Showing posts with label நொய்யல். Show all posts
Showing posts with label நொய்யல். Show all posts

Sep 17, 2012

யுரேனிய ஊறுகாயும், ஹிரோஷிமா படமும் உங்கள் முகப்புப் படமா?


அணுவுலைக்கு ஆதரவு எனும் பெயரில் யுரேனியத்தை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு தின்றாலும் காலையில் கழிவரையில் சுகமாய் கழிக்க முடியும் என்பது போன்ற குரல்களைக் கேட்கையில் திகைப்பாக இருக்கின்றது. அதிலும் ஆச்சரியமாக, இணையத்தில் ஆங்காங்கே...... அணுகுண்டு போட்ட பிறகு..... ஹிரோஷிமா எப்படி மீண்டுவிட்டது தெரியுமா!?” என கதை சொல்வதை, வண்ண வண்ணப் படம் காட்டுவதை நினைக்க கசப்பான சிரிப்பே மிஞ்சுகிறது.... எந்த அடிப்படையில் ஜப்பானை இந்தியத் திருநாட்டோடு ஒப்பிடுகிறார்கள் எனத்தெரியவில்லை.



புகுஷிமா விபத்தில் ”ஆனானப்பட்ட” ஜப்பனே தவித்த தவிப்பை வசதியாய் மறந்து, ஹிரோஷிமா மீண்டு வந்ததாகச் காட்டும் படங்களை காட்டுவோர்களிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லவேண்டிய பதில் ஒன்று இருக்கிறது. அது ஜப்பான், இது இந்தியா! அதிலும் அந்த ஆனானப்பட்ட எனும் வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றது. பொறுமையாய் யோசித்துப்பாருங்கள்!



எங்கள் ஊரிலும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இன்றைய பொறியியல் துறைக்கும் கடும் சவாலைக் கொடுக்கும் வகையில், காவிரியின் மேற்கு கரையில் ஆற்றைவிட உயரமாய் இருக்கும் பகுதிக்கென்று  வெட்டிய / கட்டிய காலிங்கராயன் கால்வாய் இருக்கின்றது. வெறும் 20 ஆண்டுகளில் தோல் கழிவுகள், சாயக்கழிவுகள் மூலம் தீண்டத்தகாத தண்ணீரா மாற்றியதை தடுக்க மறந்த தலைமுறை நாம் என்பதையும், உடுத்தும் துணிக்குப் போடும் சாயக்கழிவுகளை ஒழுங்கு படுத்தத் தெரியாமல், ஒரு நதியை பலாத்காரம் செய்து சாகடித்த தலைமுறை நாம் என்பதையும் மல்லாந்து படுத்துக்கொண்டு நாமே காறித்துப்பிக் கொண்டு ஒப்புக்கொள்ளலாம்.

எங்கள் ஊர் பக்கத்திலும் திருப்பூர் என்ற ஊர் இருக்கிறது. அதனூடே நொய்யல் என்ற நதி ஓடியது... கவனிக்க ஓடியது.... அதன் இருகரைகளும் விவசாயத்தில் செழித்த வரலாறு உண்டு.... வரலாறு கிடக்கட்டும், இன்றைக்கு அதன் புவியியல் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ஹிரோஷிமா படம் போலாவே பருந்துப் பார்வையில் யாரேனும் ஒரு படம் பிடித்து, இந்திய அரசின் திறமையை வெளிக்காட்டுவார்கள் என சாயமேற்றப்பட்ட கலர் கலர் கனவுகளோடு காத்திருக்கிறேன்....



தென்னையில் காய்க்கும் இளநீரில் சாயக்கழிவுகள் ஊடுருவி நாற்றம் அடிப்பதை தடுக்க வக்கற்ற அமைப்பில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தீர்கள் என்றால் உடன் வாருங்கள், ஒரு முறை சாயக்கழிவு நீரேற்றம் பெற்ற இளநீரைக் சுவைத்துவிட்டு வரலாம்.

