அக்கரைப் பச்சை

பிரியா காலையிலிருந்தே கொஞ்சம் பரபரப்பாக இருந்தாள். பள்ளிக்கு செல்லும் 11 வயது மகனிடம் வழக்கத்திற்கும் மீறி பாசம் வழிந்தது. காலை நேரப் பரபரப்பில் கணவனிடம் கூட எந்தச் சிடுசிடுப்பும் இல்லை. 34வது வயதில் இது தேவைதானா? சரிதானா? என்று லேசான அயற்சி கூட இருந்தது. ஆனாலும் மனதில் குறுகுறுப்பு கொஞ்சம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மதியம் சந்தித்தே ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். சந்திக்க மறுக்க முடியவில்லை என்பதை விட மறுக்க விரும்பவில்லை.

அது சென்னையின் பிரபல மருந்து விற்பனை செய்யும் நிறுவனம், பிரியாவுக்கு கணக்கியல் பிரிவில் முக்கியப் பொறுப்பு. இந்த தீபாவளி வந்தால் ஏழு ஆண்டு நிறைகிறது. மூன்று வருடங்களாக இணைய வசதியுடன் வழங்கப்பட்ட கணினி மிகப் பெரிய தோழனாக மாறியிருந்தது. தனக்கென தனி கேபின் கிடைக்க, சுதந்திரம் கூடுதலாக கிடைத்தது. ஆரம்பத்தில் கணினி கற்கவில்லையென்றாலும் உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், இணையமும், மின்னஞ்சல்களும், அதையொட்டி யாகூ சாட்டும் தவிர்க்க முடியாத விருப்பமாக மாறியிருந்தது. தன் பெயரை அனாமிகா என தன் மின்னஞ்சல் முகவரிக்கு பெயர் சூட்டிக்கொண்டாள்.

ஒரு மாதமாகிறது அவன், பிரியாவின் மனதில் நுழைந்து. அவன் தொடர்ந்து அனுப்பிய வித்தியாசமான மின்னஞ்சல்களின் வழியே மிகப்பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தினான். ஒருநாள் யார் நீங்கள் என்று மின்னஞ்சல் வழியே திருப்பிக் கேட்க, “ஸ்ரீ, சென்னை”யென பதிலளித்து அதிலொரு கேள்வியை தொக்கி விட்டிருக்க, மீண்டும் பதிலளிக்க... அதற்கு மீண்டும் ஒரு பதிலோடு கேள்வியும் சேர்ந்து வர........ அந்த நாள் கழிந்தது.

அடுத்த நாள் மின்னஞ்சலைத் திறக்க காலை வணக்கம் எனச் சொல்லி ஒரு பூங்கொத்தோடு வசிய மருந்தைச் சுமந்து கொண்டு மின்னஞ்சலில் வந்திருந்தது. நன்றி என்று திருப்பி அனுப்பிய பதிலுக்கு உங்களோடு இணையத்தில் உரையாட முடியுமா என வந்தது.

வேறு வேலைகளில் மூழ்கி, பின் மின்னஞ்சலை திறந்த போது இன்னும் மூன்று மின்னஞ்சல் அவனிடமிருந்து, உடல் எடையை சீராக வைத்திருப்பது, மனம் அழகாக இருக்க கடைபிடிக்க வேண்டிய நல் சிந்தனைகள், நகைச்சுவை துணுக்குகள் என.

படித்த போது பெரிதும் அறியாத தகவல்களாக இருந்தன.

மீண்டும் உரையாடல் பெட்டியில் வந்தான்...

“மின்னஞ்சல்களைப் பார்த்தீர்களா!”

“ம்... பார்த்தேன், நன்றி”

“பிடிச்சிருக்கா”

“என்ன்ன்ன!!??”

“நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் பிடித்திருக்கா”

“ம்ம்ம்... மோசமாக ஒன்றும் இல்லை”

அடுத்த நாள் காலை கணியை திறந்தவுடனே மின்னஞ்சல் பெட்டியைத் திறக்க வேகவேகமாக மனது கைகளுக்கு கட்டளையிட்டது. இன்று இன்னொரு பூங்கொத்து... உடனே உரையாடல் பெட்டியில் அந்த தகவல் ஒளிர்ந்தது “இனிய அனாமிகா, உங்கள் அழகு போல் உங்களுடைய இந்த நாள் சிறக்கட்டும். அன்புடன் ஸ்ரீ”.

