Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Jun 29, 2016

நம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா புனைவு ஆபாசப் படம்?


ஒரு அநியாய மரணத்திற்குப் பின்பான போராட்டங்களென்பது தமிழகத்திற்கொன்றும் புதிதல்ல. அதே நேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போகச் செய்வதென்பது அதிகார மையங்களுக்கொன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொணி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்தும்கூட விரட்டி போராட்டம் ஒடுக்கப்படும்.

இதில் சேலம்,’வினுப்பிரியா’ தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க ”மன்னிப்பு” கேட்டு பிரச்சனையை தற்காலிகமாக முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார். எந்தவித சமாளிப்பும், திசை திருப்பல்களும், அவதூறுகளும், மிரட்டல்களுமின்றி பகிரங்க மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு ஒரு அதிகாரி இறங்கி வந்திருப்பது என்பது நமக்கு புதுமையானதுதான். ஆனால் காக்கிச் சட்டைகள் இப்படியான மன்னிப்புக் கோரல்களை எப்போதோ துவங்கியிருந்திருந்தால் இன்னும் சில மாற்றங்களை நாம் அனுபவித்திருக்கத் தவறியிருக்க மாட்டோம்.

இந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் செயல்பாடின்மை, ஊழல், பாரபட்சம் என்பது நபர்களுக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொருமுறையும் தன்னை தகவமைத்திருக்கின்றன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் இங்குண்டு. பாடகி ஒருவருக்கு எதிராக ஆபாசமாக இணையத்தில் பேசியதாக, வழக்குப் பதிந்து விரைந்து கைது செய்த காவல்துறை, அதற்கு நிகராக, வேறு எந்த இணையக்குற்றங்களிலும் இதுவரை செயல்பட்டதாக நான் அறிந்திருக்கவேயில்லை.

இந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் மாவட்டக் காவல்துறை, மிக வேகமாகச் சாட்டையைச் சுழற்றும். குற்றவாளி விரைந்து பிடிக்கப்படலாம், தவறு செய்த காவல்துறையினர் தண்டிக்கப்படலாம். இவை மட்டுமே தன் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுக்கு, பெண்ணை இழந்த பெற்றோருக்கு போதுமா என்ற கேள்வியெழும் முன்… 



ஒட்டுமொத்தப் பெற்றோர்களிடமும் கொஞ்சம் உரையாட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இந்த உரையாடல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தால், அதற்காக நானும் முன்பாகவே பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெண்ணின் பெற்றோர்களை மட்டுமே குறை சொல்லும் நோக்கம் என்னிடமில்லை. ஒரு தந்தையாக நானே என்னை இதில் பொருத்தி அந்த உரையாடலை நிகழ்த்த வேண்டியும் உள்ளது.

ஒரு பெண்ணை அடிபணிய வைக்க, தோற்கடிக்க, பழிவாங்க, குலைக்கச்செய்ய அவளின் பெண்மை மீது தாக்குதல் நடத்தினால் போதுமென வக்கிரம் மிகுந்த, கோழைத்தனமான ஆண்கள் நினைப்பதை மறுக்கவே முடியாது. ஆண் மட்டுமல்ல, பெண்களும்கூட பெண்களை அவ்வாறு மிரட்டியதைக் கேள்விப்பட்டதுண்டு. நான் முப்பது ஃபேக் ஐடி வச்சிருக்கேன், அதிலிருந்து உன் படத்தை மார்ஃபிங் செய்து போட்டு சாவடிப்பேன் என சவால்விட்ட ஒரு பெண் குறித்து அறிந்தபோது பேச்சு மூச்சற்றுப்போனேன். ஆகா, ஆணோ பெண்ணோ இன்னொரு பெண்ணை ஆபாசமாகச் சித்தரிப்பதன் மூலம் வீழ்த்த முடியும், அழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வினுப்பிரியா எழுதியதென இணையத்தில் வெளியான கடிதத்தில் இருக்கும் வரிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சூழலில், செயல்படாத சைபர் கிரைம் போலீசாரை மற்றும் குற்றவாளியைப் பிடித்து தண்டித்துவிடுதல் மட்டுமே ஒட்டுமொத்தத் தீர்வாகுமா?

