நீதி போதனை


நம் கனிணியின் இணைய உலாவிக்கு (browser) மேலே நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளத்தின் பெயருக்குப் பக்கத்தில் ஒரு x தெரியும். அதை அமுக்கினால் அதுவரை நாம் சஞ்சரித்துக்கொண்டிருத உலகத்திலிருந்து வெகு எளிதாக விடுபட்டுப்போவீர்கள். அதன்பிறகு நீங்களாக www.அதன்பெயர்.com கொடுக்காமல், ஒருபோதும் அதுவாக வந்து உங்கள் வீட்டுக் கதவை தட்டாது. 

ஆனாலும், இந்த சமூக வலை தள உலகத்தில்தான், மனதில் இருக்கும் பாரத்தை எழுத்தில் கரைக்கும் வாய்ப்பும், நம்மைச்சுற்றி சுற்றி நடக்கும் நல்ல விசயங்களை அடையாளப்படுத்தும் முயற்சியும், உங்களைச் சுற்றி நடக்கும் அவலங்களைச் சுட்டும் வாய்ப்பும் எளிதில், மிகமிக எளிதில் கிடைக்கின்றது.

ஊடகங்களுடன் மிக எளிதான தொடர்பு, ஆட்சியாளர்களுடன் கருத்து பரிமாறும் வாய்ப்பு, நம்மைப்போல் புழங்கும் மக்களுக்கான தகவல் தெரிவிப்பு எனும் சன்னல்களும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன.

அதி அற்புதமான நட்புகள், திறமைகளுக்கு அங்கீகாரம், திறன்களை கடைபரப்பும் வெளிகள் என பலப்பல வாய்ப்புகள் எளிதில் கிடைக்கின்றன. அதே சமயம் நம்மையறியாமல் நமக்கு புகட்டப்படும் விஷமாக ஏமாற்றும் தகிடுதத்தங்களும், பணப் பறிப்புகளும், பாலியல் சீண்டல்களும் இருக்கத்தான் செய்கின்றன...

பிடித்தவற்றை கொண்டாடுகிறோம், பிடிக்காதவற்றை மௌனமாகவோ, கள்ள மௌனமாகவோ கடந்துபோகிறோம்..... நமக்குப் பிடிக்காத துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை ஒவ்வொருமுறையும் கடந்து போனவர்கள்தானே நாம்?. செத்த எலியின் வீச்சத்தை மூக்கு பொத்திக் கொண்டு போனவர்கள்தானே நாம்? அதுபோலவே, நானும் ஒவ்வாத விசயங்களை, பிடிக்காத விசயங்களை சமூக வலை தளத்தில் காணும்போது மெல்ல ஒதுங்கிக் கடந்து போய்விடுகிறேன். ஏனெனில், சமூகத்தை என்னை நேரிடையாகப் பாதிக்கும் அவலங்களை, என்னை மூச்சை அடைக்க வைக்கும் சாக்கடைகளைக் கண்டு ஒருபோதும் உணர்ச்சி வயப்பட்டுப் பொங்கியதில்லை, அதை சுத்தம் செய்திடவும் முனைந்ததில்லை, அப்படியில்லாத நான் அப்புறம் இங்கே மட்டும் நான் வாள்/வால் ஆட்ட இருக்கும் முகாந்திரம், இது எளிது என்பதுதானோ!

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் 90 வயதில் இரவு நேரத்தில் இறந்து போனார். இரவு ஒரு மணிக்கு தகனம் செய்யும்போது கட்டையில் உடலை அடுக்கிச் சிதைக்கு தீமூட்டும் முன், உடலில் இருக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்றியப்போது காது இரண்டிலும் தலா இரண்டு கடுக்கன் போட்டிருந்தது தெரிந்தது. சுமார் 60-70 வருசம் அணிந்திருப்பார் என்று பேசிக்கொண்டார்கள். அதை அகற்ற சடங்குகள் செய்த அந்தத் தொழிலாளி முயன்று தோற்றுப்போக, உறவினர்கள் சிலர் சேர்ந்து, நள்ளிரவு 1 மணிக்கு பிணம் என பயங்கொள்ளும் உடலில் கைவைத்து, காதுகளை அலசி, பலத்த முயற்சிக்குப் பின் கழட்டிக்கொண்டுதான் சிதைக்கு தீ மூட்டினார்கள்.

