Aug 1, 2016

நிறைவடைதலும் முழுமையடைதலும்





காலை ஐந்து மணிக்கு சில நிமிடங்கள் இருக்கும்போது நகரின் ஒதுக்குப்புறமான சாலையொன்றில் நடந்து கொண்டிருக்கிறேன். வழியில் இருக்கும் ஒரு கல்லூரியின் சுற்றுச்சுவருக்குள் அடர்த்தியாக இருக்கும் மரங்களிலிருந்து பறவைகளின் விதவிதமான குரல்கள். எதையும் தனித்து அடையாளம் கண்டுவிட முடியாதபடி குறுக்கும் நெடுக்குமாய் அடர்த்தியாய்ப் பாயும் குரல்கள் யாவும் இனிமையிலும் இனிமைதான். ஒவ்வொரு பறவையின் ஓசையும் அவைகளின் மொழியென்பது புரிகிறது. பெருநகரத்தின் பரபரப்பானதொரு ரயில் நிலையத்தில் வந்து குவியும் பல மொழிகள் பேசும் மக்களின் குரல்களை ஒரே நேரத்தில் கேட்டால் எப்படி புரிந்தும் புரியாமலும் இருக்குமோ அப்படியான குரல்கள் அவை. ஆனாலும் அந்தக் கலப்படக் குரல்கள் அதி இனிமை வாய்ந்தவை. ஏதோவொரு இனம்புரியாத உற்சாகத்தை நெஞ்சில் நெருப்பாய் பற்ற வைப்பவை. அது தனக்குள் ரகசியமாய் குளிரை வைத்திருக்கும் நெருப்பு. வார்த்தைகளால் வடிக்கவியலாத பெரும் இதம் தோய்ந்தது.

குரல்கள் தேய்ந்துபோகும் தொலைவுக்கு நகர்ந்திருக்கையில், எதிரில் இரண்டு இளைஞர்கள் துரித நடையில் வருகின்றனர். வீதி விளக்கு வெளிச்சத்தில் தெரியும் அவர்களின் உருவம் வட இந்தியர்கள் என்பதைக் காட்டுகிறது. இங்கு வந்து பணிபுரியும் வட இந்தியர்களும், நாமும் ஒத்த உருவத்தில் இருந்தாலும், அவர்களின் சிகை, உடை, நடை மிக எளிதாக அவர்களை அடையாளப்படுத்தி விடுகிறது. அது நடைப் பயிற்சியல்ல. அநேகமாக வேலைக்குச் செல்வதற்கான நடை அது.

எங்கும் இருள் நிறைந்திருக்க, சாலையோரத்தில் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது கடையில் பளிச்சென விளக்கெரிகிறது. தையல்காரர் ஒருவர் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கும்கூட ஒருவர் தனியே வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என நினைக்கும் கனத்தில், அங்கிருந்து பண்பலை வானொலியில் வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது, குளுகுளு தென்றல் காற்றும் வீசுதுபாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. மனம் பறவையின் ஓசைகளிலிருந்து, வட இந்திய இளைஞர்களிடமிருந்து, அந்த தையல்காரரின் உழைப்பிலிருந்து என எல்லாவற்றிலுமிருந்தும் வெளியேறி தாடி வைத்த கமலோடும், முந்தானை காற்றில் பறக்கும் அமலாவோடும் எதிர்க்காற்று முகத்தில் அறைய பல்லவன் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கத் தொடங்கிவிட்டது. நாள் முழுதும்கூட பயணிக்கலாம்.

உலகின் பேரதிசயம் என்னவெனக் கேட்டால் இக்கணத்தில், விடியல் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த இருள் இப்படியே நீண்டு போய்க்கொண்டேயிருந்தால் எப்படியிருக்குமென பல நேரங்களில் கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அப்படி நினைக்கும் கணம்தோறும் ஒரு சூன்யம் மனதெங்கும் பரவும். இரவுகள் தொடர்ந்தால், நாம் என்ன செய்வோம் என்ற கேள்விகளுக்கு, பதில்களைவிட பயமே அணி வகுக்கின்றன.

