இந்த வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம். ஒவ்வொருவருக்கும்
தம்முடைய மரணம் மிகுந்த மிரட்சியூட்டுவதாய்த் தோற்றமளிக்கிறது. அதேசமயம் தம் உற்றாரின்
மரணம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கை மீது மிகப்பெரிய அவநம்பிக்கையூட்டுவதாய்
அமைந்து விடுகிறது. வாழ்க்கையின் அத்தனை வெற்றிகளையும், கெக்கலிப்புகளையும் சிதறடித்து,
நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிட உடனிருப்பவரைக் கொய்துபோகும் ஒற்றை மரணத்தால் முடிகின்றது.
எவருக்குத் தெரியாது, இந்த வாழ்வின் நிறைவுப் புள்ளி சாவு என்பது? ஆனால் எவருக்குத்தான்
அது பிடித்ததாய், விரும்புவதாய் அமைந்துவிடுகிறது.
மரம்போல் இருக்கும் குடும்பத்தின் வேர்களாய் இருப்பவை உறவுகள்.
ஆணிவேரைத் தொலைத்து சல்லிவேர்களில் ஊசலாடும் மரமாகவோ, சல்லிவேரினைத் தொலைத்து ஆணிவேரின்
பிடிப்பில் காலம் நகர்த்தும் மரமாகவோ நாமோ அல்லது நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் காலத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
ஒரு விபத்து, ஒரு கவனக்குறைவு, ஒரு பேராசை, ஒரு துரோகம்,
ஒரு சதி, இரத்த நாளத்தில் உருவாகும் ஒரு சிறு அடைப்பு, ஒரு தவறு, ஒரு மெத்தனம், ஒரு
தோல்வி, ஒரு அவநம்பிக்கை, ஒரு அறியாமை, கூடுதலாய் அமையும் ஒரு மிடறு மது என இவற்றில்
ஏதாவது ஒரேயொரு ‘ஒரு’ போதுமானாதாய் இருக்கின்றது, ஆசையாய்க் கட்டிக்கொண்டிருக்கும்
கனவின் மேல் அமிலத்தை வார்த்துவிட்டுப் போக.
அமிலத்தின் காயங்களை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றிவிட முனைவதை
அதை அனுபவித்து வருபவர்களுக்கு காலம் புரியவைத்து விடுகிறது. ஆனால் அது ஏற்படுத்திவிட்டுப்
போயிருக்கும் தழும்புதான் எப்போதும் ஜீவிக்கும் பிரச்சனை. எதேச்சையாய் விரல்கள் ஊர்ந்துபோகும்
போதோ, தன் பார்வையே வருடிப்போகும்போதோ நிரடும் தழும்புகளுக்கு குறிப்பிடும் படியான
நிறமும், வடிவமும் உண்டு. அதனுள் நீங்காமல், நிறமற்று வடிவமற்று, மறைந்திருக்கும் சூன்யமான
வலிக்கு நிகராய் எதையும் உருவகப்படுத்திட முடியாது.
ஒரு குடும்பத்தின் கனவு ஊஞ்சல்களின் சங்கிலியாய் இருக்கும்
ஒருவனோ, ஒரு குடும்பத்தின் குலதெய்வமாய் பாவிக்கப்படும் ஒருத்தியோ, இந்த நொடி முதல்
இல்லாமல் போகின்றார்கள் என்பதை உணரும் தருணம் எத்தனை கொடியது என்பதை அனுபவித்துக் கடந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்.
இவ்வாறாக தங்கள்மேல் ஏவிவிடப்பட்ட ஒன்றை, அதே போன்று சுமக்கும்
எத்தனையோ பேருடன், விதவிதமாய் ஒப்பீடுகளுக்குள் உட்படுத்தி சமாதானப்படுத்திக்கொள்ள
முயன்றாலும், திமிறிக்கொண்டு வெளியே வந்து தனித்து நின்று, சீழ் வைத்த புண்ணில் துளிர்க்கும்
வலிபோல் மீண்டும் மீண்டும் வதைத்துக் கொண்டேயிருப்பது அதன் தனியியல்பு.
