May 11, 2015

இலங்கையில் ஐந்து நாட்கள் - 2

யாழ்ப்பாணத்தில் மதியம் இரண்டு மணிக்குப் பேச வேண்டிய கூட்டம் நோக்கி மனது பயணிக்கத் தொடங்கியது. காலை நான்கு மணிக்கு வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டேன். சிலாபம், புத்தளம் என வாகனம் வடக்கு நோக்கி சீறிக்கொண்டிருந்தது. ஏற்கனவே 2010ல் அதே பாதையில் பேருந்தில் வவுனியா வரை சென்றிருந்ததால் ஓரளவு ஊரின் பெயர்கள் நினைவில் இருந்தன.

அநுராதபுரம் அருகே தாமரை இலையில் பரிமாறும் ஒரு சிறிய குடிசை உணவகத்தில் ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார். ஊனம் அடைந்த ஒரு முன்னாள் ராணுவ வீரர் அதை நடத்துகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்களே சமைத்து பரிமாறுகிறார்கள். அந்தக் காலை நேரத்து பசிக்கு இடியாப்பம், புட்டு, தேங்காய் சொதி என சுவையான உணவு. அவர்களின் சமையலில் நிறைய காய்கறிகளைப் பயன்படுத்துகின்றனர். நாமே எடுத்து உண்டும் வகையில் உணவு வகைகள் வரிசையாக அணிவகுத்திருக்கின்றன. எடுத்து உண்டுவிட்டு நாம் சொல்லும் கணக்குக்கு காசு வாங்கிக் கொள்கிறார். விடிகாலை விழிப்பு, ஊட்டியிருந்த பசிக்கு ஏதுவான உணவு அது. 



வவுனியா, தாண்டிகுளம் ஓமந்தை என ஏ9 வீதியில் வாகனம் சீறுகிறது. 2010ல் யாழ்ப்பாணம் வரை செல்ல முயன்றபோது ஓமந்தை சோதனைச் சாவடியில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். இப்போது வாகனப் பதிவு மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முறிகண்டி, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு என ஏற்கனவே செய்திகளில் வாசித்து வாசித்து பழக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள்.  போர் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ஏ9 நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் போர் நடந்ததற்கான சுவடுகள் கவனமாக அகற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தலை முறிந்த பனை மரங்கள் ஏராளமாக இருந்ததாகவும் இப்போது அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்கள். போர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான போர் நினைவு அடையாளங்கள் இரண்டு இடங்களில் கண்ணில் பட்டன. குறிப்பாக கிளிநொச்சியில் மட்டும் வீழ்ந்துகிடக்கும் பிரமாண்ட நீர் தொட்டி அப்படியே விட்டுவைக்கப்பட்டிருக்கிறது.

7 மணி நேர பயணத்திற்குப் பிறகு 11 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைந்தோம். தமிழகத்தின் ஒரு நகரத்திற்குள் இருக்கும் உணர்வு. குறிப்பாக பெயர் பலகைகள் நல்ல தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. சிங்களம் எங்கும் கண்ணில் பட்டதாக நினைவில்லை. ராஜபக்‌ஷேவை புகழ்ந்து வைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஃப்ளக்ஸ் பேனர்களும் ஓரிரு இடங்களில் இருப்பது கண்ணில்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது.

சிறிய ஓய்விற்குப் பிறகு உரையாற்ற வேண்டிய வீரசிங்கம் மண்டபத்திற்குச் சென்றோம். தம் கனவுகளை பிள்ளைகள் மேல் சுமத்தும் பெற்றோர்களிடம் பேச வேண்டும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அரங்கில் மகளிர் மட்டுமே அமர்ந்திருந்தனர். பெரும்பாலானோர் அம்மாக்களாக இருந்ததால் உரை எளிதாக அமைந்துபோனது. உரை நிறைவில் கேள்விகளுக்கான நேரத்தில் வந்த சுவாரஸ்யமான கேள்விகள் கூட்டத்தை அர்த்தப்படுத்தின.

