நாற்பது வயதைத் தாண்டுவோருக்கு சில பிரத்யேக குணங்கள் உருவாகிவிடுகின்றன எனத்தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பதின்வயதுப் பிள்ளைகள் குறித்த மனவருத்தம்
மற்றும் குறைப்படுதல் முக்கியமானது. ஒருவகையில் அதில் உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ”வீட்டில் வேலைகள் எதும் செய்வதில்லை, அருகில் கடைக்குப்
போய் வருவதில்லை, சொந்தங்களோடு உறவு பேணுவதில்லை, எப்போதும் செல்போன்,
டேப்லெட்டில் கேம்ஸ்
விளையாடுகிறார்கள்,
டிவி பார்க்கிறார்கள்’ என்பது உள்ளிட்ட புகார்களை இல்லந்தோறும் கேட்டுக்கொண்டுதான்
இருக்கின்றோம்.
இதில் ஓரளவு உண்மையும்
இருக்கிறது. வெறும்
புகார்கள், மனத்தாங்கல்கள் என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இப்போதைய பதின் வயதுப் பிள்ளைகளின் உலகம் நாம் பார்த்திராதது. அறிவியலும் தொழில்நுட்பமும் சார்ந்த உலகத்தினராய் அவர்கள் வளர்வதாலோ என்னவோ அருகாமை மனிதர்களோடு தொடர்பற்றுப்போய் விடுகிறார்கள்.
பதின்வயதின்
மையத்திலிருந்தே அவர்களை அவர்களுக்கான பிரத்யேக உலகம் தனக்குள் வாரிச்சுருட்டிக் கொள்கிறது. கடந்த தலைமுறையினருக்கு
மகிழ்ச்சியூட்டியாய் இருந்த பெரும்பாலான
செயல்கள் ஏதும் இப்போது அவர்களுக்கு அவசியப்படுவதில்லை.
அவர்களுக்கு மகிழ்ச்சியூடும்
பலவற்றில் எதுவும் பெரியவர்களுக்கு
புரிவதில்லை; புலப்படுவதில்லை.
இந்த மனவருத்தமும் ஆதங்கமும் ஒரு
பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்த
மாதிரியான இடைவெளிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, பதின்வயதுப் பிள்ளைகளை ஒட்டுமொத்தமாய் எடை போடுதல் மாபெரும் குற்றமாய்த் தோன்றுகிறது. ஒருவகையில் அவர்கள் வேறு ஒரு அற்புத உலகத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதை உணர்வதும் அறிவதும் அவசியமான ஒன்று.
*
பெரம்பூர் ரயில் நிலையம். காலை 4 மணி இருக்கும். அந்தக் காலைப்பொழுதில் வேடிக்கை பார்க்க வேண்டுமெனத்
தோன்றியது. அந்த நான்கு மணி காலைப் பொழுது தெளிவான அமைதியை தன்னகத்தே கொண்டிருந்தது. பொள்ளாச்சியிலிருந்து
சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில் தன் சுமையில் கொஞ்சம் இறக்கி வைக்கும் முகமாய் நின்று அமைதி காக்கிறது. ரயிலில் இருந்து இறங்கிச் செல்வோர் முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளைச் சுமந்ததாய் இருக்கின்றன.
அவர்களிடையே வரிசையாய்ச் செல்லும் ஆட்டுக்குட்டிகள் போல் சிறுவர் படையொன்று நடைமேடையின் முன்புறத்திலிருந்து வருகின்றது. இருவராய் வரும் வரிசையில் முதல் ஆளாய் வருகிற சிறுவனின் கையில் அவன் உயரத்தில் பாதி அளவில் பெரிய கோப்பை ஒன்று இருக்கின்றது. எங்கோ விளையாட்டுப் போட்டிக்கு சென்று திரும்புகிறார்கள் எனப் புரிந்தது.
கோப்பையைச் சுமக்கும் சிறுவனின் பின்னால், இரண்டு சிறுவர்கள் எதிரெதிராய்த் திரும்பி இரண்டு கைகளையும் கோர்த்து ஒரு நாற்காலிபோல் அமைத்திருக்க, அந்த கைகளில் ஒரு சிறுவன் அமர்ந்து சிரித்தபடி இருக்கிறான். சுமப்பவர்களின் நடைக்கு ஏற்ப காற்றில் மிதப்பதுபோல் உயர்ந்து தணிகிறான். பார்த்த நொடியில் தம் அணியின் தலைவனைத் தூக்கி வருகிறார்களோ எனத் தோன்றியது. அணித் தலைவனை இப்படியெல்லாம் அதிகாலை நான்கு மணிக்கு ரயில் நிலையத்தில் தூக்கி வருவது அதிகப்படியான அலட்டல் என மனம் நினைக்கும்போதே என்னை அவர்கள் கடக்கிறார்கள்.
