Oct 8, 2010

வண்ணச் சேர்க்கைக்கு இழந்த வாழ்வும், வாங்கிய வலியும்

தண்ணீரைப் போல் தெளிவானது, சுவையானது, சுகமானது ஏதேனும் உண்டா?. குழந்தைப் பருவத்தில் திணிக்கப்பட்டவை இரண்டு, ஒன்று ”தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திடும்” மற்றொன்று ”தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே!”

ஏதேனும் மரணச் செய்திகளை கேட்கும் போது, உடனே கேட்பது ”இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறமுடியுமா?” அதற்கு ஈடாகா பெறப்படும் பதில், “இல்லீங்க, கேன்சர்ங்க”. அடுத்தடுத்து கேட்கப்படும் மரணச் செய்திகளில், மரணத்திற்கான காரணமாக காட்டப்படுவது புற்றுநோய்.

தற்சமயம் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வட்டத்தில் பெரியப்பா, அத்தை, சின்ன பாட்டி என்பது போன்ற உறவுகளில் புற்று நோயால் மரணத்தை எதிர்நோக்கி வலியோடு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆறு.

ஒரு காலத்தில் புற்று நோய் என்பது ஒட்டு மொத்த உறவுகளில் யாரோ ஒருவருக்கு இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சமீப காலங்களில் நமக்குத் தெரிந்தவர் யாரேனும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது “அட… ப்ச்…” என்று கடந்து போகுமளவிற்கு மிகச் சாதாரணமாக விரவிக் கிடக்கிறது.

அதுவும் ஈரோடு பகுதிகளில் புற்று நோய் ஆழ வேரூன்றுவதற்கு முக்கியக் காரணம் விஷமாய் மாறிவரும் தண்ணீர். எங்கோ இருக்கும் யாரோ உடையணிய, இங்கு இருக்கும் ஒரு சிலர் கோடிகளில் புரள, அதன் பொருட்டு தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வையே காவு கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஒன்றா இரண்டா?
 

தண்ணீர் மாசுக்கெதிராக கண்ணா மூச்சியாடும் அரசாங்கம், எந்த விதத்திலும் சாமானியர்களின் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் சிந்திப்பதாக இல்லை. பவானி, ஈரோடு, பெருந்துறை, சிப்காட், ஊத்துக்குளி, திருப்பூர் இன்ன பிற சுற்று வட்டாரங்களெங்கும் சாயப்பட்டறைகள் துணிகளை வெளுத்து வெளுத்து, வேதிப்பொருட்களை அள்ளிக் கொட்டி, சாயமேற்றிக் கொண்டேயிருக்கின்றன. தங்கள் லாபத்தை அரிக்கும், சுத்திகரிப்பு பணிகளைச் செயல்படுத்த வாய்ப்பின்றி(!), மனமின்றி, போகிற போக்கில் சாயப்பட்டறை முதலாளிகளால் திறந்து விடப்படும் நீர், பவானி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, நொய்யல் ஆறு என எல்லா நீர்த்தடங்களையும் வண்ணம் மாற்றி, விஷமேற்றிக் கொண்டேயிருக்கிறது.

சாயப்பட்டறைகள் தங்கள் தேவைக்கென தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிகளைத் தாண்டுகிறது. அதில் தண்ணீர் வந்தால் சந்தோசம், ஒரு வேளை தண்ணீர் வரவில்லை என்றாலும் கவலையில்லை, வெளியேற்ற வேண்டிய சாயக் கழிவு நீரை, தண்ணீர் இல்லாத வெற்று ஆழ்துளைக் கிணறுகளில் பாய்ச்சி விடுகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகளில் தஞ்சம் புகுந்த விஷநீர் மண்ணுக்குள் சிலந்திவலையாய் கிடக்கும் நீர்த்தடங்களில் முப்பது, நாற்பது மைல் தூரம் கூட பயணித்து, கிணறுகளிலோ அல்லது மற்ற ஆழ்துளைக் கிணறுகளில் இருக்கும் தண்ணீரோடு கலந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.