எதையும் நம்புகள் என பிள்ளைகளை நிர்பந்திக்காதீர்கள். சந்தேகம் கொள்ளவும், கேள்விகள் கேட்கவும் அனுமதியுங்கள்எனப் பேசிய பிறகு... ”வாஸ்து சாஸ்திரப்படிதான் வீடு கட்டனும்னு சொன்னா... அதெல்லாம் எதுக்குனு எதிர்த்து கேள்வி கேட்கும் பிள்ளைகளை எப்படி சமாளிக்கலாம்என கேள்வி கேட்டவரிடம் நான் வாங்கிய பல்பு எனக்கே பிடித்திருந்தது.



குழந்தைகள் மேல் ஏவி விடப்படும் பாலியல் வன்முறை படிப்படியாக உயர்ந்து வருவது குறித்த அச்சத்தை பங்கேற்பாளர் ஒருவர் விளக்கமாகத் தெரிவித்தார். ஆட்களை இனம் கண்டாலும் அவர்களை எதுவும் செய்யமுடியவில்லை எனும் இயலாமையை வெளிப்படுத்தியபோது என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திருமதி.ராதை பாஸ்கரன் அவர்களின் அன்பிற்கும், ’யாழ்நினைவுப்பரிசுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் மீண்டும் அங்கிருந்து கிளிநொச்சி நோக்கி பயணம். அடுத்த நாள் பயிலரங்கு நடைபெறும் இடத்திலேயே தங்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மிகச் சமீபத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு உணவகம் அது. ஐந்து ஆண்டுகளுக்குள் உருவாகியிருக்கும் நகரம் என்பது புரிந்தது.

வெள்ளிக்கிழமை காலை இலங்கை வடக்கு மாவட்டங்களில், மார்க்கெட்டிங் துறையில் இருப்போரில் 48 நபர்களுக்கு இலக்குகளை நிர்ணயித்தல், நேர நிர்வாகம், தன்னம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை பயிலரங்கம் ஒன்றை நடத்தினேன். பலதரப்பட்ட வயதுகளில் இருக்கும் ஆற்றல்மிகு இளைஞர் படை அது. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்து கலந்துகொண்டார்கள். இரண்டு நாட்களாய் அங்கிருக்கும் மனிதர்களிடையே உரையாற்றியிருந்தாலும், உரை நிகழ்த்துவதற்கும், பயிலரங்கிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் மிக அருமையாக ஒத்துழைத்த அந்த பங்கேற்பாளர்களே அன்றைய நிகழ்வின் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம்.



அடுத்த நாள் மட்டக்களப்பு நகரில் இதே போன்றதொரு பயிலரங்கு இருப்பதால் மாலை 5 மணிக்கு புறப்பட்டோம். கிளிநொச்சியிலிருந்து எதிர்பாராத பயணமாக பரந்தன், முல்லைத்தீவு, திரிகோணமலை வழியாக இரவு 11 மணியளவில் மட்டக்களப்பு நகரைச் சென்றடைந்தோம்.

சனிக்கிழமை காலை 10 மணி அளவில் மட்டக்களப்பு பயிலரங்கு தொடங்கியது. வடகிழக்கு மாவட்டங்களில் குறிப்பாக திரிகோணமலை, மட்டக்களப்பு மண்டலங்களில் மார்க்கெட்டிங் துறையில் இருப்போரில் 44 நபர்களுக்கு இலக்குகளை நிர்ணயித்தல், நேர நிர்வாகம், தன்னம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் மாலை 5.30 மணிவரை பயிலரங்கம் ஒன்றை நடத்தினேன். ஏற்கனவே இரண்டு கூட்டம், ஒரு முழுநாள் பயிலரங்கம், 800 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம், குறைவான உறக்கம் என சற்றே உடலளவில் தொய்வடைந்திருந்தேன். அந்த நிலையில் மீண்டும் ஒரு முழுநாள் பயிலரங்கில் ஈடுபடுவது மிகச் சவாலானதாய் இருக்குமென்றும் காலையில் அச்சம் இருந்தது. ஆனால் மிக இணக்கமாக, ஆர்வமாக, ஒத்துழைப்போடு இருந்த பங்கேற்பாளர்கள் அந்த நாளை மறக்கவியலாத ஒரு அழகிய தினமாக மாற்றி எனக்குப் பரிசாக தந்திருந்தார்கள்.
 
