தூப்புக்காரி - வாசிப்பனுபவம்



முன் விமர்சனச் சுருக்கம்

மலர்வதி அவர்களை, அந்த இளம் படைப்பாளருக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்ட பிறகு வந்த செய்திகள் மூலமே அறிந்துகொண்டேன். அப்போதே அந்த ”தூப்புக்காரி” புதினத்தைப் படித்துவிட வேண்டும் என நினைத்தேன். புதினத்தை வாசிக்காவிட்டாலும், அவர் குறித்த செய்திகள், பேட்டிகள், குறிப்புகள் என இணையத்தில் தொடர்ந்து தொடர்ந்து வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலார்களுக்கு நடந்த பயிற்சி அரங்கில் இரண்டு முறை பேசும் வாய்ப்புக் கிட்டியபோதும்கூட, அவர்களுக்கான இலக்கியம் என்ற கோணத்தில் தூப்புக்காரி குறித்து வாசித்த தகவல்களின் அடிப்படையில் புதினத்தின் பின்புலம், மலர்வதி, அவர் பெற்ற விருது என்ற ரீதியிலேயே உரையாற்றினேன்.

இந்த ஆண்டு ஈரோடு புத்தகத்திருவிழாவில் மலர்வதி அவர்களை அழைத்து, பாராட்டுகையில் அவரின் ஏற்புரையக் கேட்டபொழுதே, நான் சாந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைக்க வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அதன்படி 04.10.2013 வியாழக்கிழமை கூட்டத்தில் ”படைப்பிலக்கியமும் மனித மேம்பாடும்” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். 

கூட்டத்தில் அவரையும், தூப்புக்காரி புதினத்தையும் அறிமுகப்படுத்தும் பணி என்னிடம் விடப்பட்டது. இந்த முறை தூப்புக்காரி புதினத்தை வாசிக்காமல் மேடை ஏறிவிடக்கூடாது என்பதற்காக உடனடியா புத்தகத்தை வாங்கி இன்று வாசிக்கத் துவங்கினேன். சுணங்கிக் கிடந்த வாசிப்பு ஆர்வம் சில பக்கங்களை கடந்தபோது தலை சிலுப்பிக்கொண்டது. வாசிப்பு தூர்ந்துபோயிருந்த நான், இதை ஒரே மூச்சில், அதுவும் கனிணி முன் அமர்ந்து கொண்டே, அழைப்புகளுக்கும், வேலைகளுக்கும் அதிகம் செவிமடுக்காது, ஒரே மூச்சில் படித்து முடித்தை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது.


தூப்புக்காரி – மலர்வதி



பெருமாள் முருகனின் சிறுகதைத் தொகுப்பான ”பீக்கதைகள்” வாசிக்கையில் மட்டுமே மலத்தின் நாற்றத்தை எழுத்தில் அத்தனை அருகாமையில் உணர்ந்ததுண்டு. இத்தனை நேரிடையாகப் படைக்க முடியுமா என அப்போது அதிர்ந்ததுமுண்டு.

இந்த தூப்புக்காரியில் துப்புரவுத் தொழில் செய்பரைச் சுற்றி மிதந்தும், குழைந்தும், காய்ந்தும் கிடக்கும் மலம், சளி, மாதவிடாய் இரத்தம், மருத்துவமனை இரத்தம் என அத்தனையையும் இத்தனை அருகில் கண்டதில் மிரண்டு போனேன். எழுத்தாய் வாசிக்கும்போதே இத்தனை அதிர்கிறதென்றால், அதில் தினந்தோறும் உழன்று, நனைந்து, மூழ்கி வாழும் சமூகம் குறித்துச் சிந்திக்கையில் ’பரியெடு’ மனதைக் குமையச் செய்கிறது.

வீதியிலும், கழிவறையிலும், சாக்கடையிலும் மிதக்கும், கிடக்கும் மனித கழிவுகளை அழகு, வனப்பு, செவப்பு என நாம் கொண்டாடும் உடல்தான் உற்பத்தி செய்கிறது என்பது ஏற்கனவே அறிந்தது என்றாலும் இந்த தூப்புக்காரி செவிட்டில் அறைந்து சொல்லித் தருகிறது.

