Apr 23, 2011

முடிவு செய்றது யார்?


கருஞ்சிறுத்தை காட்டெருமை
கவரிமான் யானை பூனை
புணர்ந்து புள்ளகுட்டி போட்டு
தனதாய் வாழ்ந்த பூமியை
தகரத்தில் தப்பட்டையடித்து தீமூட்டி
ஓடவிரட்டி ஒருவழியாய்க் கைப்பற்றி

செடிகளைச் சிதைத்து
மரங்களை முறித்து
வெட்டித்தோண்டி
பெயர்த்துப்புரட்டி
மேடுபள்ளம் நிரவி
எல்லைக்கல் நிறுத்தி
எங்களுக்கென்று பூமி சமைத்து
இத்தனைகாலம் பொழச்சாச்சு…

தாத்தன் காலத்தில் கூடாரம்போட்டு
அப்பன் காலத்தில் குடிசைகள்கட்டி
கடைசியாய் காசு சேர்த்து கடனோடு
கான்கிரீட்டில் வீடுகட்டி நிமிர்ந்தபோது
ஏதோ தாது இருக்குன்னு
இன்னொரு நாட்டு பல(ண)சாலிக்கு
இளிச்சிக்கிட்டே கொடுத்துச்சு அரசாங்கம்
 
எங்கள் நிலங்களை விட்டோட
ஓராயிரம் காரணங்கள் இல்லை
ஓடுன ஒரு சினை மானோ
கதறலோடு கருகிய காட்டெருமையோ
ஒரு சொல்லில் உதிர்த்த
ஒற்றைச் சாபமாகத்தான் இருக்கும்..

எல்லாச் சாபமும் இளைச்சவனுக்குத்தான்
என்பது மானுக்கும் பூனைக்கும் புரிய
அதுகளும் மனுசனாப் பொறக்கனுமே!

அடித்து விரட்ட கொஞ்சம் தகரங்களோடும்
கொளுத்திச் சிதைக்க தீப்பந்தங்களோடும்
இங்கிருந்து ஓடுகிறோம் உள்நாட்டு அகதிகளாய்

ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா
இல்லை நாடான்னு முடிவு செய்றது யார்?

-0-

Apr 21, 2011

என்று தணியும்...? - ஆவணப்படம்

வணக்கத்திற்குரிய மனிதர் பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் இறந்த தீ விபத்தையொட்டி இயக்கிய என்று தணியும் ஆவணப்படம் குறித்து ஏற்கனவே என்று தணியும் என்ற இடுகையில் எழுதியிருந்தேன்.

அந்தப்படத்தின் தொகுப்பு YouTubeல் இருப்பதை இன்று FaceBookல் ஒரு நண்பர் பகிர்ந்ததையொட்டி, அந்தப் படங்களின் தொகுப்பை இங்கு பகிர விரும்புகிறேன்.












-0-

இவ்வளவு இழிவுகளையும் கண்டு ப்ச் என்ற ஒற்றைச் சப்தத்தோடோ அல்லது அதுகுறித்த சில கோபமான இயலாமை வார்த்தைகளோடு கடந்துபோகும் போது, சின்னச் சின்ன விசயங்களுக்கு வெகு விமர்சையாய் கோபம் கொண்டாடியது மனதைக் குத்தத்தானே செய்யும்!

படம் குறித்து பாரதிகிருஷ்ணகுமார் சொன்ன வரிகள் “மிகுந்த துன்பத்தைத் தந்து பாதியிலேயே நிறுத்தி விடலாமா என்று நினைத்த படம் அது . கண்ணீரோடு தான் படம் வளர்ந்து முடிந்தது

சில கண்ணீர்த் துளிகளுக்கு தீர்வுகள், விடைகள் கிடைத்துத் தொலைப்பதில்லை. அதுதான் சமகாலச் சூழலின் சாபக்கேடு என்றும் சொல்லலாம்!

-0-

Apr 15, 2011

மொழிபெயர்த்ததில்...


மௌனத்தை மொழிபெயர்த்ததில்
சம்மதமும் மறுப்பும் கிடைத்தது
அமைதி தொலைந்துபோனது!

பயணத்தை மொழிபெயர்த்ததில்
ரசிப்பும் அலுப்பும் கிடைத்தது
பாதை தொலைந்துபோனது!

