May 11, 2011

உண்மை ஒன்றுதான்

அக்கணத்தில் பிறப்பது செய்தி
காலம் தாழ்ந்து கசிவது ரகசியம்
அடையாளக் குறிகள் 
அழகாய்ச் சுட்டினாலும்
உண்மை என்னவோ ஒன்றுதான்

-0-

சில அழைப்பிதழ்களைக் காணும்போது
கண்ணினூடாக மனதில் படிகிறது
பலருக்குள் அடர்த்தியாய்
படிந்துகிடக்கும் சாதிச் சாயம்

-0-

நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்

-0-

அலங்காரம் அற்றுப் பிறக்கும் கவிதை
வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்
தன்னைத் தொலைத்துவிடுகிறது

-0-


May 8, 2011

ஒரு எழவின் கதை


முப்பது வருடங்களாகப்பிரிந்த மனைவி
திருமணத்திற்குப் பிறகு
ஒட்டு உறவு அற்றுப்போன மகள்
மகன் சாவுக்குபின் பேத்திகளைக்கூட
அண்டவிடாத மருமகள் என
உறவுகளுக்காய்த் தவித்தவன்
ஒருநாள் உறக்கத்திலிருந்து
எழ மறந்து போனான்

”எழவு காங்கனும்” எனும் மையப்புள்ளிக்கு
திசைகளிலிருந்து திரும்பிய மூவருக்கும்
மறந்துபோன அவன் வாசத்திற்குப் பதில்
மரணம் தின்ற எச்சத்தின் வாசமும்
அடக்கம் பண்ணிக் காரியம் செய்ய
காசுக்கு எங்கே போவதென்ற திகைப்பும்
அடர்த்தியாய் அடித்தது  
 
இறந்தவனின் தலையணைக்குக் கீழே
இருந்த எட்டாயிரம் ரூபாய்க் காசும்
இரும்புப்பெட்டிக்குள் கிடந்த பத்திரங்களும்
அவனை எந்தப்பஞ்சாயத்துக்கும் இழுக்காமல்
நல்லபடியாய் நகர்த்திப்போன
மூன்றாம் நாள் அண்டம் பொறுக்கி
ஆற்றில் விட்டு கூரை மேல் சோறு போட்டு
பத்திரங்களின் கனத்தை பங்கு பிரித்ததில் 
தலைக்கு லட்சத்துக்குமேல் வந்தது


உறவுகள் ஒன்று கூடிப் போட்ட
மறுவிரால் விருந்தில் கோழிக்குழம்பை
சோற்றில் பிசைந்த மனைவியின்
வாயிலிருந்து நழுவியது ”எங்கூட்டுக்காரன்”
வெத்தலை மடித்துக்கொண்டே வாய்க்குள்
மென்று கொண்டிருந்தாள் மகள் “எங்கப்பன்”
யாரிடமோ அலைபேசியில் கதை
பேசும் மருமகள் உதிர்த்தாள் ”எங்க மாமனாரு”

காமத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும்
இடையே உரசி உரசிக் கிழியும் தருவாயில்
தூக்கியெறியப்பட்ட ஆணுறை போல்
உறவுகளில் நசுங்கிக்கிடந்த அவனின் ஆவி
அருகிலிருந்த ஊஞ்ச மரத்தின்
ஒரு கிளை நுனியில் ஆடிக்கொண்டிருந்தது

-0-

May 6, 2011

சில கூட்டல்களும் ஒரு சமக்குறியும்


ஊர்ப்பக்கம் அடிக்கடி ஒரு கதை சொல்வார்கள். ஒரு ஊரில், அந்தப் பகுதி முழுதும் கொள்ளையடித்த பின், ஒரு மிகப் பெரிய திருடனும், அவனின் எடுபிடியும், இரவாகிவிட்டதால் ஊர் ஓரமாய் இருக்கும் கோவிலில் படுத்திருந்துவிட்டு காலையில் செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். சின்ன கோவில் என்பதால் எடுபிடி, இருக்கும் இடத்தில் சுருண்டு சமாளித்துக் கொள்கிறான். திருடன் மட்டும் இடம் போதவில்லை என்பதால் தில்லாக காலைத் தூக்கி சாமி தலைமேல் வைத்துக் கொண்டு உறங்குகிறான். பொறுத்துப் பொறுத்துப்பார்த்த சாமி பாரம் தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் திணருகிறது. ஒரு வழியாய் கையை நீட்டி அருகில் உறங்கும் எடுபிடியை அடித்து எழுப்புகிறது. ”டேய்… மரியாதையா அவனைக் காலை எடுக்கச்சொல்றியா? இல்ல உன்னோட கண்ணை நோண்டட்டுமாடா?” என்றது

