உட்லண்ட்ஸ் நூலகத்தின் அந்த சரிவான அரங்கம்
அமைதியாய்க் காத்திருந்தது. இதுவரையிலான எல்லா நிகழ்வுகளுக்கும், உரைகளுக்கும் சாட்சியமாய்
அந்த அமைதி தென்பட்டது. வாசகர் வட்ட தோழமைகள் அங்குமிங்குமாய் நிகழ்வின் துவக்கத்திற்காக
இயங்கிக்கொண்டிருந்தனர். பொதுவாக எந்த ஒரு நிகழ்வும், துவக்கப் புள்ளி வரைதான் அழுத்தமும்,
அலை பாய்ச்சலும், பதட்டமும், நெருக்கடியும். துவங்கிய நொடியிலிருந்து ஆற்றில் விழுந்த
மழைத்துளிபோல அதன் போக்கில், அது செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றுவிடும்.
முன் வரிசையில் அமர வைக்கப்பட்டேன். தெரிந்த
நண்பர்கள் ஒவ்வொருவராய் வந்து ஆங்காங்கே அமரத் தொடங்கினர். சிலரை நான் அடையாளம் கண்டு
கொண்டேன். பலர் அடையாளம் கண்டு பேசினார்கள்.
ஒரு நிறுவன ஒழுங்கோடு நிகழ்ச்சி கச்சிதமாகத்
துவங்கியது. நேர நிர்வாகத்தில் உறுதியாக இருப்பார்கள் என முன்பே எனக்கு பல வகைகளில்
உணர்த்தப்பட்டிருந்தவாறே நிகழத் தொடங்கியது.
அழகுநிலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளருக்கான ஆளுமையும், நளினமும் அவருக்கு மிகப் பெரிய பலம். மாணவி ஒருவரின் இறை
வணக்கம், மாணவிகளின் நடனம், அனிதாவின் வரவேற்புரை, சித்ரா ரமேஷின் வாசகர் வட்ட நிகழ்வுக்
குறிப்புகள், புத்தக அறிமுகங்கள் என ஒவ்வொன்றாய் அதனதனன் அளவுக்குள் நேர்த்தியாக நிறைவேறின.
புத்தக வெளியீடுகள், நினைவுப் பரிசுகள் என எல்லாமே கச்சிதம். இது போன்ற கச்சிதமான விழாக்களை
நாங்களும் பலமுறை நடத்தியுள்ளதால், ஒவ்வொன்றையும் அதன் இயல்போடும் நேர்த்தியோடும் பொருத்திப்
பார்த்துக்கொண்டேன். நேரம் அதிகம் எடுத்துக்கொண்டவரை அழகு நிலா கையாண்ட விதம் சுவாரஸ்யத்துக்குரியது.
புத்தக அறிமுகங்களுக்கு பிறகு, புத்தக விற்பனைக்காக
மேடை ஒத்திவைக்கப்பட்டது ஒரு நல்ல செயல் எனப்பட்டது. பொதுவாக விழாவின் இடையில் இடைவெளி
விடுதல், தொய்வை ஏற்படுத்தும் என்பது நான் கருதியிருந்த ஒன்று. ஆனால், நிகழ்வின் முக்கிய
நோக்கத்தில் குறிப்பிடத்தக்கது புத்தக வெளியீடுகள் எனும்போது அதற்கான நேரம் ஒதுக்கியது
நான் கற்றுக்கொண்ட ஒரு செயல். இடைவெளிக்குப் பிறகு வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டேன்.
படைப்பாளிகள் குறித்த ஒரு சிறுகவிதையோடு துவங்கி,
ஒவ்வொருவருடைய புத்தகங்களின் உள்ளடக்கங்களை நானறிந்த வரையில் பாராட்டி, ஷானவாஸ் புத்தகத்தை
படிக்க ஆவல் கொண்ட நண்பன் குறித்த சம்பவத்தில் நிறுத்தி… ஆழ்கடலையும், அந்த உப்புக்காற்றையும்,
அடர் மேகங்களையும் கடந்து வந்திருப்பது, வழங்கப்படும் 600 நொடிகளுக்குள் வாழ்த்துரையாற்றிட
மட்டுமே என்பதாக இல்லாமல், சற்றே அவர்கள் மனதோடு உரையாட வந்திருப்பதையும் சொன்னேன்.