அவர்களின் கைகளில்
அமர்ந்திருந்த சிறுவன் நான் பார்ப்பதைக்
கவனித்ததும் வெட்கமாய்ப்
புன்னகைக்கிறான். அப்போதுதான் அவன் இடது கால் முட்டியில் தடிமனான கட்டு போடப்பட்டிருப்பதைக் காண்கிறேன். சில நொடிகளுக்கு முன்னாள் அலட்டல் என நினைத்த அவசரப்புத்திக்காக நான் வெட்கப்பட்டேன்.
ஒரு வெற்றிக்குப் பிறகு, அந்த வெற்றியின் அடையாளமான
ஒரு கோப்பையைத் தூக்கிச் செல்வதன் பெருமையைவிட, அணியில் காயம் அடைந்தவனை ஒரு பேரரசனைச் சுமந்து செல்வது போல் தூக்கிச்சென்ற அந்தப் பிள்ளைகளிடம் இருந்த பெருமை சொற்களுக்குள் அடங்காதது. அடக்கவும் கூடாதது.
*
மகிழினியை எல்லோருக்கும் பிடிக்கும். தன் வயதுக்கு மீறிய பக்குவம் கொண்ட
பெண் அவள். எல்லோருடனும் ப்ரியம் பாவிப்பாள். எதையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள். நட்புகளை நளினமாகக் கையாள்வாள். அவள் அன்பு செலுத்தும் விதமும் அலாதியானது.
தன் அம்மாவை, தானும் ஒரு அம்மாபோல் நடத்துவாள். சாலைகளில் நடந்து போகுபோது அம்மாவைப் பத்திரமான திசைக்கு நகர்த்தி நடத்திச் செல்வாள். ஒருமுறை கனவு ஒன்றில் விழித்தழுத அம்மாவைப் பார்த்தவள், அன்றிலிருந்து அம்மா எப்போது புரண்டு படுத்தாலும், அதை அனிச்சையாய் உணர்ந்து மெல்லத் தட்டிக் கொடுப்பாள் அதில்
தாய்மை உணர்வு வழிந்து பெருகும். யாரும் எப்போதும் எதிலும் முகம் சுழிக்க முடியாத ஒரு படைப்பு அவள்.
படிப்பில் திறமையாய் இருக்கும் அவள் எல்லாக் காலங்களிலும் மற்ற பிள்ளைகளுக்கு கல்வி குறித்த சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள். அவளிடம் சந்தேகம் கேட்டுவிட்டால் எப்படியும் தீர்வு கிட்டிவிடும் எனும் நம்பிக்கையை எல்லோருக்கும் கொடுத்திருந்தாள். எப்போதும் அவளிடம் உதவி கேட்கலாம்; கேட்காவிட்டாலும் கூட வலியச் சென்று உதவுவாள்.
ஆமாம் மகிழினிக்கு இன்னொரு முகமும் உண்டு. அது தேர்வு அறைகளில் மட்டுமே வெளிப்படும் முகம். தேர்வு எழுதும்போது மட்டும்
எப்போதும், பதில் தெரியாத யாருக்கும் காப்பியடிக்க உதவ மாட்டாள். அந்த ஒரு விஷயத்தில் அவளை உடனிருக்கும் நண்பர்களும், தோழிகளும் கசப்பாய் எதிர்கொள்வார்கள்.
“எல்லாத்திலும் நல்ல பிள்ளையா இருக்கே… ஏம் பாப்பா எக்ஸாம்ல மட்டும் அப்படி ஸ்ட்ரிக்டா நடந்துக்குறே” என்ற அம்மாவிடம் அவள்
புன்னகையோடு சொன்னாள், “அம்மா… நான் ஒருதடவை வேணா ஹெல்ப் பண்ணிடலாம், ஆனா நான் ஹெல்ப் பண்றதால ஒவ்வொரு முறையும் எக்ஸாம் ஹால்ல வேற யாராச்சும் ஹெல்ப் பண்ணுவாங்கனு எதிர்பார்ப்பு வந்துடாதா?. அந்த தப்பான எதிர்பார்ப்பு வர்றதுக்கு நான் காரணமா இருந்துடக்கூடாது. நான் அவங்களுக்கு உதவி செய்யலைங்ற கோபம் வேணா வந்துட்டுப் போகட்டும்… ஆனா நான் இப்படி உதவி செஞ்சுட்டா, அதுவே பழக்கமாயிடும். அந்த அர்த்தமில்லாத நம்பிக்கைய நான் தரத் தயாரில்ல” என்றாள்
அப்பா வீட்டுக்குள் நுழையும்போதே “என்னங்க… உங்க மக பண்ணின கூத்தக் கேட்டீங்ளா… அவங்க கெமிஸ்ட்ரி மிஸ் நொந்துட்டாங்களாம்”
என்ற அம்மாவை குறுகுறுப்பாக பார்த்தாள் நந்திதா.
