திங்கட்கிழமை உறங்கச்
செல்லும்போது,
வீட்டிலுள்ள எல்லாக் குழாய்களிலும் தண்ணீர் நின்று போயிருந்தது. இது அவ்வப்போது நடப்பதுதான்.
ஆனால் அவை யாவும் பகற்பொழுதுகளில் நடப்பவை. இந்த
வீட்டிற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. மூன்று ஆழ்துளைக்
குழாய்க் கிணறுகள் இருந்தும், மாநகராட்சி இணைப்பு இருந்தும்....
எத்தனை ‘இருந்தும்’ இருந்தென்ன...
ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் லாரி மூலம்தான் வந்து சேர்கிறது.
மொத்தமாக இருக்கும் நான்கு
வீடுகளுக்கும் சேர்த்து நீர் நிர்வாகத்தை வீட்டு உரிமையாளரே கவனித்துக்
கொள்கிறபடியால், தண்ணீர்
குறித்து பெரிய பதட்டமில்லைதான். ஆனால் இரவு பத்து மணியளவில் தண்ணீர் தீர்ந்துள்ளதால்,
நள்ளிரவில் லாரியில் தண்ணீர் வந்தாகவேண்டுமோ!? என்ற கேள்விதான் மிரட்டிக் கொண்டிருந்தது. உறங்கச்செல்லும்
நேரமென்பதால் அப்போதைக்கு தண்ணீர் தேவை பெரிதாக இல்லை. அடுத்து
வாய் கொப்பளிக்கத் தேவைப்படும் தண்ணீர் ஏதோ ஒரு நிலத்தின் ஆயிரம் அடி ஆழத்திலிருந்துதான்
பெற வேண்டும் என்பதை நினைக்க மிரட்சியாகவே இருக்கின்றது. காலையில்
எழும்போது, எல்லா வீடுகளுக்கும்,
எல்லாத் தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாவிடில் எப்படி? எனும் இம்சை
விடியவிடிய கனவுகளிலும்கூட ஆட்சி செய்து கொண்டிருந்தது.
காலையில் தண்ணீர் இருந்தது.
கீழ்நிலைத் தொட்டியில் இருந்து, மேலே ஏற்றப்பட்டிருக்கலாம்.
விடியலைச் சமாளித்தாகிவிட்டது. பகலில்தான் முன்னப்
பின்ன எல்லாம் கிடைத்துவிடுமே. இரவு நினைவிலும், கனவிலும் மிரட்டிய தண்ணீர் குறித்த தகிப்பு ஓய்ந்தும், மறந்தும் போயிருந்தது.
ஆனால் இப்படி லாரியில் தண்ணீர் வாங்கிப் புழங்குவதை
நினைக்க வெட்கமாய் இருக்கின்றது. அந்த வெட்கத்தின் காரணம் தண்ணீர் இருக்கும் இடத்தைவிட்டு
தண்ணீர் இல்லா இடத்திற்கு புலம் பெயர்ந்ததில் இருக்கும் வசதி அல்லது சொகுசு என்பதே.
மழை என்று யார் எங்கு பகிர்ந்தாலும் ஒரு புழுக்கம் சூழ்கிறது. முட்டையை மந்திரித்து
வைத்துவிடலாமா எனும் அளவுக்கும்கூட. அது இயலாமையின் கொதிப்பு. எந்தப் பாவத்தின் விளைவுகளை
யாம் இப்போது அறுவடை செய்கிறோம் எனத்தெரியவில்லை. இப்படியாய்ப் புலம்புவது வாடிக்கையாய்ப்
போனது. புலம்பாத கணங்களை, தண்ணீர் குறித்து மிரளாத கணங்களை நினைக்கும்போது சித்தம்
கலங்கி புத்தி பேதலித்துவிட்டதோ எனும் பயம் பயம் கூடுதலாய் வருகிறது.
செவ்வாய் இரவில் மழை வந்துவிட்டது. ’சட்டென மாறுது
வானிலை’ என்பதுபோல் சட்டென மாறிப்போனது வெப்பநிலை. மழை கொண்டு வரும் குளிருக்கு நிகராய்,
இதம் தரும் ஏசிகள் ஏதும் இங்குண்டா? மழை தொடங்கியவுடன் வாட்சப் குழுமத்தில் மழை… மழை
எனும் குரல்கள் பெய்யத் தொடங்கிவிட்டன. என் குரலும்தான். மழையென்று முன்பு யாரோ சொன்னபோது
வந்த கொதிப்பு, இப்போது வேறு எவருக்கேனும் வருமோ என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றவில்லை.
அட அதுதான் நமக்கு வந்துடுச்சுல்ல என்ற சமாதானத்தில் அதெல்லாம் அடங்கித்தான் போகின்றது.
அப்போதைக்கு அந்த மழையே போதுமெனத் தோன்றியது. பேராசை என்னத்துக்கு?