அம்மா, அப்பா, சகோதரி, சகோதரன், மனைவி, கணவன், மகள், மகன்,
, பேரன், பேத்தி, உற்ற தோழமை என எவர் ஒருவரை இழந்தாலும், இழப்பவர்களுக்குள் ”எங்களுக்கு
மட்டும் ஏன் இப்படி!”யெனும் கேள்விகள் தொடர்ந்து முளை விட்டுக்கொண்டேயிருக்கும். அவர்களுக்கும்
நிதர்சனம் புரியும். அவை பதிலில்லாக் கேள்விகள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும்
தங்களின் மிச்சமிருக்கும் நாட்களைக் கடத்த, அவர்களிடமிருக்கும் ஒரு தற்காலிக வலி நீக்கியாய்
அந்தக் கேள்விகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதில்லை!
10 comments:
....ம்ம்ம்ம்....
மிக அழகான வார்த்தைகளில் ....ஆணிவேரை தொலைத்து சல்லி வேர்களில் நாம் வாழ்கின்றோம். இது உண்மை....இன்றைய தனி குடிதனத்தின் உண்மை நிலவரம் இது.
தற்காலிக வலி நீக்கி = நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிட உடனிருப்பவரைக் கொய்துபோகும் ஒற்றை மரணத்தால் முடிகின்றது. எவருக்குத் தெரியாது, இந்த வாழ்வின் நிறைவுப் புள்ளி சாவு என்பது? = கசியும் மௌனம் = Erode Kathir - அருமையான, அவசியமான பதிவு. தவிர்க்க நினைக்கும் கசப்பான உண்மை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Erode Kathir.
விட்டதடி ஆசை விளாம் பழத்தோட்டோடன்னு பெரியவங்க
ஓரு சொலவடை விடுத்து போயிருக்காங்க கதிர் கவியே
தாமரை இலை நீராய் வாழ கற்றுக்கொள்வோமே
ஆரா
ஒரு குடும்பத்தின் கனவு ஊஞ்சல்களின் சங்கிலியாய் இருக்கும் ஒருவனோ,
ஒரு குடும்பத்தின் குலதெய்வமாய் பாவிக்கப்படும் ஒருத்தியோ,
இந்த நொடி முதல்
இல்லாமல் போகின்றார்கள்
என்பதை உணரும் தருணம்
எத்தனை கொடியது என்பதை
அனுபவித்துக் கடந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்.
எத்துணை முதிர்ந்த கருத்து !
வலிநீக்கி எனச்சொன்னாலும் ,
நீங்காத வலித் தடும்புக்கோர் களிம்பு !
அருமையான கருத்து ! எண்ணமும்கூட ! ஈரோட்டாரே !
தழும்புகளுக்கு குறிப்பிடும் படியான நிறமும், வடிவமும் உண்டு. அதனுள் நீங்காமல், நிறமற்று வடிவமற்று, மறைந்திருக்கும் சூன்யமான வலிக்கு நிகராய் எதையும் உருவகப்படுத்திட முடியாது.
உணர்ந்து எழுதிய
உயிரோட்டமான எழுத்துகள்..
அருமை
"இந்த நொடி முதல் இல்லாமல் போகின்றார்கள் என்பதை உணரும் தருணம் எத்தனை கொடியது என்பதை அனுபவித்துக் கடந்தவர்களுக்கு மட்டுமே புரியும்".
சத்தியம் நண்பரே. நான் அந்த வலியை முழுமையாக அனுபவித்துக்கொண்டிருப்பவன். வேறு வழியில்லை, சாகும் வரை இந்தக் கஷ்டத்தை அனுபவித்தே தீர வேண்டும்....
ந.பொன்னுசாமி,திண்டல்,ஈரோடு
மரண பயம்!
எனக்கு மட்டும் ஏன் இப்படிஉடைந்தழுவது மட்டுமே அவர்களுக்கு அப்போதைய வலி நீக்கியாக இருக்கிறது...
Post a Comment