Showing posts with label தியாகம். Show all posts
Showing posts with label தியாகம். Show all posts

Jun 9, 2016

தியாகங்களின் நியாயங்கள்


வாழ்க்கையில் அவனைப்போல் ஒரு சுயநலம் பிடித்தவனைப் பார்க்கவே பார்க்க முடியாது” என ஒட்டுமொத்த கிராமத்தினரால் முத்திரை குத்தப்பட்ட ஒருவரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். எல்லோரும் சொல்வதுபோல் அவரின் செயல்பாடுகளை ‘சுயநலம்’ என்ற அடைப்புக்குறிக்குள் அடைப்பது சரியா என்ற சந்தேகமும் எனக்குண்டு. மிக எளிய ஒரு குடும்பத்தின் தலைவன் அவர். கோவணத் துண்டு நீளத்துக்கு நீண்டு கிடக்கும் நிலத்தில் கிணறுகூடக் கிடையாது. மழை பெய்தாலோ, அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டாலோ மட்டும் விவசாயம் செய்யலாம். அவை இரண்டும் இல்லாத காலகட்டத்தில் அருகாமை தோட்டத்துக்காரர் கருணை காட்டினால் காடுகள் தாண்டி தம் வயலுக்கு தண்ணீர் கொண்டு வந்து, வாடி வதங்கிக்கிடக்கும் தென்னைகளைக் காப்பாற்றலாம் என்ற நிலைமை.

இறுக்கிக் கட்டிய கோவணத்தோடு காலையிலும், மாலையிலும் பால் கொண்டு செல்வார். முடிந்தவரை கூலி வேலை அல்லது ஆட்களைத் திரட்டிக் கொண்டு குத்தகை வேலைக்குச் செல்வார். அக்கம்பக்கக் கடைகளில் ஒற்றைப் பைசா செலவழித்து எதையும் வாங்கிவிட மாட்டார். கடைகளில் அவர் டீ, காபி குடித்து யாரும் பார்த்ததில்லை. சைக்கிள் டயர் தேய்ந்துவிட்டால், சைக்கிள் கடையில் பழைய டயரைக் கேட்டு டயர் மேல் டயர் போட்டுக்கொண்டு மிதிக்கமுடியாமல் மிதித்து காடும் மேடும் திரிவார்.

தன் ஒரே ஒரு மகனை ஒருபோதும் காடு கரைகளில் திரிய விட்டதில்லை. ”படுச்சு கரையேறிரு” என்பதுதான் அவரின் இடைவிடாத வேண்டுதல். காலம் எல்லாவற்றையும் நேராக்கும், கலைத்துப்போடும் என்பதுபோல். அவரின் கனவை நேர் செய்தது. மகன் பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்கி, புகழ்பெற்ற கல்லூரியில் மெரிட் சீட் வாங்கி, அங்கு இங்கு என சின்னச்சின்ன வேலைகள் செய்து, பெங்களூரில் ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டு, ஒருநாள் வெளிநாட்டுக்குப் பறந்து போனான். என்ன காரணமென்றே தெரியவில்லை…. அவன் ஆறு வருடங்களாக அந்தக் கிராமத்துக்கு வரவோ, பெற்றோர்களை வந்து பார்க்கவோ, தான் இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைக்கவோ என்று எதையுமே செய்யவில்லை. அப்பா அம்மாவிற்கு பணம் எதுவும் அனுப்பியதாகவும் தெரியவில்லை. எந்தப் பெரிய மாற்றங்களுமின்றி அவரின் வாழ்க்கை அன்று போலவே ஓடிக்கொண்டிருக்கிறது.

மனித உறவுகளும், உறவுகள் சார்ந்த வாழ்க்கையும் பொதுவாக மேம்பட்ட தியாகங்களின் மேல்தான் ஒவ்வொரு முறையும் கட்டமைக்கப்படுகிறது. அந்தத் தியாகம் சரியாக உணரப்படாத இடங்களில், அது எந்தவித உறுதித்தன்மையும் ஏற்படுத்தாமல், மேலே கட்டமைக்கப்படுவதை குலையச் செய்துவிடுகின்றன, அல்லது கட்டமைப்பு தன் கனத்தைக் கொண்டு தியாகத்தையே குலைத்துவிடுகின்றன.

த்தேமாரி எனும் மலையாளத் திரைப்படத்தில் சுமார் நாலேகால் நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய உருக்கமான இறுதிக்காட்சியில் நாராயணன் எனும் கதாபாத்திரத்தின் மரணத்திற்குப் பிறகு தொலைக்காட்சியில் அவரின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பாகும்.

