Aug 2, 2018

உதிரத்தின் நிறம் உரிமை


சமூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான சவால்கள் இடம் பெறுவதுண்டு. அதன் வரிசையில் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் வித்தியாசமான சவால் ஒன்று பரபரப்பு முகம் காட்டியது. அது ‘பேட்மேன்’ எனும் இந்தி திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியும்கூட. பிரபலங்கள் பலர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் பேட்-களை கையில் ஏந்தி நிழற்படம் எடுத்து, அது தொடர்பாக எழுதி பதிவிட்டு, தம் நட்புகளை அதேபோல் செய்ய அழைப்பதே ”பேட்மேன் சேலஞ்ச்”. நானும் என்னை அதில் இணைத்துக் கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. நான் அப்போதுதான் முதன்முறையாக நாப்கினை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறேன். கைகளில் தொடுகிறேன்.

ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால திருமண வாழ்வில் மனைவியும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மகளும் மாதந்தோறும் பயன்படுத்தி வந்தாலும் ஒருமுறைகூட அதை தொட்டுப் பார்த்ததோ, கையில் எடுத்து பாவித்ததோ இல்லை. அது குறித்து ஒவ்வாமை ஏதும் இல்லையென்றாலும், அறிந்துகொள்ளவோ, தொட்டுப் பார்க்கவோ அவசியம் எதுவும் எற்படவில்லை என்பதுதான் உண்மை. இத்தனையாண்டு காலம்  வீட்டிற்குள் தொடும் தொலைவில் இருந்து தொட்டுப் பார்த்து உணர்ந்திடாத பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். எப்போதும் அது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு பொருளாக உணர்ந்தது தவிர்த்து மேலதிகமாக எதுவும் அறிந்திருக்கவில்லை.

நாப்கினும் மாதவிடாய் நிகழ்வும் ஏன் இத்தனை இரசியமானதாக, அந்நியப்பட்டதாக இருக்கின்றது ஆண்களுக்கு. ஒவ்வொரு உயிரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தரும் கருப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் (ஆரோக்கியம் தவிர்த்து) ’தீட்டு’ என்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு.

சாதி, மதம், ஏழை, பணக்காரன், பெரிய பதவிகள், அதிகாரமிக்கவர்கள், அடிமைகள், பலம் பொருந்தியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவதொரு சூழலில் தம் மாதவிடாய் தருணத்தில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், ஏதுவான சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில்கூட விழிப்புணர்வு கொள்ளாத, கவனம் செலுத்தாத சமூகமாக இருக்கிறோமோ என்றே தோன்றுகிறது.

நாப்கின்  பேட்களை கையில் ஏந்தி அதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் வந்து கொண்டிருந்த சூழலில் ‘இப்ப யாருக்கு நாப்கின் தெரியாம இருக்கு? எதுக்கு இந்த விளம்பரம்? நாப்கின் ஆரோக்கியமானதா? மாதவிடாய் எல்லாம் இந்தக் காலத்தில் அத்தனை மறைவானதல்ல!’ என சிலரிடமிருந்து சலிப்பு, பகடி, எதிர்வினைகள் வரத் துவங்கின. அவரவர் காணும் உலகம் அவரவருக்கு உண்மையானது போலத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறொன்றாகவும் இருக்கலாம்.

தமிழகத்தின் கடைக் கோடியில் இருக்கும் ஒரு சிறு நகரம். ஏறத்தாழ 1500 பெண்கள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியொன்றின் நிகழ்ச்சிக்காக தலைமையாசிரியர் அறையில் காத்திருந்தேன். ஏறத்தாழ ஓய்வு வயதினை நெருங்கும் தலைமை ஆசிரியை. மாலை பள்ளி விடும் நேரம். தேர்வு நெருங்குவதால் கூடுதல் நேரம் கட்டாயப் படிப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவியொருத்தி முதுகை இழுக்கும் பெரிய புத்தகப் பையோடு  வந்தாள். ”மேம்... ரொம்ப தலை வலிக்குது, வீட்டுக்குப் போகனும்!” என்றாள். தலைமையாசிரியை ”உங்களுக்கெல்லாம் இதே வேலையாப் போச்சு. வீட்டுக்குப் போகனும்னா நாளைக்கு உங்கம்மாவைக் கூட்டிட்டு வரனும்... சரியா!?” என்றார். வலி தாங்க முடியவில்லை என்றாள் அந்தப் பெண். “உங்கம்மா வருவாங்கன்னா போ, இல்லைன்னா ஒழுங்கா படிக்கிற வேலையப் பார்” எனக் கடிந்தார். அதன் பின்னும் வீட்டுக்குப் போகவேண்டுமெனக் கேட்டவளின் கண்களில்  கண்ணீர் பெருக்கெடுத்தது. மீண்டும் மறுத்து, இருந்துதான் ஆகவேண்டுமென உத்தரவிட்டார். அந்தத் தருணத்திய அழுகையும் அதிகாரமும் பெரும் உறுத்தலாய் இருந்தது.



யாரோ அழைக்க அந்த தலைமையாசிரியை வெளியில் செல்ல, துவண்டு நின்றிருந்த பெண்ணிடம் “என்னம்மா... ரொம்ப முடியலையா!?” எனக்கேட்டேன். என்னிடமிருந்து கேள்வியை எதிர்பாராதவளாய் மேலும் கீழும் தலையை ஆட்டியவளிடம், ”வயிறு வலிக்குதாம்மா!?” எனக் கேட்டேன். லேசாய் அதிர்ந்தவளின் முகம் மின்னலாய் வெட்டும் வலியில் துடிப்பதை உணர முடிந்தது. கண்ணீர் கரகரவென வடிய, லேசாக விசும்பத் தொடங்கியபடி ஆமோதித்தாள். சட்டென வெளியில் வந்தேன். அந்த தலைமையாசிரியை திரும்பிக் கொண்டிருந்தார். “மேடம்... அந்தக் குழந்தைக்கு ப்ரீயட்ஸ் பெய்ன்னு நினைக்கிறேன்!” அந்த மாணவியை வேண்டுமென்றேதான் குழந்தை எனச்சொன்னேன். என் மகள் வயதிருப்பவளை குழந்தையெனச் சொல்வதே அந்த இடத்தில் எனக்குப் பிடித்தமானதாக இருந்திருக்க வேண்டும்.. “இதே வேலையாப் போச்சுங்க சார்!” என்றபடி உள்ளே நுழைந்து “என்ன ப்ரீயட்ஸா!?” என்றார். அதிகாரம் அப்போதும் மட்டுப்படவில்லை. அதுதான் அவருக்கு பழக்கப்பட்ட மொழியாக இருக்கலாம். அந்த மொழி சரி தவறு என்று, பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது. அந்தப் பெண்ணிற்கு அனுமதி கொடுத்தார். முகத்தை துடைத்துக்கொண்டே என்னிடம் நன்றி பகிர்ந்தபடி நகர்ந்து சென்றாள்.