அப்படியான ஒவ்வொரு விடியலிலும் ஒவ்வொருவரிடமும் ரகசியப் பரிசு போல் அந்த தினம் வழங்கப்பட்டு விடுகிறது. சிலருக்கு அது சிலிர்ப்பூட்டும் பரிசு; பலருக்கு அதுவொரு அலுப்பூட்டும் வாடிக்கை. ஒரு தினம் என்பதை ஒரு இரவையும் பகலையும் அல்லது இருபத்து நான்கு மணி நேரத்தையும் மட்டுமே கொண்டு காண்பவர்களுக்கு அலுப்பு மிஞ்சுவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. அலுப்போடு அணுகுபவர்களுக்காக ஒரு போதும் அந்த தினம் தன் வேகத்தைக் அதிகரித்துக் கொள்வதில்லை. உலகம் முழுமைக்குமான பொதுவானதொரு வேகத்தோடு, திடத்தோடுதான் நாள் இயங்குகிறது.

விடியலில் தொடங்கி, இருள் பூப்பதில் ஒரு நாள் முடிகிறது என்பது நிதர்சனமான உண்மையென்றாலும் கூட அதை அவ்வாறு மட்டுமே எடுத்துக்கொள்ள முடிவதில்லை. காரணம், நிறைவடையும் தினம் வேறு; முழுமையடையும் தினம் வேறு. நிறைவடையும் எல்லா நாட்களும் முழுமையாகி விடுவதில்லை. முழுமை என்பது தீர்ந்து போகும் மணி நேரங்களில் இல்லை. சில தினங்களின் முடிவில் ஏதோ ஒன்று தொக்கி நிற்கும். இரவின் உறக்கத்தைப் பிடுங்கித் தின்று கொண்டிருக்கும்; அல்லது நடுநிசியில் எழுப்பிவிட்டு சிரிக்கும். சில தினங்களில் ஏதோ ஒன்று மனதிற்குள் விதையாய் விழும். அது தானே வளரும், பூ பூக்கும், மணக்கும், விதைகளைச் சிதறவிடும், முளைத்து துளிர் விடும். மனசு முழுதுவதும் பசுமையாய்ச் செழிக்கும்.

முழுமையடையும் தினங்களில் வாழ்வின் ருசி அறிந்துவிட முடியும். அந்த முழுமைக்கு ஏதோ ஒரு செயல், செயலின் பூரணம், ஒரு காட்சி, ஒரு உரையாடல், உரையாடலில் ஒரு வரி அல்லது அதற்குள்ளிருக்கும் ஒரு சொல் என ஏதோ ஒன்று போதுமானதாயிருக்கும்.

ஒரு நாளை முழுமையடையச் செய்யும் துடிப்பான ஒரு செயலை சமீபத்தில் ஒருவரிடம் கண்டேன். அதுவொரு மலைக்கிராமம். இன்னும் சமதள மக்கள் துளியும் புழங்காத மலைக்கிராமம். ஒட்டுமொத்த மலைக்கிராமங்களுக்குமே மிகப்பெரிய சாபக்கேடாக இருப்பது, கல்வி வாய்ப்பின்மை. அம்மாதிரியான கிராமங்கள் தோறும் அரசாங்கம் பள்ளிகளை அமைத்து அதற்கு ஆசிரியர்களை நியமித்திருக்கிறது. அந்தப் பள்ளிகளுக்கு  நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நகரப் பகுதியிலிருந்தோ, வளம் நிறைந்த பகுதியிலிருந்தோ வந்தவர்கள். அவர்களால் வசதி குறைந்த அந்தக் கிராமங்களில் தங்கி வேலை பார்ப்பது இயலாது என்கின்றனர். தினமும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது மலையின் அடிவாரத்தில் இருக்கும் நகரத்திலிருந்தோ செல்வதும் சாத்தியப் படுவதில்லை.