”வேலாயுதன் அண்ணன் பத்தேமாரியில் (படகில்) ஏறி கோர்ஃபஹான் வந்து இறங்கினோம். அங்கே ஒரு சாயபு உதவியோடு சார்ஜா வந்தோம். சார்ஜாவில் இருந்து துபாய்க்கு நடந்து வந்தோம். உயர்ந்த கட்டிடங்கள் அப்போதுதான் எழும்பிக்கொண்டிருந்தன. இப்போது காணும் பல கட்டிடங்களில் என் வியர்வைத் துளியும், கடின உழைப்பும் உண்டு. ’நம்மை நேசிப்பபவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறோம்’ என நினைக்கும்போது சோர்வு வருவதில்லை. நாம் அனுப்பும் காசு ஒரு தேவையை பூர்த்தி செய்கிறதென்பதே மிகுந்த மகிழ்ச்சியானது. எங்களில் பலரும் மனதை நாட்டில் வைத்துவிட்டு உடலை மட்டும் இங்கு வைத்துக்கொண்டு வேலை செய்கிறவர்கள்.

என்ன வேலை, என்ன சம்பளம் என மனைவி கூட அறிந்ததில்லை. எப்படிக் கஷ்டப்படுகிறோம் என்பதைச் சொல்வதில் வெட்கம் ஒன்றுமில்லை, ஆனால் அவர்களுக்கு நம் கஷ்டத்தைச் சொல்ல வேண்டாமென்றுதான் சொல்லாமல் இருக்கிறோம். ஊருக்கு பத்தாயிரம் அனுப்பும்போது, ’இருபதாயிரம் சம்பாதித்துவிட்டு, பத்தாயிரம் அனுப்புகிறார்கள்’ என்று அங்கிருப்பவர்கள் நினைக்கலாம். ஆனால் ஏழாயிரம் கிடைத்தாலும் மூன்றாயிரம் கடன் வாங்கியும் அனுப்புவதுண்டு. ஒரு போதும் ’எனக்கு பலன் திரும்பக் கிடைக்கும்’ என்பதற்காக உதவி செய்ததில்லை. அப்படி எதிர்பார்த்து கொடுப்பது அன்பின்பால் அல்ல, கடன் கொடுத்தல்.

பிறப்பு முதலே கடவுள் பல சௌபாக்கியங்களைக் கொடுத்ததுண்டு. நேசம் மிகுந்த அம்மாவின் மகனாய் பிறந்தது, அன்பான சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், எப்போதும் புரிந்துகொள்ளும் மனைவி, வாழ்க்கை முழுதும் உடன் நிற்கும் நண்பன் என இவர்களை நினைக்கும்போது நான் எல்லா வளங்களையும் பெற்றதாகவே நினைக்கிறேன்.

’எப்போதாவது பரிசுப் பொருட்களோடு வரும் விருந்தினர்களை’ போல பிள்ளைகள் எங்களைக் கருதுவதுண்டு. பிள்ளைகளின் வயதொத்தவர்களைக் காணும்போது, நமக்கு நம் பிள்ளைகளின் நினைவு வரும். அப்பா, அம்மா வயதில் இருப்பவர்களைக் காணும்போது எத்தனை பிள்ளைகளுக்கு தங்களின் அப்பா, அம்மா நினைவுக்கு வருகின்றனர்?

ஒவ்வொருவரும் தம் மனதில் நினைப்பதுபோல்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர். ’இவர் மகிழ்ச்சியோடு வாழ்கிறாரா, வருத்தத்தோடு வாழ்கிறாரா’ என வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொல்ல முடியாது. ’ஊரில் இருக்கும் குடும்பத்தின் அங்கமாய் நாம் இல்லையே’ என்று பல தருணங்களில் நான் வருத்தப்பட்டதுண்டு. சகோதரன் ஸ்கூட்டரிலிருந்து விழுந்து அடிபட்டுக் கிடந்தபோது, மனைவிக்கு தொண்டையில் புண் வந்து சாப்பிட முடியாமல் இருந்தபோது, மகனுக்கு மஞ்சள் காமாலை வந்து படுக்கையில் இருந்தபோது அவர்களோடு உடன் இருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டதுண்டு. அழுததுண்டு.

எனக்கு வயதாகிவிட்டதே என்று கவலையில்லை, இனி குடும்பத்திற்கு தொடர்ந்து உழைக்கும் அளவிற்கு உடல்பலம் இல்லையே என்பதுதான் கவலை.

உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் காரணமாய் இருந்தால், பெற்ற அம்மாவும் அப்பாவும் மன நிம்மதியோடு உறங்குவதற்கு நீங்கள் காரணமாய் இருந்தால் அதுவே வாழ்க்கையில் சாதித்ததாக கருதப்படும். மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாய் இருந்தோம் என்பதுதான் சாதனை. என் குடும்பம் பட்டியினிலிருந்து மீண்டது, அப்பாவின் கடன்களை அடைத்தது, சகோதரிகளுக்கு திருமணம் செய்துகொடுத்தது, சகோதரனின் தொழிலுக்கு உதவியது என இதெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு முழு வெற்றியாளன் தான்.

