”கனவுகள் நனவாகும் தருணம் வெகு அழகானது”
ஜனவரி மாதத்தின் பிற்பாதி மிகக் கடினமான நாட்களைக்
கொண்டிருந்தது. வாழ்நாளின் மிகச் சோம்பலான நாட்களை நான் கடந்து கொண்டிருந்தேன். இந்த
மாதத்தைக் எப்படியாவது கடந்துவிட்டால் போதும் என்ற சூழலில் இருந்தபோதுதான் அனிதாவிடமிருந்து
அழைப்பொன்று வந்தது.
”ஷானவாஸ்க்கு புத்தகம் ஒன்னு அர்ஜெண்டா ப்ரிண்ட்
பண்ணனுமாம்… முடியுமா கதிர்!?”
2013ல் சிங்கப்பூர் சென்றபோது பேச்சுவாக்கில்
அச்சிடுதல் குறித்து பேசியிருந்தோம். அதன்பின் புத்தகம் அச்சிடுதல் குறித்து எப்போதாவது
பேசுவதுண்டு ஆனால் அதைச் செயல்படுத்துவது குறித்து கவனமேதுவும் கொண்டிருக்கவில்லை.
“ஓ தாராளமா செய்யலாமே”
அது கேள்விக்கான பதிலாக இருந்தாலும், வரும்போது
பார்த்துக்கொள்ளலாம் எனும் மனநிலைதான். ஜனவரி இறுதியில் ஆரம்பித்த என் தனிப்பட்ட பயணங்கள்,
அடுத்த பதினைந்து நாட்களை மிகக் கடினமாக்கியிருந்தது. பிப்ரவரி 10ம் தேதி மின்மடலொன்றில்
ஒரு புத்தகத்திற்கானவை வேர்ட் ஃபைல் வடிவில் வந்தடைந்தன. கூடவே ஒரு தகவலும் வந்தது.
மார்ச் 7ம் தேதி புத்தக வெளியீடு. 7ம் தேதி வெளியீடு என்றால் 4 அல்லது 5 தேதிக்குள்
முடித்து அனுப்ப வேண்டும் என்பது புரிந்தது. பிப்ரவரி 28 நாட்கள் என்பதால் மொத்தம்
இருப்பவை 23 நாட்கள் என்பதும், அதற்குள் முடித்துவிடலாம் என நினைக்கையில், வந்த ஃபைல்
ஷானவாஸ் அவர்களுடையதல்ல, எழுத்தாளர் சித்ரா ராமேஷ் அவர்களுடைய ”பறவைப்பூங்கா”. இன்னும்
இரண்டு புத்தகங்கள் வரும் மொத்தம் 3 அல்லது 4 புத்தகங்கள், அனைத்தும் 7ம் தேதி வெளியீடு
என்று கூறப்பட்டது.
வேலை என்பது இப்போது ’சவாலாக’ மாறுவது தெரிந்தது.
ஒன்றை ஒப்புக்கொண்ட பிறகு உடன் வரும் இன்னொன்றை எப்படி மறுதலிப்பதெனத் தெரியவில்லை.
அனிதாவிடமிருந்து லேசான சந்தேகத்தோடு ஒரு கேள்வி ஒலி(ளி)த்துக்கொண்டே இருந்தது “எப்படியாச்சும்
முடிச்சுடலாம்ல கதிர்!?”. நண்பனை நம்பி அங்கு வாக்குறுதி கொடுத்துவிட்ட சிரமம் தெரிந்தது.
அதுவும் எனக்குப் புரிந்தது.
அடுத்ததாக ஆமருவி தேவநாதன் அவர்களின் “பழைய
கணக்கு” வந்தது. இரண்டையும் ஓரளவு முடித்து நிமிரும்போது, எம்.கே.குமார் தொகுத்த ”நதிமிசை
நகரும் கூழாங்கற்கள்” கவிதைத் தொகுப்பு வந்தது. நாட்களை எண்ணிக்கொண்டே ஒவ்வொன்றையும்
முடித்து, பிழை திருத்த அனுப்பி, அட்டைப் படம் அனுப்பி, மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தோம்.
பறவைப் பூங்கா, பழைய கணக்கு புத்தகங்களை இறுதி செய்து 22ம் தேதி அச்சுக்கு அனுப்பியாகிவிட்டது.
முதன் முதலில் “ஷானவாஸ்க்கு புத்தகம் ஒன்னு அர்ஜெண்டா ப்ரிண்ட் பண்ணனுமாம்… முடியுமா”
எனக் கேட்டு ஆரம்பித்த ஷானவாஸ் அவர்களின் புத்தகத்திற்கான படைப்புகள் மட்டும் வந்து
சேரவில்லை.