+

எல்லா வரம்புகளையும் மிதித்து, எல்லா விதிகளையும் உடைத்து, பாகிஸ்தான் அடைகாத்து(!) வைத்திருந்த தனது ஒற்றை எதிரி ஒசாமாவை, அர்த்த ஜாமத்தில் வீரதீரமாகக் கொன்று கொக்கரிக்கிறது அமெரிக்கா. “எங்கள் இறையாண்மையின் விரைக்கொட்டைகளை நசுக்கிட்டீங்களேடா”ன்னு முனகிய பாகிஸ்தான் அதை முக்கிச் சொல்லவும்முடியல, ஒரு முடியைக்கூட பிடுங்கவும் முடியல.

பட்டியல் போட்டால் இரண்டு கை விரல்கள் பத்தாது என்பது போல், இந்தியாவுக்குத் தேவையான 25க்கும் மேற்பட்ட எதிரிகளை சொகுசாய் தனக்குள்ளே அடைகாத்துக் கொண்டே கர்ஜிக்கிறது பாகிஸ்தான் “ஏய், இந்தியா ஒழுங்கா பொத்திக்கிட்டு இரு. உள்ளுக்கே வரனும்னு நினைச்சா, தொலைச்சுப்புடுவேன் படவா”.

+

அலைக்கற்றையில் ஊழல், விளையாட்டில் ஊழல், ராணுவ விதவைகளுக்கான மனையில் ஊழல் என ஊழல்களின் ஒட்டுமொத்த தொகுப்பின் சூத்திரதாரியாக இருக்கும் தேசியக் கட்சியை நேரடியாகத் தீண்டமுடியாத சக்தி, ஒரு மாநிலக் கட்சியை ஓடஓட விரட்டுகிறது.

+

மிகப் பெரிய ஊழல் வெல்லக்கட்டியை திகட்டத் திகட்டத் தின்றவர்களை செரித்துக்கொள்ள அனுமதித்துவிட்டு, சுமந்துவந்து கொடுத்து விட்டு, ஒட்டிக்கொண்டிருந்ததை விரல் சூப்பிக்கொண்டிருந்தவரை மட்டும் ஒவ்வொரு கம்பியாய் எண்ணச் சொல்லி கணக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

=

சொல்லவேண்டிய இடத்தில் பலவற்றைச் சொல்ல முடிவதில்லை, செயல்படுத்த வேண்டிய இடத்தில்  பலவற்றைச் செயல்படுத்த முடிவதில்லை. எல்லா இடத்திற்கும் இது பொதுச்சித்தாந்தம் தான் போல. அவரவர் நாட்கள் அதனதன் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது. காலமும் எல்லாக் கருமங்களையும் கவனித்துக்கொண்டே கள்ள மௌனத்தோடு தன் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருக்கிறது.

எப்போதாவது ”எல்லாம் ஒரு நாள் உள்ளே போய்டுவீங்கடா”னு எதோ மனநிலைபிறழ்ந்த மனிதனின் குரல் காதில் விழுந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இயற்கையும் ஏதேதோ ரூபங்களில் எச்சரிக்கைகளை தெளித்துக்கொண்டிருக்கிறது.

-0-

May 4, 2011

ஒன்னு ரெண்டு மூனு



1.
எல்லாக் காதல் கவிதைகளிலும்
யாரோ ஒருத்தியின் வாசம்
படிந்துதான் கிடக்கிறது
சிலசமயம் அவள் அறிந்து
பலசமயம் அறியாமல்


2.
காத்திருத்தலின் 
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
காத்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது

3.
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் படைப்புகளிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது
உடையணிவிப்பதோ
உடைகிழிப்பதோ
பூச்சூடி முகப்பூச்சிடுவதோ
சிதைத்துக்காட்டுவதோ
மட்டும்தான் படைப்பாளி

-0-

May 2, 2011

நான் இறங்கினேன் அது ஏறியது

சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட மெஸ் அது. சாலையோரம் வாயிலில் தோசைக்கல் போட்டு, உள்ளே இருக்கும் கூடத்தில் உணவு பரிமாறும் உணவகம். ஒட்டிய கட்டிடத்தில் டாஸ்மாக் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.