கீதா இளங்கோவன் இயக்கியிருக்கும் மாதவிடாய் ஆவணப்படம் நினைவிற்கு வந்த்து. ‘இது ஆணுக்கான பெண்களின் படம்’ என அடித்தலைப்பு சூட்டப்பட்ட அந்தப் படம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், சமூகத்திற்கான படம். எல்லாம் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும்கூட சில கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தள்ளிவைக்க ”முட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த தனிப் பாத்திரங்களும் இருப்பதை அந்தப் படத்தின் வாயிலாக அறிந்தபோது சபிக்கவே தோன்றுகிறது. ஏதேதோ அடிப்படையற்ற காரணங்களைச் சொல்லி இதுபோல் கடைப்பிடிக்கும் ”முட்டு வீடு” உள்ளிட்ட எதுவுமே மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

மனதால் இறுகத் தொடங்கினேன். ஏன் அந்த மாணவிக்கு தலைமையாசிரியையிடம் நேர்கொண்ட பார்வையில் “எனக்கு ப்ரீயட்ஸ், ரொம்ப வலிக்குது, வீட்டுக்குப் போகனும்” எனக் கேட்க முடியவில்லை. அந்த அறையில் நான் இருந்தது, தயக்கத்தைக் கொடுத்திருக்குமா!? ஒருவேளை கல்விக்கூடம் எதையும் தயங்காமல் சொல்வதற்கான வாய்ப்பை, சொல்லும் தைரியத்தை உருவாக்கித் தராமல் போயிருந்தால், வெறும் புத்தக அறிவால் அள்ளும் மதிப்பெண்களை வைத்து என்ன செய்யவியலும்.

கிராமத்து, சிறு நகரத்து அரசுப் பள்ளி மாணவிக்கு மட்டுமே இப்படியான தயக்கங்கள் இல்லை. பெரு நிறுவனத்தில் தொடர் விவாதத்தில் நீண்ட நேரமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண் உயரதிகாரிக்கு அவரையும் அறியாமல் மாதவிடாய் ஏற்படுகிறது. அலுவலகப் பதட்டத்தில் நாப்கின் எடுத்து வரவில்லை. இருக்கையிலேயே உதிரப் போக்கு ஏற்பட்டு ஆடை நனைந்ததை உணர்ந்தும், எழுந்து செல்ல தைரியம் வரவில்லை. யாரும் பார்த்தால் என்னவாகும் எனும் பதட்டத்தில் ஏறத்தாழ ஒன்னேகால் மணி நேரம் அதே இருக்கையில் முகம் வெளிறி அமர்ந்திருந்ததைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படித்து, பெரும் பதவியில், அதிகாரத்தின் உயரத்தில் இருந்தாலும்கூட ஒரு பெண்ணை ப்ரீயட்ஸ் குறித்த அபத்த நம்பிக்கைகள் முடக்குகின்றன. உடலில் இயல்பாக நிகழும் ஒன்று, தன் கட்டுப்பாட்டில் இல்லாது வந்து ஏற்படுத்தியிருக்கும் கறைகளோடு சபை நடுவே எழுந்து போக தடுக்கும் விதிகள் யாவை!?.

நாப்கின் பரவலாக நகர்ப்புறங்களிலும், வசதி வாய்த்தவர்களுக்கும் கிடைத்து வரும் அதே காலத்தில்தான் லஷ்மிகாந்த் – காயத்ரி திருமணம் நடக்கிறது. சில நாட்களிலேயே காயத்ரி தன் மாதவிடாய் காரணமாக பழைய துணியோடு ஒதுங்குகிறாள். முதலில் புரியாத லஷ்மிகாந்த ஒருவழியாக அது பெண்களுக்கான ஐந்து நாட்கள் ’டெஸ்ட் மேட்ச்’ என்ற பெயராய் புரிந்து கொள்கிறான். பழைய துணியோடு ஒதுங்கியவளின் ஆரோக்கியம் குறித்த அக்கறை மற்றும் அவள் மீதுள்ள காதலுக்காக கடையிலிருந்து நாப்கின் வாங்கி வருகிறான். நாப்கின் விலையான 55 ரூபாய் அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தின் ஒரு மாத பால் செலவு எனக்கூறி பயன்படுத்த மறுத்ததால், கடையிலும் திருப்பிக்கொடுக்க முடியாத லஷ்மிகாந்த் தான் பணிசெய்யும் இயந்திரவியல் கூடத்திற்கு தன்னுடனே எடுத்துச் செல்கிறான்.  அங்கு ஒரு தொழிலாளிக்கு விபத்து நடக்க, கொட்டும் இரத்தத்தைத் நிறுத்த தன்னிடமிருந்த நாப்கினைப் பயன்படுத்துகிறான். அந்தச் செயலுக்காக உடன் பணி புரிபவர்களிடமிருந்து கிண்டலும், மருத்துவரிடமிருந்து பாராட்டும் கிடைக்கின்றன.

விலை மிகுந்த நாப்கினுக்கு நிகரான நாப்கினை சுயமாய், குறைந்த  செலவில் தயாரித்துவிட்டால் மனைவி பயன்படுத்தி நலமாக இருப்பாள் எனக் கருதி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறான். பஞ்சு, துணி ஆகியவற்றை வாங்கி, நாப்கின் தயாரித்து பயன்படுத்தக் கொடுக்கிறான். அது பயன்பாட்டில் தோற்றுப் போகிறது. மாதவிடாய் காரியத்தில் கணவன் வருவதை விரும்பாத காயத்ரி, இனி பெண்கள் விசயத்தில் தலையிட வேண்டாமென கடுமையாக எச்சரிக்கிறாள்.

புதிதாகப் பருவமடைந்த பக்கத்து வீட்டு சிறுமிக்கு கொடுத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறான். அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து தரம் எப்படியிருக்கிறதெனக் கேட்கிறான். அவர்கள் பயன்படுத்தாமலே பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். தன்னுடைய உடலில் ஒரு பலூன் பொருத்தி அதில் ஆட்டின்  இரத்தத்தை நிரப்பி, செயற்கையாக ஒரு மாதவிடாய் அனுபவத்தை ஏற்படுத்தி, அதிலும் தோற்கிறான். தேவையில்லாத செயலை விடாப்பிடியாக செய்து அனைத்து இடங்களிலும் ஒரு கோமாளிபோல் பார்க்கப்படுவதை அவமானமாக உணரும் காயத்ரி சண்டையிட்டு பிரிந்து செல்கிறாள். எனினும் நாப்கின் உருவாக்குவதிலிருந்து பின்வாங்கவில்லை லஷ்மிகாந்த்.

