Sep 6, 2011

கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி


தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.

பள்ளி முகப்பு
மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு. அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.
தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின்

பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும், பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல், அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது.

வகுப்பறை

மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது. 

எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி

  • பளபளக்கும் தரை,  
  • தரமான பச்சை வண்ணப்பலகை,  
  • வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய், 
  • அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,  
  • வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,  
  • தெர்மோகூல் கூரை,  
  • மின்விசிறிகள், 
  • உயர்தர நவீன விளக்குகள், 
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள், 
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை, 
  • வேதியியல் உபகரணங்கள்,
  • கணித ஆய்வக உபகரணங்கள்,
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,  
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள், 
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
  • அனைவருக்கும் தரமான சீருடை,
  • காலுறைகளுடன் கூடிய காலணி,
  • முதலுதவிப்பெட்டி,
  • தீயணைப்புக்கருவி,
  • உயர்திறன் வாய்ந்த கனிணி,
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.

கணினி உட்பட கல்வி உபகரணங்கள்

இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. 

மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி

தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல், அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒரு சாயம் வெளுத்துப்போன உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியை உலகத்தரத்திற்கு மாற்றிக்காட்டியுள்ளது.


பில்லூர் அருகே மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்த ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப் பட்டபோதே, ஃப்ராங்ளின் மிகுந்த சிரத்தையெடுத்து வெறும் பதினேழு பிள்ளைகள் படித்த நிலையில் இருந்து 30 பிள்ளைகளாக உயர்த்தியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஃப்ராங்கிளின், தனக்குள் இருந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன கட்டம் அது. ஆண்டாண்டு காலமாக இருந்த அந்த அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர் படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத் தேவை மாற்றம் என்பதே.

காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர், தனக்கு மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டை தீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளார்.

ஊர்மக்களுடன் ஆசிரியர்கள்

மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்களினும் ஒரு பெரிய தொகையை அளித்து அந்த வேள்வியை தொடங்கியுள்ளனர். வளரும் தலைமுறைக்காக தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் புதியதொரு உலகம் சமைக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் காத்திருந்தது. இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை ஒரு முன்மாதிரி வகுப்பறையாக வடித்தெடுத்துள்ளனர்.

தங்களின் பங்களிப்பு, இராமாம்பாளையம் கிராமக் கல்விக்குழுவினரின் உதவி என, சுமார் இரண்டரை லட்சம் செலவில் இதை நிறைவேற்றியுள்ளனர். எப்படி இப்படியொரு செயலைச் செய்ய தங்களால் ஒத்துழைப்பு அளிக்க முடிந்தது என கிராமத் தலைவரிடம் கேட்கும் போது அவர் சொல்லும் ஒரே வார்த்தை “திரு.பிராங்களின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.

ஆசிரியர் திரு. ப்ராங்ளின்

திரு.ஃப்ராங்களின் வெறுமென ஒரு சாதாரண ஆசிரியராக அந்தப் பள்ளியில் செயல்படவில்லை. குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கிறார். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் அவர்மேல் ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம். குழந்தைகள் குறித்து பெருமையாகச் சொல்லும் ஆசிரியர் “எங்கள் பிள்ளைகளுக்கு வெறும் கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்” தெரிவிக்கிறார்.

பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதைத் திறம்படத் துவங்கியுள்ளனர்.


மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை, ஆசிரியர்,  மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

பிள்ளைகளின் சுய ஒழுக்கம் மற்றும் தெளிவு குறித்து கூறும்போது, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் மூன்று மாதங்களாய் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு செய்திடவில்லை. நடந்துவரும் போது சுவர்களைத் தொடர்ந்து தொட்டால் அழுக்காகிவிடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதை அவ்வப்போது காண நேர்ந்தது. பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

இந்த மறுமலர்ச்சி இத்தோடு நிற்காமல் எல்லாக் கிராமங்களிலும் பூக்க வேண்டும். அதற்கு நீரூற்ற இன்னும் எத்தனை காலம் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது. ஏன் அந்த மாற்றத்தை நாமே விதைக்கக்கூடாது? கோவில் இல்லாதா ஊர்கள் உண்டா, அதிலும் குறிப்பாக அங்கிருக்கும் கோவில்கள் கோடிக்கணக்ககில், லட்சக்கணக்கில் செலவு செய்து புணரமைக்கப்படுவதற்காக எவ்வளவோ சிரமப்பட்டு எல்லாக் கிராமங்களும் நிதியீட்டிக்கொண்டுதானே இருக்கின்றன? அதில் ஏன் கொஞ்சம் தொகையை இந்த பள்ளிகளை நோக்கி மடைமாற்றக்கூடாது?  
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் படித்து முன்னேறிய முன்னாள் மாணவர்களே கூட ஒன்று திரண்டு தங்களைச் செதுக்கிய பள்ளியை ஏன் ஒரு மாதிரிப்பள்ளியாக மாற்றிடமுடியாது? எல்லாமே சாத்தியம் தான், ஆனால் எங்கே மாற்றம் நிகழ வேண்டுமோ அங்கே ஒரு ஃப்ராங்ளின் உருவாக வேண்டும், அல்லது நானோ, நீங்களோ இதை எடுத்துச்சொல்லி ஒரு ஆசியருக்குள் ஒளிந்திருக்கும் ஃப்ராங்ளினை வெளிக்கொணரவேண்டும்! பள்ளியின் வலைப்பதிவு முகவரி


இதேபோல் ஒரு மாதிரிப் பள்ளியை அமைக்க அனைத்து திட்டங்களையும், தன் அனுபவத்தையும் தருவதற்கு திரு.ஃப்ராங்ளின் தயாராக இருக்கின்றார். நாம் தயாரா?

ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவதுதான் புரட்சியா? மாற்றத்திற்காக அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் புரட்சிதான்!

திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com              99424 72672      
 

-0-

பள்ளிக்குச் சென்றுவர துணை நின்ற எங்கள் ஈரோடு தமிழ்வலைப்பதிவர் குழும நண்பர்கள் கார்த்திக், ஆரூரன், லவ்டேல் மேடிக்கு நன்றி

. 
 

Sep 5, 2011

சொர்க்கமும் நரகமும்

நீள் பயணங்களில்
நெரியும் சனத்திரளில்
பாரம் தாங்கமுடியாமலோ
பத்திரமாய் உறங்கட்டுமெனவோ

நம் மடிமீது வலிய
இறுத்தப்படும் குழந்தையின்
எப்போதாவது இதமாய்
உந்தும் பிஞ்சுப்பாதம்
இதழ்வழியே தவழ்ந்து
ஈரமூட்டும் எச்சிலமுதம்
கனவுகளில் தேவதைகள்
கூட்டிடும் குறுஞ்சிரிப்பென
என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும்

இறுதியாய் எப்போது
சிறுநீர் கழித்திருக்குமென
நச்சரிக்கும் சிந்தனை
நரகத்திலிருந்து
தப்பிக்க முடிவதில்லை
பல நேரங்களில்!

-0-
04 செப் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை. நன்றி திண்ணை!

Aug 26, 2011

பல இரவுகளில் ஓர் இரவு



இரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத்தொடங்கியது. ஏன் உடைந்ததென்று தெரியவில்லை, அந்தக்கணத்தில் அது உடைந்திருக்கலாமாவென்றும் தெரியவில்லை. ஆனாலும் மனது சுக்கு நூறாய் உடைந்து சிதறிக் கிடந்தது. தோல்வி தோல்வி தோல்வி என எல்லாவற்றிற்கும் மனது அரற்றிக் கொண்டேயிருந்தது.

