Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Dec 9, 2020

அனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி

ஏன் இப்படி போய்ட்டே? தைரியமா இருக்க வேணாமா? நீ எல்லாம் இப்படி செய்யலாமா?, தற்கொலைதான் தீர்வா? தற்கொலை கோழைத்தனம் இல்லையா?’ என்பது போன்ற ஆறுதல் தேறுதல் கம் அட்வைஸ்களுக்குள் ஒருபோதும் அடங்காதவை தற்கொலைகள். நானறிந்த வரையில் இரண்டு வகைகளில் சுயகொலைகளை மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

உடல் நலமின்மை மற்றும் மன நலமின்மை தொடர்பில் மரணத்தை தேர்ந்தெடுப்பது ஒரு வகை. தீராத நோய், அதன் வாதை என அவதியுறும்போது, அதைத் தாங்குவதற்குப் பதில் இறந்துவிடுவதே மேல் எனத் தீர்மானித்தல். மன நலமின்மை என்பது மிக நுண்ணியது. உள்ளுக்குள்ளே ஆயிரமாயிரம் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். எத்தனை போராடியும் அவை யாவற்றிலும் அவர்கள் தோற்றுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் நிழலே அவர்களுக்கு போட்டியாளனாய் மாறும். நாம் கற்பனையே செய்திருக்காத ஏதோ ஒன்று அவர்களை அப்படி சிக்க வைத்திருக்கும். மிகச்சரியான நேரத்தில் கண்டறிப்படாமல், கண்டு கொள்ளப்படாமல் இருப்பது அவர்களை மரணம் எனும் விடுதலையை நோக்கி நகர்த்தி விடுகின்றது. கவனிக்கவும், மரணம் என்பது அவர்களைப் பொறுத்த வரையில் விடுதலை.

உடல் நிலை என்றால் மருத்துவத்தின் அதிக பட்ச மருத்துவ உதவியை நாடுதல் தேவை. மனதில் சிக்கல் என்றால் உடனடியாக தேவையான மனநல ஆலோசனைக்கு உட்படுத்தி, தேவைப்படின் சிகிச்சைக்கு உட்படுத்தி மீள்வது மட்டுமே தீர்வாகும். உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகத் தரப்படும் எந்தவிதமான அறிவுரைகள் மற்றும் ஊக்குவிப்புகளும் உதவவே உதவாது.

மற்றொரு வகையில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்கின்றன. இவை ஏதோ ஒருவிதத்தில் மற்றவர்களால் அறிந்தோ அறியாமலோ தூண்டப்படுவதால் நிகழ்கின்றன. குடும்பப் பிரச்சனை, கடன், துரோகம், காதல், ஏமாற்றம், இழப்பு, தேர்வில் தோல்வி உள்ளிட்ட அனைத்தின் பின்னாலும் யாரோ ஒருவர், ஏதோ ஒன்று இருக்கும். பெரும்பாலும் தற்கொலைகள் உயிரிழப்பு மட்டுமே மிகைப்படுத்தப்பட்டு, அதற்கு காரணமாக இருந்த அந்த யாரோ ஒருவர், ஏதோ ஒன்று என்ன அறியப்படாமல் போகின்றது.


இதில் சிக்கிக் கொள்பவர்கள் பெரும்பாலும் அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாத பதட்டத்தில் இந்த முடிவுக்கு நகர்கின்றனர். மேற்கண்ட பட்டியலில் இருக்கும் அனைத்தையும் உடைக்க முடியும், மாற்ற முடியும், மாற்று வழி ஒன்றைக் கண்டறிய முடியும் எனும் நம்பிக்கையும், சமாதானமும் மிகத் தெளிவாக வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்று இங்கு யாருமே இல்லை என்பதை உணர்த்த வேண்டும். உண்மையில் இவர்களுக்கு மரணம் ஒருபோதும் விடுதலை அல்ல. அந்த நெருக்கடியின் இறுக்கத்தில் இருந்து தப்பித்தல் மட்டுமே. தப்பித்தல் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக மாறிவிடுகின்றது.

இவர்களில் பெரும்பாலும், அதன் தொடர்பில் உள்ளவர்களைப் பழிவாங்க அல்லது தண்டிப்பதற்காக தற்கொலை செய்வதுண்டு. சிலர் எதிராளியை மிரட்டுவதற்காக ஏதாவது ஒன்றைச் செய்து மரணத்திற்குள் மாட்டிக் கொள்வார்கள்.  இந்தாப் பாரு கயிறு போட்டுக்குவேன், கையை கிழிச்சுக்குவேன், மருந்தக் குடிச்சிருவேன்!என்பவர்கள் பெரும்பாலும் மிரட்டலுக்காக அவ்வப்போது செய்து, ஒருகட்டத்தில் புலி வருது கதை போல், மற்றவர்களால் பொருட்படுத்தப்படாத தருணத்தில் மரணத்திற்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

இவர்கள் உடனிருப்பவர்களால் அடையாளம் காணப்பட்டு மிகச் சரியாக வழி நடத்தினால் தற்கொலைகளை நோக்கி நகராமல் இருப்பார்கள். அவர்களுக்கே வாழ்க்கை குறித்த புரிதலும், சுய அறிவும் இருந்தால், தன் தவற்றை உணர்ந்து தீர்வை நோக்கி நகர வேண்டும். அவர்களின் கேள்விகள் மதிக்கப்பட்டு, அவற்றிற்கான சரியான பதில்கள் வழங்கப்பட வேண்டும். சரியான பதில்கள் என்பவை பிடித்ததாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் போதும்.