ஒரு கணம் கண்கள் படபடத்தது. மனதில் ஒரு மகிழ்ச்சி மின்னல் போல் வந்தது. பிரியா அதை தவிர்த்திருக்கலாம், ஆனாலும் மனது சிலிர்த்தது.

“ஹேய்... நான் அழகென்று யார் சொன்னது” என பொய்க் கோபத்தோடு கேட்டாள்.

“அய்யோ, கோவிச்சுக்க வேணாம். நான் உங்கள் மனதை குறிப்பிட்டு சொன்னேன், உங்கள் மனது அழகானதில்லையா” உடனே சுதாரித்தான்,

“ம்ம்ம் சரி” அவனின் சாமார்த்தியம் புரிந்தது, அவன் பயந்தது பிடித்தது.

“மனது அழகானதுதானே” மீண்டும் தூண்டிலை வீசினான்.

“ம்ம்ம்.. என் மனது சுத்தமானது” என்றாள்

“உங்கள் மனது இவ்வளவு அழகாக இருக்கும்போது, நீங்களும் அழகாகத்தான் இருப்பீர்கள்” அடுத்த கேள்வி தெறித்தது

வழிகிறான் என்று தோன்றினாலும், அந்த சாதுர்யம் பிடிக்காமல் இல்லை. “சும்மா சாட்தானே” என பிரியா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

வார்த்தைகள், வரிகளாயின... வரிகள் வாடிக்கைகளாயின, நிறைய விசயங்கள் இருவருக்கும் ஒத்துப்போயின, வாங்க டீ சாப்பிடலாம் என சாட்டில் அழைத்தான், மதியம் ஒரு மணிக்கும் மேல் இன்னும் சாப்பிடப் போகலையா என்று அக்கரையோடு விசாரித்தான்...

நாட்கள் நகர நகர, நட்பு வட்டம் இறுகியது. குடும்பம் பற்றி பரஸ்பரம் விசாரித்தார்கள். அவன் வயது 38, திருமணமானவன், மகன் பள்ளியில் படிப்பதாக உண்மையையும், மனைவி வீட்டிலிருக்கிறாள் என்ற சின்னப் பொய்யையும் சொன்னான்.

அவளும் பொய் சொன்னாள், வாகன உதிரிப்பாகம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் கணவனைக் கல்லூரி பேராசிரியர் என்றும், மகனுக்கு பதிலாக மகள் என்றும் கவனமாகச் சொன்னாள்.

வார விடுமுறை கழிந்த அடுத்த நாள், மகனின் பள்ளிக்குச் சென்று பள்ளிக் கட்டணம் கட்டி விட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக கணினியைத் திறக்க, “ஹாய், குட்மார்னிங், என்னாச்சு, எப்படி இருந்தது விடுமுறை, நீங்கள் இல்லாமல் எனக்கு பொழுதே போகவில்லை” என்பது போன்று 67 வரிகள், அக்கரையைச் சுமந்து கொண்டு அவளுக்காக காத்திருந்து அசர வைத்தது. இறுதி நாள் என்றிருந்தும், மகனின் பள்ளிக் கட்டணத்தை வங்கியில் செலுத்த நேரமில்லை என்று சொல்லிவிட்டுப் போன கணவன் மீது இருந்த கோபம் மேலும் கூடுதலானது.

இணைப்புக்கு வந்ததும் பதறிக்கொண்டு கேட்டான், என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா, ஏன் தாமதம், எங்கே வராமல் போய்விடுவீர்களோ என பயந்ததாக, திரும்ப பதிலளிக்குமுன் அடுத்தடுத்து வரிகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தது.

“டேய் ஸ்ரீ... ப்ளீஸ் ஸ்டாப் இட், மூச்சுமுட்டுது, எதுக்குடா இத்தன கேள்வி, ஒரு வேலையா பேங்க் போயிட்டு வந்தேன் அதனால லேட்” என்றாள்

“என்ன சொன்னீங்க டேய், எதுக்குடா வா” என்றான்

“ஆமாண்டா... ராஸ்கல்” என்றாள்

“ஏண்டி அப்படிச் சொல்றே, நீ இல்லாம பதறிட்டேன் தெரியுமா”

“என்னது டீ யா”

“நீ டா சொன்னா, நான் டீ சொல்லுவேன்டி”

“சொல்லிட்டு போடா” என்றாள்

அடுத்த நாள் அரட்டையின் போது “டியர்” என்ற வார்த்தை வந்தது.