அங்கு சென்றதிலிருந்து அண்ணா, தம்பி, மாப்ள,
நண்பா, சார் என அவரவருக்குப் பிரியப்பட்ட மாதிரி அழைத்த நட்புகளிடமிருந்தது, இவர் ஃபேஸ்புக்
நண்பர், வலைப்பதிவர், எழுதுகிறவர் என்பதையெல்லாம் கடந்து, தம் மண்ணிலிருந்து, தம் மண்
வாசனையை, தம் வட்டார மொழியை, தாம் சுவாசித்த காற்றை சுமந்து வந்திருக்கிறவர் என்பதாகவே
இருந்ததாய் நான் உணர்ந்தேன்.
சிங்கப்பூரென்றால் ஒரு சுற்றுலா தளம், விதிகள்
கடுமையானவை, சுத்தமாக இருக்கும் என்பதோடு, வருமானத்தையும், செலவையும் 45 ரூபாயால் பெருக்கி
அவரவர் நிலைக்கேற்ப பெருமிதமும், பொறாமையும் கொள்ளும் ஒரு நாடாகவே பெரும்பாலும் அறிமுகப்படுத்தப்
பட்டிருக்கிறது. அத்தோடு சென்னையை சிங்கப்பூராக்குகிறேன் என அரசியல்வாதிகளும், எங்கோ
விளைந்துகொண்டிருந்த நிலத்தை விலை நிலமாக்கி அதற்கு சிங்கப்பூர் சிட்டி எனப் பெயர்
வைத்த வியாபாரிகளும் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் என்பது வேறொரு தனிக்கதை.
உண்மையான சிங்கப்பூரை நமக்கு அடையாளப்படுத்த
வேண்டிய கடமை அங்கிருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் மிக முக்கியமாய் இருக்கின்றது.
நானெல்லாம் எழுத வந்த காலத்தில் வலையுலகத்தை ஆளுமையோடு ஆண்டு கொண்டிருந்த பல வலைப்பதிவர்கள்
சமீப காலங்களில் எழுதுவதில்லை என்ற ஆதங்கம் எப்போதுமுண்டு. எழுத்தாளன் செத்துவிட்டதாக
அறிவித்த எழுத்தாளரைச் சந்தித்தபோதும்கூட, அவரே முன்பு கூறியிருந்ததை வைத்து, அவர்
இன்னும் எழுத வேண்டிய பதினைந்து நாவல்களின் கடன் மிச்சமிருப்பதாகச் சொன்னதை நினைவு
கூர்ந்தேன். அதேபோல் ஒவ்வொரு பதிவருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும், வாசகருக்கும்
தாம் எழுதவேண்டிய அளவுக்கான பக்கங்கள் எழுதப்படத் தயாராகவே இருக்கின்றன, அவர்கள் எழுத
வேண்டியது மட்டுமே அப்போது அவசியமாய் இருக்கிறதென்பதைச் சொன்னேன்.
ஆயிரம் சொற்கள் எழுதி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத
நிலையில், இரண்டு வரி நிலைத்தகவலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திட முடியும் என்பதை,
நான் சமீபத்தில் தந்தைக்கும் மகளுக்குமான ஒரு நிகழ்வினை, ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாய்
எழுதியதையும், அதன் விளைவுகளையும் கூறி, உரை நிறைவு செய்து இறங்கினேன்.
சிறப்புரையாற்றிய எழுத்தாளர் ஜோ.டி.க்ரூஸ்,
நான் இறுதியாகச் சொன்ன அந்த குழந்தை உதாரணத்தை மிக அழகாக மீனவர்கள், அரசு குறித்து
பொருத்தி இரண்டு முறை பேசினார். ஆளுமையும், உடல் மொழியுமாய் மிகச் சிறப்பாகப் பேசிய
ஜோ.டி.க்ரூஸ், உரையின் நிறைவில் கேள்வி கேளுங்கள் என்றார். உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும்
என்ற ரீதியில் எழுந்த கேள்விகள் கண்டு ஆச்சரியமாய் இருந்ததைவிட, அயர்ச்சியாய் இருந்தது.
சில கேள்விகள் சவாலாய் அமைந்தன.
அன்பிற்குரிய ஏ.பி.ராமன் என்னருகில் இருந்தார்.
ஒரு பத்திரிக்கையாளருக்கே உரிய கவனத்தோடு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த
நாள் அது அழகியதொரு பகிர்வாக வந்தபோது, குறிப்பேட்டில் சேகரித்த கிறுக்கல்கள் இத்தனை
அழகாய் பூக்குமா என ஆச்சரியப்பட்டேன்.