எல்லாத் தற்கொலைகளுக்கும் ஒரே விதமான அளவீட்டுக் கருவி பொருந்தாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானது. அந்தந்த விதத்தில் அணுகி சரி செய்யப்பட வேண்டும். மேலோட்டமான ஆலோசனை ஆறுதல்களால் மட்டுமே கடந்துவிடக் கூடியல்ல. தற்கொலை எனும் பிணியை வெறும் அனுதாபங்களால் மட்டுமே குணப்படுத்த முடியாது!


Feb 27, 2018

நமக்குக் கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வாழ்க்கை

அதுவொரு துண்டுக் காணொளிக்காட்சி. மங்கலாகத்தான் தெரிகின்றது. வெளிநாட்டு ரயில் நிலையம் ஒன்றில் ஆண் ஒருவர் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். கோபத்திலோ, இயலாமையிலோ கையில் இருக்கும் பையினை தூக்கி அடிக்கிறார். உச்சகட்டப் பதட்டத்தில் இருக்கிறார் என அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அதைக் கவனித்தபடியே இருவர் கடந்து போகின்றனர். கோபத்தில் மீண்டும் மீண்டும் கைபேசியில் கத்துவது புரிகிறது. கடந்துசென்ற இருவரில் பெண்போல் தோற்றமளிப்பவர், கோபத்தில் பேசிக்கொண்டிருப்பவரையே திரும்பிப் பார்த்தபடி தம் அருகில் இருப்பவரிடம் ஏதையோ சொல்லிக்கொண்டு செல்கிறார். ஒருகட்டத்தில் அவ்விருவரும் நின்று விடுகிறார்கள். இவர் கையில் இருந்த கைபேசியையும் தூக்கி வீசி சிதறடித்துவிட்டுக் குமைந்து உட்கார்கிறார். அந்தப் பெண் அவரை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்.   கற்பனை செய்ய முடியாத வேகத்தில் தண்டவாளத்தில் ரயில் சீறி வரவும், உட்கார்ந்திருந்த நபர் ரயிலை நோக்கிப் பாய்கிறார். ஓடிவந்த அந்தப் பெண் அவர் ரயிலுக்குள் விழுவதற்கும் முன்பாக இழுத்து வெளிப்புறமாகத் தள்ளிவிடுகிறார். ஒரு மைக்ரோ நொடிப் பொழுதுதான். மரணம் தோற்றுவிட்டது. உயிரும், மிச்சமிக்கும் வாழ்க்கையும் கிடைத்தற்கரிய பரிசுபோல் அப்படியே கையில் மீந்து நிற்கின்றன. ஆமாம், இன்னொரு பிறப்பெடுத்தாகிவிட்டது.

இரண்டு வார காலத்திற்குள் என்னிடம் நான்கு பேர், வாழ்வதன் மேல் கொண்ட அயர்ச்சியில், வாழ்க்கை தரும் மிரட்சியில் குமைந்துபோய் தற்கொலை எண்ணம் தலை தூக்குவதாகச் சொல்லிவிட்டார்கள். நாற்பதுகளில் இருக்கும் ஓர் ஆண், முப்பதுகளில் இருக்கும் இரண்டு பெண்கள் மற்றும் இருபது வயதை நெருங்கும் ஒரு மாணவன்.  அவர்களைச் சூழ்ந்த எண்ணத்தின் பின்னால் வறுமையோ, பொருளாதார இழப்போ, நோய்க் கொடுமையோ, உறவுகளின் அருகாமைக் குறைவோ இல்லை. அனைவருக்கும் குடும்ப, சமூகப் பிணைப்பு மிக பலமாகவே உள்ளன.

முதல் மூவருக்கும் கல்வி பயிலும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். நான்காமவரை நம்பி தாய், சகோதரி இருக்கிறார்கள். எல்லோருக்கும் பெருங்கடமைகள் கைகளில் கனத்துக் கிடக்கின்றன. ஏதோவொரு அற்பக் கணத்தில் இவர்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டால் பிள்ளைகளின் வாழ்க்கை, குடும்பத்தின் எதிர்காலம் உள்ளிட்ட அனைத்துமே சபிக்கப்பட்டதாகிவிடும். ஆனாலும் தயக்கமே இல்லாமல், ஒரு தேநீர் அருந்த விரும்புவதைச் சொல்வதுபோல், தம்மையே கொலை செய்வது குறித்து சலனமில்லாமல் மிக எளிதாகச் சொற்களை உதிர்க்கிறார்கள். இவ்வாறாகச் சொல்லியவர்கள் நான்கு பேர் எனில், உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பல்லாயிரங்களில் இருக்கலாம். சுயமாய்த் தேடிக்கொள்ளும் வகையில் வாழ்க்கையும் மரணங்களும் அத்தனை சல்லிசாகி விட்டனவா!?

இந்த வாழ்க்கையை மிகக்கெட்டியாகப் பிடித்துக்கொள்ள என்னிடம் இருக்கும், எனக்கு மிகவும் பிடித்த தாரக மந்திரம் நமக்குக் கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வாழ்க்கை என்பதுதான். என்னிடம் பழகுபவர்களிடம் பல்வேறு தருணங்களில் இக்கூற்றினை மிகத்தாராளமாக மொழிகிறேன். அதைவிடவும் அதிகமாக என்னிடமே நான் திரும்பத்திரும்ப மொழிகிறேன். இதுவே பலநேரங்களில் என்னை இயக்கும் மந்திரச்சொல். இந்த வாழ்க்கை எவ்விதமானதாக அமைந்திருந்தாலும் சரி, சுவாரஸ்யம், பூடகம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் நிறைந்ததே. மகிழ்ந்திருந்த கணங்கள், நம்பிக்கை மிகுந்திருந்த தருணங்கள் நினைவில் தங்குவதைவிட, நீங்காமல் நிலைத்திருக்கும் வருந்திய கணங்கள், கலங்கிய தருணங்கள் பல மடங்கு அதிகம்.

அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தில் நானும் அச்சமூட்டும் ஒரு காரணத்தோடுதான் காத்திருந்தேன். திருவிழாபோல் கூட்டம். கற்பனையே செய்திட முடியாத அளவிற்கு இளைத்து ஒல்லியாய் இருந்த நோயாளி ஒருவரும் காத்திருக்கிறார். அவ்வளவு இளைத்திருக்கும் ஒருவரை என் வாழ்நாளில் ஒருபோதும் பார்த்ததில்லை. சுருங்கி இறுகி ஒட்டியிருக்கும் தோலிற்குள் எலும்பு நரம்புகள் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது. அருகில் மனைவி, மகன் போல் தோற்றமளிக்கும் இருவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் இன்னும் தங்கியிருக்கும் நம்பிக்கை குறித்தே யோசிக்கத் துவங்குகிறேன். வாழ்வது குறித்த, வாழ வேண்டிய தேவை குறித்த நம்பிக்கைகளை எப்படியேனும் உணர்ந்துதான் ஆகவேண்டும். அப்படி உணர்வதால் பலன்கள் கிட்டுகிறதோ இல்லையோ, உணர மறுப்பதாலோ, உணர மறப்பதாலோ ஒருபோதும் பலன்கள் உருவாக சாத்தியமில்லை.



வாழத் தவிக்கிறேன், நாட்கள் இல்லை!’ என வாழ வேண்டிய வயதில் வாழ்வை முடித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டவர்களை அறிந்ததுண்டா? அப்படியாக புற்றுநோயால் வாழ்வை முடித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டவர் இருபத்தேழு வயதே ஆன ஹோலிபட்சர் எனும் பெண். வாழ்ந்திட பெரிதும் ஏங்கும் அவரின் கையில் மரணத்தைத் திணித்துவிட்டு காலம் நின்று விளையாடுகிறது. எந்த வகையிலும் தவிர்க்கமுடியாமல் எதிர்கொண்டேயாக வேண்டிய நிர்பந்தம். பணம், புகழ், அறிவியல் என எதுகொண்டும் தவிர்க்க முடியாத திணிக்கப்பட்ட தீர்ப்பு. அந்தச் சூழலிலும் வாழ்க்கையின் அழகியலை, அவசியத்தை அவர் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். அதைத்தான் எழுதியிருக்கிறார். அந்தக் கடைசி எழுத்தினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.   நாம் கொண்டாடும் அல்லது திண்டாடும் வாழ்க்கை குறித்தான வேறொரு வடிவத்தை, பிரமாண்டத்தைக் காட்டும் வல்லமை கொண்டது அந்தக் கடிதம். தெரிந்தோ தெரியாமலோ இந்த வாழ்க்கையின் அருமையை யாரோதான் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகிறார்கள். நாமாக உணர்வதற்கு நமக்கு அறிவில்லை, தெளிவில்லை, நேரமில்லை இன்னும் சொல்லப்போனால் நிதானமில்லை. உணர்தல் ஒரு வரம். தேடியடைய வேண்டிய வரம். எனினும் பெரும்பாலும் நமக்கு வாய்ப்பதில்லை.

வாழ்க்கையை முடித்துக்கொள்ள ஏதோ ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதுசார்ந்த குழப்பங்களை முன்பின்னாக வளர்த்துக்கொண்டு, முடித்துக்கொள்ள நினைப்பதாகச் சொன்னவர்களை உற்றுப் பார்க்கிறேன். அந்த ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிணுங்கிக் கொண்டு நிற்பவர்களிடம் உரத்துச்சொல்ல ஆயிரமாயிரம் இருக்கின்றன என்னிடம். அவர்கள் தம் செவிகளை, விழிகளை, மனதை அடைத்து வைத்திருக்கும்வரை ஒரே ஒரு  சொல்கூட அவர்களைச் சென்றடைந்துவிட முடியாது..

தான் ஒரு தனித்த உயிர், பிறப்பு தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நிகழ்ந்ததுபோல், இறப்பு தானாக வந்து நிகழும்வரை தனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறதென ஏற்க மறுப்பவர்களிடம் என்ன செய்வீர்கள்?. உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கைரேகையும், கருவிழிப்பதிவும் வெவ்வேறாய் இருப்பது போலவே, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தனித்த அளவீடுகள், காரணங்கள், இலக்குகள், கடமைகள் இருப்பதை உணர மறுப்பவர்களிடம் என்ன சொல்வீர்கள்? “முட்டாளே!” எனும் ஓங்காரமான குரலொன்றுதான் மூர்க்கமாய் வருகிறது. அந்தக் குரலுக்குள் இருப்பது வெறும் கோபம் மட்டுமல்ல. ஸ்கேன் மையத்தில் சுருங்கிக் கிடந்தவரின் தவிப்பு, தாங்கும் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு, வாழத்தவித்த ஹோலிபட்சரின் ஏக்கம், ரயிலுக்குள் பாய்ந்தவனை சரியான நேரத்தில் இழுத்தவரின் பேரன்பு உள்ளிட்ட கோடானு கோடிப் பேரின் வாழ்க்கைக்கான ஏக்கமும் பிணைந்தேயிருக்கின்றது.

