வாழ்தல் அறம்னவுகள் காணும் பொழுது பசுமையாக நினைவில் இருக்கும். சட்டென விழிக்கும் தருணத்தில் சுக வருடலாகவோ, அதிர்வு வெள்ளமாகவோ நம்மைச் சூழும். விடியலில் இருள் விலக விலக கனவும் மெல்ல நீர்த்துப் போகிறது. இதுவரை மறக்கவே மறக்க முடியாத கனவென்று எதுவுமே எனக்கில்லை. எனக்கில்லை மட்டும்தான் எவருக்கும் இருக்குமா இருக்காதா என்பது தெரியவில்லை. இத்தனையித்தனை கனவுகள் காண்கின்றோமே, நம்முடைய மரணத்தைக் கனவாக காணும் வாய்ப்புக் கிடைக்காத என்று இதை எழுதும் கணம் நினைக்கின்றேன். அப்படிக் காண விரும்பவதின் சூட்சுமம், மரணத்திற்குப் பின்னால் என்னவாக இருப்போம் என்பதையும் அறிந்துகொள்ளும் ஒரு நப்பாசைதான். மரணத்திற்குப் பின் என்ன எனும் சூன்யம்தான் மரணம் குறித்து அளவற்ற பயத்தையும், சில கடினச் சூழல்களில் அதன் மேல் விருப்பத்தையும் தந்துவிடுகின்றன.

சமீபத்தில் மூன்று சம்பவங்கள் என்னை உலுக்கிப் போட்டுவிட்டுப் போயிருக்கின்றன. மூன்று சம்பவங்களில் தனித்தனியே மூன்று பேர். இதுகுறித்து எழுதலாமா வேண்டாமா என பெரும் போராட்டமே எனக்குள் நிகழ்ந்ததுண்டு. கனமாய் இருந்துகொண்டிருப்பது கரைந்துவிடலாம் என்றும் எழுதுவதைத் தள்ளித்தள்ளிப் போட்டேன்…. ப்ச்கனம் கூடியதே தவிர கரையும் முகாந்திரமில்லைகாவேரி ஒரு குடும்பத்தையே தாங்கி நிற்பவர். மத்திம வயதைக் கடந்த நிலை. பெரிய படிப்பு, பெரிய பதவி அதேபோல் பெரிய பெரிய கடமைகள். என் குடும்பப் பெண்கள் தவிர்த்து நான் மிக நீண்ட காலம் அறிந்தவர். வாழ்க்கையின் அத்தனை போராட்டங்களையும் போராட்டங்களாகப் பார்க்காமல் வெகு இயல்பாக கடந்து வந்தவருக்கு, எப்போதாவது தலை வலித்தால், காய்ச்சல் வந்தால் ஒரு மாத்திரை விழுங்குவதும், ஊசி போட்டுக்கொள்வதும் மாபெரும் போராட்டம். எதேச்சையாய் ஒரு நாள் உணர்கிறார் தனது மார்பகத்தில் கட்டி போன்று ஒன்று உருள்வதை. அது ஏதேதோ கொடும் கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. உலகமே இருள்வதுபோல் தோன்றுகிறது. வாழ்க்கையின் மிகக் கடினமான தருணம், வெகு அருகாமையில் பயணிப்பதுபோல் தோன்றுகிறது.

வீட்டில் சொல்ல வீடும் சேர்ந்து அதிர்கிறது, துவள்கிறது. முடிக்கவேண்டிய கடமைகள் கூர் நகம் கொண்ட விரல்களைக் கொண்டு மிரட்டுகின்றன. எந்த நோயாக இருந்தாலும் போராடிப் பார்த்து விடலாம் என என் தைரியத்துக்கு மீறிய தைரியத்தை ஊட்டும்போதே, சின்ன ஊசி, மாத்திரைக்கை அத்தனை சிரமப்படுபவர், எப்படி இதையெல்லாம் கடந்து போகப் போகிறார் என்பது என்னை உலுக்கியது.

அடுத்த நாள் மருத்துவரைச் சந்தித்து பரிசோதிக்கலாம் என நிலையில், அந்த இரவு பித்துப் பிடித்த மனதுக்கு பயத்தின் வெம்மை கண் மூட அனுமதிக்கவில்லை. விடிய மறுத்து நீண்டு ஒருவழியாக விடிந்த அந்த இரவு மறக்கமுடியாததும் கூட. விடிந்ததும் முதல் வேலையாக மருத்துவமனை நோக்கி ஓட, அடிப்படை சோதனைகள் செய்து, ஏதோதே மாதிரிகள் எடுத்து அடுத்தநாள் அறிக்கை வந்தபிறகு சொல்வதாய்ச் சொல்லி அனுப்புகிறார்கள். அந்த இரவு அவரை, குடும்பத்தினர் தூக்கம்தரும் இருமல் மருந்தை வலிய குடிக்கச் சொல்லியே உறங்க வைத்திருக்கிறார்கள்.