இதுவரை அணிந்திருந்த முகமூடிகள் மீது சொல்லொணா வன்மம் வந்து குடியேறியது. எப்படியேனும் முகமூடியை அணிந்து, யாரும் அறியாவண்ணம் முடிச்சிட்டு நேர்த்தியாய் மறைத்த உழைப்பு மறந்துபோனது. அப்படியே கூரிய நகங்களை இருபக்க கன்னப்பகுதியில் அழுத்தி முகமூடியை பிய்த்தெறியும் வெறியோடு இழுத்தான். சற்றும் முகமூடி அசையவில்லை, நகங்களை அழுந்த அனுமதிக்க மறுத்து கெட்டித்துக்கிடந்தது. நகங்கள் மட்டும் மடங்கி, நகக்கண்ணில் வலி பூத்தது.

முகத்தை அழுந்த தடவிப்பார்த்தான், கொஞ்சம் சுருக்கம் பாய்ந்திருந்தது. என்ன வேடம் இப்போது அணிந்திருக்கிறோமென்று புரிபடவில்லை. பூண்ட வேடங்களும், அணிந்த முகமூடிகளும் ஒன்றா இரண்டா!? எந்தக்கணத்தில் சுயம் தொலைந்ததென்பது மறந்துபோயிருந்தது. எப்போதிலிருந்து முகமூடிகள் சுயத்தை சிதைக்கத் துவங்கின என்பதும் மறந்துபோய்விட்டது. முகத்தைத் தடவிய விரல்களில், இப்போது எந்த வேடம் புனைந்திருக்கிறொமென்பதை உணரமுடியவில்லை. நெற்றி ஒரு வேடத்தை, புருவம் ஒரு வேடத்தை, கன்னம் மூக்கு மூக்கு பிரிதொரு வேடத்தை நினைவூட்டியது. கண் இமைகள் இமைக்க மறந்துபோய் விரைத்திருந்தது. உதடுகளிலொரு நிரந்தரச்சிரிப்பு அப்பிக்கிடந்தது. சிரிக்கும் உதடுகளை விரல்கள் கடக்கும் போது, உள்ளுக்குள் இருந்து பொங்கிவந்தது ஒரு குமட்டல். உள்ளுக்குள் சொல்லொணாத் துயரோடு சுமக்கும் ரணங்களில் வழியும் சீழ் குமட்டி வெளிவந்து, நிரந்தரமாய் பொய்யாய் சிரிக்கும் உதடுகளில் வழிந்தது. சீழின் நாற்றமும், உதடுகளில் படிந்திருக்கும் சிரிப்பின் போலிப்புரட்டும் சேர்ந்து அதீத அயற்சியைப் புகட்டியது.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற வாசகம் ஒரு கணம் மனதிற்குள் வந்துபோனது. ”எவண்டா இதச் சொன்னது” என்ற ஓங்காரக் கோபம் வந்தது. ”வாழ்வேமாயம்” என்ற வாசகம் மனதிற்குள் வந்து ”வாழ்க்கை வாழ்வதற்கே” வாசகத்தை துரத்தியடித்தது. ஏன் இப்படியொரு வாழ்க்கை வாழவேண்டும் எனத்தோன்றியது, உடன் இலவச இணைப்பாக ”ஏன் வாழக்கூடாது” என்ற கேள்வியும் வந்தது. இரண்டுமே செயற்கைத்தனமான கேள்விகளாகத்தோன்றியது. சினிமாவும் இன்னபிற பொழுதுபோக்குகளும் இது போன்ற நாடகத்தனமான பல சொற்றொடர்களை, கேள்விகளை தனக்குள் திணித்திருப்பதை உணரும் போது, எது நிஜம், எது நாடகத்தனம் என்பதே குழப்பமாய் இருந்தது.