உதாரணத்திற்கு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாயப்பட்டறைகளை அனுமதித்த பிறகு, அங்கிருந்து பல மைல்கள் தள்ளியிருக்கும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளின் தண்ணீர், தன் சுயத்தை இழந்து உவர்ப்புத்தன்மை மிகுந்துவிட்டது. நீரின் உண்மையான சுவை, தன்மை, குணம் என எல்லாம் தொலைந்து போய், முழுக்க முழுக்க நச்சுத் தன்மை கூடிக்கொண்டே வருகிறது. இது பற்றிய விழிப்புணர்வேதுமின்றி நமது நாட்கள் வழக்கம் போல், நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. உள்ளடங்கிய கிராமங்களை விடுத்து, பெரும்பாலான பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமானது, காசு போட்டு வாங்கும் தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாதாரத்திலேயே பெரும்பாலானோர் இருக்கும் நிலையில், சமையல் செய்ய கிணற்றுத் தண்ணீர் அல்லது குழாய்கள் வழியே வரும் ஆற்று நீரை மட்டுமே பயன்படுத்துகின்றோம். என்னதான் கொதிக்க வைத்தாலும் நீரில் கலந்த விஷம் பிரிந்துவிடவா போகின்றது. உணவகங்களில், விருந்துகளில், திருமணங்களில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் இதேதான் நடக்கும்.

அடுத்து, இந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன் படுத்தும் பொது, தானியங்கள், காய்கறிகளில் விஷம் சென்று தங்குவதை தடுக்க முடியாது. சாயப்பட்டறை கழிவு நீர் பாயும் விவசாயப் பகுதிகளில் வளரும் தென்னை மரங்கள் தரும் இளநீர் சுவையற்று, சில சமயம் நிறம் மாறி, துர்வாசனையோடு விளைவதை தவிர்க்க முடிவதில்லை.



புற்று நோய், மலட்டுத் தன்மை, குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி, தொடர்ந்து வரும் புதிய புதிய நோய்களின் பின்னணியில், புரிந்தும் புரியாத பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியக் காரணமாக இருப்பவை, இயற்கை அள்ளிக்கொடுத்த நீரை, பேராசையின் பொருட்டு,  மாசடைந்த, வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீராக மாற்றிய பாவமும் என்பதை மறுப்பதற்கில்லை.


தண்ணீரைப் பழிக்காதே என்று சொல்லிக் கொடுத்த வளர்ப்பு, தண்ணீரைச் சீரழிக்காதே என்று சொல்ல மறந்து போனதோ!? எதையோ நோக்கிய பேராசையில், எல்லாவற்றையும் உதறித் தள்ளுகின்றோம், உதறித் தள்ளியதை இழப்பு எனப் புரியும் பொறுமையின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உடம்பில் வெளியில் தெரியும் நோய்களை வண்ணம் நிறைந்த உடைகள் போட்டு மற்றவர்கள் கண்களிலிருந்து வேண்டுமானால் மறைக்கலாம், உள்ளுக்குள் நாமே உருவாக்கிய, நோய் கொடுக்கும் வலியை, அதன் தொடர்ச்சியாய் வரும் இழப்பை எதைக் கொண்டு மறைக்க முடியும்.

_________________________

Oct 6, 2010

ஜெயா தொலைக்காட்சி காலை மலர் - பகிர்வு












வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்பாடிகள் பாலாண்ணா, காணொளியை பதிவு செய்து கொடுத்துதவிய நண்பர் பதிவர் ஜாபர் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க பதிவுலக நட்பு

__________________

Oct 5, 2010

பகிர்தல் (05.10.2010)


தேங்காய் மண்டை(!)
காவல்துறை பணி தேர்வுக்கு சென்றவரை உயரம் போதவில்லையென்று நான்கு வருடங்களாக திருப்பியனுப்பி விட்டார்களாம். எப்படியாவது போலிஸில் சேர விரும்பிய மூளை கிரிமினல்(!) தனமாக யோசித்தது, உயரத்தை அதிகரிக்க, தலைமேல் ஒரு தேங்காய் மட்டையை வைத்து அதற்குமேல் விக் வைத்து (அதிக உயரமில்லை ஜெண்டில்மேன் வெறும் 3 செ.மீ.தான்) நேராக சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவலர் தேர்வுக்குச் சென்றிருக்கிறார். ஒப்பனை போதவில்லைபோலும், விளைவு.... போலிஸ் வேலை தேடிப்போனவருக்கு, வழக்கு பதிவானதுதான் மிச்சம்.....



ஜெயா டிவி காலை மலர் நிகழ்ச்சி:
நாளை 06.10.2010 புதன்கிழமை காலை 8.10 மணி முதல் 8.40 மணிவரை நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காலைமலர் நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.



விரிந்த பச்சை:
நேற்று திருப்பூர் செல்ல வேண்டி, பேருந்தை தவிர்த்து மாலை நேர பயணிகள் ரயிலைப் பிடித்தோம். பகல் நேர ரயில் பயணம் ஆயிரமாயிரம் சுவாரஸ்யங்களை கொண்டு வந்து சேர்க்கிறது. நாம் அதிகம் புழங்கிய இடங்களாக, ஊர்களாக இருந்தாலும் கூட, ரயிலடிகள் வித்தியாசமான கோணத்தில் தெரிகிறது.

