நான்கு புத்தகங்கள்
வெளியாகியிருந்தாலும், அவை வெளியான தருணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு சரி.
தனியே அறிமுகக் கூட்டம், விமர்சனக் கூட்டம் என எதையும் நான்
நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் கடந்த ஆண்டிலிருந்தே, தஞ்சை
எழுத்தாளி கவிஞர் கிருஷ்ணப்ரியா, புத்தகங்களுக்கு அறிமுகம்
மற்றும் விமர்சனக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென
தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
வேட்கையோடு விளையாடு வெளியானதும், சில பிரதிகள் அனுப்பச் சொன்னார், அத்தோடு எப்படியாச்சும் நூல்களுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துவிட வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
அதற்கான நாளும் அமைந்தது. எப்படியும் தஞ்சை வந்தால் ஒரு நாள் ஆகும் என்பதையொட்டி, அந்த நாளை பயன்படுத்தும் விதமாக, திருவையாறு அரசர் கல்லூரி நிகழ்ச்சியை, திருவையாறு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தார்.
நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம்
செய்பவர்கள் விபரங்களோடு அழைப்பிதழ் பகிரப்பட்டபோது ஆச்சரியம் மிகுந்தது.
எழுத்தாளர், பேராசிரியர், ஓய்வு பெற்ற
அதிகாரி, இலக்கிய ஆய்வாளர் என வித்தியாசமான ஆளுமைகள்.
அவர்கள் யாவரும் நான் அதுவரை அறிந்திராதவர்கள்.
அந்த நாளும் (27.08.2019), நிகழ்வின்
தருணமும் வந்தது. காலை அரசர் கல்லூரி நிகழ்வு மற்றும் மதியம்
இன்னொரு உரை முடித்து பரபரப்பு சற்றும் குறையாமல் மாலை நூல்
அறிமுகக் கூட்ட அரங்கிற்கு வந்தோம். நிகழ்வினை திருவையாறு இலக்கிய தடம் பாரதி இயக்கமும், தஞ்சை
எழுத்தாளி இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்தின. கவிதையாய் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் சிறிய அரங்கம். பெரிதும் முனைப்பெடுத்து
கூட்டத்திற்கு அழைத்திருந்தன் பலன் தெரிந்தது. அரங்கில் ஏறத்தாழ அனைத்து
இருக்கைகளும் நிரம்பியிருந்தன. அரசர் கல்லூரி மாணவ, மாணவியர்களும் பங்கெடுத்திருந்தனர்.
விழா நேர்த்தியாகத் தொடங்கியது.
முதலில் பேராசிரியர் கண்ணம்மாள் மனோகரன் என்னுடைய முதல் புத்தகமான ”கிளையிலிருந்து வேர் வரை” குறித்து மிக விரிவாகப் பேசினார். அந்தப் புத்தகம் ஐந்தாறு வருடங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அவர் ஒவ்வொரு கட்டுரை குறித்துப் பேசும்போது, அந்தந்த காலத்திற்குள் நான் மூழ்கியெழும் வாய்ப்பாக அமைந்தது. எல்லாவற்றையும் ஒரே நேர்கோட்டில் அடுக்கிப் பாராட்டியதோடு அவர் முத்தாய்ப்பாக வைத்த விமர்சனம் சார்ந்த கேள்விகள் முழுக்க ஏற்புடையதாக இருந்தன.
இரண்டாவதாக, இலக்கிய ஆய்வாளர் தமிழ்
இலக்கியா, ”பெயரிடப்படாத புத்தகம்” நூலை அறிமுகப்படுத்தி விமர்சித்தார். 2017
ஜனவரியில் வெளியான புத்தகம், இடையில் முதல் பதிப்பு தீர்ந்துபோய், ஏறத்தாழ ஒன்னரை
வருடங்கள் கழித்து இரண்டாம் பதிப்பைக் கண்டிக்கும் நூல். அது தனக்கான இடத்தை
இனிதான் அடையும் என நான் காத்திருக்கும் புத்தகமும்கூட. முழுமையான தன் வாசிப்பு
அனுபவத்தை மிக ஆழமாக தமிழ் இலக்கியா எடுத்துரைத்தார். கூடவே சில கேள்விகளையும்
இட்டுச் சென்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது.
மூன்றாவதாக, ”உறவெனும் திரைக்கதை”
நூலை அறிமுகப்படுத்தி விமர்சிக்க எழுத்தாளர் புலியூர் முருகேசன் வந்தார். மாற்று மொழித்திரைப்படங்கள்
குறித்த தம் அனுபவம், ஒருகாலத்திய எழுத்தாளர்களின் அனுபவம் ஆகியவற்றில் தொடங்கி, டிபார்ச்சர்ஸ்,
ஸ்பிரிட், கம்மாட்டிப்பாடம் ஆகிய படங்களுக்கான கட்டுரைகளை முன் வைத்து வலிமையானதொரு
அறிமுகத்தை வைத்தார். அத்தோடு டிபார்ச்சர்ஸ் படக் கட்டுரையில் மரணத்திற்கு பிறகான நமது
மற்றும் ஜப்பானியர்கள் நடைமுறைகளை அவர் சுட்டிக்காட்டியவிதம் ஆழமாகவே யோசிக்க வைத்தது.
