யாழ்ப்பாணத்தில் மதியம் இரண்டு மணிக்குப் பேச
வேண்டிய கூட்டம் நோக்கி மனது பயணிக்கத் தொடங்கியது. காலை நான்கு மணிக்கு வாகனம் ஒன்றில்
யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டேன். சிலாபம், புத்தளம் என வாகனம் வடக்கு நோக்கி சீறிக்கொண்டிருந்தது.
ஏற்கனவே 2010ல் அதே பாதையில் பேருந்தில் வவுனியா வரை சென்றிருந்ததால் ஓரளவு ஊரின் பெயர்கள்
நினைவில் இருந்தன.
அநுராதபுரம் அருகே தாமரை இலையில் பரிமாறும்
ஒரு சிறிய குடிசை உணவகத்தில் ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார். ஊனம் அடைந்த ஒரு முன்னாள்
ராணுவ வீரர் அதை நடத்துகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்களே சமைத்து பரிமாறுகிறார்கள்.
அந்தக் காலை நேரத்து பசிக்கு இடியாப்பம், புட்டு, தேங்காய் சொதி என சுவையான உணவு. அவர்களின்
சமையலில் நிறைய காய்கறிகளைப் பயன்படுத்துகின்றனர். நாமே எடுத்து உண்டும் வகையில் உணவு
வகைகள் வரிசையாக அணிவகுத்திருக்கின்றன. எடுத்து உண்டுவிட்டு நாம் சொல்லும் கணக்குக்கு
காசு வாங்கிக் கொள்கிறார். விடிகாலை விழிப்பு, ஊட்டியிருந்த பசிக்கு ஏதுவான உணவு அது.
வவுனியா, தாண்டிகுளம் ஓமந்தை என ஏ9 வீதியில்
வாகனம் சீறுகிறது. 2010ல் யாழ்ப்பாணம் வரை செல்ல முயன்றபோது ஓமந்தை சோதனைச் சாவடியில்
அனுமதி மறுக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். இப்போது வாகனப் பதிவு மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முறிகண்டி, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு என ஏற்கனவே செய்திகளில் வாசித்து
வாசித்து பழக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள். போர்
நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ஏ9 நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் போர்
நடந்ததற்கான சுவடுகள் கவனமாக அகற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தலை முறிந்த பனை மரங்கள்
ஏராளமாக இருந்ததாகவும் இப்போது அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்கள். போர் வெற்றியைக்
கொண்டாடும் வகையிலான போர் நினைவு அடையாளங்கள் இரண்டு இடங்களில் கண்ணில் பட்டன. குறிப்பாக
கிளிநொச்சியில் மட்டும் வீழ்ந்துகிடக்கும் பிரமாண்ட நீர் தொட்டி அப்படியே விட்டுவைக்கப்பட்டிருக்கிறது.
7 மணி நேர பயணத்திற்குப் பிறகு 11 மணியளவில்
யாழ்ப்பாணத்தை அடைந்தோம். தமிழகத்தின் ஒரு நகரத்திற்குள் இருக்கும் உணர்வு. குறிப்பாக
பெயர் பலகைகள் நல்ல தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. சிங்களம்
எங்கும் கண்ணில் பட்டதாக நினைவில்லை. ராஜபக்ஷேவை புகழ்ந்து வைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான
ஃப்ளக்ஸ் பேனர்களும் ஓரிரு இடங்களில் இருப்பது கண்ணில்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது.
சிறிய ஓய்விற்குப் பிறகு உரையாற்ற வேண்டிய
வீரசிங்கம் மண்டபத்திற்குச் சென்றோம். தம் கனவுகளை பிள்ளைகள் மேல் சுமத்தும் பெற்றோர்களிடம் பேச வேண்டும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அரங்கில் மகளிர் மட்டுமே அமர்ந்திருந்தனர். பெரும்பாலானோர் அம்மாக்களாக இருந்ததால் உரை எளிதாக அமைந்துபோனது. உரை நிறைவில் கேள்விகளுக்கான நேரத்தில் வந்த சுவாரஸ்யமான கேள்விகள் கூட்டத்தை அர்த்தப்படுத்தின.
