Oct 8, 2013

இனிதாவது எங்கும்...!

வேறொன்றும் பெரிதாய்த் தேவைப்படவில்லை. சூழல்களிலிருந்து மீண்டுவிடமுடியும் எனும் நம்பிக்கையும், இந்தச் சூழலை இப்போதோ, இதற்கு முன்னரோ எவரேனும் கடந்திருக்க முடியும் என்ற நினைப்பும் மட்டுமே அவசியமாயிருக்கிறது. நம்பிக்கை மனதில் ஆழ வேரூன்ற ஒரு தனிமை அவசியமாக இருக்கின்றது. தனிமை அவ்வளவு எளிதில் வாய்த்து விடுவதில்லை. தனிமை உத்திரவாதமான தனிமையாகவும் இருப்பது அவசியம். பெரும்பாலும் நெரிசலும், அழுத்தமும் கூடும்பொழுது ஒரு தனிமை கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. தனிமைபோல் இனிதாவதெங்கும் காணோம். தனிமை போல் மிரட்டுவதும், சுமையூட்டுவதும் எங்கும் காணோம் என்பதும் நிதர்சனம்.

அவசியத் தேவையாக இருக்கும் தனிமை, ஒரு காப்பீடு செய்யப்பட்ட தனிமையாக அமையவேண்டும். தனிமை எனக்கு இனிமை மட்டுமே சேர்க்கவேண்டும். என்னை அச்சுறுத்தக்கூடாது. தனிமை மூச்சு திணற வைக்கக்கூடாது. மௌனமாக இருக்கச்சொன்னால் தனிமை மௌனிக்க வேண்டும். பேசச்சொன்னால் தனிமை சொற்களை உதிர்க்க வேண்டும். இசைக்கச் சொன்னால் மெல்லிசை வழிந்தோட வேண்டும். அழச் சொன்னால் தனிமை தேம்ப வேண்டும். நம்மோடு போரிடச் சொன்னால் நம்மிடம் தனிமை மண்டியிடவேண்டும். இதையெல்லாம் விட இந்த தனிமை எனும் முகமூடி, நம்மேல் நிற்கும் தனிமை எனும் குடை எந்த நொடியிலும் தன் நிலைப்பாட்டை மாற்றியமைத்துக் கொள்ளும் குணம் படைத்ததாகவும் இருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் விட தனிமை, தனிமையின் நாட்கள் முடிந்த பிறகு முன்பு போலவே ஒரு பரபரப்பான வாழ்க்கைக்குள் எந்தச் சேதாரமுமின்றை நம்மை அனுமதித்திட வேண்டும்.



எனக்குக் கடற்கரைத் தனிமை ஒரு கனவாகவே இருக்கின்றது. எவருமற்ற ஒரு இளமாலைப் பொழுதாய் அது இருக்க வேண்டும். சூரியன் தன் கண்களை மூடியபிறகும் மெலிதாய் தகதகக்கும் மாலையின் மோகம் நிறைந்த பொழுதாய் இருத்தல் நலம். கடல் நீர் அருகாமையில் மென் பச்சை நிறமாகவும், தொலைவில் அடர் நீலமுமாய் இருக்க வேண்டும். உடன் யாரும் இல்லாதிருத்தல் சிறப்பு. அப்படியே இருந்தாலும் தனிமைத் தாகம் அவர்களை தன்னுள் அமிழ்த்தி வைத்திருக்கவேண்டும். ஒரு வார்த்தைகூட அந்தக் கணங்களில் பேச விரும்பாதவராக இருத்தல் வேண்டும். தேவைப்படுமாயின் விழிகள் உரசிக்கொள்ளும் உரையாடல் கூடப் போதும். தனிமையை ஆழ்ந்து சுவாசிக்க ஏதுவாகவும் இருக்கவேண்டும். ”உஸ்தாத் ஹோட்டல்” திரைப்படத்தில் வருவது போன்ற தனிமையான கடற்கரை. கூடவே பருக சுலைமானி இருத்தல் இன்னும் சுகம்.