நாப்கினில் பயன்படுத்தும் மூலப்பொருளான செல்லுலோஸ் பைஃபர் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள ஒரு பேராசிரியருக்கு வேலைக்காரனாக பணியாற்றுகிறான். ஒருகட்டத்தில் லஷ்மிகாந்த் செல்லுலோஸ் பைஃபரை வெளிநாட்டிலிருந்து புத்திசாலித்தனமாகத் தருவித்து, தானே வடிவமைத்த இயந்திரத்தின் உதவியுடன் மிகக் குறைந்த விலையிலான நாப்கினை உருவாக்கி விடுகிறார்.

அது பயன்பாட்டில் நிரூபணமாகிறது. தன் தயாரிப்பை  டெல்லி ஐஐடி கண்காட்சியில் வைத்து “வாழ்க்கையை மாற்றும் கண்டுபிடிப்பு” எனும் விருதினை வெல்கிறார். தேசமும், உலகமும் அவர் பக்கம் பார்வைகளைத் திருப்புகின்றன. தன்  கண்டுபிடிப்பை லாபத்திற்கு விற்காமல், கிராமப்புற ஏழைப் பெண்களுக்காக பயன்படும் வகையில் வழங்குகிறார். அது கிராமம் கிராமமாக ஒரு புரட்சி போல் பரவுகிறது. நியூயார்க்கில் இருக்கும் யுனிசெஃப் நிறுவனத்தில் உரை நிகழ்த்துகிறார். ஊருக்குத் திரும்பியவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது  கிடைக்கிறது.


அக்‌ஷய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் இணைந்து நடித்து  இயக்குனர் பால்கி இயக்கிய இந்தி திரைப்படமான ‘பேட்மேன்’ நேர்த்தியான திரைக்கதையில் நிறைவடைகிறது. ஆனால் அது கற்பனைக் கதையன்று. கோயம்புத்தூரில் தம் வாழ்க்கையைப் பணயம் வைத்து தானே வடிவமைத்த இயந்திரம் மூலம் நாப்கின் தயாரித்து சாதித்துக்காட்டி இன்று உலகளவில் பெரும் புகழ் பெற்றிருக்கும் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் கதைதான் பேட்மேன்.

ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சார்ந்த பல செயல்களும் போராட்டம் என்றால், அந்தப் போராட்டங்களைச் சமாளிக்கும் ஒரு எளிய வழிக்காக ஒரு மனிதனும் தன் வாழ்நாளை பணயம் வைத்து விளையாடி வென்றிருக்கிறான். முதலில் பெண்கள் தம் மாதவிடாயைக் கடக்க சமூக ரீதியாக இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளை இனியேனும் உடைக்க வேண்டும். இதில் ஆண்கள் முழு மூச்சாய் கை கொடுக்க வேண்டும். உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு இயற்கையான இந்த நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். அதன் முழு ஒப்புதலே அந்த பேட்மேன் சவாலுக்காக நானும் ஒரு நாப்கினை கையில் ஏந்தி நின்றது.

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

-

நேர்கோடு இதழில் வெளியான கட்டுரை

*



Jun 27, 2018

ஒகேனக்கல்லில் ஒரு நாள்


பதினைந்து ஆண்டுகள் இருக்கும் ஒகேனக்கல் சென்று. பதின் வயதில் ஒருமுறை பைக்கில், இருபதுகளின் இறுதியில் ஒருமுறை உறவுகளோடு... இந்த முறை 15 நிமிட அவகாசத்தில் திட்டமிட்டு, மூன்று மணி நேரத்தில் பயணம் துவங்கினோம்.

நண்பர் பழமைபேசியின் வருகையையொட்டி வருடம் ஒருமுறை இப்படி பயணம் உண்டு. இந்த முறை என் கல்லூரித் தோழன் சீனி உடன் இணைந்துகொண்டான். 24 வருடங்கள் கழித்து நாங்கள் சந்தித்துக்கொள்கிறோம். உடன் ஆரூரன் மற்றும் ஜெயபாலன்.

ஈரோடு - பவானி - மேட்டூர் - மேச்சேரி - பெண்ணாகரம் - ஒகேனக்கல். மேட்டூர் அணைக்கட்டு அருகே மலையேறும்போதே மழை வெளுத்து வாங்கியது. முதல் கொண்டை ஊசி வளைவு சென்று திரும்பும்போது சொட்டு மழையில்லை. திரும்பி மேலே ஏறுகையில் வெளுத்து வாங்கியது. வெறும் 100 மீட்டர் தொலைவிற்குள் இத்தனை பெரிய மாயம். சாலையில் செல்ல முடியாமல் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களிடம் ஒரு 100 மீட்டர் நகர்ந்துட்டா மழை இல்லை என்று சொல்லக்கூட அவகாசம் தராத மழை.

பதினாறு கண் மதகிற்கு புதிய பாலம் கட்டியிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். மீண்டும் மழை தொடங்கியது. கிட்டத்தட்ட மேச்சேரிக்கு அருகே வரையிலும் மழை. மேச்சேரி - பெண்ணாகரம் சாலை அற்புதமாக இருக்கின்றது. ஒகேனக்கல்லை அடைய இரவாகிவிட்டது. அந்த ஊர் நண்பர் தங்குவதற்கு ஒரு விடுதியை பரிந்துரை செய்தார். தங்குவதற்கு வசதியான இடம் தான்.

ஒகேனக்கல் : ஒரு அருவியை மையப்படுத்தி காவிரி ஆற்றை மட்டுமே நம்பியிருக்கும் ஊர். ஒரு சாலை, இரண்டு மூன்று வீதிகள்... அவ்வளவுதான். ஒகேனக்கல்லை ஊர் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. விடுதி, உணவகம் என சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் மையம். இரவிலும் அதிகாலையிலும் அமைதி காக்கிறது. பகலில் பரபரப்பாகிவிடுகிறது. ஆண்டு முழுதும் பயணிகள் வந்து போகிறார்கள்.

அங்கிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கும் ஊட்டமலை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கிறார்கள். மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல், பரிசல் தயாரித்தல், ஆயில் மசாஜ், உணவு தயாரித்துக் கொடுத்தல் ஆகியவையே முக்கிய வாழ்வாதாரங்கள். சாலையோரம் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளின் முகப்பிலும் அரசு உதவியுடன் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.