இது என் வாழ்க்கை, நான் வாழ்வதற்கெனப் பிரத்யேகக் காரணங்கள் உண்டு என நம்ப மறுப்பவர்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாக் கோபமும், இயலாமையும் ஒன்றிணைந்து வருகின்றன. அவர்களின் நம்பிக்கையின்மையை, பிடிவாதத்தை எதுகொண்டேனும் தூக்கி இந்த அண்டவெளிக்கும் வெளியில் வீசியெறிந்துவிட மனம் துடிக்கின்றது. தன்னைக் கொல்வதற்கு ஒரேயொரு காரணத்தைச் சொல்கிற எவரும், வாழ்க்கையைத் தொடர்ந்திடுவதற்கு ஒற்றைக் காரணத்தைக்கூடச் சொல்ல மாட்டேன், தேட மாட்டேன் எனும் கொடும் முரணை என்னவெனச் சொல்வீர்கள்?

வாழ்க்கையின் அருமையை உணர்ந்துகொள்ள எல்லோருக்கும் சந்தர்ப்பம் அமைந்தே தீரவேண்டுமென்பதில்லை. நகரச்சாலையில் லாரி வந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வரும் அவ்விரு பெண்களும் எங்கிருந்து புறப்பட்டார்கள் எனத்தெரியவில்லை, எந்தச் சிரமமுமின்றி, நேராக லாரியின் இடது பக்கவாட்டில் மோதி மிகக் கச்சிதமாக பின் சக்கரத்திற்குள் விழுகிறார்கள். மோதியதை உணர்ந்த கணத்தில் லாரி ஓட்டுனர் ப்ரேக் மேல் ஏறி நின்றிருக்க வேண்டும். விழுந்தவர்களின் மீது பின்சக்கரத்தின் முனை தொட்டும் தொடாமலும் லாரி நின்று விடுகிறது. தப்பித்துவிட்டார்கள். அது வெறும் தப்பித்தலில்லை. வாழ்க்கை முழுதாய் இன்னொரு முறை கிடைத்திருக்கின்றது. வெறும் இரண்டு நொடிப்பொழுது போதும் அவ்விரு உயிர்களைப் பறிக்க, குடும்பங்களை நிர்கதியாய்த் தவிக்கவிட. அதைவிட அப்படியொன்று நிகழாமல் தடுக்க அதைவிடவும் மிகச் சிறிய ஒரு நொடிக்கும் குறைவான பொழுது போதுமானதாக இருந்திருக்கின்றது. தன்னையே கொலை செய்வது குறித்த சிந்தனையிலிருந்து வெளியேறுவதும்கூட பெரும் தப்பித்தல்தான்


இந்த வாழ்க்கையெனும் புதிரில் மரணமென்பது பெரிய விடையாக இருக்கலாம். பெரிய விடைக்கு முன்பாக முக்கியமான விடையொன்று இருக்கின்றது. அந்த முக்கியமான விடைவாழ வேண்டுமெனும் வேட்கையே”. 

நன்றி : விகடன்

Jun 29, 2016

நம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா புனைவு ஆபாசப் படம்?


ஒரு அநியாய மரணத்திற்குப் பின்பான போராட்டங்களென்பது தமிழகத்திற்கொன்றும் புதிதல்ல. அதே நேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போகச் செய்வதென்பது அதிகார மையங்களுக்கொன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொணி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்தும்கூட விரட்டி போராட்டம் ஒடுக்கப்படும்.

இதில் சேலம்,’வினுப்பிரியா’ தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க ”மன்னிப்பு” கேட்டு பிரச்சனையை தற்காலிகமாக முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார். எந்தவித சமாளிப்பும், திசை திருப்பல்களும், அவதூறுகளும், மிரட்டல்களுமின்றி பகிரங்க மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு ஒரு அதிகாரி இறங்கி வந்திருப்பது என்பது நமக்கு புதுமையானதுதான். ஆனால் காக்கிச் சட்டைகள் இப்படியான மன்னிப்புக் கோரல்களை எப்போதோ துவங்கியிருந்திருந்தால் இன்னும் சில மாற்றங்களை நாம் அனுபவித்திருக்கத் தவறியிருக்க மாட்டோம்.

இந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் செயல்பாடின்மை, ஊழல், பாரபட்சம் என்பது நபர்களுக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொருமுறையும் தன்னை தகவமைத்திருக்கின்றன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் இங்குண்டு. பாடகி ஒருவருக்கு எதிராக ஆபாசமாக இணையத்தில் பேசியதாக, வழக்குப் பதிந்து விரைந்து கைது செய்த காவல்துறை, அதற்கு நிகராக, வேறு எந்த இணையக்குற்றங்களிலும் இதுவரை செயல்பட்டதாக நான் அறிந்திருக்கவேயில்லை.

இந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் மாவட்டக் காவல்துறை, மிக வேகமாகச் சாட்டையைச் சுழற்றும். குற்றவாளி விரைந்து பிடிக்கப்படலாம், தவறு செய்த காவல்துறையினர் தண்டிக்கப்படலாம். இவை மட்டுமே தன் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுக்கு, பெண்ணை இழந்த பெற்றோருக்கு போதுமா என்ற கேள்வியெழும் முன்… 



ஒட்டுமொத்தப் பெற்றோர்களிடமும் கொஞ்சம் உரையாட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இந்த உரையாடல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தால், அதற்காக நானும் முன்பாகவே பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெண்ணின் பெற்றோர்களை மட்டுமே குறை சொல்லும் நோக்கம் என்னிடமில்லை. ஒரு தந்தையாக நானே என்னை இதில் பொருத்தி அந்த உரையாடலை நிகழ்த்த வேண்டியும் உள்ளது.