புதிய உணவகம் என்பதால் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. இருக்கும் எட்டு மேசைகளுக்கும் சேர்ந்து ஆங்காங்கே ஆறேழு பேர் அமர்ந்து சாப்பிட்டாலே அதிகம். ஆனாலும் வீட்டுக்கு வாங்கிப்போவோர் எப்போதும் ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருப்பார்கள்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் இருக்கும் உணவகம் என்பதால் இரவுகளில் வெளியில் சாப்பிடும் சூழல் வந்தால் அந்தக்கடையில் சாப்பிடுவது வழக்கம்.

பல நாட்களுக்குப் பிறகு இந்த முறை சென்றபோது, பரிமாற புதிதாக இரண்டு சிறுவர்கள் இருந்தனர். மெலிந்த தேகமாய் சின்னஞ் சிறுவர்களாக இருந்தனர். இருவருமே சில்வண்டு போல பரபரப்பாக இருந்தனர். டவுசர் போட்டால் சிறுவனாக தெரிவோம் என்பதலோ என்னவோ, லுங்கி இருவருமே லுங்கி கட்டியிருந்தனர்.

நான் அமர்ந்ததும் பளிச்சென இருந்த பையன் புன்னகைத்த முகத்தோடு ஓடிவந்தான் வேகமாக இலை போட்டு தண்ணீர் வைத்து

“அண்ணா என்னங்ணா சாப்ட்றீங்க” என்றான்

வாடிக்கையாய் இலையைப் போட்டு தண்ணீர் வைத்துவிட்டு நாமாக எதாவது சொல்லட்டும் என்று உயிர்ப்பில்லாப் பார்வையை வீசும் ஆட்களைப்பார்த்த எனக்கு, இது கொஞ்சம் புதிதாக, உற்சாகமா இருந்தது.

“தம்பி ரெண்டு பரோட்டா, ஒரு ஒன்சைட் ஆம்லெட்”

“போதுங்ளாண்ணா” என்றான் வெள்ளந்தியாய்.

என்னவோ உறவினர்கள் வீட்டில் ”அட இன்னும் கொஞ்சம் வெச்சுக்க” என உபசரிக்கும் உணர்வு மனதுக்குள் வந்தது.

குறும்புன்னகையோடு, ”போதுங்கண்ணு, உம்பேரென்ன”

”அண்ணா, விஷ்ணு பிரசாத்ண்ணா”

தோசைக் கல்லைப் பார்த்து ”ஒர்ர்ர்ரு ஒன்சைட் ஆம்ம்ம்ம்ளேட்” என கத்திவிட்டு பரோட்டாவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு வந்தான்.

எனக்கு இடது பக்க மேசையில் இருந்த ஒரு போதைத் திலகம் சிறு தடுமாற்றதோடு இலையைக் குழப்பிக் கொண்டிருந்தது. தண்ணீர் டம்ளரை எடுப்பதும், கீழே வைப்பதுமாய் ஒரு போராட்டம் ஒரு ஒழுங்கோடு நடந்து கொண்டிருந்தது. நல்ல போதையில் இருக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டினார்.

