”வாழ்க்கையில் அவனைப்போல்
ஒரு சுயநலம் பிடித்தவனைப் பார்க்கவே பார்க்க முடியாது” என ஒட்டுமொத்த கிராமத்தினரால்
முத்திரை குத்தப்பட்ட ஒருவரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். எல்லோரும் சொல்வதுபோல்
அவரின் செயல்பாடுகளை ‘சுயநலம்’ என்ற அடைப்புக்குறிக்குள் அடைப்பது சரியா என்ற சந்தேகமும்
எனக்குண்டு. மிக எளிய ஒரு குடும்பத்தின் தலைவன் அவர். கோவணத் துண்டு நீளத்துக்கு நீண்டு
கிடக்கும் நிலத்தில் கிணறுகூடக் கிடையாது. மழை பெய்தாலோ, அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டாலோ
மட்டும் விவசாயம் செய்யலாம். அவை இரண்டும் இல்லாத காலகட்டத்தில் அருகாமை தோட்டத்துக்காரர்
கருணை காட்டினால் காடுகள் தாண்டி தம் வயலுக்கு தண்ணீர் கொண்டு வந்து, வாடி வதங்கிக்கிடக்கும்
தென்னைகளைக் காப்பாற்றலாம் என்ற நிலைமை.
இறுக்கிக் கட்டிய கோவணத்தோடு
காலையிலும், மாலையிலும் பால் கொண்டு செல்வார். முடிந்தவரை கூலி வேலை அல்லது ஆட்களைத்
திரட்டிக் கொண்டு குத்தகை வேலைக்குச் செல்வார். அக்கம்பக்கக் கடைகளில் ஒற்றைப் பைசா
செலவழித்து எதையும் வாங்கிவிட மாட்டார். கடைகளில் அவர் டீ, காபி குடித்து யாரும் பார்த்ததில்லை.
சைக்கிள் டயர் தேய்ந்துவிட்டால், சைக்கிள் கடையில் பழைய டயரைக் கேட்டு டயர் மேல் டயர்
போட்டுக்கொண்டு மிதிக்கமுடியாமல் மிதித்து காடும் மேடும் திரிவார்.
தன் ஒரே ஒரு மகனை ஒருபோதும்
காடு கரைகளில் திரிய விட்டதில்லை. ”படுச்சு கரையேறிரு” என்பதுதான் அவரின் இடைவிடாத
வேண்டுதல். காலம் எல்லாவற்றையும் நேராக்கும், கலைத்துப்போடும் என்பதுபோல். அவரின் கனவை
நேர் செய்தது. மகன் பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்கி, புகழ்பெற்ற கல்லூரியில் மெரிட்
சீட் வாங்கி, அங்கு இங்கு என சின்னச்சின்ன வேலைகள் செய்து, பெங்களூரில் ஒரு பெண்ணைக்
காதலித்துத் திருமணமும் செய்து கொண்டு, ஒருநாள் வெளிநாட்டுக்குப் பறந்து போனான். என்ன
காரணமென்றே தெரியவில்லை…. அவன் ஆறு வருடங்களாக அந்தக் கிராமத்துக்கு வரவோ, பெற்றோர்களை
வந்து பார்க்கவோ, தான் இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைக்கவோ என்று எதையுமே செய்யவில்லை.
அப்பா அம்மாவிற்கு பணம் எதுவும் அனுப்பியதாகவும் தெரியவில்லை. எந்தப் பெரிய மாற்றங்களுமின்றி
அவரின் வாழ்க்கை அன்று போலவே ஓடிக்கொண்டிருக்கிறது.
மனித உறவுகளும், உறவுகள்
சார்ந்த வாழ்க்கையும் பொதுவாக மேம்பட்ட தியாகங்களின் மேல்தான் ஒவ்வொரு முறையும் கட்டமைக்கப்படுகிறது.