வழக்கத்தைவிட கூடுதல் நேர உறக்கம். அதுதானே அந்த குளிர்ந்த
இரவுக்குச் செய்யும் மரியாதை. மரியாதை தீர்ந்த பிறகு வழக்கம்போல் மிதிவண்டியோடு வெளியில்
கிளம்புகிறேன். ஆங்காங்கே சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியிருக்கின்றது. தேங்கிக்கிடக்கும்
சேற்று நீரைக் காண்கையில் இன்னும் கூடுதல் பிரியம் மழை மீது. எதிரில் பார்க்கும் எந்த
மனிதரும் நேசிக்கக் கூடியவராய்த் தெரிகின்றனர்.
போக்குவரத்திற்கு திறந்துவிடப்படாத அந்த வட்டச்சாலையில்
ஆங்காங்கே நடந்தும், ஓடிபடியும் மனிதர்கள். அவற்றில் பல முகங்கள் நன்கு பழகியவை. அதில்
ஒருவர் எப்போதும் எனக்கு ஆர்வத்தைத் தூண்டுபவர். அவர் தன் நடைக்கு முன்போ பின்போ கையில்
ஒரு சிகரெட்டோடு அமர்ந்திருப்பார். காலைப்பொழுதுகளில் சிகரெட்டோடு அவ்வப்போது நான்
சந்திக்கும் ஒரே மனிதரும்கூட. மூன்று நாட்களுக்கு முன்பு ‘சிகரெட் வாங்க இந்தக் கடையில்
விடு’ என வேண்டிய நண்பரிடம் ‘எப்ப சிகரெட்டை விடப்போறீங்க!” என்று கேட்டிருந்தேன்.
நண்பரிடம் கேட்டதையெல்லாம் பழகியிராத அந்த நபரிடம் கேட்டுவிட முடியாது. ஆனால் கேட்கும்
ஆர்வமுண்டு. அந்த சாலைக்குள் நுழைந்ததும் தவிர்க்காமல் தேடும் முகம் அவருடையது. காரணம்
அவரைக் கடக்கும்போதெல்லாம் மெல்ல புகை வழியும் சிகரெட்டை உறுத்துப் பார்ப்பதில் ஒரு
வன்ம திருப்தி உண்டெனக்கு. வழக்கமாய் அவர் சிகரெட் புகைக்கும் இடத்தில் இன்றில்லை,
அந்த இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் ஒரு ரோஸ் நிற ஊதுபத்தி பை கிடந்தது. அது ஊதுபத்திப்
பை எனத் தெரிந்ததே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் அடிக்குச்சிகளைப் பார்த்துத்தான்.
யார், எப்படி இங்கே தவறவிட்டிருப்பார்கள் எனும் சிந்தனைகளோடு சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தேன்.
நிமிடங்களும், எனக்கான தொலைவும் கரைந்தன. மீண்டும்
அதே இடத்தைக் நெருங்குகிறேன். அவர் அமர்ந்திருக்கிறார். காற்றெங்கும் நறுமணம். திடுக்கிடலோடும்
ஆச்சரியத்தோடும் நறுமணத்தை உணர்கிறேன். ஊதுபத்தி நினைவிற்கு வருகிறது. கிடந்த இடத்தின்
அருகிலேயே சாலையோர ஈர மண்ணில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. வாசனையை உள்வாங்கியபடி காற்றின்
வேகத்தில் புகையாய்க் கரையும் ஊதுபத்திகளைக் கவனித்தபடி கடக்கிறேன். ஊதுபத்திகளைப்
பார்க்கும் என்னை அவர் உற்றுப் பார்க்கிறார். அவர்தான் கொளுத்தியிருக்க வேண்டுமென்ற
நினைப்பில் அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறேன். ஆமாம் என்பதுபோல் மெல்லமாய் தலையசைப்பதுபோல்
தோன்றுகிறது. என் புன்னகை பெரிதாகிறது. நட்பு பூத்த கணமென்றும் அதைக் கருதலாம். இந்த
நிகழ்வுகள் யாவும் மழையும், மழையின் குளிர்வும் கொடுத்த கொடையென்றும் கருதியபடி தொடர்கிறேன்.
மழை இனிது என உலகம் கருதும் கோடானு கோடிக் காரணங்களில் இதையும் இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும். புதிதாய் தன் பகுதிக்குள்
வந்திருக்கும் முழுமையடையாத அந்த வட்டச் சாலையில் விரையும் ஏதோ ஒரு வாகனத்தில் சிக்கி,
ஞாயிற்றுக்கிழமை காலை நாயொன்று சிதறிக்கிடந்த இடமும்கூட அதனருகில்தான். அதற்கு அஞ்சலி
செலுத்தும் நோக்கிலும்கூட, இந்த ஈரப்பொழுதில் அந்த ஊதுபத்திப் பை யாரிடமிருந்தோ தன்
தொடர்பை துண்டித்துக்கொண்டு விழுந்திருக்கலாம் என்பதுதான் அது.
கருத்துகளுக்குள் கருத்து இருக்கிறதோ இல்லையோ…. எல்லாச்
செயல்களுக்குள்ளும் காரணங்கள் இருக்கலாம்தானே!?
1 comment:
பிக்பாஸ் எஃபக்ட் ஓகே. அதென்ன பிக்பாசுல வர்ற மாதிரியே 1.15, 4.30, 7.45...ன்னு சரியா வருது.. 2.56, 8.43, 2.11ன்னு ஏன் வரல?!
Post a Comment