என்னோட லைஃப் போனதுக்கப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்” என்ற ஒரு பெண்ணின் மனநிலைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம். ஒரு பெண்ணின் படம் மார்பிங் செய்யப்பட்டோ அல்லது உண்மையாகவோ ஆபாசமாக வெளிவந்துவிட்டால், அத்தோடு வாழ்க்கையே போய்விட்டது என்ற தீர்ப்பை அந்த 22 வயது பெண்ணுக்கு வழங்கியது யார்? மேம்போக்காக, ”படிச்ச புள்ள இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா?” எனக் கேள்வி கேட்கும் முன், ஒரு படத்தின் மூலம் வாழ்க்கையை அழித்துவிடமுடியும் என்ற மனநிலையை யார் புகட்டியது? அப்படியான அறியாமை மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு நான் சொல்லும் நியாயமான விளக்கங்கள் என்ன?.

சத்தியமா சொல்றேன் என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பல. நம்புங்க” எனும் அவளின் ஆயாசமான குரல் மரண ஓலமாய் எதிரொலிக்கிறது. ’ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும்?’ என்ற ஒரு அல்பமான உதாரணத்தை மட்டுமே பெண்ணின் பாலியல் குறித்த எல்லா நிகழ்வுகளிலும் எளியதொரு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ”நீ அனுப்பாம அவனுக்கு எப்படிக் கிடைச்சுது?” என பெற்றோரோ, உறவினரோ, காவல் துறையோ திரும்பத் திரும்பக் கேட்டிருந்தால் மட்டுமே, தோற்றுப்போன மனநிலையில்,  இப்படியான ஒரு அழுகுரல் வரிகள் வந்திருக்கலாம்.

அப்பா அம்மாவே என்ன நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னப்பத்தி கேவலமாக பேசுறாங்க   இந்த வரிகளோடு, கடைசியா அடித்துவிடப்பட்டிருக்கும் வரிக்குள் என்ன இருக்கும் என்ற யோசனையும்தான் மிகக்கடுமையாக மிரட்டுகிறது.

”உனக்கெதிராக கோழைத்தனமாக, வக்கிரத்தோடு ஏவிவிடப்படும் தாக்குதலின்போது, ஊரும் உலகமும் உனக்கு எதிராக நின்றாலும், ஒரு தாயாக, தந்தையாக நான் உன் பக்கம் நிற்கிறேன்” எனத் தரும் உறுதி, நம்பிக்கை, உத்திரவாதம்தானே அடித்து வீழ்த்தப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டெடுக்கும்.

காவல்துறையினரின் அலைக்கழிப்பு, செயலின்மை, லஞ்சம் வாங்கிய கொடூரத்தனம் மட்டுமே அந்த பெண்ணின் சுயகொலைக்கு காரணமென நாம் இந்தத் தற்கொலையைக் கடந்துபோவதென்றால், காவல்துறை கண்காணிப்பாளர் கேட்ட பகிரங்க மன்னிப்போடு திருப்தியடைந்து விடுவதுதான் சரியெனப்படுகிறது. மகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள் முன் விரல் சுட்டி, நீங்க ஏன் இப்படிச் செய்தீர்கள், ஏன் இப்படிச் செய்யவில்லை எனக் கேட்பது இந்தச் சூழலில் எந்த வகையிலும் நியாயமான செயலாகாது.

கோழைகள், வக்கிரம் மிகுந்தவர்கள் பெண்களை வீழ்த்த இதுபோன்ற ஆயுதங்களை, ஒரு குற்றத்தின் தண்டனைக்குப் பின்பு இனி முன்னெடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் முடிவெடுத்துவிட முடியாது. ஒரு அதிகாரியின் பகிரங்க மன்னிப்போடு, தவறிழைத்த காவல்துறையினர் பாவமன்னிப்புப் பெற்று, தங்களை உணர்ந்து புனிதர்களாக மாறிவிடுவார்கள் என்றும் நம்பிவிட முடியாது.

