மலையாளக் கரையோரம் - 3

அவ்வப்போது பார்த்த சில மலையாள மொழிப்படங்கள் குறித்த சில வரிப் பதிவுகள். முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை தவிர்த்து, அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.




English - மலையாளம்

வித்தியாசமான சூழல், பின்னணியில் லண்டனில் வாழும் நாலு மலையாளிகளின் கதை.

தன் கட்டுக்குள் இல்லாத ’லண்டன்’ மகள், நோய் வாய்ப்பட்ட தாய், உதவமுடியாத அளவுக்கு பிசியாகவே இருக்கும் தம்பி என உழலும், ஒரு சிறிய சூப்பர் மார்கெட் நடத்தும் நடுத்தர வயது முகேஷ் தவிர்க்கவியலாமல் எதிர்கொள்ளும் தருணங்கள்

தாய் மண்ணுக்கு திரும்பிடவேண்டும் எனும் ஆசையில் வாழும் நடுத்தரவயது மனைவி நதியா மற்றும் அவரின் ’டாக்டர்’ கணவருக்கு இடையே தோன்றிய இடைவெளி உருவாக்கும் மாற்றங்கள்...

குடியுரிமை அனுமதியின்றி, ஊரிலிருக்கும் காதலியின் நினைவுகளோடு ஒரு சிறிய உணவகத்தில் வேலை செய்யும் கதகளி கலைஞன் ஜெயசூர்யா சந்திக்கும் ஏமாற்றங்கள்...

தன்னை நம்பி தன்னிடம் பழகும் நண்பனின் மனைவியை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கும், வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த ப்ளேபாய் நிவினின் நகர்வுகள்...

அடுத்தடுத்த காட்சிகளில் வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும், இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே எதிர்பாராத கோணத்தில் இறுதியில் ஒரு கோட்டில் சந்திக்கிறார்கள்.

ஒரு அப்பாவாகவும், மகனாகவும் தவிக்கும் 50 வயதை நெருங்கும் முகேஷின் அபாரமான நடிப்பு ஒவ்வொரு மகனுக்கும், ஒவ்வொரு அப்பாவிற்கும் தன்னை பல இடங்களில் பொருத்திப் பார்க்க வைக்கும்.
ஆமென் - மலையாளம்

சர்ச்சில் மணி அடிக்கக்கூட தகுதியற்றவன் எனப் புறந்தள்ளப்படும் தன்னம்பிக்கையற்ற க்ளாரினெட் கலைஞனான சாலமன் (ஃப்ஹத் ஃபாசில்) எப்படி தன்னை நிரூபிக்கிறான் என்ற எளிய கதையே இந்த ’ஆமென்’. எந்த திடீர் திருப்பங்களோ, இதுவரை கண்டுணராத களமோ இல்லை...

ஏழை இசைக் கலைஞனுக்கும், அந்த ஊரின் பணக்காரரின் மகளுக்கும் இடையேயான காதல், இரவுகளில் அவளுக்கான க்ளாரினெட் வாசிப்பு, அவர்களின் சந்திப்பு, ஊரை விட்டு ஓட முயலும் தருணம், கதாநாயகி உட்பட எல்லோரிடமும் அடிவாங்கும் நாயகன் என எல்லாமுமே ஏற்கனவே கண்டதுதான்....

ஆனாலும்....
இந்தப் படத்தை இன்னும் சிலமுறை பார்ப்பேன். காரணம் அந்த பேண்ட் வாத்திய களம், அவர்களுக்கிடையே நிலவும் போட்டி, குமரன்கிரி என்கிற அந்த அழகிய ஊர், அந்த சர்ச், அவ்வப்போது வருடும் அந்த க்ளாரினெட் இசை.

ஒரு பாத்திரமாக வாழ்ந்துவிட சிலரால் மட்டுமே சாத்தியப்படுகிறது, அதில் ஃபஹத் ஃபாசிலுக்கு சிறப்பானதொரு இடமுண்டு என்பதை பயபுள்ளை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது.

