சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர்
பயணத்திற்கான விமான பயணச்சீட்டுகள் வந்துவிட்டன. பயணம் குறித்து துளியும் சிந்திக்காத
அளவுக்கு வேலை நெருக்கடி. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ரயில். புதன்கிழமை இரவு 11 மணிக்குத்தான்
உடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். பயணம் குறித்து எந்தச் சலனமும், சிலிர்ப்புமின்றி
புறப்பட்டது இந்தப் பயணமாகத்தான் இருக்க வேண்டும். காரணங்களும், இலக்குமற்ற எத்தனையோ
பயணங்களில் கொண்டிருந்த குறுகுறுப்பும், மனவோட்டங்களும் அற்று, காரணங்களோடும், காரியங்களோடும்
கிளம்பிய இந்தப் பயணம் ஏன் சலனமற்ற மனவெளியைத் தந்திருந்தது எனப் புரியவேயில்லை. மாலை
ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை பெய்த அந்த மாசி மாதத்துப் பெரு மழையை மறக்கவே முடியாது.
என்னோடு அனிதாவின் அம்மாவும் பயணப்பட்டார்கள்.
நாள் முழுக்கவும், விமானத்தில் கைபேசியை அணைக்கும் வரையிலும் அனிதாவிடமிருந்து திரும்பத்
திரும்ப ஒளி(லி)த்தது “அம்மாவ பத்ரமா பாத்துக்க… அம்மாவ பத்ரமா பாத்துக்க”
வெள்ளிக்கிழமை காலை 4.30க்கு சிங்கப்பூரில். நண்பர் மோகன்ராஜ் காத்திருந்தார். வீடு சென்று நிறையப்பேசி, கொஞ்சம் உறங்கி எழுந்தபோது சிங்கப்பூர் வெயிலும், வெளிச்சமும் உரசத் துவங்கியது. 25ம் மாடியில் இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் கடலும், அதில் மிதக்கும் கப்பல்களையும் பார்க்கலாம். 2013ல் இரண்டு நாட்கள் இருந்து அந்தக் காட்சிகளில் உறைந்திருந்த நினைவுகள் மீட்டியது.
மதியம் ஷானவாஸ் வந்தார். சிங்கப்பூர் வாழ்க்கை
குறித்தும், அங்கிருக்கும் மனிதர்கள் குறித்தும் உரையாடல் நகர்ந்தது. எப்படிப்பட்ட
மனிதர்களையும் சிங்கப்பூர் அதன் தரத்திற்கேற்ப செதுக்கிக்கொள்ளும் எனச் சொன்னபோது அவர்
வார்த்தைகளிலிருந்த உறுதியின் கடினத்தன்மை என்னை பெரு வியப்பில் ஆழ்த்தியது. பத்து
காசு குறைவாக வைத்துக்கொண்டு ஒரு பொருளை வாங்க தடுமாறிய மலாய்க்காரர் குறித்துச் சொல்லும்போது,
மனதார அந்த பத்துக்காசை விட்டுத்தருகிறாயா என கேட்டதாகச் சொன்னது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் குறித்து இந்தக் கேள்விப்படல்கள் புதுவித அனுபவம் எனக்கு. ஷானவாஸ் ஆகச்சிறந்த
ஒரு கதை சொல்லியாக இருக்கிறார். ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு காட்சியை, நிகழ்வை அவர்
உணர்வுப் பூர்வமாக விவரிக்கும் விதம் அலாதியானது. அவரோடு கிளம்பினேன்.
கோமளவிலாஸ் உணவகத்தில் கமலாதேவி அரவிந்தன்,
ஜோ.டி.க்ரூஸ், சித்ரா ரமேஷ், சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் ராம கண்ணபிரான், பாடலாசியர்
நெப்போலியன், ராஜேஷ் ஆகியோருடன் மெல்ல ஒன்ற ஆரம்பித்தேன். குழுவாய் அமர்ந்து உரையாடும்
மனிதர்களோடு இணைந்துகொள்ளும் போது சொற்களற்று அவர்கள் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டேயிருப்பது
ஒருவித போதையாய் அமைந்துவிடுகிறது.
இடையில் விடைபெற்றுக்கொண்ட ஷானவாஸ் சரவணன்
அல்லது கண்ணன் உங்களைக் கவனித்துக்கொள்வார்கள் எனச் சொல்லியிருந்தார். ஜோ.டி.க்ரூஸ்
அவர்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பியபோது சரவணன் காத்திருந்தார். அப்போது தெரியாது
அவர் எனக்குள் சில சன்னல்களைத் திறந்துவிடப்போகிறார் என்று.