எதை நோக்கிய பயணம் இந்த வாழ்க்கை என்பதில், ஒன்றேயொன்று மட்டும் விடையாகத் தெரிந்தது. அது மரணம். மரணம் என்பதை நினைக்கும்போதே அது அபசகுணம் என்ற உணர்வு வந்தது. அது எத்தனை நிஜமாய் இருந்தாலும் அது பற்றிச் சிந்திக்க மனதில் வலுவிருப்பதில்லை. விருப்பமுமிருப்பதில்லை. மரணிப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நினைக்கும்போதே வறட்டுப் புன்னகையொன்று உதட்டில் வந்துபடிந்தது.

மரணத்தை நோக்கிய பயணத்திற்காக மட்டுமே பிறக்கிறோம், அதை நோக்கி கடிகாரத்தின் நொடிமுள்போல், ஒவ்வொருநொடியும் ’டிக்டிக்’கென நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனத்தோன்றியது. இப்படித் தோன்றுவதும்கூட நாடகத்தனமோ எனவும்பட்டது. அவன் மேலேயே அவனுக்கு சொல்லொணாக்கோபம் கொப்பளித்து. ’எதுதாண்டா நிஜம்’?, ’எல்லாமே நாடகமோ?’ எனத் தோன்றியபோது அவன்மேலேயே அவனுக்கு அயற்சியும் அலுப்பும் கூடியது.




சிந்தனைகள் பின்னிக்கிடந்த மூளை எதையும் புதிதாய் சிந்திக்கமறுத்தது. எதைச் சிந்திக்கத் முனைந்தாலும் சிந்தனை சிக்கலையும், மரணத்தையுமே மையப்படுத்தியது. வாழ்வது வீணென்று சொன்னமனதே சாவதும் எளிதன்று எனவும் சொன்னது. மூளைக்குள் ஏதோ ஒன்று நெளிவது போலவும், அந்த ஒன்று இரண்டாகி நான்காகி எட்டாகி பதினாறாகி என நினைக்கும்போது இதுதான் பைத்தியத்தின் முதல்கட்டமென்றோ எனவும் தோணியது. சிந்தித்து சிந்தித்து மூளை களைத்துப்போய், சிந்தனைகளைத் தொலைத்து மௌனித்துக்கிடந்தது. மௌனம் சூழ்ந்திருக்கிறதென நினைக்கும்போது விழிப்புத்தட்டியது. விழிப்பெது, சிந்தனை தொலைந்த உறக்கமெது எனவும் குழப்பம் குடிபுகத் தொடங்கியது!

சிந்தனை ஊறல்கள், விழிப்பு எரிச்சல், உறக்க மௌனம் என ஒவ்வொன்றாய்க் கடந்து, வெதுவெதுப்பும், வெளிச்சமும் படியப்படிய அது விடியல் எனத்தோன்றியது. எப்போது தூங்கினோம், என்ன நடந்தது, இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா, பைத்தியம் பிடித்துவிட்டதா என்ற குழப்பத்தோடு கண்ணில் கட்டியிருந்த பூளையைத் துடைக்க, விழிகள் விடுதலையடைந்தது போன்ற உணர்வு படிந்தது.

மெதுவாய் எழுந்து கதவு திறக்க, காற்றும் வெளிச்சமும் குபீரெனப் புகுந்தது. வீதி அதன்போக்கில் கிடந்தது, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரவர் போக்கில் நடமாடிக்கொண்டிருந்தனர். அடிக்கடி கண்ணில்படும் ஒற்றைக்கால் இல்லாத அந்த தெருநாய் ஒரு ரிதத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. முதன்முறையாக அந்த நாய்க்கு சாப்பிட எதாவது போட வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

--------------------------------------------------------------------------------------------------


 வல்லமைhttp://www.vallamai.com/blog/archives/7148/ மின்னிதழில் வந்த இடுகை. நன்றி வல்லமை.

Aug 23, 2011

தீர்ந்துபோகும் உலகம்



துணி மாட்டும் கவ்விகளில்
முனைப்பாய் தன் நேரத்தை
விதைக்கிறது அந்தக் குழந்தை
ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து
வீடு கட்டி மகிழுந்து ஓட்டி
அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி
எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து
தம்பிப் பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து
பறவைக்கு இறக்கை பொருத்தியென….