ஏதும் இல்லா பொட்டலில் பரிமாறப்படும் தனிமையைவிட, நீரும் மரங்களும் சார்ந்த இடங்களின் தனிமை மிகவும் பிடித்தாக இருக்கின்றது. மிகச் சமீபத்தில் அப்படிப்பட்ட தனிமையை உணர்ந்தது, ஒரு அணைக்கட்டுப் பகுதியில். அது ஒரு மதியப்பொழுதுதான். உடன் நட்புகள் இருந்தார்கள்தான். சில ஆசிர்வதிக்கப்பட்ட கணங்களில் மட்டும் எத்தனை பேர் உடனிருந்தாலும் ஏகாந்தம் வந்து மடிமீது அமர்ந்துகொண்டு, தன் உச்சந்தலையை நம் தாடையில் உரசிக்கொண்டிருக்கும். அது அப்படிப்பட்ட ஒரு கணம் தான். அந்த அணைச்சுவர் மீதமைந்த பாதையில் கால்களை வீசி நடைபோடுகிறேன். இடது பக்கம் அணையில் பாதி நிரம்பிய தண்ணீர் அலையடித்துக்கொண்டிருக்கிறது. வலது பக்கம் அடிபெருத்த சுவற்றுச் சரிவு. கைகளாலும் கண்களாலும் அளந்து பார்க்கத் துணியமுடியாத அளவுக்கு நீண்டு பருத்துக்கிடக்கும் அணைக்கட்டு அது. மெல்ல அலையடிக்கும் நீரில் உரசி வரும் காற்று மனதிற்குள் ஊஞ்சலாட்டுகிறது. அணையை அரவணைத்தபடி மூன்று திசைகளிலும் சாய்ந்துகிடக்கும் மலையும் காடும் கொள்ளை அழகு.

இந்த அணையை இங்கு எழுப்ப முதன்முதலில் யோசித்த மூளை எதுவாக இருக்கும்?. முதற்சிந்தனை எப்படி துளிர்த்திருக்கும்? முதற்சிந்தனை உதித்த பொழுதில் அவரும் ஆழ்ந்த தனிமையில் இருந்திருப்பாரோ?  அங்கே ஒரு பெரும் காட்டாறு காலம்காலமாய் ஓடிக்கொண்டிருந்திருக்கலாம். வெள்ளத்தைத் தடுக்கவோ, விவசாயத்தைப் பெருக்கவோ, எதன்பொருட்டோ அங்கே ஒரு சுவர் எழுப்ப தீர்மானித்த நொடி எத்தனை அற்புதமானது.

நிரம்பித் தளும்பும் அந்த நீரின் பெரும்பான்மைகூட சொட்டுச் சொட்டாகத்தானே சொட்டியிருக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழி எத்தனை உண்மை நிரம்பியது. அணை முழுக்க கட்டிமுடித்த நாளின் ஒரு இரவில் அதனினின்று எல்லோரும் விலகி வீட்டுக்குப் போன முதல்நாள் அந்த அணையின் உணர்ந்திருக்கும் தனிமை எத்தகையாக இருந்திருக்கும். சுவற்றில் முதலில் வந்து மோதிய நீர், கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்து அழுத்தமாய் திரண்டு சுவற்றின் உள்பக்கம் முழுதும் உரசிக் கிடக்கும் நீர் எத்தனை கதகதப்பாய் இருந்திருக்கும் அணைக்கு. அணை தனிமையில் இருக்கின்றது. தண்ணீர் தனிமையில் இருக்கின்றது. எனினும் இரண்டும் ஒன்றாய் இருக்கின்றது. தண்ணீர் இல்லா அணை வெறுமை. அணையில் அடைபடாமல் ஓடும் நீர் பெரும்பாலும் வீண். ஏகாந்தத்தைப் போர்த்திக்கொள்ளும் அணைக்கு தாலாட்டுப் பாடி உறங்கவைப்பது கூட காற்றினால் உந்தப்பட்டு மெல்லச் சிலும்பிக்கொண்டிருக்கும் அலைகளாகத்தான் இருக்கவேண்டும்.

எதிர்பாராமல் உள் மனதில் தோன்றும் வெற்றிடம் கூட, மழை பொய்த்த பருவங்களில், தன் உடல் முழுதும் காட்டிக்கொண்டு வெற்று மேனியாய்ப் குப்புறப் படுத்திருக்கும் ஒரு அணையையே நினைவூட்டுகிறது. எந்த அணையும் எல்லாக் காலங்கிலும் காய்ந்தே கிடந்துவிடுவதில்லை. வெற்றிடமாகும் அணைகள் வேகமாய் நிரம்புவதும், மெல்லமாய் தீர்வதுமான ஒரு மாயக் கணக்கிலே பெரும்பாலும் கடந்துவிடுகின்றன. அணையின் ஒரு கரையோரம் இருக்கும் மரத்திலிருந்து ஏதோ ஒரு குயில் ஏக்கமாய்க் கூவுகிறது. குயிலின் குளிர வைக்கும் கூவல் எதாவது பாடலை நினைவில் நிரப்பிவிடுகின்றன.

