தண்ணி காட்டும் தண்ணீர்

நகர்புறங்களில் தண்ணீர் (இது குடிநீர் அல்ல என்று எழுதிக்கொண்ட) லாரிகள் தீயாய் பறப்பதை ஒரு வித பயத்தோடு பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

சொந்தமாக ஒன்று, இரண்டு, மூன்று என நிலத்தை பணத்தால் துளைத்து சக்தி மிகுந்த இயந்திரத்தால் நீரை இறைத்துக்கொள்ளும் வசதி படைத்த மனிதர்களுக்கு கோடைகால வறட்சி ஒன்றும் பெரிதாக சுட்டு விடப் போவதில்லை. அப்படியே ஆழ்துளைக் குழாய் அமைதி காத்தாலும் இருக்கவே இருக்கின்றது, விவசாயத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு தண்ணீர் விற்கும் சில நவீன வியாபாரிகளின் கிணறுகளில் நூறுகளுக்கு வாங்கி, வரும் வழியில் அதை ஆயிரமாக்கி, வீடு தேடி வந்து ஆழமான, அகலமான தொட்டியில் நிரப்பிவிட்டுப் போகும் தண்ணீர் லாரிகள்.

வழக்கம் போல் கோடை காலம் தன்னோடு உறிஞ்சிக் கொண்டு போவது சாமானியர்களுக்கான கங்கையான பொதுவில் போடப்பட்டிருக்கும் குழாய் தண்ணீரையும், அருகில் இருக்கும் ”அமுத்துப் பைப்” தண்ணீரையும் மட்டுமே.

சில வாரங்களுக்கு முன், மீன் கொத்திகள் விளையாடிய ஏரிகளின் மையத்தில் காக்கைகளும், கழுகுகளும் அடிவண்டல் சேற்றில் அழுகிக்கொண்டிருக்கும் மீன்களை கொத்தியெடுக்க முகாமிட்டிருக்கின்றன.

கிராமங்களின் உள்ளடக்கிய தோட்டத்து கிணறுகளை நோக்கி நடுத்தர வயதினரின் இரட்டைக்குட நடை பயணமும், எங்கோ தெரியும் கானல் நீரை நோக்கி நீண்ட கேரியரில் பக்கத்திற்கு இரண்டென நான்கு குடங்களோடு சைக்கிள் பயணமும் துவங்கிவிட்டது.

ஆனால் தொண்டையில் மாட்டிய முள்ளாக தவிப்பது நகர்புறத்தின் நெரிசலில் மாட்டிய லைன் வீடு மற்றும் சாக்கடையோரம் கொசுக்களோடு மல்லாடும் மிகச் சாதரணமான குடும்பத்தினர்தான்.

பணத்தை ஊதாரியாய் செலவு செய்வதை தண்ணியாய் செலவழிக்கிறான் என்பது வழக்கம். ஆனால் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்ய முடியாத யுகத்தில் பெருமை மிகு வாழ்வு வாழ்கிறோம்.

வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் வீணாக்குவது அவர்களுக்கு சொந்தமானதை மட்டுமல்ல. வசதியும் வாய்ப்பும் கிட்டாத மிகச் சாதாரணமாய் இருக்கும் மனிதர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதைத்தான் தட்டிப் பறித்து வீணடிக்கப்படுகிறது.

இலவசமாய் இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை காசு இருப்பவன் கையகப்படுத்தும் போது, காசு இல்லாதவன் தனக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமைக்கே அந்நியப்பட்டுப் போகிறான். காசு கொண்டு கையகப்படுத்தியவன் தண்ணியாய் செலவழிக்கிறான், அது தண்ணியாகவே இருந்தாலும்...

சரி... இந்த ஓலமும், புலம்பலும் எதற்காக என்ற கேள்வி வருகிறதா?

இதற்கு நானும் நீங்களும் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி வருகிறதா?

மரம் நடுவது, மழைநீர் சேகரிப்பது இன்ன பிற விசயங்களையெல்லாம் இந்தக் கோடையைத் தாண்டி செய்வோம்.......