“டேய்ய்ய்ய்ய்…. @@க்டி, இங்க வாடா”

போதைத் திலகம் அந்தச் சிறுவன் விஷ்ணுபிரசாத்தைக் கூப்பிட்டார்

”அண்ணா, என்னங்ணா” என்று சுணக்கம் எதுவும் காட்டாமல் ஓடிவந்தான்

”முறுவலா ஒரு கலக்கி சொல்லுடா”

தோசைக்கல் அருகே நகர்ந்தவன் “முறுவலா ஒரு கலக்கி” என்றான்
அங்கிருந்த ஆள் எதோ சொல்லியிருக்க வேண்டும்

உடனே போதைத் திலகத்திடம் ஓடி வந்து “அண்ணா, வெறும் கலக்கிதாங்ணா இருக்குதாம், முறுவலா கலக்கி வரதாம்”

”ஹெ ஹெ ஹெ” என சிரித்த போதை ”சும்மா சொன்னேண்டா, முறுவலா எப்படிடா வரும், கலக்கியாவே கொண்டா”

விஷ்ணுபிரசாத் வெட்கப் புன்னகையோடு நகர்ந்தான்

அடுத்த மேசை, ஆர்டர், தோசைக்கல்லை நோக்கி குரல் எனச் சிட்டாக ஓடிக்கொண்டேயிருந்தான்.

ஒரு வழியாய் போதைத் திலகம் தின்று முடித்து கை கழுவி வந்த போது கொஞ்சம் சோம்பு போட்ட தட்டில் பில்லோடு நீட்டினான் விஷ்ணுபிரசாத்.

“என்னடா ரேட்டு எல்லாம் ஜாஸ்தியா போட்ருக்கே”

”இல்லீங்னா, எப்பவும் அதே ரேட்தான்”

ஐந்து பத்து ரூபாயைக் கொடுத்த போதைத் திலகம், ”எவ்வளவுடா பில்” என்றது

”நாப்பத்தொன்னுங்ண்ணா”

“மிச்சம் ஒம்பது ரூவாய நீயே வெச்சிக்டா” என அவன் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளி “வரட்டுமாடா மாப்ள?” எனத் தடுமாற்றத்தோடு போதை நகர்ந்தது.

கல்லாவை நோக்கி நகர்ந்தவன் உடல் முழுக்க பூத்த சந்தோசம் பூத்திருந்தது.

கல்லாவில் இருந்தவரிடம் சிரித்துக்கொண்டே ஏதோ சொன்னான். அவரும் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.

பத்து ரூபாயைச் சட்டைப்பையில் திணித்தவாறு சந்தோசமாக ஒன் சைட் ஆம்ளெட்டோடு என் இலைக்கு வந்தான்

“இந்தாங்ண்ணா” 

புன்னகைத்தேன், என்னைப் பார்த்து சிரித்தவன் சிரிப்பில் அந்த பத்து 
ரூபாய் நோட்டின் காந்தி சிரிப்பது போல் தோன்றியது.

“உன்னட வயசு என்ன?”

அவன் முகம் லேசாய் கருத்தது
“பன்னண்டுங்ணா”

“வீடு எங்கப்பா? பள்ளிக்கூடம் போகலையா”

”நான் தேவகோட்டைண்ணா” என்றவன் கொஞ்சம் யோசித்துத் தடுமாறி “ஸ்கூல் லீவுண்ணா, லீவுல வேலைக்கு வந்திருக்கேன்” எனச் சொல்லும் போதே முகம் வெளுத்திருந்தது.

நகர்ந்தவன் முகத்தில் வாட்டம் அலையலையாய் படிந்து கொண்டிருந்தது.

சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போது, அருகில் நின்று பழைய செய்தித்தாளின் கிழித்த பாதியைக் கை துடைக்க நீட்டினான்.

கைக் குட்டையை எடுத்துக்கொண்டு செய்தித்தாளைத் தவிர்த்தபோது கவனித்தேன், கொட்டையெழுத்தில் தலைவர்களின் மே தின வாழ்த்து செய்திகள் தெரிந்தது.

ஆமாம் யார் இந்த தலைவர்கள். தலைவர்கள் என்ற பெயரில் இன்று இயக்கங்களா நடக்கிறது. இயக்கம் என்ற அடிப்படையில் துவங்கிய கட்சிகள் எல்லாமே இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் மாறிவிட்டனவே. இயக்கம், கொள்கை எனக் கட்சியைப் பின் தொடர்ந்த தொண்டர்கள், காலப்போக்கில் நிறுவனங்களின் ஊழியர்கள் போல் கட்சி எனும் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து ஊதியத்தையோ, கையூட்டுகளையோ நினைத்துதானே மந்தைகளாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தலைவர்களின் வாழ்த்து தங்கள் தொண்டர்களுக்காவாது எதும் மகிழ்ச்சியைத் தருமா?