குமரகுரு, வீட்டில் மனைவியோடு ஏற்பட்ட பிணக்கில் உணர்ச்சி வேகத்தில் உயிரை மாய்க்க முனைந்ததில், நூலிழையில் உயிர்தப்பி மருத்துவமனையில் ICUவில் இருப்பதாய் அதிகாலையில் நண்பர் ஒருவர் அழைத்துச் சொல்லும்போதுதான் விழித்தேன். உச்சி மண்டியில் இடி இறங்கியதுபோல் இருந்தது. அப்படியொரு விடியல் எவருக்கும் அமைந்திடக்கூடாது. குமரகுருவின் பிரச்சனையை சிலநாட்களாகவே அறிவேன். மருத்துவமனைக்கு ஓடியவனின் கால்கள் ICU அறையை நெருங்க நெருங்க நடை தளர்ந்து கால்கள் பின்னிக்கொண்டன. அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை.

குமரகுருவிடம்பொண்டாட்டி, புள்ளைய விட்டுத் தள்ளுப்ப, அதெல்லாம் கூட அஞ்சாறு வருச உறவுதானே, ஆனா இத்தனை வருசம் வளர்த்து ஆளாக்கி எல்லாம் செஞ்சு வெச்சு, இனி கடைசிகாலத்தில் ஷ்ஷப்பா என ஓய்வெடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கும் உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பதில் சொல்வே உன் மரணத்தின் மூலம்” எனக் கேட்கத் தோணியது. வெளியில் வரும்போது அவரின் அம்மா என்னை எதிராகக் கடந்துகொண்டிருந்தார். உண்மையில் அந்தச் சூழலில் ஒரு தாயை எதிர்நோக்கும் துணிவு துளியுமில்லை. என்னை அவரும் கவனிக்கவில்லைபோலத் தோன்றவே சலனமற்று வெளியேறினேன்.

மீனாட்சியிடமிருந்து காலையில் ஒரு குட்மார்னிங், இரவு ஒரு குட் நைட் குறுந்தகவல்கள் மட்டும் வரும். எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வதுண்டு. ஆகச்சிறந்த ஒரு அறிவார்ந்த நட்பு. அவருக்கு குடும்பத்தில் சில சிக்கல் இருக்கிறதென அறிவேன். ஒவ்வொரு முறையும் எல்லாருமே கேட்டுக் கேட்டுச் சலித்த” வீட்டுக்கு வீடு வாசப்படி” எனும் அறிவுரையையே அழுத்தமாகச் சொல்வதுண்டு. அன்று இரவு குட்நைட் செய்தியோடுஇனி எனக்கு எதுவும் அனுப்ப வேண்டாம்” எனும் ஒரு வரி வருகிறது. நான் என்னத்தை அனுப்பப் போகிறேன் என நினைத்துக்கொண்டே, சரி அடுத்த நாள் என்ன ஏதுனு கேட்டுக்கலாம் என உறங்கிப்போனேன்.

அடுத்தநாள் மதியம் திடிரென நினைவு வந்தவனாகஏன் இனி எதும் அனுப்பாதேனுஅனுப்பினே எனக் கேட்டேன். ”கையில் தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு அப்படி அனுப்பினேன்” என்றபோது ஒரு விநாடி எனக்கு மூச்சு நின்று வந்தது. இதற்குமுன்பே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதைக் கூறியபோது, ”ஒருபோதும் நீயா சாக நினைக்காதே, அப்படி செத்துப்போக நினைச்சா ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போஎன தெனாவட்டாக (!) அறிவுரை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

விதியாய் அதுவாக நெருங்கிப் பார்ப்பதோ, விரும்பி ஏற்பதோ மரணம் என்பது எல்லோரையும் எதிர்பாராத தருணத்தில் உலுக்கிப் போடும் ஒன்றுதான்.