தனிமையில் ஒன்றிக் கேட்கும் பாடல்கள் யாராவது ஒருவரின் நியாபகத்தை நிரப்பிவிடுகின்றன. எந்தச் சூழலில் இருந்தாலும் அப்படி நினைவில் வருபவர்கள் மேல் கூடுதலாய் அன்பு துளிர்த்து விடுகின்றது. சில நினைவுகள் அத்தனை இதமானவை. இறகுபோல் வருடுபவை.

நம் ரசனையறிந்து சிலர் பரிந்துரைக்கும் பாடல்கள், ஒருவகையில் மிகுந்த அணுக்கமானதாக மாறிவிடுகின்றன. திடீரென மனதைச் சுண்டும், திடீரென பொங்கச் செய்யும், திடீரென பூக்கச் செய்யும், திடீரென மனதை அமிழ்த்தும்…. என்னவோ… என்னென்னவோ  செய்யும்.

பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாரதியின் ”பாயுமொளி நீ எனக்கு”ப் பாடலை ஒரு தனித்த நள்ளிரவு பணியின் போதுதான் முதன்முதலில் கேட்டேன். முதன்முறை செவி தீண்டியபோதே நேரடியாக மனதைத் தீண்டி, அப்படியே உள்ளழுந்தி மனதின் ஆழம்வரை அப்படியே ஒட்டிக்கொண்டது. அதையொத்த பாடல்களைக் கேட்கும் பொழுதெல்லாம் எப்போதாவது கண்ட ஏதாவது ஒரு காட்சி அப்படியே மனதில் ஓட ஆரம்பித்துவிடுகின்றது.

ஒரு மாலை நேர ரயில் பயணத்தில் சன்னலோரம் அமர்ந்திருக்கிறேன். பரபரப்பான ரயில் நிலையத்தின் ஒரு முனை அது. அங்கு கொஞ்சம் பரபரப்பு குறைவு. நடைமேடைப் பலகையில் ஒரு நடுத்தர வயது ஆணும், இளம் பெண்ணும் அமர்ந்திருக்கின்றார்கள். எதோ ஒன்றை உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர் எதையோ உற்சாகமான உடல்மொழியோடு விவரித்துக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் நவரசங்களும் நடனமாடுகின்றன. அவர் பேசும் வார்த்தைகளுக்கு ஏற்ப அவள் விழிகள் வெவ்வேறு அபிநயங்கள் பிடிக்கின்றன. பெட்டிக்குள் எத்தனையோ பேர் இருந்தாலும் சன்னல் வழிக்காட்சியில் சிக்குண்ட நான் அந்தக் காட்சியில் ஒன்றிய கனம் ஏகாந்தத்தில் தறித்து விடப்பட்டிருந்தேன். நேரம் கடந்துகொண்டிருப்பதை உள்ளுணர்வு சொல்கிறது. 10 நிமிடங்கள் மட்டும் நிற்கவேண்டிய ரயில் அசைந்த பாடில்லை. பரபரப்பாய் மக்கள் அங்கும் இங்கும் உலவும் சூழலில் அந்த நடைமேடைப் பலகையில் தங்கள் உரையாடலால் தங்களுக்கென தனிமையை ஆட்சி செய்துகொண்டிருக்கும் அவர்களின் உரையாடலும் நின்ற பாடில்லை.  உள்ளுணர்வு மெல்லச் சிரிக்கிறது. ரயில் முதலில் நகருமா, மனிதர்களின் பரபரப்பு அடங்குமா, அவர்களின் உரையாடல் நிறைவு பெருமா? முதல் பத்து நிமிடங்கள் தீர்ந்தன. தனிமையில் லயித்து அவர்களின் தனிமையை ரசித்த மனது, நிமிடங்களை நீட்டிக்கச் சொல்கிறது. நிமிடங்கள் கரைகின்றன. ஒருவழியாய் ரயில் மெல்ல அதிர்வெழுப்புகிறது. அந்த மனிதர் பெண்ணுக்கு கை அசைத்தவாறு ஓடி வந்து, எனக்கும் அடுத்த பெட்டியில் தொற்றிக்கொள்கிறார். அவள் கை அசைத்துக் கொண்டேயிருக்கிறாள். சட்டென தனிமை அவளைச் சூழலாம். ஆனால் அந்த மனிதர் கொட்டிவிட்டுப் போன சொற்கள் அவளோடு  துணையிருக்கலாம்.

