‘ஏன் இப்படி போய்ட்டே?
தைரியமா இருக்க வேணாமா? நீ எல்லாம் இப்படி
செய்யலாமா?, தற்கொலைதான் தீர்வா? தற்கொலை கோழைத்தனம் இல்லையா?’ என்பது போன்ற ஆறுதல் தேறுதல் கம் அட்வைஸ்களுக்குள்
ஒருபோதும் அடங்காதவை தற்கொலைகள். நானறிந்த வரையில் இரண்டு வகைகளில் சுயகொலைகளை மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
உடல் நலமின்மை மற்றும் மன நலமின்மை தொடர்பில் மரணத்தை
தேர்ந்தெடுப்பது ஒரு வகை. தீராத நோய், அதன் வாதை என அவதியுறும்போது, அதைத் தாங்குவதற்குப் பதில்
இறந்துவிடுவதே மேல் எனத் தீர்மானித்தல். மன நலமின்மை என்பது
மிக நுண்ணியது. உள்ளுக்குள்ளே ஆயிரமாயிரம் யுத்தங்கள் நடைபெற்றுக்
கொண்டிருக்கும். எத்தனை போராடியும் அவை யாவற்றிலும் அவர்கள் தோற்றுக் கொண்டே
இருப்பார்கள். அவர்கள் நிழலே அவர்களுக்கு போட்டியாளனாய் மாறும். நாம் கற்பனையே
செய்திருக்காத ஏதோ ஒன்று அவர்களை அப்படி சிக்க வைத்திருக்கும். மிகச்சரியான நேரத்தில் கண்டறிப்படாமல், கண்டு கொள்ளப்படாமல்
இருப்பது அவர்களை மரணம் எனும் விடுதலையை நோக்கி நகர்த்தி விடுகின்றது. கவனிக்கவும்,
மரணம் என்பது அவர்களைப் பொறுத்த வரையில் விடுதலை.
உடல் நிலை என்றால் மருத்துவத்தின் அதிக பட்ச மருத்துவ உதவியை நாடுதல் தேவை. மனதில் சிக்கல் என்றால் உடனடியாக தேவையான மனநல ஆலோசனைக்கு உட்படுத்தி, தேவைப்படின் சிகிச்சைக்கு உட்படுத்தி மீள்வது மட்டுமே தீர்வாகும். உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகத் தரப்படும் எந்தவிதமான அறிவுரைகள் மற்றும் ஊக்குவிப்புகளும் உதவவே உதவாது.
மற்றொரு வகையில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்கின்றன. இவை ஏதோ ஒருவிதத்தில் மற்றவர்களால் அறிந்தோ அறியாமலோ
தூண்டப்படுவதால் நிகழ்கின்றன. குடும்பப் பிரச்சனை, கடன், துரோகம்,
காதல், ஏமாற்றம், இழப்பு, தேர்வில் தோல்வி உள்ளிட்ட அனைத்தின் பின்னாலும் யாரோ ஒருவர், ஏதோ
ஒன்று இருக்கும். பெரும்பாலும் தற்கொலைகள் உயிரிழப்பு மட்டுமே மிகைப்படுத்தப்பட்டு,
அதற்கு காரணமாக இருந்த அந்த யாரோ ஒருவர், ஏதோ
ஒன்று என்ன அறியப்படாமல் போகின்றது.
இவர்களில் பெரும்பாலும், அதன் தொடர்பில் உள்ளவர்களைப் பழிவாங்க
அல்லது தண்டிப்பதற்காக தற்கொலை செய்வதுண்டு. சிலர் எதிராளியை
மிரட்டுவதற்காக ஏதாவது ஒன்றைச் செய்து மரணத்திற்குள் மாட்டிக் கொள்வார்கள். ’இந்தாப்
பாரு கயிறு போட்டுக்குவேன், கையை கிழிச்சுக்குவேன், மருந்தக் குடிச்சிருவேன்!’ என்பவர்கள் பெரும்பாலும்
மிரட்டலுக்காக அவ்வப்போது செய்து, ஒருகட்டத்தில்
புலி வருது கதை போல், மற்றவர்களால் பொருட்படுத்தப்படாத
தருணத்தில் மரணத்திற்குள் சிக்கிக்கொள்கின்றனர்.
இவர்கள் உடனிருப்பவர்களால் அடையாளம் காணப்பட்டு மிகச் சரியாக வழி
நடத்தினால் தற்கொலைகளை நோக்கி நகராமல் இருப்பார்கள். அவர்களுக்கே வாழ்க்கை குறித்த
புரிதலும், சுய அறிவும் இருந்தால், தன்
தவற்றை உணர்ந்து தீர்வை நோக்கி நகர வேண்டும். அவர்களின் கேள்விகள்
மதிக்கப்பட்டு, அவற்றிற்கான சரியான பதில்கள் வழங்கப்பட வேண்டும். சரியான பதில்கள்
என்பவை பிடித்ததாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால்
போதும்.
எல்லாத் தற்கொலைகளுக்கும் ஒரே விதமான அளவீட்டுக் கருவி பொருந்தாது. ஒவ்வொன்றும்
ஒவ்வொருவிதமானது. அந்தந்த விதத்தில் அணுகி சரி செய்யப்பட வேண்டும். மேலோட்டமான ஆலோசனை ஆறுதல்களால் மட்டுமே கடந்துவிடக் கூடியதல்ல. தற்கொலை எனும் பிணியை வெறும் அனுதாபங்களால் மட்டுமே
குணப்படுத்த முடியாது!
No comments:
Post a Comment