போகும் தடமெங்கும் நிலத்தை மலடாக்கிய ஒரு நதியை சாவிலிருந்து மீட்க திராணியில்லாத, அதை இன்றளவும் முறைப்படுத்தத் தெரியாத அரசுதான், இன்றளவும் போபால் விஷவாயுக் கழிவுகளை அகற்றாத அரசுதான், பிளாஸ்டிக் கேரி பைகளால் ஊரே குப்பை மேடாக மாறிவருவதை தடுக்கத் தடுமாறும் அரசுதான், ஃபோபர்ஸ் தொடங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல் உட்பட எந்தவொரு பூதாகர ஊழலிலும் இதுவரை பெரிதாக நீதியை நிலை நாட்டாத அரசுதான், கனிமங்களை கணபதி அய்யர் பேக்கரி கணக்காக கை மாற்றி ஆயிரம் கோடி, லட்சம் கோடி என அழித்த அரசுதான் .....



எதிர்காலத்தில் அணுவுலைக் கழிவுகளை திறம்படக் கையாளும் என்றும், அணுவுலைகளில் விபத்தே ஏற்படாமல் மந்திரம் போட்டு வைத்திருக்கும் என்றும், அப்படியே தப்பத்தவறி ஏற்பட்டாலும் உங்களையும் என்னையும் மிக நேர்மையாக காக்கும் என்ற மாய நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டேயிருக்க முனையலாம். ஆனால் அதை நம்புங்கள் என எல்லாரையும் வற்புறுத்துவதைத்தான் ஏற்கமுடியவில்லை.

விபத்துக்கான வாய்ப்பு எதில்தான் இல்லை, லாரி முதல் விமானம் வரை விபத்து நடந்துகொண்டேதான் இருக்கின்றது அதற்காக பயணத்தை நிறுத்திவிட்டோமா என அறிவார்ந்த கேள்வி விதைக்கும் அன்பர்களுக்கு... ”சாரி பாஸ் வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வாங்க!” எந்த ஒரு விபத்தும் அதில் சிக்கிய குடும்பங்களின் ஒரு தலைமுறையைத்தான் அழிக்கும். அணுவிபத்து எத்தனை தலைமுறையை அழிக்கும் என்று எவருக்குத்தெரியும்.

மீண்டும் சொல்கிறேன் ஹிரோஷிமா படத்தை முகப்பு படமாக வைக்கவிரும்புவோர் கூடவே நொய்யல் படத்தையும் இலவச இணைப்பாக வைத்துக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.

-

பொறுப்பி : படங்கள் இணையத்திலிருந்து

-0-

Dec 15, 2011

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

“பெருமழை நீரில் சாக்கடைகள் அடைத்து, வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதென ஓங்காரமாய் புலம்பும் மனித சமூகத்திற்கு, ‘அடைத்துக்கொண்டிருப்பது தாங்கள் வீசியெறிந்த கேரி பேக்குகள்தான்என்பது ஏன் புரியவில்லை? “
 
கடந்த மாதத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தபோது வீடுகளில் தண்ணீர் புகுந்ததாக சபித்துக்கொண்டிருந்த சமூகத்தைப் பார்த்த என் குமுறல்தான் அது. ட்விட்டர், ஃபேஸ்புக், விகடன் வலைபாயுதே என மக்கள் ரசிக்கவும்(!) வாய்ப்பளித்த ஒரு குமுறல். வெறும் ரசிப்புக்கு மட்டுமே அந்தக் குமுறலை வார்த்தைகளாகத் துப்பவில்லையென்பதை நானறிவேன்.

