Jun 19, 2013

விபத்துகள் எனப்படும் படுகொலைகள்



புதுக்கோட்டை விபத்தில் இறந்த குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். நடந்துபோகும் வழியில் வந்த பால் வண்டியில் ’லிப்ட்’ கேட்டு ஏறி, பேருந்துமோதி இறந்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. 

குங்குமம் இதழில் வெளியான கட்டுரை




இந்த நிலையில்….


விபத்தின் காரணமாய் அரசு வழக்கம்போல் விழித்துக்கொண்டு(!) இதைக் ‘கடுமையாகத்
’தடுக்கும் வண்ணம், இப்படி வண்டிகளில் ஏற்றிச் செல்வது கடும் தண்டனைக்குரியது என எச்சரிக்கை விடலாம்.

இலவச பஸ் பாஸ் வைத்துக்கொண்டு அந்த வழித்தடத்தில் வரும் ஒரே ஒரு பேருந்தில், மற்ற பயணிகளோடு கசங்கி, படியில் தொங்கிக்கொண்டு நடத்துனரிடமும், ஓட்டுனரிடமும் திட்டுவாங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களின் புலம்பல் அரசின் செவிகளில் வழக்கம்போலவே விழாமல் போகலாம்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக எல்லா வழித்தடங்களிலும் பயணிக்க பேருந்து வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோமா என்பதை அலச வழக்கம்போலவே மறந்து  போகலாம்.

வேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் சிலவற்றை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்து, செய்தித்தாள்களில் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம்.

மூன்று-நான்கு மடங்காக பேருந்து நிறுத்தங்கள் கூடிவிட்ட நிலையிலும், போக்குவரத்து நெரிசல் பலமடங்கு மிகுந்துவிட்ட சூழலிலும், 30 வருடங்களுக்கு முன்பு பேருந்துகளுக்கு அளித்திருந்த அதே பயண நேரத்தை, தொடர்ந்து வைத்திருப்பது குறித்து கள்ளமௌனம் சாதிக்கலாம்.

பேருந்து ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதை பயணிகள்கூட எவரும் குறைந்தபட்சம் கண்டிக்காததுபோலவே, போக்குவரத்துக் காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டே, செல்போன் பேசும் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே பிடித்துப்பிடித்து அபராதம் விதிக்கலாம்.

குடித்துவிட்டு ஓட்டுவதில் 99% இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே தொடர்ந்து சிக்கும் நிலையும் தொடர்ந்து கொண்டேயிருக்கலாம்.

தேசிய, மாநில மற்றும் நகரச் சாலையோரங்களில் தொடர்ந்து இயங்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து தொய்வின்றி இயங்கிக் கொண்டேயிருக்கலாம்.

மரணக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்கள் உடனடியாகவும், செய்தித்தாளில் பார்ப்பவர்கள் தாமதாமாகவும் பதைபதைக்கலாம்.

இழந்தது ஒரு உயிர் மட்டுமில்லை, ஒரு தலைமுறையின் வேர் வீழ்த்தப்பட்டதாக இழந்த குடும்பங்கள் வாழ்நாள் முழுதும் சோகத்தைச் சுமக்கலாம்.

அரசும், அமைப்புகளும் இறப்பிற்கான இழப்பென்று ஒரு தொகையை காசோலையாய் நீட்டிவிட்டு கடந்துபோகலாம்.

40 வரி எழுதத்தெரிந்தவர்கள் இதோ என்னைப் போல் கிறுக்கிக் கொண்டிருக்கலாம். நாலுவரியில் மடக்கி சுருக்கமாய் எழுத்தத் தெரிந்தவர்கள் கவிதையாய் எழுதலாம். மூன்றாந்தர பத்திரிக்கைகள் “ஆட்டோ அப்பளமாய் நொறுங்கியது” என தலைப்புச்செய்தி எழுதிவிட்டு, மதியச் சோத்தில் இரசத்தில் அப்பளத்தை நொறுக்கிப்போட்டு உண்ணலாம்.

