கிராமத்துப் பொன்மாலைப் பொழுது

அவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. அப்போதெல்லாம் பொங்கல் பண்டிகையை குதூகலமாக வரவேற்க பல காரணங்கள் இருக்கும். முதல் காரணம் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் உடனடியாக வரும் விடுமுறை வாரம். அதற்குப் பின் முழு ஆண்டுத்தேர்வுக்கான படிப்புகள் விறுவிறுப்பாக(!!!) தொடங்கிவிடும்.


அடுத்த காரணம் பொங்கல் திருநாள் என்பது விவசாயக் குடும்பத்தில் நேரடியாக மகிழ்ச்சியை விதைக்கும் ஒரு பண்டிகை. பொதுவாக தை முதல் நாளான பொங்கல் தினத்தில் பொங்கல் வைத்து கொண்டாடுவது எங்கள் பகுதி விவசாயக் குடும்பங்களில் வழக்கம் இல்லை. பொங்கல் தினத்தன்று குலதெய்வம் கோவிலுக்கோ, கூடுதுறை, கொடுமுடி அல்லது பழனிக்கோ செல்வது வழக்கம். அப்படி போய் வருவதற்காக முதல் நாளே கட்டுச்சோறு கட்டி பொங்கல் தினத்தன்று விடியற்காலையில் கிளம்பி மதியமோ, மாலையோ களைத்து வீடு திரும்புவது மிக மகிழ்ச்சியான ஒன்று. அடுத்த நாள் வரும் மாட்டுப் பொங்கல் தான் வண்ணமயமாக கொண்டாடப்படும்.

எங்கள் வீட்டில் பசுமாடு வளர்த்ததாக நினைவில்லை. பாலுக்காக எருமைகளும், உழவுக்காக எருதுகளும், ஆடிமாதம் வெட்டி விருந்து வைப்பதற்காக ஆட்டு கிடாய்களும் வளர்த்திருக்கிறோம். பொங்கலுக்கு இரண்டொரு நாட்கள் முன்பாக எருதுகளுக்கு லாடம் அடிக்கப்படும்.

மாட்டுப் பொங்கலன்று காலை முதல் கட்டுத்தறை கூட்டிப் பெருக்கப்பட்டு மிக நேர்த்தியாக சுத்தம் செய்யப்படும். அடுத்ததாக எருமை மாடுகளும், மாட்டு வண்டியும் வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்து, வண்டியின் பலகைகளில் புதிய வண்ணம் அடிக்கப்பட்டு மெருகேற்றப்படும். எருதுகளின் கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்கப்படும். அடிக்கப்ட்ட பெயிண்டுக்கு எதிர்நிறத்தில் கொம்புகளில் புள்ளி வைக்கப்படும். எருமைகளுக்கு பெயிண்ட் சூடு என்ற காரணம் சொல்லி, காவிக்கல் சாயம் மட்டும் பூசப்படும். எல்லாவற்றிற்கும் புதுக்கயிறுகள் மாற்றப்படும்.

அதே சமயம் ஒரு ஓரமாக மூன்று கற்கள் வைத்து பச்சரிசிப் பொங்கல் வைக்கப்பட்டிருக்கும். கட்டுத்தறையில் ஒரு பகுதியில் சாணம் போட்டு மொழுகி, அதில் மாட்டுச்சாணம் மூலம் ஒரு பிள்ளையார் வைத்து, சில அருகம்புல் சொருகி, பூக்கள் தூவப்படும். பொங்கல் பானையை நடுவில் வைத்து, மஞ்சள் தூர், கரும்புத் துண்டுகளோடு, சின்ன சின்ன வாழை இழைகளில் பொங்கல் சோறு வைக்கப்பட்டு கொஞ்சம் வாழைப்பழம் அதில் வைக்கப்படும். அது தழுவுச் சோறு என அழைக்கப்படும். கிணற்றில் நேரடியாக எடுத்து வந்த சொம்பு நீரோடு தேங்காய் உடைத்து கலக்கப்பட்டு தீர்த்தமாக்கி, பூஜையில் நீர் விழாவி, கற்பூரம் காட்டி, சாம்பிராணி புகையோடு பூஜை நிறைவடையும். அதன் பின் ஒவ்வொரு எருமை மாட்டிற்கும் சாம்பிராணி புகை காட்டப்பட்டு, தழுவு சோறு ஊட்டுவதோடு மாட்டுப் பொங்கல் இனிதே நிறைவேறும்.