காதலை மொழிபெயர்த்ததில்
கணக்குகளும் காமமும் கிடைத்தது
அன்பு தொலைந்துபோனது!

பணத்தை மொழிபெயர்த்ததில்
சொத்தும் கடனும் கிடைத்தது
இலக்கு தொலைந்துபோனது!

வன்மத்தை மொழிபெயர்த்ததில்
பகையும் குரோதமும் கிடைத்தது
உறவு தொலைந்துபோனது!

போரை மொழிபெயர்த்ததில்
வெற்றியும் துரோகமும் கிடைத்தது
மனிதம் தொலைந்து போனது!

இறுதியாய் என்னை மொழிபெயர்த்ததில்
பிம்பமும் முகமூடியும் கிடைத்தது
நான் தொலைந்துபோனேன்!

-0-

Apr 12, 2011

அவ்வளவு நல்லவனா நீ!!!?


  • குப்பை லாரியில் வைத்து,
  • கார் ஸ்டெப்னியில் வைத்து,
  • 108 ஆம்புலென்சில் வைத்து,
  • சவம் சுமக்கும் அமரர் ஊர்தியில் வைத்து,
  • காவல்துறை வாகனத்தில் வைத்து,  
  • காய்கறி மூட்டைக்குள் வைத்து,
  • பஸ்ஸில், லாரியில், அரிசி மூட்டையில்......என இடம் விட்டு இடம் விதவிதமாய் பணம் கடத்தியாகிவிட்டது.

  • உறையில் போட்டு வீட்டுக்குள் வீசி,
  • செய்தித்தாளோடு இணைத்து வீசி,
  • குடும்பத்திற்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்க கூப்பன் கொடுத்து,
  • பண்ட பாத்திரம் வாங்க கூப்பன் கொடுத்து,
  • கோவில் திருவிழாவிற்கு என கோடியில் கொடுத்து
  • பால்காரர் மூலம் பால்வாங்கிய கணக்கு கழித்து,
  • ஸ்டிக்கர் பொட்டு அட்டைகளுக்குள் வைத்து,
  • பேனாவில் ரீபிள்ளை கழட்டி பணத்தை சுருளாக வைத்து,
  • வண்டி டேங்கை முழுதும் பெட்ரோல் நிரப்பி,
  • கேபிள் வசூலுக்குப்போகும் போது பணம் கொடுத்து,
  • கைமாத்து என்ற பெயரில் பணம் கொடுத்து,
  • கந்து வட்டிக்காரர்களிடம் தவணை கட்டி….. என..... அடேங்கப்பா… வாக்களர்களுக்கு பணம் கொடுக்க வேட்பாளர் சார்ந்தவர்கள் உழைக்கும் உழைப்பு உலகம் இதுவரை கண்டிராத தந்திரம்.

மக்களுக்கு காசு போய்ச்சேர இத்தனை யுக்திகளை, தந்திரங்களை யோசிக்கும் இந்த தேசத்தை ஆள நினைக்கும் பெருமை(!) வாய்ந்த ஆத்மாக்கள், ஒரே ஒரு நாளாவது தங்கள் ஆட்சி இருக்கும்(வரும்)போது, இந்த மக்களுக்கு எந்தப் பிரதிபலனும் பாராமல், மனதார நல்லது செய்யணும் என்று நினைத்திருப்பார்களா? அப்படி அன்று சிந்தித்திருந்தால், அது எவராக இருப்பினும், இன்று கேவலம் குப்பை லாரியில் பணத்தை கடத்த வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா என்ன?

இதுநாள் வரையிலும் இருந்த அதே சட்டங்களை வைத்துக்கொண்டே, இதுவரை இல்லாத அளவு நேர்மைத்திறனோடு அதை செயல்படுத்த முயலும் தமிழக தேர்தல் ஆணையர் திரு.பிரவீண் குமார் அவர்களுக்கு தமிழகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க வாகனப்பரிசோதனை, வங்கிக்கணக்குகளை கண்காணித்தல், டாஸ்மாக் கடைகளின் விற்பனை விகிதத்தை கண்காணித்தல் என புதுப்புது முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுப்பதும், அதைத்தாண்டி புதியதொரு யுக்தியை அரசியல்வாதிகள் புகுத்துவதும் என ஒரு யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது. 

