காலை ஐந்து மணிக்கு சில நிமிடங்கள் இருக்கும்போது நகரின் ஒதுக்குப்புறமான
சாலையொன்றில் நடந்து கொண்டிருக்கிறேன். வழியில் இருக்கும் ஒரு கல்லூரியின் சுற்றுச்சுவருக்குள் அடர்த்தியாக இருக்கும் மரங்களிலிருந்து
பறவைகளின் விதவிதமான குரல்கள். எதையும் தனித்து அடையாளம்
கண்டுவிட முடியாதபடி குறுக்கும் நெடுக்குமாய் அடர்த்தியாய்ப் பாயும் குரல்கள்
யாவும் இனிமையிலும் இனிமைதான். ஒவ்வொரு பறவையின் ஓசையும் அவைகளின் மொழியென்பது புரிகிறது.
பெருநகரத்தின்
பரபரப்பானதொரு
ரயில் நிலையத்தில் வந்து குவியும் பல மொழிகள் பேசும் மக்களின்
குரல்களை ஒரே நேரத்தில் கேட்டால் எப்படி புரிந்தும் புரியாமலும் இருக்குமோ
அப்படியான குரல்கள் அவை. ஆனாலும் அந்தக் கலப்படக் குரல்கள் அதி
இனிமை வாய்ந்தவை. ஏதோவொரு இனம்புரியாத உற்சாகத்தை நெஞ்சில் நெருப்பாய் பற்ற வைப்பவை. அது தனக்குள் ரகசியமாய்
குளிரை வைத்திருக்கும் நெருப்பு. வார்த்தைகளால் வடிக்கவியலாத
பெரும் இதம் தோய்ந்தது.
குரல்கள் தேய்ந்துபோகும் தொலைவுக்கு நகர்ந்திருக்கையில், எதிரில் இரண்டு இளைஞர்கள் துரித
நடையில் வருகின்றனர். வீதி விளக்கு வெளிச்சத்தில் தெரியும்
அவர்களின் உருவம் வட இந்தியர்கள் என்பதைக் காட்டுகிறது. இங்கு வந்து
பணிபுரியும் வட இந்தியர்களும், நாமும் ஒத்த உருவத்தில் இருந்தாலும், அவர்களின் சிகை, உடை, நடை மிக எளிதாக
அவர்களை
அடையாளப்படுத்தி
விடுகிறது. அது நடைப் பயிற்சியல்ல. அநேகமாக வேலைக்குச் செல்வதற்கான நடை அது.
எங்கும் இருள் நிறைந்திருக்க, சாலையோரத்தில்
ஒரு கட்டிடத்தின்
மூன்றாவது
கடையில் பளிச்சென விளக்கெரிகிறது. தையல்காரர் ஒருவர் மும்முரமாய்
வேலை செய்து கொண்டிருக்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கும்கூட
ஒருவர் தனியே வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என நினைக்கும்
கனத்தில்,
அங்கிருந்து
பண்பலை வானொலியில் “வளையோசை கலகலகலவெனக்
கவிதைகள் படிக்குது,
குளுகுளு
தென்றல் காற்றும் வீசுது” பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. மனம் பறவையின் ஓசைகளிலிருந்து, வட இந்திய
இளைஞர்களிடமிருந்து,
அந்த
தையல்காரரின் உழைப்பிலிருந்து என எல்லாவற்றிலுமிருந்தும் வெளியேறி தாடி
வைத்த கமலோடும்,
முந்தானை
காற்றில் பறக்கும்
அமலாவோடும்
எதிர்க்காற்று முகத்தில் அறைய பல்லவன் பேருந்து படிக்கட்டில்
தொங்கியபடி பயணிக்கத் தொடங்கிவிட்டது. நாள் முழுதும்கூட பயணிக்கலாம்.
உலகின் பேரதிசயம் என்னவெனக் கேட்டால் இக்கணத்தில், விடியல் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்த இருள் இப்படியே நீண்டு போய்க்கொண்டேயிருந்தால் எப்படியிருக்குமென பல நேரங்களில்
கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அப்படி நினைக்கும் கணம்தோறும் ஒரு சூன்யம் மனதெங்கும்
பரவும். இரவுகள் தொடர்ந்தால், நாம் என்ன செய்வோம் என்ற கேள்விகளுக்கு, பதில்களைவிட
பயமே அணி வகுக்கின்றன.
அப்படியான ஒவ்வொரு விடியலிலும் ஒவ்வொருவரிடமும் ரகசியப் பரிசு போல் அந்த தினம்
வழங்கப்பட்டு விடுகிறது. சிலருக்கு அது சிலிர்ப்பூட்டும் பரிசு; பலருக்கு
அதுவொரு அலுப்பூட்டும் வாடிக்கை. ஒரு தினம் என்பதை ஒரு இரவையும் பகலையும் அல்லது
இருபத்து நான்கு மணி நேரத்தையும் மட்டுமே கொண்டு காண்பவர்களுக்கு அலுப்பு
மிஞ்சுவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. அலுப்போடு அணுகுபவர்களுக்காக ஒரு போதும்
அந்த தினம் தன் வேகத்தைக் அதிகரித்துக் கொள்வதில்லை. உலகம் முழுமைக்குமான பொதுவானதொரு
வேகத்தோடு,
திடத்தோடுதான்
நாள் இயங்குகிறது.