அதற்கு முன் உடனடியாக நானும் நீங்களும் செய்ய வேண்டியது. நம் வீட்டில் இருக்கும் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்யாமல், கொஞ்சம் சிக்கனம் கடை பிடிப்போம்...

இன்று நம்மிடம் இருக்கிறதே என்று அலட்சியமாக கொட்டி வீணடிக்கும் தண்ணீருக்காக, எங்கோ ஒரு மனிதன் வறண்ட தொண்டையோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை வரட்டும்.
அலட்சியமாய் கவிழ்த்து விடும் நீர், ஒரு செடியின் வறட்சியையோ, ஒரு கால்நடையின் பசியை தீர்ப்பதாய் அமையும் என்பதை உணர்வோம்.

  • கை கழுவ, பல்துலக்கும் பிரஷ்சை கழுவ என அருவியாய் திறந்து விடுவதை
  • நீரில் முகத்தில் நனைத்து விட்டு, சோப்பு போட்டு வரக்கு வரக்கென தேய்த்து முடிக்கும் வரை திறந்து விடுவதை
  • ஷவரில் குளிக்கிறேன் பேர்வழியென மனசாட்சியில்லாமல் பல குடம் தண்ணீரை வீணடிப்பதை
  • வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை
  • மேல்நிலைத்தொட்டி வழிந்தோடினாலும் கண்டு கொள்ளாத அலட்சியத்தை

குறைந்த பட்சம் இந்த கோடை கழியும் வரையிலாவது நிறுத்துவோம். முடிந்தால் முற்றிலும் வேரறுப்போம். முடிந்தால்... என்ன முடிந்தால்?. முடியும்.


________________________________________________

36 comments:

*இயற்கை ராஜி* said...

நிச்சயமாய் கடைபிடிப்பேன்

vasu balaji said...

முடியும் என்ன முடியும். முடியணும். நாளைக்கு 100ரூக்கு கெணத்து தண்ணி வாங்கி பொழைக்கிறதா இருக்கு:((

நசரேயன் said...

நான் இப்ப சரக்கே குடிக்கிறதில்லை .. நான் தண்ணியை சொன்னேன்

பழமைபேசி said...

நல்ல சிந்தனைக்கான ஒன்னு இது.... தண்ணீர் மட்டுமல்ல, எந்தவொரு கச்சாப் பொருளையும் செல்வழிக்கும் போது எளிமை போற்ற வேண்டும்.

காரணம், தண்ணீர்ச் செலவு என்பது எதற்கும் அடிப்படையான ஒன்று.

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள் கதிர்.

இப்போது இருந்து தண்ணீரை சேமிக்கவில்லை என்றால் வருங்கால சந்ததியனர் மிகவும் கஷ்டப் படுவர்.

நிகழ்காலத்தில்... said...

\\வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை\\

இதை வீண் என சொல்ல முடியாது, ஒருவேளை மனிதனுக்கு இல்லாதது மரம்,செடி,கொடிகளுக்கு கிடையாது என வேண்டுமானால் சொல்லலாம் மாப்பு,

மனிதன் தன் முயற்சியால் எங்காவது சென்றாவது தன் தண்ணீர் தேவையை தீர்த்துக்கொள்வான்,

ஆனால் மரம் மற்றும் உணவுவகைத்தாவரங்கள் செடி கொடி.. ஆதரிக்கலாமே..

சீமான்கனி said...

//இலவசமாய் இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை காசு இருப்பவன் கையகப்படுத்தும் போது, காசு இல்லாதவன் தனக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமைக்கே அந்நியப்பட்டுப் போகிறான்.///

உன்மைதான் அண்ணே...எங்களை போல வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கு அருமை நன்றாக தெரியும்...நல்ல பகிர்வுக்கு நன்றி...அண்ணே...

ஈரோடு கதிர் said...

