இந்தத் தலைமுறை இது வரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்கு குழந்தைகளை தாங்குதாங்கென்று தாங்கிக் கொண்டாடுகிறது. அதுவும் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளுக்கு குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பும் காரணமாக இருக்கின்றது.
கிராமப் பின்னணியிலிருந்து நகரத்துக்குள் புலம் பெயர்ந்தவர்கள் கூட குழந்தைகளை வீதிகளில், மண் புழுதியில், தங்கள் பகுதியில் இருக்கும் பூங்காக்களில், மொட்டை மாடிகளில் விளையாட அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு காடு, கரையில் நடந்து போய், பலமைல் தூரம் மிதிவண்டியில் போய் படித்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை குறைந்த பட்சம் தங்கள் வீதியின் எல்லை வரை நடக்க இன்று அனுமதிப்பதில்லை. வாசலிலேயே பள்ளி வாகனத்தில் ஏற்றி, இறக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
வெளியில் விளையாடினால் ஆரோக்கிய குறைவாகிவிடும் என வீடியோ விளையாட்டுகளில் கட்டிப் போட்டு, வெளியில் அழைத்துச் செல்ல வாசல் படியில் நம் வாகனத்தை தயாராக நிறுத்தி எல்லா வகையிலும் நம் குழந்தைகள் சராசரியான வாழ்க்கையைத் தாண்டி வாழவேண்டும் என நினைப்பதும், இரவில் நீண்ட நேரம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கவும், காலையில் தாமதமாக எழுந்திருக்கவும் அனுமதிப்பதையும், பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ஏதோ ஒரு ஜங் ஃபுட்டை திணிப்பதையும், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களையும், சாக்லெட்களையும் எப்போதும் குளிர்சாதனப் பெட்டியில் நிரப்பி வைத்திருப்பதையும் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம்.
வீட்டில் அவர்களை சுயமாக பல்துலக்க, குளிக்க வைப்பதை கூட அனுமதிக்காமல் அல்லது அதை செயல் படுத்தத் தெரியாமல் நாமே செய்ய நினைப்பது அன்பின் பெயரில் திணிக்கும் வன்முறையாகவே தோன்றுகிறது. குழந்தைகள் மேல் இதுபோல் அன்பும் செல்லமும் பொங்கி வழிகிறது, திகட்டுமளவிற்கு பல நேரங்களில்.
யார் நமக்கு இப்படிக் கற்றுக் கொடுத்தது? எங்கே கற்றுக் கொண்டோம், ஏன் கற்றுக்கொண்டோம் இப்படி குழந்தைகளை வளர்க்க.
இன்னொரு விதமான குழந்தைகள் உலகமும் நமக்கு மிக அருகில் தானே இருக்கின்றது. நம் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அவர்கள். பெரும்பாலும் காலை நேரங்களில் சாரை சாரையாக தார் சாலையின் ஓரத்தில் அணி அணியாக கொஞ்சம் கசங்கிய சட்டையோடு, காலில் செருப்புகள் கூட இல்லாமல் தினமும் பள்ளிக்கு நடந்தே வருவதை கவனித்திருக்கிறேன். ஐந்திலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும்.
எல்லோரின் முதுகிலும் ஒரு புத்தகப்பை தொங்கிக் கொண்டிருக்கிருக்கும். சிலரிடம் மதிய உணவுக்கான பை தொங்கும், மற்றவர்கள் அநேகமாக பள்ளியில் மதிய உணவை உண்ணும் பிள்ளைகளாக இருப்பார்கள்.
நெரிசலான சாலைகளை மிக அநாயசமாக கடந்து போகக் கூடிய தைரியத்தை அவர்களுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. தங்களை கடந்து போகும் இரு சக்கர வாகனங்களை எந்த வித கூச்சமும் இல்லாமல் கைகளை நீட்டி, கட்டை விரலை உயர்த்தி “அண்ணா... ஸ்கூலு வரைக்கு வர்ரேண்ணா... ப்ளீஸ்ணா” என கேட்கும் மன உறுதியை அந்தப் பிள்ளைகளிடம் சமூகம் கற்றுக் கொடுத்திருக்கிறது.
