யுரேனிய ஊறுகாயும், ஹிரோஷிமா படமும் உங்கள் முகப்புப் படமா?


அணுவுலைக்கு ஆதரவு எனும் பெயரில் யுரேனியத்தை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு தின்றாலும் காலையில் கழிவரையில் சுகமாய் கழிக்க முடியும் என்பது போன்ற குரல்களைக் கேட்கையில் திகைப்பாக இருக்கின்றது. அதிலும் ஆச்சரியமாக, இணையத்தில் ஆங்காங்கே...... அணுகுண்டு போட்ட பிறகு..... ஹிரோஷிமா எப்படி மீண்டுவிட்டது தெரியுமா!?” என கதை சொல்வதை, வண்ண வண்ணப் படம் காட்டுவதை நினைக்க கசப்பான சிரிப்பே மிஞ்சுகிறது.... எந்த அடிப்படையில் ஜப்பானை இந்தியத் திருநாட்டோடு ஒப்பிடுகிறார்கள் எனத்தெரியவில்லை.புகுஷிமா விபத்தில் ”ஆனானப்பட்ட” ஜப்பனே தவித்த தவிப்பை வசதியாய் மறந்து, ஹிரோஷிமா மீண்டு வந்ததாகச் காட்டும் படங்களை காட்டுவோர்களிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லவேண்டிய பதில் ஒன்று இருக்கிறது. அது ஜப்பான், இது இந்தியா! அதிலும் அந்த ஆனானப்பட்ட எனும் வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றது. பொறுமையாய் யோசித்துப்பாருங்கள்!எங்கள் ஊரிலும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இன்றைய பொறியியல் துறைக்கும் கடும் சவாலைக் கொடுக்கும் வகையில், காவிரியின் மேற்கு கரையில் ஆற்றைவிட உயரமாய் இருக்கும் பகுதிக்கென்று  வெட்டிய / கட்டிய காலிங்கராயன் கால்வாய் இருக்கின்றது. வெறும் 20 ஆண்டுகளில் தோல் கழிவுகள், சாயக்கழிவுகள் மூலம் தீண்டத்தகாத தண்ணீரா மாற்றியதை தடுக்க மறந்த தலைமுறை நாம் என்பதையும், உடுத்தும் துணிக்குப் போடும் சாயக்கழிவுகளை ஒழுங்கு படுத்தத் தெரியாமல், ஒரு நதியை பலாத்காரம் செய்து சாகடித்த தலைமுறை நாம் என்பதையும் மல்லாந்து படுத்துக்கொண்டு நாமே காறித்துப்பிக் கொண்டு ஒப்புக்கொள்ளலாம்.

எங்கள் ஊர் பக்கத்திலும் திருப்பூர் என்ற ஊர் இருக்கிறது. அதனூடே நொய்யல் என்ற நதி ஓடியது... கவனிக்க ஓடியது.... அதன் இருகரைகளும் விவசாயத்தில் செழித்த வரலாறு உண்டு.... வரலாறு கிடக்கட்டும், இன்றைக்கு அதன் புவியியல் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ஹிரோஷிமா படம் போலாவே பருந்துப் பார்வையில் யாரேனும் ஒரு படம் பிடித்து, இந்திய அரசின் திறமையை வெளிக்காட்டுவார்கள் என சாயமேற்றப்பட்ட கலர் கலர் கனவுகளோடு காத்திருக்கிறேன்....தென்னையில் காய்க்கும் இளநீரில் சாயக்கழிவுகள் ஊடுருவி நாற்றம் அடிப்பதை தடுக்க வக்கற்ற அமைப்பில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தீர்கள் என்றால் உடன் வாருங்கள், ஒரு முறை சாயக்கழிவு நீரேற்றம் பெற்ற இளநீரைக் சுவைத்துவிட்டு வரலாம்.

போகும் தடமெங்கும் நிலத்தை மலடாக்கிய ஒரு நதியை சாவிலிருந்து மீட்க திராணியில்லாத, அதை இன்றளவும் முறைப்படுத்தத் தெரியாத அரசுதான், இன்றளவும் போபால் விஷவாயுக் கழிவுகளை அகற்றாத அரசுதான், பிளாஸ்டிக் கேரி பைகளால் ஊரே குப்பை மேடாக மாறிவருவதை தடுக்கத் தடுமாறும் அரசுதான், ஃபோபர்ஸ் தொடங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல் உட்பட எந்தவொரு பூதாகர ஊழலிலும் இதுவரை பெரிதாக நீதியை நிலை நாட்டாத அரசுதான், கனிமங்களை கணபதி அய்யர் பேக்கரி கணக்காக கை மாற்றி ஆயிரம் கோடி, லட்சம் கோடி என அழித்த அரசுதான் .....எதிர்காலத்தில் அணுவுலைக் கழிவுகளை திறம்படக் கையாளும் என்றும், அணுவுலைகளில் விபத்தே ஏற்படாமல் மந்திரம் போட்டு வைத்திருக்கும் என்றும், அப்படியே தப்பத்தவறி ஏற்பட்டாலும் உங்களையும் என்னையும் மிக நேர்மையாக காக்கும் என்ற மாய நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டேயிருக்க முனையலாம். ஆனால் அதை நம்புங்கள் என எல்லாரையும் வற்புறுத்துவதைத்தான் ஏற்கமுடியவில்லை.