2008ல் நான் முதன் முதலில் பதிவுலகத்திற்கு
வந்திருந்தபோது, பதிவுலகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நண்பர்கள் கோவி.கண்ணன், குழலி
புருஷோத்தமன், வெட்டிக்காடு ரவிச்சந்திரன், கே.வி.ஆர், சிங்கைநாதன், தம்பிகள் முஸ்தபா
& வெற்றிக்கதிரவன் ஆகிய மூத்தபதிவர்களின் வருகை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். அவர்களில்
கே.வி.ராஜாவை மட்டும் முதன்முறையாக சந்தித்தேன். கே.வி.ஆருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது
என்பதற்கு, தனிப்பட்ட காரணமும் உண்டு.
ஹரிகிருஷ்ணன், ஆமருவி தேவநாதன், எம்.கே.குமார்,
அபிராமி. பழனியப்பன், முனைவர்.தின்னப்பன், புஷ்பலதா நாயுடு, தினமலர் புருஷோத்தமன்,
நிர்மலா, அமல் ஆனந்த், தியாக ரமேஷ், அன்வர், சரவணன், முத்துக்குமார், நசீர், அதியன்,
ராம் சந்தானம், லலிதா சுந்தர், ஆறுமுகம், டாம் சண்முகம், கருணாகரசு, கண்ணன், பனசை நடராஜன்,
ரமேஷ், ஹாஜா, சசிக்குமார் என அன்பு ததும்பும் பலரை ஒரே இடத்தில் சந்தித்தது மிக மகிழ்வான
ஒன்று.
உணவு அரங்கில் திகட்ட திகட்டப் பாராட்டினார்கள்.
அநேகமாக நான் வாழ்நாளில் எதிர்கொண்ட அடர்த்தியான, அதிகமான பாராட்டு அதுவாகத்தான் இருக்கும்.
ஒரு வகையாய் பாராட்டு அலைகளிலிருந்து சற்றே விலகி நிதர்சனத்திற்குள் நடக்க ஆரம்பித்தேன்.
இவர்கள் பாராட்டும் அளவிற்கு பேசியிருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் குறுக்கும் மறுக்குமாய்
ஓடிக்கொண்டேயிருந்தது. பதிவுலக நண்பர்களின் பாராட்டு கூடுதலாய்த் தெம்பு தந்தது. எனினும்
வழக்கம்போல் இன்னும் சிறப்பாக பேசியிருக்கலாம் என்பதாய் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
இதுவரையிலும் இந்த உரைதான் சிறப்பு, கச்சிதம் என்ற நிறைவினை நான் உணர்ந்ததேயில்லை.
யார் எவ்விதம் பாராட்டினாலும், இன்னும் சிறப்பாய் பங்களித்திருக்கலாம் எனும் ஒருவித
குறுகுறுப்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது. அதே நேரம் வாசகர் வட்ட நிகழ்வில் நான்
சிறப்பாக ஏதேனும் செயல்பட்டிருந்ததாக பெருமை கொண்டால், அது அத்தனையும் அனிதாவிற்கும்,
ஷானவாஸ், சித்ரா ரமேஷ் உள்ளிட்ட வாசகர் வட்ட நண்பர்களுக்குமே சாரும்.
-
நிகழ்ச்சி குறித்த தாளம் நிகழ்ச்சி காணொளி
-
மேலும் வாசிக்க..
சிங்கப்பூர் பயணம் - 1
சிங்கப்பூர் பயணம் - 2
சிங்கப்பூர் பயணம் - 3
-
-
மேலும் வாசிக்க..
சிங்கப்பூர் பயணம் - 1
சிங்கப்பூர் பயணம் - 2
சிங்கப்பூர் பயணம் - 3
-
5 comments:
Hats off! :-)
பயணக்கட்டுரைகள் வரலாற்று ஆவணமாதல் அருமை, கதிர்.
அரங்கில் கேட்டதை ஒரு முறை வாசித்து மீண்டும் நினைவில் நிறுத்தி பார்க்கும் படியான கட்டுரை. தவிர, அந்த அரங்கில் அமர்ந்து கேட்ட அதே உணர்வை உங்கள் கட்டுரை வரிகளின் வாசிப்பு தருகிறது அண்ணா.
சிங்கப்பூர் பயணம் - 4 = அற்புதமான எழுத்தாற்றல், மிக்க மகிழ்ச்சி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு Erode Kathir
நீரோட்டம் போன்ற அழகு நடை.
Post a Comment