அநேகமாக அவர்கள் நகரத்தின் ஓரத்தில் பிதுங்கி நிற்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மனிதர்களின் பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். நிச்சயமாக அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் தினக்கூலிகளாகத்தான் இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கு காலை நேர உணவை வீட்டில் தயாரித்துக் கொடுக்க பெற்றவர்களுக்கு நேரம், வசதி இருப்பதில்லை. முதல் நாள் இரவு சமைத்த உணவையே அடுத்த நாள் காலையிலும் சாப்பிடவேண்டிய நிலை இந்தப் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டிருக்கும்.
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அந்தப் பிள்ளைகள் சாலையோரங்களில் குதூகலமாக விளையாடிக்கொண்டு போவதைப் பார்க்கமுடியும். வீட்டுக்குச் திரும்பும் நேரங்களில் அவர்களின் பெற்றோர் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. யாராவது வேலைக்கு போகமுடியாத வயதானவர்கள் இருந்தால்தான் அவர்களைக் கவனிக்க வாய்ப்பிருக்கும், அப்படியில்லாத குடும்பங்களில் அந்த பிள்ளைகள் இரவு வரை கவனிப்பார் யாரும் இல்லாமல்தான் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த குழந்தைகளிடம் ஏதோ ஒரு துணிவு அதிகம் குடி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
விலை உயர்ந்த கல்வி, உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வரும் தொடர்பு வலை, விலை உயர்ந்த, சத்தான (!!!) உணவு, குடும்பத்தினரின் அதீத கவனிப்பு என கிடைக்கும் குழந்தைகளுக்கு, சமூகத்தோடு ஊடுருவிப் பழகும் வாய்ப்பு, சாலைகளில் சகஜமாக விளையாடிப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி, சட்டென இன்னொரு மனிதனோடு ஒட்டும் திறன், எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளும் மனோபாவம் திகட்டத் திகட்ட நாம் திணிக்கும் அன்பால் கொஞ்சம் குறைவாகவே புகட்டப்படுவதாகவே என நினைக்கிறேன்.
தங்கத்தில் செய்தாலும் கூண்டு சிறைதானே....
______________________________________________
54 comments:
அருமையான பதிவு..பாராட்டுகள் கதிர்
கதிர், நூறு சதவீத உண்மை..ஆனாலும் நானும் அந்த தங்க கூண்டில் தான் என் குழந்தைகளை அடித்திருக்கிறேன் என்ற குற்ற உணர்வு எப்பொதும் எனக்கு உண்டு. பெண் குழந்தைகளை வெளியில் அனுப்ப கொஞ்சம் பயமாக இருக்கிறது என்பது தான் காரணம் ..:(
//அன்பால் கொஞ்சம் குறைவாகவே புகட்டப்படுவதாகவே என நினைக்கிறேன்//
கொஞ்சம் மட்டுமல்ல நிறையவே...
இன்னும் சொல்லப்போனால் சமூகம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை.
நல்ல இடுகை...
/“அண்ணா... ஸ்கூலு வரைக்கு வர்ரேண்ணா... ப்ளீஸ்ணா” என கேட்கும் மன உறுதியை அந்தப் பிள்ளைகளிடம் சமூகம் கற்றுக் கொடுத்திருக்கிறது./
இது கொஞ்சம் உறுத்தல். என்னைப் பொறுத்தவரை சில நேரம் பள்ளிக்கு நேரமாகிவிட்ட தருணங்கள் தவிர இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
/அன்பின் பெயரில் திணிக்கும் வன்முறையாகவே தோன்றுகிறது./
நூறு சதம் சரி.