நிமிடங்களுக்கு நிமிடம்
மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது
அதற்கானதொரு அழகிய உலகத்தில்…

அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு
விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும்
உலரும் துணி உதிராமல் இருக்க
அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்

-0-

21ஆகஸ்ட் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை. நன்றி திண்ணை!

.

Aug 21, 2011

புவியியல் வரலாறு


வரிகொடுத்த சாமானியன்
குறைந்த காசுக்கு நிலம் இழந்தவன்

திட்டம்வகுத்த பொறியாளான்
கல்லுமண்ணெடுத்த சித்தாள்
கட்டிய ஒப்பந்தக்காரன்
எவர் பெயரும் வடிக்கப்படுவதில்லை
எந்தப் பாலத்தின் முகப்பிலும்

ஓரிரு இரத்தத்துளிகளோடு
ஓங்கியோங்கி அடிவாங்கும் உளிநுனியால்
பளபள கருங்கல்லில் வெள்ளிப்பூச்சில்
துரதிருஷ்டவசமாய் பொறிக்கப்படுகிறது
குறுக்கே பூட்டப்படும் வண்ணநாடாவை துண்டிக்க
கோலாகலமாய் வருபவர் பெயர் மட்டும் 

-0-

Aug 18, 2011

திரு.சகாயம் அவர்களின் தாயாருக்கு அஞ்சலி

மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்களின் தாயார் சவுரியம்மாள் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தில் செவ்வாய்கிழமை தனது 87வது வயதில் இயற்கை எய்தினார்.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

“இறுதி நிகழ்ச்சியில் பெரும் மக்கள் கூட்டம் இருந்ததாகவும்” அஞ்சலி செலுத்தச்சென்ற தன் நண்பர்கள் கூறியதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் தெரிவித்தார். பெருமாள்முருகன் அவர்கள் தற்சமயம் திரு.சகாயம் குறித்து ஒரு புத்தகம் எழுதிவருகிறார் என்பது கூடுதல் தகவல்.

கடந்த ஆண்டு ஈரோட்டில் நாங்கள் அழைத்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்த திரு.சகாயம், வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்தார். அதற்கான காரணமும் கூட அன்று அவர் நாமக்கல்லிருந்து புதுக்கோட்டை சென்று தனது வயதான தாயாரை சந்தித்துவிட்டு பின்னர் ஈரோடு வந்ததுதான் என்பதை பின்னர் அறிந்தோம்.

திரு.சகாயம் தன் நேர்மை குறித்து பேசும்போது அது, தன் தாய் புகட்டியது என அடிக்கடி சொல்வார். ”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்னவார்த்தையே அவருடைய நேர்மையின் அடிப்படை.


நாடு போற்றும் ஒரு நேர்மையாளனை ஈன்றெடுத்த அந்தத் தாயின் வாழ்க்கைப் பயணம் இனிதே நிறைவடைந்திருக்கிறது. தன்னை நெறிப்படுத்திய தாயை இழந்து வாடும் திரு.சகாயம் அவர்களுக்கு கூடுதல் மன பலம் கிடைக்கவும், தன் மகனை சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்த அந்த தாயின் ஆன்மா அமைதியடையவும் மனமுருகி வேண்டுகிறேன்.

-0-

Aug 17, 2011

உங்களுக்கும் இப்படித்தானா!?


மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி குணாதிசயம் கொண்டவர்கள் என்பது பொய்த்துப்போகிறது. அதுவும் ஃபேஸ்புக் அரட்டைப்பெட்டியில் முதல் தடவை பேசும் புதிய ந(ண்)பர்கள் ஒரே மாதிரி கேள்விகள்தான் வைத்துள்ளனர்.