ஆனால் வினுப்பிரியாவின் இந்தக் கடிதம், வினுப்பிரியாவை ஒத்த பெண்களுக்கு, ஒரு சித்தரிக்கப்படும் ஆபாசப் படம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடுவதாக நம்புகிறீர்களா என்பதையும், வினுப்பிரியாவின் பெற்றோர், உறவினர், தொடர்புடைய அதிகாரிகளை “ஊசி – நூல்” என்று சந்தேகித்து, அவர்களைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நம்புகிறீர்களா எனும் மிகப்பெரிய கேள்விகளைத் தான் காற்றில் விதைத்துள்ளது!

இனி எஞ்சியுள்ளவர்கள் தீர்மானிக்க வேண்டியது எது வாழ்க்கை, எது அவமானம், எது தவறு என்பதைத்தான். வினுப்பிரியாக்கள் தற்கொலை செய்துகொள்வதை நிறுத்தும்வரை, பெற்றோரும் உற்றாரும் வினுப்பிரியாக்களோடு உரத்து உடன் நிற்கும் வரை, வக்கிரம் மிகுந்த கோழைகளும், ஊழல் அதிகாரிகளும் ஒடுங்கிவிடுவார்கள் என நம்பாதீர்கள்.

Jul 6, 2012

நீதி போதனை


நம் கனிணியின் இணைய உலாவிக்கு (browser) மேலே நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளத்தின் பெயருக்குப் பக்கத்தில் ஒரு x தெரியும். அதை அமுக்கினால் அதுவரை நாம் சஞ்சரித்துக்கொண்டிருத உலகத்திலிருந்து வெகு எளிதாக விடுபட்டுப்போவீர்கள். அதன்பிறகு நீங்களாக www.அதன்பெயர்.com கொடுக்காமல், ஒருபோதும் அதுவாக வந்து உங்கள் வீட்டுக் கதவை தட்டாது. 

ஆனாலும், இந்த சமூக வலை தள உலகத்தில்தான், மனதில் இருக்கும் பாரத்தை எழுத்தில் கரைக்கும் வாய்ப்பும், நம்மைச்சுற்றி சுற்றி நடக்கும் நல்ல விசயங்களை அடையாளப்படுத்தும் முயற்சியும், உங்களைச் சுற்றி நடக்கும் அவலங்களைச் சுட்டும் வாய்ப்பும் எளிதில், மிகமிக எளிதில் கிடைக்கின்றது.

ஊடகங்களுடன் மிக எளிதான தொடர்பு, ஆட்சியாளர்களுடன் கருத்து பரிமாறும் வாய்ப்பு, நம்மைப்போல் புழங்கும் மக்களுக்கான தகவல் தெரிவிப்பு எனும் சன்னல்களும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன.

அதி அற்புதமான நட்புகள், திறமைகளுக்கு அங்கீகாரம், திறன்களை கடைபரப்பும் வெளிகள் என பலப்பல வாய்ப்புகள் எளிதில் கிடைக்கின்றன. அதே சமயம் நம்மையறியாமல் நமக்கு புகட்டப்படும் விஷமாக ஏமாற்றும் தகிடுதத்தங்களும், பணப் பறிப்புகளும், பாலியல் சீண்டல்களும் இருக்கத்தான் செய்கின்றன...