ஒரு பெண்ணை அடிபணிய வைக்க, தோற்கடிக்க, பழிவாங்க, குலைக்கச்செய்ய அவளின் பெண்மை மீது தாக்குதல் நடத்தினால் போதுமென வக்கிரம் மிகுந்த, கோழைத்தனமான ஆண்கள் நினைப்பதை மறுக்கவே முடியாது. ஆண் மட்டுமல்ல, பெண்களும்கூட பெண்களை அவ்வாறு மிரட்டியதைக் கேள்விப்பட்டதுண்டு. நான் முப்பது ஃபேக் ஐடி வச்சிருக்கேன், அதிலிருந்து உன் படத்தை மார்ஃபிங் செய்து போட்டு சாவடிப்பேன் என சவால்விட்ட ஒரு பெண் குறித்து அறிந்தபோது பேச்சு மூச்சற்றுப்போனேன். ஆகா, ஆணோ பெண்ணோ இன்னொரு பெண்ணை ஆபாசமாகச் சித்தரிப்பதன் மூலம் வீழ்த்த முடியும், அழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வினுப்பிரியா எழுதியதென இணையத்தில் வெளியான கடிதத்தில் இருக்கும் வரிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சூழலில், செயல்படாத சைபர் கிரைம் போலீசாரை மற்றும் குற்றவாளியைப் பிடித்து தண்டித்துவிடுதல் மட்டுமே ஒட்டுமொத்தத் தீர்வாகுமா?

என்னோட லைஃப் போனதுக்கப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்” என்ற ஒரு பெண்ணின் மனநிலைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம். ஒரு பெண்ணின் படம் மார்பிங் செய்யப்பட்டோ அல்லது உண்மையாகவோ ஆபாசமாக வெளிவந்துவிட்டால், அத்தோடு வாழ்க்கையே போய்விட்டது என்ற தீர்ப்பை அந்த 22 வயது பெண்ணுக்கு வழங்கியது யார்? மேம்போக்காக, ”படிச்ச புள்ள இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா?” எனக் கேள்வி கேட்கும் முன், ஒரு படத்தின் மூலம் வாழ்க்கையை அழித்துவிடமுடியும் என்ற மனநிலையை யார் புகட்டியது? அப்படியான அறியாமை மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு நான் சொல்லும் நியாயமான விளக்கங்கள் என்ன?.

சத்தியமா சொல்றேன் என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பல. நம்புங்க” எனும் அவளின் ஆயாசமான குரல் மரண ஓலமாய் எதிரொலிக்கிறது. ’ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும்?’ என்ற ஒரு அல்பமான உதாரணத்தை மட்டுமே பெண்ணின் பாலியல் குறித்த எல்லா நிகழ்வுகளிலும் எளியதொரு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ”நீ அனுப்பாம அவனுக்கு எப்படிக் கிடைச்சுது?” என பெற்றோரோ, உறவினரோ, காவல் துறையோ திரும்பத் திரும்பக் கேட்டிருந்தால் மட்டுமே, தோற்றுப்போன மனநிலையில்,  இப்படியான ஒரு அழுகுரல் வரிகள் வந்திருக்கலாம்.

அப்பா அம்மாவே என்ன நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னப்பத்தி கேவலமாக பேசுறாங்க   இந்த வரிகளோடு, கடைசியா அடித்துவிடப்பட்டிருக்கும் வரிக்குள் என்ன இருக்கும் என்ற யோசனையும்தான் மிகக்கடுமையாக மிரட்டுகிறது.

”உனக்கெதிராக கோழைத்தனமாக, வக்கிரத்தோடு ஏவிவிடப்படும் தாக்குதலின்போது, ஊரும் உலகமும் உனக்கு எதிராக நின்றாலும், ஒரு தாயாக, தந்தையாக நான் உன் பக்கம் நிற்கிறேன்” எனத் தரும் உறுதி, நம்பிக்கை, உத்திரவாதம்தானே அடித்து வீழ்த்தப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டெடுக்கும்.

காவல்துறையினரின் அலைக்கழிப்பு, செயலின்மை, லஞ்சம் வாங்கிய கொடூரத்தனம் மட்டுமே அந்த பெண்ணின் சுயகொலைக்கு காரணமென நாம் இந்தத் தற்கொலையைக் கடந்துபோவதென்றால், காவல்துறை கண்காணிப்பாளர் கேட்ட பகிரங்க மன்னிப்போடு திருப்தியடைந்து விடுவதுதான் சரியெனப்படுகிறது. மகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள் முன் விரல் சுட்டி, நீங்க ஏன் இப்படிச் செய்தீர்கள், ஏன் இப்படிச் செய்யவில்லை எனக் கேட்பது இந்தச் சூழலில் எந்த வகையிலும் நியாயமான செயலாகாது.

கோழைகள், வக்கிரம் மிகுந்தவர்கள் பெண்களை வீழ்த்த இதுபோன்ற ஆயுதங்களை, ஒரு குற்றத்தின் தண்டனைக்குப் பின்பு இனி முன்னெடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் முடிவெடுத்துவிட முடியாது. ஒரு அதிகாரியின் பகிரங்க மன்னிப்போடு, தவறிழைத்த காவல்துறையினர் பாவமன்னிப்புப் பெற்று, தங்களை உணர்ந்து புனிதர்களாக மாறிவிடுவார்கள் என்றும் நம்பிவிட முடியாது.