’விடியலில் தொடங்கி, இருள் பூப்பதில் ஒரு நாள் முடிகிறது’ என்பது நிதர்சனமான
உண்மையென்றாலும் கூட அதை அவ்வாறு மட்டுமே எடுத்துக்கொள்ள முடிவதில்லை. காரணம், நிறைவடையும்
தினம் வேறு;
முழுமையடையும்
தினம் வேறு. நிறைவடையும் எல்லா நாட்களும் முழுமையாகி விடுவதில்லை. முழுமை என்பது
தீர்ந்து போகும் மணி
நேரங்களில்
இல்லை. சில தினங்களின் முடிவில் ஏதோ ஒன்று தொக்கி நிற்கும். இரவின் உறக்கத்தைப்
பிடுங்கித் தின்று கொண்டிருக்கும்; அல்லது நடுநிசியில்
எழுப்பிவிட்டு சிரிக்கும். சில தினங்களில் ஏதோ ஒன்று மனதிற்குள் விதையாய் விழும். அது தானே வளரும், பூ பூக்கும், மணக்கும், விதைகளைச்
சிதறவிடும்,
முளைத்து துளிர்
விடும். மனசு முழுதுவதும் பசுமையாய்ச் செழிக்கும்.
முழுமையடையும் தினங்களில் வாழ்வின் ருசி அறிந்துவிட முடியும். அந்த முழுமைக்கு ஏதோ
ஒரு செயல்,
செயலின் பூரணம், ஒரு காட்சி, ஒரு உரையாடல், உரையாடலில் ஒரு
வரி அல்லது அதற்குள்ளிருக்கும் ஒரு சொல் என ஏதோ ஒன்று போதுமானதாயிருக்கும்.
ஒரு நாளை முழுமையடையச் செய்யும் துடிப்பான ஒரு செயலை சமீபத்தில்
ஒருவரிடம் கண்டேன். அதுவொரு மலைக்கிராமம். இன்னும் சமதள மக்கள் துளியும் புழங்காத
மலைக்கிராமம். ஒட்டுமொத்த மலைக்கிராமங்களுக்குமே மிகப்பெரிய சாபக்கேடாக இருப்பது, கல்வி வாய்ப்பின்மை.
அம்மாதிரியான கிராமங்கள் தோறும் அரசாங்கம் பள்ளிகளை அமைத்து அதற்கு ஆசிரியர்களை
நியமித்திருக்கிறது. அந்தப் பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நகரப்
பகுதியிலிருந்தோ,
வளம் நிறைந்த பகுதியிலிருந்தோ
வந்தவர்கள். அவர்களால் வசதி குறைந்த அந்தக் கிராமங்களில் தங்கி வேலை பார்ப்பது இயலாது என்கின்றனர்.
தினமும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது மலையின்
அடிவாரத்தில் இருக்கும் நகரத்திலிருந்தோ செல்வதும் சாத்தியப் படுவதில்லை.
உதாரணத்திற்கு நான் சென்ற கிராமத்திற்கு நகரத்திலிருந்து 30 கி.மீ தூரம் வரை, பேருந்து
வசதியுண்டு. அந்த வழித்தடத்திலும் ஐந்து பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
அங்கிருந்து குறிப்பிட்ட அந்தக் கிராமத்திற்குச் செல்ல மேலும் 28 கி.மீ தூரம்
பயணிக்க வேண்டும். அதில் பாதித் தூரம் தார்ச்சாலை.
வனத்துறையின் கீழ் வரும் மீதிச் சாலை மிகக் கரடுமுரடான சாலை. அதில் ஜீப்கள் மட்டுமே சாத்தியம்.
சில இடங்களில் ஆட்களை இறக்கி விட்டுவிட்டு, குறிப்பிட்ட
தொலைவிற்குப் பின்னர்தான் ஏற்றிக்கொள்ள முடியும். அந்த மாதிரியான கிராமத்திற்கு ஒரு
ஆசிரியர்
தினந்தோறும்
சென்று வருவது சாத்தியமல்ல. குறைந்தபட்சம் அங்கு தங்கும் ஆசிரியர்களால் மட்டுமே
பணியாற்ற இயலும். அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியர்கள் அமையும்வரை அந்த
மலைக்கிராமங்களுக்கு கல்வி வெற்றுக் கனவுதான்.
அந்த கிராமத்தில்,
பள்ளிப்படிப்பை
பாதியில் கைவிட்டு கூலி வேலைகளுக்குச் செல்பவர்களைத் தேடிப்பிடித்து மீண்டும்
படிக்க வைக்க,
அறக்கட்டளையொன்று
உழைத்து வருகிறது. சில இடங்களில் அரசு நிதியுடன் கட்டிடங்கள் எழுப்பி, பல இடங்களில்
மற்றவர்களின் உதவியுடன் குடிசைகள் அமைத்து, அங்கு
ஆசிரியர்களை நியமித்து கல்விக்காக பெரியதொரு போர் முனைப்புக்கு நிகரான காரியங்களை
நடத்தி வருகின்றார்கள்.
