அன்னா ஹசாராவின் உண்ணா நிலை அடைந்த வெற்றியை எல்லோர் மனதிலும் விதைக்கும் வண்ணம் ஈரோடு நகரின் பல்வேறு பொதுநல, வணிக, மருத்துவ, வழக்குரைஞர்கள் அமைப்புகளைச் சார்ந்த நண்பர்கள், பள்ளிச்சிறுவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் ஈரோட்டில் நடந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைபாரதம், இமயம், ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமம், ஈரோடு வாசிப்பு இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். நிறைய நண்பர்களைச் சென்றடைய தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவிய ஜெயமோகன்.இன் ஈரோடு லைவ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். கலந்துகொண்ட ஊடகத்துறை நண்பர்களுக்கு எங்களது அன்புகள்.
தேர்தல் சமயம் என்பதால் அனுமதி, இடம் கிடைப்பதில் சிக்கல், குறைந்த கால இடைவெளியில் குறுந்தகவல்கள் மூலம் மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய நிலை என பல தடைகளைத் தாண்டி 6 மணிக்கு ஐம்பது பேர் எனக்கூடிய கூட்டம் அடுத்த சில நிமிடங்களில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது. பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், குடும்பத்தலைவிகள், பொதுநல அமைப்பு சார் நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி ஓங்கிய குரலில் எழுப்பிய சப்தம் ஊழல் அரக்கனை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
ஊழல் அரக்கனிடம் அடைப்பட்டு அழுத்தத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் மனித சமூகம், சுவர்களை உடைத்து வெளியேறி சுதந்திரக்காற்றை சுவாசிக்கத் தவிப்பது இவர்கள் வருகையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதோ இன்று மெழுகுவர்த்தியில் ஏற்றிய அக்கினிக்குஞ்சு பெருநெருப்பாய் பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூடியவர்கள் இறுதியாய் கலையும் போது மெழுகுவர்த்தியில் இருந்த நெருப்பை இதயத்தில் ஏந்திச் சென்றிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நெருப்பை அப்படியே அடைகாப்போம்… வளமான இந்தியாவிற்காக தகிக்கும் மனதோடு உழைக்கத் தொடங்குவோம்…
-0-
மேலதிகப் படங்களுக்கு....
-0-