எனினும் நாலரைக் கோடி வாக்களர்களை நாலரைக்கோடி இராணுவ வீரர்களை வைத்தா கண்காணிக்க முடியும். அடுத்த தலைமுறை குறித்த அக்கறையும், நம்பிக்கையும் கொண்ட மனிதர்களின் அதிகபட்ச ஒத்துழைப்பும், உதவியும் தேர்தல் ஆணையத்திற்கு தேவை! தமிழகத்தின் தேர்தலை முடிந்தவரை அனைவரும் பாராட்டும் வண்ணம், நேர்மையாக, ஒழுக்கமாக நடத்த முனைந்த தேர்தல் ஆணையத்தை பாராட்டவோ, நன்றி சொல்லவோ விரும்பினால், அதற்கு ஒரே வழி நூறு சதவிகிதம் நமது வாக்குகளை பதிவு செய்வதுதான். வாக்கு யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது 49 ஓ-விற்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கட்டாயம் நமது வாக்கு பதிவு செய்யப்படவேண்டும். விரல் நுனியில் படியும் ”கறை ரொம்ப நல்லது”



கூடவே… சீமான் சொல்வது போல்.....
“ஏன் ராசா, இம்புட்டு சிரமப்பட்டு எனக்குன்னு தேடிவந்து காசு தர்றியே, இது ஏது ராசா?, எங்க ராசா இத்தன காசு சம்பாதிச்ச?

களை பறிச்சியா? கரும்பு வெட்டினியா? கல்லு ஒடைச்சியா? கட்டிடம் கட்டுனியா? ஆட்டோ ஓட்னியா? ரிக்‌ஷா ஓட்னியா? ஏவாரம் பண்ணினியா? விவசாயம் பண்ணினியா? ஆடு மேச்சியா? மாடு மேச்சியா? பால் பீச்சினியா? தண்ணி பாச்சினியா? தறி ஓட்னியா?…..

என்ன வேலை செஞ்ச சாமி? இதெல்லாம் செஞ்ச நானு, உங்கிட்ட காசு வாங்குற நெலைமையில கை ஏந்தி நிக்கிறனே!

ஆமா, இத்தன கஷ்டப்பட்டு, எப்டியாவது எனக்கு காசு குடுத்து, எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறியே, அவ்வளவு நல்லவனா நீ!!!?” என என்று, இந்தச் சமூகம் ஒன்றுபட்டு குரல் உயர்த்துகிறதோ, அன்று கிடைப்பார்கள் நல்ல ஆட்சியாளர்கள்.

-0-

Apr 9, 2011

ஈரோட்டில் பற்றியெரிந்த ஊழலுக்கெதிரான பெருநெருப்பு


அன்னா ஹசாராவின் உண்ணா நிலை அடைந்த வெற்றியை எல்லோர் மனதிலும் விதைக்கும் வண்ணம் ஈரோடு நகரின் பல்வேறு பொதுநல, வணிக, மருத்துவ, வழக்குரைஞர்கள் அமைப்புகளைச் சார்ந்த நண்பர்கள், பள்ளிச்சிறுவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் ஈரோட்டில் நடந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைபாரதம், இமயம், ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமம், ஈரோடு வாசிப்பு இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். நிறைய நண்பர்களைச் சென்றடைய தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவிய ஜெயமோகன்.இன்  ஈரோடு லைவ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். கலந்துகொண்ட ஊடகத்துறை நண்பர்களுக்கு எங்களது அன்புகள்.

தேர்தல் சமயம் என்பதால் அனுமதி, இடம் கிடைப்பதில் சிக்கல், குறைந்த கால இடைவெளியில் குறுந்தகவல்கள் மூலம் மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய நிலை என பல தடைகளைத் தாண்டி 6 மணிக்கு ஐம்பது பேர் எனக்கூடிய கூட்டம் அடுத்த சில நிமிடங்களில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது. பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், குடும்பத்தலைவிகள், பொதுநல அமைப்பு சார் நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி ஓங்கிய குரலில் எழுப்பிய சப்தம் ஊழல் அரக்கனை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. 

ஊழல் அரக்கனிடம் அடைப்பட்டு அழுத்தத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் மனித சமூகம், சுவர்களை உடைத்து வெளியேறி சுதந்திரக்காற்றை சுவாசிக்கத் தவிப்பது இவர்கள் வருகையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. 