அப்படியான பள்ளி ஒன்றில், கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவிற்குச் சென்றிருந்தேன். இடைநின்ற
மாணவர்களில் அறக்கட்டளை உதவியோடு மலையைவிட்டு இறங்கி உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக்
கல்வி வரை முடித்தவர்களுக்கான நிகழ்வு அது. பள்ளிக்
கட்டிடத்திற்கு நிலம் வழங்கிய ஜடையன் என்ற பெரியவரை மேடையில் அமர வைத்திருந்தனர்.
தாய் மொழியைக் கன்னடமாகக் கொண்டிருந்தாலும், அவர்கள் அரசு
அமைப்பால் தமிழர்களாக அடையாளப்படுத்தப் பட்டவர்கள். நிகழ்வில் ஜடையன் அவர்களைக்
கௌரவிக்க,
ஒரு முக்கியமான
நபரை வைத்து சால்வை அணிவிக்கும் நிகழ்வு நடந்தது. எத்தனையோ நூறு சால்வை
அணிவிக்கும் வைபங்களை மேடைகளில் கண்டிருக்கிறேன். ஆனால் ஜடையன் வந்து நின்றதிலேயே
ஒரு நளினமான கம்பீரம் தெரிந்தது. போர்த்துபவர் சால்வையை விரிக்கும்போதே, அதே நளினமும்
கம்பீரமும் கூடிய தன்மையோடு கைகளை சற்று விரித்து தயாரானார். போர்த்தியவுடன் சால்வையின்
இரு பக்கங்களையும் தம் கைகளுக்குள் லாவகமாக அடக்கிக்கொண்டு போர்த்தியவருக்கு
வழக்கம்போல் கும்பிடு மட்டும் போடாமல், தளராத கம்பீரத்தோடு ஒரு கையால் அவரை அணைத்தபடி கேமராக்களுக்கு
காட்சியளித்தார். சட்டென மேசைப் பக்கம் திரும்பி, யாருக்கோ
வழங்கப்பட்டிருந்த பூங்கொத்து ஒன்றினை எடுத்து, குனிந்து சால்வை
போர்த்தியவருக்கு வழங்கினார்.
என்னால் அந்தக் காட்சியிலிருந்து இப்போதும்கூட மீள முடியவில்லை. சற்றும்
எதிர்பாராத தருணத்தில் ஒருவர் தன்னை வெளிப்படுத்தும் பாங்கே அவரின் உண்மையான
ஆளுமையை காட்டுகிறது. சினிமாவில் எத்தனையோ நாயகர்கள் எத்தனையோ விதமான நளினங்களை, இயல்பாகவும், நடிப்பாகவும்
வெளிப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு மலைக் கிராமத்தின் உச்சியில்
காற்றில் உலர்ந்தபடி,
கல்வியறிவும், நான் சொல்லும் உலக
அறிவுமற்ற ஜடையன் சில நொடிப்பொழுதில் தன்னை வெளிப்படுத்திய நளினம்! எனக்கு அந்த
தினத்தை மட்டுமல்ல,
அதிலிருந்து என்
நினைவுக்குள் அவர் தளும்பும் ஒவ்வொரு தினத்தையும் முழுமையாக்கும் வல்லமை கொண்டது.
இதோ…
வந்துகொண்டிருக்கும்
விடியல் நமக்கானதொரு அழகிய பரிசுதான்!. பரிசைப் பெற்று மகிழும் மனநிலைக்கு
இப்போதிலிருந்தே தயாராவோம். தினத்தின் ஏதோ ஒரு கணத்தில் நமக்கான
முழுமையை நாம் தேடியடைவோம். தேடலின்போது மனதின் கதவுகளும் நிபந்தனைகளின்றி திறந்திருத்தல்
வேண்டும்.
-
நம் தோழி ஜூலை இதழில் வெளியான கட்டுரை
-
நம் தோழி ஜூலை இதழில் வெளியான கட்டுரை
6 comments:
உண்மையில் இவர்களுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு கல்வி அறிவு தேவையா?நாம் தான் அவர்களிடம் போய் கற்றுக் கொண்டு வருகிறோம்.
பரிசைப் பெற்று மகிழும் மனநிலைக்கு இப்போதிலிருந்தே தயாராவோம். தினத்தின் ஏதோ ஒரு கணத்தில் நமக்கான முழுமையை நாம் தேடியடைவோம்.
விடியல் நமக்கானதொரு அழகிய பரிசுதான்....👍😊
விடியல் நமக்கானதொரு அழகிய பரிசுதான்....👍😊
முதல் முறையாக உங்கள் பதிவுகளை படிக்கிறேன் நன்று. மகிழ்ச்சி !
Post a Comment