காலப் போக்கில் உழவுக்கு ஏர், கலப்பை, உழவு எருதுகள் தேய்ந்து போய் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரம் உட்புகுந்தது, தற்சமயம் எங்கள் கிராமத்திலும், அநேகமாக சுற்றியுள்ள கிராமங்களிலும் கூட உழவுக்கான எருதுகள் அற்றுப்போனதாகவே நினைக்கிறேன். பாலுக்காக வளர்க்கப்படும் மாடுகளும், எருமைகளும் இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மாட்டுப் பொங்கலும் கொஞ்சம் பழைய நேர்த்தியை இழந்திருந்தாலும், இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

மாட்டுப் பொங்கல் தினத்தின் மாலை ஒவ்வொரு விவசாயின் பட்டியிலும், கட்டுத்தறைகளில் பொன் மாலைப் பொழுதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
___________________________________________

29 comments:

vasu balaji said...

உங்க ஊர் பொங்கலும் சொல்லி வெறுப்பேத்துறீங்களா? அவ்வ்வ். படிக்கும்போதே கரும்புக்காடும் , மஞ்சக்கொல்லை வாசனையும் அசத்துது.

ங்கொய்யால கரிநாள் குழம்பு எப்பன்னு நொட்ட உட்டுகிட்டு உக்காந்து என்னப்பத்தி எழுதல பாரு இந்தாளு. கேளு வானம்பாடின்னு தோட்டக் கோழி கூவுதுங்ணோ.:)

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....

பின்னோக்கி said...

இந்த பதிவும், வானம்பாடிகள் பதிவும், பொங்கல் பண்டிகையினை நிறைவு செய்கின்றன வித்தியாசமான பார்வை மூலம்.

பொங்கல் வாழ்த்துகள்.

க ரா said...

கான்கிரிட் காடுகள்ள மக்கள் வாழ பலகிட்டாங்க இப்ப.. பாக்கெட் பால் வாங்கி காப்பி குடிக்கற் இந்த காலத்துள மாடுன்னு ஒன்னு இருக்கரெதெ நிரைய பேருக்கு மறைந்த்து போய்ரும் போல்ருக்கு.. இதுல எங்க மாட்டு பொங்கல் கொண்டாட...

அமர பாரதி said...

பொங்கல் வாழ்த்துக்கள் கதிர்.

//அது தழுவுச் சோறு என அழைக்கப்படும்// தளிகை சோறு என்பதே மருவி தழுவுச் சோறு என்று ஆகியிருக்கிறது.

நேசமித்ரன் said...

மிக நல்ல நினைவு கூறல் கதிர்

காட்சிப்படுத்தும் வலைத்தள பத்தியாளர்களில் உங்களின் மொழி
தனித்துலவுகிறது

அப்புறம் கட்டுத்தறையா இல்லை
கட்டுத்தரையா ?

கட்டுத்துறை-கட்டும்துறை- இல் இருந்து மருவி கட்டுத்தறை எனில்
மகிழ்வு

கட்டும் தரை- கட்டுத்தரை எனில் எனக்குத்
தெளிய விருப்பம்

நன்றியும் திருநாள் வாழ்த்துகளும்

:)

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க கதிர்

Unknown said...

//உங்க ஊர் பொங்கலும் சொல்லி வெறுப்பேத்துறீங்களா?
//

இந்த வெறுப்புலதான் அந்த இடுகையா??

Anonymous said...

I enjoyed reading your post. It brought back so many wonderful memories for me. Thanks.
Ravi

கலகலப்ரியா said...

mm.. pongal vazhthugal..

Romeoboy said...

ஹ்ம்ம்.. ஏக்கத்த வரவழைத்துவிட்டிங்களே ..

காமராஜ் said...

இயற்கைக்கு நன்றி சொல்லும்,விவசாயத் தோழமைகளுக்கு நன்றி சொல்லும் பண்டிகை.நினைவுகளை ஏந்திக்கொண்டு கொண்டாட்டமாகிறது.நிரைய்யப்பேசவேண்டும்.இது விவசாய நாடு.மெல்ல மேல்ல மேலைச்சமூகம் மென்னியைத்திருகுகிறது.கையிருப்புக் குறைந்துப் போனதாக கவுருமெண்டே கைபிசைகிற நிலைமை.110 கோடி மக்களுக்கான உணவை கையேந்திப்பெற முடியாது.காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் ஏக்கப்பெருமூச்சு சுழன்றடிக்கிறது.அவர்களிடம் இருந்து உருவிய கோவணம் மீண்டு வருகிறது.அதை மீட்டு அவர்கலுக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.இதை உலகுக்குச்சொலல் வேண்டும்.அந்த நினைவுகலோடும் பொங்கட்டும்.

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு நண்பரே!

முனைவர் இரா.குணசீலன் said...

அவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. //

உண்மைதான் நண்பரே..
தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் சிறைப்பட்டுப் போனார்கள் மக்கள்..

அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வீட்டுக்குள் பொங்கல் வைக்கின்றனர் மக்கள்..

எதிர்காலத்தில் இந்தப்பண்டிகைகளையும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து அடையாளம் கண்டுகொள்வார்கள்!!