இணையத்தில் ஆங்காங்கே சிலரால் கட்டிக் காக்கப்படும் ஃபேக் ஐடி, ஜோக் ஐடிகள்... உருவாக்கியவரின் வாழ்நாளுக்குப் பின்பு கூடவே வந்து சிதையிலா எரிந்துவிடப்போகிறது.



இதனால் அறியப்படும் நீதியாதெனில்....

ஏற்கனவே நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், சிலாகிப்புகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான சம்பளமாக பெரும் நேரத்தைப் பிடுங்கி தின்று செரித்துவிட்டு, சிரித்துக்கொண்டே போகிறது இணைய சமூகவலை தளங்கள். அதற்குத் தீனிபோடவே முடியாத நேரத்தில் ஃபேக் ஐடி, ஜோக் ஐடி என உருவாக்குவோரின், உழைப்புக்கு அயர்ச்சியாய் ஆச்சரியப்படத்தான் முடிகிறது தவிர, அதுகுறித்து பெரிதாக புலம்பி, கோபப்பட்டு இரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ள உடலிலும், மனதிலும் தெம்பில்லை...

ஆணிய்யே புடுங்க வேணாம் என்பதின் எளிய வழியாக இப்போதைக்கு logout :)))

-0-

7 comments:

muth7 said...

எண்ணைச் சட்டியிலிருந்து தப்பி எரியும் நெருப்பில் குதிக்க முடியாதில்லையா அப்படி

MARI The Great said...

நல்ல கருத்து கூறிய விதமும் அருமை!

நிகழ்காலத்தில்... said...

சில சமயங்களில் மொத்தமாக விலகிவிடலாமோ எனக்கூடத் தோன்றும் :)

உங்களை போன்ற சிலரின் நட்புகளை எண்ணி சமாதானம் அடைந்துகொள்வது உண்டு :)

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இவை எல்லாம் தவிர்க்க இயலாத சங்கடங்கள் - நமக்குத் தெரியாமலேயே முக நூலில் என்ன என்னவோ நமது தளத்தில் பிரசுரிக்கப் படுகிறது. நமக்குத் தொடர்பில்லாத புகைப் படங்கள் நமது தளத்தில் பிர்சுரிக்கப் படுகின்றன. ம்ம்ம்ம்ம் - சிந்தனை ந்னறு - க்ண்டும் காணாதது போல் சென்று விட வேண்டியதுதான். நட்புடன் சீனா

மதுமிதா said...

///பிடித்தவற்றை கொண்டாடுகிறோம், பிடிக்காதவற்றை மௌனமாகவோ, கள்ள மௌனமாகவோ கடந்துபோகிறோம்.....///

///இதனால் அறியப்படும் நீதியாதெனில்....
ஏற்கனவே நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், சிலாகிப்புகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான சம்பளமாக பெரும் நேரத்தைப் பிடுங்கி தின்று செரித்துவிட்டு, சிரித்துக்கொண்டே போகிறது இணைய சமூகவலை தளங்கள். அதற்குத் தீனிபோடவே முடியாத நேரத்தில் ஃபேக் ஐடி, ஜோக் ஐடி என உருவாக்குவோரின், உழைப்புக்கு அயர்ச்சியாய் ஆச்சரியப்படத்தான் முடிகிறது தவிர, அதுகுறித்து பெரிதாக புலம்பி, கோபப்பட்டு இரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ள உடலிலும், மனதிலும் தெம்பில்லை...
ஆணிய்யே புடுங்க வேணாம் என்பதின் எளிய வழியாக இப்போதைக்கு logout :))) -0-///

ஹிஹிஹி நல்ல போதனை கதிரானந்தா....
நானும் லாக் அவுட்:)

arul said...

true

அன்புடன் அருணா said...

/அதற்குத் தீனிபோடவே முடியாத நேரத்தில் ஃபேக் ஐடி, ஜோக் ஐடி என உருவாக்குவோரின், உழைப்புக்கு அயர்ச்சியாய் ஆச்சரியப்படத்தான் முடிகிறது/
ரொம்ப சரி!!!