உதாரணத்திற்கு நான் சென்ற கிராமத்திற்கு நகரத்திலிருந்து 30 கி.மீ தூரம் வரை, பேருந்து வசதியுண்டு. அந்த வழித்தடத்திலும் ஐந்து பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அங்கிருந்து குறிப்பிட்ட அந்தக் கிராமத்திற்குச் செல்ல மேலும் 28 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். அதில் பாதித் தூரம் தார்ச்சாலை. வனத்துறையின் கீழ் வரும் மீதிச் சாலை மிகக் கரடுமுரடான  சாலை. அதில் ஜீப்கள் மட்டுமே சாத்தியம். சில இடங்களில் ஆட்களை இறக்கி விட்டுவிட்டு, குறிப்பிட்ட தொலைவிற்குப் பின்னர்தான் ஏற்றிக்கொள்ள முடியும். அந்த மாதிரியான கிராமத்திற்கு ஒரு ஆசிரியர் தினந்தோறும் சென்று வருவது சாத்தியமல்ல. குறைந்தபட்சம் அங்கு தங்கும் ஆசிரியர்களால் மட்டுமே பணியாற்ற இயலும். அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியர்கள் அமையும்வரை அந்த மலைக்கிராமங்களுக்கு கல்வி வெற்றுக் கனவுதான்.

அந்த கிராமத்தில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு கூலி வேலைகளுக்குச் செல்பவர்களைத் தேடிப்பிடித்து மீண்டும் படிக்க வைக்க, அறக்கட்டளையொன்று உழைத்து வருகிறது. சில இடங்களில் அரசு நிதியுடன் கட்டிடங்கள் எழுப்பி, பல இடங்களில் மற்றவர்களின் உதவியுடன் குடிசைகள் அமைத்து, அங்கு ஆசிரியர்களை நியமித்து கல்விக்காக பெரியதொரு போர் முனைப்புக்கு நிகரான காரியங்களை நடத்தி வருகின்றார்கள்.

அப்படியான பள்ளி ஒன்றில், கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவிற்குச் சென்றிருந்தேன். இடைநின்ற மாணவர்களில் அறக்கட்டளை உதவியோடு மலையைவிட்டு இறங்கி உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரை முடித்தவர்களுக்கான நிகழ்வு அது. பள்ளிக் கட்டிடத்திற்கு நிலம் வழங்கிய ஜடையன் என்ற பெரியவரை மேடையில் அமர வைத்திருந்தனர். தாய் மொழியைக் கன்னடமாகக் கொண்டிருந்தாலும், அவர்கள் அரசு அமைப்பால் தமிழர்களாக அடையாளப்படுத்தப் பட்டவர்கள். நிகழ்வில் ஜடையன் அவர்களைக் கௌரவிக்க, ஒரு முக்கியமான நபரை வைத்து சால்வை அணிவிக்கும் நிகழ்வு நடந்தது. எத்தனையோ நூறு சால்வை அணிவிக்கும் வைபங்களை மேடைகளில் கண்டிருக்கிறேன். ஆனால் ஜடையன் வந்து நின்றதிலேயே ஒரு நளினமான கம்பீரம் தெரிந்தது. போர்த்துபவர் சால்வையை விரிக்கும்போதே, அதே நளினமும் கம்பீரமும் கூடிய தன்மையோடு கைகளை சற்று விரித்து தயாரானார். போர்த்தியவுடன் சால்வையின் இரு பக்கங்களையும் தம் கைகளுக்குள் லாவகமாக அடக்கிக்கொண்டு போர்த்தியவருக்கு வழக்கம்போல் கும்பிடு மட்டும் போடாமல், தளராத கம்பீரத்தோடு ஒரு கையால் அவரை அணைத்தபடி கேமராக்களுக்கு காட்சியளித்தார். சட்டென மேசைப் பக்கம் திரும்பி, யாருக்கோ வழங்கப்பட்டிருந்த பூங்கொத்து ஒன்றினை எடுத்து, குனிந்து சால்வை போர்த்தியவருக்கு வழங்கினார்.