ஈரோடு தாண்டியதிலிருந்து ஊத்துக்குளி தாண்டும் வரை எங்கு காணினும் பசுமை கண்களை நிரப்பியது. புதிதாய் துளிர்க்கும் பயிர்கள் இளம்பச்சை (கிளிப்பச்சை) நிறத்திலும், முதிர்ந்த, விளைந்த பயிர்கள் அடர் பச்சையும் என, ரயில் படிகளில் நின்று பார்க்கும் வெளியெங்கும் பச்சையாய் விரிந்து கிடந்தது.

ஊத்துக்குளி தாண்டிய, ரயிலடியோரம் விவசாய நிலங்களைக் காண முடிவதில்லை. ஆங்காங்கே தென்படும் பனை மரங்கள் கூட, சாயக் கழிவுகளின் புண்ணியத்தில் மாண்டு போய், மொட்டை மரங்களாக நின்று கொண்டிருக்கின்றன. நச்சு மரங்கள் எனும் முள் மரங்கள் மட்டும் நச்சு சாயக்கழிவுகளையும் தின்று குடித்து செழிப்பாகவே இருக்கின்றன.


தி க்யூரியஸ் கேஸ் ஆப் பென்சமின் பட்டன்
போரில் இறந்த மகன் திரும்பி வரவேண்டுமென்று ஒருவர் கடிகாரத்தை பின்னோக்கி ஓடும்படியாக வடிவமைக்கிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது, 82 வயது முதுமைத் தோற்றத்தோடு குழந்தைமனதோடு, நாட்கள் நகர நகர வயது கூடக்கூட மனது முதிர்கிறது, உடல் இளமையாகிறது. 


காதலியோடு கூடி குழந்தை பிறந்த பிறகு, குழந்தை வளரவளர, தான் இன்னும் இளமையாக மாறி ஒரு கட்டத்தில் குழந்தையாக மாறிவிடும் விபரீதம் உணர்ந்து, குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் என படத்தில் ரசிக்க நிறைய கனமான தருணங்கள் உண்டு. பல கதாபாத்திரங்களில் கண்ணுக்குள் நிற்கும் ஒன்று, தாய் அன்பை மனம் முழுதும் கருப்பினத் தாயாக வரும் குயினி. தவறவிடக் கூடாத ஒரு படம் என்றே சொல்ல வேண்டும். உதவிய நண்பர் கார்த்திக்கு நன்றி.


மயில்:
ஈரோடு மாவட்டத்தின் சில கிராமப் பகுதிகளில், குறிப்பாக திங்களூர் தொடங்கி விஜயமங்கலம், சென்னிமலை வரை இருக்கும் பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை வெகுவாக கூடிவிட்டன. உயிரியல் பூங்காக்களிலும், படங்களில் கண்டு ரசித்த மயில்கள் இந்தப் பகுதி முழுதும் மிகச் சாதாரணமாக கூட்டம் கூட்டமாக சுத்தித் திரிவதைக்காணும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. மாலை நேரங்களில் மிக அழகாய் தோகை விரித்து ஆடுவதை ஆங்காங்கே காணலாம். இதில் வருத்தமான செய்தி என்னவெனில், விவசாயிகளுக்கு மயில்கள் மிகப்பெரிய எதிரிகளாக மாறிவருகின்றன. இரை தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் மயில்க் கூட்டம் அடுத்த சில நிமிடங்களில் தானியப் பயிர்களை சூறையாடி செல்கின்றன. 
உதாரணத்திற்கு ஒரு சூரியகாந்தி, அல்லது மக்காச் சோளச் செடி மீது அமரும் மயில், அடுத்த ஓரிரு நிமிடத்தில் மொத்தமாக் தின்று முடித்துவிடுகிறது. முப்பது நாற்பது என அணியாய் திரண்டு வரும் மயில்கள் பத்து பதினைந்து நிமிடங்களில் விவசாய நிலங்களை துவம்சம் செய்து விடுகின்றன. தேசியப் பறவையை காப்போம் என இயற்கை ஆர்வலர்கள் முழங்கும் நேரத்தில், தகரங்களைத் தட்டுவது, பட்டாசு வெடிப்பது என மயில்களின் படையெடுப்பைத் தடுக்க விவசாயிகள் போராடுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

துணுக்குகள்:
ஃபேஸ்புக் / ட்விட்டரில் அவ்வப்போது கிறுக்கியவை...

