Showing posts with label புதிர். Show all posts
Showing posts with label புதிர். Show all posts

Apr 1, 2016

புதிர்களின் முடிச்சவிழும் தருணம்



ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் எனும் கேள்விகள் பலமுறை வருவதுண்டு. ஒவ்வொருமுறையும் அப்போது இருக்கும் மனநிலைக்கேற்ப ஒரு பதில் கிடைக்கும். சில நேரங்களில் எழுத்து என்பது பீடித்திருக்கும் ஒரு வியாதி போன்றும், எல்லாவற்றையும் எழுத்தாகவே பார்க்கிறோமா என்ற புகாராகவும் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. ஆனாலும் எழுத வேண்டியிருக்கிறது. ஏன் எழுத வேண்டி வருகிறது அல்லது எது எழுதத் தூண்டுகிறது எனும் முக்கியமான கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் இரகசியமாகவேணும் ஒரு பதில் இருக்கும்

என்னை மாதிரி ஒரு காலத்தில் வலைப்பக்கத்தில் எழுதத் துவங்கி, ஃபேஸ்புக், ட்விட்டரில் கரை சேர்ந்து அங்கு அதிக நேரம் செலவிட வாய்த்தவர்கள் எல்லாவற்றையும், எந்நேரமும் வதவதவென எழுதிக்கொண்டேதான் இருக்கின்றோம். அதெல்லாம் எழுத்து வகைகளில் சேருமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் காலம் எழுத்தில், வடிவத்தை, தீர்க்கத்தை, முதிர்வை, நிதானத்தை, காரணகாரியங்களை அவ்வப்போது சீராக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆகப்பெரிய ஆசான் காலம் என்பதில் எப்படி மாற்று இருக்க முடியும்.

முந்தைய ஆண்டுகளில் நாம் எழுதியவற்றை ஃபேஸ்புக் ஒவ்வொரு நாளும் நினைவுகளாய் மீட்டு வழங்குகின்றது. அது ஒருவகையில் கிளர்ச்சியான அனுபவம்தான். கடந்த காலத்திற்குள் மிக எளிதாகப் பயணப்பட்டு வருவதற்கான அனுமதிச் சீட்டு. சில வருடங்களுக்கு முன்பு நாம் எழுதியதை நாமே வேடிக்கை பார்க்கவும், ரசிக்கவுமானதொரு வாய்ப்பு அது.

ஓரிரு வரிகளில் அப்போது எழுதியிருக்கும் நிலைத்தகவல்கள், அதை எந்த உணர்வோடு, எந்த மனநிலையில் எழுதினோம் என்பதை நினைவில் மீட்டாவிடினும்கூட அது அப்போதைய நம் உணர்வு, அப்போதைய நம் மனநிலைதான் எனும் பந்தத்தை ஏற்படுத்துவதுண்டு.

மிகச் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் ஒன்றாம் நாளில் //வாழ்க்கையிலுள்ள புதிர்களின் முடிச்சவிழும் தருணம் பயம் நிரம்பியது// எனும் வரியை அந்த பின்மதியப்பொழுதில் எழுதியிருக்கிறேன். இத்தனை நாட்களில் இப்படியான நினைவுகளை மீட்டும்பொழுது அந்த சொற்களை எழுதிய காலம், சூழல், மனநிலை என்பதெல்லாம் நினைவுகளில் மீட்டப்படுவதில்லை. ஒரு வரியாக, கூற்றாக மட்டுமே தெரிவதுண்டு. ஆனால் இந்த வரி, என்னை மிகச் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்த வெம்மை தினத்திற்கு வெகுவேகமாய் இட்டுச்சென்றுவிட்டது.