என்னால் அந்தக் காட்சியிலிருந்து இப்போதும்கூட மீள முடியவில்லை. சற்றும் எதிர்பாராத தருணத்தில் ஒருவர் தன்னை வெளிப்படுத்தும் பாங்கே அவரின் உண்மையான ஆளுமையை காட்டுகிறது. சினிமாவில் எத்தனையோ நாயகர்கள் எத்தனையோ விதமான நளினங்களை, இயல்பாகவும், நடிப்பாகவும் வெளிப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு மலைக் கிராமத்தின் உச்சியில் காற்றில் உலர்ந்தபடி, கல்வியறிவும், நான் சொல்லும் உலக அறிவுமற்ற ஜடையன் சில நொடிப்பொழுதில் தன்னை வெளிப்படுத்திய நளினம்! எனக்கு அந்த தினத்தை மட்டுமல்ல, அதிலிருந்து என் நினைவுக்குள் அவர் தளும்பும் ஒவ்வொரு தினத்தையும் முழுமையாக்கும் வல்லமை கொண்டது.

இதோவந்துகொண்டிருக்கும் விடியல் நமக்கானதொரு அழகிய பரிசுதான்!. பரிசைப் பெற்று மகிழும் மனநிலைக்கு இப்போதிலிருந்தே தயாராவோம். தினத்தின் ஏதோ ஒரு கணத்தில் நமக்கான முழுமையை நாம் தேடியடைவோம். தேடலின்போது மனதின் கதவுகளும் நிபந்தனைகளின்றி திறந்திருத்தல் வேண்டும்.

-

நம் தோழி ஜூலை இதழில் வெளியான கட்டுரை

Jul 26, 2016

அப்பாவை ஏன் கொண்டாடுவதில்லை?

து ஒரு முதிர் காலைப் பொழுது. குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்குள் மிகச் சுமாரான கூட்டம்தான். அப்போதுதான் முகூர்த்தம் நிறைவடைந்திருக்க வேண்டும். பெண்ணின் அப்பா மட்டுமே எனக்குப் பழக்கமானவர். குறைந்தபட்சம் அவரிடம் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு வணக்கம் அல்லது கை குலுக்கல் போதும்.

மணமேடையில் மணமக்களைச் சுற்றி நிற்கும் நெருங்கிய உறவினர் கும்பலில், அவரைத் தேடினேன். நாதஸ்வரக்காரர் தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்துவாசித்துக் கொண்டிருந்தார். கூட்டமில்லாத சூழலும் குளிர் அரங்கும் அந்த நாதஸ்வரத்தை லயித்துக் கேட்க அனுமதித்தது. மேடைக்குக் கீழே அமர்ந்தவாறு பெண்ணின் அப்பாவைக் கூர்ந்து தேடினேன். அவர் மணவறைக்குப் பின்பக்கமாய், ஓரமாய்க் கண்ணாடியைக் கழட்டி கண்களைத் துடைத்தபடி இருந்தார். 

வன் என் வயதொத்த உறவுக்காரன். பிறப்பு இருவருக்கும் ஒரே நிலத்தில் என்றாலும், நாற்பதாண்டுகளாக என் நிலமும், வளர்ப்பும் வேறு. கோயில் திருவிழா, விருந்து மற்றும் நல்லது கெட்டதுகளில் மட்டும் எப்போதாவது சந்திப்பதுண்டு. அவன் பள்ளிப் படிப்பையே நிறைவு செய்யவில்லை. விவசாயத்தில் நிலைபெற்றுவிட்டான். அறுபதுகளைக் கடந்திருக்கும் தந்தையும், மகனும், ஒத்துவரவில்லையென நிலத்தைப் பிரித்துத் தனித்தனியே விவசாயம் செய்கிறார்கள். அப்பாவுக்கு ஓரளவு மதுப் பழக்கம் உண்டு. 

