வேட்டி கட்டுறது ஒரு குத்தமாய்யா!?



சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அரைமணி நேர நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய காரணங்களால் வேட்டி கட்டிக்கொண்டு போகலாமே எனத்தோன்றியது. வேட்டி மிகப் பிடித்தமான ஒரு உடையும் கூட. முக்கியமான விசயம் பைக்கில் செல்லும்போது அது பறக்காமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பேண்ட் பாக்கெட்டுகளில் வசதியாய் வைத்துக்கொள்ளும் பர்ஸ், கர்சீப், சாவிகள் ஆகியவற்றைச் சமாளிப்பதற்கு மிகுந்த மெனக்கெடல் வேண்டியிருக்கின்றது. வேட்டியில் சில சௌகரியங்கள் உள்ளது போன்றே அசௌகரியங்களுக்கும் பஞ்சமில்லை என்றாலும் பிடித்த உடைதான். காரணம் வேட்டி தரும் சுதந்திரத்தின் சுகம் அலாதியானது. அதுவும் மடித்துக்கட்டிக்கொள்ளும் தருணங்கள் இனிதினும் இனிதானது.

வழக்கமாய் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டை அணிபவர்களைத் தவிர்த்து, நான் மட்டுமே வெள்ளை வேட்டி, கலர் சட்டையென இருக்க, மீதி அனைவரும் வழக்கம்போல் பேண்ட் சட்டையில் வந்திருந்தனர். கலந்துகொண்டவர்களில் பெரும்பாலும் தெரிந்த நண்பர்களாய் இருந்தனர். அங்குதான் வந்தது சோதனை. சந்தித்தவர்களில் பலரும்ஏன் வேட்டி…!? ஏன் வேட்டி!?” என கேள்விகளால் துளைத்தெடுக்கத் தொடங்கினர்.

ஏன் வேட்டி!?” எனக் கேட்டதோடு, அவர்களாகவே இதுதானே பாரம்பரிய உடை, தமிழனின் உடை என பதிலும் சொல்லிக் கொண்டார்கள். கருணையாளர்கள் ஏனோஉள்ளே கோவணம்தானே!?’ எனக் கேட்கவில்லை. நண்பன் ஒருவன் மொக்கையாகஉட்கார்ற இடத்தில கட்டியா?’ எனக்கேட்டு அவனாகவே சத்தமாக சிரித்துக் கொண்டான். அந்த மொக்கை ஜோக்குக்கு எனக்கு சிரிப்பு வரவில்லை. நான் சிரிக்கவில்லை என்பதையுணர்ந்து இன்னும் சத்தமாக சிரிக்க முற்பட்டது கொஞ்சம் கோமாளித்தனமாக இருந்தது. இன்னொருவர்நானெல்லாம் எழவூட்டுக்கு மட்டுந்தான் வேட்டி கட்றதுஎனச் சொல்லி அதன்மூலம் ஏதோ ஒரு பெருமையை நிலைநாட்டிட முற்பட்டார். நான் இங்கே சொன்னதெல்லாம் குறைவென்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட கேள்விகளால் தாக்கப்பட்டுக்கொண்டே இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.

இதே போன்று கேள்விகளால் தாக்கப்பட்ட ஒரு காலம் நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை மொட்டை அடித்துக்கொள்ள விருப்பமாய் இருந்தது. மொட்டை அடிக்க கோவிலுக்குத்தான் போகவேண்டுமா என்ற சோம்பேறித்தனத்தில் ஒரு சலூனில் மொட்டை அடித்துக்கொண்டேன். அடுத்த நாளிலிருந்து கேள்விக்கணைகள் தாக்கத் தொடங்கின். ”எந்தக் கோயிலுக்கு மொட்டை!?” என்ற கேள்விகளை தொடர்ந்து அம்புகளாய் வாங்கிக் கொண்டேயிருந்தேன். கோவில் மொட்டை இல்லையென்று சொன்னதற்காகவே ஓரிரு வார்த்தைகளில் வரும் ஒற்றைக்கேள்விக்கு ஒரு பத்தியளவுக்கு பதில் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.

சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை மீசையை மழித்துக் கொண்டபோதும் இதேபோல் கேள்விகள் தாக்கத் தொடங்கின. ’ஏன் மீசையை எடுத்துட்டீங்க?’ என்ற கேள்விக்கு சும்மாதான் எனும் பதில் ஒருபோதும் அவர்களுக்கு திருப்தியைத் தருவதேயில்லை. பொய்யாகவேணும் சுவாரசியமான காரணத்தை வெகுவாக எதிர்பார்க்கிறார்கள். கேள்வியின் உச்சபட்சமாக சும்மாதான் எனச் சொல்லும்போது ஒருவர்வீட்ல துக்க காரியமோனு பயந்துட்டேங்கஎனச் சொல்லிவேறு பீதியைக் கிளப்பினார்.