அடித்து துவைக்கும் மழையை உற்றுப் பார்க்கும் போது..
மனதிற்குள்ளும் ஏதோ கரைகிறது

-000000-

படபடவென மழைதூறும் நேரம்............ 
மண்வாசம் தேடினால்,
தார்சாலையில் தேய்ந்த டயர் வாசனைதான் மிஞ்சுகிறது...

-000000-


ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!!

-000000-

தப்புகளும், சிறு சிறு குற்றங்களும் தேவையின் அடிப்படையிலா 
அல்லது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்தா!!!!!????

-000000-

போர்களின் துவக்கப்புள்ளி தெரிகிறது,
முற்றுப் புள்ளி தெரிவதேயில்லை...

__________________________

Oct 2, 2010

ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எளிதாய் உணவு கிடைப்பவனுக்கு பசி என்பது ஒரு சுகமான அனுபவம், உணவுக்கு வழியில்லாதவர்களுக்கு பசி மிகக்கொடிய, உயிரை உருக்கும் நோய்தானே!

சுயநலச் சூறாவளி சுற்றிச் சுற்றி தாக்கினாலும், பொது நலனில் அக்கறை கொண்டு ஆங்காங்கே அர்பணிப்புத் தன்மையோடு ஏதாவது ஒரு வகையில் யாரோ ஒரு சிலர் செய்யும் தியாகங்களே உலகை இன்னும் வாழ்வதற்கு அர்த்தமுள்ளதாக வைத்திருக்கின்றது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள் மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு 10% தள்ளுபடி, கண் பார்வையற்றவர்களுக்கு 20% தள்ளுபடி என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது. இன்னொரு பக்க சுவற்றில் கரும்பலகை சீட்டில் எழுதியிருந்து இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஒரு ரூபாய் விலையில் மதிய உணவை வழங்குவதாகவும், அதற்கு நல்லெண்ணத்தோடு நிதியுதவி செய்தவர்கள் பெயரை நன்றியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.

இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டபோது, ”ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகவும், கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் வழங்கப்படும். அதே சமயம் நோயாளிகளுக்கு துணையாக ஒருவர் உடன் இருப்பர், அவர்களுக்கான உணவிற்கு அவர்கள் வெளியில்தான் செல்ல வேண்டும். சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி 108மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அடுத்த நாள் உணவு என்பதே கேள்விக்குறிதானே!? ஒருவேளை உணவிற்கான செலவு என்பது பலருக்கு இயலாத ஒன்று. அதை மனதில் கொண்டு தினமும் மருத்துவமனையில் 20 பேருக்காக ஒரு ரூபாயில் உணவு வழங்க, அதற்கான டோக்கன்களை மருத்துவமனையில் தருகிறோம். மருத்துவமனையில் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் 20 பேருக்கு ஒரு ரூபாயில் மதிய சாப்பாட்டை அளிக்கிறோம்” என்றார்.

ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் என பார்சல் சாப்பாடு தயாராக மதிய நேரங்களில் டோக்கனோடு வருபவர்களின் பசியாற்ற காத்திருக்கிறது.

கையில் டோக்கனோடு சாப்பாடு வாங்க வரும் நபர்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் காண முடிந்தது. ஒரு ரூபாய்க்கு சாப்பாடு குறித்து அவர்களிடம் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, உணவு எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் தங்கள் உறவுக்காரரான நோயாளியோடு பகிந்துகொள்வதாக நெகிழ்ந்து கூறுகின்றனர்.

சாதாரணமாக தங்கள் மெஸ்ஸில் 25 ரூபாய்க்கு விற்கும் சாப்பாட்டை 24 ரூபாய் தள்ளி வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் நல்ல மனதினரை நினைக்கும் போது வணங்கத் தோன்றுகிறது.

ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நபர்களிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டு, நன்கொடையளிக்கும் நல்லவர்களின் பெயர்களை தினமும் பெயர்பலகையில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி Mr.N.Venkataraman, Srii AMV Mess, Near Nallasamy Hospital, Power House Road, ERODE-638001 Cell: 99443-80076. நேரிடையாக வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு…. V.Venkataraman ING Vysya Bank, Erode Branch SB A/c. 405010065939 / IndusInd Bank Erode SB A/c.0034-B75420-050.