 


-

May 8, 2015

இலங்கையில் ஐந்து நாட்கள் - 1



எல்லாமே வியப்பாகத்தான் இருக்கின்றது. திடீரென திட்டமிட்ட பயணம், அதில் மிகப்பெரிய செயல்திட்டங்கள். நான்கு இரவுகளும், நான்கரை பகல்களும் கொண்டிருக்கும் அந்த தருணத்தில் நாட்டின் முக்கால் பாகத்தை பயணித்துவிட வேண்டும். தினந்தோறும் ஒரு கூட்டம் அல்லது பயிற்சி வகுப்பு என விமானம் ஏறும்போதே மனது முழுக்க நிலை கொள்ளாமல்தான் இருந்தது. மதுரை விமான நிலையத்தில் விமானத்திற்காக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு இறக்கிவிடப்பட்டபோது பொம்மை போன்று ஒரு குட்டி  விமானம் நின்றிருந்தது. நான் இதுவரை பயணித்ததில் மிகச்சிறிய விமானம் அது. 



பகல் நேரப் பயணம் என்பதாலும், சிறிய விமானம், குறைவான உயரம் என்பதாலும் மதுரையிலிருந்து கொழும்பு நோக்கிக் கிளம்பிய விமானத்திலிருந்து அது பறந்து செல்லும் பாதையெங்கும் விரிந்து கிடக்கும் நிலத்தைக் காண முடிந்தது. நமக்கு கீழே மேகமும், அதன் கீழே பரந்துவிரிந்து கிடக்கும் நிலமுமென கண்ட காட்சிகள் அத்தனையும் சிலிர்ப்பூட்டக் கூடியவைதான். மேகங்களுக்கடியே நிலப்பரப்பில் கிடக்கும் நிழலும் மிக அழகான ஒன்று. கடலும் நிலமும் கலக்கும் இடம்தான் எத்தனை அழகு. இந்திய தேசத்தின் நிலப்பரப்பு முடிந்து இரண்டு நாடுகளுக்குமிடியே இருக்கும் கடல் மேல் பஞ்சு மேகங்களில் பறந்துகொண்டிருந்தது விமானம்.



பசுமை போர்த்திய நிலப்பரப்பு இலங்கையின் வான் வெளிக்கு வந்திருப்பதை உணர்த்தியது. நோக்கும் திசைதோறும் பசுமையென தென்னை மரங்கள் நிறைந்து கிடந்தன. சமீபத்திய மழைக்கு வளைந்து நெளிந்து செம்மண் நிறத்தில் ஓடும் ஆறு கனத்துக் கிடந்தது. ஆற்று வெள்ளம், சாலைகள் என அழகிய ஓவியமாய் விரிந்துகிடக்கிறது அந்த தீவு தேசம்.

2010, 2014 மற்றும் இப்போது என மூன்றாவது முறையாக இலங்கைக்குள் கால் பதிக்கிறேன். அன்று மாலை துவக்கும் கூட்டத்திலிருந்து அடுத்தடுத்த நாட்களுக்கு நீண்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் கனமாக என்னை எனக்கு உணர்த்துகிறது. வேறெதில் கவனம் செலுத்தவிடாமல், மனசு முழுதும் எதிர்வரும் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் குறித்த ஒற்றைப் புள்ளியில் குவிந்துவிடுகிறது.

விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் எஸ்பிரஸ் ஹைவே முடிந்த இடத்திலிருந்து தேங்கித் தேங்கித்தான் வாகனங்கள் நகருகின்றன. பின் மதியப் பொழுது, பள்ளிகள் விடும் நேரம் என்பதால் நெரிசல் தவிர்க்க இயலாதது. கைதிகளும் மனிதர்கள்தான் என வெலிக்கடை சிறைச் சுவற்றில் எழுதியிருப்பதை கசந்த புன்னகையோடு கடக்கிறேன். பொதுவாக கொழும்பு நகருக்குள் இருப்பது வேறொரு தேசத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதில்லை. பெரும்பாலான இடங்களில் தமிழ்ப் பலகைகள் இருப்பதும் ஒரு காரணம்.

மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் அரங்கைச் சென்றடைந்தேன். வாரத்தின் மைய நாளான புதன்கிழமையும் அந்த சிறிய அரங்கின் பெரும்பாலான நாற்காலிகள் நிரம்பியிருந்தன. ஆச்சரியமாக முன் வரிசை இருக்கைகளும் நிரம்பியே இருந்தன. மேலோட்டமான பார்வையில் 10 வயது பிள்ளைகள் முதல் 70 வயது நிரம்பிய மூத்தவர்கள் வரை அரங்கில் இருப்பதை உணர முடிந்தது. எந்த ஒரு அமைப்பின் கீழும் வராத, அழைப்பாளர்களின் நட்பு உறவு என பொதுமக்களாகவே அந்தக் கூட்டத்தினர் இருந்தனர். சிங்கப்பூருக்கு அடுத்து நிகழ்த்தும் வெளிநாட்டு உரை இது. சிங்கப்பூர் கூட்டத்தில் இருந்தவர்களில் மிகப்பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள். அவர்களுக்கும் எனக்கும் மொழி ஒன்றே. ஆனால் கொழும்பில் கூடியிருந்தவர்கள் நம் தொப்புள்கொடி உறவென்ற போதும், அவர்களின் தமிழும் என் தமிழும் வேறுவேறானவை. ஒரு வகையில் நம் ஊர் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பார்த்து தமிழகத்தின் கலப்புத் தமிழுக்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். அதுவரை உரை முழுதும் நான் பேசும் தமிழ் அவர்களுக்குப் புரியுமா எனும் சிறு சந்தேகத்துடனே கூட்டத்தைக் கையாண்டேன்.



சுமார் 80 நிமிடங்கள் "வாழ்தலும் பிழைத்தலும் தலைப்பில் பேசிய உரைக்குப் பின்னர், கூட்டத்தினர் கொடுத்த மதிப்புரை மகிழ்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக உள்ளே அமர்ந்திருக்கும் தமது தாயிடம் ஏதோ ஒன்றை பெற்றுச்செல்ல வந்திருந்த மிக இளவயது மகள் ஒருவர், அம்மாவின் கட்டாயத்தின் பேரில் ஐந்து நிமிடம் மட்டுமே அமர்ந்திருப்பேன் எனும் நிபந்தனையோடு உள்ளெ வந்திருக்கிறார். வந்தவர், ஐம்பது நிமிடங்களுக்கும் மேலாக உரை முடியும்வரை அமர்ந்திருந்ததை அவரின் தாயார் ஆச்சரியமாக மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிக்கொண்டேயிருந்தார். எல்லாவற்றையும் எளிமைப்படுத்த இல்லம்தேடி வந்திருக்கும் நவீன மின்னணுக் கருவிகளின் பயன்பாட்டில் உலகம் சுருங்கி, உறவுகள் தொலைவிற்குச் சென்றுவிட்டது குறித்து உரையில் தெரிவித்த அச்சம் அவர்களுக்குள்ளும் ஊடுருவி இருப்பதை உணர முடிந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்து, ஒழுங்குபடுத்தி செம்மையாக நடத்தி, மனதிற்கு நிறைவினை அளித்த திருமதி.மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் அவர்களுக்கு அன்பும் நன்றிகளும். முதல் கூட்டத்தின் பாராட்டு தந்திருந்த தன்னம்பிக்கையும் உற்சாகமும் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த நம்பிக்கையை அதிகரித்திருந்தன.

-

May 7, 2015

செடிக்கு சிறுநீர்: கட்கரியை கழுவியூற்றுதல் தகுமோ?