பிடித்தவற்றை கொண்டாடுகிறோம், பிடிக்காதவற்றை மௌனமாகவோ, கள்ள மௌனமாகவோ கடந்துபோகிறோம்..... நமக்குப் பிடிக்காத துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை ஒவ்வொருமுறையும் கடந்து போனவர்கள்தானே நாம்?. செத்த எலியின் வீச்சத்தை மூக்கு பொத்திக் கொண்டு போனவர்கள்தானே நாம்? அதுபோலவே, நானும் ஒவ்வாத விசயங்களை, பிடிக்காத விசயங்களை சமூக வலை தளத்தில் காணும்போது மெல்ல ஒதுங்கிக் கடந்து போய்விடுகிறேன். ஏனெனில், சமூகத்தை என்னை நேரிடையாகப் பாதிக்கும் அவலங்களை, என்னை மூச்சை அடைக்க வைக்கும் சாக்கடைகளைக் கண்டு ஒருபோதும் உணர்ச்சி வயப்பட்டுப் பொங்கியதில்லை, அதை சுத்தம் செய்திடவும் முனைந்ததில்லை, அப்படியில்லாத நான் அப்புறம் இங்கே மட்டும் நான் வாள்/வால் ஆட்ட இருக்கும் முகாந்திரம், இது எளிது என்பதுதானோ!

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் 90 வயதில் இரவு நேரத்தில் இறந்து போனார். இரவு ஒரு மணிக்கு தகனம் செய்யும்போது கட்டையில் உடலை அடுக்கிச் சிதைக்கு தீமூட்டும் முன், உடலில் இருக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்றியப்போது காது இரண்டிலும் தலா இரண்டு கடுக்கன் போட்டிருந்தது தெரிந்தது. சுமார் 60-70 வருசம் அணிந்திருப்பார் என்று பேசிக்கொண்டார்கள். அதை அகற்ற சடங்குகள் செய்த அந்தத் தொழிலாளி முயன்று தோற்றுப்போக, உறவினர்கள் சிலர் சேர்ந்து, நள்ளிரவு 1 மணிக்கு பிணம் என பயங்கொள்ளும் உடலில் கைவைத்து, காதுகளை அலசி, பலத்த முயற்சிக்குப் பின் கழட்டிக்கொண்டுதான் சிதைக்கு தீ மூட்டினார்கள்.

இணையத்தில் ஆங்காங்கே சிலரால் கட்டிக் காக்கப்படும் ஃபேக் ஐடி, ஜோக் ஐடிகள்... உருவாக்கியவரின் வாழ்நாளுக்குப் பின்பு கூடவே வந்து சிதையிலா எரிந்துவிடப்போகிறது.



இதனால் அறியப்படும் நீதியாதெனில்....

ஏற்கனவே நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், சிலாகிப்புகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான சம்பளமாக பெரும் நேரத்தைப் பிடுங்கி தின்று செரித்துவிட்டு, சிரித்துக்கொண்டே போகிறது இணைய சமூகவலை தளங்கள். அதற்குத் தீனிபோடவே முடியாத நேரத்தில் ஃபேக் ஐடி, ஜோக் ஐடி என உருவாக்குவோரின், உழைப்புக்கு அயர்ச்சியாய் ஆச்சரியப்படத்தான் முடிகிறது தவிர, அதுகுறித்து பெரிதாக புலம்பி, கோபப்பட்டு இரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ள உடலிலும், மனதிலும் தெம்பில்லை...

ஆணிய்யே புடுங்க வேணாம் என்பதின் எளிய வழியாக இப்போதைக்கு logout :)))

-0-

Jan 23, 2012

டேய் வாடா…. நீயா நானானு பார்த்துடலாம்

தமிழ்கூறும் இணைய நல்லுலகுக்கு வந்த காலத்தில் இருந்து, தப்பித்துப்போக முடியாத ஒன்று இணையச் சண்டைகள். Blogல் நுழைந்து Facebook சென்று, அங்கிருந்து Twitter வந்து, கூடவே Google Group-ல் சேர்ந்து, பின் Buzz-ல் இணைந்து அங்கிருந்து Google Plusக்கு இடம் மாறி என, இணையத்தில் புழங்கும் ஒரு சாமனியனின் பயணம் என்பது படும்பாடு படக்கூடியது. (சாமனியன்னு என்னையத்தான் சொன்னேன், யாரு என்னது பெருசா ஒன்னும் நீங்க யோசிக்க வேணாம்..செரியா!?). இந்தப் பயணமும், பாடும் உருப்படறதுக்கானது இல்லைனுதான் இன்னும் புரியல.