ஆனால் வினுப்பிரியாவின் இந்தக் கடிதம், வினுப்பிரியாவை ஒத்த பெண்களுக்கு, ஒரு சித்தரிக்கப்படும் ஆபாசப் படம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடுவதாக நம்புகிறீர்களா என்பதையும், வினுப்பிரியாவின் பெற்றோர், உறவினர், தொடர்புடைய அதிகாரிகளை “ஊசி – நூல்” என்று சந்தேகித்து, அவர்களைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நம்புகிறீர்களா எனும் மிகப்பெரிய கேள்விகளைத் தான் காற்றில் விதைத்துள்ளது!

இனி எஞ்சியுள்ளவர்கள் தீர்மானிக்க வேண்டியது எது வாழ்க்கை, எது அவமானம், எது தவறு என்பதைத்தான். வினுப்பிரியாக்கள் தற்கொலை செய்துகொள்வதை நிறுத்தும்வரை, பெற்றோரும் உற்றாரும் வினுப்பிரியாக்களோடு உரத்து உடன் நிற்கும் வரை, வக்கிரம் மிகுந்த கோழைகளும், ஊழல் அதிகாரிகளும் ஒடுங்கிவிடுவார்கள் என நம்பாதீர்கள்.

Mar 20, 2013

வாழ்தல் அறம்



னவுகள் காணும் பொழுது பசுமையாக நினைவில் இருக்கும். சட்டென விழிக்கும் தருணத்தில் சுக வருடலாகவோ, அதிர்வு வெள்ளமாகவோ நம்மைச் சூழும். விடியலில் இருள் விலக விலக கனவும் மெல்ல நீர்த்துப் போகிறது. இதுவரை மறக்கவே மறக்க முடியாத கனவென்று எதுவுமே எனக்கில்லை. எனக்கில்லை மட்டும்தான் எவருக்கும் இருக்குமா இருக்காதா என்பது தெரியவில்லை. இத்தனையித்தனை கனவுகள் காண்கின்றோமே, நம்முடைய மரணத்தைக் கனவாக காணும் வாய்ப்புக் கிடைக்காத என்று இதை எழுதும் கணம் நினைக்கின்றேன். அப்படிக் காண விரும்பவதின் சூட்சுமம், மரணத்திற்குப் பின்னால் என்னவாக இருப்போம் என்பதையும் அறிந்துகொள்ளும் ஒரு நப்பாசைதான். மரணத்திற்குப் பின் என்ன எனும் சூன்யம்தான் மரணம் குறித்து அளவற்ற பயத்தையும், சில கடினச் சூழல்களில் அதன் மேல் விருப்பத்தையும் தந்துவிடுகின்றன.

சமீபத்தில் மூன்று சம்பவங்கள் என்னை உலுக்கிப் போட்டுவிட்டுப் போயிருக்கின்றன. மூன்று சம்பவங்களில் தனித்தனியே மூன்று பேர். இதுகுறித்து எழுதலாமா வேண்டாமா என பெரும் போராட்டமே எனக்குள் நிகழ்ந்ததுண்டு. கனமாய் இருந்துகொண்டிருப்பது கரைந்துவிடலாம் என்றும் எழுதுவதைத் தள்ளித்தள்ளிப் போட்டேன்…. ப்ச்கனம் கூடியதே தவிர கரையும் முகாந்திரமில்லை



காவேரி ஒரு குடும்பத்தையே தாங்கி நிற்பவர். மத்திம வயதைக் கடந்த நிலை. பெரிய படிப்பு, பெரிய பதவி அதேபோல் பெரிய பெரிய கடமைகள். என் குடும்பப் பெண்கள் தவிர்த்து நான் மிக நீண்ட காலம் அறிந்தவர். வாழ்க்கையின் அத்தனை போராட்டங்களையும் போராட்டங்களாகப் பார்க்காமல் வெகு இயல்பாக கடந்து வந்தவருக்கு, எப்போதாவது தலை வலித்தால், காய்ச்சல் வந்தால் ஒரு மாத்திரை விழுங்குவதும், ஊசி போட்டுக்கொள்வதும் மாபெரும் போராட்டம். எதேச்சையாய் ஒரு நாள் உணர்கிறார் தனது மார்பகத்தில் கட்டி போன்று ஒன்று உருள்வதை. அது ஏதேதோ கொடும் கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. உலகமே இருள்வதுபோல் தோன்றுகிறது. வாழ்க்கையின் மிகக் கடினமான தருணம், வெகு அருகாமையில் பயணிப்பதுபோல் தோன்றுகிறது.

வீட்டில் சொல்ல வீடும் சேர்ந்து அதிர்கிறது, துவள்கிறது. முடிக்கவேண்டிய கடமைகள் கூர் நகம் கொண்ட விரல்களைக் கொண்டு மிரட்டுகின்றன. எந்த நோயாக இருந்தாலும் போராடிப் பார்த்து விடலாம் என என் தைரியத்துக்கு மீறிய தைரியத்தை ஊட்டும்போதே, சின்ன ஊசி, மாத்திரைக்கை அத்தனை சிரமப்படுபவர், எப்படி இதையெல்லாம் கடந்து போகப் போகிறார் என்பது என்னை உலுக்கியது.