ஏற்கனவே எழுதிப் பேசிய விசயங்கள்தான், என்னுடைய அறிவையோ, உங்களுடைய அறிவையோ மீறிய விசயம் அல்ல இது. ஆனாலும் அறிவு மழுங்கிப் போன இந்த மனிதச் சமூகம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து என்றுதான் விடுபடப் போகின்றது. அமிர்தமே கிடைத்தாலும் அதை பிளாஸ்டிக் பையில் போட்டு முடிச்சுப் போட்டுக் கொண்டு வருவதைப் பெருமையாக கருதும் சமூகம் இன்று தேநீர்க் கடைகள் தோறும் பார்சல் டீ என்பதை கொதிக்கும் சூட்டோடு வாங்கிக்கொண்டு சென்று ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருப்பதை எளிமை என்று நினைக்கின்றது.

அப்படி ஊதி ஊதி குடிக்கும் தேநீரில் புற்றுநோயின் விதையும் ஊர்ந்து வருவதை யோசிக்கும் அளவுக்கு யாருக்கு அமைதி இருக்கின்றது. முப்பது ரூபாய் கொடுத்து கைகளில் தொட்டிலாட்டியபடி வாங்கிச் செல்லும் மதிய உணவுப் பொட்டலங்களில் குட்டி குட்டியாய் முடிச்சிட்ட குழம்பும், ரசமும், மோரும், பொறியலும் குட்டிச்சாத்தான்கள் போல் உருண்டுகொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் அவிழ்த்துப் பரப்பி உண்டு கழித்தபின் அந்த குட்டிச் சாத்தான்களைக் கழுவி, காயவைத்து, இஸ்திரி போட்டு இரும்புப் பெட்டிக்குள்ளாகவா வைத்துவிடப்போகிறோம்.

அடியில் இருக்கும் பழைய செய்தித்தாள், வதங்கிய இலையோடு அப்படியே சுருட்டி சன்னல் வழியாகவோ, அல்லது அதிகபட்சமோ அருகாமையில் இருக்கும் குப்பைத்தொட்டி ஓரமாகவோ வீசிடப்போகிறோம். அதைக் குப்பைத் தொட்டிக்குள் கூட வீசும் அளவுக்கு பொறுமையில்லாமல் அந்த நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு நம்மை தொந்தரவு செய்துக் கொண்டிருக்கலாம்.

இன்றைக்கு எதை வாங்கினாலும், அதை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் பதுக்கி எடுத்து வருவதை சமூக அந்தஸ்தாக கருதும் மனோபாவம் கூடி வந்துவிட்டது. பொருள் வாங்கச் செல்லும் போது தவறாமல் கைகளில் அலைபேசியைப் பிடித்துச் செல்லும் நமக்கு உடன் ஒரு பையை எடுத்துச் செல்வது என்பது இழுக்காக இருக்கின்றது.

திருமணங்களில் இலைக்கு ஒரு தண்ணீர் பாட்டில் என வைப்பது, அந்த திருமணத்தின் அழகியல் என நினைக்கின்றனர். எல்லாம் தின்றுமுடித்து வெளியே வரும் வேளையில் குதப்பிக்கொண்டு வரும் பீடா கூட தனக்கு ஒரு உறை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது, என்னவோ பீடாவின் கற்பு களவு போய்விடும் என்பது போல.

வரலாறு எதுவென்று தெரியாத சமூகம் தொலைக்காட்சிகளின் தொடர் அழுகாச்சியின் இடைவேளையில் வெளியே தலைகாட்டி வெளிச்சம் பாயும் தொலைக்காட்சிக் கேமரா முன்பு மூக்குச் சிந்துகிறது “வரலாறு காணாத வெள்ளம்’ என்று. என்ன வெங்காய வரலாறு அறிந்துவிட்டோம் நாம். இன்றைக்கு வீடு கட்டிக் குடியிருக்கும் இடத்தில் சிலபல ஆண்டுகளுக்கு முன் ஏரியோ குளமோ, வெள்ளவடிகாலோ இருந்திருக்கும் எனும் வரலாறு தெரியாத புறநகருக்கு ஓடி வந்த தலைமுறைதான் புலம்புகிறது வரலாறு காணாத வெள்ளமென்று.