மகனுக்குப் புகை, மது இரண்டும் உண்டு. இம்முறை சந்தித்தபோது தன் அக்காவின் பேரன் பார்வையில் படாதபடி மறைவாய் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய தந்தை அவ்வழியே கடந்து சென்றார். அவரைக் கண்டு எந்தவித உணர்வும் காட்டாமல் மிக இயல்பாய்ப் புகைத்தபடியிருந்தான். சிறுவயதில் துண்டு பீடி குடித்ததற்காக அவன் அடித்து வெளுக்கப்பட்டது நினைவிற்கு வந்துபோனது. 

பொதுவாக அம்மா குறித்துப் பேசும், நினைக்கும், கொண்டாடும் அளவிற்கு அப்பா குறித்துப் பேசுவது, நினைப்பது, கொண்டாடுவது இல்லையெனும் மனக்குறை எப்போதும் எனக்குண்டு. நானும் அப்பாவாக இருப்பதால் அந்த மனக்குறையா என்றால் இல்லையென்பேன். நானே என் அம்மாவோடு காட்டும் நெருக்கத்தை அப்பாவிடம் காட்டுவதில்லை என்ற குற்றவுணர்வால் ஏற்படும் மனக்குறையென்றும் எடுத்துக் கொள்ளலாம். 

கேரளாவின் ஒரு அழகிய கிராமத்து வீட்டில் முதிர்ந்த அப்பாவும் பிள்ளையும் வசிக்கிறார்கள். அருகிலிருக்கும் ஊரில் அப்பாவின் ஸ்டுடியோவை மகன் தொடர்ந்து நடத்துகிறான். ஒருநாள் இரவு உணவும், கொஞ்சம் மதுவும் பரிமாறிவிட்டு சாப்பிட அப்பாவை அழைக்கையில் அவர் காணாமல் போயிருக்கிறார். தேடி அலுத்து காவல் நிலையம் செல்கிறார்கள்.

உடன் வந்தவர்கள் அப்பாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம்என்றும், ‘காபரே நடனம் காண பெங்களூரு சென்றிருக்கலாம் என்றும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அருகிலுள்ள கிணறுகளில் பார்த்தீர்களா?’ எனக் காவல் அதிகாரி கேட்க, பதைபதைக்கிறான் மகன். மலை மீதிருக்கும் ஆலயத்திற்கு ஐம்பத்தொரு கிலோ எடையுள்ள சிலுவையைச் சுமந்து வருவதாகப் பிரார்த்தனை செய்கிறான்.

கவலையோடு வீட்டுக்குத் திரும்புகிறவன் பார்வையில், முன்பக்கமிருக்கும் வாழைத் தோட்டத்திலிருந்து ஒரு ஃப்ளாஷ் வெளிச்சம் படுகிறது. தேடி ஓடுகிறான். கையில் கேமராவோடு வாழைத் தோட்டத்தில் இருளில் அமைதியாக அமர்ந்திருக்கிறார் தந்தை.

உறங்க முயலும் தந்தையிடம், ‘‘வாழைத்தோட்டத்தில் என்ன செய்தீர்கள்?’’ எனக் கேட்க, ‘‘அங்கு வரும் கிளிகளைப் படம் எடுக்கப் போனேன்’’ என்கிறார். விளக்கை அணைத்துவிட்டு வெளியே சென்றவன், ஓடி வந்து அப்பாவின் அருகே ஒட்டிப் படுத்து, அவரின் முதிர்ந்த விரல்களைப் பிடித்துக் கொள்கிறான். 