 
பயணத்தின் பெரும்பாடு என்னனு கேட்டீங்ன்னா, இந்தமாறி இந்தமாறி… இணையப் பெருவெளியில, ஆங்காங்கே மக்கள் நடத்துற சண்டையைப் புரிஞ்சுக்கிறதுதான். முக்கியமாக எதெதுக்குத்தான் சண்டையை ஆரம்பிக்கிறாங்கன்னே முக்காவாசி நேரம் புரியறதில்ல. பெரும்பாலும் பாதிச் சண்டையில், அங்கன செமையா சண்ட நடக்குது தெரியுமான்னு நல்லவங்க சிலபேரு chat பெட்டியில் அல்லது மின்மடலில் சுட்டி போடும் போதுதான் எட்டியே பார்ப்போம். 

இப்பக்கூடப் பாருங்க google குழுமத்துல ஒரு சண்டை, Facebook குழுமத்துல ஒரு சண்டை, Twitter-ல ஒரு சண்டை, Google plus-ல ஒரு சண்டைனு…. ஒரே சண்டையா கெடக்குது. (அங்க யாருப்பாது, ஒரு சண்டைனு சொன்னதுக்கு திட்டுறது. செரி… செரி… பல சண்டைகள் நடக்குதுதான்…. அட விடுங்க, செரி நான் சொன்னது தப்புத்தான்… அய்யே எனக்கு ஒவ்வொரு சண்டைதானுங்க தெரியும். இப்ப என்னாங்குறீங்க…. பல சண்டை நடக்குதுன்னா எங்கே என்னானு சுட்டி போடுங்க, மேலே இருக்கிற ’ஒரு’ என்பதை இரு / ஐந்து / பலனு மாத்திக்கிறேன்… ம்ம்ம் காசா பணமா, கூல் கூல்… அட விடுங்க பாஸு… ச்ச்சே ச்சே உங்களச் சொல்லலைங்க என்னையே சொல்லிக்கிட்டேன்… ஆஆஆல்…ஈஈஈஸ்ஸ்..வெல்ல்ல்ல்)


நமக்கு சுட்டி கிடைச்சு, கூடவே நேரம்(!) கிடைச்சு என்ன ஏதுன்னு எட்டிப்பார்க்கிறப்போ, கண்டிப்பா அது பாதிச் சண்டையில் இருக்கும். அமெரிக்கா – ஆலத்தூர் – இங்கிலாந்து -  ஈரோடு – உகாண்டா – ஊஞ்சலூர்… ’என’ பல இடங்களிலிருந்தும் அந்தச் சண்டையில் கனிணி விசைப்பலகையில் விரல்கள் மூலம் வார்த்தைகளைத் துப்புவார்கள் அல்லது சண்டையை வேடிக்கை பார்ப்பார்கள். (அதென்ன குறிப்பிட்ட சில ஊர் நாடுகள்னு பார்க்குறீங்களா, சும்மா அகர வரிசையில சில பேரு எழுதி ’எ’ வந்தவுடனே ’என’ என்று முடிச்சுக்கிட்டேன்.)

பாதிச் சண்டையில வேடிக்கை பார்க்கப்போற என்னை மாதிரி அப்புராணிகளுக்கு அது என்ன சண்டைனே புரியாது. சரி மொதல்லேருந்து என்னனு படிச்சுப்பார்த்துட்டு வரலாம்னு போனா, இங்கே ’டொடக் டொடக்’னு சண்டையின் புதிய வாள்வீச்சுகள், கையில விழுகிற மசால்வடை போல சூடா  விழுந்துட்டே இருக்கும். சண்டையின் ஆரம்பம் ஆறிப்போன ரவை மாதிரி வழுவழுப்பா கெடக்கும். நீங்களே சொல்லுங்க, ஆறிப்போனத படிக்காட்டி சண்டை என்னாத்துக்குன்னே புரியாது, ஆனா புதுசா விழுகிற மசால் வடையை தின்னத்தானே மனசு அலைபாயும். ஒரு அப்புராணி என்னதான் பண்ணுவான். என்னமோ போங்க.