ஊரின் நடுவே ஒய்யாரமாய் ஓடிக்கொண்டிருந்த நொய்யலை சாகடித்த திருப்பூர் தொழில் துறைக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் சமீபத்திய ஒரு ராத்திரி வெள்ளம். அடுத்த நாள் காலை திருப்பூரிலிருந்து பல கல் தொலைவு தாண்டி முத்தூர் அருகே நான் நொய்யல் நதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கலைந்த கர்ப்பம் போல் கருப்பான வெள்ளமொன்று கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதில் அடித்துச் சென்றது வெளிநாட்டுக் காசை ஈட்டும் வெறியில் கொட்டிய காலத்தால் மன்னிக்க முடியாத கசடுகள் மட்டுமல்ல, பல விலை மதிக்க முடியா உயிர்களும் கால்நடைகளும், சாமானியனின் வீட்டுப் பொருட்களும் தான்.

ஆங்காங்கே இந்திய வல்லுனர்கள் கட்டி வைத்திருந்த பாலங்களையும், தரைப் பாலங்களையும் ஓங்காரமாய் ஓடியவெள்ளம் அடித்து இழுத்துச் சென்றது. கிட்டத்தட்ட ஓரிரு நாட்கள் ஈரோடு மாவட்டத்தின் தெற்கு, முழுக்க முழுக்கத் துண்டிக்கப்பட்டு அனாதையாய்க் கிடந்தது.

எதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள முனையாத எம் சமூகம், வடிந்த வெள்ளத்தோடு தன் வாடிக்கையைத் துவங்கிவிட்டது. ஓடிவந்த நீர் தேங்கித் தேங்கி, அழுத்தம் கூடி உடைப்பெடுத்து, உத்வேகத்தோடு ஓடி அக்கம் பக்கம் இருப்பதை தன் கை நீட்டி கபளீகரம் பண்ணியதை எத்தனை பேர் கற்பனை செய்து பார்க்கத் தயாராக இருந்து விடப்போகின்றனர். கொட்டிய வெள்ளமெல்லாம் பள்ளம் கண்ட பக்கம் ஓடவிடாமல் தடுத்ததில் அவ்வப்போது வசதி என நினைத்து, எளிது என நினைத்து, அழகு என நினைத்துப் பயன்படுத்தித் தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் பைகள் தான் என்பதை எத்தனை பேர் உணரப்போகிறார்கள்.













உணர மறுக்கும் உணர்ச்சியற்ற சமூகத்திற்கு முகத்தில் அடிக்கும் சாட்சியாய் வடிந்துபோன நொய்யல் நதி தன் இரு பக்கமும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது. ஒரு முறை பாருங்கள் அந்த அவலத்தை உயிர் நடுங்கும். ஆம் அடித்து வந்த வெள்ளத்தில் ஓரம் பாரம் ஒதுங்கிய பிளாஸ்டிக் குப்பைகளின் கொத்துக் கொத்தாக குவிந்து கிடக்கின்றன.

அவையெல்லாம் நாம் ஒருபோதும் தவிர்க்க முயலாமல், சற்றும் கூச்சமின்றிப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பைகள்தான். வாங்கிப் பயன்படுத்திவிட்டு மறுசுழற்சிக்கு அனுப்பும் யோக்கிதை இல்லாத சமூகத்தை, என்றாவது ஒரு நாள் வெகுண்டெழும் இயற்கையின் கூறுகள் மறுசுழற்சி செய்யத்தான் போகின்றன. மறுசுழற்சிக்கு ஆட்படும் போது, முன்பு இருந்தது போலவே மீளும் தகுதி சற்றும் இந்த மனிதச் சமூகத்திற்கு இல்லை என்பது இன்னொரு பெரிய இயற்கைப் பேரிடரின் பின்னால் வேண்டுமானால் புரியலாம்.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பதை இயற்கை ஆழமாய், வடுவாய் எழுதிவிட்டுச் செல்லும்போது அதை வாசிக்கும் வலிமை யாருக்கு இருந்துவிடப்போகிறது?

படங்கள் உதவி - யுவராஜ்

-0-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...