/திகட்டத் திகட்ட நாம் திணிக்கும் அன்பால் கொஞ்சம் குறைவாகவே புகட்டப்படுவதாகவே என நினைக்கிறேன்./
அல்ல. இதன் ருசியே அறியாமல் வளர்க்கப்படுகின்றனர். ஒட்டுதல் என்பது ஒரு குழுமமாக, அவர்களுக்குள் என்ற குறுகிய வட்டமாக மாறிவிடுகிறது.
நல்ல இடுகை ஸ்டார்:)
You are 100% correct. I think we should learn parenting.
Regards
Geetha Ramkumar
நல்ல பகிர்வு அண்ணா...
//சமூகத்தோடு ஊடுருவிப் பழகும் வாய்ப்பு, சாலைகளில் சகஜமாக விளையாடிப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி, சட்டென இன்னொரு மனிதனோடு ஒட்டும் திறன், எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளும் மனோபாவம் திகட்டத் திகட்ட நாம் திணிக்கும் அன்பால் கொஞ்சம் குறைவாகவே புகட்டப்படுவதாகவே என நினைக்கிறேன்.//
உண்மையான அலசல்.
நல்ல பகிர்வு
kathir,
நல்ல பதிவு....வாழ்த்துக்கள்
உண்மைய உரைச்சிருக்கீங்க..
நூறு சதவீத உண்மை.
பதிவு மிக அருமை..:)
உண்மை
நல்ல பதிவு. இன்னும் எழுதியிருக்கலாம்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதே தவறில் பலவற்றை செய்கிறேன் என் மகன் வளர்ப்பில் :(. மாற வேண்டும். பார்ப்போம்.
வசதி படைத்த குழந்தைகள்,வசதியற்ற குழந்தைகள் பற்றிய உங்கள் நோக்கு மிக சரியான சமூக-உளவியல் பார்வை. மிக வசதியாக வளரும் குழந்தைகள் மிக சின்ன வாழ்க்கை பிரச்சனையை கூட எதிகொள்ள தடுமாறுகின்றன.
மிகச் சிறந்த இடுகை,சிந்தனை.இதை வேறு விதமாகப் பார்த்தோமானால் ,சிறு வயதில் நாம் வளர்க்கப்பட்ட விதம் வேறு.காரணம் நம்முடன் உடன்பிறந்தோர் என்று இரண்டு மூன்று பேர் இருப்பார்கள்.கேட்டது எல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை.சமயத்தில் நம்மிடம் இருப்பதை இளையோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டி வரும்.பெரும்பாலும் கேட்டது எல்லாம்,அல்லது விருப்பப்பட்டது எல்லாம் கிடைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது.அந்த அனுபவங்களும் , தற்போது அனைவரும் ஒரே குழந்தை பெற்றுக் கொள்வதும் அதிக செல்லம் கொடுப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பாராட்டுகள் கதிர்.
நாம் சொல்லும்படியே குழந்தைகள் வளரவேண்டும் எனும் எதிர்பார்ப்புகள்தான் காரணமாக இருக்கக்கூடும்.
அவசியமான, மிகவும் உபயோகமுள்ள பதிவு.
வெளிநாடுகளில் குழந்தைகளின் திறன் பார்த்தபோது வியப்பு அடைகிறேன். அதுவும் அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகளின் துணிவு மிகவும் போற்றப்பட வேண்டியதுதான், அவர்களுக்கு இருப்பது மிகப்பெரிய தன்னம்பிக்கை.
பெற்றோர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையை விட பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருப்பின் எல்லாம் சரிப்படும்.
மனதைத்தொட்ட கட்டுரை.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
இந்தத் தலைமுறை இது வரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்கு குழந்தைகளை தாங்குதாங்கென்று தாங்கிக் கொண்டாடுகிறது. //
இப்படித்தான் எனக்கும் அடிக்கடி நினைக்கத் தோன்றும்.
மிகத் தெளிவான இடுகை. எனினும் நம் குழந்தை என்று வரும்போது பரிவு, பயம், அது, இது என்று வந்து குழப்பிவிடுகிறது.