நிகழ்காலத்தில்... said...
\\வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை\\

இதை வீண் என சொல்ல முடியாது, ஒருவேளை மனிதனுக்கு இல்லாதது மரம்,செடி,கொடிகளுக்கு கிடையாது என வேண்டுமானால் சொல்லலாம் மாப்பு,//

பக்கெட் மூலம் ஊற்றுவதை விட குழாய் மூலம் பாய்ச்சுவது அதிக தண்ணீரை வீணாக்கும் எனும் எண்ணத்தின் வெளிப்பாடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முடிந்தால்... என்ன முடிந்தால்?. முடியும்.//


முடியணும்

Jerry Eshananda said...

சமூக அக்கறையுள்ள பதிவு கதிர்.நல்லதொரு களப்பதிவும் கூட.

க ரா said...

நல்ல கருத்துக்கள். நிச்சயமாய் கடைபிடிக்கிறேன்.

Kumky said...

அய்யோ போங்கண்ணா...ஷவர் ஓப்பனர்ல கை வைக்கும்போதெல்லாம் உங்க முகம்தான் வந்து மெரட்டுது.

இப்பலாம் பக்கெட்டும் மக்குமா உலாத்தரமாக்கும்.

ராமலக்ஷ்மி said...

அவசியமான இடுகை.

Santhosh said...

நல்ல சிந்தனைகள் கதிர், நிச்சயமாக கடைபிடிக்க முயல்வோம்...

//வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை//

இதுக்கு வேற வழியில்லையே, தோட்டம் என்று இருந்தால் அதை பராமரிக்க தானே வேணும்..

ரோகிணிசிவா said...

Agreed,

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இன்னும் நிறைய சேர்த்துக் கொள்ளலாம் கதிர்..

* சும்மா இரண்டு துணிகளுக்காக வாஷிங் மெசினை பயன்படுத்தாமல், போதிய அளவு துணிகள் சேர்ந்தவுடன் துவைக்கலாம்.

* முகம் கழுவுவது, குளிப்பது அனைத்திற்குமே தண்ணிரை சேர்த்துவைத்து செலவு செய்வது..

* அடிக்கடி வண்டியைக் கழுவுகிறேன் என்று தண்ணிரை வீணடிக்காமல் இருப்பது.

* வீட்டில், தெருவில் பழுதடைந்திருக்கும் குழாய்களை சரி செய்தல்..

நல்ல பதிவு.. தொடருங்கள்..

MJV said...

கண்டிப்பாக இன்றைய சூழலுக்கு தேவையான பதிவு கதிர். கண்டிப்பாய் முடியும், நடத்திக் காட்டலாம். சிறு எறும்பூற பெருமலையும் சிறு கல்லாகும்.

காமராஜ் said...

கொஞ்சம் என்னை நானே குட்டிக்கொள்ள இங்கே மூன்று நான்கு சுட்டிகள் இருக்கின்றன.எங்கிருந்தும் போதி மர நிழல் நம்மேல் படலாம். கதிரின் வலை பல நேரம் போதிமரம்.இந்த நிமிஷத்திலிருந்து நான் ரெடி. நன்றி கதிர்.

Unknown said...

நல்ல பதிவு..

அனைவரும் பின்பற்ற வேண்டிய யோசனைகள்

க.பாலாசி said...

//இலவசமாய் இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை காசு இருப்பவன் கையகப்படுத்தும் போது, காசு இல்லாதவன் தனக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமைக்கே அந்நியப்பட்டுப் போகிறான்//

உண்மைதான் எனது 3 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையில் தண்ணீரின் மகத்துவம் உணர்ந்த தருணங்கள் பலப்பல....

தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்களை கடைபிடிப்பதுதான் நல்லது...

நாமக்கல் சிபி said...

அருமையான பதிவு!

கலகலப்ரியா said...

அருமையா சொல்லி இருக்கீங்க கதிர்...பார்ப்போம்..

(நேத்து பின்னூட்டமிட மறந்து விட்டேன்.. ஹிஹி...)

VELU.G said...