அந்தத் தியாகம் சரியாக உணரப்படாத இடங்களில், அது எந்தவித உறுதித்தன்மையும் ஏற்படுத்தாமல்,
மேலே கட்டமைக்கப்படுவதை குலையச் செய்துவிடுகின்றன, அல்லது கட்டமைப்பு தன் கனத்தைக்
கொண்டு தியாகத்தையே குலைத்துவிடுகின்றன.
பத்தேமாரி எனும் மலையாளத்
திரைப்படத்தில் சுமார் நாலேகால் நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய உருக்கமான இறுதிக்காட்சியில்
நாராயணன் எனும் கதாபாத்திரத்தின் மரணத்திற்குப் பிறகு தொலைக்காட்சியில் அவரின் நேர்காணல்
ஒன்று ஒளிபரப்பாகும்.
”வேலாயுதன் அண்ணன் பத்தேமாரியில்
(படகில்) ஏறி கோர்ஃபஹான் வந்து இறங்கினோம். அங்கே ஒரு சாயபு உதவியோடு சார்ஜா வந்தோம்.
சார்ஜாவில் இருந்து துபாய்க்கு நடந்து வந்தோம். உயர்ந்த கட்டிடங்கள் அப்போதுதான் எழும்பிக்கொண்டிருந்தன.
இப்போது காணும் பல கட்டிடங்களில் என் வியர்வைத் துளியும், கடின உழைப்பும் உண்டு. ’நம்மை
நேசிப்பபவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறோம்’ என நினைக்கும்போது சோர்வு வருவதில்லை.
நாம் அனுப்பும் காசு ஒரு தேவையை பூர்த்தி செய்கிறதென்பதே மிகுந்த மகிழ்ச்சியானது. எங்களில்
பலரும் மனதை நாட்டில் வைத்துவிட்டு உடலை மட்டும் இங்கு வைத்துக்கொண்டு வேலை செய்கிறவர்கள்.
என்ன வேலை, என்ன சம்பளம்
என மனைவி கூட அறிந்ததில்லை. எப்படிக் கஷ்டப்படுகிறோம் என்பதைச் சொல்வதில் வெட்கம் ஒன்றுமில்லை,
ஆனால் அவர்களுக்கு நம் கஷ்டத்தைச் சொல்ல வேண்டாமென்றுதான் சொல்லாமல் இருக்கிறோம். ஊருக்கு
பத்தாயிரம் அனுப்பும்போது, ’இருபதாயிரம் சம்பாதித்துவிட்டு, பத்தாயிரம் அனுப்புகிறார்கள்’
என்று அங்கிருப்பவர்கள் நினைக்கலாம். ஆனால் ஏழாயிரம் கிடைத்தாலும் மூன்றாயிரம் கடன்
வாங்கியும் அனுப்புவதுண்டு. ஒரு போதும் ’எனக்கு பலன் திரும்பக் கிடைக்கும்’ என்பதற்காக
உதவி செய்ததில்லை. அப்படி எதிர்பார்த்து கொடுப்பது அன்பின்பால் அல்ல, கடன் கொடுத்தல்.
பிறப்பு முதலே கடவுள் பல
சௌபாக்கியங்களைக் கொடுத்ததுண்டு. நேசம் மிகுந்த அம்மாவின் மகனாய் பிறந்தது, அன்பான
சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், எப்போதும் புரிந்துகொள்ளும் மனைவி, வாழ்க்கை முழுதும்
உடன் நிற்கும் நண்பன் என இவர்களை நினைக்கும்போது நான் எல்லா வளங்களையும் பெற்றதாகவே
நினைக்கிறேன்.
’எப்போதாவது பரிசுப் பொருட்களோடு
வரும் விருந்தினர்களை’ போல பிள்ளைகள் எங்களைக் கருதுவதுண்டு. பிள்ளைகளின் வயதொத்தவர்களைக்
காணும்போது, நமக்கு நம் பிள்ளைகளின் நினைவு வரும். அப்பா, அம்மா வயதில் இருப்பவர்களைக்
காணும்போது எத்தனை பிள்ளைகளுக்கு தங்களின் அப்பா, அம்மா நினைவுக்கு வருகின்றனர்?
