மதியம் இரண்டு மணியளவில் நண்பரின் கைபேசியில் இருந்து அந்தக் குறுந்தகவல் வந்தது. வழமையாய் குறுந்தகவல் அனுப்பாத நண்பரிடமிருந்து குறுந்தகவலா என்ற ஆச்சரியத்தோடு திறந்து பார்க்க ”ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது மகள் கோபிகாவை குமலன்குட்டை அரசு ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பில் இணைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைவதாக”க் கூறியது அச்செய்தி.
வாசித்து முடிக்கும் போதே, உள்ளுக்குள் ஒரு வெப்பம் பூத்தது. எதையும் நம்பமுடியாத ஒரு சூழலுக்கு ஆட்பட்டேன். அவரிடம் அழைத்து செய்தி உண்மைதானா எனக் கேட்டபோது, அவருக்கு வந்த குறுந்தகவலை எனக்கு அனுப்பியதாகச் சொன்னார். மனசு பரபரத்தது. இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம் மனதுக்குள் கிடந்து தவித்தது.
குமலன் குட்டை அருகே தமிழக அதிரடிப்படையில் பணியாற்றும் நண்பனை அழைத்து பள்ளியில் விசாரித்து தகவல் கொடு என்றேன். எதேச்சையா ஃபேஸ்புக்கில் அரட்டையில் சிக்கிய நண்பர் அல்போன்ஸ் சேவியரை பள்ளிக்குச் சென்று கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். எனக்கே வியப்பாக இருந்தது எனக்குள் ஏன் இத்தனை அலைச்சல் என்று.
நண்பன் சிரிப்போடு அழைத்தான் செய்தி உறுதிதான் என்று, அடுத்த சிறிது நேரத்தில் சேவியர் அழைத்தார். ”உண்மைதான், படம் கூட எடுத்துள்ளேன் சிறிது நேரத்தில் அனுப்புகிறேன்” என்று. மனதுக்குள் ஒரு வெப்ப உருண்டை ஓடிக்கொண்டேயிருந்தது. வாழ்க்கை குறித்து நாம் கட்டமைத்து வரும் மாயைகள், அதன் மேல் பூசி வரும் வர்ணங்கள் குறித்து மிகப் பெரிய அயர்ச்சி தோன்றியது.
கிராமத்திலிருந்து நகரத்துக்கு நகர்ந்து வந்ததில், தொழிற்சூழல் ஒரு காரணமாய் இருந்தாலும் மகளின் கல்வி என்ற மாயைதான் மிகப் பெரிய காரணமாக முன்வைக்கப்பட்டது. குழந்தை வளரத் துவங்கியதும், எந்தப் பள்ளியில் சேர்த்துறீங்க என்ற இலவசக் கேள்விகளும், இந்தப் பள்ளியில் சேர்த்துங்க என்ற இலவச அறிவுரையும் பெரும்பாலும் கிராமத்தான்களை நகருக்கு நகர்த்தி வருகிறது என்பது என் அனுபவமும் கூட. தனியார் மெட்ரிக் பள்ளிதான் சிறப்பு என்ற நடுத்தரச் சிந்தனை எனக்குள்ளும் ஆழ வேரூண்டப்பட்டுள்ளதை உணரமுற்படும் போது, வெட்கம் பிடுங்கித் தின்கின்றது. மூனரை வயதில் பிள்ளைகளை பள்ளியில் திணித்து, அதைப்படி இதைப்படி என்ற திணிப்புகளில் அந்தக்குழந்தை தனது குழந்தைத்தன்மையை தொலைப்பதை எதிர்த்ததில் பலமுறை இல்லத்தில் யுத்தமும் நிகழ்ந்தேறியிருக்கிறது. எழுத்துக்குக்கும், சிந்தனைக்கும், எனக்கும் இருக்கும் இடைவெளிகள் கண்ணா மூச்சியாடிக் கொண்டிருப்பதை கனத்த வெட்கத்தில் மனது அமிழ்ந்து கிடக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் மகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டது குறித்த குறுந்தகவலை நண்பர்களுக்கு, அனுப்புவதிலும், அது குறித்து சமூக வலைத்தளங்களிலும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தாலும், அந்த செய்தி கிடைப்பதற்கு சிறிது நேரம் முன்புதான் மூன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகளின் பள்ளிக்கட்டணத்தை வங்கியில் செலுத்தி தந்தை கடமையாற்ற சிரமப்பட்டது குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்த சிறிது நேரத்தில் ஆட்சியர் மகளைப் பள்ளியில் சேர்ப்பித்தது குறித்து செய்திகள் பரவலாகத் தொடங்கின. செய்தி இணையங்கள், தொலைக்காட்சிகள் என கவனம் பெறத் துவங்கின. அதன் மூலமும், நேரில் முயற்சித்ததிலும் அறிந்த செய்திகள் மிகச் சுவாரசியம் மிகுந்தது.
நேற்று அரசு ஆணையின்படி பள்ளி திறந்து, வழக்கம் போல் பணியாற்றிக்கொண்டிருந்த குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்தகுமார் IAS வந்ததைக் கண்டு தலைமையாசிரியை திருமதி ராணி, உட்பட ஆசிரியைகள் திடீர் சோதனைக்கு வந்திருப்பதாக நினைத்திருக்கிறார்கள். ஆனால் தனது மனைவி, மகளோடு வந்த அவர், தனது மகள் கோபிகாவை இரண்டாம் வகுப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாற்றுச் சான்றிதழ் அளித்து கேட்டிருக்கிறார்.