விபத்துகள் என்பது கட்டுப்பாட்டை மீறி கண நேரத்தில் நிகழ்வதுதான். தடுக்க முடிவதில்லைதான். பல நேரங்களில் தவிர்க்க முடிவதில்லைதான். ஆனால், விபத்துக்கு ஏதுவான எல்லாக் காரணிகளையும் நாமே தயாராக உருவாக்கி வைத்துக்கொண்டு ”படுகொலைகளை, தற்கொலைகளை” விபத்துதானேயென நாளைய பரபரப்பில் மறந்துபோகும் கொடுமையும் வாடிக்கையாகிப் போகலாம்.

வல்லரசுக் கனவு வளர்ந்து கொண்டேயிருக்கலாம்!

-


Jun 13, 2013

ஃபேஸ்புக்ல இவரு பெரியாளுங்க...

ஃபேஸ்புக்கில் அப்ரசண்டியாக இருக்கும் ஒருவரை, தெரியாத்தனமாய் நம்ம ஊர்க்காரர் ஆச்சே என நண்பராக இணைத்துக் கொண்டேன். இன்றைக்கு நியாயப்படி டீ கடையில் அவரைப் பார்க்காமலே இருந்திருக்க வேண்டும். விதி வலியது. சந்தித்தாகி விட்டது.  பார்த்தவுடன் பரவசம் எய்தினார்.

அவர் தனியாகவாவது வந்திருக்கலாம். அங்கும் ’விதி வலியது’. ஒரு நண்பரை உடன் அழைத்து வந்திருக்கிறார். அவரிடம் அறிமுகப்படுத்தியும் வைத்தார். நண்பரின் நண்பரிடம் பேசியதில் எங்கள் கிராமத்துக்கு பக்கத்து கிராமம் அவர் எனத்தெரிந்து, ’மாப்ள முறையாகுதுங்க’ என உறவு கொண்டாடி, சுவாரசியமாக ஊர் நாயம் பேசத் துவங்குகையில்....

நம்ம அப்ரசண்டி நண்பர் என்னைச் சுட்டிக் காட்டி... ரொம்பப் பெருமையாக(!)....

“ஒன்னு தெரியும்ங்ளா...... ஃபேஸ்புக்ல இவரு பெரியாளுங்க. 5000 ப்ரெண்டுங்க இருக்குதுனா பாருங்களேன்” என்றார். அந்த நொடி அது ஒரு அணுகுண்டு என நான் நினைக்கவில்லை.

அவரின் நண்பருக்கு ஃபேஸ்புக் குறித்து அளவுக்கு மீறி தினத்தந்தி புண்ணியத்தில் தெரிந்திருக்கும்போல, ”ஃபேஸ்புக் காதலில் ஓசூரில் நடந்த கொலை, ஃபேஸ்புக்கால் நடந்த விவாகரத்து, ஃபேஸ்புக் நட்பில் சென்னையில் ஒரு பெண் கருவுற்றது, லண்டலின் ஆசிரியையின் அந்தரங்கப்படங்களை மாணவர்கள் ஃபேஸ்புக்கில் போட்டது, ஃபேஸ்புக்கை காவல்துறை கண்காணிப்பது” என மனிதர் பொளந்து கட்ட ஆரம்பித்தார்.

நான் “ஷ்ஷ்ஷப்பா” என டரியல் ஆகி நின்றேன்.


நல்லவேளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம் உளவு பார்க்கும் மேட்டர் இன்னும் தினத்தந்தியில் வரவில்லை போலும்.

டீ கடை அக்கா, என் நிலைமையைப் பார்த்து, முதலில் எனக்கு டீ தர....
கொஞ்சம் தெம்பாக இரண்டு வாய் உறிஞ்சியிருப்பேன்.

பொசுக்குனு ஒரு போடு போட்டார், 


”ஏனுங் மாப்ள, ஊர்ல உங்க குடும்பம் நல்ல குடும்பமாச்சுங்ளே, அப்பறம் நீங்க யேன் இந்த ஃபேஸ்புக்ல திரிறீங்க” என்றார்





அப்போது உறிஞ்சிய டீ உச்சத்தலைக்கு ஏறி எனக்குப் புரை போனது!