அடுத்த இரண்டு நாள் கழித்து, உரையாடலில் இவள் கோவித்துக் கொண்டது போல் நடித்த போது “கோவிச்சுக்காதடி டார்லிங்” என்றான்.

“என்னது டார்லிங்கா” மீண்டும் பொய்யாய் ஒரு கோபம்

“ஸாரி...டி பிடிக்கலைனா சொல்லலை”

“அப்படியில்லை, சரி அந்த மேட்டர விடுடா”

அடுத்த வார விடுமுறையை கடத்துவது இருவருக்குமே கடினமாக இருந்தது. ஆனாலும் தன் செல்போன் நெம்பரைக் ஒருபோதும் கொடுக்க மறுத்து விட்டாள். மின்னஞ்சல் மூலம் மட்டுமே உரையாடலாம் என்பதில் மிக மிக உறுதியாக இருந்தாள்.

அடுத்த பதினைந்து நாட்கள் மகிழ்ச்சியாக உரையாடலோடு ஓடியது. தினம் 500-700 வரிகளுக்கு குறையாமல் அரட்டையடித்தார்கள். அவன் தான், அவளைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அழுத்தமாகச் சொன்னான். பிரியா சந்திக்க வேண்டிய அவசியமென்ன, சந்திக்க வேண்டாம் என்றாள். மீண்டும் மீண்டும் வேண்டினான்.

மூன்று நாட்கள் கடுமையான போராட்டம் மற்றும் வற்புறுத்தலுக்குப் பின் அடுத்த நாள், மதிய உணவிற்கும், மதிய சினிமாவிற்கு செல்லவும் அரை மனதாக ஒப்புக்கொண்டாள்.

அந்த குறிப்பிட்ட இடத்தில் காரில்காத்திருப்பதாகவும், அவளை பிக்கப் செய்து கொள்வதாகவும், காரின் எண்ணைக் குறிப்பிட்டு, கருப்பு வண்ணக் கார், பின் கதவைத் திறந்து வைத்திருப்பதாகவும், வந்து காரில் ஏறிக்கொள்ளும் படியும் மிகப்பெரிய அளவிலான திட்டத்தைத் வடிவமைத்தான். அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு காத்திருப்பதாக சொல்ல, பலத்த சிந்தனைக்குப் பிறகு, புத்திக்கும், மனதிற்குமான போட்டியில், இறுதியில் மனது வெல்ல அதற்கு ஒப்புக்கொண்டாள். கிளிப்பச்சை நிறச் சேலையில் வருவதாக அடையாளம் சொல்லியிருந்தாள். அவனுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அது.

ரசிம்மன் வழக்கத்தைவிட முன்னதாகவே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். ஸ்ரீ நிவேதா என்ற தன் முதல் காதலியின் நினைவாக தன்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்ரீ007 என்ற பெயர் வைத்திருந்தான். பெண்களுடன் இணையத்தில் உரையாடுவது என்றால் அத்தனை இஷ்டம் அவனுக்கு. தனக்கு வரும் மின்னஞ்சல்களில் பெண்களின் பெயரில் வரும் முகவரிகளை தனியே பொறுக்கி எடுத்து, இதுவரை 430 முகவரிகளைச் சேர்த்து வைத்துள்ளான். அவைகளை சேர்த்து ஒரு குழுவாக சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் தவறாமல் குறைந்தது, ஒரு வித்தியாசமான மின்னஞ்சலாவது அனுப்புவதில் ஒரு சுகம் அவனுக்கு.

ஒரு சிலர், யார் நீங்கள், எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பாதே, தொந்தரவு செய்யாதே என்று கூறியதும் உண்டு அதேசமயம் நாட்டின் பல மூலைகளிலிருந்து, மின்னஞ்சல் உரையாடலில் கிட்டத்தட்ட 25 பெண் தோழிகள் கிடைத்தாலும், சென்னையில் கிடைத்தது அனாமிகா மட்டும்தான், ஆனாலும் தினம் தினம் மனது தேடித்தேடி வலை வீசிக் கொண்டேயிருந்தது.