அடுத்த நாள் மருத்துவரைச் சந்தித்து பரிசோதிக்கலாம் என நிலையில், அந்த இரவு பித்துப் பிடித்த மனதுக்கு பயத்தின் வெம்மை கண் மூட அனுமதிக்கவில்லை. விடிய மறுத்து நீண்டு ஒருவழியாக விடிந்த அந்த இரவு மறக்கமுடியாததும் கூட. விடிந்ததும் முதல் வேலையாக மருத்துவமனை நோக்கி ஓட, அடிப்படை சோதனைகள் செய்து, ஏதோதே மாதிரிகள் எடுத்து அடுத்தநாள் அறிக்கை வந்தபிறகு சொல்வதாய்ச் சொல்லி அனுப்புகிறார்கள். அந்த இரவு அவரை, குடும்பத்தினர் தூக்கம்தரும் இருமல் மருந்தை வலிய குடிக்கச் சொல்லியே உறங்க வைத்திருக்கிறார்கள்.

குமரகுரு, வீட்டில் மனைவியோடு ஏற்பட்ட பிணக்கில் உணர்ச்சி வேகத்தில் உயிரை மாய்க்க முனைந்ததில், நூலிழையில் உயிர்தப்பி மருத்துவமனையில் ICUவில் இருப்பதாய் அதிகாலையில் நண்பர் ஒருவர் அழைத்துச் சொல்லும்போதுதான் விழித்தேன். உச்சி மண்டியில் இடி இறங்கியதுபோல் இருந்தது. அப்படியொரு விடியல் எவருக்கும் அமைந்திடக்கூடாது. குமரகுருவின் பிரச்சனையை சிலநாட்களாகவே அறிவேன். மருத்துவமனைக்கு ஓடியவனின் கால்கள் ICU அறையை நெருங்க நெருங்க நடை தளர்ந்து கால்கள் பின்னிக்கொண்டன. அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை.

குமரகுருவிடம்பொண்டாட்டி, புள்ளைய விட்டுத் தள்ளுப்ப, அதெல்லாம் கூட அஞ்சாறு வருச உறவுதானே, ஆனா இத்தனை வருசம் வளர்த்து ஆளாக்கி எல்லாம் செஞ்சு வெச்சு, இனி கடைசிகாலத்தில் ஷ்ஷப்பா என ஓய்வெடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கும் உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பதில் சொல்வே உன் மரணத்தின் மூலம்” எனக் கேட்கத் தோணியது. வெளியில் வரும்போது அவரின் அம்மா என்னை எதிராகக் கடந்துகொண்டிருந்தார். உண்மையில் அந்தச் சூழலில் ஒரு தாயை எதிர்நோக்கும் துணிவு துளியுமில்லை. என்னை அவரும் கவனிக்கவில்லைபோலத் தோன்றவே சலனமற்று வெளியேறினேன்.

மீனாட்சியிடமிருந்து காலையில் ஒரு குட்மார்னிங், இரவு ஒரு குட் நைட் குறுந்தகவல்கள் மட்டும் வரும். எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வதுண்டு. ஆகச்சிறந்த ஒரு அறிவார்ந்த நட்பு. அவருக்கு குடும்பத்தில் சில சிக்கல் இருக்கிறதென அறிவேன். ஒவ்வொரு முறையும் எல்லாருமே கேட்டுக் கேட்டுச் சலித்த” வீட்டுக்கு வீடு வாசப்படி” எனும் அறிவுரையையே அழுத்தமாகச் சொல்வதுண்டு. அன்று இரவு குட்நைட் செய்தியோடுஇனி எனக்கு எதுவும் அனுப்ப வேண்டாம்” எனும் ஒரு வரி வருகிறது. நான் என்னத்தை அனுப்பப் போகிறேன் என நினைத்துக்கொண்டே, சரி அடுத்த நாள் என்ன ஏதுனு கேட்டுக்கலாம் என உறங்கிப்போனேன்.

அடுத்தநாள் மதியம் திடிரென நினைவு வந்தவனாகஏன் இனி எதும் அனுப்பாதேனுஅனுப்பினே எனக் கேட்டேன். ”கையில் தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு அப்படி அனுப்பினேன்” என்றபோது ஒரு விநாடி எனக்கு மூச்சு நின்று வந்தது. இதற்குமுன்பே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதைக் கூறியபோது, ”ஒருபோதும் நீயா சாக நினைக்காதே, அப்படி செத்துப்போக நினைச்சா ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போஎன தெனாவட்டாக (!) அறிவுரை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

விதியாய் அதுவாக நெருங்கிப் பார்ப்பதோ, விரும்பி ஏற்பதோ மரணம் என்பது எல்லோரையும் எதிர்பாராத தருணத்தில் உலுக்கிப் போடும் ஒன்றுதான்.

வெறும் நீர்க்கட்டி தான் என சிறிய சிகிச்சை அளித்ததில் இன்று காவேரி அடுத்தடுத்த கடமைகள் குறித்த ஓட்டத்தில் வெகு தீவிரமாய் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த இரு நாட்களின் பயம் குறித்து எப்போது பேசினாலும் ஒரு வெட்கம் வந்துவிடுகிறது. ஒருவேளை அது கடுமையான நோயாக இருந்திருந்தால், என்னதான் போராடினாலும், போராட்ட காலத்தில் எப்படி அவரை எதிர்கொள்ளப்போகிறோம் எனப் பயந்த என் அதிர்ச்சி இன்றும் கூட விலகிவிடவில்லை. அந்த இரண்டு மூன்று நாட்களின் பயம் முழுமுற்றிலும் விலகிய பிறகு வாழ்க்கையின் புதிய அத்தியாயம் போன்று,  மிகப் பெரிய ஓட்டத்தை துவங்கியிருக்கின்றார். வாரக் கணக்கில் கூட பேசாமல் இருப்பதுமுண்டு, பேசுவதற்கான அவசியமும் ஏற்படுவதில்லை. ஆனாலும் அந்த நட்பு இந்த உலகிலிருந்து இல்லாது போகும் சூன்யத்தை எப்படியும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.