வெறும் நீர்க்கட்டி தான் என சிறிய சிகிச்சை அளித்ததில் இன்று காவேரி அடுத்தடுத்த கடமைகள் குறித்த ஓட்டத்தில் வெகு தீவிரமாய் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த இரு நாட்களின் பயம் குறித்து எப்போது பேசினாலும் ஒரு வெட்கம் வந்துவிடுகிறது. ஒருவேளை அது கடுமையான நோயாக இருந்திருந்தால், என்னதான் போராடினாலும், போராட்ட காலத்தில் எப்படி அவரை எதிர்கொள்ளப்போகிறோம் எனப் பயந்த என் அதிர்ச்சி இன்றும் கூட விலகிவிடவில்லை. அந்த இரண்டு மூன்று நாட்களின் பயம் முழுமுற்றிலும் விலகிய பிறகு வாழ்க்கையின் புதிய அத்தியாயம் போன்று,  மிகப் பெரிய ஓட்டத்தை துவங்கியிருக்கின்றார். வாரக் கணக்கில் கூட பேசாமல் இருப்பதுமுண்டு, பேசுவதற்கான அவசியமும் ஏற்படுவதில்லை. ஆனாலும் அந்த நட்பு இந்த உலகிலிருந்து இல்லாது போகும் சூன்யத்தை எப்படியும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.

அடுத்த நாளிலேயே மருத்துவமனையிலிருந்து வெளியேறி, தேடிவந்து என்னெதிரில் உட்கார்ந்து கொண்டு தன்னை நிரப்பியிருந்த எல்லா உணர்வுகளையும் மழுப்பல் சிரிப்பால் கடந்துகொண்டிருந்த குமருகுருவிடம் சொன்னேன். ”வெளிவ வரும்போது உங்க அம்மா வந்துச்சு குரு, நல்லவேளை என்னப் பார்க்கல, அவிங்க பார்க்குற தைரியம் எனக்கில்லப்பாஎன்றேன்

க்கும் செரியாப்போச்சு, எங்கம்மா உள்ள வந்தொடனே, உங்களையப் பாத்தேனுதானே சொல்லுச்சுஎன்றார்.

மீனாட்சிக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. நல்லதொரு பொருளாதாரத்திற்கான நம்பிக்கையும் கூடிவிட்டது. வீடு மாறியாகிவிட்டது. பிள்ளையை உயர்கல்விக்கு எங்கே சேர்க்கலாம் என்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறார்.

பின்பக்கம் அமர்ந்திருக்கும் மனைவி இடுப்பில் கை போட்டுப் பிடித்திருக்க, வேகமாய் பைக்கில் சென்று கொண்டிருக்கும் குமரகுருவை இரண்டு தினங்களுக்கு முன்பு பார்த்தேன்

கணவன் வாங்கிக் கொடுத்த உடையோடு
மீனாட்சி தனது பிறந்த நாளைக் கடந்ததையும் கேள்விப்பட்டேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி வரும் தலைவலி காவேரிக்கு பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை.

கண நேரக் கோபத்தில், கண நேர உணர்ச்சிப் பிரவாகத்தில், தங்கள் உணர்ச்சிகர முடிவில், இன்னும் சற்றே ஒரு எட்டு வைத்துத் தொலைத்திருந்தால், மீனாட்சி குறித்த சேதி எனக்கு ரொம்ப நாள் தெரியாமலே போயிருக்கலாம் குமரகுருவின் இழப்பை, சக்கையாய் மென்று கொண்டிருக்கலாம். இவர்கள் இங்கு ஒருமாதிரியான உதாரணங்களே.

ஒரு விடியலில் இவர்களோ, இவர்களைப் போன்ற மனதிற்கு உகந்த நட்புகளோ இல்லாமல் போகும் வெறுமை நிறைந்த தருணத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை என்னால் கற்பனை கூட செய்திட முடிவதில்லை. அவர்களோடு தொடர்பில்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் அல்லாமல் போகும் ஒரு விடியலை எப்படி அவ்வளவு எளிதில் எதிர்கொள்ள முடியும் என கற்பனை செய்திட முடியவில்லை. அவர்களின் இயல்பான நடவடிக்கைகளற்ற அந்த நாட்களை நினைக்கவே மனதில் இருள் சூழ்கிறது.

விபத்தின் மரணங்களை, நோய்வாய்ப்படுதலின் மரணங்களை ஜீரணிக்க முடியாமல் ஜீரணித்துக் கொள்ளமுடிகிறது. தற்கொலை மரணங்களைக் கேள்வியுறுகையில் நம்மையறியாமலும் நம்முள் ஒரு சுமை வந்து சேர்கிறது. தெரிந்திருந்தால், அதைத் தடுக்க எதாச்சும் அதற்காக செய்திருக்க முடியாதா? என ஏதோ ஒரு குற்ற உணர்வு அழுத்துகிறது. இத்தனை கோடிப்பேர் வாழும் இந்த பூமியில் அவர்களுக்கென்று ஒரு மூலை இல்லாமலா போய்விடும். தன் கிளைகளில் துளிர்க்கும் ஒவ்வொரு இலைக்கும் மரம் இடம் வைத்திருக்கத்தானே செய்கிறது. பழுத்துவிழுவதற்கும் தன்னை முறித்து வீழ்வதற்கும் எத்தனையெத்தனை வேறுபாடுகள்.