மீண்டும் ஒரு சிறு உரையாடலுக்குப் பிறகு பிரிந்தோம்.
கண்ணன் வருகை தாமதமானதால் சரவணனுடன் பைக்கில் கிளம்பினேன். பைக்குகள் மிக அரிதாகத்
தென்படும் சிங்கப்பூரின் சாலைகளில் சீறும் அவர் பைக்கில் செல்வதே ஒரு அலாதியான அனுபவம்.
எழுத்து குறித்தும், அவர் எழுதாமை குறித்தும்,
எழுத்தாளர்கள் குறித்தும் ’மெரிலயன்’ சிலையின் பின்பக்கமாய் அமர்ந்து, மிரட்டும் அந்த
பெரிய காபி கோப்பையைக் கையில் பிடித்தவாறு பேசுவதும், பருகுவதுமாய் இருந்தோம். எதைச்
சொன்னாலும் மறுக்காமல், முடக்காமல், முழுதாய் உள்வாங்கி தன் கருத்தைச் சொல்லும் சரவணன்
உரையாடலுக்கு மிக உகந்த நபர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. நிறைய நேரம் பேசிய பிறகு
ஒரே ஒரு விசயம் குறித்து நான் நிறையப் பேசிவிட்டேனோ என்ற சங்கட உணர்வும் வந்தது. உரையாடலில்
மனம் நிறைந்ததற்கு நிகராய், பெரிய அளவிலான அந்த காபியில் வயிறும் நிறைந்திருந்தது.
கண்ணனும், கடலூரன் ஹாஜா மொய்தீனும் காத்திருந்தார்கள்.
அவர்களோடு இணைந்தோம். சாப்பிட வேண்டும் என வற்புறுத்தினார்கள். காரிலும், பைக்கிலும்
தனித்தனியே புறப்படும் போது டாஸ்மாக் அருகே சந்திப்போம் என்றார்கள். ஏதோ ஒரு மதுக்கடையைக்
குறிப்பிடுகிறார்கள் என நினைத்தவனுக்கு, தமிழகத்தின் சாட்சாத் டாஸ்மாக் கடை வடிவிலே
டாஸ்மாக் என்ற பெயரோடு, வடிவத்தோடு அந்தக் கடை இருந்தது கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது.
அது ஒரு சாதுர்யமான வியாபார யுக்தியாக இருந்தாலும், பிழைக்க வந்திருக்கும் தமிழர்களை
அங்கும் இலக்கு வைத்து ஒரு மதுபானக் கடை அதே பெயரை யுக்தியாக வைத்திருப்பது நெருடலாகப்
பட்டது.
காயத்ரி உணவகத்தில் நண்பர் ஹாஜா தடாலடியாக
உணவுகளை தேர்ந்தெடுத்தார். தொண்டைக்குழி வரை நிரம்பியிருந்த காபி என்னால் எதையும் சாப்பிட
முடியாது என அறிவிக்கச் சொன்னது. சொல்லியும் பார்த்தேன். அவர் கேட்ட உணவுகள் ஒவ்வொன்றாய்
வர, அதன் சுவையில், அவர்களின் அன்பான உபசரிப்பில், அநேகமாக அங்கிருந்த நால்வரில் நான்தான்
அதிகம் சாப்பிட்டிருப்பேனாக இருக்கும்.
அந்த இரவுப் பொழுதில் உணவோடு ஒரு தோல்வியையும்
ருசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.
.............. தொடரும்
மேலும் வாசிக்க..
சிங்கப்பூர் பயணம் - 1
சிங்கப்பூர் பயணம் - 3
சிங்கப்பூர் பயணம் - 4
மேலும் வாசிக்க..
சிங்கப்பூர் பயணம் - 1
சிங்கப்பூர் பயணம் - 3
சிங்கப்பூர் பயணம் - 4
6 comments:
Nice
அருமை.
தொடரட்டும், கதிர்.
தொடரட்டும், கதிர்.
தொடக்கமே அருமை. தொடருங்கள் ரசிக்க தயாராக உள்ளோம்.
சிங்கப்பூர் பயணம் - 2 - எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
மகிழ்ச்சி திரு Erode Kathir சார்.
Post a Comment