வறட்சிக்கு எதிரான நீர்ப்பாசன முறைகள் குறித்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…
”டெல்லியில் எனக்கு பெரிய பங்களா உள்ளது. அங்கு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஏராளமான மரங்கள் உள்ளன. எனது சிறுநீரை ஒரு பிளாஸ்டிக் கேனில் சேமிக்கத் தொடங்கினேன். அது 50 லிட்டர் அளவுக்கு சேர்ந்தவுடன், எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள சில செடிகளுக்கு மட்டும், சேமித்து வைத்த சிறுநீரை தோட்டக்காரர் உதவியுடன் பாய்ச்சினேன். மற்ற செடிகளை விட சிறுநீர் ஊற்றப்பட்ட செடிகள் ஒன்றரை அடி உயரம் கூடுதலாக வளர்ந்தன. இதை உங்களிடம் சொல்வது சிரமம்தான். இதனை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நான் ஒரு பரிசோதனை முயற்சியாகவே இதனைச் செய்தேன். நீங்கள் உங்கள் சிறுநீரை சேமித்து செடிகளுக்கு பயன்படுத்துங்கள். அதில், யூரியாவும், நைட்ரஜனும் இருக்கிறது. சிறுநீரை நீங்கள் ஆரஞ்சு மரத்துக்கு ஊற்றினால், அதன் வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும்”


இதைத்தான் இரண்டு நாட்களாக சமூகவலைதள தலைமுறை மிகக் கொண்டாட்டமாக அணுகியிருக்கிறது. கிரி படத்தில் மூத்திரச்சந்திற்குள் சிக்கிக்கொண்ட வடிவேலுவை சந்தானத்தின் பாணியில் வச்சு செய்வோம் என்பதுபோல் அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம், மேற்கூறிய நிதின் கட்காரியின் பேச்சு நாள் முழுக்க  அடித்துத் துவைக்க வேண்டிய அளவிற்கான, முட்டாள்தனமான, அவதூறான, மூடநம்பிக்கையான கருத்தா என்பதையும் ஆராயவேண்டிய சூழலில் நாம் இருந்தோமா என்பதுதான் முதற்கேள்வி!?

எதிலிருந்தும் தங்களுக்குத் தேவையான ஒரு வரியைக் கத்தரித்து, அதை மட்டும் ஒட்டி அதற்குக் கீழே வினையாற்றிப்போவது மிகப் பரவலாகவும், எளிதாகவும் நடக்கும் அவரச மற்றும் ஆபத்தான காலத்தில் இருக்கின்றோம். எதையும் கேள்விக்குட்படுத்து, எதையும் புனிதப்படுத்தாதே என்பது அறிவின் திறவுகோளாய் இருப்பதையும் மறுக்கக் கூடாது. அதே சமயம் ஒரு செயலை, ஒரு செய்தியை எந்த வகையில், எந்த நோக்கத்தில் கேள்விக்குட்படுத்துகிறோம் என்பதும் மிக முக்கியமான ஒன்று.

தன் உதாரணத்தைச் சொன்னதன் நோக்கம் வறட்சிக்கான தீர்வாக சிறுநீரை பயன்படுத்த யோசனை கூறினாரா அல்லது உரமாக சிறுநீரை பயன்படுத்த யோசனை கூறினாரா என்பதைத்தான் முதலில் கேள்விக்குட்படுத்த வேண்டும். ஒருவேளை வறட்சிக்கான தீர்வாக சிறுநீரை அவர் முன்னிறுத்தியிருந்தால் மிக நிச்சயாமாக நாம் எதிர்வினையாற்றுவது அவசியம். அதேபோல் ஏதேனும் மதரீதியான காரணங்களை முன்வைத்து மூடநம்பிக்கையாக மட்டுமே திணித்திருந்தால் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்றே.

