவில்லை என மனம் நினைப்பது பிரியமன்றி வேறென்ன!?

-

பொங்கல், கிருஸ்துமஸ், தீபாவளியை முன்கூட்டியே கொண்டாடும் (கல்வி) நிறுவனங்கள் ஏன் விவசாயிகள் தினத்தை அப்படியாகக் கொண்டாடுவதில்லை

-

இருக்கும் பதில்களுக்கு கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

-

கிளைகளில் வைத்தியம் செய்கின்றோம்... சிக்கல் வேர்களில் இருக்கின்றது!

-

டிசம்பர்ல குளிக்கிறவன் வீரன்! அதுவும் பச்சத் தண்ணில குளிக்கிறவன் மாவீரன்!

-

பல்வேறு கதாபாத்திரங்களை வாழ்க்கை வழங்கினாலும், அதில் பிடித்ததாக நினைத்துக்கொள்வதை மட்டுமே சலித்துப்போகுமளவிற்கு திரும்பத்திரும்ப ஏற்கிறோம்.

-



கிடைத்தால் இறக்கைகளை பிய்த்து, கால்களை முறித்து வீசும் அளவிற்கான வன்மத்தை கொசுக்கள் ஏற்படுத்தியிருக்கின்றன!

-

கேரிபேக் வேணாமென மறுக்கையில் கருவம் ஓங்கி வளருதடி!

-

வெளியேறும் வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!

-
இந்த வரலாறு காணாதங்கிற வார்த்தையை நிறுத்தச்சொல்லனும். வரலாறு அப்படியே எதையாச்சும் கண்டிருந்தாலும், இப்ப பிரச்சனை இப்போதைக்கு பெருசுதான்

-

'வாழ்ந்திட' தினம்தோறும் கற்றுக் கொள்வதும், மறப்பதும் அவசியமென்பதே ஆகச்சிறந்த சுவாரஸ்யம்தான்!

-

Feb 5, 2016

ஒரு கல்லூரி மாணவியின் குமுறல் எழுப்பும் பல கேள்விகள்!




அது கிராமப் பகுதியில் அமைந்திருக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரி. பெரும்பாலானோர் வசதி குறைந்த ஏழ்மையான குடும்பத்திலிருந்து சார்ந்தவர்கள், தன்னம்பிக்கை குறைவாகவே இருப்பார்கள் என என்னை அழைத்தவர் சொல்லியிருந்தார். மற்ற கல்லூரி மாணவர்களிடையே பேசுவது போன்றேதான் இங்கேயும் பேசினேன்.

தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் கல்வி வாய்ப்பு, இதற்காக சமூகமும், பெற்றோர்களும் செய்திருக்கும் தியாகங்கள் குறித்துத் துவங்கி, அவர்களின் இலக்கை இனங்காணுதல், அதை நோக்கிய பயணத்தில் தன்னம்பிக்கையோடு செயல்படுதல் குறித்துப் பேசினேன்.

நிகழ்ச்சி குறித்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கேட்பு நடந்தது. அப்போது கூட்டத்தின் கடைசி வரிசையிலிருந்து ஒரு மாணவி எழுந்து வந்தார். ஒருங்கிணைப்பாளர் ஒலிவாங்கியை அவரிடம் கொடுக்க முனைந்தார். அவர் மறுத்து முன்னோக்கி வந்தார். நிறுத்தி ஒலிவாங்கியைக் கொடுக்க முற்பட "நான் மைக்ல பேசல, தனியா பேசணும்" என்றபடி என்னை நோக்கி வந்தார்.

"நீங்க குடிகாரங்களப் பத்தி சொன்னீங்ல்ல… நெறய பிரச்சனைங் சார்… எங்கப்பா தெனமும் குடிக்கிறாரு… நான் சாவணும்… இல்லீனா கொல பண்ணனும் சார்" எனத் திக்கித்திணறி உடைந்த சொற்களாக உதிர்க்கும்போதே, கண்கள் நிரம்பிவிட்டன. மொத்தக் கூட்டத்தின் கவனமும் அங்கு திரும்பியது.

