முற்பகல் செய்யின்...

வாழ்க்கை அத்தனை சுயநலம் மிகுந்ததா? தன்னை ஈன்ற பெற்றோரைக் கூட முதுமையில் சோறு போட மறத்து / மறந்து விடும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தனை சுயநலங்களையும் தாண்டி, எங்காவது யாராவது ஒருவர் சகமனிதனுக்கு தன்னலம் ஏதும் பாராமல் உதவ முன்வரும்போது உள்ளபடியே மனசு நெகிழவே செய்கின்றது.

அப்படி உதவ முன்வருவோருக்கு, அவர் போலவே உதவ இயலாத, மனமில்லாத சமூகம் தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்பதுகூட இல்லை. அவர்களின் சேவையை, தியாகத்தைக் மலினப்படுத்தி நோகடிக்காமல் இருந்தாலே போதும். ஒட்டுமொத்தமாய் அவர்களை ”பொழைக்கத் தெரியாதவன்” என முத்திரை குத்தியோ, ”இப்படியெல்லாம் செய்றாங்னா எதாச்சும் காரணம் இருக்கும்” என குறை காணவோ செய்கிறது.


எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும் வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன், ஈரோட்டில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு சலுகை விலையில் உணவளிப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழ்மையாய் இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1 ரூபாய் பெற்றுக்கொண்டு மதிய உணவு அளிப்பதாகவும் சொன்னார். அதன்பின் சில நாட்கள் அந்த மெஸ்ஸிற்கு சாப்பிடச் சென்றேன். அவர்களின் சேவையில் ஒரு நேர்மைத்திறன் இருப்பதை உணர்ந்தேன். மதியம் உணவு வழங்குகையில் சில படங்களை எடுத்துவந்து அதுகுறித்து ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் கட்டுரையை என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதினேன்

 


 

அந்தக் கட்டுரை இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. புதியதலைமுறை இதழ் அதையொட்டி ஒரு கட்டுரை எழுதியது. புதியதலைமுறை தொலைக்காட்சி தனதுபதிவுநிகழ்ச்சியில் மெஸ் உரிமையாளர் திரு. வெங்கட்ராமனை படம் பிடித்து ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

இந்தச் சூழலில் திரு. வெங்கட்ராமன் தனது மகளுக்கு பொறியியில் சேர்க்கை முயன்றுகொண்டிருந்திருக்கின்றார். சுயநிதிக்கல்லூரியில் மிகுந்த செலவு செய்துதான் சேர்க்கை எனும் சூழல். சேர்க்கை தொடர்பாக தமது மகளோடு சென்னை சென்றிருந்த தினத்தில் ராமகிருஷ்ண மடத்திலிருந்து வெங்கட்ராமனுக்கு அழைப்பு வருகின்றது. இவரின் சேவையைப் பாராட்டிய மடத்தினர், யதேச்சையாக இவரின் குடும்பம் குறித்தும் விசாரிக்கின்றனர். குடும்பம் குறித்துப் பேசுகையில் மகளின் பொறியியல் கல்வி தொடர்பாக சென்னை வந்திருப்பதாகச் சொல்கிறார். மடத்தினர் தங்கள் இடத்திற்கு வரச்சொல்கின்றனர். எல்லா விபரங்களையும் முழுவதுமாக விசாரிக்கின்றனர். மடத்தின் சார்பில் SRM பொறியியல் கல்லூரியில் சேர்க்கைக்கு பரிந்துரைக்கின்றனர். இலவச சேர்க்கை அனுமதி கிடைக்கின்றது.முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை சிரமப்பட்டு கட்டுகின்றனர். சிரமங்களை அறிந்த SRM நிர்வாகம் இரண்டாம் ஆண்டிலிருந்து ஆண்டுக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றிற்கும் விலக்கு அளிக்கின்றது.

மாதங்கள் நகர்கின்றன. TIMES NOW தொலைக்காட்சி வெங்கட்ராமன் அவர்களை அடையாளம் கண்டு, செய்தி வெளியிடுகிறது. அத்தோடு 2013 ஜனவரியில் நடந்த Amazing Indians விருது வழங்கும் நிகழ்ச்சியில் 14 பிரிவுகளில் விருதுகள் வழங்குகிறது. அதில் Ordinary Indians, Extraordinary stories எனும் பிரிவில் திரு. வெங்கட்ராமன் அவர்களைத் தேர்ந்தெடுத்து தம்பதிகளாக டெல்லிக்கு அழைத்து விருது கொடுத்து கௌரவித்துள்ளது.  விழாவில் குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள், முன்னால் துணைப்பிரதமர் ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. வெங்கட்ராமன் முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி கையால் விருது பெறுகிறார். விருது பெற்ற மேடையில் தனக்குத் தெரிந்த தாய்மொழி தமிழிலேயே நன்றியுரையும் ஆற்றுகிறார்.

மகளுக்கான கல்லூரி சேர்க்கை கிடைத்தபோதும், TIMES NOW விருது வாங்கிய பிறகும் நேரில் வந்து நெகிழ்ந்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார். ஏதோ சேவை செய்துகொண்டிருந்த தன்னை, ஒரு கட்டுரை பலவகைகளில் வெளிச்சமிட்டதாக நெகிழ்ந்துபோவார். அவரிடம் ஒன்றே ஒன்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றேன், ”20 நிமிடங்கள் செலவு செய்து எழுதும் வெறும் கட்டுரை மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துவிடுமா எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் 20 பேரின் பசியை போக்கிக்கொண்டிருந்த புண்ணியம்தான், பசியாறியவர்களின் வாழ்த்துதான் உங்களை இந்த நிலைமைக்கு உயர்த்தியுள்ளது”.