உழைக்கும் மக்களுக்கு என்ற அடைப்புக்குறிக்குள் தலைவர்கள் சொன்ன அந்த வாழ்த்து விஷ்ணுபிராசாத்துக்கும் சேர்த்துத்தானா? அவன் அதை வாசித்திருப்பானா?, அந்த வாழ்த்து அவனுக்கு எதும் மகிழ்ச்சியைத் தந்திருக்குமா?

வெளியேறும் போது எதேச்சையாய் உள்ளே திரும்பிப் பார்த்தேன். விஷ்ணுபிரசாத்தும் சரியாக என்னைப் பார்த்தான். இவன் இனி நிஜமாய்ப் பள்ளிக்கூடம் போவானா? போதை ஊட்டத் துவங்கியுள்ள அந்த பத்து ரூபாய் சில்லறைத் தாட்களின் மோகம், அவன் படிப்பை இனியும் தொடர அனுமதிக்குமா என்ற நினைப்போடு படியிறங்கினேன். இன்னொரு போதைத் திலகம் என் தோளில் லேசாய் உரசிக்கொண்டே படியில் ஏறிக்கொண்டிருந்தது.

சாப்பிட்ட பரோட்டாவும் ஒன்சைடு ஆம்ப்ளெட்டும் செரிக்குமா என்ற எண்ணம் வயிற்றில் கனக்கத் தொடங்கியது!

-0-

Apr 30, 2011

ஈர முத்தங்களோடு



                   ஒவ்வொரு வருகையிலும்
                   உன்னை என் கண்களினூடாக
                   உயிர்க்குடுவை முழுதும்
                   வழிந்தோடும் வரை
                   வண்ணச்சொட்டுகளால்
                   நிரப்பிப் போகிறாய்

 
                   நிரப்ப மறந்த
                   தினங்களில்
                   சுற்ற மறுக்கும்
                   சுவர்க்கடிகார முட்கள்
                   இடம் பெயர்ந்து
                   ஒரு துக்கத்தின்
                   குறிப்புரையை
                   நாட்காட்டிக் காகிதத்தில்
                   செதுக்கிவிட்டுச்செல்கிறது

                   பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
                   கவிதை வரிகளாய்
                   சூரியகதிர்கள் திருட மறந்த
                   இளம் பனித்துளியாய்
                   காற்றில் கலந்துவந்து
                   கட்டியணைக்கும் பூ வாசமாய்
                   ஒவ்வொரு நொடியும்
                   எனக்குள் 
                   பூத்துக்கொண்டிருக்கிறாய்

  
                   எட்டிய தொலைவுக்கு
                   தட்டிக்கொடுக்கவும்
                   எட்டும் இலக்குக்கு
                   முடுக்கிவிடவும்
                   என் பாதையின் ஓரம்
                   மைல்கற்கள் மேல்
                   ஈர முத்தங்களோடு
                   காத்துக்கிடக்கிறாய்

                   -0-

Apr 28, 2011

இடமாறு தோற்றச் சரி


பின்நகர்ந்து
கரைந்த நாட்களுக்குள்
தஞ்சம் புகுந்து
கடிதம் ஒன்று எழுத ஆசை
உறை பிரித்து வாசிக்கத்தான்
ஒருவரும் இல்லை

---><---

ஊழல் ஒருபோதும்
இடமாறுவதில்லை
நிகழ்த்துவதிலும்,
குற்றம்சாட்டுவதிலும்
கட்சிகள்தான்
இடம் மாறுகின்றன!


---><---

ஓடி ஒளிந்த பிறகு
ஒவ்வொருமுறையும்
மனதிற்குள் சுடுகிறது
தவறவிட்ட
மழைத்துளிகள்

---><---

அவசரச்சிகிச்சைக்கு
அளித்த
கீழ்சாதிக்காரனின்
இரத்தத்தில் மட்டும்
மறித்துப்போகிறது
தீட்டு அணுக்கள்

---><---

அனாதை விடுதிப்
பிள்ளைக்கு
விடுமுறை நாட்கள்
வலிய திணிக்கிறது
இல்லாத குடும்பம்
குறித்த ஏக்கத்தை

---><---

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...