அதை மதுரை அர்விந்த் கண் மருத்துவமனை காத்திருப்பு அறையிலிருந்து கைபேசி வழியே எழுதிய சூழலும், காட்சியும் அப்படியே கண் முன் குவிகின்றது. குடும்பத்தில் ஒருவரின் மருத்துவச் சோதனைக்காக அன்று கசகசக்கும் கூட்டத்தினிடையே ஏராளமான கேள்வி வைத்துக்கொண்டு விடை தெரியாமல் காத்திருந்த ஓய்ந்த மனநிலையில் எழுதிய வரி. அப்போது சுமந்திருந்த கேள்விகள் அத்தனையும் புதிர்கள்தான். உண்மையில் காலையில் மிக எளிமையாக மருத்துவமனைக்குள் ஒரு கண் பரிசோதனைக்காகத்தானே எனச் சென்றிருந்த மனநிலை முற்றிலுமாக எதிர்மனோநிலைக்கு மாற்றப்பட்டிருந்தது. முதற்கட்ட சோதனை, இரண்டாம் கட்ட சோதனை என அழுத்தம் கூடி, ”அப்படியும்” இருக்கலாம் எதுக்கும் ஒரு எம்.ஆர்.ஐ எடுத்துட்டு வாங்க என்று சொல்லப்பட்டு, அதற்கான விபரம் கொடுக்கப்பட காத்திருந்த நேரம் அது. சோதனையின் முடிவு ”இப்படியாக” இருந்தால் ஒன்றுமில்லை, ஆனால் ”அப்படியாக” இருந்தால் என்ற பயம் மெல்ல மெல்ல நிரம்பத்தொடங்கியிருந்த தருணம் அது. உடனிருந்த குடும்ப உறவுகளிடமே உடைத்துப் பேசமுடியாத மௌனத் தருணம் அது.

பதட்டத்தைக் குறைக்க சிலருக்கு ஒரு தம் தேவைப்படலாம், சிலருக்கு மூச்சுப் பயிற்சி தேவைப்படலாம், எனக்கு அப்போது எழுத்து தேவைப்பட்டிருந்திருக்கிறது என்பது புரிகிறது. அதுவும் குறிப்பாக அந்த ஆறு சொற்கள் கொண்ட வரி தேவைப்பட்டிருந்திருக்கிறது. அந்த வரியில் நான் சற்று தளர்ந்திருந்திருப்பேன், ஆசுவாசம் அடைந்திருந்திருப்பேன். பரிசோதனையின் முடிவுகள் “அப்படியாக” இருந்தால் என்ற ஐயத்தின் பின்னால், மிகப்பெரிய இருண்மை சூழ்ந்திருந்தது. எங்கு, எவ்விதம், என்ன செய்ய வேண்டுமெனும் எதுவும் தெரியாத ஒரு வெற்று அறிவு மற்றும் மனநிலை. அப்படியான பெரும்பான்மையான சூழ்நிலைகளிலெல்லாம் எனக்கு அப்படியான வரிகள்தான் மனதைத் தளர்த்தவும், சுவாசத்தைச் சீராக்கவும் உதவியிருக்கின்றன என்பதை இப்போது நினைவில் கொள்கிறேன்.

அந்த நாள் முழுக்கத் தீர்ந்துபோயும் விடை தெரியாமல், வார இறுதியில் மீண்டும் பயணித்து, பரிசோதனையின் முடிவுகள் விரும்பவே விரும்பாத “அப்படியான” ஒரு முடிவாகவே திணிக்கப்பட்டு, அடுத்த நான்கைந்து மாதங்கள் ஈரோடு, சென்னை, கோவை எனப் போராடி, நிறைவாய் நலம் அடைந்ததெல்லாம் பெரிய கதை. ஆகப்பெரிய அனுபவம்.