"மீட்டிங் முடியட்டும்மா… நாம பேசுவோம்… உறுதியா கூப்புட்டு பேசுவேன். இப்ப உக்காருங்க…" என்ற சமாதானத்தை ஏற்றுக்கொண்டவராய் தன் இடத்திற்குத் திரும்பினார். மேலும் மாணவ, மாணவிகள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

*

ஈரோடு மாவட்டத்தில் ஒரு குடிகாரக் கணவர் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் விற்றுக் குடிக்கிறார். 5, 2 வயதுகளில் குழந்தைகள். மனைவி வேலைக்குச் செல்வதால் அடுப்பெரிகிறது. 2 வயது கைக்குழந்தை வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் சூழலில், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரையும் விற்று ஒருநாள் குடித்துவிட்டு வருகிறார். சண்டை முற்றுகிறது. சண்டையின் உச்சத்தில் ஏற்பட்ட கோபத்தில் வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கிறதே என குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுகிறார் தாய். வழக்கு நடக்கிறது. ஏழு வருடங்கள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக செய்தி.

*

மதுரையில் கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்கிறாள் மனைவி. கணவன் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்ததாகவும், மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் ஏற்கனவே புகார் இருக்கின்றது. சம்பவத்தன்றும் குடி போதையில் மகளிடம் தகாத முறையில் நடக்க முற்பட கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொள்கிறார் மனைவி. நேரடியாக விசாரித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அந்தப்பெண் மீது வழக்கு தொடுக்காமல் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்கிறார்.

*

மேற்கண்ட இரண்டு வழக்கு உதாரணங்களை உரையின் நடுவே நான் குறிப்பிட்டுப் பேசியிருந்ததுதான், அத்தனை பேர் மத்தியிலும் அந்தப் பெண்ணை என்னிடம் பேசத் தூண்டியிருக்கிறது என்பது புரிந்தது.

அடுத்த கூட்டத்துக்காக அருகில் உள்ள பள்ளியில் அரையாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள் காத்திருக்க, மேலும் தாமதம் செய்ய முடியாத சூழல். வாக்குறுதி கொடுத்ததுபோல் ஓரிரு நிமிடங்களேனும் பேசியாக வேண்டும் எனப் பேராசிரியரிடம் கூறி அந்த மாணவியை அழைக்கக் கோரினேன். அந்தப் பெண் வந்தார்.

"சார் லைஃப்ல ஏகப்பட்ட பிரச்சனைங் சார். கூட்டத்தில் நீங்க பேசின எதையுமே கேக்காமத்தான் ஒக்காந்திருந்தேன். குடிகாரங்க பத்தி நீங்க சொன்னப்புறம்தான் கவனிச்சேன். அதுதான் உங்ககிட்ட பேச வந்தேன் சார்" என்றார். கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

அருகில் பலர் நின்று கொண்டிருந்த சூழலும், பள்ளியில் மாணவர்கள் காத்திருப்பதும் தொடர்ந்து பேசும் மனநிலையைத் தரவில்லை.

"என்னம்மா படிக்கிறே!?"

"தேர்ட் இயர் சார். அம்மா செத்துட்டாங்க சார். அப்பா குடிகாரர். அசிங்கமா திட்டுவார். என் பிரச்சனைக்கு… நான் ஒண்ணு செத்துப் போகணும் சார்… இல்லீனா எப்படியாச்சும் கொலை பண்ணீறனும் சார்."

கதறி அழுதுவிடுவாரோ என்ற அச்சம் வந்தது.

"ம்ம்ம்ம்… புரியுதும்மா… உம் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும். என்னால முடிஞ்ச உதவி செய்றேன். இப்ப தப்பா நினைச்சுக்காதே. உண்மையாவே இப்ப நேரம் இல்ல. இந்தச் சூழலிலும் இதப் பேச வேணாம். எல்லாரும் உன்னையே பார்த்துட்டு இருக்காங்க. உங்கிட்ட செல்போன் இருக்குதானே? என்னோட நெம்பர் தர்றேன். நாளைக்கு எனக்கு ஒரே ஒரு போன் பண்ணு. இல்லைனா இங்க இருக்கிற மேடம்கிட்ட சொல்லி உன்கிட்ட பேசச் சொல்றேன்."

நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தவரிடம், "அந்தப் பொண்ணுக்கு என்னவோ பிரச்சனை இருக்கு. ஒரு எமோஷன்ல என்கிட்ட பேசியிருக்கு. அநேகமா நாளைக்கு என்கிட்ட பேசாமகூடப் போகலாம். நீங்க அந்தப் பொண்ணுகிட்டப் பேசி, என்னனு கேட்டு உதவமுடியுமானு பாருங்க" என அறிவுறுத்தினேன்.

*

சமீப நாட்களில் மாணவ, மாணவியர்களை மரணம் பெருந்தாகத்தோடு தீண்டத் துவங்கியுள்ளதை காண முடிகிறது. வகுப்பறையில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவர், ஒன்றாம் வகுப்பு மாணவரை அடித்துக் கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவர் என மாணவர்களே கொலையில் நேரடியாகப் பங்கெடுப்பதையும் கண்டு வருகிறோம். அடுத்தடுத்துக் காண்கையில், இதுவும் சாதாரணம்தான் என பழகிப்போகும் ஆபத்துண்டு.

தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் தெளிவற்ற அடையாளங்களோடு நிகழ்ந்திருக்கும் மாணவிகளின் மரணங்கள் மிகப்பெரிய மிரட்டலை விடுத்திருக்கின்றன. அரசும், சமூகமும் இந்த அச்சுறுத்தலை எவ்விதம் கையாள்கிறது என்பதில் தெளிவில்லை. கையாள்கிறதா அல்லது அடுத்த பரபரப்பில் கை கழுவிக் கடந்து போகிறதா!? தன்னையே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகளில், அதில் பலியாகும் பிள்ளைகள் மட்டுமே பொறுப்பாகிவிட முடியாது.

மாணவப் பருவமென்பது படிப்பதற்காக மட்டுமே என்பது எழுதப்படாத சட்டமாக நடைமுறைப் படுத்தப்படுகின்றது. போட்டியும் அழுத்தமும் மதிப்பெண்களைத் தாண்டி சிந்திக்க அனுமதிக்காமல் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்குகிறது. பெற்றோர், உற்றார், சேவையாற்றும் ஆசிரியர்கள், வணிகமாக நடத்தும் கல்விக்கூட முதலாளிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரிகளின் வாயிலாக தாம் விரும்பும் வகையில் அல்லது தனக்கு பயன்கிட்டும் வகையில் பிள்ளைகளை மாணவர்களாக, மாணவிகளாக தொடர்ந்து கட்டமைக்கிறார்கள். அந்த நோக்கம் மிகத் தெளிவானதாகவோ, நியமானதாகவோ இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியவில்லை. கல்வி தவிர்த்து பிள்ளைகளிடம் சொல்லவோ, கேட்கவோ ஒன்றுமேயில்லை என ஒட்டுமொத்தமாக அனைவருமே தீர்மானித்ததுபோல் தான் நடந்துகொள்கிறோம்.

மாணவ, மாணவிகளின் உலகம் ஒரு பிள்ளையின், ஒரு உயிரின், ரத்தமும் சதையுமான ஒரு மனிதப் பிறவியின் உலகமாகக் கருதப்படாமல், மாணவ உலகமாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. மாணவ மனதோடு அவர்கள் எடுக்கும் முடிவு மற்றும் செய்யும் செயல்பாடுகளுக்கும், ஒரு மனிதப் பிறவியாக அவர்கள் எடுக்கும் முடிவு, செய்யும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதை எங்கே, எப்படி, யார் அவர்களிடம் சேர்க்க அல்லது புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறோம்.