அந்தப் பயணம் முழுக்க நான் தனிமையில் ஆழ்ந்து போனேன், அங்கு காற்றில் மிதந்த சொற்கள் இவைகளாக இருக்குமோ என யோசிக்கவும், அந்தப் பெண்ணின் விழியசைவு நடனம் இப்படியானதாக இருந்ததோ என மீட்டவும்.

நானாய் விரும்பி, அடைந்து, வென்று, கொண்டாடும் தருணங்களில் தனிமை போல் இனிதாவது எங்கும் காணோம்.

-*-



Oct 4, 2013

பிசகின் கண்ணீர்


துயர்மிகு பொழுதில்
நீளும் மௌனத்தைக் கிழிக்கும்
ஒரு சொல்லையும்

நோக்கும் கூரிய சொற்களை
உறையிலிட்டுத் தைக்க
ஒரு மௌன நூலையும்
நாடித்திரிகையில்

சிவப்பு பச்சை மஞ்சள் கறுப்பென
கடை விரிக்கப்பட்டிருக்கின்றன
ஈரம் காயச் சொற்கள்
நூலில் முடிபோட்டு

பொறுக்கியெடுக்கும்
சொற்களிலிருந்து
ஈரமாய் வழிவது
பாவத்தின் வியர்வையாகவோ
துரோகத்தின் ரத்தமாகவோ
இருக்க வேண்டுமென்பதில்லை
ஒரு பிசகின்
கண்ணீராகவும்கூட இருக்கலாம்

Oct 2, 2013

தூப்புக்காரி - வாசிப்பனுபவம்



முன் விமர்சனச் சுருக்கம்

மலர்வதி அவர்களை, அந்த இளம் படைப்பாளருக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்ட பிறகு வந்த செய்திகள் மூலமே அறிந்துகொண்டேன். அப்போதே அந்த ”தூப்புக்காரி” புதினத்தைப் படித்துவிட வேண்டும் என நினைத்தேன். புதினத்தை வாசிக்காவிட்டாலும், அவர் குறித்த செய்திகள், பேட்டிகள், குறிப்புகள் என இணையத்தில் தொடர்ந்து தொடர்ந்து வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலார்களுக்கு நடந்த பயிற்சி அரங்கில் இரண்டு முறை பேசும் வாய்ப்புக் கிட்டியபோதும்கூட, அவர்களுக்கான இலக்கியம் என்ற கோணத்தில் தூப்புக்காரி குறித்து வாசித்த தகவல்களின் அடிப்படையில் புதினத்தின் பின்புலம், மலர்வதி, அவர் பெற்ற விருது என்ற ரீதியிலேயே உரையாற்றினேன்.

இந்த ஆண்டு ஈரோடு புத்தகத்திருவிழாவில் மலர்வதி அவர்களை அழைத்து, பாராட்டுகையில் அவரின் ஏற்புரையக் கேட்டபொழுதே, நான் சாந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைக்க வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அதன்படி 04.10.2013 வியாழக்கிழமை கூட்டத்தில் ”படைப்பிலக்கியமும் மனித மேம்பாடும்” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். 

கூட்டத்தில் அவரையும், தூப்புக்காரி புதினத்தையும் அறிமுகப்படுத்தும் பணி என்னிடம் விடப்பட்டது. இந்த முறை தூப்புக்காரி புதினத்தை வாசிக்காமல் மேடை ஏறிவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக புத்தகத்தை வாங்கி இன்று வாசிக்கத் துவங்கினேன். சுணங்கிக் கிடந்த வாசிப்பு ஆர்வம் சில பக்கங்களை கடந்தபோது தலை சிலுப்பிக்கொண்டது. வாசிப்பு தூர்ந்துபோயிருந்த நான், இதை ஒரே மூச்சில், அதுவும் கனிணி முன் அமர்ந்து கொண்டே, அழைப்புகளுக்கும், வேலைகளுக்கும் அதிகம் செவிமடுக்காது, ஒரே மூச்சில் படித்து முடித்தை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது.


