கடிதம் எழுதுங்க பாஸ்


ஐந்து ஆண்டுகள் இருக்கும் தேவகி அக்கா எனக்கு நட்பாகி. நீண்ட வருடங்களாக அமெரிக்காவில் வசித்துவரும் குடும்பம். என்னுடைய கசியும் மௌனம் வலைப்பக்கங்களின் வாசகியாய் முதலின் மின்மடலின் வாயிலாக அறிமுகமானார். கிட்டத்தட்ட எல்லாப் பதிவுகளுக்குமே மின் உரையாடலிலோ அல்லது மடல் வாயிலாகவோ தன் கருத்துகளைத் தெரிவித்துவிடுவார். இவர் மூலமாகத்தான் டாக்டர். செந்தில் சேரன் எனக்கு நட்பானார். குழந்தைகளை கடிதம் எழுத வைப்பதற்காக செந்திலும் நானும் ஒரு இணையப் பக்கத்தை வடிவமைத்தோம். சிலகாரணங்களால் அதைத் தொடர இயலவில்லை ஆனாலும் அதைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனும் பெருங்கனவு எனக்குண்டு.

தேவகி அக்காவிற்கு இரண்டு பிள்ளைகள். அதில் இளையவருக்கு 14 வயதாகின்றது. அவருக்கும் எனக்கும் ஏகப்பட்ட பொருத்தங்கள். முதல் பொருத்தம் அவன் பெயரும்கதிர்’. அடுத்த பொருத்தம் இனிசியலும் P. மூன்றாவது மிக முக்கியப் பொருத்தம் இருவரின் பிறந்தநாளும் அக்டோபர் - 7.

மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு அவர்கள் இந்தியா வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. கடந்த ஆண்டு கதிர் இந்தியா வந்திருந்தபோது சென்னையில் சில நிமிடங்கள் பார்த்துப் பேசினேன். பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க அமெரிக்கா என்றாலும் தொடர்ந்து என்னோடு தமிழில் உரையாடல் நிகழ்த்துபவன்.

அங்கிருந்து சென்னையில் இருக்கும் குரு மூலம் பாடல் கற்றுக்கொண்டவன். கடந்த ஆண்டு பாடல் அரங்கேற்றம் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

இப்படிப்பட்ட அருமை பெருமைகள் கொண்ட கதிர் சில நாட்களுக்கு முன்பு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருந்தான். அமெரிக்காவில் தமிழ் கற்றுவருவதில் வீட்டுப்பாடமாக கடிதம் எழுத பணித்திருக்கிறார்கள். அதன் காரணமாய் எனக்கு மின் மடலில் ஒரு அழகிய கடிதம் அனுப்பியிருந்தான்




//  அன்புள்ள கதிர் மாமா,


நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாட்டி கண் சிகிச்சை செய்வதற்கு சென்னைக்கு வந்தார்கள் என்று செந்தில் அண்ணா கூறினார். அவர் எப்படி இருக்கிறார்.


இந்த ஆண்டு, கேரி, வடக்கு கரோலினாவில் அதிகமான பனி பெய்தது. முதல் முறை,  சனவரியில்  3-4 அங்குலம் பனி பெய்தது. இதனால் எங்கள் பள்ளிக்கூடத்தை மூன்று நாட்கள் மூடினார்கள்இதன் பிறகு, பிப்ரவரியில் 6-7 அங்குலம் பனி பெய்தது. இது மட்டும் அல்லாமல் அடுத்த நாள் இன்னொரு அங்குலம் பனிக்கட்டி பெய்ததுஇதற்காக ஒரு வாரமே பள்ளியிலிருந்து விடுமுறை மறுபடியும் கிடைத்தது! இதன் பிறகு மார்ச்சில் சிறிய அளவில் பனிக்கட்டி பெய்ததுஅதன் அளவு 1/2 அங்குலத்திற்கு குறைவே. இதற்கும் ஒரு நாள் பள்ளி விடுமுறை கிடைத்தது. இந்த செவ்வாய் இன்னொரு முறை பனி பெய்யப் போகிறது என்று நம்பபடுகிறது. இந்த குளிரும் பனியும் எங்களுக்கு மிகவும் வெறுப்பை ஏற்றியது.இதனால் எங்கள் மாநில விவசாயமும் பாதிக்கப்படும்.ஆனால் இதற்குப் பிறகுவரும் கோடையில் ஊருக்கு வந்து குளிர் இல்லாமல் இருக்கலாம்.