சில மாதங்களுக்கு முன் தாத்தா இறந்தபோது, அவருக்கான காரியங்கள் செய்ததற்காக மீசை மழிக்கப்பட்டது. அப்படியான சூழலில் சந்தித்த ஒருவர் வெகு இயல்பாகக் கேட்டார்ஃபேஷனுக்காக மீசையை எடுத்துட்டீங்ளா!?”

சொப்ணசுந்தரி குறித்து செந்தில் கேட்ட கேள்விக்கு கவுண்டமணி பதைபதைத்தளவுக்கான கேள்விகளால் மனிதர்கள் தாக்குவதில்லை என்றாலும்கூட, இம்மாதியான கேள்விகளுக்கு மழுப்பி மழுப்பி பதில் சொல்லியே அலுத்துப் போய்விடுறது பல நேரங்களில்.



என்னுடைய கேள்வியெல்லாம், மனிதர்களுக்கு இப்படி கேள்வி கேட்பதின் மேல் என்ன இத்தனை பிரியம். ஏன் இத்தனை வெறியாக சந்திப்பவரை கேள்வியால் எதிர்கொள்கிறார்கள். எதைக்கண்டாலும், எதைக் கேட்டாலும், எதை உணர்ந்தாலும் ஏன்ஏன்என்ற கேள்வியை வீசிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இப்படி கேள்விகேட்பதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் போல் தெரியும் இவர்கள்ஏன் எதற்கு எப்படிஎன்று கேள்வியே கேட்காமல் தலையை ஆட்டுவதும், கடந்துபோவதும் எனப் பட்டியல் போட்டால் அது ஆயிரமாயிரம் என நீளும். வேட்டி கட்டியதற்கு, மொட்டை அடித்ததற்கு, மீசை மழித்தற்கு, தாடி விட்டதற்கு என கேள்விகளால் அம்பெய்தவர்களில் சிலரும், அவர்களுடனே இருக்கும் பலரும்தான், லட்ச ரூபாய் கொடுத்தால் இரண்டு ஈமுக்கோழி தருவோம், மாதாமாதம் பனிரெண்டாயிரம் பணம் தருவோம், மூன்று வருடங்கள் கழித்து பணத்தையும் திருப்பித் தருவோம் எனச் சொன்னபோது மருந்திற்குக்கூட கேள்வியே கேட்காமல் ஓடிப்போய் பணத்தைக் கட்டினார்கள். அவர்களின் மூச்சில் கூட கேள்வியின் வாசம் வராமல் பார்த்துக்கொண்டார்கள்.

எனக்குள்ளும் இப்படியான அவசிமற்ற. அவசியமான, மொக்கையான, அபத்தமான, ஆபத்தான, தேவையான என விதவிதமாய் பற்பல கேள்விகள் உதிப்பதுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. பெரும்பாலான கேள்விகள் அப்படியே உள்ளுக்குள் சுருண்டு போவதுமுண்டு. சட்டென அப்படியான கேள்விகளை வீசாமல் இருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன் என்றும்கூடச் சொல்லலாம்.

ஒருவகையில் சிந்தித்துப் பார்க்கும்போது, ஏதேனும் நிகழ்ச்சிகளில் பெரிதாக தேவை, அவசியமற்று ஒருவரையொருவர் சந்திக்கும்போது இப்படியான ஒரு கேள்விகள்தான் பேச்சைத் துவக்க மிகமிக எளிதான திறவுகோளாக அமைந்துவிடுகின்றன. அந்தக் கேள்விகளின் அவசியத்தன்மை குறித்தெல்லாம் யாரும் கிஞ்சித்தும் யோசிப்பதேயில்லை. யோசிக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியான கேள்விகள் இல்லாவிட்டால் எதிலிருந்து ஆரம்பிப்பார்கள்.

முன்பெல்லாம் கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் பவானி, ஈரோடு என நகரங்களுக்கு ஒருவர் வரும்போது, அதேபோல் கிராமத்திலிருந்து வந்து எதேச்சையாய் அவரைச் சந்திக்கும் மற்றொருவர் வழக்கமாகக் கேட்பதுஎன்னது பவானி வந்தீங்ளா? ஈரோடு வந்தீங்களா?’ என்பதுதான். தியேட்டரில் இடைவேளைகளில் முட்டைப் போண்டா வாங்கும் இடத்தில் தெரிந்தவரைப் பார்த்தால், ”அடசினிமாவுக்கு வந்தீங்ளா!!!!?” எனக் கேள்வி கேட்டுப் பழகிய சமூகம்தானே நாம்.

-


10 comments:

Rathnavel Natarajan said...