ஆங்ங்ங்… எங்க விட்டேன், ம்ம்ம்… அந்த சண்டைக்குள்ளே நொழஞ்சு வேடிக்கை பார்க்கிறதில. எப்படி இணைய உலகத்துல நீச்சல் அடிக்க வந்து மூழ்கிப்போனோமோ, அதேமாதிரி இங்கிட்டு சிலபேருக்கு வேடிக்கபார்க்க வந்தா, வந்த கையோடு நிக்கத்தோணாது, ’டுபுக்குடீர்’னு எதையாச்சும் சொல்லி சண்டையில குதிச்சிருவாங்க, சில பேரு, தனக்குப் பிடித்த ஆள் பக்கம் அல்லது கொள்ளை…. ஸ்ஸ்ஸ்ஸாரி டங்கு ஸ்லிப்பு…. கொள்கை பக்கம் கொடிப்பிடிச்சிட்டே குதிப்பாங்க. சில பேரு சண்டையை ஒரு புயல் மாதிரியோ, சுனாமி மாதிரி மாத்தலாமான்னு முயற்சி பண்ணுவாங்க, (பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான்) இன்னும் சிலபேரு சண்டை போடுகிற ஆட்கள் அணிகளோடு இருக்கும் பழைய பகையை இதிலும் கோர்த்துக்கப் பார்ப்பாங்க, இந்த சில ‘சில பேர்களை’யெல்லாம் தாண்டி மிச்சம் இருக்கிற பல பல பல பல பேரு சுவாரசியமாகவோ, புரிஞ்சோ புரியாமலோ கண்ணுல வெளக்கெண்ணைய விட்டுக்கிட்டு மெனக்கெட்டு வேடிக்கை பார்ப்பாங்க. அப்புறம் அவங்கவங்களுக்கு கெடைக்கிற நேரம், இருக்கிற திறன் எல்லாம் சலிக்கும் வரைக்கும் சண்டை போட்டு முடி(க்கும்)யும் போது, ஒன்று அந்த சண்டைக்கான இடுகை, திரி அழிக்கப்பட்டிருக்கும் அல்லது முடக்கப்பட்டிருக்கும். சண்டை முற்றுப்பெறும்போது கட்டங் கடைசியா வர்ற ஆளு (வாசகன்) மட்டும், அடடா இன்னும் நாலு வரி சண்டை நடக்காதானு அந்த இணையப் பக்கத்தை Refresh பண்ணிப்பண்ணி கை வலி கண்டு விட்டுட்டுபோய்ருவான். 

மழை விட்டும் தூவாணம் விடாத மாதிரி, பெரிய சண்டைகள் ஓய்ஞ்சாலும், அதையொட்டிய கிளைச் சண்டைகள் அப்பப்ப நடந்துட்டுத்தான் இருக்கும். அதுவும் எது வரைக்கும்னா அடுத்த பெரிய சண்டை ஆரம்பிக்கிற வரைக்கும். என்ன ஒரு கொடுமைன்னா, இந்தப் பெரிய பெரிய சண்டைகள் எல்லாம் ஷங்கர் படம் மாதிரியோ, ரஜினி படம் மாதிரி விளம்பரத்தோடவெல்லாம் வர்றதில்ல. சும்மா அப்படியிப்படி ஆரம்பிக்கும், அங்கிட்டும் இங்கிட்டும் இருக்கிற ஆட்களோட இரத்த அழுத்தத்துக்கு ஏத்தமாதிரி அடிதடி நடக்கும். அதுல பரிதாபப்பட்ட ஒரே ஜீவன் யாருன்னா நம்ம கிட்ட வாக்கப்பட்ட கம்ப்யூட்டர் கீ போர்டுதான்.