எல்லோரும் தொழில் செய்வது லாபம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்தே என்ற போதிலும், லாபத்தைத் தாண்டி தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதே தொழில் மூலம் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்களை வாழ்த்துவதும், ஊக்குவிப்பதும் மனித நேயமுள்ள அனைவருமே அடிப்படையாக செய்ய வேண்டிய ஒன்று.





தயாராக இருக்கும் சாப்பாடு பார்சல்


சாப்பாட்டில் சலுகை

நன்கொடை அளித்தவர்களுக்கான நன்றி

திரு. வெங்கட்ராமன்

உணவு பெறும் பயனாளிகள்

உணவு பெறும் பயனாளிகள்

திரு. வெங்கட்ராமன் மற்றும் திரு.ஆரூரன்
____________________________

Sep 30, 2010

அற்றவன்


வழிந்தோடும் இருளில்
பதட்டமின்றிப் பயணிக்கிறான்
பார்வையற்றவன்

~~

தோல்விப் பட்டியலில்
முதலிடம் பிடிக்கிறான்
நம்பிக்கையற்றவன்

~~

வயிற்றுக்குப் பசியை
தின்னக் கொடுக்கிறான்
காசற்றவன்

~~

மரணத்தில் இடுகாட்டில்
இடம் பிடிக்கிறான்
நிலமற்றவன்

~~

தேடலில்
புதைந்து போகிறான்
தேவையற்றவன்

~~
நேசிப்பை நேசிக்க
மறந்து போகிறான்
காதலற்றவன்

~~
பூக்களின் அழகை
வாசத்தால் ரசிக்கிறான்
பார்வையற்றவன்

~~

Sep 26, 2010

ஊளமூக்கி

சுளீர்னு” முதுகுல வுழுந்தபொறவுதான் விருக்குனு முழிச்சுப் பார்த்தேன். சீலையத் தூக்கிச் செருகிட்டு அம்மா நின்னுக்கிட்டிருந்துச்சு, ”ஏண்டி எழுப்பயெழுப்ப என்றி தூக்கம் இப்புடி, இந்தா குண்டால பாலு ஆற வச்சிருக்கேன். சின்னக்கண்ணு எந்திரிச்சா பாட்டல்ல ஊத்திக்குடு”

தூக்கம் தூக்கமா வந்த கண்ணக் கசக்கிட்டு முழிச்சுப் பார்த்தேன், தூக்கு போசி தூக்கிட்டே அம்மா சொன்னா ”அலேய், பொசுப்பா ஒழுங்கா ஊட்லய இரு, அங்கயுமிங்கயும் அவள இழுத்துக்கிட்டு சுத்தாத. எங்யாவது சுத்துனேனு தெரிஞ்சுது, தோலு உறிஞ்சுபோயிருமாமா” படல சாத்திட்டு அம்மா கெளம்பிக்கிட்டிருந்துச்சு.

படல் சாக்கு ஓட்டையில வர்ற வெளிச்சத்துல சின்னக்கண்ணு, போர்வய சுருட்டிக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு சுருண்டு தூங்கறது தெரிஞ்சுது. ஊளமூக்கிக்கு சளி உதட்டுமேல காஞ்சு போயிருந்துச்சு. புசுபுசுன்னு மெதுவா மூச்சுவுடற சத்தம் கேட்டுச்சு. சின்னக்கண்ணு என்ன மாதிரியேதான் கப்புக் கலரு, கண்ணு மொட்டுமொட்டா அழகா இருக்கும். இப்பத்தான் கொஞ்ச நாளாத்தான் ”க்கா க்கா”னு பேச ஆரம்பிச்சிருக்கா, தத்தக்கா பித்தாக்கனு கூடக்கூட ஓடியாந்திக்கிட்டே இருப்பா. சின்னக்கண்ணு அக்கான்னு கூப்பிடறப்பெல்லாம் எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும்.

சின்னக்கண்ணு வவுத்துல இருக்கும் போதெல்லாம், வெடியறதுக்கு முன்னாலயே எழுப்பியுட்டு, அம்மா தர்ற வெறுங்காப்பியில ரவுண்டு பன்ன தொட்டுத் தின்னு முடிச்சவுடனே, தூக்குப்போசி சோத்தோட என்ன தோள்ல வச்சிக்கிட்டு அப்பன் பெரியவூட்டு பண்ணயத்துக்கு தூக்கிட்டுப் போயி வுட்ருவாறு.

