Jun 13, 2014

ஒரு பிடி கட்டிச்சோறு



முழுமதி இரவொன்றில்
ஒளிக்கயிறு பற்றி
நிலவு நோக்கி
பயணப்படுகிறான் அவன்

போகும் வழியில்
தன்னைத் தின்னவிருக்கும்
பசிக்கு உணவிட
வடை சுடும் பாட்டி
கட்டிக்கொடுத்த
கட்டிச்சோற்று மூட்டையை
முதுகில் சுமந்து போகிறான்

ஒளிக்கயிற்றிலேறுபவன்
வியர்வை ஈரம் உணர்ந்த நிலவு
கயிற்றின் வழியே
சறுக்கி வந்து கொண்டிருக்கிறது

எதாவது ஒரு முடிச்சில்
தன்னைச் சந்திக்கப்போகும் நிலவிற்கு
ஒரு பிடி கட்டிச்சோறு
மிச்சம் வைத்திருக்கிறான் அவன்

-

Jun 11, 2014

செம்மண் பூக்கள்





பாசி பிடித்து 
வறண்டு போயிருக்கும்
உன் நினைவுக்குளத்தில்
செம்புலம்பெயல் நீராய்
நிரம்புகிறேன் நான்

கல்லெறியாமல் காத்திருக்கும்
உன் மௌனத்தில்
கட்டுண்ட தளர்வில்
நிறமிழக்கத் துவங்குகிறேன்

என்னை விட்டகலும்
செம்மை நிறம்
பாசிகளின் வேர்களில்
படிந்து கொண்டிருக்கிறது

மௌனம் தகர்த்து
கைகளால் அலம்பி
கால்கள் உதைத்து
என்னில் பரவி
முன்னோக்கி நீந்துகிறாய்

ஒளி நாடி வளரும்
பாசிகளின் நுனிகளில்
நானிழந்த செம்மண்
பூக்களாய் மொட்டு
விரிக்குமெனக் காத்திருக்கிறேன்

-

Jun 9, 2014

கீச்சுகள்-48



நான் அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறேன். அருகில் இருப்பதாகவோ, தூரத்திலோ இருப்பதாகவோ உணர்வதும், சொல்வதும் நீங்கள்தான்!
 
-

வனத்திற்குள் புகுவது போலிருக்கிறது, சில கவிதைகளுக்குள் தொலைந்துபோவது!

-

காற்றடைத்த பலூனை, பாறாங்கல்லெனச் சுமப்பதற்குப் பெயர் அறியாமை மட்டுமல்ல.... அறிவுகெட்டதனமும் கூட!

-

சொற்களைப் பொறுக்கி மௌனத்திற்குள் போடுகிறேன்! 



-

”எதுவும் வேணாம்! எப்பவும் இரு!!” அன்பெனப்படுவது அழகியதொரு முரண்!

-

சூடு புடிச்ச குழந்தை ஒன்னுக்குப் போற மாதிரி நாலு துளி துளிக்கும்போதே, ”ஹைய்ய்யா.... மழை”னு ட்விட் போடுற சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்!

-

மௌனத்தை இதழ்களில் சேமித்தென்ன பயன், ஓயாத குரலொன்று உள்ளே ஒலித்தபடியே! 



-

நிலவைப் பார்த்து தன் போக்கில் நாய் குரைப்பதும்... அந்த நாயை நோக்கி காற்றில் கல் வீசுவதுமாய் சில நாட்கள் கரைகின்றன.

-

தற்கொலையில் வென்றவனை நாம் சந்திக்கவும், தற்கொலையில் தோற்றவனுக்கு நம்மைச் சந்திக்கவும் தைரியம் இருப்பதில்லை!

-


மனதில் கடலை நிறைத்துக் கொண்டு, அலைகளை மறுத்தல் நியாயமோ!? 


-



நகரில் வாழ்வோர் ஆற்றை நீந்திக் கடக்க முனைவதற்கு நிகரானது, கிராமத்துப் பெருசுகள் வேகம், நெரிசல் மிகு நகரத்து சாலையைக் கடப்பது!

-

தேவைப்படும் நேரத்தில் சில வார்த்தைகள் எத்தனை தேடினாலும் வசப்படுவதில்லை!

-

புருவத்துக்கும் கூட ’டை’ அடிச்சு, அப்படி அந்த இளமையை யாருக்கு நிரூபிக்கப்போறீங்க தாத்தா! #மிடில_மொமெண்ட்

-

கோபத்திற்கான எல்லை வியப்பானவை. யார் மேல் கோபப்படுகிறோமோ, அதை அவர் எவ்வளவு தூரம் சகித்துக் கொள்கிறாரோ அதுவரை நீளும் கோபத்தின் எல்லைக்கோடு!