சிந்தனையை தூண்டும் இடுகை..
ஸ்ரீயின் கருத்துக்கு உடன்படுகிறேன்..
உலகம் தெரிய வேண்டும் என்பதட்காகவே என் அக்காவின் பையனை எல்லா இடங்களுக்கும் கூட்டிச்செல்கிறேன்..
நேர்த்தியா வடிச்சு... இஃகி!
சமூகத்தில் ”அந்த நான்கு விதமா பேசக்கூடிய நான்கு பேர்” யாருன்னு தெரியாது, ஆனா அவுங்களுக்கு பயந்து தான் உலகம் இயங்குது!
பெண் குழந்தைகளுக்கு இலவ்சமாக கராத்தே கற்று கொடுப்பது பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க!?
அருமை...
மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒன்று.
சிலர் மண்ணில் விளையாடக் கூட அனுமதிப்பதில்லை. விளையாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது உண்மை.
நான் வலைதளத்திற்கு புதிது.
உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.
ஆனாலும் சூழ்நிலைகள் முன்பை போல இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.
அருமையான பதிவு.
ரேகா ராகவன்.
We have to live with this Kathir... There could be many reasons to justify the current Scenario...but i do agree with you... (This is Flat culture)
நல்ல பதிவு..நூறு சதவீத உண்மை.
நல்லதொரு பதிவு. நகரங்களில் வாழ்கையில் குழந்தைகளை குறிப்பாக பெண்குழந்தைகளை இவ்வாறு வளர்ப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் அதே குழந்தைகள் சொந்த கிராமத்திற்கு போகையில் வீட்டுக்குள்ளேயே இருப்பதில்லை.
சில கட்டுப்பாடுகள் நகரங்களில் அத்தியாவசியமாகிறது.
நல்லாச் சொல்லியிருக்கீங்க..எனக்கென்னமோ இதெல்லாம் இந்த தலைமுறைக்கு முன்பே..சொல்லப்போனால் நமது தலைமுறையிலே தொடங்கிவிட்டதாக தோன்றுகிறது. நமது அம்மா தலைமுறையினர் 'அடிக்காத பிள்ளை படியாது' - ஆனால் எங்களை அடிக்காமலேதான் வளர்த்தார்கள். பிள்ளை வளர்த்தலும் ஒவ்வொரு தலைமுறையிலும் மாறத்தான் செய்கிறது - காலங்களுக்கேற்ப! :-)
அருமை,,உண்மை:-)
siruvayathil romba sudhadiramaga valarntha suyambu naan. Yarume kavanikka illathu noyodum, thanimaiyilum vazhntha natkal kodumai! en kuzhanthaigalai thangakkondil than valarkkiren. enakku idhu thappaga theriyavillai!!
திணிக்கிற அன்பைவிட நாம் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவது பொருத்தமாக இருக்கும்
மற்றபடி வானம்பாடி நன்பரின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்
மனசாட்சியுடன் நேரே பேசும் அருமையான இடுகை;
நானும் அப்படித் தான் இருந்தேன். ஆனால் இப்போதெல்லாம் என் மகளைப் பூங்காவில் உடலெல்லாம் மண்ணாகும் வரை ஆசை தீர அளைந்து விளையாட விடுகிறேன்!
முதலில் பதைப்பாக இருந்தாலும் டோட்டோசான் புத்தகத்தை நினைவு கூர்ந்து கொண்டேன். சரி தான் நாம் செய்வது என்று புரிந்தது.
ஆம், கூண்டுக்கு வெளியே உள்ள குழந்தைகளையும் பார்க்க வேண்டும்.
நீங்க என்னதான் மனசில நெனச்சிட்டு இருக்கீங்க? நானெல்லாம் வலையுலகத்துல இருக்கிறதா வேணாமா?
இந்த வாரப் போஸ்ட் எல்லாம் படிச்சி எனக்கெல்லாம் எழுதவே பயமா இருக்கு.. ம்ம்ம்.. நடக்கட்டும்..நடக்கட்டும்..