பண்ணையத்து ஆடு மாடுகள மலையடிவாரத்துக்கு நானும் கோணக்காலு மல்லிகாக்காவும்தான் ஓட்டிக்கிட்டுப் போவோம். பண்ணையக்காரவூட்ல எஞ்சோட்டுக்கு இருக்குற தர்ஷினி பள்ளிக்கோடம் போறதுக்கு, நாங்க மாடோட்ற சமயத்துலதான் பள்ளிக்கோட வேனு வரும். வேனு வந்துட்டுப்போறப்போ அடிக்கிற பொக வாசம் எனக்கு ரொம்ப புடிக்கும்.

மல்லிகாக்காவ மல்லீக்கானுதான் நான் கூப்புடுவேன். அக்கா ஒருத்திதான் ”புஷ்பா”ன்னு என்ன கூப்புடும், மத்தவிங்க ”பொசுப்பா, பொசுப்பா”ன்னுதான் கூப்புடுவாங்க. அக்கா விந்திவிந்தி மேச்சக்காட்டோரம் இருக்குற பயிறுபச்சையக் கடிக்கப் போற மாடுகள முடுக்குறதுக்கு ஓடுறத பாக்குறப்போ பாவமா இருக்கும்.

மல்லீக்கா பள்ளிகோடம் போனதேயில்லியாம், என்ன ”நீ பள்ளிக்கோடம் போடி புஷ்பா”ன்னு சொல்லிக்கிட்டேயிருக்கும். மத்யான சோத்துக்குக்கு கட்டுத்தரைக்கு ஓட்டியாந்துருவோம், சோறு தின்னுட்டு, அஞ்சாங்கல்லு ஆடுவோம், புளியங்கொட்ட இருந்தா, ஒரு பக்கம் ஒரசி வெள்ளையாக்கி, தாயக்கரம் ஆடுவோம்.

திடீர்னு ஒரு நாள் அம்மாக்கு வலி வந்து ஆஸ்பத்திரிக்கு போயிட்டாங்கன்னு பக்கத்தூட்டு ஆயா சொல்லி, அவுங்கூட்லியே படுக்க வச்சுக்கிச்சு. ரெண்டு நாள் ஆயாவூட்லதான் இருந்துட்டு பண்ணயத்துக்குப் போனேன். மூனாம் நாள் மத்தியானப் பஸ்சுக்கு அம்மாலும் அப்பனும் வந்துருவாங்கன்னு ஆயா சொல்லுச்சு. மாடு மேச்சுட்டு மத்தியானச் சோத்துக்கு வரும்போது அப்பன் வர்றது தெரிஞ்சுது. மூனு நாளா பாக்காத அப்பன பாத்தவுடனே அழுகாச்சி வந்துருச்சு. ஓடிப்போயி கட்டிப்புடிச்சுக்ட்டு அழுததுல தங்கச்சியா, தம்பியான்னு கேக்க மறந்து போயிட்டேன்.

வூட்டுக்குள்ளே நொழையும் போதே அம்மா “அலேய்.. பொஸ்சுப்ப்ப்பான்னு” ஓடியாந்து தூக்கிக்கிச்சு. அம்மா தூக்கவும் எனக்கு திரும்பியும் அழுவாச்சி வந்துருச்சு. அப்பவும் கேக்கல தங்கச்சியா, தம்பிப் பாப்பாவானு. பாப்பாவ பாருன்னு பக்கத்துல கூட்டிக்கிட்டுப் போனப்போத்தான் துணியத்தான் இழுத்துப் பார்த்தேன். அப்போத்தான் தெரிஞ்சுது தங்கச்சின்னு. என்னமோ தெரியல அப்போயிருந்தும் அவ மேல பாசம்னா பாசம்.

அடுத்த நா காத்தால பண்ணையத்துக்கு எழுப்புனப்போ அழுவாச்சி வந்துருச்சு. பாப்பாவ வுட்டுட்டு போக மாட்டேன்னு அழுதேன், செரின்னு அப்பன் வுட்ருச்சு. அப்படியும் ரெண்டு நாள் கழிச்சு அழுவுறப்பயே தூக்கிட்டுப்போயி வுட்டுருச்சு அப்பன். மேச்சக்காடு முழுசும் அழுதுக்கிட்டேயிருந்தேன். மல்லீக்காதான் கண்ணத் தொடச்சு மடிமேல உட்கார வச்சுக்குச்சு. அடுத்த நாளும் அழுதேன், அம்மாதான் ”பாவம் பொசுப்பா, வூட்டலதான் இருக்குட்டுமேனு” சொல்லுச்சு.

எந்நேரமும் சின்னக்கண்ணுகூடவே இருப்பேன். சின்னக்கண்ணு சீக்கிரமே பால்குடிய வுட்டுட்டா, பால்குடிய வுட்ட பொறவு அம்மாளும் பண்ணையத்துக்கு வேலைக்கு போவ ஆரம்பிச்சிருச்சு, பெறகு நான் தான் சின்னக்கண்ணுக்கு காவல்.