அடுத்த நாளிலேயே மருத்துவமனையிலிருந்து வெளியேறி, தேடிவந்து என்னெதிரில் உட்கார்ந்து கொண்டு தன்னை நிரப்பியிருந்த எல்லா உணர்வுகளையும் மழுப்பல் சிரிப்பால் கடந்துகொண்டிருந்த குமருகுருவிடம் சொன்னேன். ”வெளிவ வரும்போது உங்க அம்மா வந்துச்சு குரு, நல்லவேளை என்னப் பார்க்கல, அவிங்க பார்க்குற தைரியம் எனக்கில்லப்பாஎன்றேன்

க்கும் செரியாப்போச்சு, எங்கம்மா உள்ள வந்தொடனே, உங்களையப் பாத்தேனுதானே சொல்லுச்சுஎன்றார்.

மீனாட்சிக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. நல்லதொரு பொருளாதாரத்திற்கான நம்பிக்கையும் கூடிவிட்டது. வீடு மாறியாகிவிட்டது. பிள்ளையை உயர்கல்விக்கு எங்கே சேர்க்கலாம் என்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறார்.

பின்பக்கம் அமர்ந்திருக்கும் மனைவி இடுப்பில் கை போட்டுப் பிடித்திருக்க, வேகமாய் பைக்கில் சென்று கொண்டிருக்கும் குமரகுருவை இரண்டு தினங்களுக்கு முன்பு பார்த்தேன்

கணவன் வாங்கிக் கொடுத்த உடையோடு
மீனாட்சி தனது பிறந்த நாளைக் கடந்ததையும் கேள்விப்பட்டேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி வரும் தலைவலி காவேரிக்கு பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை.

கண நேரக் கோபத்தில், கண நேர உணர்ச்சிப் பிரவாகத்தில், தங்கள் உணர்ச்சிகர முடிவில், இன்னும் சற்றே ஒரு எட்டு வைத்துத் தொலைத்திருந்தால், மீனாட்சி குறித்த சேதி எனக்கு ரொம்ப நாள் தெரியாமலே போயிருக்கலாம் குமரகுருவின் இழப்பை, சக்கையாய் மென்று கொண்டிருக்கலாம். இவர்கள் இங்கு ஒருமாதிரியான உதாரணங்களே.

ஒரு விடியலில் இவர்களோ, இவர்களைப் போன்ற மனதிற்கு உகந்த நட்புகளோ இல்லாமல் போகும் வெறுமை நிறைந்த தருணத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை என்னால் கற்பனை கூட செய்திட முடிவதில்லை. அவர்களோடு தொடர்பில்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் அல்லாமல் போகும் ஒரு விடியலை எப்படி அவ்வளவு எளிதில் எதிர்கொள்ள முடியும் என கற்பனை செய்திட முடியவில்லை. அவர்களின் இயல்பான நடவடிக்கைகளற்ற அந்த நாட்களை நினைக்கவே மனதில் இருள் சூழ்கிறது.

விபத்தின் மரணங்களை, நோய்வாய்ப்படுதலின் மரணங்களை ஜீரணிக்க முடியாமல் ஜீரணித்துக் கொள்ளமுடிகிறது. தற்கொலை மரணங்களைக் கேள்வியுறுகையில் நம்மையறியாமலும் நம்முள் ஒரு சுமை வந்து சேர்கிறது. தெரிந்திருந்தால், அதைத் தடுக்க எதாச்சும் அதற்காக செய்திருக்க முடியாதா? என ஏதோ ஒரு குற்ற உணர்வு அழுத்துகிறது. இத்தனை கோடிப்பேர் வாழும் இந்த பூமியில் அவர்களுக்கென்று ஒரு மூலை இல்லாமலா போய்விடும். தன் கிளைகளில் துளிர்க்கும் ஒவ்வொரு இலைக்கும் மரம் இடம் வைத்திருக்கத்தானே செய்கிறது. பழுத்துவிழுவதற்கும் தன்னை முறித்து வீழ்வதற்கும் எத்தனையெத்தனை வேறுபாடுகள்.

வாழ்வதற்கான கஷ்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ள கைக்கொள்ளும் தைரியத்தைவிட, மரித்துப்போக அந்த நொடிப்பொழுதில் எடுக்கும் தைரியம் பலமடங்கு கூடுதலானது. வாழத் தேவையான தைரியத்தைவிட, சற்றே கூடுதல் தைரியம் கொண்டு சாகத் துணிபவரின் விரல் பிடித்து, தைரியத்தை இடமாற்றி வைக்கச் சொல்ல முடியாத என்ன? அவர்கள் இல்லாமலே போவதை எப்படி அனுமதிப்பது? இப்படியிப்படி எண்ணற்ற மொழிகளில் மனதிற்குள் அழுத்தும் குற்றப்பத்திரிக்கைகள் சார்ந்த வாதங்களுக்கு பதிலற்றே போய்விடுகிறது.

எவருக்குமே சாவதற்கான காரணங்களைவிட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது. தேடிப்பார்ப்போமே. இதோ இப்போது ஏதோ காரணம் இருப்பதால்தானே நான் எழுதி முடிக்கிறேன், நீங்களும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்வோம். வாழ்க்கை அதுவாய் பழுத்து உதிரும் வரை.

-

நன்றி : அதீதம்

-

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...