/அன்பின் பெயரில் திணிக்கும் வன்முறையாகவே தோன்றுகிறது/
வன்முறையேதான்.நல்லா எழுதிருக்கீங்க!
சமூகத்தின் மீதான உங்கள் பார்வையையும், அடுத்த தலைமுறை மீதான அக்கறையையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். குழந்தைகள் மீது திணிக்கப்படும் அன்பு கூட வன்முறையே எனும் கருத்து மிக அருமை. பகிர்வுக்கு நன்றி கதிர் அண்ணா.
ரொம்ப அருமை கதிர்.கலக்குறீங்க.
'தங்கத்தில் செய்தாலும் கூண்டு சிறைதானே....'
நகரங்களில் முன்பு இருந்த நெரிச்சல் வேறு இப்போது வேறு. (ஈரோட்டையே எடுத்துக்குங்க) வண்டி குறைவாக வரும் தெருக்களில் விளையாட விடலாம். எந்த தெருவில் வண்டி குறைவா இருக்கு?. எல்லாரும் சர் புர்ன்னு வேகமாகவே ஓட்டுகிறார்கள். தெருவில் விளையாடும் குழந்தையின் உடலுக்கு உத்திரவாதமில்லை. சாலையில் நடந்து செல்லும் பெரியவர்களுக்கே நிலைமை மோசம் என்னும் போது குழந்தைகளை தெருவில் விளையாட விடாததே நல்லது.
அருமையானப்திவு .சமூகத்தில் மீதுள்ள விழிப்புணர்வு மிகையாக் வெளிப்படுகிறது
.வாழ்க வளர்க உங்கள் பணி. சிந்திக்க வைக்கிறீர்கள்.
கதிர்,
உங்களுடன் ஒத்துப்போகின்றேன்..
ஆனாலும் இந்த மாற்றங்களுக்கு நுனிவேர் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதுதான் என் கேள்வி..
கான்வெண்ட் மோகமும் தனியார் பள்ளிகளும் வளர வளரத்தான் பெற்றோர்களின் வளர்ப்பு முறையும் மாற ஆரம்பித்தது.
சமூகப்பிராணிகளான நாம், நம் சந்ததியினரை குறுகிய மனம் படைத்த செல்லப்பிராணிகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம்..
நூறு சதவீதம் உண்மை. இப்படி பொத்தி பொத்தி வளர்க்க படும் குழந்தைகள் உயர்கல்விக்காக வெளியூர், விடுதிகளில் தங்க நேரிடும் போது தவித்துப் போகின்றனர். குழந்தைகளை சுயமாக வளர விடுவது தான் நல்லது.
கதிர்.. நல்ல பதிவு.. நமக்குத் தெரியாமையே குழந்தைகளை நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்துவிடுகிறோம்..
இந்தப் போக்கு தொடர்ந்தால் "அன்பே சிவம்" மாதவன் மாதிரி தான் குழந்தைகள் உருவாவார்கள்.
உங்களுடைய மிகச் சிறந்த இடுகைகளில் ஒன்று கதிர்.. நல்ல சிந்தனைகள்.. ஆனால் மீண்டும் நீங்கள் சொல்லும்படியான குழந்தைகளை வளர்க்கும் முறை சாத்தியமா என்பது சந்தேகமே..
appuram padikkaren kathir.. sry..
அட நானும் இது சம்பந்தமாத் தாங்க ஒரு இடுகை போட்டிருக்கிறேன்.
http://thisaikaati.blogspot.com/2010/01/pillaivalarppu.html
அருமையான பதிவு கதிர். குழந்தைகள் என்ன அடம் செய்தாலும் ஒன்றும் சொல்லாமலிருக்கும் பெற்றோர்கள் நிறைய.
அன்பின் கதிர்
ஆதங்கம் புரிகிறது
காலம் மாறுகிறது - தலைமுறை மாறும்போது - சூழ்நிலை மாறும்போது - அனைத்துமே மாறுகின்றன. பல நன்மைகளும் சில தீமைகளும் வரத்தான் செய்யும் மாற்றங்களினால்.