இதோ இன்று மெழுகுவர்த்தியில் ஏற்றிய அக்கினிக்குஞ்சு பெருநெருப்பாய் பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூடியவர்கள் இறுதியாய் கலையும் போது மெழுகுவர்த்தியில் இருந்த நெருப்பை இதயத்தில் ஏந்திச் சென்றிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நெருப்பை அப்படியே அடைகாப்போம்… வளமான இந்தியாவிற்காக தகிக்கும் மனதோடு உழைக்கத் தொடங்குவோம்…







-0-
மேலதிகப் படங்களுக்கு....
-0-


Apr 7, 2011

பலியாடு


கசகசவெனக் கூட்டம் கோவில் பந்தல் முழுதும். தெற்கு மூலையில் இளங்குட்டிகளாகப் பார்த்து வாங்கிய ஐந்து ஆட்டுக் குட்டிகள் திமுதிமுவென நகரும் மக்களை வெறிக்கவெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு திருவிழாவில் மட்டும் சந்தித்துக்கொள்ளும் வெளியூர் சிநேகிதர்கள் கண்கள் விரிய கை பிடித்துப் பேசிக் கொண்டார்கள், கூடவே நண்பர்களின் வசதிகளை நடையுடை பாவனைகளை வைத்து எடைபோடவும் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

வாய்க்கட்டுக் கட்டிய பூசாரி பொட்டுச்சாமிக்கு மணியடித்து பூசை செய்து கொண்டிருந்தார். முன்பெல்லாம் வெள்ளை வேட்டிதான் கட்டுவார்கள். என்ன நாகரிகமோ தெரியவில்லை சில ஆண்டுகளாக காவி உடுப்பு உடுத்துகிறார்கள்.

பறைமேளம் முழங்கிக் கொண்டிருந்தது. பொட்டுச்சாமிக்கு பூசை முடிந்தவுடன் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி எடுக்கும்முன் ஊர்க்காரர்கள் ஆடுவது வழக்கம். ஆட்டம் சூடுபிடிக்கிற மாதிரி அடி இருக்கவேண்டும் என பறையடிப்பவரிடம் ஒரு இளவட்டம் சொல்லிக்கொண்டிருந்தார். பறையடிப்பவர் தலைசொறிய, வேட்டியைத் தூக்கி உள்ளாடைப் பையில் இருந்த இரண்டு குவாட்டர் பாட்டில்களை எடுத்து அவர் கையில் திணித்தார். பறைச் சத்தம் கூடிக்கொண்டே போனது.

”இதப்பாருங்க, பாட்ல குடுத்துப்புட்டு போன வருசமாட்ட தப்ப கிழிச்சுப்புட்டீங்னா, தோலுக்கு ஒரு எருமக்கண்ணு குடுத்துறனும் ஆமா” என்றதைக் கேட்ட அருகிலிருந்தவர்கள் சிரித்தனர்.

இதேபோல் போனவருடம் சரக்கு வாங்கிக்குடுத்து, குடிக்கப் போன நேரத்தில் சரக்கின் மிதப்பில் இருந்த சில இளவட்டங்கள் பறையை எடுத்து அடித்ததில் பறை கிழிந்துபோய்விட, பண்டிகை முடிந்து நடக்கும் பஞ்சாயத்தில் அதுகுறித்தும் முறையிட, பறையை வெச்சுட்டு நீங்க எங்கே போனீங்க என ஊர்த்தலைவர் கேட்டதற்கு அவர்கள் தலையை நட்டுக்கொண்டு நின்றதாகக் கேள்வி. அதன் பின்னர் கிழிந்த பறைக்கு என்று கெஞ்சிக்கூத்தாடி உடைத்தவர்களிடம் பிறிதொருநாளில் கொஞ்சம் கூடுதலாகவே காசும் வாங்கிவிட்டனர். என்னதான் காசு வாங்கினாலும் பறை கிழிந்துபோனது ஒரு ஆறாத வலியாகவே அவர்களுக்குள் இருந்திருக்கிறது.

பொட்டுச்சாமிக்கு பூசை முடிய, ”ம்ம்ம்…. கெடாக்குட்டிய கொண்டாங்க” என்ற குரலுக்கு தயாராக நின்றுகொண்டிருந்தது ஒரு ஆட்டுக்குட்டி மருண்ட விழிகளோடு.