ராசகுமாரி மண்ணுல கால் வெக்கிறதுன்னாவே கத்துவா, எங்க போனாலும் ”பொஸ்க்காக்கா… தூத்க்கோ”னு துணியப்புடிச்சு புடிச்சு இழுக்குறா. சின்னக்கண்ணு ”க்கா”ன்னு கூப்பிடறப்பல்லாம், எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும். தர்ஷினிய பார்த்து ரொம்ப நாளாச்சு. வேனு வந்துட்டுப்போற வாசம் மட்டும் மனசுக்குள்ளே அப்டியே இருக்குது.

தர்ஷினி மாதிரியே சின்னக்கண்ணுக்கு துணி போட்டுப் பாக்கனும். என்னய எப்போ பள்ளிகோடத்துக்கு வுடுவாங்கன்னு தெரியல, கரட்டுப் பக்கம் கல்லொடைக்கப் போற அப்பன் வாங்குற காசு, சந்தச் செலவுக்குத்தான் செரியா இருக்குதாம். அதுனால தர்ஷினி போற பள்ளிக் கோடத்துக்கெல்லாம் போவ முடியாதாம்.



சாவடிப் பள்ளிக்கோடத்துக்குத்தான் போவனுமாம், அடுத்த வையாசி மாசத்துல கொண்டுபோய் வுட்ரலாம்னு அப்பன் சொல்லுச்சு. அம்மாதான் இப்பவே ஒரு வருசம் கூடிப்போச்சு வர்ற வைகாசிலீயே வுட்றலாம்னு சொல்லுச்சு. எனக்கும் எப்படா வையாசி மாசம் வரும்னு ஆசையா இருந்துச்சு. பக்கத்தூட்டு ஆயாகிட்ட கேட்டப்போ, நாலு மாசம் இருக்குதுனு சொல்லுச்சு. ”சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரனும்"னு சாமி கும்பிட்டேன்.

அன்னிக்கொரு நாள், நான் பள்ளிக்கோடம் போயிட்டா, சின்னக்கண்ணுவ அம்மாயி வூட்ல வுடனும்னு அம்மா சொன்னப்போ அழுவாச்சு வந்துருச்சு. பள்ளிக்கோடத்துக்கு சின்னக்கண்ணுவ தூக்கிட்டு போய்க்றேனதுக்கு, அம்மா பள்ளிக்கோடத்துல வுடமாட்டாங்கன்னு திட்டுச்சு.

சின்னக்கண்ணு சிணுங்க ஆரம்பிச்ச சத்தம் கேட்டுச்சு.. ஓடிப்போய் பாட்டல்ல பால ஊத்திக்கொடுத்தேன். ”மொச்சுக்.. மொச்சுக்”னு குடிக்கிற சத்தம் கேட்டுச்சு. மூடுன கண்ணுக்குள்ளே கண்ணுமுழி அசையறது தெரிஞ்சுது. குடிச்சுப்போட்டு பாட்ல பக்கத்துல போட்டப்போ, வவுறு குண்டாத் தெரிஞ்சுது. தூரத்துல எங்கியோ வேனு ஆரன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு, சின்னக் கண்ணு தூக்கத்துல சிரிக்கிற மாதிரி ஒதட்ட சுழிச்சா. தூக்கத்லயும் ஊளமூக்கி அழகாத்தான் இருக்குறா.

மனசுக்குள் சாமி நெனப்பு வந்துச்சு 
சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரக்கூடாது சாமி

____________________








தாமதமான பொறுப்பி: கதையின் இடையே உள்ள குழந்தைகளின் படம் சமீபத்தில் நான் எடுத்தது. அந்தப் படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் கவிதையொன்று மனதுக்குள் துளிர்த்துக் கொண்டேயிருந்தது. கவிதை முழுதாய் வடிவம் பெறாததால் கதையாக முயற்சி செய்தேன்.  கதைக்கு கிடைக்கும் பாராட்டுகள், ஆர்வமாய் கேமராவை உற்றுப் பார்க்கும் அந்த நான்கு விழிகளுக்கே வாழ்த்துகளாகச் சேர வேண்டும்.