வாழ்வதற்கான கஷ்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ள கைக்கொள்ளும் தைரியத்தைவிட, மரித்துப்போக அந்த நொடிப்பொழுதில் எடுக்கும் தைரியம் பலமடங்கு கூடுதலானது. வாழத் தேவையான தைரியத்தைவிட, சற்றே கூடுதல் தைரியம் கொண்டு சாகத் துணிபவரின் விரல் பிடித்து, தைரியத்தை இடமாற்றி வைக்கச் சொல்ல முடியாத என்ன? அவர்கள் இல்லாமலே போவதை எப்படி அனுமதிப்பது? இப்படியிப்படி எண்ணற்ற மொழிகளில் மனதிற்குள் அழுத்தும் குற்றப்பத்திரிக்கைகள் சார்ந்த வாதங்களுக்கு பதிலற்றே போய்விடுகிறது.

எவருக்குமே சாவதற்கான காரணங்களைவிட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது. தேடிப்பார்ப்போமே. இதோ இப்போது ஏதோ காரணம் இருப்பதால்தானே நான் எழுதி முடிக்கிறேன், நீங்களும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்வோம். வாழ்க்கை அதுவாய் பழுத்து உதிரும் வரை.

-

நன்றி : அதீதம்

-

8 comments:

thamilarasi said...

நாடியின் வேகம் கூடியதை இன்னும் படபடக்கும் இதயத்திடம் கேட்கிறேன் ஏன் இப்படி என்று.. முதல் சம்பவம் முதல் இறுதிவரை மனசு கனத்து மிரண்டு போச்சி. நல்ல வேளை நிஜவாழ்விலும் முடிவு சுபம் என்பதில் சற்று வியப்பும் நிம்மதியும்..! சம்பவங்களை உணர வைத்தது எழுத்தின் பலம்..! யப்பா சாமி உங்க பக்கம் வந்து படிக்கவே மாட்டேன். திகில் நேரம் கணக்கா ஹார்ட் அட்டாக் வந்தாலும் வந்துடும்...! வாழ்தல் அறம்..!

Anonymous said...

வாழ்வோம். வாழ்க்கை அதுவாய் பழுத்து உதிரும் வரை.
nice sharing of this, but knowing the time of death of our beloved person is the most terrible thing in the world.. i have been through it.. KNOW THE VALUE OF DEATH, IT MIGHT BE A MIN... BUT REFLECTS LONG...

Rathnavel Natarajan said...

ஒரு விடியலில் இவர்களோ, இவர்களைப் போன்ற மனதிற்கு உகந்த நட்புகளோ இல்லாமல் போகும் வெறுமை நிறைந்த தருணத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை என்னால் கற்பனை கூட செய்திட முடிவதில்லை. அவர்களோடு தொடர்பில்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் அல்லாமல் போகும் ஒரு விடியலை எப்படி அவ்வளவு எளிதில் எதிர்கொள்ள முடியும் என கற்பனை செய்திட முடியவில்லை. அவர்களின் இயல்பான நடவடிக்கைகளற்ற அந்த நாட்களை நினைக்கவே மனதில் இருள் சூழ்கிறது.

அருமை சார். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? மிகவும் நெகிழ வைத்த, அழ வைத்த பதிவு. மாமனிதர் சார் நீங்கள்.

இந்த நெகிழ வைக்கும் பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அண்ணா...

ராமலக்ஷ்மி said...

மிக அவசியமான பகிர்வு.

Rathnavel Natarajan said...

மீண்டும் படித்தேன். மிகவும் நெகிழ வைக்கிறது. கலங்க வைக்கிறது.
நன்றி திரு ஈரோடு கதிர் சார்.

sivakumarcoimbatore said...

அவசியமான பகிர்வு.sir

Unknown said...

எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் குடும்பத்தினர் அரவணைப்பு இருந்தால் இந்த மாதிரி முடிவுகளை தேடி மனம் செல்வதே இல்லை...ஒரு ஆறுதலோட கூட புரிதலுக்கு ஈடு இணை எதுமில்லை....
ஆனாலும் மரணத்தை கண்டு இவ்வளவு பயப்படனுமா என்ன?என்னை பொருத்தவரையில் இந்த வாழ்விலிருந்து மகத்தான விடுதலை என்று தான் நினைக்கிறேன் இன்று வரை...நாளை மனம் எப்படி இருக்குமோ தெரியாது...யார் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் நடக்கவேண்டியது எல்லாம் மிகச்சரியாக நடக்கிறது...