எதிர்பாராத ஒரு சூழலில் அடிதடியில் மகன் சிக்கிக்கொள்கிறான். இவனை எதிராளி துவம்சம் செய்து வீழ்த்துகிறான். வீழ்ந்து கிடந்தவனை நோக்கி தாக்குவதற்காகக் குனியும்போது அவன் முதுகைத் தட்டி, ‘‘அதுதான் அடிச்சு வீழ்த்திட்டியே! இன்னும் என்ன... போ!’’ என்கிறார் அந்த முதிய தந்தை. 

காதலியைப் பார்க்க ஆனந்தமாய் வரும் மகன், அமர்ந்திருக்கும் தந்தையைக் கடக்கையில் நிதானமாய்க் கடந்து, படியிறங்கி பரவசமாய் ஓடுவதை ஒரு கவிதை போல் ரசிக்கிறார். 

அதே காதல் தோற்றுப்போனதும் மௌனமாய் ஆனால் ஆதரவாய் இருக்கிறார். மழையில் கிளம்பும் மகனை ‘‘எங்கே போறே’’ எனக் கேட்க, ‘‘கடைக்கு’’ என்கிறான். ‘‘மழை விட்டதும் போ! கடைனு சொல்லாதே, ‘ஸ்டுடியோனு சொல்’’ என்கிறார். 

தனக்குப் புகைப்படத்தைக் கலையாய் எடுக்கத் தெரியவில்லை என்பதை மகன் உணரும் தருணத்தில், அதை ஒரு கலையாய் சில வரிகளில் புரிய வைக்கிறார். ‘‘படம் பிடிக்கும்போது மிக அருமையான தருணங்கள் வாய்க்கும் கணத்தை சற்றுமுன் உணர்ந்து க்ளிக் செய்யக் காத்திருக்கணும்’’ என்கிறார். விளக்கம் கேட்பவனிடம், ‘‘உணவை ஊட்ட முடியும், வாயிலிட்டு மென்று தரமுடியாது’’ என்கிறார். ‘‘புகைப்படக் கலையென்பது கற்றுத் தருவதல்ல... தானே கற்றுக்கொள்வது!’’ என்றும் பாடம் புகட்டுகிறார். 

மகேஷிண்டெ பிரதிகாரம்என்ற மலையாளப் படத்தில் பெண்ணற்ற ஒரு வீட்டில் அப்பாவுக்கும் மகனுக்குமான பிரத்யேகமான அழகியதொரு வாழ்க்கையை வாழ்கின்றவர்கள் இவர்கள். அழகிய இடுக்கி, மகேஷின் இரு காதல்கள், வெகு இயல்பாய் நீண்டு மகேஷின் மீது வன்மமாய் முடியும் ஒரு சம்பவக் கோர்வை, மகேஷின் எட்டாம் நம்பர் லூனார் செருப்புச் சப்தம் என ஒவ்வொருவருக்கும் படத்தில் ரசிக்க, லயித்துப் போக ஏதோ ஒன்று இருக்கலாம். 

எனக்கு அந்தத் தந்தைக்கும் மகனுக்குமான உறவு, பிரியமான பல கேள்விகளையும், பாசமான பல பதில்களையும் தெரிவு செய்து தருகிறது. 




பொறுப்பு, கட்டுப்பாடு, பொருளீட்டல் எனும் பல நிலைப்பாடுகள் தந்தையைச் சார்ந்ததாக இருப்பதால், இயல்பாகவே தந்தையெனும் உறவு சற்று கண்டிப்பான பிம்பமாகவே அமைந்து விடுகிறது. 

சுமந்து, வலி தாங்கி ஈன்றெடுப்பதால் தாய்க்கான உறவும், உரிமையும், பிரியமும் இயல்பாகவே கூடுதலாய் இருப்பதை மறுக்க முடியாது. இரண்டையும் ஒப்பிடுவதும் பொருத்தமாகாது. ஆனாலும் தந்தை என்ற உறவு பிள்ளைகளிடம், தாய் அளவுக்கு ஒட்டாமல் இருப்பது மெல்லிய ஒரு குறையாக இருப்பதை மறுக்க முடியாது. 