இப்போது மிக வேகமாக நான் நினைத்துப் பார்க்கவும், மனதிற்குள் ஓட்டிப் பார்க்கவும் விரும்புவது மூன்றாண்டுகளுக்கு முன்பான அந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து இப்போது வழக்கமான பரிசோதனைக்காக மார்ச் இரண்டாம் தேதி சென்னை சென்று வந்ததுவரை. எல்லாம் ஒரு கனவு போல் இருக்கின்றது. அந்த இடைப்பட்ட காலத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் எப்படிக் கடந்ததென நினைக்க பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும், சற்று மிரட்சியாகவும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் ஒன்று புரிகிறது. எதுவும் அந்தந்தக் கணங்களில் புதிராக இருந்தாலும், அவற்றிற்கு ஒரு திறப்பு இருக்கின்றது. ஒரு பதில் இருக்கின்றது. அது சற்று முன்பின்னாக நமக்கு கிடைத்துவிடுகின்றது. அப்படிக் கிடைப்பது விரும்பியதாகவோ, விரும்பாததாகவோ இருந்தாலுமே கூட, அதையும் கடந்து நம்மால் வாழ்ந்துவிட முடிகிறது. ஒவ்வொரு இடர் வரும்போதும், ஒவ்வொரு புதிர் அவிழும்போது நான் கொண்டிருந்த பதட்டங்கள் அப்போது தவிர்க்க முடியாததும், பின்னர் அவை அவசியமற்றதென்றே புரிய வைக்கப் பட்டிருக்கின்றன.


-

Jun 15, 2015

புதிர்



தை வியாபாரம் நடந்துகொண்டிருந்த சிவப்பு விளக்குப் பகுதியில்தான் என் பால்யம் முழுவதும் இருந்தது. 12 வயதாக இருக்கும்போது என் விலை விசாரிக்கப்பட்டு, அதைப் புரிந்துகொள்ளவும் முடியாமல் அழுதபடியே உறங்கினேன். இதில் கொடுமை என்னவென்றால், என்னை விலைக்குக் கேட்டவன் பளபளக்கும் காரும், எதையும் வாங்கும் வல்லமையும் கொண்ட மேல்தட்டு வர்க்கம். என் அம்மா அருகில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும் நிலையில், அங்கு எங்கள் குடும்பமாய் இருந்த பெண்களே, என்னை அன்புடனும் பிரியத்துடனும் பாதுகாத்தனர். எனினும் என் நிறத்தையொட்டிய தாழ்வு மனப்பான்மையுடனே வளர்ந்தேன். சிவப்பாக இருப்பவர்கள் அழகாக இருப்பதாக ஆராதிக்கப்படுவதும், நான் கறுப்பாக இருப்பதாலேயே அழகற்றவள் என அழைக்கப்படுவதும் எனக்குப் புரியவேயில்லை.

12ம் வகுப்பு முடித்தபோது ஒரு மாற்றத்தை நிகழ்த்த விரும்பினேன். நகராட்சி பள்ளியில் இருந்தவர்களிடம் நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டும், ”நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும், என்னை நானே மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் சொன்னேன். அதனால்கிரந்திஅமைப்பிற்குச் சென்றேன். அடுத்த ஆண்டு பயணத்திலும், பாலியல் கல்வி குறித்த பயிலரங்கு நடத்துவதிலும் செலவிட்டபோது, எல்லோருமே, என் பின்புலத்தை வைத்து என்னைத் தீர்மானிப்பதில்லை என்பது புரிந்தது. என்னைக் குறித்து என்னிடமிருந்த தாழ்வுணர்ச்சியிலிருந்து மீள ஆரம்பித்தேன். நான் எப்போதும்  கனவு காண்பவள், பேச்சுவாக்கில் ஒருமுறை உரத்த குரலில் நான் அமெரிக்க செல்லவேண்டும் எனச்சொன்னேன். அப்போது அமெரிக்க ஒரு கண்டமா?, நகரமா?, அல்லது நாடா என்பது கூடத் தெரியாது.



கிரந்தியின் முயற்சியால் பார்ட் கல்லூரியில் லிபரல் ஆர்ட்ஸ் படிக்க முழு உதவித்தொகையும் கிடைத்தது. மேலும் தங்கும் செலவு மற்றும் அன்றாடச் செலவினங்களுக்கு உடனிருந்தவர்கள் உதவினர். வாழ்வில் மாற்றம் வந்தது, ”SEA”ல் வகுப்பு பருவத்தேர்வுகளை சந்தித்தேன். என்னால் ஆங்கிலம் சரளமாகப் பேச முடிந்தது. என் வீட்டிலிருந்து, காமத்திபுரா வரை மாற்றங்களைக் கொண்டுவர என்னிடம் யோசனைகள் இருந்தன.