குமரன்கிரி சர்சுக்கு இளம் ஃபாதராக வரும் வட்டொளி(இந்திரஜித்), அழகியதொரு நட்பு பேணும் ஃப்ரெஞ்ச் பெண், நாயகி ’சுப்ரமணியபுரம்’ சுவாதி, ஏற்கனவே ஃபாதராக இருக்கும் ஆப்ரஹாம் (ஜாய் மேத்யூ), ஜீ வர்கீஸ் பேண்ட் வாத்தியக் குழுவை நடத்தும் கலாபவன் மணி என எல்லாருமே நிறைவான பாத்திரங்கள். திலகன் இறந்துபோகாமல் இருந்திருந்தால் கலாபவன் மணி பாத்திரத்தில் அவர்தான் நடித்திருப்பார் என்பதை அறிகையில் பெரும் வெறுமை சூழ்கிறது.

எதிரி பேண்ட் குழுவினர் வீசும் கண்ணாடிப் பாட்டில் தன் நெற்றியில் மோதவேண்டும் என் எகிறிக் குதிக்கும் அந்த கள்ளுக்கடைப் பெண்மணி, ஜிகினா தாளில் சுற்றப்பட்ட அந்த மலம் படுத்தும் பாடு, 2 அடி அகல மரப்பாலத்திலிருந்து காதல் சுவாரசியத்தில் சுவாதியால் தண்ணீரில் தள்ளிவிடப்படும் கப்பியர், சாலமணின் தந்தை ஆவியுடன் வரும் இரு குறும்புக்கார தேவதைகள் உட்பட படத்தில் ரசிக்க ஏராளமான காட்சிகள். அந்தப் பசுமை, கிராமம், தண்ணீர், படகு அப்படியே மனம் முழுதும் அழகாய் அப்பிக்கிடக்கிறது.

சற்றே பொறுமையிருந்தால்போதும் ரசித்து ரசித்துப் பார்க்கலாம்!
 

ஆர்டிஸ்ட் - மலையாளம்

ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் ஓவியக் கலையில் ஆர்வமும் தாகமும் கொண்ட மைக்கேலும் (ஃபஹத் ஃபாசில்), காயத்ரியும் (அன் அகஸ்டின்) சந்திக்கிறார்கள். பிரியத்தின் பிடிக்குள் சிக்குண்ட இருவரும் கல்லூரிப் படிப்பைக் கை விட்டு ஒன்றாய் இணைந்து வாழத் (லிவிங் டுகெதர்) தீர்மானிக்கிறார்கள். காயத்திரி பெற்றோரை விட்டுவிட்டு மைக்கேலுடன் குடிபுகுகிறாள்.

ஓவியத்தில் பெருமோகம் கொண்டிருக்கும் மைக்கேலும், அன்றாடங்களுக்கு சம்பாதிக்க வேட்கை கொண்டிருக்கும் காயத்திரிக்கும் இடையே வாழ்க்கையின் படிநிலைகளில் கோபங்களும், சண்டைகளும், பிரியங்களும் காத்திருக்கின்றன.

ஒரு கட்டத்தில் மைக்கேல் விபத்தொன்றில் சிக்கி பார்வைத் திறனை இழக்கிறான். மருத்துவத்திற்கு செய்த செலவு, அன்றாடங்களுக்கான செலவு என தகுதிக்கும் குறைவான வேலைக்குச் செல்கிறாள். பார்வையை இழந்த மைக்கேலுக்கு வரைய வேண்டுமென்ற வேட்கை எழுகிறது. அதுவரை கண்ணால் பார்த்தவனுக்கு, மனதால் பார்க்கும், அளக்கும், காரியம் செய்வது போன்றவை கை வருகிறது. ஓவியம் வரையத் துவங்குகிறான். அவனுக்கு பழகும் வகையில் வர்ணங்களை அடுக்கித் தருகிறாள்.