மகிழ்ச்சியானது அங்கு காத்திருக்கும் கல்லூரிப் பேருந்துகள். தர்மபுரிப் பகுதிகளிலிருக்கும் பல்வேறு கல்லூரி நிறுவனங்களின் பேருந்துகள் அந்தக் கிராமம் வரை இயக்கப்படுவது நம்பிக்கை தரும் ஒன்று.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் அரட்டை. பேசுவோம் பேசுவோம் பேசிக் கொண்டேயிருப்போம். ஃபேஸ்புக், ப்ளாக் ஆகியவற்றில் இயங்குவதால் பேசவா விசயம் கிடைக்காது. ஆக எங்கள் சந்திப்புகள் என்பது பலவற்றையும் கலந்து கட்டி பேசிக்கொண்டேயிருப்பது. நல்ல சாப்பாடு, அருவிக் குளியல் மற்றும் ஆயில் மசாஜ் இந்தப் பயணத்தின் கூடுதல் நோக்கம்.

ஆற்றின் நடுவில் இருக்கும் ஒரு தீவிற்கு அழைத்துச் செல்வதாக இரவே சொன்னார்கள். அந்த உள்ளூர் நண்பரும் அதையே பரிந்துரை செய்தார். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் வரையில் ஆற்றில் வெள்ளம் இருந்ததாக அறிந்தேன். அன்று குறைந்திருந்தது. ஆட்டோவில் பரிசலை ஏற்றிக்கொண்டு, எங்களை ஏற்றிக்கொண்டு வனத்தின் வழியே சற்று பயணித்து பரிசலை ஆற்றில் விட்டு அதன் வழியே நீரோட்டத்தின் வழியே பயணித்து வரலாம். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இந்த மாதிரியான பயணங்கள் அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவர்கள் தம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அனுபவத்தில் இயக்குகிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து பயணிகளாகச் செல்வோருக்கு அது பாதுகாப்பானதாக இல்லை.


கேரளாவின் வனத்திலிருந்து, கபினி அணையை அடைந்து அங்கிருந்து கபிலா நதியாகப் பயணித்து காவிரியில் கலந்து பிலி குண்டு வழியே தமிழகத்திற்குள் நுழைந்து ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு விரைகிறது இளம்பச்சை நிறத் தண்ணீர். எந்தச் சலனமும் காட்டாமல் மௌனம் காக்கும் இடத்தில் ஆழம் ஐம்பது அடிகள் வரை கூட இருக்கலாம் என்கிறார் பரிசல்காரர். மௌனமாய் இருக்கும் இடத்தில் உள்ளே நீர் விரைந்து நகர்ந்து கொண்டிருக்கலாம். பாறைகள் தென்படும் இடத்தில் சலசலக்கும் தண்ணீர் தன் வேகத்தையும், வெறியையும் காட்டுகிறது. நீரால் நீர் அழுந்தி தாழ் நிலம் நோக்கிப் பாயும் வேகம் அது.

நதியின் இரு மருங்கிலும் நாம் பெயரறிந்திராத ஆயிரக்கணக்கான மரங்கள். அடி பெருத்து, வேர் அரித்து என்றும் நதியோடு பிணைந்து கிடக்கும் மரங்கள். மென் பச்சை நிறத்தில் சுழித்தும் சீறியபடியும், மௌனித்தும் நதி தன் போக்கில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒருபுறம் தமிழக எல்லை, மறுபுறம் கர்நாடகா என பச்சைகளின் நடுவே பாயும் நதி மிகப் பெரும் ஆசான். அதன் மௌனத்திலும் இரைச்சலிலும் கற்க ஆயிரம் பாடங்கள் உண்டு.

காவிரி நதி பிரிந்தும் பிணைந்துமென வேடிக்கை காட்டுகிறது. பிரிகின்ற இடங்களில் நடுவே ஒரு தீவு போன்ற நிலப்பரப்பை விட்டுச் செல்கிறது. அவையெங்கும் மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இனம் புரியாதொரு அமைதி நிலவுகிறது. தண்ணீரின் அளவு அதிகரித்தால் அந்த தீவுகளும் மெல்ல மூழ்கத் தொடங்கும்.



இப்போதுதான் அந்தப் பயணத்தின் முழு வடிவம் ஓரளவு புரிகிறது. பரிசலில் பயணித்து அந்தத் தீவில் தங்கியிருந்து திரும்புதல். இரவுகளில் தங்க ஏற்பாடுகள் செய்ய முடியும் என்கிறார்கள். ’கேம்ப் ஃபயர்’ என்கிற ஆசையை, பரிசல்காரர்கள் பலரும் பகிர்கிறார்கள். அங்கேயே சமைத்தும் தருகிறார்கள். நடுவே தீவு இரு பக்கத்திலும் ஆறு சலசலக்கிறது. பார்க்க அனுபவிக்க பெரும் சுவாரஸ்யம்தான்... ஆனால் காலின் கீழே ஒரு நதி நகரும் உணர்வுதான்!!!

மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பவில்லை. கபினியின் நீர் திறப்பு குறைந்துள்ளது. ஆகவே திடீர் வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை என்பது நம்பிக்கை. எனினும் சுற்றுலாப் பயணிகளில் பலர் வெகு எளிதாக ஆற்றை, அதன் வலிமையைக் குறைத்தும் மதிப்பிடலாம். எப்போதும் கர்நாடக அணையிலிருந்துதான் நமக்கு நீர் வரும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தமிழக வனத்திலேயே மழை பெய்து, ஓரிரு நாட்கள் பெரும் வெள்ளம் வந்தது நினைவிற்கு வந்தது.

பரிசல் இயக்குவோர் உள்ளூர்க்காரார்கள் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு ஆற்றைக் கையாள்கிறார்கள். அந்தப் பகுதியெங்கும் பரிசலில் வந்து வலை வீசி மீன் பிடிக்கிறார்கள். பரிசலில் மீன் பிடிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. துடுப்பு போட்டு நதியின் போக்கிற்கு எதிராகவும் கூடச் செல்ல முற்படுகிறார்கள். அவர்களால் எந்தச் சூழலையும் கையாள முடியும். பிறப்பு முதலே ஆற்றோடு புழங்குகின்றவர்கள். நீர் மட்டம் குறித்து அவர்களுக்கு ஒவ்வொரு அங்குலத்திலும் அளவு தெரியும். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாதிரியான சூழல்கள் மிக நிச்சயமாக கையாள்வதற்கு உகந்ததல்ல.

தீவு முழுக்க தாரை தாரையாய் நீர் ஓடிய தடங்கள். முந்தைய நாள்வரை ஓடிய நீர் ஆங்காங்கே தேங்கியபடியும். மரத்தின் வேர்கள் மிரட்டும் வண்ணம் முறுக்கிக் கிடக்கின்றன. எங்கோ வெட்டப்பட்ட மிகப் பெரிய மரமொன்று தீவின் மத்தியில் இரண்டு மரத்திற்கு இடையே சிக்கிக்கொண்டு கிடக்கின்றது. தண்ணீர் வருகையில் நனைவதும், வெயில் வருகையில் உலர்வதுமான வாழ்க்கை.


எங்களைப் போன்றே இருபது முப்பது பேர் நான்கைந்து பரிசல்களில் வந்து தீவில் உலவிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் சமையல் நடக்கிறது. பரிசலில் மசாஜ் செய்வோரை அழைத்து வந்தவர்கள் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். தீவின் கரையோரம் குளித்துக்கொள்ளலாம். குளிக்கும் இடத்தில் மணலாகவும், தண்ணீரின் வேகம் குறைவாகவுமே இருக்கின்றது. சுவாரஸ்யமான, சுகமான அனுபவம்தான். ஆனால் காவிரி எனும் பெரும் நதியின் மத்தியில் இருக்கிறோம் என்பது மட்டுமே செல்லமாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த தீவின் இன்னொரு குறிப்பிடத் தகுந்த அழகு பரவிக் கிடக்கும் கூழாங்கற்கள். தூக்கவே முடியாத பருவத்திலிருந்து தேய்ந்து மணலாகும் பருவம் வரையென அழகழகான கூழாங்கற்கள். கையோ காலோ உரசினால் அத்தனை மிருதுவாக இருக்கிறது. தங்களுக்குள் நதியின் குளுமையை எப்போதும் பதுக்கி வைத்திருப்பவை அவை.


கைகள் ஒவ்வொரு கல்லையும் வருடும்போது, அது உடைந்து புரண்ட இடம் எதுவாக இருக்கும், அதன் பயணத்தொலைவு எவ்வளவாக இருக்கும், எத்தனை நூற்றாண்டுகள் உருண்டிருக்கும் என்பதிலேயே மனம் உழலத் தொடங்குகிறது. இயற்கையின் ஆகச் சிறந்த படைப்புகளில் என்னளவில் கூழாங்கற்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு.

அனுமதியின்றி ஆற்றின் நடுப்பகுதிக்குள் உட்புகுகிறோம் எனும் கூச்சம் அந்த தீவில் நுழைவோரில் எத்தனை பேருக்கு இருக்குமெனத் தெரியவில்லை. சமதளத்து நிலத்தை ஒழுங்கீனங்களோடு கையாளும் அதே சராசரி மனோபாவத்துடனேயே இங்கும் அந்த துண்டு நிலத்தைக் கையாள்கிறார்கள் என்பதற்கு நிறையச் சான்றுகளை விட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வீசப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக்களும், கண்ணாடிப் பாட்டில்களும் பட்டவர்த்தமான உதாரணங்கள்.



பிஸ்கட் காகிதங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், சீகைக்காய் பாக்கெட்டுகள் என எல்லாவித ப்ளாஸ்டிக்களையும் தயவு தாட்சயண்யம் இன்றி விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அங்கு புழங்கும் மனிதர்களின் எண்ணிக்கைகளை ஒப்பிடும்போது இவை அநியாயமான அளவு. அவையாவும் மேட்டூர் அணைக்கு வந்து காவிரி வழியாகவும், கால்வாய்கள் வழியாகவும் நம்மை ஏதோ ஒரு மட்டத்தில் நெருங்கவே செய்யும்.

பாட்டில் பொறுக்கிறவர்கள் அவ்வப்போது வந்து எடுத்துச் சென்றுவிடுவார்கள் என பரிசல்காரர் சொல்கிறார். எனினும் நிறைய பாட்டில்களைக் காண முடிந்தது.

கண்ணாடிப் பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. முழுப்பாட்டில்களாக விட்டு கூழாங்கற்கள் நகர்வில் உடைந்தவை சில பாட்டில்களாக இருக்கலாம். பெரும்பாலான பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டு உடைக்கப்பட்டவை. குடித்துவிட்டு அந்தக் குப்பியை ஓங்கியடித்து உடைப்பதில் இருக்கும் வன்மம் இதுவரை புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் பரிசல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுமார் 400 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.


ஒகேனக்கல் தேவைக்கு மட்டுமல்லாது கர்நாடகா மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கும், இங்கிருந்து மூங்கில் பரிசல்கள் செய்து அனுப்படுகின்றன. பச்சை மூங்கில்களை மெலிதாகச் சீவி, அந்த சிம்புகளைக் கொண்டு பரிசல்கள் வேயப்படுகின்றன. அதன்மேல் உறுதியான பாலித்தீன் ஷீட் போர்த்தப்பட்டு தார் பூசப்படுகிறது. மேலும் அதன் மேல் மற்றொரு ஷீட் போர்த்தப்பட்டு அதன் மீதும் தார் பூசப்படுகிறது.



இப்படித் தயாரிக்கப்படும் பரிசல்கள் 4500 முதல் 6000 ரூபாய் வரை விலை போகின்றன. ஒகேனக்கல்லிற்கு மறுபுறம் இருக்கும் கர்நாடக வனத்தில் இருக்கும் மூங்கில்களே இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இரண்டு நபர்கள் முழு மூச்சாக வேலை செய்தால் ஒரு நாளில் ஒரு பரிசல் தயாரிக்க முடியும் என்கிறார்கள்.

இவற்றிற்கு மாற்றாக ப்ளாஸ்டிக் பரிசல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை தோல்வியடைந்ததாகவும் சொல்கிறார்கள். ப்ளாஸ்டிக் பரிசல்கள் இயக்குவதற்கு எளிதாக இருந்தாலும், காற்று வீசும்போது கட்டுப்படுத்த முடிவதில்லையென்பதால் மீண்டும் மூங்கில் பரிசல்களுக்கு மாறிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

தீவிலிருந்து மதியம் அறைக்குத் திரும்பும்போதே பசி ஆட்சி செய்து கொண்டிருந்தது. நண்பர் ஜெயபாலனின் சகோதரர் அளித்த விருந்தோம்பல். பசியும் ருசியும் போட்டி போட... மீனும் சோறும் என இரையெடுத்த மலைப்பாம்பு போல ஆனோம். மாலையே கிளம்பும் திட்டமிருந்தது. ஓய்வெடுத்துவிட்டு அருவியா, அருவிக்கு போய்விட்டு வந்து ஓய்வா என்பதில் அருவியைத் தேர்ந்தெடுத்தோம்.



வார நாள் என்பதால் மிக குறைவான மக்கள் நடமாட்டம் மட்டுமே. போகும் வழியெங்கும் சாப்பாடு செஞ்சு தரனுமா? மீன் பொரிச்சுத் தரனுமா என பெண்கள் கேட்கிறார்கள். மீன் மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்தால் விரும்பிய வண்ணம் சமைத்தும் தருகிறார்கள். ஆயில் மசாஜ் வேண்டுமா என வரிசையாய் ஆண்கள் கேட்கிறார்கள்.

இந்த வருடம் மே மாத சீசன் மிக நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர். பொதுவாக மே மாத வருமானம் தான் பெரும்பாலானோருக்கு ஒரு வருடத்தின் செலவுகளைத் தீர்மானிக்கின்றன. வழக்கமாக மே மாதம் வறட்சியில் காய்ந்து போயிருக்கும். இந்த முறை கோடை மழை தமிழக வனப்பகுதிகளில் நன்கு பெய்ததால், அருவியில் நீர் இருக்க, சீசன் மிகப் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்திருக்கிறது. மற்றபடி வார நாட்கள் மட்டுமே ஓரளவு பயணிகள் வந்து போகின்றனர்.

நீர் வரத்து மட்டுப்பட்டிருந்ததால் அருவியில் குளிக்க அனுமதியளித்திருந்தார்கள். அருவிக்குச் செல்லாமல் ஓரமாய் பிரிந்தோடும் சிற்றோடை நீரில் அமர்ந்தபடி தண்ணீரை அள்ளியள்ளி மேலே விட்டுக்கொண்டபடி சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

படியிறங்கினால் அருவி. இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதி. கூட்டம் இல்லாததால் மகிழ்வாய் பொறுமையாய் குளிக்க முடிந்தது.

அருவிக்கு மேற்புறத்தில் தொங்கு பாலம் அமைத்து அருவியைப் பார்வையிட அனுமதிக்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும்போது, பிரவாகம் எடுத்துச் சரியும் அருவிக்கு முன், நாங்கள் குளித்த அருவி மிகச் சிறியதாகத் தெரிகிறது.


பேரருவியாய்ப் பாயும் நீர் புகையாய் மேலெழும்புகிறது. ’ஒஹே’ என்றால் கன்னடத்தில் புகை என்றும், அதன் அடிப்படையில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாக பரிசல்காரர் சொன்னது நினைவிற்கு வந்தது.

காடுகளையும் வனங்களையும் கடந்து, தன்னத் தானே சலித்து, ஒவ்வொரு கணத்திலும் தன்னைப் புதிதாக்கிக்கொள்ளும் காவிரி தமிழக எல்லைக்குள் முதன்முதலாக ஒகேனக்கல்லில் வீறு கொண்டு விழுகிறது. அது விழும் கணம் தோறும், அது சார்ந்த ஒவ்வொருவரின் வாழ்வும் நிமிர்ந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர் பாசனத்தில் வாழ்வமைந்த எனக்கு என்றுமே காவிரி மிகுந்த பிரியத்திற்குரியது. இந்த முறை என்னவோ இன்னும் நெருக்கமாய் மாறியிருக்கிறது. <3 span=""> நனைந்த மனதோடு வீடு நோக்கி...

பயணத்தில் உடன் வந்த நண்பர்களுக்கு நிறைந்த பிரியங்கள்.... வாசிப்பினூடே வருவோருக்கும்!

Jun 15, 2018

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? - விமர்சனம்

கிளையிலிருந்து வேர் வரை வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடக்கவுள்ள நிலையில், பூங்கொடி பாலமுருகன் அவர்களின் விமர்சனம்

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? நெஞ்சைப் பிளந்து, உணர்ச்சிகளைக் கிளறி கண்கள் பனிக்கச் செய்யலாம்; கதறியழவும் வைக்கலாம்; கடல் பார்த்த சிறு பிள்ளை போல் கைதட்டி மகிழ வைக்கலாம்; செய்யும் பிழைகளை விரல் நீட்டிச் சுட்டலாம்; நாம் காணாத உலகங்களை கண்ணெதிரே நிறுத்தலாம்; கண்ட காட்சிகளை கவிதைப்படுத்தவும் செய்யலாம்; இன்னும் எத்துணையோ செய்யலாம். அத்துணையும் திறம்பட செய்கிறது ஈரோடு கதிர் அவர்களின் கிளையிலிருந்து வேர்வரை நூல்.

இலக்கியவாதிகள் மட்டும் புரிந்து கொள்ளும் ரகம் இல்லை. பாமரனும் புரிந்து கொள்ளும் வரம் இந்நூல். இதில் எங்கும் மிகைப்படுத்துதல் தென்படவில்லை. கதிர் அவர்கள் கண்ணோரம் கண்டவற்றை , காதோரம் கேட்டவற்றை, தன் நெஞ்ச குமுறல்களை சொல்லாக்கி இந்நூலை தந்திருக்கிறார். ஒவ்வொரு தலைப்பையும் இயல்பாய் கடக்க இயலாமல் நம் வாழ்வின் ஏதாவது தருணத்தைத் தொடர்புபடுத்தி நினைவுகளில் மூழ்கி பின் சற்று ஆசுவாசப்படுத்திய பிறகுதான் அடுத்த தலைப்பில் பயணிக்க இயலுகிறது.

* தந்தையிடம் கொஞ்சம் கூடுதலாய் தாய்மையை பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்ற நிதர்சனத்தை நமக்கு உணர்த்திதான் நூலையே ஆரம்பிக்கிறார்.

* இயந்திரங்கள் வாழ்வை எளிமைப்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்திய பின்னரும் ஏன் இவ்வளவு பிசியாக இருக்கின்றோம் ? என்ற கேள்விக்கு நம்மை பதில் தேட வைக்கிறார்.

* அளவிடமுடியாத அன்புநூல் பிணைக்கப்பட்ட ஆயாவின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தமுடியாத வெறுமையை நம்மிடம் கடத்துகிறார்.

* சாவதற்கு தேவைப்படும் காரணங்களை விட வாழ கூடுதலாய் ஒரோரு காரணமாவது இருக்ககூடும் என்று கூறி வாழ்தலின் தேவையை வலியுறுத்திச் சொல்கிறார்.

* வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு என நயம்பட உரைத்து சிறகை விரித்து வானம் ஏகி வானத்தை வசப்படுத்த நம்மை விளிக்கிறார்.

* கனத்த இதயத்துடன் பக்கங்கள் கடக்கையில் தீடீரென்று கைப்பிடித்து தேர்நோம்பிக்குக்கு கூட்டிச்சென்று கண்கண்ணாடியும் , ஊதலும் வாங்கி குடுத்து ராட்டினத்தில் ஏற்றி விட்டுவிடுகிறார்.

* புத்தகம் நெடுகிலும் வாழ்வின் அழகியல் தென்படுகிறது. இன்பமும் துன்பமும் எப்படி இயற்கையி்ன் நியதியோ அதுபோல கனத்தமனதுடன் புத்தகத்தில் பயணிக்கும் போது ஒரு இலகுவான கட்டுரையால் மனதை லேசாக்குகிறார். உதாரணத்திற்கு ஆயாவின் இழைப்பை உள்வாங்கி மனம் கனமுற்று இருக்கையில் அட பழுத்த இலைதானே உதிர்ந்து இருக்கிறது, கவலைப்படாதே பயணம் செய்வோம் என லீ குவான் யூவின் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

* தட்டில் விழும் சோற்று பருக்கையின் வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லையே என வருத்தப்பட்டு, தவறாய் இந்த தலைமுறையை வளர்கிறோமோ என சுய கழிவிரக்கத்தில் இருக்கும் போது ஓரம்போ ஓரம்போ என்று நுங்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து நம் கையில் திணித்து மனதை இலகுவாக்குகிறார்.

இப்படி புத்தகம் முழுவதும் இருளும் ஔியும் இயைந்ததுதான் வாழ்க்கை என்று இயல்பாய் சுட்டிக்காட்டிக்கொண்டே வருகிறார்.
மனம் கனத்த வேளையில் கண்ணீரை மறைக்க தனியறை சென்று விடுவேன். பிள்ளைகள் முன் உற்சாகமான அன்னையாய் மட்டுமே வலம் வருவேன். ஆனால் கதிர் அவர்கள் அப்பத்தா சிறுகதை தொகுப்பில் கோடி என்ற சிறுகதை படிக்கும்போது அவரின் உணர்வுகளை சொல்லில் வடித்திருப்பதை படிக்க படிக்க என்னையறியாமல் கேவி கண்ணீர் கொட்டியது. அதைக்கண்ட மூன்று வயதே ஆன என் மகள் தாவி என்னை அவள் நெஞ்சில் சாய்த்து அழாதீங்க அம்மா என்ற தாயாய் தேற்றிய கணம் நெஞ்சில் ஓவியமாய் தங்கிவிட்டது.

புத்தகத்தில் அவரின் தார்மீக கோபங்களையும் தெளிவுறுத்திக்கொண்டே தான் வருகிறார். முத்தாய்ப்பாய் தண்ணீரையும் , உணவையும் வீணடிக்காத சமூகத்தை உருவாக்க வேண்டுகோள் வைக்கிறார்.

மொத்தத்தில் இந்த புத்தகத்தை வாசித்தேன் என்பதைவிட நேசித்தேன் என்றே சொல்லலாம். வாழ்த்துகளும் , நன்றிகளும் பேரன்பும் ப்ரியங்களும் கதிர் ஸார்.

-

May 12, 2018

ஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்




வலியிருக்கிறதா
எனக்கேட்கிறார்கள்
இருக்கிறதெனப்
பதிலுரைக்கிறான்
எப்படி வலிக்கிறதென
வினவுகிறார்கள்
சொல்லத் தெரியவில்லை
ஆனால் கடுமையென்கிறான்
சொன்னால்தானே புரியுமென
நெருக்கடிக்கிறார்கள்

வலி மின்னும் பகுதி
ஒரு கனத்த தேன்கூடு போன்றும்
அடை மொய்க்கும்
ஆயிரமாயிரம்
தேனீக்களின் தீண்டலாய் வலி
மின்னுகிறதென்கிறான்.

உடனடியாக பேச்சு
தேனீக்கள் குறித்தும்
அதன் மருத்துவ குணம் குறித்தும்
தேனின் தரம் குறித்தும் தாவுகிறது.
ஒருவன்
தேனீக்களின் உயிரியல் பெயர்
என்னவெனக் கேட்டிருக்கிறான்
அவனும் இணைந்து
யோசித்துக்கொண்டிருக்கிறான்.

May 7, 2018

எல்லோருக்குமினிய கனியன்

“பிணைந்திறுகும் பித்து” கவிதைக்கு பேரன்பிற்குரிய
ஆசான் அறிவழகன் அவர்களின் பார்வை.
*


எல்லோருக்குமினிய கனியன்
-------------------------------------------
பொதுவாக எழுத்தின் பரிமாணம் என்பது எண்ணத்தின் பரிணாம வளர்ச்சி தானே?... அது
மனநில விதை முளைப்பை கடத்தி வெவ்வேறு
வசதியான தளங்களில் நடுவது என்றே நான் நோக்குகிறேன். எழுத்தின் பரிமாணங்கள் எதுவாக இருப்பினும் கவிதை
என்ற பரிமாணம் மனையாளின்,காதலியின்
அணைப்பில் கிடைக்கும் வெப்ப மூச்சுக் காற்றாய் நமைக் கிளர்ந்தெழச்செய்வது.
உங்கள் கவிதைகளுக்கு நான் ஒரு கலாபக் காதலன்.உங்கள் பதங்களை நான் சுகித்து உன்னிப்பாக அவதானித்தே வருகின்றேன்.

அப்படியே போகிற போக்கில் இசைக் குறிப்புக்களை இசைஞர்களுக்கு ராஜா
வழங்கிச் செல்வது போல் உங்கள் மொழி அந்த ராஜ இசையின் லாவகத்திற்கு இணையாக உங்கள் எண்ணத்தோடு கூடிக் கலவி ஒரு உன்னதத்தையே சிருஷ்டிக்கிறது.
சாதாரணமாய் படித்தால் நீங்கள் மெனக் கெட்டது போலிருந்தாலும்,சரளமாய்,
சுழிப்பாய்,பிரவாகமாய்,துள்ளலாய் உங்கள்
மொழி அள்ளிப் பருகும்,அள்ளி தலைக்கு மேல்
தெளித்துக் கொள்ளும் தீர்த்தம் போல்.

ஆஹா!...
".... வீசியெறியும் வெளிச்சத்தில் ஓவியங்கள் தீட்டுதல்...."
என்ற பதத்தில் கும்மியடிக்கும் அயோக்கியத்தனத்தில்,யோக்கியத்தை பிரித்தெடுப்பது போல்...இதற்கு ஒரு உன்னதமான மனநிலை வேண்டும்.எப்படி பெற்றீர்கள் இதை?..
".... இசைமணிகளைப் பிரித்து மாலையாக்கி
ஆட்காட்டி விரலில் மாட்டிச் சுழற்றுகிறான்..."
என்ன ஒரு தவ மனநிலையிருந்தால் இப்படி
வரிகள் எமை ஆளும்?..ராஜாவின் விரலசைவில் நமை ஆளும் உன்னத சங்கீதம் எழுவது போல இதுவும் ஒரு ராஜ பூபாளம்.
நானும் தான் பார்க்கிறேன்.யோசிக்கிறேன்.
நிலாகிட்ட எனக்கு இப்படி பணியத் தெரியலியே.அந்த பணிவு நிலாவே மோகிக்கும் பதங்கள்.
"...... வேலங்குச்சி நான் வளச்சு
வில்லு வண்டி செஞ்சு தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சிக் கட்டி கொஞ்ச வாரேன்....."
என்ற அற்புதக் கலைஞன்,கவிஞன் R.V.உதயக்குமார் என்னுள் ஊற்றாய்ப் பீறிக்
கொண்டு வந்தான் நீங்கள் எரிந்து விழுந்த நட்சத்திரப் பாதையில் பயணம் போக வேப்பமரக் கிளையுடைத்து ஏணி செய்ய பிரியப்படும் போது. கதிர்!... நீங்க யாரு?..
என்ன வாங்கி வந்திருக்கிறீர்கள்?.எப்படி?.. இந்த பரபரப்பில் இப்படி?.. என்ன விதமான பக்குவம் உம்மிடம்...நினைப்பதையெல்லாம்
படைக்கும் சரஸ்வதி வரம்,குரு கடாட்சம் உங்கள் மேல் அபரிமிதமாய்.வேப்ப மரக்கிளை ஏணியில் ஏறிச் செல்வது சத்தியமாய் சாத்தியம் தான்.இப் பதத்தில்
நான் மேலும் பதமானேன்.

"..... பிரபஞ்சத்தின் செல்ல மகவாய்...."
நாம் இதற்குள் அடக்கம் என்ற தன்னடக்கம்.
"..... உலகையாளும் பேரரசனாய்....."
யப்பா!... காட்டுகிறீர்களே ரூபம்...விஸ்வரூபம்..
அடுத்து சட்டுன்னு குழந்தையாய் பால்யமடைகிறீர்களே...அப்படியே
உங்களை
மகனாய் இரு கைகளிலும் ஏந்தி,இரு தோள் சாய்த்து,தட்டிக் கொடுத்து,"... கண்ணே!.. கலைமானே!..." என்று பாட வேண்டும் போலுள்ளது.பொக்கிஷம் நீ... உனக்குத் தேவை நல்லவர்களின் தாலாட்டு...என் தாலாட்டு இதை பிரசவித்த விரல்களை நீவி
தடவி சொடக்கு எடுப்பது...இது நான் உனக்களிக்கும் வெகுமானம்.உனக்கு தாலாட்டுப் பாட இன்னும் வருவார்கள்.
நல்லூழ் என்று சொல்வார்களே...நல்லுழலுதல்
என்று சிலாகிப்பார்களே... மேற்கண்ட நம்மைப்
பிணைத்துள்ள அழகியல் தளைகளை தள்ளிவிட்டு, உதறிவிட்டு நம்மால் வானேக முடியுமா கதிர்?... நம்மை நாமே காதலிக்கும்,
நம்மைப் போல பிறரைக் காதலிக்கும் யோக மனநிலை வாய்த்தவருக்கு அது பிணைந்திறுகும் மாயக்கயிறு.சிறகடித்துப் பறக்கும் மாயவெளி.விரும்பிச் செல்லும் மாயத்திசை.நீ..மாயன்.
பதங்களை ஒவ்வொன்றாய்ப் பதம் பிரிக்க
என் மென்முக்குகளை தொட்டுத் தடவி மேலும்
புதுப்பித்து உயிர்ப்பிக்கிறாய்..என் நாளமிலா
சுரப்பிகளில் தேனாய் சுரக்கிறாய்.நான் தேடும்
உன்னதத்தில் நானும் உன்னதம் தான் என்று என் முன் வந்து உன்னை ஏந்திக் கொள் என்கிறாய்.சின்ன சின்ன நாசூக்கான இழைகளில் உலகை விலை பேசுகிறாய்.நான் காதலித்துக் கொண்டிருக்கின்றேன் உன்னை...உன் ஆளுமையை...
இதை எழுத,எழுத...மகேந்திரனின் 'கண்ணுக்கு மை எழுது'படத்தில் ராஜா பாடும் இப்பாடல்
எனை இன்பமாய் இம்சிக்கிறது.
"....பூவே!.. நீ நானாகவும்...
நீயும் என் தோளாகவும்....ஆசை..
அது ஈடேறட்டும்...எந்தன் கை கூடட்டும்..
இது என் ஆசைகள் இங்கு அரங்கேறட்டும்..
வண்ணப் பூவே!... நீ நானாகவும்...
நீயும்...என் தோளாகவும்....
வாழ்வென்பது....
வாடும் பூங்காற்றில் பூப் போன்றது...
பூவென்பது ...
நாளை எண்ணாமல் கூத்தாடுது....
பூ பூத்ததும் அது பிஞ்சாகுது...
பிஞ்சானதும் அது காயானது...
அந்தக் காயும்....அது கனியானது...
அது போல் தான் மனம் வளர்கின்றது...
என் வாழ்க்கையும் அது போலானது...
பூவே!... நீ...நானாகவும்...
நீயும்...என் தோளாகவும்......ஆசை......"
இப் பாடலுக்குப் பொருத்தமானவன் நீ...
நீ...ஒரு மானுடக் கனி...எவருக்குமினிய கனியன் நீ...என்றும் நிற்கும் பூங்குன்றன் நீ...
வாழிய கதிர்!!.... வாழிய பல்லாண்டு!!!....
ஜீவிதமான இலக்கியம் போல்....
உயிரமுது போன்ற கவிதை போல்...
என் எழுத்து வழியாய் நான் இளைப்பாற உன்
மடி தந்ததற்கு நன்றி....உன்னைத் தொழ
எனக்கு சங்கோஜமில்லை...வணங்குகிறேன்..
- சண்முகம் அறிவழகன்
06.05.2018
தாளவாடி.
-
அவர் எத்தனைதான் கவிதைக்காக எழுதினேன் எனச் சொன்னாலும், நான் அதை மறுத்து என் மீதான அன்பிற்காக கனிந்த சொற்களென்றே ஏற்கிறேன்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...