ஆம், என் வீட்டைக் குறித்த உங்கள் சிந்தனைகளை விசாலமாக்குங்கள். மனிதர்களுக்கு விருப்பங்களும் தெரிவுகளும் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பலர் தெரிந்தே அந்த வாழ்க்கையைத் தெரிவுசெய்தவர்கள், ஏனெனில் அதுதான் அவர்களின் வாழ்க்கைக்கான மூலாதாரம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நாம் மதிப்பீடு செய்பவர்களாய் இருத்தலைக் குறைத்துக்கொண்டு, நம் வசதிக்கு உட்படாத சூழல்களில் நடப்பவற்றை ஏற்றுக்கொள்தல் அவசியம். ஏனெனில் என் பின்புலம் என் பலவீனமன்று. நானென்பது நான்தான். இதுதான் நான் என ஒரு இடமும் வரையறுக்க முடியும்.

இதுமும்பையின் மனிதர்கள் எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருக்கும் ஒரு 20 வயதுப் பெண்ணின் வரிகளும் வாழ்க்கையும்.

*
ட்டக்களப்பு, இலங்கையின் கிழக்கில் கடல் ஓரத்தில் இருக்கும் ஒரு அழகிய நகரம். தமிழர்கள் அதிகமாக வாழும் வடகிழக்குப் பகுதியின் முக்கியமானதொரு பகுதி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக நான் அங்கு சென்றிருந்தபோது, ஒரு அமைப்பின் கீழ் பணியாற்றும் பெண்களிடம் பேச வேண்டும் என அழைக்கப்பட்டிருந்தேன்.

கல்லடி என்ற இடத்தில் ஒரு தொழிற்பேட்டைக்கு அழைத்துச் சென்றார்கள். பேசுவதற்காக மிகச் சிறிய முகப்பு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அமைப்பாளர்களில் ஒருவர் உள்ளே இருந்த தொழிற்கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வரிசையாக இருந்த தையல் இயந்திரங்கள் ஓய்வில் இருந்தன. அது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இணைந்து பணியாற்றும் தொழிற்கூடம். அங்கிருந்த பெண்களின் வயது சுமார் இருபத்தைந்திலிருந்து நாற்பத்தைந்துக்குள் இருக்கலாம். அவர்கள் அனைவருக்குமான மிக முக்கிய ஒற்றுமை, அனைத்துப் பெண்களுமே கணவனை இழந்தவர்கள் அல்லது கைவிடப்பட்டவர்கள்.

மட்டக்களப்பு கடந்தகாலங்களில் இரண்டு வகைகளில் பாதிக்கப்பட்ட பகுதி. ஒன்று இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக நிகழ்ந்த நீண்டகாலப் போரில், மற்றொன்று சுனாமியின் கோரத்தாண்டவத்தில். சுனாமியில் நமது தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரை தப்பித்ததற்கு இலங்கை சுனாமி அலைகளைத் தடுத்தாட்கொண்டதுதான் மிக முக்கியக் காரணம். அதில் மிக மோசமாகத் தாக்கப்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பும் ஒன்று. அங்கிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் போர் குறித்தும், சுனாமி குறித்தும் ஆயிரமாயிரம் வலி மிகுந்த சொற்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனாலும் வாழ்ந்துதானே ஆகவேண்டும்.

போரில், சுனாமியில் மற்றும் இன்னபிற காரணங்களால் கணவனை இழந்த பெண்களை ஒன்றுதிரட்டி இந்தியாவைச் சார்ந்தசேவா எனும் அமைப்பு, இந்திய அரசின் நிதியுதவியுடன் குஜராத் மாநிலத்திற்கு அழைத்து வந்து தையல் பயிற்சியளித்திருக்கின்றது. அதன்பின் தையல் இயந்திரம் வாங்குவதற்கு நிதியுதவி அளித்து, அவர்களை ஒரு அமைப்பாக ஒன்று திரட்டி தொழிற் நடத்த வழிவகை செய்திருக்கின்றது.