___________

Sep 22, 2010

பகிர்தல் (22.09.2010)

நேசிக்க நிறையக் காரணங்கள்
ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சிக்கான நேர்காணல் ஒளிப்பதிவில் கடந்த திங்கட்கிழமை கலந்து கொண்டேன். (நிகழ்ச்சி ஒளிபரப்பும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிகிறேன்.) இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பிற்கு மிக முக்கியக் காரணம் பதிவுல நண்பர்கள் ஆரூரன் மற்றும் உண்மைத் தமிழன். பதிவர் உண்மைத் தமிழனிடம் இதற்கு முன்பு ஒரு முறை சில நொடிகள் மட்டுமே கைபேசியில் பேசியிருக்கிறேன். ஆனாலும், நான் இந்த முறை சென்னை சென்ற போது என்னை பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்று, எல்லா உதவிகளையும் செய்து உபசரித்து அனுப்பிய நண்பர் உண்மைத் தமிழன் சரவணனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

நிகழ்ச்சி நிறைந்து, வானம்பாடிகள் பாலண்ணாவை சந்திக்கச் செல்லும் போது கடும் பசியில் வயிறு துடித்தது. அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்த போது, குளிர்ச்சியான குடி நீரோடு சரவண பவன் சாப்பாடு தயாராக இருந்தது. பசிக்கும் நேரத்தில் எதிர்பாரமல் கிடைக்கும் உணவு அமுதமே. இந்த அன்பும், உபசரிப்பும் எனக்கொரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.

வஞ்சம், கோபம், குரோதம் போன்ற காரணங்களை புறந்தள்ளி, பதிவுலக நண்பர்களோடு நேசம் பாராட்ட பல காரணங்கள், தருணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது மீண்டும் மீண்டும் மனதில் பளிச்சிடுகிறது.

------------------------

உறுத்தும் உணவு
சரவண பவனின் பார்சல் சாப்பாடு அருமையாகவே இருந்தது. ஆனாலும் சாப்பாட்டோடு கொடுக்கப்படும் சாம்பார், கூட்டு, ரசம், பாயாசம் என ஒவ்வொரு பதார்த்தங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தருவதை ஜீரணிக்க முடியவில்லை. பசியும், வாங்கி வைத்த நண்பரின் அன்புமே அந்த உணவை அந்த இடத்தில் சாப்பிட வைத்தாலும், மனதுக்குள் நெருடிக் கொண்டேயிருந்தது, ஒரு வேளை சாப்பாட்டுக்கு நாலு பிளாஸ்டிக் டப்பாக்களை வீணடிக்க வேண்டியிருக்கே என்று. இதற்கான மாற்றுகள் மிக அவசரமாகப் புகுத்தப்பட வேண்டும்.

------------------------

சட்டம் யார் கையில்
போடிநாயக்கனூரைச் சொந்த ஊராகக் கொண்டிருக்கும், நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்ன தகவல், போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்குகளை தடை செய்திருப்பதாகவும். தற்போது போடி பிளாஸ்டிக் இல்லா நகரமாக இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களால் பின்பற்றப் படுகிறது. பிளாஸ்டிக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் அதிகாரிகள் வணக்கத்திற்குரியவர்கள். சட்டம் சரியாக இயங்கினால் எல்லாம் சாத்தியம் தான்.

------------------------

போலீஸ் Vs பன்றிக் காய்ச்சல்
காவல் துறையினர் இரவு நேரச் சோதனைகளில், வாகனம் ஓட்டுபவர் மது அருந்தியிருக்கின்றனரா என்பதை சோதிக்க வாயை ஊது என்று சொல்லும் பரிதாபமான போக்கே இன்னமும் இருக்கிறது. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் நபரின் வாயை ஊதச் சொன்னால், சொன்னவருக்கும் சங்குதான் ஊத வேண்டியிருக்கும். பாவம் இவர்களுக்கொரு விடிவுகாலம் வராதா?

------------------------

போடுங்கம்மா ஓட்டு!
இனிய நண்பர் கருவாயன் (எ) சுரேஷ் பாபு அவர்கள் PIT தளத்தில் மிகப் பிரபலமான புகைப்படக் கலைஞர் மற்றும் ஆசிரியர் என்பதை அனைவரும் அறிவார்கள். EPSON நிறுவனம் நடத்தும் இந்த வருடத்திற்கான சிறந்த புகைப்படக்காரர் போட்டியில் அவரையும் ஒரு வேட்பாளராக அறிவித்து, அவரது இரண்டு படங்கள் தேர்வாகியுள்ளன. அதுகுறித்த சுட்டி. புகைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சுரேஷ் பாபுவிற்கு வாழ்த்துகளையும் வாக்குகளையும் அளியுங்கள். வாழ்த்துகள் சுரேஷ் பாபு.

______________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...