அடேய்... மார்க் சாமி!

“ஃபேக் ஐடிகளைக் கூட நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்...


பில்டப் கொடுத்து உசுப்பேத்தும் நண்பர்களிடமிருந்து மட்டுமாச்சும் காப்பாத்துடா சாமி”


-

Jun 10, 2013

கீச்சுகள் - 36




உலர்ந்தும் உலரா கூந்தலில் மல்லிகைச்சரம் புரள காலை பரபரப்பில் சாலை கடக்கும் பூவையர் உலகிற்கு ஏதோ ஒரு கவிதையை உதிர்த்துவிட்டுப் போகிறார்கள்

-

தேவையானதை செயல்படுத்துவதை விட, தேவையற்றதைத் தடுக்கத்தான் கூடுதல் மன வலிமை தேவைப்படுகிறது!

-

எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும் இப்ப....... ”இந்த திருவள்ளுவர் எழுத்தாளரா?”

-

திருவள்ளுவர் மரபணு வழி வந்த யாரோ ஒருத்தன்தான் ட்விட்டரை உருவாக்கி ”ட்விட்ருவள்ளுவர்”களை உருவாக்கியிட்டேருக்கனும்!.

-

காடு காய்றவிளுக்கு மழ வந்தா பரவால்லியே, களத்துல கல்லக்கா, எள்ளுக்கா காயப்போட்டவிளுக்கு சித்த வராமயிருந்தா பரவால்லியே! #பல்வகைப்படும் உலகு

-

எதை முடியாது, இயலாது என செய்யத் தயங்குகிறோமோ, தவிர்க்க நினைக்கிறோமோ, அதைச்செய்ய ஒரு சூழல் அமைவதுதான் வாழ்க்கையின் ஆகச்சிறந்த விசித்திரம்

-

எழுத்தாளனாக இருப்பது கூட எளிது, மனிதனாக இருப்பதுதான் சிரமம்!

-



சன்னல் வழியே உலகைப் பார்ப்பதாக நினைத்திருக்கிறேன்! அதே சன்னல் வழியே உலகம் பார்ப்பதையறியாமலே!

-


நன்றி சொல்கையில், நட்பின் அதிபிரியத்தில் ’நன்றி எதுக்கு’னு மறுப்பவர்களிடம் நன்றியை எப்படிச்சொல்ல? #ஹெல்ப் மீ திருவள்ளுவரே!


-

குறைவான தூக்கம், அதிகமான துக்கம் - சமூகத்தின் பொது நோயாகப் பரவிக்கொண்டிருக்கிறது!

-

மரம் வளர்ப்போம் எனும் விளம்பரப் பலகையை மரத்தில் ஆணியடித்து மாட்டும் முரண்களுக்குள்தான் வாழ்கிறோம்!

-

ரகசியங்களற்றாலும் தனிமை தவழும்!

-

குழந்தைகளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்ய நினைக்கும் நமக்கு, ஒருபோதும் குழந்தைகளின் உலகத்திற்குள் செல்ல மனமிருப்பதில்லை

-

கரெண்ட் போயிடுமேங்கிற பயம் குறைத்து, மக்களை ஆறஅமர வேலை செய்யவைத்து சிறிதுசிறிதாக சோம்பேறியாக்கும் EBக்கு கண்டனங்கள்
#
திடீர்னு மாற சொன்னா?

-

சூதாடிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
ஏமாளிகளிடமிருந்து மட்டும் காப்பாற்றுங்கள்.

-

காற்றின் துணைகொண்டு மண் என்னை அழுக்காக்கியது மேகத்தின் துணைகொண்டு காற்று என்னைக் கழுவிப்போனது # வேற யாரு, என் பைக் தான்

-

கடந்துவிட்ட பிறகு மனம் ஒப்புக்கொள்கிறது ”இது கடந்துவிடக் கூடியதாகத்தான் இருந்திருக்கிறதென”

-

இப்போது செய்துகொண்டிருப்பதை விடவும், செய்ததும், செய்ய வேண்டியதும் நிறைய இருக்கின்றன.