இன்ப அதிர்ச்சியில் உறைந்த தலைமையாசிரியை, ஆட்சியர் அவர்களை தனது இருக்கையில் அமர வேண்டிருக்கிறார். அதை மறுத்த ஆட்சியர் சேர்க்கைக்கு காத்திருக்கும் பெற்றோருக்கான பலகையில் அமர்ந்து, படிவத்தைப் பூர்த்தி செய்து தனது மகளை சேர்த்திருக்கிறார். கோபிகா இதற்கு முன் தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்திருக்கிறார். முதல் நாள் வண்ண உடையில் வந்த தனது மகளுக்கு சீருடை கிடைக்குமா எனக் கேட்டதற்கு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் சீருடை தருவதாக தலைமையாசிரியை கூற சத்துணவுப் பட்டியலிலும் தமது குழந்தையை இணைக்க வேண்டியிருக்கிறார். மகளின் சேர்க்கை குறித்து கருத்துக் கேட்ட செய்தியாளர்களிடம் இது தனது தனிப்பட்ட விசயம் எனவும் கூறியிருக்கிறார் ஆட்சியர்.

ஆட்சியரின் மனைவி ஸ்ரீவித்யா அவர்கள் மருத்துராக அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். ஆட்சியர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் 36 வயதான கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்குழுவில் தேர்வு பெற்றவர். முதன் முறையாக தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டு, சமீபத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டவர். ஒரு கிராமப் பின்னணியைச் சார்ந்தவர், கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
மதியத்தில் மனதில் வெதுவெதுப்பாய் குடிபுகுந்த அந்தக் குழந்தையின் சேர்க்கை, இரவு முழுதும் ஒரு மாதிரி தூக்கத்தில் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. அதிகமுறை விழித்த இரவாகக் கூட இருந்தது. பல இடங்களில் எதையும் செய்யத்துணியாமல் மாற்றம் மாற்றம் எனவிரும்பும் மனது குறித்து குறுகுறுத்தது. கல்வி எனும் காரணத்தை முன்னிறுத்தி என் மகளை நகரக் கூண்டுக்குள் அடைத்து ஒரு கூட்டுக்குடும்ப அற்புதத்திலிருந்து வெளியேறிய வலி கடுமை காட்டியது. பகட்டுச் சூழலில் நாமே வழிய சிக்க வைத்த குழந்தைகளின் வாழ்வை அதிலிருந்து இனி மீட்க முடியுமா என்ற கேள்வி மனதுக்குள் இருளை விதைத்தது.
கடனை வாங்கியாவது ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் சேர்க்கும், எதற்கும் அடிமைப்பட்ட புத்திஜீவிகள் நிறைந்திருக்கும் உலகத்தில், நன்கு கற்றறிந்த தம்பதி தங்களது மகளை தமிழ்வழியில், தங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அரசுப் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் இணைக்க முனைந்ததை வெறும் எளிமை என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் முதல் எழுத்தாகவே தோன்றுகிறது.
சமீப ஆண்டுகளில் தமிழ் சமூகத்தை அடிமைப்படுத்தியுள்ள ஆங்கிலக் கல்வி மோகத்தை சற்றே தணிக்கவும், பல அழுத்தங்களுக்கிடையே, மிகச் சிரமப்பட்டு தனியார் ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களின் பிடியில் அடிபட்டுக் கிடக்கும் பெற்றோர்களின் அழுத்தங்களை விடுவிக்க இது ஒரு சிறு திறவுகோலாக இருக்கும். திணறித் திணறி கட்டணம் கட்டி, சீருடை வாங்கி, காலணிக்குள் கால் திணித்து, பலமடங்கு விலை கொடுத்து புத்தகம் வாங்கி, வாகனத்தில் அனுப்ப கையசைக்கும், நடுத்தர மற்றும் அதற்கும் கீழான வர்க்க மனிதர்கள் தங்களுக்குள் பூட்டியிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைக்க இது ஒரு சுத்தியலாக இருக்கலாம், இருக்கும். ”போங்காடா நீங்களும் உங்க…….” என உடைபட்டு, ”ஆட்சியரே தன்மகளை அரசுப் பள்ளியில் இணைக்கும் போது எனக்கு மட்டும் என்ன” என வெளியே வர ஏதுவாக இருக்க இது ஒரு தூண்டுகோலாக இருக்கலாம்.
ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் இணைத்தது தனது தனிப்பட்ட சுதந்திரம் எனக் கூறிய பின்னர் அதுகுறித்து எந்த விமர்சனத்தையும் வைப்பது மூர்க்கத்தனமானது. அதே சமயம் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.
ஈரோடு மாற்றங்களின் பிறப்பிடமாக பல நேரங்களில் இருந்திருக்கிறது. அது போன்றதொரு மாற்றத்தை குமலன்குட்டை ஊராட்சிய ஒன்றியத் துவக்கப்பள்ளியில், அழுத்தம் நிறைந்த தேவையான பொழுதில் மிகச் சிறந்த ஒரு இளைஞர் ஏற்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்த மாற்றத்தின் வெளிச்சம் ஒட்டு மொத்தமாக கல்வி மேல் இருக்கும் மாயையைக் கழுவித் துடைக்க உதவும் என்று பெரிதும் நம்புகிறேன்.
மதிப்பிற்குரிய இளைஞரை எங்கள் ஆட்சியராகப் பெற்றதில் பெருமகிழ்வெய்துகிறேன். அவரின் அற்புதமான உதாரணச் செயலுக்கு வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
-0-