இந்தப் பனியால் எங்கள் விடுமுறை நாட்கள் குறைந்தன. இது மட்டும் இல்லாமல். பள்ளிக்கூடம், ஜூன் பத்து முடிந்துவிடும். ஆனால் பனியால் ஜூன் 13-தான் முடியும். நான் இறுதி நாள் பள்ளிக்கு போக முடியாது. காரணம் நானும் அம்மாவும் 13-ஆம் தேதி சென்னைக்கு கிளம்புகிறோம். உங்களையும் மற்ற உறவினர்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். மேலும் என் அக்கா, சிந்துவின் திருமணம் ஜுன் 30 நடக்கப் போகிறது. திருமணத்தில் நான் மாமாவிற்கு மோதிரம் போடப் போகிறேன். மேலும் என் கச்சேரி திருமணத்தில் நட்க்கப் போகிறது.


திருமணத்தில் கலந்துகொள்வதால் பெரும்பான்மையான உறவினர்களைப் பார்க்கலாம். மாமாவின் உறனிர்களையும் சந்திக்கலாம்.


உங்கள் ஊர் எப்படி இருக்கிறது? நிறைய மழை பெய்ததா இல்லை மழையே பெய்யவில்லையா? விசாயம் நன்றாக இருக்கிறதா? அல்லது மழை இல்லாமல் மோசமாக இருக்கிறதா? எந்த விதமான பயிர்களை நீங்கள் விவசாயம் செய்கிறீர்கள்? உங்கள் ஊரில் வெயில் அதிகமாக இருக்கிறதாநாங்கள் வரும்பொழுது மிகவும் வெயிலாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஊரில் ஏதாவது முக்கியமான நிகழ்வுகள் நடந்ததா?


அன்புடன்

கதிர் பச்சமுத்து

//

எல்லாம் அவசரமாகிவிட்ட சூழலில், இந்தக் கடிதம் தரும் இதமும் கிளறிவிடும் நினைவுகளும் அலாதியானது. என்ன பதில் கடிதம் எழுத எனக்கு சில நாட்கள் பிடித்துவிட்டது. பதில்க்கடிதம் எழுதிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க தொடங்கிட்டேன். இனி நாங்கள் இருவரும் கடிதம் வாயிலாக தொடர்ந்து தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கலாம். ஒரு கால் நூற்றாண்டு இடைவெளி இருக்கும் எங்களுக்குள் காலம் சுருங்கலாம். இருவரும் பரஸ்பரம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். இன்னும் கூடுதலாய் நேசிக்கலாம்.

இதனால் சொல்ல வருவது என்னவென்றால்… ”கடிதம் எழுதுங்க பாஸ்காலம் இனிக்கும்!”

நன்றி கதிர்!

-


5 comments:

தினேஷ் பழனிசாமி said...

இனி நானும் கதிர் மாமாவுக்கு கடிதம் எழுதறேன்.. :)

பழமைபேசி said...

பங்களிப்புச் செய்யும் ’கதிர்’களுக்கு வாழ்த்துகள்!!

vasu balaji said...

சூப்பர்

ராமலக்ஷ்மி said...

கடிதம் அருமை. பின்னாளில் சிறந்த எழுத்தாளனாக வருவது நான்காவது பொருத்தமாக அமையும். சிறுவன் கதிருக்கு வாழ்த்துகள்:)!

Unknown said...

nyc...