இனியொரு பிறப்பு உண்டெனில், இதே மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்; இதே பெற்றோர்களின் மகனாய், இதே சகோதரிகளின் சகோதரனாய், இதே மனைவியின் கணவனாய், என் பிள்ளைகளின் தகப்பனாய், என் நண்பன் மொய்தீனின் நண்பனாகவும் இன்னொரு பிறப்பு வேண்டும்” எனும் காட்சியோடு அந்தப் பேட்டியில் அவர் உருவம் உறைய….காட்சி வேறொன்றோடு கலந்து தேய்ந்து மௌனிக்கிறது.



ஆட்களை கள்ளத்தனமாய் கொண்டு சேர்க்கும் படகில் பயணப்பட்டு தன் இளமைக்காலத்தில் வளைகுடா நாட்டில் கால் வைத்து, ஐம்பது ஆண்டுகள் வேலை செய்து ஏழ்மையிலிருந்து தன் குடும்பத்தை, உறவுகளை மீட்டெடுத்து அங்கேயே இறந்தும்போகும் அந்த நாராயணன் கதாபாத்திரம், அதேபோன்று வாழும் ஆயிரமாயிரம் குடும்பங்களின் மனதில் பெரும் புயலை உருவாக்கியிருக்கும்.

ன்னுடைய இளமை, மகிழ்ச்சி, உறவுகளின் அண்மையெனும் சுகம் உட்பட எல்லாவற்றையும் துறந்து வெளிநாடுகளில், தனித்து வாழும் பல நண்பர்களை அறிவேன். குடும்பத்தின் கடன் சுமையைத் தீர்க்க வேலைக்காக வெளிநாட்டிற்கு, பச்சைப் பிள்ளைகளை விட்டுப்பிரிந்து நான்கைந்து ஆண்டுகள் சென்றிருந்த சில அம்மாக்களையும் அறிவேன்.

சுமார் இருபது ஆண்டுகள் கணவனும் மனைவியும் போராட்டக் களத்தில் போராளிகளாக நின்ற ஒரு பூமியிலிருந்து, தம் வாழ்வை பூஜ்யத்திலிருந்து துவங்கவேண்டிய நிலையில் வேலைக்கென தேடி வெளிநாடு செல்கிறார் கணவர். சில ஆண்டுகள் பணியாற்றி ஊர் திரும்பியவர் இருபது ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டிருந்த தம் பெற்றோர், சகோதரிகளுக்கு தான் சம்பாதித்த முழுவதையும் கொடுத்துவிட்டு குடும்பத்திற்குத் திரும்புகிறார். வாழ்க்கை மீண்டும் அதே பூஜ்யத்திலிருந்து தொடங்கப்படுகிறது.


பொதுவாக வெளிநாடு என்பது காசு கொழிக்கும் களமாகவே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒருவகையில் அது உண்மையும் கூட. குறிப்பிட்ட சில நாடுகளின் வாழ்க்கை நேர்த்தி பிடித்துப்போனாலும், யாருக்காக உழைக்கின்றோமோ அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் எத்தனை கொடிது!. இந்த முரணுக்குள் புதைந்து கிடக்கும் தியாகம்தான் பல்லாயிரம் குடும்பங்களை மீட்டெடுத்து குனிவிலிருந்து  நிமிர வைத்திருக்கின்றது. இந்த தியாகங்களைச் செய்பவர்களுக்கு தியாகங்களுக்கான பலன் தமக்கு உணர்த்தப்பட வேண்டும் என்பதைவிட, தியாகங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படாமலும், வேறு வழிகளில் அது சிதைக்கப்படாமலும் இருந்தாலே போதுமெனத் தோன்றுகிறது.

எதிலும் ’இதுதான் சரி’, ’இதுதான் தவறு’ என்று விரல் சுட்ட முடிவதில்லை. அது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றது. அவரவர் பக்கத்தில் சிறிதாகவோ, பெரிதாகவோ ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும். இன்னும் சில இடங்களில் அநியாயமும்கூட இருக்கலாம். மனிதர்கள் அப்படித்தான்’ மனித வாழ்க்கையும் அப்படியானதுதான். தியாகங்களால் கட்டமைக்கப்படும் இந்த வாழ்வில், தியாகங்கள் குறைந்தபட்சம் அதற்கான பொருத்தமான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுதல் மட்டுமே நலம்!


Apr 10, 2010

கோடியில் இருவர்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.
மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியில் ஓருவர் 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரேஎன்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்கஎன்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார். 

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து,  முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது  ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.
ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.
பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.
ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.
காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்களஅய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!...

“இந்த மரம் வளர்த்துறாரே என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்

ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.
எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்கஎன்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.


முதல் கட்டமாக அவர்களை நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வரும் ஏப்ரல் 15ம் தேதி என் மனம் கவர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை சிறப்பு விருந்தினராக வைத்து ஒரு பாராட்டு விழாவை நடத்த இருக்கிறது. அடுத்து, வரும் ஜூலை மாதம் பதவியேற்கும் எங்கள் அரிமா சங்க புதிய தலைவர் அரிமா. வீ.குருசாமி (94429-83559) அவர்கள், வரும் ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதை முக்கியத் திட்டமாக மனதில் வைத்துள்ளார். மழைக்காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.
__________________________________________________

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...