//அதற்கு முன் உடனடியாக நானும் நீங்களும் செய்ய வேண்டியது. நம் வீட்டில் இருக்கும் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்யாமல், கொஞ்சம் சிக்கனம் கடை பிடிப்போம்.
//

கண்டிப்பாக செய்வோம்

நிலாமதி said...

உங்களை போன்ற சமூக விழிப்புனர்வாளர்கள்...நாடுக்கு தேவை. பதிவுக்கு நன்றி.

ரோஸ்விக் said...

கைகோர்க்கிறேன்.

தாராபுரத்தான் said...

முந்தா நேத்து எங்க வீட்டிலே தண்ணீர் டேங்க் நிரம்பி வழிகிறது .உங்களை நினைத்து கொண்டே போட்டேன் பாரு ஒரு சத்தம். இனி எபபவும் எங்க வீட்டில் டேங்க் வழியாது .

'பரிவை' சே.குமார் said...

//•கை கழுவ, பல்துலக்கும் பிரஷ்சை கழுவ என அருவியாய் திறந்து விடுவதை
•நீரில் முகத்தில் நனைத்து விட்டு, சோப்பு போட்டு வரக்கு வரக்கென தேய்த்து முடிக்கும் வரை திறந்து விடுவதை
•ஷவரில் குளிக்கிறேன் பேர்வழியென மனசாட்சியில்லாமல் பல குடம் தண்ணீரை வீணடிப்பதை
•வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை
•மேல்நிலைத்தொட்டி வழிந்தோடினாலும் கண்டு கொள்ளாத அலட்சியத்தை//

சரியாகச் சொன்னீர்கள் கதிர்.

நல்லதொரு களப்பதிவு..!

நாடோடி இலக்கியன் said...

மூன்றாவது உலக்ப்போர் இடுகையை படித்த பிறகு முடிந்த வரை பிளாஸ்டிக் பைகளை அவாய்ட் பண்ணுகிறேன்.

இப்போ என்னை ரொம்பவே சிந்திக்க வைத்த அடுத்த பதிவு உங்களிமிருந்து.

ராமலக்ஷ்மி said...

தண்ணீர் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து வருகிறார் வின்செண்ட் அவர்கள் தனது மண்,மரம்,மழை,மனிதன் வலைப்பூவின் ஒரு பதிவிலே. சுட்டி: http://maravalam.blogspot.com/2010/03/blog-post_1543.html

உங்கள் பதிவையும் அங்கே இணைத்திடலாமா?

பனித்துளி சங்கர் said...

மிகவும் அவசியமான ஒரு தகவலை மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள் .

Thamira said...

தங்களிடமிருந்து இன்னுமொரு தரமான பதிவு.

பித்தனின் வாக்கு said...

நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். இனி கவனமாக இருக்கின்றேன்.

கதிர் இப்படி எல்லாம் சொன்னா நம்ம ஆளுக திருந்த மாட்டானுங்க. ஒரு பழைய பழமொழி சொல்வாங்க. நம்ம இப்ப அதைக்கிளப்பி விட்டு பயமுறுத்தினா கேப்பாங்க.

" தண்ணிய அதிகமாய் செலவு செய்பவனிடம் பணம் தங்காது" . என்று கிளப்பி விட்டுருலாம். ஒகே.

Unknown said...

இன்றைய நடைமுறைக்கு தேவையான பதிவு. தண்ணீரை சிக்கனமாக கையாண்டு வருங்கால இந்தியாவை காப்போம்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சுய ஒழுக்கம் என்பதன் இன்னுமொரு அம்சம் இது. ஒவ்வொரு தனிமனிதனும் செய்யவேண்டியது. பார்ப்போம்....

-ப்ரியமுடன்
சேரல்

r.v.saravanan said...

கோடைக்கேற்ற இல்லை இல்லை ....... எக் காலத்திற்கும் ஏற்ற பதிவு

நன்றி கதிர்

கிருத்திகாதரன் said...

கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பதிவு.