விஷயம் இதுதான். நடந்த முடிந்த முன்பருவத்தேர்வில் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்ணாக ஐம்பது மதிப்பெண் பெற்றிருந்திருந்தாள்
நந்திதா. வேதியியல் ஆசிரியை ”நான் மூணு
செக்ஷனுக்கு சப்ஜெட் எடுக்றேன்.
நீ ஒருத்திதான் ஃபிப்டி
வாங்கியிருக்கே!” என மகிழ்ந்து பாராட்டி விடைத்தாளைக் கொடுத்திருக்கிறார்.
தன் இருக்கைக்குத் திரும்பிய நந்திதா, விடைத்தாளை முழுவதுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு “மேம்.. ஒரு மிஸ்டேக் பண்ணியிருக்கேன். நீங்க அதுக்கு மார்க் பிடிக்காம விட்டுட்டீங்க” எனச்சொல்லி அதற்கு கால் மதிப்பெண் கழிக்க வைத்திருக்கிறாள். மாலையில் அந்த ஆசிரியை நந்திதா அம்மாவை அழைத்து “என்னங்க உங்க பொண்ணு இப்படி இருக்கா!?” எனச் சொல்லியிருக்கிறார்.
“இவளுக்கு எதுக்குங்க தேவையில்லாத வேலை. அதான் அம்பது போட்டுட்டாங்ல்ல… அதை ஏன்
போய்ச்
சொல்லி குறைக்கனும்! இவளையெல்லாம் என்ன பண்றது போங்க” அம்மா நீட்டி முழக்க” நான் எழுதுனதுக்கு எனக்கு மார்க் போட்டா மட்டும் போதும்மா. தப்புக்கு போட்ட மார்க்கை வச்சு ஐம்பது வாங்கி என்னாகப்போவுது” என்றாள் நந்திதா
நெகிழ்ந்து போன அவள் அப்பா மகளை வாரிக்கட்டிக் கொண்டு ”அம்முக்குட்டி! நீ நாப்பத்தஞ்சு என்ன… நாற்பது கூட வாங்கிக்கோ! இந்த நேர்மை இருக்கு பாரு… அது உன்னை எங்கியோ கொண்டு போய்டும்” என்றார்.
*
புன்னகையோடு தம் விளையாட்டுத் தோழனை பல்லக்கு போல் சுமந்து சென்றவர்களும், ’காப்பி அடிக்கவிட மாட்டேன்’
என உரத்து நிற்கும் மகிழினியும்… தனக்கு பெரும் சாதனையாக, பாராட்டுக்குரியதாக,
சதமாகக் கிடைத்த முழு மதிப்பெண்ணை, தான் செய்திருந்த தவறை எடுத்துக்காட்டி விட்டுக்கொடுத்து நிமிர்ந்து நிற்கும் நந்திதாவும்… இவர்களில் யாரும் வளர்ந்து, ஆயிரமாயிரம் அனுபவங்கள் பெற்றிருக்கும் பெரியவர்கள் கிடையாது. வெறும் பதின் வயது பிள்ளைகள் மட்டுமே.
சக தோழனைச்
சுமந்து உதவுதலுக்கும், எல்லோரின் எதிர்காலத்திற்காகவும், பகையே வரினும் தம் கொள்கையில் உறுதியைக் கடைபிடித்தலுக்கும்,
தனக்கு உரிமையில்லாதது தனக்கு வரவேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருப்பதற்கும் வயது பெரிதாகத் தேவைப்படவில்லை. வலிமையான மனதும் நல்ல சிந்தனையும் போதும்.
எப்போதும் பதின் வயதுப் பிள்ளைகளைக் குறை சொல்லும் பெரியவர்களிடம், அந்த உறுதியும், நேர்மையும் எந்த அளவிற்கு இருக்கிறதென்பதும் ஆய்வுக்குரிய ஒன்றுதான். மனதில் நெகிழ்வும், உறுதியும் வலிமையும் மிகுந்து நிற்கும் இந்தப் பதின்வயதுப் பிள்ளைகள்,
நாம் கண்டு மகிழ வேண்டிய உதாரணங்கள். சிலபல வேளைகளில் நமக்கு ஆகச்சிறந்த வழிகாட்டிகளும் கூட!
-
நம் தோழி ஆகஸ்ட் இதழில் வெளியான கட்டுரை
-
நம் தோழி ஆகஸ்ட் இதழில் வெளியான கட்டுரை
2 comments:
நல்ல பகிர்வு அண்ணா...
நல்லதோர் ஆய்வு, உற்று கவனித்து தீர்க்கமாய் ஆராய்ந்துள்ளீர்கள்.
சிறுவர்களிடம் பெரியவர்கள் கற்பதற்கு பல விடயங்கள் உள்ளன
Post a Comment