அனாமிகா அன்று மதிய உணவிற்கும், சினிமாவிற்கும் ஒப்புக் கொண்டதில், சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான், மிகப் பெரிதாக ஏதோ சாதித்தது போல் சந்தோஷம் கரை புரண்டோடியது. வழக்கத்திற்கு மாறாக மகனை குளிக்க வைத்து, அவனுடையை தேர்வு எப்போது எனக் கேட்டு, நன்றாகப் படிக்க வேண்டும் என்று அன்போடு அறிவுரை வழங்கி, கொஞ்சம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பினான்.

ஒரு கணம் மனைவிக்கு ஏதும் துரோகம் செய்கிறோமா என்று தோன்றியது. சும்மா லன்சும், ஒரு சினிமாவும் தானே சாப்பிடப் போகிறோம் என மனது சமாதானப் படுத்திக் கொண்டது. இந்த நட்பில் வரும் நாட்களில் லன்ச் என்பதைத் தாண்டி ஏதாவது வாய்ப்புக் கிடைக்கும், பட்சத்தில் அதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கும் மனது தயாராக இருந்தது.

காலையிலிருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. எப்போது 12 மணியாகும் என மனது பழியாய் காத்துக்கிடந்தது. நண்பனிடம் முக்கிய தேவைக்காக என்று சொல்லி வாங்கிய காரின் சாவி, பாரமாகத் தோன்றியது.

சரியாக 12 மணிக்கு காரைக் கிளப்பி, 12.15 மணிக்கெல்லாம் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். கருப்பு கண்ணாடியை ஏற்றிவிட்டு, ஏசியை இயக்கி, நான்கு திசைகளிலிலும் விழியை பரபரப்பாக மேயவிட்டிருந்தான். அடுத்த 15 நிமிடம் கடப்பது ஒரு யுகமாக இருந்தது. 12.30ஐ நெருங்க நெருங்க மனது படபடத்தது. வயிற்றுக்குள் ஒரு காற்றுப் பந்து உருளுவதாக உணர்ந்தான். 12.30த் தாண்டி 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் பதட்டம் கூடுதலானது. ஒருவேளை கார் அடையாளம் தெரியாமல் தடுமாறுகிறாளா அல்லது வராமல் ஏமாற்றிவிட்டாளா, பதட்டம் கொஞ்சம் கூடுதலானது. குளிரும் ஏசியில் இதயம் நடுங்கியது, உடம்பு சூடாக முறுக்குவது போல் தோன்றியது.

பதட்டமான மனதோடு கண்ணை ஒரு நிமிடம் இறுக்க மூடி ஏதோ பிராத்தித்த போது “பிளக்” என பின் கதவு திறந்தது, விருக்கென திரும்பிப் பார்த்தபோது, அவன் மனைவி பிரியா என்கிற அனாமிகா காருக்குள் ஏறிக்கொண்டிருந்தாள், போன கல்யாண நாளுக்கு வாங்கிக் கொடுத்த கிளிப்பச்சை நிறச் சேலையில்.
-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

32 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்து, கனவன் மனைவிக்குள் புரிந்துனர்தல் இல்லாமல் இருந்தால், இப்படித்தான் மற்றவர் உள் நுழைய வாய்ப்பு கிட்டும். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைத்து இருவரும் ஏமாந்து தோற்று இருக்கிறார்கள். பசப்பு வார்த்தைகளிலும் சம்பிரதாயங்களிலும் ஏமாறும் (குறிப்பாய் கணிணி பெண்கள் படிக்க வேண்டிய கதை.

இரும்புத்திரை said...

ரெண்டு பேரு முகத்தையும் பார்க்க ஆசையா இருக்கு..இஞ்சி தின்ன குரங்கு..

தமிழ் அமுதன் said...

கையும் களவுமாய் மாட்டிக்கொண்ட துரோகம்..!

vasu balaji said...

ஓஹோ. இப்புடி போகுதோ கதை. :)) வரிசையா கும்மப் போறாங்க.

சந்தனமுல்லை said...

:-)

Unknown said...

அருமை..

//.. .இஞ்சி தின்ன குரங்கு. ..//

ரிப்பீட்டு..

ஈரோடு கதிர் said...

முதன் முதலாக சிறுகதை எழுதும் முயற்சி இது...

நன்றி @@ பித்தன்

நன்றி @@ அரவிந்த்

நன்றி @@ ஜீவன்

நன்றி @@ வானம்பாடிகள்
//வரிசையா கும்மப் போறாங்க.//
இது ஏன்!!!!!??