”எத்தனை கட்டுரைகள்?”
”தெரியாது!”
”எத்தனை பக்கங்கள்?”
“தெரியாது!”
”எப்பதான் வேலையை ஆரம்பிக்க முடியும்?”
”தெரியாது. ஆனால் எப்படியாச்சும் அதுவும்
7ம் தேதி வெளியீட்டிற்கு வேண்டும்!”
”நதிமிசை நகரும் கூழாங்கற்கள்” புத்தக வேலைகளை
இறுதி செய்து, 25ம் தேதி அச்சுக்கு அனுப்பும் போது, ஷானவாஸ் அவர்களின் ”நனவு தேசம்”
கட்டுரைகள் பத்து பத்தாக வந்து சேர ஆரம்பித்தன. பக்கங்கள் நீண்டு கொண்டேயிருந்தன. இரவு
பகல் பாராது வேலை செய்ய வேண்டி வந்தது.
காலம்காலமாய் இப்படி வேலை செய்வது எனக்கு பழக்கப்பட்டதெனினும்,
ஷானவாஸ் அவர்களுக்கு உதவியாய் இருந்து, ஒவ்வொன்றையும் வாங்கி, எடிட் செய்து சேர்த்து
அனுப்பும் அனிதாவிற்கு மிகப் புதிதான, மிகக் கடினமான பணியாக இருப்பதை உணர்ந்தேன். ஆனாலும்
குறித்த தேதிக்குள் முடிக்கவேண்டுமென்ற அழுத்தம் கூடுதல் கடுமையைக் கொடுத்தது எனக்கு.
குறிப்பிட்ட அந்த சில நாட்களில், வாழ்நாளில் உணராத கடுமையை நான் என்னிடம் உணர்ந்தேன்.
அதை அப்படியே எதிர்ப்படுபவர்களிடமும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தேன். ’நனவு தேசம்’
புத்தகத்தின் வேலைகளை முடித்து, 28ம் தேதி அச்சுக்கு அனுப்பிவிட்டு அட்டை வேலைகளை இறுதி
செய்யும்போது, நனவு தேசத்தில் கொஞ்சம் சேர்க்கை தேவையிருந்தது. முதல் 16 பக்கங்களின்
அச்சுப் பணியை நிறுத்தி, மீதியைத் தொடரச் சொல்லி, மார்ச் 2ம் தேதி மதியம் மாற்றம் செய்த
முதல் 16 பக்கங்களை அச்சுக்கு அனுப்பி, அட்டைகளையும் அன்று மாலையே அனுப்பிவிட்டு, சற்றே
ஆசுவாசப்பட்ட மனநிலையில் எப்படியாவது தலா 50 புத்தகங்களேனும் தயாரித்துவிட வேண்டுமெனக்
காத்திருந்தோம்.
உழைப்பும், நம்பிக்கையும் வீண் போகவில்லை.
ஐந்தாம் தேதி மாலை, ஒவ்வொன்றிலும் தலா நூறு புத்தகங்கள் வந்தடைந்தன.
அப்போது வந்த நண்பர்
மேசைமேல் இருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு, ”அண்ணா.. நீங்க ப்ரிண்ட் பண்ணினதா!?”
என்றார். ஒவ்வொன்றாய் புரட்டிக்கொண்டே, நனவு தேசம் புத்தகத்தின் ஏதோ சில பக்கங்களில்
நிலைகுத்திக் கடந்தார். “இது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமாட்ருங்ளே!?” என்றார்.
இதில் சிறப்பென்னவென்றால் நானறிந்த வரையில் அவர் அவ்வளவாக புத்தகம் வாசிக்காத ஒருவர்.
ஒரு சரியான புத்தகத்திற்குத்தான் கூடுதலாய் சில சொட்டுகள் வியர்வையும், கோபத்தில் சில சொற்களையும் உதிர்த்திருந்திருக்கிறேன் எனப் புரிந்தது.
ஒரு சரியான புத்தகத்திற்குத்தான் கூடுதலாய் சில சொட்டுகள் வியர்வையும், கோபத்தில் சில சொற்களையும் உதிர்த்திருந்திருக்கிறேன் எனப் புரிந்தது.
...... தொடரும்
-
மேலும் வாசிக்க..
சிங்கப்பூர் பயணம் - 2
சிங்கப்பூர் பயணம் - 3
சிங்கப்பூர் பயணம் - 4
4 comments:
தலைப்பு அசத்தல்.அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.
புத்தகங்களின் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளன.
அனைவருக்கும் வாழ்த்துகள்!
Nice!
சிங்கப்பூர் பயணம் - 1
”கனவுகள் நனவாகும் தருணம் வெகு அழகானது”
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு Erode Kathir சார்.
Post a Comment