ஐந்து பேராக நின்ற இடத்தில் தன்னை மட்டும் தனியே அழைத்து வந்ததை அந்த ஆட்டுக்குட்டி பெருமையாக நினைத்ததாலோ என்னவோ எந்தத் தயக்கமும் இன்றி கூட்டத்தினூடாக கயிறு செல்லும் திசை நோக்கி இலகுவாக வந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் மையத்தில் இருந்த காலி இடத்தில் நின்று சுற்றிலும் நோட்டம் விட்ட ஆட்டுக்குட்டியின் கயிறு கொஞ்சம் கூடுதலாய் நெருக்கிப் பிடிக்கப்பட்டது. 

மணியையும் தட்டையும் கீழே வைத்துவிட்டு தீர்த்தச் சொம்போடு, கையில் கொஞ்சம் அரளிப்பூ மாலையோடு வந்த பூசாரி, மாலையை ஒருவாறு ஆட்டின் கழுத்தில் சுற்றிவிட்டு சொம்போடு கை உயர்த்தி சாமியை கும்பிட்டு, தீர்த்தத்தை கையில் சரித்துத் தெளித்தார். சுற்றிலும் இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட ஆரம்பித்தனர்.

மாலையும் சுற்றிலும் நிற்கும் மனிதர்களின் கும்பிடுகளையும் தனக்கான மரியாதையாக நினைத்த ஆடு கூடுதல் கர்வத்தோடு நிற்க, தலையில் விழுந்த தீர்த்த தண்ணீர் பொடனி வழியே புறப்பட்டு குறுகுறுத்து முதுகு தொட, குறுகுறுப்புத் தாங்க முடியாமால் உடல் சிலுக்க…. ”ஹேகேய்” என உற்சாகக் குரலெழும்ப, பறைச்சத்தம் காதைப்பிளந்தது. திடீர் சத்தத்தில் நிதானத்தை இழந்த ஆடு சுற்றிலுமுள்ள கும்பலை நிமிர்ந்து பார்க்க நினைத்த விநாடி ’க்ளக்’கென விழுந்தது கழுத்தில் பளபளத்த கத்தி, துண்டான தலை தெறித்து விழ, தலையில்லா முக்கால் அடி தூரம் துள்ளிக்குதித்து விழுந்து, கால்களை உதைத்து துடித்து அடங்கியது.

சிதறியடிக்கும் இரத்தத்துளி கண்ட கூட்டம் அப்படியே பின்பக்கமாய் நகர, அவனின் இடது ஆட்காட்டி விரலில் ஒரு துளி வெதுவெதுப்பாய் மோதியது. கையை நிமிர்த்த, உயர்ந்த விரலில் நகத்திற்கு அருகே விழுந்த இரத்தத் துளி பாதி தோலிலும் பாதி நகத்திலும் மொட்டாய் நின்றது.

அவன் வெறித்த விரலை எட்டிப்பார்த்த நண்பன், அந்த விரலை இறுகப்பிடித்துக் கொண்டு “அட, இங்க பார்றா, ஓட்டு போடறதுக்கு மை வெச்ச மாதிரி வெரல்ல. எப்டியோ இருபது லிட்டர் பெட்ரோலும், இரண்டாயிரம் ரூவா பணமும் உனக்கு இல்லீடா” என்றான் கிண்டலும் கேலியுமாக!!!!

நாடகத்தனமான கற்பனையாக இருந்தாலும், ஒருகணம் அவனுக்கு ஏனோ அந்த துடிதுடித்து அடங்கிய ஆட்டுக்குட்டியோடு தன்னை பொருத்திப் பார்க்கத் தோன்றியது.

-0-

Apr 5, 2011

எனது ஓட்டு மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கே!


சகாயம் குறித்த எழுத்தாளர் பெருமாள்முருகனின் இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலத்தைக் கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர்” என்ற வரிகளோடு தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறப்பானதொரு நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்த போதுதான் ஊடகங்களின் பார்வை சகாயம் அவர்கள் மேல் விழத்தொடங்கியது. அதன்பின்னரே அதுவரை அவர்கடந்து வந்த பாதையில் அவருடைய நேர்மையும், அதற்காக அவர் தாண்டி வந்த இடர்களும் தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் அவர் ஆட்சித்தலைவராக இருந்த காலத்தில் அரசு பள்ளிகள் மேல் செலுத்திய கவனம், சுற்றுச்சூழல் காக்க நட்ட பல லட்சம் மரக்கன்றுகள், விவசாயிகளை நோக்கி கிராமம் கிராமமாக ஒவ்வொரு இரவுகளில் தன் பரிவாரங்களோடு புயலாய் புறப்பட்டு நல்ல ஆட்சியை வழங்கிய விதம், நள்ளிரவுகளில் நெடுஞ்சாலைகள் மேற்கொண்ட சோதனைகள், கிராமங்களில் கணினி நிறுவி இணையத்தில் புகார்களைப் பெற்று உடனே தீர்வுகண்ட வேகம் என, இப்படித்தான் ஒரு மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்.