ஒருவகையில் சிந்தித்துப் பார்க்கும்போது, ஏதேனும் நிகழ்ச்சிகளில் பெரிதாக தேவை, அவசியமற்று ஒருவரையொருவர் சந்திக்கும்போது இப்படியான ஒரு கேள்விகள்தான் பேச்சைத் துவக்க மிகமிக எளிதான திறவுகோளாக அமைந்துவிடுகின்றன. அந்தக் கேள்விகளின் அவசியத்தன்மை குறித்தெல்லாம் யாரும் கிஞ்சித்தும் யோசிப்பதேயில்லை. யோசிக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியான கேள்விகள் இல்லாவிட்டால் எதிலிருந்து ஆரம்பிப்பார்கள். = அருமையான பதிவு. அற்புதமான எழுத்தாற்றல். வாழ்த்துகள் திரு
Erode Kathir = எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

shanmuga vadivu said...

//எனக்குள்ளும் இப்படியான அவசிமற்ற. அவசியமான, மொக்கையான, அபத்தமான, ஆபத்தான,தேவையான என விதவிதமாய் பற்பல கேள்விகள் உதிப்பதுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.பெரும்பாலான கேள்விகள் அப்படியே உள்ளுக்குள் சுருண்டு போவதுமுண்டு. சட்டென அப்படியானகேள்விகளை வீசாமல் இருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன் என்றும்கூடச் சொல்லலாம்//
ம்ம்.. உண்மை கதிர்... என்ன.. அப்படி இருக்கையில் சில நேரம் 'ரொம்ப கர்வம் போல' என்ற விமர்சனங்களை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது...

தாராபுரத்தான் said...

அந்த ஈ....மு விவகாரத்தை நாங்கேள மறந்திட்டோம்...நீங்க விடமாட்டீங்க போல..

நிகழ்காலத்தில்... said...

//ஒருவகையில் சிந்தித்துப் பார்க்கும்போது, ஏதேனும் நிகழ்ச்சிகளில் பெரிதாக தேவை, அவசியமற்று ஒருவரையொருவர் சந்திக்கும்போது இப்படியான ஒரு கேள்விகள்தான் பேச்சைத் துவக்க மிகமிக எளிதான திறவுகோளாக அமைந்துவிடுகின்றன.//

இதுதான் 100 சதவீத காரணம். விருப்பம் இல்லாவிட்டாலும் இப்படிபட்ட உரையாடலுடந்தான் பேச்சை இயல்பாக்கி தொடரமுடிகிறது

Tamil Nadu Agricultural said...

நன்று...

பெருசு said...

நீங்க யாரையுமு எந்த கேள்வியும் கேக்கறது இல்லியாக்கு!

பாதி பேரு உங்க மேல இருக்கற அக்கறைலே கேக்கறாங்க

மீதி பேரு எதையாவது கேட்டு வெப்போமே,இல்லாட்டி கதிரு
தப்பா நெனச்சிக்குவாருன்னு , அவுங்க நெனச்சிட்டு
கேட்டிருப்பாங்க.

என்னங்க, நான் கேக்கருது சரிதானுங்ளா.

Sakthivel Erode said...

அருமையான பதிவு.எனது பக்கத்தில் பகிர்கிறேன்.வாழ்த்துகள் கதிர் சார்!!

சேக்காளி said...

//ஏன் இத்தனை வெறியாக சந்திப்பவரை கேள்வியால் எதிர்கொள்கிறார்கள். எதைக்கண்டாலும், எதைக் கேட்டாலும், எதை உணர்ந்தாலும் ஏன்… ஏன்… என்ற கேள்வியை வீசிக்கொண்டேயிருக்கிறார்கள்//
இப்பல்லாம் இந்திய ஆட்சி பணியினருக்காக(இஆப)நடக்குற தேர்வுல நம்ம மாநிலத்துலேர்ந்து நெறய பேரு தேர்ந்தெடுக்கப்படுறாங்களே அதுக்கு என்ன காரணமுன்னு ஒரே யோசனையா இருந்துச்சு. இப்ப தெரிஞ்சு போச்சு.

மெக்னேஷ் திருமுருகன் said...

கிட்டத்தட்ட கேள்விகள பத்தி ph.d பன்ற அளவுக்கு இருக்குங்ணா உங்க கட்டுரை!!!

’ஏன் மீசையை எடுத்துட்டீங்க?’னு ஒருத்தர் கேட்கறார்.

'ஏன் மீசைய வச்சிருக்கிங்க'னு இன்னொருத்தர் கேட்கரார்.

இவங்களுக்கு எங்க இருந்து இந்த மாதிரியான கேள்விகள்ளாம் கண்டுபிடிக்கிறாங்க?னு எனக்கே ஒரு கேள்வி கேட்க தோனுது!!!

Durga Karthik. said...

உலகத்திலேயே பதில் சொல்ல முடியாத கேள்வி தூங்கிட்டு இருக்கீங்களா தான். அதையும் எழுப்பி மக்கள் கேட்டுற போறாங்க .