குழந்தைகள் மேல் ஏவி விடப்படும் பாலியல் வன்முறை படிப்படியாக உயர்ந்து வருவது குறித்த அச்சத்தை பங்கேற்பாளர் ஒருவர் விளக்கமாகத் தெரிவித்தார். ஆட்களை இனம் கண்டாலும் அவர்களை எதுவும் செய்யமுடியவில்லை எனும் இயலாமையை வெளிப்படுத்தியபோது என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திருமதி.ராதை பாஸ்கரன் அவர்களின் அன்பிற்கும், ’யாழ்’ நினைவுப்பரிசுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.
நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் மீண்டும் அங்கிருந்து
கிளிநொச்சி நோக்கி பயணம். அடுத்த நாள் பயிலரங்கு நடைபெறும் இடத்திலேயே தங்கும் அறை
ஒதுக்கப்பட்டிருந்தது. மிகச் சமீபத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு உணவகம் அது. ஐந்து
ஆண்டுகளுக்குள் உருவாகியிருக்கும் நகரம் என்பது புரிந்தது.
வெள்ளிக்கிழமை காலை இலங்கை வடக்கு மாவட்டங்களில், மார்க்கெட்டிங் துறையில் இருப்போரில் 48 நபர்களுக்கு இலக்குகளை நிர்ணயித்தல், நேர நிர்வாகம், தன்னம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை
பயிலரங்கம் ஒன்றை நடத்தினேன். பலதரப்பட்ட
வயதுகளில் இருக்கும் ஆற்றல்மிகு இளைஞர் படை அது. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு
ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்து கலந்துகொண்டார்கள். இரண்டு நாட்களாய் அங்கிருக்கும்
மனிதர்களிடையே உரையாற்றியிருந்தாலும், உரை நிகழ்த்துவதற்கும், பயிலரங்கிற்கும் நிறைய
வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் மிக அருமையாக ஒத்துழைத்த அந்த பங்கேற்பாளர்களே அன்றைய நிகழ்வின்
மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம்.
அடுத்த நாள் மட்டக்களப்பு நகரில் இதே போன்றதொரு
பயிலரங்கு இருப்பதால் மாலை 5 மணிக்கு புறப்பட்டோம். கிளிநொச்சியிலிருந்து எதிர்பாராத
பயணமாக பரந்தன், முல்லைத்தீவு, திரிகோணமலை வழியாக இரவு 11 மணியளவில் மட்டக்களப்பு நகரைச்
சென்றடைந்தோம்.
சனிக்கிழமை
காலை 10 மணி அளவில் மட்டக்களப்பு பயிலரங்கு தொடங்கியது. வடகிழக்கு மாவட்டங்களில் குறிப்பாக
திரிகோணமலை, மட்டக்களப்பு மண்டலங்களில் மார்க்கெட்டிங் துறையில் இருப்போரில் 44 நபர்களுக்கு இலக்குகளை நிர்ணயித்தல், நேர நிர்வாகம், தன்னம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் மாலை
5.30 மணிவரை பயிலரங்கம் ஒன்றை நடத்தினேன். ஏற்கனவே இரண்டு கூட்டம், ஒரு முழுநாள் பயிலரங்கம்,
800 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம், குறைவான உறக்கம் என சற்றே உடலளவில் தொய்வடைந்திருந்தேன்.
அந்த நிலையில் மீண்டும் ஒரு முழுநாள் பயிலரங்கில் ஈடுபடுவது மிகச் சவாலானதாய் இருக்குமென்றும்
காலையில் அச்சம் இருந்தது. ஆனால் மிக இணக்கமாக, ஆர்வமாக, ஒத்துழைப்போடு இருந்த பங்கேற்பாளர்கள்
அந்த நாளை மறக்கவியலாத ஒரு அழகிய தினமாக மாற்றி எனக்குப் பரிசாக தந்திருந்தார்கள்.
-
2 comments:
புதிய அனுபவங்கள் மனநிறைவான வாழ்க்கை தடங்கள் ...தொடரட்டும் உங்கள் வெற்றி பணிகள் ஏணிப்படிகளாய் ***
புதிய அனுபவங்கள் மனநிறைவான வாழ்க்கை தடங்கள் ...தொடரட்டும் உங்கள் வெற்றி பணிகள் ஏணிப்படிகளாய் ***
Post a Comment