செரி.. இப்ப என்னதான் சொல்ல வர்றேன்னு கேக்குறீங்களா…. (செரி செரி ஒன்னும் கேக்கலனு சொல்றதும் புரியுதுப்பா) இந்த மாதிரி சண்டைகள் நடக்குதுன்னு ஒரு இடுகை தேத்துறேன் அம்புட்டுத்தான்…. ம்ம்ம்ம்… இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா, இப்படி வெட்டுக்குத்து நடந்த சண்டைகளின் வரலாறு புவியியல் எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுப் படிச்சுப்பார்த்தா செம மொக்கையா இருக்கும். செம மொக்கைங்கிறவிட படுபடு பாடாவதி மொக்கையா இருக்கும். கருமாந்திரம் என்னாத்துக்குடா இப்படி அடிச்சிக்கிட்டோம்னு இருக்கும். பொடனியில இரத்தம் சுர்ருனு ஏற, நெத்தி நரம்பெல்லாம் பொடைக்க, ’டொடக் டொடக்’னு கீ போர்டுல தட்டுனதெல்லாம் நியாபகத்துக்கு வரும்போது பப்பி ஷேமா இருக்கும்.

இப்படியெல்லாம் எழுதுறதுக்காக நானெல்லாம் சண்டையே போடாத சப்பாணினு யாரும் நினைக்கவேணாம். (அதென்ன சப்பாணி உவமைனு கேக்குறீங்களா.. அட சண்டைக்கு, சப்பாணி ’ச’-க்கு ’ச’.) நானும் blog சண்டையில ஒரு 400 பின்னூட்டம், Google Buzzல நூத்திச்சில்லற பின்னூட்டம், Facebookல 150 பின்னூட்டம்னு எப்பவோ ஆடினதுண்டு. என்ன கருமம் அதையெல்லாம் கல்வெட்டுல பொறிச்சு வைக்கலாம்னு பார்த்தா, அந்த எல்லாச் சண்டையையும் சண்டை போட்ட நாங்களே ஒன்னு சேர்ந்து டெலிட்டிட்டோம்…

செரி கடைசியா எதும் பன்ச் வைக்கனுமாமே…
அதாவது நான் பெரிசா நீ பெரிசான்னு இணையத்துல போடுற சண்டையில சண்டை போடுற ஆட்களோ / அணிகளோ இதுவரைக்கும் ஜெயித்ததாவோ தோற்றுப்போனதாகவோ சரித்திரம் பூகோளம் எதுவுமில்லை… (க்கும் இதுல சரித்திரம் வேறையாக்கும்…. ஸ்ஸ்ஸ்.. வாயமூடு…. சொல்லிமுடிக்கிற வரைக்கும் விடுங்கப்பா)… அப்போ யாருதான் ஜெயிக்கிறது தோற்பதுனு கேக்குறீங்களா…. சண்டையை நல்லாப் புரிஞ்சு ரசிச்சு அனுபவிக்கிறவன் ஜெயிக்கிறான். என்ன சண்டைனே தெரியாம, அய்யோ எப்படியாச்சும் புரிஞ்சுக்கனுமேன்னு மெனக்கெட்டும் புரியாதவன் தோற்கிறான்… 

இதுல நாம ஜெயிக்கிறவங்களா, தோக்குறவங்களா இல்ல இரத்தத்தை பொடனி வழியா உச்சந்தலை வரை ஏத்தி சண்டையில் நாயடி பேயடி வாங்குபவர்களா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்… ஏன்ன்ன்னா அன்னிக்கே யாரோ சொன்னாங்க ”உன் வாழ்க்கை உன் கையில்”னு… ஸோ… ஆஆஆல்…ஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ் வெல்ல்ல்ல்ல்.

டொண்டடொய்ய்ங்!!

-0-
 

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...