கிராம நிர்வாக அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் கிராம எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் இட்ட கட்டளைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டுமொத்த கிராம நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ய, அதுகண்டு மக்கள் வெகுண்டெழுந்து கிராம நிர்வாக அதிகாரிகளை விரட்டியடித்த வரலாறும் உண்டு.

நேர்மை எப்போதும் ஆள்வோருக்கு பிடிப்பதில்லை என்பதற்கிணங்க ஆட்சித்தலைவர் பதவியிலிருந்து சகாயம் விலக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக பணிக்கு அனுப்பப்பட்டார். நாமக்கல் மாவட்டம் அதுவரை காணாத ஒரு கொந்தளிப்பை மக்கள் மூலம் கண்டது, ஆனாலும் எல்லாக்கொந்தளிப்பு போல அதுவும் கரைந்து போனது கூடவே சகாயம் ஆற்றிவந்த மக்கள் சார் நற்பணிகளும் கரையத் தொடங்கியது.

காலங்கள் கரைந்ததில், இதுவரை இந்தியா காணாத புரட்சியாக தமிழகத் தேர்தல் ஆணையம் தேர்தலைச் செம்மையாக நடத்த புதிய புதிய யுக்திகளை வகுத்து வந்தநிலையில், தேர்தலை நேர்மையாக நடத்த சரிவராது என நினைத்த அதிகாரிகளை (மாநில காவல்துறைத் தலைவர் உட்பட) ஒரே இரவில் மாற்றியமைத்ததில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தூக்கப்பட்டார், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் நியமிக்கப்பட்டார்.

திருமங்கலம் சூத்திரத்தை பயன்படுத்த நினைத்த மதுரையை மையம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு சகாயத்தின் நேர்மை சிம்ம சொப்பனமாக அமைந்தது. அதிர்ந்த ஆளும்கட்சி தேர்தல் ஆணையத்தை எதிரியாக பாவிக்கத் துவங்கியது, மக்கள் நேசிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை  ”நெருக்கடி நிலை” என பிரகடனப்படுத்தச் செய்தது. ”சகாயம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று” பேசுகிறார் என பொய்யாக அலறியது. ”சகாயம் மிரட்டுகிறார்” என கீழே பணிபுரியும் அதிகாரியைவிட்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கச் சொன்னது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

பாரபட்சமின்றி தனக்கு கிடைத்த வாய்ப்பை நேர்மையாக செயல்படுத்த நினைக்கும் ஒரு மிகச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவரை நாளொரு புகார் பொழுதொரு புலம்பல் என தங்கள் சொந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை தோற்கடிக்க முயற்சி செய்கிறது ஆளும்கட்சி!

இதுவரை சகாயம் குறித்த புகார்களை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் அவர்கள் தள்ளுபடி செய்திருக்கிறார். கூடுதலாக சகாயம் மீது பொய்ப் புகார் கூறிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்ததோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டிருக்கிறது.

இதோ இப்போது மதுரையில் இருக்கும் பல பொதுநல அமைப்புகள் ஒட்டுமொத்தமாக சகாயத்தின் நேர்மையான செயல்பாடுகளை ஆதரித்து குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன.

எந்தக்கட்சியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், நல்ல வேட்பாளர் என மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கட்டும், தகுதியான நபர் வெற்றியடையட்டும். 



ஆனால்
எதிர்க்கட்சிகளைவிட தங்களுக்கு இடையூறாக இருக்கும் நேர்மையான ஆட்சியர் சகாயம் அவர்களை எதிரியாக நினைக்கும் இந்தத் தேர்தலில்…….. தேர்தல் என்பதை விட இந்தப் போரில் சகாயம் வெல்ல வேண்டும்.

நேர்மைக்கு மரியாதை செலுத்த, நேர்மையின் கரங்களை வலுப்படுத்த நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்

-0-
-0-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...