கூடவே ஒரு படைப்பாளியின் கர்வமும், இயலாமையின் கோபமும், தனிமையின் நெரிசலும் அவனைக் கோபத்தின் உச்சத்தில் இருப்பவனாகவே எப்போதும் வைத்திருக்கின்றது.

வர்ணங்களை வாங்க காசுக்குச் சிரமப்படும் நிலையில், காயத்திரியின் மேல் ஆர்வம்(!) கொண்ட நண்பனின் ஆலோசனைப்படி பார்வையற்றவனுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறதென்று அவன் வீட்டில் இருக்கும் கல்லூரிக் காலத்தில் மிஞ்சிக் கிடந்த வர்ணங்களைக் கொண்டு வந்து அடுக்குகின்றாள். அதன்பின் அவன் பயன்படுத்தும் வர்ணங்கள் அனைத்துமே ’நீல நிறத்தில்’ இருப்பவை.

மற்ற வர்ணங்களோடு ஒன்று, இரண்டு என நீலம் கலந்து, 24 ஓவியங்கள் கொண்ட ஒரு ஓவியத்தை இரவும் பகலுமாய் வரையத் துவங்குகிறான். மனதால் அளந்து, மனது கொண்டு பல்வேறு வர்ணங்களைப் பயன்படுத்துவதாக நினைத்து நீலத்தை மட்டுமே கொண்டு ஓவியங்களை நிறைவு செய்கிறான். அதோடு அத கண்காட்சி வைக்கவும் முயற்சியெடுக்கிறான். காயத்ரி தயங்குகிறாள்.

எதிர்பாராத விதமாய் அவை கொண்டாட்டத்துக்குரிய ஓவியங்களாகப் பார்க்கப்படுகின்றது. மைக்கேலை ஊடங்களுக்கு அறிமுகப்படுத்தும் கணத்தில் அவனுக்குத் தெரிகிறது, அவன் மனதால் உருவகித்து வரைந்த அனைத்து வர்ணங்களும் வெறும் நீலம் மட்டுமே என்பது. ஒரு படைப்பாளியாக நொறுங்கிப் போகிறான். காயத்ரியை முற்றிலுமாய் புறந்தள்ளுகிறான்.

நிருபர்களின் கேள்விக் கணைகளில், ஏன் நீல நிறத்தை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு மட்டும் பதிலளிக்கிறான் “அது வஞ்சனையின் நிறம்” என.

லிவிங் டுகெதர் வாழ்க்கையெனினும் அதுவரையிலும் அத்தனை சிரமத்திலும் அவளை அவனோடு நடத்தி வந்தது ஒரு நிபந்தனையற்ற அன்பு மட்டுமே. ஆனாலும் ”என்ட பெயிண்டிங், என்ட செக்” என அவள் வெளியேற்றப்படும் போது அவளோடு சேர்ந்து நாமும் வெளியேறவே செய்கிறோம்.

காதலும், கம்பீரமும், கோபமும், அழுகையுமென இந்த மாதிரியான பாத்திரங்களைச் செய்வது ஃபஹத் ஃபாசிலுக்கு கை வந்த கலை. மனிதன் மீண்டும் ஒரு முறை பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான்.

அந்த பெரிய கண்களும், உதடுகளும் அன்அகஸ்டினின் அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி அற்புதமாய் நடிக்கின்றன. சில காட்சிகளில் ஃபஹத் ஃபாசிலை மிஞ்சவும் செய்கிறார்.

அழகாய் ரசிக்கலாம், அதோடு சற்றே உணரலாம் இந்த வாழ்க்கைப் பயணத்தில் மைக்கேலுக்குள்ளும், காயத்திரிக்குள்ளும் இருக்கும் நம்மையும்!
 
 

No comments: