Feb 8, 2016

கீச்சுகள் தொகுப்பு 62



உறக்கம் திருடும் குளிர் தோய்ந்த நடுநிசிக்கு என்ன பெரிதாய் தேவையிருக்கப் போகிறது ஏதோ ஒரு நிறைவின் கொண்டாட்டமோ குறைவின் பசியோ தவிர்த்து

-

தை மாத விடியலில் வந்திருக்கும் மழைத்தூறல் நம்பும்படியாக இல்லை என்பதைவிட நல்லதுக்கு அல்ல என்று மட்டும் புரிகிறது!

-

நான் சொல்றத புரிஞ்சுக்க, சரியா?”என நாம் சொல்லும்போதே புரிந்துகொள்ளவே இயலாத அண்டவெளிக்கு அவர்கள் சென்றுவிட்டனர் என்பதையும் புரிந்துகொள்வோம்

-

காணும் ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் ‘அது அந்தக் குழந்தையின் முகம்’ என ஒப்புக்கொள்ளாமல் யாரோ ஒருவரைத் தேடி, யாரோ போல் இருப்பதாய் சொல்கிறோம்!

-

இப்பவே கேலண்டரை எடுத்துப் பார்த்துட்டு அடச்சே தீவாளி சனிக்கிழமை வருதுனு ஸ்கூலுக்கு போற புள்ளைய என்ன சொல்றது!

-

கொம்பில்லா கலப்பின மாடுகளுக்கு பூ, பொட்டு வச்சு பொங்கல் கொண்டாடுறது, எமி ஜாக்சனுக்கு பாவாடை தாவணி போட்டு தமிழ்ப்பொண்ணா வேசம் கட்டுன மாதிரி

-

மாடுகள் ஏதுமில்லை எஞ்சியிருக்கும் அதன் வாசனையோடு வந்து குவியும் கிராஃபிக்ஸ் மாடுகளின் வாழ்த்துகளோடுதான்... இந்த நாளைக் கடக்க வேண்டும்!

-

வேட்டி தினம் என்பது அன்றைக்கு மட்டும் வேட்டி கட்டி போட்டோ போடுவதற்காக அல்ல... அவ்வப்போது வேட்டி கட்ட வேண்டும் என நினைவூட்டுவதற்காக!

-

வேண்டாம், முடியாது என்பதை வேண்டாம், முடியாது என நயமாகச் சொல்வதுதான் இருவருக்கும் நல்லது!

-

பிரியத்தின் முத்தம் கதகதப்பாகவும், கோபத்தின் முத்தம் குளிர் சூடியதாயும்!

-

50 பைசா காசும் அருங்காட்சியகத்துக்குப் போயிடுச்சா? மார்வாடி டீக் கடைக்காரன் 1 ரூ கேட்டப்போ 2 அம்பது பைசா கொடுத்ததுக்கு அல்பமா பாக்குறான்!

-

புது வருசத்துக்கு எதும் கெட்ட பழக்கத்தை விடணும் நினைச்சா வருசா வருசம் சபதம் எடுக்கிற கெட்ட பழக்கத்தை விடுங்க! :)

-

இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை! ”So..!?” அதனுடைய நீள, அகலத்துக்கும் மகிழ்ச்சியா இருந்துடணும்

-

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்

-

ஒரு குழந்தையின் வார்ப்பு அந்தக் குழந்தைக்காக மட்டுமே செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. இன்னொரு குழந்தை என்பது இன்னொன்றுதான்.

-

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த உலகத்தை சன்னல் வழியே மட்டும் பார்ப்பீர்கள்!

-

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வயதாகவில்லை என மனம் நினைப்பது பிரியமன்றி வேறென்ன!?

-

பொங்கல், கிருஸ்துமஸ், தீபாவளியை முன்கூட்டியே கொண்டாடும் (கல்வி) நிறுவனங்கள் ஏன் விவசாயிகள் தினத்தை அப்படியாகக் கொண்டாடுவதில்லை

-

இருக்கும் பதில்களுக்கு கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

-

கிளைகளில் வைத்தியம் செய்கின்றோம்... சிக்கல் வேர்களில் இருக்கின்றது!

-

டிசம்பர்ல குளிக்கிறவன் வீரன்! அதுவும் பச்சத் தண்ணில குளிக்கிறவன் மாவீரன்!

-

பல்வேறு கதாபாத்திரங்களை வாழ்க்கை வழங்கினாலும், அதில் பிடித்ததாக நினைத்துக்கொள்வதை மட்டுமே சலித்துப்போகுமளவிற்கு திரும்பத்திரும்ப ஏற்கிறோம்.

-



கிடைத்தால் இறக்கைகளை பிய்த்து, கால்களை முறித்து வீசும் அளவிற்கான வன்மத்தை கொசுக்கள் ஏற்படுத்தியிருக்கின்றன!

-

கேரிபேக் வேணாமென மறுக்கையில் கருவம் ஓங்கி வளருதடி!

-

வெளியேறும் வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!

-
இந்த வரலாறு காணாதங்கிற வார்த்தையை நிறுத்தச்சொல்லனும். வரலாறு அப்படியே எதையாச்சும் கண்டிருந்தாலும், இப்ப பிரச்சனை இப்போதைக்கு பெருசுதான்

-

'வாழ்ந்திட' தினம்தோறும் கற்றுக் கொள்வதும், மறப்பதும் அவசியமென்பதே ஆகச்சிறந்த சுவாரஸ்யம்தான்!

-

Feb 5, 2016

ஒரு கல்லூரி மாணவியின் குமுறல் எழுப்பும் பல கேள்விகள்!




அது கிராமப் பகுதியில் அமைந்திருக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரி. பெரும்பாலானோர் வசதி குறைந்த ஏழ்மையான குடும்பத்திலிருந்து சார்ந்தவர்கள், தன்னம்பிக்கை குறைவாகவே இருப்பார்கள் என என்னை அழைத்தவர் சொல்லியிருந்தார். மற்ற கல்லூரி மாணவர்களிடையே பேசுவது போன்றேதான் இங்கேயும் பேசினேன்.

தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் கல்வி வாய்ப்பு, இதற்காக சமூகமும், பெற்றோர்களும் செய்திருக்கும் தியாகங்கள் குறித்துத் துவங்கி, அவர்களின் இலக்கை இனங்காணுதல், அதை நோக்கிய பயணத்தில் தன்னம்பிக்கையோடு செயல்படுதல் குறித்துப் பேசினேன்.

நிகழ்ச்சி குறித்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கேட்பு நடந்தது. அப்போது கூட்டத்தின் கடைசி வரிசையிலிருந்து ஒரு மாணவி எழுந்து வந்தார். ஒருங்கிணைப்பாளர் ஒலிவாங்கியை அவரிடம் கொடுக்க முனைந்தார். அவர் மறுத்து முன்னோக்கி வந்தார். நிறுத்தி ஒலிவாங்கியைக் கொடுக்க முற்பட "நான் மைக்ல பேசல, தனியா பேசணும்" என்றபடி என்னை நோக்கி வந்தார்.

"நீங்க குடிகாரங்களப் பத்தி சொன்னீங்ல்ல… நெறய பிரச்சனைங் சார்… எங்கப்பா தெனமும் குடிக்கிறாரு… நான் சாவணும்… இல்லீனா கொல பண்ணனும் சார்" எனத் திக்கித்திணறி உடைந்த சொற்களாக உதிர்க்கும்போதே, கண்கள் நிரம்பிவிட்டன. மொத்தக் கூட்டத்தின் கவனமும் அங்கு திரும்பியது.

"மீட்டிங் முடியட்டும்மா… நாம பேசுவோம்… உறுதியா கூப்புட்டு பேசுவேன். இப்ப உக்காருங்க…" என்ற சமாதானத்தை ஏற்றுக்கொண்டவராய் தன் இடத்திற்குத் திரும்பினார். மேலும் மாணவ, மாணவிகள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

*

ஈரோடு மாவட்டத்தில் ஒரு குடிகாரக் கணவர் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் விற்றுக் குடிக்கிறார். 5, 2 வயதுகளில் குழந்தைகள். மனைவி வேலைக்குச் செல்வதால் அடுப்பெரிகிறது. 2 வயது கைக்குழந்தை வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் சூழலில், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரையும் விற்று ஒருநாள் குடித்துவிட்டு வருகிறார். சண்டை முற்றுகிறது. சண்டையின் உச்சத்தில் ஏற்பட்ட கோபத்தில் வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கிறதே என குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுகிறார் தாய். வழக்கு நடக்கிறது. ஏழு வருடங்கள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக செய்தி.

*

மதுரையில் கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்கிறாள் மனைவி. கணவன் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்ததாகவும், மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் ஏற்கனவே புகார் இருக்கின்றது. சம்பவத்தன்றும் குடி போதையில் மகளிடம் தகாத முறையில் நடக்க முற்பட கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொள்கிறார் மனைவி. நேரடியாக விசாரித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அந்தப்பெண் மீது வழக்கு தொடுக்காமல் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்கிறார்.

*

மேற்கண்ட இரண்டு வழக்கு உதாரணங்களை உரையின் நடுவே நான் குறிப்பிட்டுப் பேசியிருந்ததுதான், அத்தனை பேர் மத்தியிலும் அந்தப் பெண்ணை என்னிடம் பேசத் தூண்டியிருக்கிறது என்பது புரிந்தது.

அடுத்த கூட்டத்துக்காக அருகில் உள்ள பள்ளியில் அரையாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள் காத்திருக்க, மேலும் தாமதம் செய்ய முடியாத சூழல். வாக்குறுதி கொடுத்ததுபோல் ஓரிரு நிமிடங்களேனும் பேசியாக வேண்டும் எனப் பேராசிரியரிடம் கூறி அந்த மாணவியை அழைக்கக் கோரினேன். அந்தப் பெண் வந்தார்.

"சார் லைஃப்ல ஏகப்பட்ட பிரச்சனைங் சார். கூட்டத்தில் நீங்க பேசின எதையுமே கேக்காமத்தான் ஒக்காந்திருந்தேன். குடிகாரங்க பத்தி நீங்க சொன்னப்புறம்தான் கவனிச்சேன். அதுதான் உங்ககிட்ட பேச வந்தேன் சார்" என்றார். கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

அருகில் பலர் நின்று கொண்டிருந்த சூழலும், பள்ளியில் மாணவர்கள் காத்திருப்பதும் தொடர்ந்து பேசும் மனநிலையைத் தரவில்லை.

"என்னம்மா படிக்கிறே!?"

"தேர்ட் இயர் சார். அம்மா செத்துட்டாங்க சார். அப்பா குடிகாரர். அசிங்கமா திட்டுவார். என் பிரச்சனைக்கு… நான் ஒண்ணு செத்துப் போகணும் சார்… இல்லீனா எப்படியாச்சும் கொலை பண்ணீறனும் சார்."

கதறி அழுதுவிடுவாரோ என்ற அச்சம் வந்தது.

"ம்ம்ம்ம்… புரியுதும்மா… உம் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும். என்னால முடிஞ்ச உதவி செய்றேன். இப்ப தப்பா நினைச்சுக்காதே. உண்மையாவே இப்ப நேரம் இல்ல. இந்தச் சூழலிலும் இதப் பேச வேணாம். எல்லாரும் உன்னையே பார்த்துட்டு இருக்காங்க. உங்கிட்ட செல்போன் இருக்குதானே? என்னோட நெம்பர் தர்றேன். நாளைக்கு எனக்கு ஒரே ஒரு போன் பண்ணு. இல்லைனா இங்க இருக்கிற மேடம்கிட்ட சொல்லி உன்கிட்ட பேசச் சொல்றேன்."

நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தவரிடம், "அந்தப் பொண்ணுக்கு என்னவோ பிரச்சனை இருக்கு. ஒரு எமோஷன்ல என்கிட்ட பேசியிருக்கு. அநேகமா நாளைக்கு என்கிட்ட பேசாமகூடப் போகலாம். நீங்க அந்தப் பொண்ணுகிட்டப் பேசி, என்னனு கேட்டு உதவமுடியுமானு பாருங்க" என அறிவுறுத்தினேன்.

*

சமீப நாட்களில் மாணவ, மாணவியர்களை மரணம் பெருந்தாகத்தோடு தீண்டத் துவங்கியுள்ளதை காண முடிகிறது. வகுப்பறையில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவர், ஒன்றாம் வகுப்பு மாணவரை அடித்துக் கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவர் என மாணவர்களே கொலையில் நேரடியாகப் பங்கெடுப்பதையும் கண்டு வருகிறோம். அடுத்தடுத்துக் காண்கையில், இதுவும் சாதாரணம்தான் என பழகிப்போகும் ஆபத்துண்டு.

தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் தெளிவற்ற அடையாளங்களோடு நிகழ்ந்திருக்கும் மாணவிகளின் மரணங்கள் மிகப்பெரிய மிரட்டலை விடுத்திருக்கின்றன. அரசும், சமூகமும் இந்த அச்சுறுத்தலை எவ்விதம் கையாள்கிறது என்பதில் தெளிவில்லை. கையாள்கிறதா அல்லது அடுத்த பரபரப்பில் கை கழுவிக் கடந்து போகிறதா!? தன்னையே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகளில், அதில் பலியாகும் பிள்ளைகள் மட்டுமே பொறுப்பாகிவிட முடியாது.

மாணவப் பருவமென்பது படிப்பதற்காக மட்டுமே என்பது எழுதப்படாத சட்டமாக நடைமுறைப் படுத்தப்படுகின்றது. போட்டியும் அழுத்தமும் மதிப்பெண்களைத் தாண்டி சிந்திக்க அனுமதிக்காமல் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்குகிறது. பெற்றோர், உற்றார், சேவையாற்றும் ஆசிரியர்கள், வணிகமாக நடத்தும் கல்விக்கூட முதலாளிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரிகளின் வாயிலாக தாம் விரும்பும் வகையில் அல்லது தனக்கு பயன்கிட்டும் வகையில் பிள்ளைகளை மாணவர்களாக, மாணவிகளாக தொடர்ந்து கட்டமைக்கிறார்கள். அந்த நோக்கம் மிகத் தெளிவானதாகவோ, நியமானதாகவோ இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியவில்லை. கல்வி தவிர்த்து பிள்ளைகளிடம் சொல்லவோ, கேட்கவோ ஒன்றுமேயில்லை என ஒட்டுமொத்தமாக அனைவருமே தீர்மானித்ததுபோல் தான் நடந்துகொள்கிறோம்.

மாணவ, மாணவிகளின் உலகம் ஒரு பிள்ளையின், ஒரு உயிரின், ரத்தமும் சதையுமான ஒரு மனிதப் பிறவியின் உலகமாகக் கருதப்படாமல், மாணவ உலகமாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. மாணவ மனதோடு அவர்கள் எடுக்கும் முடிவு மற்றும் செய்யும் செயல்பாடுகளுக்கும், ஒரு மனிதப் பிறவியாக அவர்கள் எடுக்கும் முடிவு, செய்யும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதை எங்கே, எப்படி, யார் அவர்களிடம் சேர்க்க அல்லது புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறோம்.

நினைத்தது போலவே அந்த மாணவி என்னைத் தொடர்புகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கல்லூரியில் அந்த மாணவியை அழைத்து பேச்சு கொடுக்கிறார்கள். அம்மா இல்லாத வீடு. அப்பா பயங்கர குடி. வீடு திரும்ப நடுநிசி ஆகிறது. வந்தாலும் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் அசிங்கமான திட்டு. ஒரு நாள் இரவு தனியே வீட்டில் இருந்த பெண்ணிடம் தவறாக நடக்கும் நோக்கத்தோடு இரண்டு பேர் வீட்டுக்குள் புகுந்துவிட, அவள் கத்தியதில் ஓடிவிட்டனர். அப்பாவை திருத்தவே முடியவில்லை. நாளுக்கு நாள் சிக்கல் அதிகரிக்கிறது. இப்போதை மனநிலை ஒன்று அப்பாவைக் கொன்று விடவேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதுபோல் அவளுக்கு இருக்கின்றது.

நான் பேசிய உரையில் இருந்த இரண்டு சம்பவங்கள்தான் அந்தப் பெண்ணை உடையச் செய்திருக்கிறது. அதன் மூலமே அவர் தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்பை அடைந்திருக்கிறார். அதன் வழியே இப்போதைக்கு தன் பிரச்சனையை பகிர்ந்து கொள்ள ஒருவரையும், அதோடு உதவிகளை எட்ட, பாதைகளை இனம் காணும் வாய்ப்பினை அடையும் சாத்தியம் நிகழ்த் துவங்கியிருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவல்படி, அந்தப் பெண்ணுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களின் உரிய அரவணைப்பில் இருப்பதாகவும் அறிந்தேன்.

*

மேலே குறிப்பிட்ட அவ்விரு கொலைச் சம்பவ உதாரணங்களை நான் மூன்று நான்கு கூட்டங்களில் பகிர்ந்ததாக நினைவு. சுமார் ஆயிரம் பேர் வரை கேட்டிருக்கலாம். ஆயிரம் பேரில் ஒரே ஒரு பெண்ணின் ஓடு மட்டுமே அந்த உதாரணத்தால் உடைந்திருக்கிறது, அல்லது உடைந்ததை ஒருத்தி மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். பல நூறுபேருக்கு அதுபோன்ற பிரச்சனைகளே இல்லாமல் இருக்கலாம். சில நூறு பேருக்கு ஓடு உடையாமலோ, வெளிப்படுத்தும் மனம் இல்லாமலோ இருக்கலாம்.

நாம் பகிர்ந்திடாத சில உதாரணங்களையும், அவர்கள் பகிர்ந்துகொள்ளாத பல பிரச்சனைகளையும் எவ்வாறு ஒன்றிணைக்கப் போகிறோம். ஏதோ ஒரு தலைப்பில் பேசும்போது ஏதோ ஒரு சொல், சொற்றொடர், உதாரணம் அவர்களின் ஓட்டினை உடைக்குமென உத்திரவாதம் தரமுடியாது. அவ்வாறு ஓட்டினை உடைப்பது என் போன்றவர்களின் கூரிய நோக்கமாகவும் இருப்பதில்லை. சாத்தியமும் கிடையாது. பல நேரங்களில் காக்கை உட்கார பனம்பழம் விழும் கதைதான்.

மாணவர்களை கல்வி அல்லது மாணவ நிலை என்பதையும் தாண்டி அவர்களும் நம்மைப்போல் ரத்தமும் சதையுமாய், மகிழ்ச்சியும், சிக்கல்களும், பிரச்சனைகளும், உளைச்சல்களும் கொண்ட வாழ்வைத்தான் கடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதை எவ்விதம் கையாள வேண்டும் என்பதற்கான கண்டறிதல், ஆலோசனைகள் அளித்தல்கள்தான் அவர்களை தம் பிரச்சனைகளிலிருந்து சரிசெய்ய உதவும்.

பொதுவாக மாணவக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பின்னால் அவரவர் நிலை, சூழல் மற்றும் தேவைக்கேற்ப அழுவது, கலங்குவது, பொங்குவது அல்லது அரசியலாக்குவதுதான் நிகழ்கிறது.

அது சரி… ஏன் நாம் "வரும் முன் காப்போம்" என்ற வரிகளை மறந்து போனோம்!?

-

நன்றி : தி இந்து

-

Jan 29, 2016

கருத்துசொல்லும் கருப்பாயி பாட்டி






”என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” புகழ் ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஜீ தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. சுதா சந்திரன் ஒரு பெண்மணியோடு பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் தன்மேல் யாரோ ”பீய்ங்...பீய்ங்” (ஆமாங்க…. அதேதான் பீப் சவுண்டை ஒரு பாதுகாப்புக்காக பீய்ங்… பீய்ங்னு போட்டிருக்கேன்) எனும் ஒருவர் மலையாள மாந்திரீகம் மூலம் ஆவியை ஏவி விட்டு தன்னுடைய ஸ்பிரிட்டை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக புகார் சொன்னார். அந்த ஆவி அவரை உடல் ரீதியாக பாலியல் தொந்தரவு செய்வதாகவும் சொன்னவர். போகிற போக்கில் ”ஆவிகளிடையே விபச்சாரம்” நடப்பதாகவும் கூட ஒரு வரி சொன்னார். விறுக்கென நிமிர்ந்தபோது “”என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” என்ற வரி மனசெங்கும் அசரீரியாய் ஒலித்தது

அவர் பேசுவது மிகத் தெளிவாகவும், சரியாகவும் இருப்பதாகவே தோன்றுகிறது. படபடவெனப் பேசினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் பதட்டமின்றிப் பேசுகிறார். 2008 ஆம் ஆண்டு துவங்கி அந்த ஆளின் ஆவி தன்னைக் கட்டுப்படுத்தி வருவதாக புகார் சொல்கிறார். தன்னோடே அந்த ஆவி இருப்பதாகவும், தன்னை நெருங்கும்போது தள்ளி விடுவதாகவும் சொல்கிறார். தற்போது அரங்கில் ஆவி தென்படுகிறதா எனக் கேட்டால், இங்கு வரவில்லை என்கிறார்.

நிகழ்ச்சியாளர்கள் அவருக்குத் தீர்வு காண்கிறோம் என திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த மூவரை அழைத்து வந்தார்கள். அதில் இருவர் வயதானவர்கள். சடை முடி தரித்தவர்கள். மூவரும் இணைந்து ஏதோ பூஜையெல்லாம் செய்தார்கள். ஒருவர் நீண்ட நேரம் சமஸ்கிருத மந்திரம் சொன்னவர், அந்தப் பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, துர் ஆவிகள் தொந்தரவு இல்லை என்றார். உடன் இருந்த பெரியவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண்ணுக்கான எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனச் சொல்லிவிட்டு கிளம்பினர்.

பாதிக்கப்பட்ட பெண்மணி இது குறித்து கமிஷனரிடம் புகார் அளித்திருப்பதாகவும், பல அதிகாரிகளிடம் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். வழக்குரைஞரோடு தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருவதாகவும் கூறினார். இந்தப் பிரச்சனையால் மட்டுமே ஐ.டி வேலை மற்றும் அரசு வேலையை இழந்ததாகவும் கூறினார்.

இதேபோல் ஒரு ஆளை 15 வருடங்களுக்கு நான் முன்பு சந்தித்தது நினைவிற்கு வருகிறது. ஆள் உருக்குலைந்து இருப்பார். கரித்துண்டில் கிறுக்கப்பட்டது போல் புரியாத சொற்களில் எழுதப்பட்ட ஒரு காகிதத்தோடு வருவார். தன்னை மிரட்டும் ஆவிகள் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் மனு தட்டச்சு செய்து தரச்சொல்வார். சரியாகப் பேச்சு வராது. என்னேரமும் இரண்டு தாடைப் பற்களையும் மென்றுகொண்டே இருப்பார். காற்றில் கையை வீசுவார். தட்டச்சு செய்து தர எவ்வளவு காசு வேண்டுமானாலும் தருவதாக பையிலிருந்து காசை அள்ளுவார். முடியாது என எப்படிச் சொல்லி மறுத்து அனுப்பினாலும் அரை மணி நேரம் கழித்து, அப்போதுதான் புதிதாக வருவது போல் வருவார். இன்று முடியாது நாளை பார்க்கலாம் எனச் சொல்லித் தப்பிக்கப் பார்த்தால், அடுத்த நாள் அலுவலகம் திறக்குமுன்பே வந்து நின்று கொண்டிருப்பார். அப்பொழுது அந்த ஆளை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் என்னவென்னவோ சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது. இன்னொரு முறை அந்த ஆளை பார்த்துவிடக் கூடாது என்பதே அந்த நாளைய வேண்டுதல்களாக இருக்கும்.

நிகழ்ச்சி அரங்கில் அடுத்ததாக ஹிப்னாடிசம் மூலம் சிகிச்சை அளிக்கும் ஒரு பெண்மணியை அழைத்தார்கள். அவர் தெளிவாகப் பேசினார். பாதிக்கப்பட்டிருக்கும் பெண்மணியின் சூழல், அவரின் தனிமை, அப்படியானவர்களின் மத நம்பிக்கை மீதான ஈடுபாடு, சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலில் பலியாகியிருத்தல் என பல காரணிகள் இன்றைய பிரச்சனைக்குக் காரணமாக இருக்கலாம் என்றார்.

தீர்வாக முதலில் அவர் அமைதி அடையவேண்டும், அதற்காக சில மாத்திரைகள் மூலம் அவரைக் கட்டுப்படுத்த அவர் சம்மதிக்க வேண்டும், அடுத்து சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டால், ஆழ் மனதில் இருக்கும் சிக்கலைக் கண்டு சரி செய்ய முயற்சி செய்யலாம் என்றார்.

இதையெல்லாம் கேட்கும்போதே இடை மறித்த பாதிக்கப்பட்ட பெண்மணி தனக்கு அமைதி இருப்பதாகவும், தன்னைக் கட்டி வைத்திருப்பதிலிருந்து அவிழ்த்துவிட்டால் மட்டும் போதுமென்றும் முரண்டு செய்ய ஆரம்பித்தார். இது ஒருவகையில் எதிர்பார்த்ததுதான். அதோடு பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என்று, தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வது போல் ஏதோ சொல்லிவிட்டு எழுந்து செல்ல ஆரம்பித்தார்.


என் அருகில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு 80 வயது கருப்பாயி பாட்டியை பேய், பிசாசுகள் குறித்து எதேனும் அனுபவங்களைச் சொல்வார் எனும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தேன்....

“எந்தப் பெசாது கிழிக்கிதாம்... அவுளுக்கு மனசுல என்னுமோ பிரச்சன இருக்குதாட்டோ. இப்டியேருந்தானா பைத்தீகாரி தா ஆவா” எனத் தீர்ப்பு சொன்னார். 

ஓரிரு கோடிகள் உதவி செய்வற்காக நம்மில் பலரும் கொண்டாடும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மாபெரும் வெற்றியடையும் பேய்ப் படங்களை மட்டுமே, அதுவும் குழந்தைகள் வெறித்தனமாக பார்க்க விரும்பும் வகையிலான படங்களை எடுப்பது குறித்து அந்த ஆயாவிடம் பொறுமையாக ஒருநாள் கருத்துக் கேட்கவேண்டும்.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...