குழந்தைகள் நம்மை விட - நாம் குழந்தைகளாக இருந்த போது நம்மிடம் இருந்த ஐக்யூவினை விட - இன்று அவர்களௌது ஐக்யூ மேலாக இருக்கிறது.
சில செயல்கள் மறைந்தன - பல செயல்கள் புதியதாக வந்தன. காலத்தின் கோலம் - அவ்வளவுதாந் கவலைப்பட வேண்டாம்
நல்வாழ்த்துகள் கதிர்
நல்ல பகிர்வு அண்ணா..
நல்ல இடுகை.
நட்சத்திர வாழ்த்துக்கள்!
உண்மைதான் நண்பரே கடந்த காலத் தலைமுறையினருடன் ஒப்பிடும் போது இன்றைய குழந்தைகள் வாழ்வது தங்கக் கூட்டில் தான் என்பதை மறுக்கமுடியாது..
அருமையான பதிவு அண்ணே....அவர்களின் அவர்களிடம் இருந்து தைரியத்தை பறித்து விட்டு கையில் ஜாய் ஸ்டிக் க்கும் ரிமோட்டும் கொடுத்து அழகு பார்க்கிறோம் சரிதான்.... பாராட்டுகள் அண்ணே....
மிக நல்ல பதிவு நண்பரே.
நமது பெற்றோரின் கல்விமுறையும், அவர்களின் வாழ்க்கைச் சூழலும் தற்போது பெரிதும் மாறியிருக்கின்றன.
நமது கல்விமுறையும், தற்போதையை போட்டிக் கல்விமுறையும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன.
மனக்கணக்கு மூலம் முழு வாழ்க்கையும் வாழ்ந்து முடித்த நமது முன்னோர்களின் நிலையும், வாழ்வின் அத்தியாவசிய தேவைகளும், இன்றைய தலைமுறையினரின் கால்குலேட்டர் வாழ்க்கையும் அத்தியாவசிய தேவையாய் உருமாற்றிக்கொண்டவைகளும் பல ஆயிரம் மடங்குகளுடன் வித்தியாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மிகப் பொதுவான காரணமாக எனக்குத் தோன்றுவது, எல்லாத்தரப்பு மக்களிடமும்(Financially) பிரதிபலிப்பது என்பது நமக்கு கிடைக்காத, நாம் ஏங்கிய அனைத்துக் கனவுகளையும் நம் குழந்தைகளின் மூலமாக நிறைவேற்றல் என்பதுதான்.
சென்ற தலைமுறை பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீதும், சமூகத்தின் மீதும் இருந்த நம்பிக்கை இந்த தலைமுறைப் பெற்றோருக்கு இல்லை.நாள் முழுக்க பிள்ளைகள் வீட்டில் இல்லாவிட்டாலும், நேரம் கழித்து வந்தாலும் அவர்கள் சந்தேகம் கொள்வதில்லை.இன்று கழிப்பறையில் கூட கொஞ்ச நேரம் இருந்தாலே, பயம் கவ்விக் கொள்கின்றது.
உளவியல் நிபுணர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நிபுணத்துவ மேலாதிக்கத்திற்கு, பெற்றோருக்கு பிள்ளைகளை அறிவியல் பூர்வமாக வளர்க்கத் தெரியாது என்று நம்மை நம்ப வைத்து மேலாதிக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இருக்கின்ற பொருளாதாரச் சுழற்சியில் குழந்தைகளை மையப்படுத்திய பொருளாதாரச் சுழற்சி அதிகம். குழந்தைகளை வளர்ப்பதென்பது வியாபார நோக்குடன் வழிகாட்டப்படுகின்றது.
இதிலிருந்து பெற்றோரையும் குழந்தைகளையும் மீட்டெடுப்பது முக்கியம்.
Post a Comment