இன்றும் தினமும் 20 - 40 பேர் வரை மதிய உணவினை 1 ரூபாய்க்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.

தொடர்புகளுக்கு :  
திரு. வெங்கட்ராமன், AMV மெஸ், பவர்ஹவுஸ் ரோடு, நல்லசாமி மருத்துவமனை எதிரில், ஈரோடு-1. செல்: 96290-94020 email: 1rsmeals.amv@gmail.comமுற்பகல் செய்யின், பிற்பகல் விளைவது உண்மைதான்

-
TIMES NOW விருது காணொளி -0-

19 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு கதிர் சார். தன்னலமில்லாத உழைப்பு பலன் தருகிறது. நிஜம் தான்.
நண்பர்கள் இந்த பதிவை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் முடிந்த அளவு இந்த நண்பருக்கு உதவுங்கள்; இன்றேல் ஆறுதலாக, உற்சாகமூட்டும் நான்கு வார்த்தை சொல்லுங்கள். அவருடைய புண்ணியத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு. நன்றி நண்பர்களே.

தொடர்புகளுக்கு :
திரு. வெங்கட்ராமன், AMV மெஸ், பவர்ஹவுஸ் ரோடு, நல்லசாமி மருத்துவமனை எதிரில், ஈரோடு-1. செல்: 96290-94020 email: 1rsmeals.amv@gmail.com

Unknown said...

அருமை

புதியவன் பக்கம் said...

மகிழ்ச்சியை சொற்களால் வெளிப்படுத்த முடியவில்லை கதிர். அந்தக் கட்டுரையை நானும் படித்தேன். ஆனால் இவ்வளவு நிகழ்ந்தது என்று தெரியாது. மனம் நிறைந்த பாராட்டுகள்.

பழமைபேசி said...

அருமைங்க. தங்களுக்கும் மொதலாளி ஆரூரன் அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

manjoorraja said...

கதிர், வெங்கட்ராமனின் தன்னலமற்ற சேவையை உலகுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவருக்கு பெருமை சேர்த்த உங்களுக்கும் நிச்சயம் அதன் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இருவருக்கும் வாழ்த்துகள்

manjoorraja said...

அறிமுகப் படுத்திய ஆரூரனுக்கும் வாழ்த்துகள்.

ஓலை said...

கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துகள் வெங்கட்ராமன்.
மேயரே! பத்த வைச்சிட்டீங்க !

vasu balaji said...

great service. thanks for sharing

Unknown said...

எத்தனை கரவொலிகளை சத்தமில்லாமல் சாதிக்கின்றதிந்த பேனா!

Unknown said...

திரு வெங்கட்ராமன் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் !
கதிர் அண்ணா படிக்கும்போதே ஏதோ ஒரு இனம்புரியா நெருடலுடன் என் மனது , இருந்தும் இனிமையாய் ,,,,,,,,,,!

Unknown said...

அருமை சார்..........முயன்று பார்த்தால் தெரியும்.......என்பதற்கு இதுவும் சான்றுதானே.........)))

Prapavi said...

”20 நிமிடங்கள் செலவு செய்து எழுதும் வெறும் கட்டுரை மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துவிடுமா எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் 20 பேரின் பசியை போக்கிக்கொண்டிருந்த புண்ணியம்தான், பசியாறியவர்களின் வாழ்த்துதான் உங்களை இந்த நிலைமைக்கு உயர்த்தியுள்ளது”\\

அடுத்தவரின் சேவையை பற்றி ஒரு வார்த்தை பேசவே யோசிக்கும் வேளையில், சேவையை அறிந்து, அதன் விவரம் அறிந்து, தெளிவாய் எழுதி, நல்ல செய்தியை பரப்பியதும், ஒரு நல்ல சேவைதான் கதிர்! பாராட்டுக்கள் இருவருக்கும், உங்களின் இருவரின் சேவையும் தொடரட்டும்!

Prapavi said...

”20 நிமிடங்கள் செலவு செய்து எழுதும் வெறும் கட்டுரை மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துவிடுமா எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் 20 பேரின் பசியை போக்கிக்கொண்டிருந்த புண்ணியம்தான், பசியாறியவர்களின் வாழ்த்துதான் உங்களை இந்த நிலைமைக்கு உயர்த்தியுள்ளது”\\

அடுத்தவரின் சேவையை பற்றி ஒரு வார்த்தை பேசவே யோசிக்கும் வேளையில், சேவையை அறிந்து, அதன் விவரம் அறிந்து, தெளிவாய் எழுதி, நல்ல செய்தியை பரப்பியதும், ஒரு நல்ல சேவைதான் கதிர்! பாராட்டுக்கள் இருவருக்கும், உங்களின் இருவரின் சேவையும் தொடரட்டும்!

vimal said...

திரு வெங்கட்ராமன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இவரது சேவையை வெளிக்கொணர்ந்த கதிர் , ஆரூரன் அவர்களும் பாராட்ட பட வேண்டியவர்களே

Venkat said...

மிக்க நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - வெங்கட்ராமன் தனனலமற்ற சேவை செய்து வருகிறார். பாராட்டுக்குரியவர் - பாராட்டுகள் பெற்றவர் - தகவலினைப் பகிர்வோம் - இயன்ற வரை ஊக்கப்படுத்துவோம் - உதவுவோம் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி.

லோகன் said...

அவரின் சேவை தொடர வாழ்த்துக்கள்

Kumararaja said...

தெளிவாய் எழுதி, நல்ல செய்தியை பரப்பியதும், ஒரு நல்ல சேவைதான் சார்!
பாராட்டுக்கள் இருவருக்கும்,
உங்களின் இருவரின் சேவையும் தொடரட்டும்!