இங்கு தந்தை-மகன்(ள்) உறவு காலத்திற்கேற்ப கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டே வந்திருக்கின்றது. பேசிக்கொள்ளாத அப்பாவையும் மகனையும் கண்ட நினைவிருக்கிறது. எதிரியாகத் தந்தையைப் பாவித்தவர்களும் உண்டு. பயம் அல்லது மரியாதையின் காரணமாய்த் தந்தையோடு இடைவெளி கொண்டிருந்தவர்களையும் கண்டதுண்டு. சமீப ஆண்டுகளில் பிள்ளைகளிடம் அதீதமாய் நட்பு பாராட்டும் மனநிலைக்கு தந்தைகள் வளர்ந்திருப்பதையும் காணமுடிகிறது. விஞ்ஞானத்தின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல், பிள்ளைகளிடம் கற்றுக்கொள்ளும் மனநிலைக்கும் பதப்பட்டிருக்கிறார்கள். 

தந்தையோடு ஒட்டாமலும் ஒட்டமுடியாமலும் இருந்த பிள்ளைகள், திருமணம் முடித்து தந்தையானவுடன் தம் பிள்ளைகளிடம் அதீதமாய் இழைந்து ஒட்டி நெகிழ்ந்திருக்கும் அழகிய முரண்களையும் காலம் வழங்கியிருக்கிறது. பிள்ளைகளோடு ஒரு அப்பாவாக இழைந்திருக்கும் நேரத்தில், தம் அப்பாவை நினைத்து மனதிற்குள் நெகிழ்ந்து, இப்படி நம் அப்பாவோடு ஒட்டமுடியவில்லையே எனக் கசங்கிய மனதோடு மருகுபவர்களும் இங்குண்டு. 

தாய் அதீத பாசத்தையும், நெகிழ்வையும், பிரியத்தையும் உணர்த்திவிடுவதுபோல் தந்தைகளால் உணர்த்த முடியாமல் இருப்பதன் பின்னால் ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை அது ஆண் எனும் வடிவின் தன்மையாகவும் இருக்கலாம். அப்பான்னா இப்படித்தான்என அவர்கள் அதுவரை கண்டிருந்த பிம்பங்களின் தாக்கமாகவும் இருக்கலாம். இந்த இருக்கலாம்கள் ஏதோ ஒரு புள்ளியில் உடைக்கப்படுவது அல்லது உடைபடுவது அவசியமென்றே தோன்றுகிறது. அதீத பாசத்தையும், நெகிழ்வையும், பிரியத்தையும் உணர முடியாமல் இருப்பதில் என்ன பெருமை இருந்துவிடப் போகிறது! 

மண மேடைக்குப் பின் கண்களைத் துடைக்கும் அப்பாவாய், பீடி பிடித்தற்காக அடித்து வெளுக்கப்பட்ட மகன் தம் கண் முன்னே சிகரெட் பிடிப்பதையும் கடந்து செல்லும் அப்பாவாய், சினிமாவில் காட்டப்பட்டது போல் நிதானத்தோடும் பேரன்போடும் வழிநடத்தும் அப்பாவாய், தன் வாழ்நாளுக்குள் பிள்ளையாகவும், தந்தையாகவும் அந்த உறவுக்குள்ளேயே முரண்பட்டிருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தவனாய் என ஒரு ஆண் கடந்து வரும் நிலைகள் பேசவும், நினைக்கவும், கொண்டாடவும் தகுதியானவைதான் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் சற்று கூடுதல் அன்பும் பிரியமுமான பார்வை தந்தைகள் மீது படிய வேண்டியது மட்டும் இப்போதைய அவசியம்.

-
 
குங்குமம் இதழில் உறவெனும் திரைக்கதை தொடரில் வெளியான கட்டுரை.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...