நன்றி @@ சந்தனமுல்லை

நன்றி @@ பட்டிக்காட்டான்

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((

க.பாலாசி said...

கடைசி வரையில் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த கதை....

உண்மையில் அனுமானிக்க முடியவில்லை, கதையில் சீரிய நடை... வேகம்... அழுத்தம்...இப்படி பல விஷயங்கள்...

இன்றைய நவீனத்துவ உலகின் நிழலை நிஜமாக்கி காட்கிறது உங்களின் பதிவு...இது உண்மையில் எங்காவதும் நடந்திருக்கலாம்...

(கதையெல்லாம் எழுத தெரியாதுன்னு சொல்லிட்டு இப்படி புகுந்து விளையாடுறீங்களே தலைவா)

Jerry Eshananda said...

மிகவும் நன்றாக இருக்கிறது ,கதிர்

Jerry Eshananda said...

அக்கரை பச்சைக்கு என் வோட்டு.

நாகா said...

பாதியிலயே கண்டுபிடிச்சுட்டேன் கதிர்.

பிரபாகர் said...

கதிர்,

அருமையான சிறுகதை. ஆனால், நிஜமாய் முடிவினை முதலிலேயே கணித்துவிட்டேன். சரியாய் இருக்க சந்தோஷமாய் இருந்தது...

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
:-((((((

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

//க.பாலாஜி said...
கடைசி வரையில் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த கதை....

உண்மையில் அனுமானிக்க முடியவில்லை, கதையில் சீரிய நடை... வேகம்... அழுத்தம்...இப்படி பல விஷயங்கள்...

இன்றைய நவீனத்துவ உலகின் நிழலை நிஜமாக்கி காட்கிறது உங்களின் பதிவு...இது உண்மையில் எங்காவதும் நடந்திருக்கலாம்...

(கதையெல்லாம் எழுத தெரியாதுன்னு சொல்லிட்டு இப்படி புகுந்து விளையாடுறீங்களே தலைவா)//

அப்பாடா இதை கதைனு ஒத்துக்கொண்டதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் பாலாஜி

//ஜெரி ஈசானந்தா. said...
மிகவும் நன்றாக இருக்கிறது ,கதிர்
அக்கரை பச்சைக்கு என் வோட்டு.//

நன்றி @@ ஜெரி

//நாகா said...
பாதியிலயே கண்டுபிடிச்சுட்டேன் கதிர்.//
வாங்க நாகா!
அட போங்கப்பா... கஷ்டப்பட்டு யோசிச்சு(!!!???) எழுதி, பாதியிலேயே கண்டுபிடிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
அருமையான சிறுகதை. ஆனால், நிஜமாய் முடிவினை முதலிலேயே கணித்துவிட்டேன். சரியாய் இருக்க சந்தோஷமாய் இருந்தது...//

அட! போங்கப்பா... நீங்கதான் நாகா-க்கு சொந்தக்காரங்க ஆயிட்டீங்களே...
ஆனாலும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி கண்டுபிடிக்கிறது கொஞ்சம் டூ மச்!!!

நன்றி @@ பிரபா

ஆரூரன் விசுவநாதன் said...

கதை சொன்ன விதம் அருமை....

பொதுவாக, ஆணில் தொடங்கி, ஆணை மையப்படுத்தி, பெண் பலியாகும் வகையில் எழுதுவது வழக்கம்.

பெண்ணை மையப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். நல்ல தைரியம் தான்.


வாழ்த்துக்கள்

காமராஜ் said...

முழுக்கப்படிக்க வைத்ததுதான் இந்தக்கதையின் வெற்றி.
நல்ல ட்விஸ்ட்.
பாதி கடந்தவுடன் என்னால் ஊகிக்க முடிந்தது.
சரி.. அதற்குப்பிறகு ?.

நாகராஜன் said...

அருமைங்க கதிர்... நல்ல முயற்சி... தொடரட்டும் உங்கள் சிறுகதை பயணமும்...