ஆனால் பிஜேபி அரசின் ஒரு மந்திரி சொல்லியிருக்கிறார், அதும் சிறுநீர் ஆரஞ்சு செடிக்கு பயன்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறார் என்பதையொட்டி, பிஜேபி என்பதற்காகவும், ஆரஞ்சுப் பழச்சாறில் சிறுநீரின் உப்பு கரிக்கும் என்பதாகவும் நினைத்து எதிர்வினையாற்ற நினைத்தால் அது சரியானதுதானா என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

ஒருவேளை ஆரஞ்சுச் செடிக்கு பாய்ச்சிய(!) சிறுநீர் அதன் பழங்களில் கலந்திருக்கும் எனும் ஒவ்வாமை எண்ணம் ஏற்பட்டால் அதற்கு எதிர்வினையாற்றும் முன்பாக, திருப்பூர் மாதிரியான பகுதிகளில் சாயக்கழிவுகளை ஆழ்துளைக் கிணறுகளில் விட்டு, அது பூமிக்கடியில் இருக்கும் நீர்த்தடங்களின் வழியாக பல மைல்கள் கடந்து ஏதாவது ஒரு வறண்ட கிணற்றில் பாய்ந்து அங்கிருந்து பாசனமாக தென்னை மரங்களுக்குச் சென்று, அதை மட்டுமே குடித்து வாழும் தென்னையின் இளநீரில் வீச்சம் அடிப்பது குறித்தும் ஒவ்வாமை கொண்டு சமூக வலைதளங்கள் உறைந்துபோகும் அளவிற்கு இதைவிடப் பலமடங்கு எதிர்வினையாற்ற வேண்டும்.

இங்கே கணினியில் ஒரு மந்திரி தன் தோட்டத்தில் சில செடிகளுக்கு தமது சிறுநீரைப் பயன்படுத்தியாக கேலியும் கிண்டலுமாக பதிவு செய்பவர்களில் எத்தனை பேருக்கு, குறிப்பிட்ட விவசாயப் பயிர்களுக்கு பன்றியின் எருவை (மலம்)  தேடித் தேடி மூட்டை மூட்டையாக வாங்கி வந்து நிலம் முழுக்க இறைத்து பயிர் செய்கிறார்கள் என்பது தெரியுமெனத் தெரியவில்லை.  ஒரு காலத்தில் கிராமத்தில் மாடு, எருமைகளின் சாணம் மட்டுமே பயன்படுத்திய விவசாயிகள், விருப்பமாகடவுன் குப்பைஎன, குறிப்பாக மனித மலக் குப்பையை வாங்கி வருவதையும் கண்டிருக்கிறேன். பசுமாட்டின் கோமியம் சொட்டுவிடாமல் சேகரிக்கப்பட்டு பஞ்சகாவ்யம் உட்பட்ட இயற்கை உரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை ஓரளவு நாம் அறிவோம்தானே. அதே பசுமாட்டின் சிறுநீரில் இருந்து வடிகட்டித் தயாரிக்கப்படும் ’அர்க்’ கூட மிகப் பிரபலமான மருந்துதானே.

நிதின் கட்கரியும் கூட சிறுநீரை தாம் பயன்படுத்தியதற்காக எவ்விதத்திலும் நம்ப முடியாததைக் காரணமாய்க் காட்டவில்லை. சிறுநீரில் யூரியாவும், நைட்ரஜனும் இருப்பதால் பயன்படுத்துவதாகவே அவர் சொல்லியிருக்கிறார். அவரின் கருத்து குறித்து கூர்மையான கேலிகளைப் பயன்படுத்த நேரம் இருந்த நமக்கு, அவ்வாறு சிறுநீரில் இருக்கும் தாது உப்புகள் அப்படியான பயிர்களுக்கு எந்தெந்த வகைகளில் பலனளிக்கும் அல்லது தீங்கிழைக்கும் என்பதை வேளாண்துறை கல்வி பயின்றவர்கள் எவரிடமாவது  கேட்க நேரமோ எண்ணமோ தோன்றியிருக்கிறதா? வேளாண்துறை கல்வி சார்ந்தவர்கள் எவரேனும் நிதின் கட்காரியின் கருத்து குறித்து வெட்டியோ ஒட்டியோ விளக்கமாக எழுதுதலும் நலம்.

முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், முன்னாள்  பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட எத்தனையோ பேர் தத்தம் சிறுநீரை பருகும் பழக்கம் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். நமக்கு நம்மிடம் இருந்து வருவது கழிவாக இருக்கும் நிலையில், இன்னொருவருக்கு அவரிடமிருந்து வருவது மருந்தாக இருப்பதுதான் விந்தையும், தவிர்க்க முடியாததும்.

சிறுநீரைப் பயன்படுத்தியதாகச் சொன்னார் என்பதற்காக கேலியும், கிண்டலும் செய்வதும் கூட ஒருவித மேட்டிமைத் தன மனோபாவம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக தமது கழிவுகளைக் கழித்துக்கொண்டிருந்த அதே மனித சமூகம்தான் வீட்டிற்குள்ளேயே அதும் படுக்கை அறையின் இணைப்பாக, சில இடங்களில் பூஜை அறையின் சுவரையொட்டிய இடத்தில் கழிப்பறை கட்டி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்குள் மூத்திரம், மலம் கழிப்போம் என்பதை கற்பனையே செய்ய முடியாத அதே மக்கள்தான், இன்று கழிவறைக்கு வெளியே மூத்திரம், மலம் கழிப்பதை கற்பனைகூட செய்ய முடியாத நிலைக்கு மாறியிருக்கிறோம்.

இதெல்லாம் நிதின் கட்கரியின் கருத்து மிகச் சரியானது, ஆகச்சிறந்தது என எவ்வகையில் சான்றிதழ் வழங்கும் பொருட்டு அல்ல. நமக்கு மேலோட்டமாக பிடிக்காத ஒன்றை முகச்சுழிப்போடு கேலியும் கிண்டலும் செய்வதற்கு இருக்கும் சுதந்திரம், மற்றொருவருக்கு தன் பயன்பாட்டில் கண்டதை, பிடித்ததைச் சொல்லவும் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும்தான். சில வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் புனிதா என்ற பள்ளிச் சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காகவிடுதி காப்பாளர் அந்தச் சிறுமியை சிறுநீரைக் குடிக்க  வைத்த கொடிய சம்பவத்திற்கு நிகரானதுதான், ஒரு மந்திரி தம் சிறுநீரை பயிர்களுக்குப் பயன்படுத்தினேன் என்பதை வெறும் கேலியும் கிண்டலுமாக மட்டுமே அணுகுதலும் கூட!

-

நன்றி  : தி இந்து



-

May 5, 2015

இடைவேளை






வெண் நிறக்கூரை
துப்பும் குளிரில்
உடல் நடுங்கியபடி
விபத்தில் தந்தையை இழந்துவிட்ட
தேநீர் பரிமாறும் ஒடிசாக்காரன்
ஊருக்குச் செல்ல
ஒவ்வொரு மேசையாக
வசூலித்துக் கொண்டிருக்கிறான்

மழை பெய்யும் ஓசைபோல்
சரசரவெனச் சப்தம் கேட்கிறது
வெளியில் மழை பெய்வதாய்
துள்ளுகிறது மனம்

ஊரிலும் இதே மழையிருந்தால்
பிழைத்துக்கிடக்கும் ஒன்பது தென்னைக்கு
லாரித் தண்ணீர்
வாங்க வேண்டியிருக்காது

வேலையில் மூழ்கியிறுகி
மூச்சுத்திணறுமொரு கணத்தில்
சிகரெட்டொன்றில் தளர
வெளியேறுகையில்
கத்திரி வெயிலில்
துடித்துக்கிடக்கிறது தரை

கண்களில் நிரம்பும் வறட்சியில்
மனதிற்குள் சுருங்கும்
மழை ஈரத்தையும்
மண் வாசனையும்
எப்படி இழுத்துப்பிடிப்பதெனத்
தெரியாமல் தவிக்கையில்
அலுவலக நுழைவாயிலருகே
அந்த ஒடிசாக்காரன்
அவன் சாயலையொத்த ஒருவனோடு
உக்கிரமான சண்டையில் இருக்கிறான்

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...