நான்காவதாக, திரு.குப்பு
வீரமணி அவர்கள் ”வேட்கையோடு விளையாடு” குறித்து பேச வந்தார். திருவையாறு நிகழ்ச்சி
தீர்மானிக்கப்பட்டதிலிருந்து என்னோடு தொடர்பில் இருப்பவர். முதல் நாளிலிருந்து என்னை
உபசரித்து பார்த்துக் கொண்டவர். மிக அற்புதமாக ஊக்கமூட்டக்கூடியவர். நேரம் கருதி சுருக்கமாக
அறிமுகம் செய்தாலும், அதில் அன்பின் கனம் அதிகம்.
நிறைவாக... அடங்காத ஆச்சரியமும்,
மகிழ்வும், நெகிழ்வும் சூழ்ந்த மனநிலையோடு ஏற்புரை வழங்கச் சென்றேன். வைக்கப்பட்ட விமர்சனங்கள்
மற்றும் கேள்விகளையொட்டி ஏற்புரையை அமைத்துக் கொண்டேன். விமர்சனங்களை மறுத்துப் பேச
எதும் இல்லை. பிறிதொரு திசையிலிருந்து வரும் பார்வைகளை, அந்த பிறிதொரு திசையிலிருந்து
பார்க்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவன். எல்லாமே அனுபவங்கள் தான்.
நிறைவாக நன்றியுரை நிகழ்த்த
வந்த திருவையாறு தடம் இலக்கிய அமைப்பின் செயலாளர் மா.குணா ரஞ்சன் மிகுந்த அன்பிற்குரியவர்.
ஓர் இரவு முழுவதும் என்னைக் குறித்து இணையத்தில் தேடி, யூட்யூப் காணொளிகளைப் பார்த்து
வைத்திருந்தார். காலை அரசர் கல்லூரி நிகழ்வில் மிக அழகான படங்கள் பலவற்றை எடுத்திருந்தார்.
மதியம் அரசர் கல்லூரி நிகழ்வில் நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார். அதில் ஒரு மாயம்
செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை, மாலை விழாவில் அந்தப்
படத்தை அழகிய நினைவுப்பரிசாக மாற்றி, வழங்கி பெருமைப்படுத்தினார்.
முன்பின் அறிமுகமில்லாத நிலையிலும்,
எழுத்தாளி அமைப்பின் நிகழ்வு என்பதற்காக தமக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை ஆழ்ந்து வாசித்து,
அதன் நிறைகுறைகளை சமநிலை மனதோடு நோக்கி, அவற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைத்த பேராசிரியர்
கண்ணம்மாள், தமிழ் இலக்கியா, எழுத்தாளர் புலியூர் முருகேசன், Rtn. குப்பு வீரமணி ஆகியோருக்கு
மனம் நிறைந்த நன்றிகள். அதற்காக அவர்கள் ஒதுக்கிய நேரம் மற்றும் உழைப்பிற்கு எளிதாகவெல்லாம்
ஈடு செய்ய முடியாது.
அடுத்த நாள் கரூரில் நிகழ்ச்சி
இருப்பதால், விழா முடிந்ததும் உடனடியாகப் புறப்பட முனைந்தபோது பேராசிரியர் கண்ணம்மாள்
மனோகரன் லேசான தயகத்தோடு அணுகினார். என்னங்க எனக் கேட்க, ஈரோட்டில் இருக்கும் கோதை
அவர்களை தன்னுடைய வகுப்புத் தோழி என்று கூறி, அவர் திருவையாறு புகழ் அசோகா இனிப்பினை
வாங்கித் தருமாறு கூறியதாகச் சொல்லி, ஒரு பருத்த பையை நீட்டினார். திருவையாறு அசோகா
மற்றும் அல்வா இளஞ்சூடாய் அன்பைப்போலவே கையில் கனக்கத் தொடங்கியது.
நிறைவாக...
இலக்கியக் கூட்டத்தை நடத்துவது
எத்தனை கடினமானது என்பதை நடத்திப்பார்த்த அனைவரும் அறிந்ததே. எழுத்தாளி அமைப்பின் மூலம்
தஞ்சையில் இடைவிடாது பெரும் முனைப்போடு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருபவர் கவிஞர்.
கிருஷ்ணப்ரியா. இரண்டுமுறை சில நிமிட நேர சந்திப்பு என்றாலும், அதிகம் உரையாடியதில்லை.
ஆயினும் என்னுடைய புத்தகங்களை எழுத்தாளி அமைப்பில் மேடையேற்றிவிட வேண்டுமென தீர்க்கமாய் திட்டமிட்டு
ஏற்பாடுகள் செய்த கவிஞர் கிருஷ்ணப்ரியா அவர்களுக்கே, நான் அன்று அடைந்த அனைத்து மகிழ்ச்சிகளும்
சென்று சேரும். நிகழ்வு நடந்த தினம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், தம் கணவரோடு
கலந்து கொண்டு பங்கெடுத்த நட்பிற்கு கூடுதல் ப்ரியங்களும் நன்றிகளும்.
1 comment:
மகிழ்ச்சி. வாழ்த்துகள்!
Post a Comment