இன்று அவர்களாக கொழும்பு சென்று ஒட்டுமொத்தமாகத் துணி வாங்குகிறார்கள், கல்லடிக்கு வந்து தொழிற்பேட்டையில் நைட்டி, சுடிதார் என பெண்களுக்கான விதவிதமான துணி வகைகளைத் தயாரிக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு சந்தையை உருவாக்கி, ஒன்றாக உழைத்து, குடும்பம் பிள்ளைகள் என சொந்தக்காலில் நின்று அவரவர் வாழ்க்கையை நல்லவிதமாக நடத்துகிறார்கள்.  அவர்களில் சிலர் மறுமணம் செய்துகொண்டு புதியதொரு வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்.

இலங்கையில் தெற்கு, வடக்கு, கிழக்கு என நான்கு நாட்கள் மிக நீண்ட பயணம் மற்றும் நிகழ்ச்சிகளென்று என்னால் அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கென நேரமோ உடம்பில் வலுவோ, மனதில் தெம்போ இருந்திருக்கவில்லை. அவர்களின் மத்தியில் அன்று நான் பேசவேண்டியது குறித்து ஒற்றை வார்த்தை கூட தீர்மானித்திருக்கவில்லை. ஆனால் அன்று அவர்கள் குறித்து அறிந்துகொண்ட தகவல்கள் மட்டுமே என்னை பேச வைத்தது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்ன தெம்பாக பேசவைத்தது. இத்தனையாண்டுகளில் நான் பேசியவற்றில் மிக மிக அதிகமான திருப்தியை அடைந்த உரைகளில் அன்றைய உரையும் ஒன்றெனச் சொல்வேன்.

*

வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு. வழங்கப்பட்ட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதன் போக்கில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நாட்களை நகர்த்துதலை ’வாழ்தல்’ என்பதைவிட ’பிழைத்தல்’ என்றே அழைக்கலாம். வாழ்தல் என்பது சிறகு விரித்து வானம் ஏகுதல். சிறகு இல்லாவிடில் எனக்கு சிறகு வேண்டுமென என ஆசை கொள்ளுதல். இல்லாத சிறகுகளை முளைக்கச் செய்தல். சிறகுகளை அசைக்க, இயக்கப் பயிற்சியெடுத்தல். வலிமையைக் கூட்டுதல், வானமேகி எல்லைகளைக் கடந்து பறந்து செல்லுதல். காற்றில் மிதத்தல். தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து ரசித்தல்.

ஆனால் வாழ்க்கையின் ஆகச் சிறந்தவொரு புதிர் ”வாழ்தல்” என்பதுதான். நமக்கென வழங்கப்பட்ட வாழ்க்கையை, நாம் எப்படி கையாள்கிறோம், எப்படி மாற்றுகிறோம் என்பதுதான் வாழ்க்கை எனும் புதிருக்கு மிகப் பொருத்தமான விடையும் கூட.

சிலருக்கு ’ஏன்.. எப்படி.. எதனால்?’ எனத் தெரியாமலும்கூட வாழ்க்கை என்பது கடினமான சவாலாக வாய்த்துவிடுகின்றது. மிக எளிமையான, இனிதாகக் கிடைத்த வாழ்க்கையை சிலர் கொடுமையான ஒன்றாக மாற்றி வீணடிப்பதுவும் உண்டு. பொதுவாகவே ஏதோ ஒரு ஒப்பீட்டினை வைத்துக்கொண்டு மட்டுமே இந்த வாழ்க்கை மிகப் பிடித்தமானது என்றோ, மிகக் கொடியது என்றோ மிக எளிதாகத் தீர்மானித்து விடுகின்றோம்.

எல்லோருக்கும் ஒரே விதமான வாழ்க்கை வழங்கப்படுவதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. கொடுக்கப்பட்ட வாழ்க்கை எதுவெனினும், அதை தாம் விரும்பியவண்ணம் மாற்றிக் கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் அனைவருக்குமே வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த உரிமையும் வாய்ப்பும் பிரதானமாகக் கேட்பது சரியான முடிவு, நேர்மையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை மட்டுமே!

*



“நம் தோழி” ஜூன் இதழில் வெளியான கட்டுரை



-





வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...