-

சளி காய்ச்சல் என யார் சொன்னாலும் உடனே அவர்களுக்கு கை வைத்தியம் சொல்லக்கூடாது என்பது, அவர்கள் நமக்கு இரண்டு மடங்காகச் சொல்லும்போது புரிகிறது!

-

விஷத்திற்கும் விலை உண்டு!

-


தன்னைப் போலல்லாத தன் நிழற்படமே எல்லோருக்கும் பிடிக்கிறது! 




-
ரோட்ல போறப்போ ஹார்ன் அடிச்சிட்டே இருந்தா மைலேஜ் அதிகம் கிடைக்கும்னும், எங்காச்சும் திரும்பும்போது இன்டிகேட்டர் போட்டா கரண்ட் பில் அதிகமாயிடும்னும் பலபேருக்கு லைசென்ஸ் எடுக்கிறப்போ ஆர்டிஓ ஆபிஸ்ல சொல்லிருப்பாங்களோ............!!!???

-

ஒன்று புரியவில்லையெனில்....
புரிந்துகொள்ள முயற்சித்தல் ஒரு வழி. நமக்கானதல்ல என ஒதுங்கிவிடுதல் மற்றொரு வழி. இரண்டையும் விட எளிது .... புரியாதது குறித்து கிண்டல் செய்துவிட்டு மறந்துவிடுதல்!

-

ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில வீட்டுமனைக்கு ரொம்ப பக்கத்திலேயே 'டோல்கேட்' அமைஞ்சிருக்குனு அடிச்சு விடுது ஒரு பக்கி.... #மிடில

-

நேரில் வந்து ஒன்னேமுக்கா மணி நேரம் கொலையாய் கொன்னு மொக்கை போட்ட நண்பரின் போனை வாங்கி 044-40504050க்கு ஒரு மிஸ் கால் கொடுத்துட்டேன்.

-

எதெல்லாம் செய்யக்கூடாதென்பது தெரிகிறது. செய்யாமல் இருப்பது எப்படியென்பது மட்டுமே புலப்படவில்லை!

-

பாவிகளா... அப்ப பாஸா, ஃபெயிலானு மட்டும்தானே கேட்பீங்க. இப்ப எடுத்தவுடனே மார்க் என்னனு கேக்குறீங்களே. எல்லாருமே முதல் மார்க் வாங்கமுடியுமா!?

-

வெறும் முந்தானை உரசலாய்த் தீண்டும் மழைக்கு மோகத்தின் உக்கிரத்தை யார் கற்றுத்தருவாரோ!?



-

லைலேண்ட் லாரி முன்பக்கம் மாதிரி இருந்த வயிறு, ’பழைய டாடா லாரி’ போல மாறிட்டிருக்குது! #மாற்றம்_நிலையானது!

-

சாலை நெரிசல்களில், எதிரெதிரில் வாகனங்களில் சந்தித்துக்கொள்கையில் நொடிப்பொழுது தலையசைப்பு அல்லது உடல்மொழியைப் புரிந்துகொண்டு எதிரில் வரும் ’யாரோ’வுக்கு சட்டென வழி விடும் அதே சமூகம்தான், நெருங்கிய உறவு/நட்பில் எவ்வளவு விளக்கினாலும் சிலவற்றை புரிந்துகொள்ள மறுத்து முறுக்கிக்கொண்டே நிற்கிறது!

-

முலைப்பாலாய்ச் சொட்டும் கற்பனைகளை வடிகட்ட கருவியேதும் கண்டறியா கருணையாளனின் நீள் துயில் நீடிக்கட்டுமே!

-

கோபத்தை எப்படியெல்லாம் செலுத்தலாம் என்பதில் தெளிவாய் இருக்கும் மனுசப்பயலுக்கு, நேசத்தை எப்படிச் செலுத்துவதென்பதில் மட்டுமே பெருங்குழப்பம்!

-

நினைத்ததை நினைத்த கணத்தில் வெளிப்படுத்தாமல் தடுக்கச் செய்யும் சமரசத்தனம் (எ) மொக்கைத்தனம் (எ) கோழைத்தனம் (எ) ______த்தனம் மிகும் பல கணங்களில், ஏதோ ஒரு நேர்மை மிளிரும் கணத்தில் இந்த எழுத்தை விட்டொழிந்து போகவேண்டும்!

-

குண்டுவெடிப்பு பேச்சில் இறந்தது ஒரு ஆள்தானா என ஏமாற்றத்தோடு வினவுகிறவனிடம் எப்படிக் கேட்பேன் அந்த ஒரு ஆளாய் ஏன் நீ இல்லாமல் போனாயென்று!

-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...