-

கடலை வெறித்தவாறு காற்று வாங்கும் பொழுதெல்லாம் சுறா படத்தில் விஜய் பறந்து வந்த காட்சி மனதைக் கொத்துகிறது.

-

மனுசன்ல ரெண்டே சாதிதான், ஒன்னு திருப்தியில்லைனு சொல்றது, இன்னொன்னு திருப்தியாயிட்டேனு சொல்றது!

-

இங்கிட்டு ஒரு நிகழ்கால மருமகளும், எதிர்கால மருமகளும் பேசிக்கிறாங்க ”தமிழ் சீரியலைவிட, இந்தி சீரியல்ல வர்ற மாமியாருங்க பரவாயில்லையாம்”

-

சந்தோசமாக மட்டுமே இருக்கிற எவரும் அவ்வளவாக தத்துவம் கேட்கிறதுமில்லை, தத்துவம் பேசுறதுமில்லை.

-

”நானெல்லாம் எங்கே, எப்படியிருந்திருக்கனும் தெரியுமா” எனப் பெருமை பேச முற்படும்போது ’இஃகிஃகி’னு ஒன்னு சிரிக்கும் பாருங்க, அதுதான் மனசாட்சி!

-

ஒரு பெரும்கூட்டத்தில் சப்தமாக ”அண்ணா”னு கூப்பிடுறதைவிட ”டேய்”னு கூப்பிட்டா நிறையப்பேர் திரும்பிப் பார்க்கிறாங்க!

-

ரோஜாவை கையிலேந்திக்கொண்டு கற்பனையில் மல்லிகை வாசத்தை நுகர முயற்சிப்பதற்கு(ம்) பெயர்தான் ”தேவையில்லாத ஆணி புடுங்குறது”

-

இணையப் பல்கலைக் கழகத்தில் குறைந்த விலைக்கு சிறப்பாக ”பட்டம்” வழங்கப்படுகிறது # டம்ளர், வாக்கர், நடுசென்டர், உளுத்தம்பருப்பு, அணில் etc

-

”அதற்கு காரணம் எதுவும் இல்லை" என்கிறேன். ஆனால், காரணம் இல்லாமல் இருந்திருக்காது!

-


நான் நீங்களாகவும், நீங்கள் நானாகவும் மாறும் பக்குவம் வரும் வரைக்கும், நான் நானாகவுமே, நீங்கள் நீங்களாகவுமே இருப்பதுதான் நல்லது!

-

”எதுவா இருந்தாலும் நமக்கு வந்துடனும்... பெத்தவங்களுக்கோ பிள்ளைகளுக்கோ வந்துடக்கூடாது” என நினைப்பதும் அன்பின் வலி(மை)



உங்களை யாரோ இடைவிடாது உற்றுக் கவனிக்கிறார்கள் அந்த யாரோவில் நீங்களும் இருக்கலாம்!

-

நாயைவிடக் கேவலமாக மனிதனை நடத்துகின்றனர் பலர். மனிதனைவிட மேலாக நாயை நடந்துகின்றனர் சிலர். # சிலரின் உலகு அன்பானது!

-

தவிர்க்கமுடியா கடினமான சூழலை, புன்னகையோடு கடந்துபோவோரின் புன்னகையை உற்றுப்பாருங்கள், கொஞ்சம் கண்ணீரும் ரத்தமும் தேங்கியிருக்கும்!

-

கடந்துவரும் பாதையை நாசப்படுத்திக் கொண்டே கடப்பவனுக்கு திரும்பிவர என்ன யோக்கிதை இருந்து விடப்போகிறது!?


-

பிடிக்காமல் போவது பிடிந்திருந்ததற்கும்,  பிடித்திருந்தது பிடிக்காமல் போவதற்கும்....
பிடித்தமாதிரி நடந்துகொண்டதும், பிடித்தமாதிரி நடந்துகொள்ள முடியாது போனதும் அல்லது பிடித்ததாய் நினைத்ததும் பிடிக்காமல் போனதாய் நினைப்பதும் காரணமாய் இருக்கலாம்.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...