நல்லா எழுதிருக்கீங்க.. நல்ல வார்த்தை உபயோகிப்பு மற்றும் வார்த்தைகளின் கோர்வையும் அருமை... ஆனால் என்ன, ரொம்ப வர்ணிப்பு இருந்ததாலோ என்னவோ, ஆரம்பித்த உடனே முடிவு இப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சுருச்சுங்க... ஆனாலும் கதை முழுதும் படிக்க வைத்த உங்கள் எழுத்து நடை அருமை... இந்த ஏரியாவிலும் கலக்குங்க இனி மேல்...

Anonymous said...

இதை கதைக்கருவை வைத்து சுஜாதா ஒரு கதை எழுதியுள்ளார்.படித்திருக்கிறீரா? (தலைப்பு ஞாபகம் வரவில்லை)

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
பெண்ணை மையப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். நல்ல தைரியம் தான். //

எல்லாம் நீங்க கூட இருக்கிற தைரியம் தான்

நன்றி @@ ஆரூரன்

//காமராஜ் said...
முழுக்கப்படிக்க வைத்ததுதான் இந்தக்கதையின் வெற்றி.
நல்ல ட்விஸ்ட்.
பாதி கடந்தவுடன் என்னால் ஊகிக்க முடிந்தது.//

அட நீங்களுமா!!!

//சரி.. அதற்குப்பிறகு ?.//
அதற்குப் பிறகு யோசிக்க பயமாக இரூந்ததால் விட்டுவிட்டேன்

நன்றி @@ காமராஜ்

//ராசுக்குட்டி said...
அருமைங்க கதிர்... நல்ல முயற்சி... தொடரட்டும் உங்கள் சிறுகதை பயணமும்... //

ரொம்ப வர்ணிப்பு இருந்ததாலோ என்னவோ, ஆரம்பித்த உடனே முடிவு இப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சுருச்சுங்க... //

அட நீங்களுமா!!!

//ஆனாலும் கதை முழுதும் படிக்க வைத்த உங்கள் எழுத்து நடை அருமை... இந்த ஏரியாவிலும் கலக்குங்க இனி மேல்...//

நன்றி @@ ராசுக்குட்டி


// Anonymous said...
இதை கதைக்கருவை வைத்து சுஜாதா ஒரு கதை எழுதியுள்ளார்.படித்திருக்கிறீரா? (தலைப்பு ஞாபகம் வரவில்லை)//

அனானி... இப்படியுமா ஒருத்தன ஓட்றது..

பிரபாகர் said...

//அட! போங்கப்பா... நீங்கதான் நாகா-க்கு சொந்தக்காரங்க ஆயிட்டீங்களே...
ஆனாலும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி கண்டுபிடிக்கிறது கொஞ்சம் டூ மச்!!!
//
கதிர்,

ராசுக்குட்டியும் நம்ம பக்கம்தான் பாத்தீங்களா?

கல்யாணமான இருவர் சாட்டிங்... எனும்போதே அந்த முடிவை எதிர்பார்த்தல் இயல்பே...

மேலும் சாட்டிங்ல கூட வேலை பார்த்த ஒரு நண்பரை அலைய விட்டதை தனி பதிவாக எழுதுகிறேன்...

அனுபவத்தால் முடிவை யூகித்தேன் என வைத்துக்கொள்ளுங்களேன்...

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்..

கலக்கீட்டீங்க. யதார்த்தமான நடை. உங்க பதிவுகள் பல வண்ணங்களில் வருவது ரசிக்க வைக்கிறது. தொடருங்கள்!!

கடைசில இருந்து 3வது பத்தில உங்க மாப்புக்கு வேலை(வேளை) வச்சிருக்கீங்க :)

தேவன் மாயம் said...

செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். பொறுமையாகப் படிக்கிறேன்!!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா வந்திருக்கு கதிர்

இப்போ நிறைய இந்த மாதிரி நடக்குதுன்னு நினைக்கிறேன்...

மாதவராஜ் said...

படிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தெரிந்து விட்டது. பட்டுக்கோட்டை பிரபாகர் கதை போலிருந்தது....

கலகலப்ரியா said...

"mitr my friend" காப்பி.. ரேவதி கிட்ட சொல்றேன்..

நாடோடி இலக்கியன் said...

கதிர்,
அனானி,மாதவராஜ் ஆகியோரின் கருத்து தான் எனக்கும்.

இந்தக் கதையின் ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்ததன் காரணம் இதே டைப்பிலான கதையொன்றை வெகு சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் வாசித்த ஞாபகம்.

