எதேச்சையாக தொலைக்காட்சியைப் பார்த்தேன், விஜய் தொலைக்காட்சியின் சினிமாவுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியை நீயா...நானா? கோபிநாத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நாடோடிகள் படத்தில் கதாநாயகன் சசிக்குமாருக்கு தங்கையாக நடித்த அபிநயா சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மேடையில் நின்று கொண்டிருந்தார், படம் பார்க்கும் போதே கேள்விப்பட்டிருந்தேன், அவர் காது கேளாத, வாய் பேசமுடியாதவர் என்று. படம் பார்க்கும் போது அப்படியெதுவுமே தெரியாது, மிக நேர்த்தியாகவே நடித்திருந்திருப்பார். நாடோடிகள் படம் மனதிற்கு நினைவு வரும் போதெல்லாம் இந்தப் பெண் பாத்திரமும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்று.
அந்தப் பெண் விருது பெறுவதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது, அவருக்கு மிகப் பொருத்தமான, அவசியமான விருதும் கூட, அபினயாவின் தந்தை மேடைக்கு அழைக்கப்பட்டார், விருதோடு அந்தப் பெண் தந்தையை கட்டிக் கொண்டது. மகள் சார்பில் தந்தை பேசும் போது, தன் மகள் இந்த விநாடி என்ன மாதிரி உணர்ந்து கொண்டிருப்பாள் என்பதை தெரிவித்து, இது தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றார். இந்தப் பெண் இங்கு நிற்க இயக்குனர் சமுத்திரக்கனி, இயக்குனர் / நடிகர் சசிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கதிர் மூவரும்தான் காரணம் என கண்கலங்கிச் சொன்னார்.
கோபிநாத் இயக்குனர் சமுத்திரக்கனீயிடம் ஏதோ கேட்க அவர் “அபிநயாவை என் மகள் போல் பார்த்துக் கொண்டேன், அவளுடைய தந்தை கண் கலங்கி விட்டார், நான் கண் கலங்காமல் இருக்கிறேன் அவ்வளவுதான்” என்றார்.
இந்நிலையில் அபிநயாவின் வேண்டுகோளையடுத்து நடிகர் சசிக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கதிர் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அபிநயாவின் வேண்டுகோளையடுத்து நடிகர் சசிக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கதிர் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
கோபிநாத் தன் கேள்விக்கணையை(!) சசிகுமாரிடம் வீசினார். ”இந்தப் பெண் உங்களோடு நடித்த போது உங்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லையா” என்பது போல்...
சசிகுமார் “என்னுடைய தங்கையாக சிறப்பாக நடித்தார், அதனால் என்னுடைய அடுத்த படத்தில் அபிநயாவை கதாநாயகியா நடிக்கவைக்கிறேன்” என்ற போது அரங்கமே அதிர்ந்தது...
அந்த நேரத்தில் மிக சப்தமாக, அழுத்தமாக கோபிநாத் கேட்டார் “எந்த நம்பிக்கையில்”.
மிக நிச்சயமாக இதை சசிக்குமார் எதிர்பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். சட்டென தடுமாறினார் சசிக்குமார், குரல் மிக மென்மையாக வந்தது “ம்ம். கடவுள் மேல் பாரத்தைப் போட்டு” என்றார்
ஏற்கனவே அந்தப் பெண் அபிநயா தனக்கு உள்ள உடல் குறைபாட்டைத் தாண்டி, தன்னுடைய திறமையை, மிக அழகாக நடிப்பின் மூலம் நாடோடிகள் படம் மூலம் நிரூபித்துள்ளார். அதில் முழு திருப்தியும் அடைந்த பின்பே சசிக்குமார் தன்னுடைய அடுத்த படத்திற்கு அதே பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளார். இந்த நிலையில் கோபிநாத் கேட்ட ”எந்த நம்பிக்கையில்” என்ற கேள்விக்கு யார் என்ன பதில் சொன்னால், கோபிநாத்திற்கு நம்பிக்கைக்கான நியாயம் கிடைக்கும்.
பல ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் அரங்கில், ஒளிபரப்பை லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு விழாவில் தன் குறையை நிறையாக மாற்றி சாதித்திருக்கும் ஒரு திறமைசாலிப் பெண்ணை அடித்து நொறுக்கி அவமானப் படுத்தும் விதமாகவே ”எந்த நம்பிக்கையில் வாய் பேச முடியாத பெண்ணை கதாநாயாகியாக்கினீர்கள்” என்ற உள்ளடக்கதோடு ஒரு வெற்றி பெற்ற இயக்குனரைப் பார்த்து கேட்கும் மன வக்கிரம் எங்கிருந்து வருகிறது இந்த கோபிநாத் போன்றவர்களுக்கு.
உதாரணத்திற்கு இதே கோபிநாத்திற்கு வாய் பேசமுடியாத ஒரு மகள் இருந்து, அந்தப் பெண்ணிற்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்து, இது போல் மேடையேறியிருந்தால், ”எந்த நம்பிக்கையில்” என்ற இதே கேள்வி கோபிநாத்திற்கு வருமா.
கேள்விகள் கேட்பது மட்டுமே புத்திசாலித்தனம் என்ற மூடத்தனம் கோபிநாத்தின் மூளைக்குள் நிரம்பிவிட்டதோ? கேள்விகளை மடக்கி மடக்கி, கேட்டுக் கேட்டு ஒரு புற்று நோய் போல் கோபிநாத்தின் மனதிற்குள் கேள்விகள் வளர்ந்து விட்டது போலும். அந்த நோயின் நீட்சியாகவே விசமத்தனமான, விஷம் தோய்ந்த கேள்வி அவ்வளவு ஆங்காராமாய் கோபிநாத்திடம் இருந்து தெறித்திருக்கிறது.
அதை நீக்காமல் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சிக்கும் கண்டனங்கள்
யாகாவராயினும் நாகாக்க..... இனியாவது விஷத் துளிகள் கோபிநாத் நாவில் இருந்து தெறிக்காமல் இருக்கட்டும்.
நடிகை அபிநயாவின் காணொளி
நடிகை அபிநயாவின் காணொளி
___________________________________