ஒவ்வொருவரும் தம் மனதில்
நினைப்பதுபோல்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர். ’இவர் மகிழ்ச்சியோடு வாழ்கிறாரா, வருத்தத்தோடு
வாழ்கிறாரா’ என வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொல்ல
முடியாது. ’ஊரில் இருக்கும் குடும்பத்தின் அங்கமாய் நாம் இல்லையே’ என்று பல தருணங்களில்
நான் வருத்தப்பட்டதுண்டு. சகோதரன் ஸ்கூட்டரிலிருந்து விழுந்து அடிபட்டுக் கிடந்தபோது,
மனைவிக்கு தொண்டையில் புண் வந்து சாப்பிட முடியாமல் இருந்தபோது, மகனுக்கு மஞ்சள் காமாலை
வந்து படுக்கையில் இருந்தபோது அவர்களோடு உடன் இருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டதுண்டு.
அழுததுண்டு.
எனக்கு வயதாகிவிட்டதே என்று
கவலையில்லை, இனி குடும்பத்திற்கு தொடர்ந்து உழைக்கும் அளவிற்கு உடல்பலம் இல்லையே என்பதுதான்
கவலை.
உங்களைச் சுற்றியிருப்பவர்கள்
மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் காரணமாய் இருந்தால், பெற்ற அம்மாவும் அப்பாவும் மன நிம்மதியோடு
உறங்குவதற்கு நீங்கள் காரணமாய் இருந்தால் அதுவே வாழ்க்கையில் சாதித்ததாக கருதப்படும்.
மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாய் இருந்தோம் என்பதுதான் சாதனை. என் குடும்பம் பட்டியினிலிருந்து
மீண்டது, அப்பாவின் கடன்களை அடைத்தது, சகோதரிகளுக்கு திருமணம் செய்துகொடுத்தது, சகோதரனின்
தொழிலுக்கு உதவியது என இதெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு முழு வெற்றியாளன் தான்.
இனியொரு பிறப்பு உண்டெனில்,
இதே மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்; இதே பெற்றோர்களின் மகனாய், இதே சகோதரிகளின்
சகோதரனாய், இதே மனைவியின் கணவனாய், என் பிள்ளைகளின் தகப்பனாய், என் நண்பன் மொய்தீனின்
நண்பனாகவும் இன்னொரு பிறப்பு வேண்டும்” எனும் காட்சியோடு அந்தப் பேட்டியில் அவர் உருவம்
உறைய….காட்சி வேறொன்றோடு கலந்து தேய்ந்து மௌனிக்கிறது.
ஆட்களை கள்ளத்தனமாய் கொண்டு
சேர்க்கும் படகில் பயணப்பட்டு தன் இளமைக்காலத்தில் வளைகுடா நாட்டில் கால் வைத்து, ஐம்பது
ஆண்டுகள் வேலை செய்து ஏழ்மையிலிருந்து தன் குடும்பத்தை, உறவுகளை மீட்டெடுத்து அங்கேயே
இறந்தும்போகும் அந்த நாராயணன் கதாபாத்திரம், அதேபோன்று வாழும் ஆயிரமாயிரம் குடும்பங்களின்
மனதில் பெரும் புயலை உருவாக்கியிருக்கும்.
தன்னுடைய இளமை, மகிழ்ச்சி,
உறவுகளின் அண்மையெனும் சுகம் உட்பட எல்லாவற்றையும் துறந்து வெளிநாடுகளில், தனித்து
வாழும் பல நண்பர்களை அறிவேன். குடும்பத்தின் கடன் சுமையைத் தீர்க்க வேலைக்காக வெளிநாட்டிற்கு,
பச்சைப் பிள்ளைகளை விட்டுப்பிரிந்து நான்கைந்து ஆண்டுகள் சென்றிருந்த சில அம்மாக்களையும்
அறிவேன்.
சுமார் இருபது ஆண்டுகள் கணவனும்
மனைவியும் போராட்டக் களத்தில் போராளிகளாக நின்ற ஒரு பூமியிலிருந்து, தம் வாழ்வை பூஜ்யத்திலிருந்து
துவங்கவேண்டிய நிலையில் வேலைக்கென தேடி வெளிநாடு செல்கிறார் கணவர். சில ஆண்டுகள் பணியாற்றி
ஊர் திரும்பியவர் இருபது ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டிருந்த தம் பெற்றோர், சகோதரிகளுக்கு
தான் சம்பாதித்த முழுவதையும் கொடுத்துவிட்டு குடும்பத்திற்குத் திரும்புகிறார். வாழ்க்கை
மீண்டும் அதே பூஜ்யத்திலிருந்து தொடங்கப்படுகிறது.
பொதுவாக வெளிநாடு என்பது
காசு கொழிக்கும் களமாகவே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒருவகையில் அது உண்மையும் கூட.
குறிப்பிட்ட சில நாடுகளின் வாழ்க்கை நேர்த்தி பிடித்துப்போனாலும், யாருக்காக உழைக்கின்றோமோ
அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் எத்தனை கொடிது!.
இந்த முரணுக்குள் புதைந்து கிடக்கும் தியாகம்தான் பல்லாயிரம் குடும்பங்களை மீட்டெடுத்து
குனிவிலிருந்து நிமிர வைத்திருக்கின்றது. இந்த
தியாகங்களைச் செய்பவர்களுக்கு தியாகங்களுக்கான பலன் தமக்கு உணர்த்தப்பட வேண்டும் என்பதைவிட,
தியாகங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படாமலும், வேறு வழிகளில் அது சிதைக்கப்படாமலும்
இருந்தாலே போதுமெனத் தோன்றுகிறது.
எதிலும் ’இதுதான் சரி’, ’இதுதான்
தவறு’ என்று விரல் சுட்ட முடிவதில்லை. அது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே
இருக்கின்றது. அவரவர் பக்கத்தில் சிறிதாகவோ, பெரிதாகவோ ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும்.
இன்னும் சில இடங்களில் அநியாயமும்கூட இருக்கலாம். மனிதர்கள் அப்படித்தான்’ மனித வாழ்க்கையும்
அப்படியானதுதான். தியாகங்களால் கட்டமைக்கப்படும் இந்த வாழ்வில், தியாகங்கள் குறைந்தபட்சம்
அதற்கான பொருத்தமான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுதல் மட்டுமே நலம்!
7 comments:
Arumai ,Nanbare
Well said, I was remembering my parents while reading the content.
சில வேளைகளில் தியாகங்கள் அங்கீகரிக்கப்படாமல்போவதும் உண்டு. முடிந்தவரையில் வெளியூரில் உழைத்து, குடும்பத்தைக் கரை சேர்த்துவிட்டு, தமது அந்திம காலத்தில் ஊருக்குத் திரும்பி, குடும்பத்திலேயே ஒரு அன்னியனைப்போல் நடத்தப்பட்டு, அந்த சோகத்திலேயே மாண்டுபோகும் கொடுமைகளும் நிகழ்கின்றன.
அருமை.....
பத்தேமாரி படம் பார்த்து விட்டு, மனம் கனத்துப் போய், அன்று இரவு உறக்கம் தொலைத்து, அழுது கொண்டிருந்தேன்...உங்கள் எழுத்தால், மீண்டும் படம் பார்த்த உணர்வு கதிர்...
விழிகள் நிரம்புகின்றன
மனம் வெதும்புகிறது
என் சுட்டுவிரல் என்னை நோக்கி த் திரும்பி சுய அலசல் மேற்கு கொள்கிறது..
மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கின்றேன். என்னை போல் வெளிநாட்டில் வாழ்க்கையை உடலால் மட்டுமே வாழும் அன்பர்களுக்கு அருமையான பதிவு இது. உங்கள் எழுத்துப் பணி மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
Post a Comment