மற்றபடி நல்ல ஃபுளோ இருப்பதால் வேறு கதைக் களங்களில் கலக்குவீர்கள் என்று பெரிதாய் எதிர்பார்க்கிறேன்.

பழமைபேசி said...

மாப்பு, எனக்கு இரு ஐயப்பாடு....

//குளிரும் ஏசியில் இதயம் நடுங்கியது//

ஏசிக்கு குளிருச்சுன்னா, இவனோட இதயம் ஏன் நடுங்கணும்?

ஏசியின் குளிரில் இதயம் நடுங்கியது... செரிங்களா மாப்பு?

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கதிர்..
கடைசில இருந்து 3வது பத்தில உங்க மாப்புக்கு வேலை(வேளை) வச்சிருக்கீங்க :)
//

அண்ணன் வருமுன்னே தம்பி வந்துட்டு போய்ட்டாராட்ட இருக்கூ?

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
ராசுக்குட்டியும் நம்ம பக்கம்தான் பாத்தீங்களா?//

ராசுக்குட்டி மட்டுமா!!!

எல்லோரும் உங்கபக்கம் தான் பிரபா.
இஃகிஃகி

//ச.செந்தில்வேலன்
கலக்கீட்டீங்க. யதார்த்தமான நடை. உங்க பதிவுகள் பல வண்ணங்களில் வருவது ரசிக்க வைக்கிறது. தொடருங்கள்!!
கடைசில இருந்து 3வது பத்தில உங்க மாப்புக்கு வேலை(வேளை) வச்சிருக்கீங்க//

ஆகா... மாட்டிவிட்டுடீங்களா!

நன்றி @@ செந்தில்

//தேவன் மாயம் said...
செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். பொறுமையாகப் படிக்கிறேன்!!//

நன்றி @@ தேவா

//பிரியமுடன்...வசந்த் said...
நல்லா வந்திருக்கு கதிர்
இப்போ நிறைய இந்த மாதிரி நடக்குதுன்னு நினைக்கிறேன்...//

நன்றி @@ வசந்த்

//மாதவராஜ் said...
படிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தெரிந்து விட்டது. பட்டுக்கோட்டை பிரபாகர் கதை போலிருந்தது....//

நன்றி @@ மாதவராஜ்

//கலகலப்ரியா said...
"mitr my friend" காப்பி.. ரேவதி கிட்ட சொல்றேன்..//

அடக் கொடுமையே இது வேறயா

நன்றி @@ பிரியா

//நாடோடி இலக்கியன் said...
அனானி,மாதவராஜ் ஆகியோரின் கருத்து தான் எனக்கும்.
இந்தக் கதையின் ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்ததன் காரணம் இதே டைப்பிலான கதையொன்றை வெகு சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் வாசித்த ஞாபகம்.//

என்னத்தவிர எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு.... ம்ம்ம்ம்

//மற்றபடி நல்ல ஃபுளோ இருப்பதால் வேறு கதைக் களங்களில் கலக்குவீர்கள் என்று பெரிதாய் எதிர்பார்க்கிறேன்.//

நன்றி @@ பாரி

//பழமைபேசி said...
//ஏசியின் குளிரில் இதயம் நடுங்கியது... செரிங்களா மாப்பு?//

ஆகா மாட்டிக்கிட்டேனா
மாப்பு இனி கவனமா இருக்கேன்

//அண்ணன் வருமுன்னே தம்பி வந்துட்டு போய்ட்டாராட்ட இருக்கூ?//

தம்பி மட்டுமா... நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய் வந்து போட்டுத் தாக்கீட்டாங்க

நன்றி @@ மாப்பு

Anonymous said...

ஹஹாஹ்ஹா......பாதி கதைக்கு மேல் உண்மை புரியத் தொடங்கினாலும் விருவிருப்பு குறையவில்லை...கணினிமயமான மாய உலகம் சிரிப்பு தாங்கலைப்பா...... நல்லாயிருக்கு....

நிலாமதி said...

முடிவை அறிய வேகமாக் வாசித்தேன். அப்பாடா என இருந்தது. முதல் கதை போல இல்லயே....வேகம் விறுவிறுப்பு நல்ல கதை அதிர்சியான முடிவு ....பாராடுக்கள். தொடர்ந்துங்கள் கதை படிக்க ஆவல் .நட்புடன் நிலாமதி

Durga Karthik. said...

Sooper twist.