He : Hi
Me : hi
He : How r u
Me : fine
He : Enna pannreenga
Me : (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்ப்ப்பா – மனசுக்குள்)
Me : எதுக்கு கேக்குறீங்க?
.
.
.
அம்புட்டுத்தான்…. அத்தோடு எஸ்ஸ்ஸ்ஸ்கேப்

புதுசா அரட்டையில் வர்றவங்களும், வந்த வேகத்தில் எஸ்கேப் ஆகுறவங்களுக்கு சற்றும் குறையவில்லை!

அரட்டைப் பெட்டியில் பெயர் மின்னுவதைப் பார்த்தவுடனே முதல் அரட்டையில் hi சொன்ன பிறகு how r u / what u do போன்ற பல கேள்விகளை அடுக்குறாங்களே.....
இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சு என்ன பண்ணுவாங்களாயிருக்கும்.

-----x-----

சில நாட்களுக்கு முன்பு gmail அரட்டைப் பெட்டியில் வந்தார் அவர்.

“நீங்க கணக்குல பெயிலானவர்தானே” என்றார்.

ஓரளவு புரிந்தது. ஆனாலும்….. ”ஏன் கேக்குறீங்க” என்றேன்

இந்த இடுகையைப் படித்தாராம்.

”அதில் ’வகை’னு தலைப்பு பக்கத்தில் இருக்கும் பாருங்க” என்றேன்

“புனைவு, மரணமொக்கை போட்டிருக்கீங்க”

நான் மௌனமாக இருந்தேன்

”சாரி….. முதல்ல நான் அதைப்படிக்கல”

அப்பவும் நான் மௌனமாகவே இருந்தேன்

அப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டே…. (நான் இல்ல அவருதான்)

இரண்டு நாள் கழித்து மீண்டும் அவரே ….

திடீரென....
“தமிழில் மட்டும் எழுதுங்க” என்றார்

”எனக்கு தமிழ்லதாங்க எழுதத் தெரியும்” என்றேன்

”நோம்பினு எழுதியிருக்கீங்க, அது தமிழா?” என்றார்

”வேற என்ன மொழி” என்றேன்

”அது கலோக்கியல் லேங்குவேஜ்” என்றார்

”அந்தக் கட்டுரையை படிச்சீங்களா, நோம்பினா என்னனும் எழுதியிருக்கேன்” கேட்டேன்

”இல்ல, தலைப்பு மட்டும்தான் படிச்சேன்”

நற நற நற….. (இல்ல பல்லை கடிச்சப்போ இப்படி சத்தம் வரல, வேற மாதிரி வந்தது, எனக்கு அந்த சப்தத்தை எழுத்தில் கொண்டு வரத் தெரியவில்லை)

“எங்க ஊர் வட்டார வழக்குங்க அது, நீங்க எந்த ஊர்” என்றேன்

“ஈரோடுதான்” என்றார்

அப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டே…. (இப்போ நானு)

-----x-----

அவர் தென் தமிழகத்தைச் சார்ந்த, வளைகுடாவில் இருப்பவர்….

He : வணக்கம்
Me : வணக்கம்
He : எப்படி இருக்கீங்க
Me : நல்லாருக்கேங்க
He : ஈரோட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?

அப்படியே இடி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சு, ஈரோட்ல இருக்கிற மக்கள் எப்படியிருக்காங்கன்னு கேக்குற பாசத்த நினைச்சு ஒரு விநாடி திக்னு ஆயிடுச்சு…

மனச திடமாக்கிட்டு

Me : ஈரோட்ல இருக்கிற எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?

He :  ஈரோட்ல எதும் அசம்பாவிதம் நடக்கலன்னா, எல்லாரும் நல்லாருக்காங்கன்னு அர்த்தம்

பல படங்களில் அழும் காட்சியில்வரும் கமலின் அழுகை நினைவிற்கு வந்தது.

Me : சன் நியூஸ்ல ஒன்னும் சொல்லலைங்க

இந்தத் தடவை நான் ஃபேஸ்புக்கை மூடிவிட்டு ஓடத்துவங்கினேன்

-----x-----


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...