விபத்துக்கான வாய்ப்பு எதில்தான் இல்லை, லாரி முதல் விமானம் வரை விபத்து நடந்துகொண்டேதான் இருக்கின்றது அதற்காக பயணத்தை நிறுத்திவிட்டோமா என அறிவார்ந்த கேள்வி விதைக்கும் அன்பர்களுக்கு... ”சாரி பாஸ் வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வாங்க!” எந்த ஒரு விபத்தும் அதில் சிக்கிய குடும்பங்களின் ஒரு தலைமுறையைத்தான் அழிக்கும். அணுவிபத்து எத்தனை தலைமுறையை அழிக்கும் என்று எவருக்குத்தெரியும்.

மீண்டும் சொல்கிறேன் ஹிரோஷிமா படத்தை முகப்பு படமாக வைக்கவிரும்புவோர் கூடவே நொய்யல் படத்தையும் இலவச இணைப்பாக வைத்துக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.

-

பொறுப்பி : படங்கள் இணையத்திலிருந்து

-0-

24 comments:

orukattan said...

I am supported of nuclear power, but this article makes me to think back. Real genuine thoughts!

Unknown said...

அருமை.....நச்..

Prabu Krishna said...

போபால் விசயத்தில் நம் அரசின் நேர்மையையும் பகிர்ந்து இருந்தால் அணு உலை ஆதரவாளர்கள் அருமையாக பதில் சொல்லுவார்கள் சார்.

vasu balaji said...

ரொம்ப நாளைக்கப்புறம் மிகச் சிறப்பானதொரு கட்டுரை.

Paleo God said...

அழிவு என்னும் சரியானதொரு பாதையை நோக்கி எல்லாத் தவறுகளையும் செலுத்திக்கொண்டிருக்கிறர்கள்.

dheva said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கதிர்....

சிந்திக்க நிறையவே இருக்கிறது...!

வாழ்த்துக்கள்....!

வேர்கள் said...

கதிர்
சரியான நேரத்தில் சரியான கோணத்தில் புரியவைத்திருக்கிறீர்கள்
ஆனால் இங்கு யாரும் தூங்கவில்லை
தூங்குவது மாதிரி நடிக்கிறார்கள்

ILA (a) இளா said...

ம்ம், சொன்னா, ராக்கெட் விட்டோமே,. அப்படின்னே திரும்ப கேட்பாங்க. அணுகுண்டு வெடிச்சிக் காட்டினோமே அப்படிம்பாங்க

ஸ்வர்ணரேக்கா said...

ரொம்ப ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க...

ஜப்பானையும் இந்தியாவையும் ஒப்பிடுகிறார்கள்... மடத்தனம்.. அவர்கள் பாதுகாப்பு எங்கே, நம் நாட்டின் அலட்சியம் எங்கே...

உங்கள் பதிவுகளிலேயே மிகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு இது என்றே சொல்லலாம்..

அதியா வீரக்குமார் said...

உங்கள் கோபம் நியாயமானது அண்ணா....

ஜாய்.. said...

nice article..

நாடோடி இலக்கியன் said...

சிறப்பான இடுகை.

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

நச் சென்று நடுமண்டையில் குட்டுகிறதானதொரு பதிவு

asIknowMe said...

Well written... Eye opening article...

ramsam said...

உண்மை! உண்மை!! நிதர்சணமான உண்மை.
ஆனால் ஆடக்குமுறை (corparate) நாட்டில். தெரிந்தே ஏதிர்காலத்தை செய்யும் கொலைக்கு நாமும் சாட்சிகள்

ramsam said...

உண்மை! உண்மை!! நிதர்சணமான உண்மை.
ஆனால் ஆடக்குமுறை (corparate) நாட்டில். தெரிந்தே ஏதிர்காலத்தை செய்யும் கொலைக்கு நாமும் சாட்சிகள்

சத்ரியன் said...

அண்ணே,

உங்களுக்கு விசயம் தெரியாதா? அணுஉலைய ஓடவெச்சி இந்தியாவ வல்லரசு ஆக்க போறாங்களாமாம்!
அணுஉலை இல்லாட்டி இந்தியா இருண்டுடுமாம்.

எவன் பொழப்பும், உசிரும் போனா இவிங்(ஹிரோஷிமா படம் காட்டறவன்)களுக்கு என்னா? அவன் ஊட்டுல ஏசி ஓடனும். அம்புட்டுதேன்.

CS. Mohan Kumar said...

அருமையான கட்டுரை கதிர். ஆனால் நாம் கையாலாகாமல் பார்த்து கொண்டு இருக்கிறோம்

YogAnand said...

vanakkam kathir unga blog-i regularaga vasikkiren. aanal pathil ezhuthuvathillai. kknpp pattriya en karuthugalai ezhutha theriyamal kumurikondirunden en kuralaaga neengal olithirukkireergal mikka nandri

Anbu said...

Good One Anna...

க.பாலாசி said...

செம கட்டுரை...

priyamudanprabu said...

Mmmm

Mahi_Granny said...

வாசிக்கிறவர்களிடம் தனித் தனியே கைபிடித்து சொல்வது போல் என்ன ஒரு எழுத்து. என்ன செய்யப் போகிறோம் என்பது தான் புரியவில்லை.

Techfreaks said...

நல்லதோர் இடுகை. என்ன செய்வது, சில தமிழக பத்திரிக்கைகள் இதற்கும் சாதி, மத அடையாளத்தை பூசி பெரும்பான்மையான தமிழக மக்களை இதை ஆதரிக்க சொல்கிறது....