கனகம் என்ற தூப்புக்காரி, அவள் மகள் பூவரசி, பூவரசியின் காதலன் மனோ, பூவரசியை விரும்பும் மாரி எனும் இந்த சாதரணப் பாத்திரங்கள், அசாதாரணக் களத்தில் அசாதாரண அடர்த்தியோடு, இதுவரை உணர்ந்திடா அதிர்வோடு மனதில் தொடர்ந்து இம்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள்

கனகம் தூப்புக்காரியான சூழலும், பூவரசியை தூப்புக்காரியாக்கும் சூழலும், மாரி அழுக்கன் ஆன கதையும், நாம் தினந்தோறும் காணும், வீதிகளில் தள்ளுவண்டியில் குப்பை சேகரிப்போருக்கும், வீட்டில் வந்து அடைப்பெடுப்போருக்கும், நீலநிற உடையில் வீதி கூட்டுவோருக்கும், பந்தியில் இலை எடுப்போருக்கும் சொந்தமானதுதான்.

சாக்கடை கடக்கையில், நவீன(!) பொதுக் கழிப்பிடத்தில், திரையரங்கு கழிவறையில், குப்பைத் தொட்டி கடக்கையில் என அவசரமாய் மூக்கைப் பொத்தும் நாம், குறைந்த பட்சம் இந்தக் கதையை ஒருமுறையேனும் வாசிக்க வேண்டும்.

மாரியின் கால்களில் பூவரசி விழும் தருணத்தில், பதறும் மாரியிடம், ”இந்த ஒலகத்த சுத்தப்படுத்துற நீ அழுக்காகிப் போறியே… சாக்கடையில் எறங்கி எறங்கி நாத்தம் பிடிச்சி போறியே ஒன் காலுல யாரெங்கிலும் விழுந்து உன் பாதத்த தொட்டாங்களா?” எனச் சொல்கையில் வாசிப்பவரும் மாரியின் காலில் மானசீகமாய் விழ வைப்பதே மலர்வதியின் வெற்றி என நினைக்கிறேன்.

அணிந்துரையில் எழுத்தாளர் பொன்னீலன் சொல்லியிருப்பது போல், கதை ஒரு பகுதியோடு நிறைவுற்று, மிச்சம் இருப்பவை திருப்புமுனைகள் நிறைந்த கதையின் கவர்ச்சிப் பகுதிகளாய் இருந்தாலும் அதிலிருக்கும் பாடம் அவ்வளவு எளிதானதல்ல.

இந்த “தூப்புக்காரி” அந்த சமூகத்தின் அறியப்படாத ஆவணம் என்ற பாங்கில் எடுத்துக்கொண்டாலும், வாசிப்பவர்களின் மனதிலிருக்கும் கசடுகளையும் கழுவிட்ட துடைப்பான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

நிச்சயம் வாசித்தே ஆக வேண்டிய ஒரு புதினம் ”தூப்புக்காரி” என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

-

தூப்புக்காரி | மலர்வதி | அனல் வெளியீடு | விலை ரூ.95

-

5 comments:

Rathnavel Natarajan said...

அருமையான மதிப்பீடு. படிக்கும் போது நாமும் சாக்கடையில் இருப்பது போல் நம் மீது மருத்துவ மனை, சாக்கடை நெடி இருப்பது போல் உணர்வோம். இது அந்த எழுத்தாளர் மலர்வதியின் வெற்றி. புத்தகம் வெளியானவுடன் வாங்கிப் படித்தேன். உங்கள் பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு Erode Kathir. நீங்கள் அவரை உங்கள் சங்கத்தில் அழைத்து கௌரவிப்பது மகிழ்ச்சியான செயல்.

ezhil said...

மக்கள் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை நிதர்சனமாகக் காட்டிய கதை... அவருக்குள் ஒரு அருமையான கவிதாயிணி... அவரை உங்கள் சங்கத்தில் கௌரவிப்பது மிகவும் மகிழ்வு

'பரிவை' சே.குமார் said...

அழகான மதிப்பீடு அண்ணா...
அருமை.

Umesh Srinivasan said...

இம்முறை விடுமுறையில் செல்கையில் நிச்சயம் இந்த நூலை வாங்குவேன், பாதுகாப்பேன். நன்றி.

எம்.ரிஷான் ஷெரீப் said...

மூத்த வலைப்பதிவர் ரத்னவேல் நடராஜன் ஐயா எனக்கு இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார்.

மிகவும் அருமையான நாவல். அவர் அனுப்பியிருக்காவிடில், இலங்கையிலிருக்கும் எனக்கு இந் நாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்காது. அவருக்கு மிகுந்த நன்றிகள்.

நாம் வாழ்ந்துவரும் சமூகத்தில் பலராலும் கவனிக்கப்படாத, கவனிக்கப்பட்டாலும் அதிகம் புறக்கணிக்கப்படும் ஒரு உலகை நம் கண் முன்னே நினைவுபடுத்தியிருக்கிறார் எழுத்தாளர். அவர் தொடர்ந்து எழுத வேண்டும்.

அவரை முன்னிலைப்படுத்தியதற்கும் இப் பதிவிற்கும் நன்றி.