தூப்புக்காரி – மலர்வதி



பெருமாள் முருகனின் சிறுகதைத் தொகுப்பான ”பீக்கதைகள்” வாசிக்கையில் மட்டுமே மலத்தின் நாற்றத்தை எழுத்தில் அத்தனை அருகாமையில் உணர்ந்ததுண்டு. இத்தனை நேரிடையாகப் படைக்க முடியுமா என அப்போது அதிர்ந்ததுமுண்டு.

இந்த தூப்புக்காரியில் துப்புரவுத் தொழில் செய்பரைச் சுற்றி மிதந்தும், குழைந்தும், காய்ந்தும் கிடக்கும் மலம், சளி, மாதவிடாய் இரத்தம், மருத்துவமனை இரத்தம் என அத்தனையையும் இத்தனை அருகில் கண்டதில் மிரண்டு போனேன். எழுத்தாய் வாசிக்கும்போதே இத்தனை அதிர்கிறதென்றால், அதில் தினந்தோறும் உழன்று, நனைந்து, மூழ்கி வாழும் சமூகம் குறித்துச் சிந்திக்கையில் ’பரியெடு’ மனதைக் குமையச் செய்கிறது.

வீதியிலும், கழிவறையிலும், சாக்கடையிலும் மிதக்கும், கிடக்கும் மனித கழிவுகளை அழகு, வனப்பு, செவப்பு என நாம் கொண்டாடும் உடல்தான் உற்பத்தி செய்கிறது என்பது ஏற்கனவே அறிந்தது என்றாலும் இந்த தூப்புக்காரி செவிட்டில் அறைந்து சொல்லித் தருகிறது.

கனகம் என்ற தூப்புக்காரி, அவள் மகள் பூவரசி, பூவரசியின் காதலன் மனோ, பூவரசியை விரும்பும் மாரி எனும் இந்த சாதரணப் பாத்திரங்கள், அசாதாரணக் களத்தில் அசாதாரண அடர்த்தியோடு, இதுவரை உணர்ந்திடா அதிர்வோடு மனதில் தொடர்ந்து இம்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள்

கனகம் தூப்புக்காரியான சூழலும், பூவரசியை தூப்புக்காரியாக்கும் சூழலும், மாரி அழுக்கன் ஆன கதையும், நாம் தினந்தோறும் காணும், வீதிகளில் தள்ளுவண்டியில் குப்பை சேகரிப்போருக்கும், வீட்டில் வந்து அடைப்பெடுப்போருக்கும், நீலநிற உடையில் வீதி கூட்டுவோருக்கும், பந்தியில் இலை எடுப்போருக்கும் சொந்தமானதுதான்.

சாக்கடை கடக்கையில், நவீன(!) பொதுக் கழிப்பிடத்தில், திரையரங்கு கழிவறையில், குப்பைத் தொட்டி கடக்கையில் என அவசரமாய் மூக்கைப் பொத்தும் நாம், குறைந்த பட்சம் இந்தக் கதையை ஒருமுறையேனும் வாசிக்க வேண்டும்.

மாரியின் கால்களில் பூவரசி விழும் தருணத்தில், பதறும் மாரியிடம், ”இந்த ஒலகத்த சுத்தப்படுத்துற நீ அழுக்காகிப் போறியே… சாக்கடையில் எறங்கி எறங்கி நாத்தம் பிடிச்சி போறியே ஒன் காலுல யாரெங்கிலும் விழுந்து உன் பாதத்த தொட்டாங்களா?” எனச் சொல்கையில் வாசிப்பவரும் மாரியின் காலில் மானசீகமாய் விழ வைப்பதே மலர்வதியின் வெற்றி என நினைக்கிறேன்.

அணிந்துரையில் எழுத்தாளர் பொன்னீலன் சொல்லியிருப்பது போல், கதை ஒரு பகுதியோடு நிறைவுற்று, மிச்சம் இருப்பவை திருப்புமுனைகள் நிறைந்த கதையின் கவர்ச்சிப் பகுதிகளாய் இருந்தாலும் அதிலிருக்கும் பாடம் அவ்வளவு எளிதானதல்ல.

இந்த “தூப்புக்காரி” அந்த சமூகத்தின் அறியப்படாத ஆவணம் என்ற பாங்கில் எடுத்துக்கொண்டாலும், வாசிப்பவர்களின் மனதிலிருக்கும் கசடுகளையும் கழுவிட்ட துடைப்பான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

நிச்சயம் வாசித்தே ஆக வேண்டிய ஒரு புதினம் ”தூப்புக்காரி” என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

-

தூப்புக்காரி | மலர்வதி | அனல் வெளியீடு | விலை ரூ.95

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...