நினைத்தது போலவே அந்த மாணவி என்னைத் தொடர்புகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கல்லூரியில் அந்த மாணவியை அழைத்து பேச்சு கொடுக்கிறார்கள். அம்மா இல்லாத வீடு. அப்பா பயங்கர குடி. வீடு திரும்ப நடுநிசி ஆகிறது. வந்தாலும் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் அசிங்கமான திட்டு. ஒரு நாள் இரவு தனியே வீட்டில் இருந்த பெண்ணிடம் தவறாக நடக்கும் நோக்கத்தோடு இரண்டு பேர் வீட்டுக்குள் புகுந்துவிட, அவள் கத்தியதில் ஓடிவிட்டனர். அப்பாவை திருத்தவே முடியவில்லை. நாளுக்கு நாள் சிக்கல் அதிகரிக்கிறது. இப்போதை மனநிலை ஒன்று அப்பாவைக் கொன்று விடவேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதுபோல் அவளுக்கு இருக்கின்றது.

நான் பேசிய உரையில் இருந்த இரண்டு சம்பவங்கள்தான் அந்தப் பெண்ணை உடையச் செய்திருக்கிறது. அதன் மூலமே அவர் தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்பை அடைந்திருக்கிறார். அதன் வழியே இப்போதைக்கு தன் பிரச்சனையை பகிர்ந்து கொள்ள ஒருவரையும், அதோடு உதவிகளை எட்ட, பாதைகளை இனம் காணும் வாய்ப்பினை அடையும் சாத்தியம் நிகழ்த் துவங்கியிருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவல்படி, அந்தப் பெண்ணுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களின் உரிய அரவணைப்பில் இருப்பதாகவும் அறிந்தேன்.

*

மேலே குறிப்பிட்ட அவ்விரு கொலைச் சம்பவ உதாரணங்களை நான் மூன்று நான்கு கூட்டங்களில் பகிர்ந்ததாக நினைவு. சுமார் ஆயிரம் பேர் வரை கேட்டிருக்கலாம். ஆயிரம் பேரில் ஒரே ஒரு பெண்ணின் ஓடு மட்டுமே அந்த உதாரணத்தால் உடைந்திருக்கிறது, அல்லது உடைந்ததை ஒருத்தி மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். பல நூறுபேருக்கு அதுபோன்ற பிரச்சனைகளே இல்லாமல் இருக்கலாம். சில நூறு பேருக்கு ஓடு உடையாமலோ, வெளிப்படுத்தும் மனம் இல்லாமலோ இருக்கலாம்.

நாம் பகிர்ந்திடாத சில உதாரணங்களையும், அவர்கள் பகிர்ந்துகொள்ளாத பல பிரச்சனைகளையும் எவ்வாறு ஒன்றிணைக்கப் போகிறோம். ஏதோ ஒரு தலைப்பில் பேசும்போது ஏதோ ஒரு சொல், சொற்றொடர், உதாரணம் அவர்களின் ஓட்டினை உடைக்குமென உத்திரவாதம் தரமுடியாது. அவ்வாறு ஓட்டினை உடைப்பது என் போன்றவர்களின் கூரிய நோக்கமாகவும் இருப்பதில்லை. சாத்தியமும் கிடையாது. பல நேரங்களில் காக்கை உட்கார பனம்பழம் விழும் கதைதான்.

மாணவர்களை கல்வி அல்லது மாணவ நிலை என்பதையும் தாண்டி அவர்களும் நம்மைப்போல் ரத்தமும் சதையுமாய், மகிழ்ச்சியும், சிக்கல்களும், பிரச்சனைகளும், உளைச்சல்களும் கொண்ட வாழ்வைத்தான் கடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதை எவ்விதம் கையாள வேண்டும் என்பதற்கான கண்டறிதல், ஆலோசனைகள் அளித்தல்கள்தான் அவர்களை தம் பிரச்சனைகளிலிருந்து சரிசெய்ய உதவும்.

பொதுவாக மாணவக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பின்னால் அவரவர் நிலை, சூழல் மற்றும் தேவைக்கேற்ப அழுவது, கலங்குவது, பொங்குவது அல்லது அரசியலாக்குவதுதான் நிகழ்கிறது.

அது சரி… ஏன் நாம் "வரும் முன் காப்போம்" என்ற வரிகளை மறந்து போனோம்!?

-

நன்றி : தி இந்து

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...