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

நல்ல நினைவாற்றல் - நல்ல நிகழ்வுகளைத் தொகுத்து அளித்தமை நன்று

நல்வாழ்த்துகள் கதிர்

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்... நல்லாருக்கு. என் பொங்கல் தினங்களுக்கே போயிட்டு வந்திட்டேன்

கே. பி. ஜனா... said...

பொங்குகிறது உள்ளம் பழைய பொங்கல் தினங்களை நினைத்து!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சிறு வயதில் ஒரே ஒரு முறை என் பாட்டி வீட்டில் பொங்கல் கொண்டாடியிருக்கிறேன்.மற்றபடி நகரத்தில் வைக்கப்படும் குக்கர்,கேஸ் ஸ்டவ் பொங்கல்தான்.நல்ல இடுகை.

Unknown said...

//.. கட்டுத்தறை கூட்டிப் பெருக்கப்பட்டு மிக நேர்த்தியாக சுத்தம் செய்யப்படும் ..//
என் தந்தை தினமும் அப்படித்தான் வைத்து இருப்பார்.. :-)

ஒவ்வொரு வருடம் பெயிண்ட் பூசும்போதும் கண்டிப்பாக சட்டையில் எங்காவது ஒரு துளி பட்டுவிடும், அந்த சட்டையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மாட்டு பொங்கல் ஞாபகம் வரும்..

பொங்கலுக்கு வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பதை விட்டு விட்டீர்களே..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான பதிவு கதிர். இன்னமும் பழைய உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கலைக் கொண்டாடும் அன்பர்கள் எங்கள் வீட்டருகே இருக்கத்தான் செய்கிறார்கள்..

Radhakrishnan said...

மிகவும் அழகிய பதிவு.

எருமைக்கு சாயம் பூசுவதும், எருமைக்கும் சேர்த்து பொங்கல் கொண்டாடுவது நான் கேள்விப்படாத ஒன்று.

எங்கள் ஊர் நிகழ்வினையும் கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ஹும்...குடுத்துவைக்கலையே......

மாதேவி said...

கிரரமத்து நினைவுகளுடன் பொங்கல் மகிழ்ச்சி தருகிறது.

தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

நகரத்திலிருந்து தொலைவில் உள்ள கிராமங்களில் இந்த நடைமுறை இனனும் அப்படியே உள்ளது.வணக்கமுங்க.

அன்புடன் நான் said...

காலப் போக்கில் உழவுக்கு ஏர், கலப்பை, உழவு எருதுகள் தேய்ந்து போய் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரம் உட்புகுந்தது, தற்சமயம் எங்கள் கிராமத்திலும், அநேகமாக சுற்றியுள்ள கிராமங்களிலும் கூட உழவுக்கான எருதுகள் அற்றுப்போனதாகவே நினைக்கிறேன். பாலுக்காக வளர்க்கப்படும் மாடுகளும், எருமைகளும் இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மாட்டுப் பொங்கலும் கொஞ்சம் பழைய நேர்த்தியை இழந்திருந்தாலும், இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

மாட்டுப் பொங்கல் தினத்தின் மாலை ஒவ்வொரு விவசாயின் பட்டியிலும், கட்டுத்தறைகளில் பொன் மாலைப் பொழுதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.//
நீங்க சொல்லும் அந்த மகிழ்வை நானும் சுகித்திருக்கிறேன்.....

ஆனா கடைசியில் நீங்க எழுதியதுதான்,,, இன்றைய நிலை..... நேருடலாகவே இருக்கிறது.

கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

பிரபாகர் said...

கதிர்,

இது போன்ற தருணங்களின் ஊரில் இல்லையே எனும் ஏக்கம் இந்த இடுகையை படிக்கையில் ஏகமாய் அதிகரிக்கிறது...

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ அண்ணாமலையான்

நன்றி @@ பின்னோக்கி
நன்றி @@ ramasamy kannan

நன்றி @@ அமர பாரதி

நன்றி @@ நேசமித்ரன்
(கட்டும்துறை தான் இப்படி மருவி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்)

நன்றி @@ முகிலன்

நன்றி @@ Anonymous

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ Romeo

நன்றி @@ காமராஜ்

நன்றி @@ மாதவராஜ்

நன்றி @@ முனைவர்.இரா.குணசீலன்

நன்றி @@ cheena (சீனா)

நன்றி @@ இய‌ற்கை

நன்றி @@ K.B.JANARTHANAN

நன்றி @@ ஸ்ரீ

நன்றி @@ பட்டிக்காட்டான்

நன்றி @@ செந்தில்வேலன்

நன்றி @@ இராதாகிருஷ்ணன்

நன்றி @@ ஆரூரன்

நன்றி @@ மாதேவி

நன்றி @@ தாராபுரத்தான்

நன்றி @@ கருணாகரசு

நன்றி @@ பிரபாகர்

க.பாலாசி said...

//இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.//

நம்ம கிராமங்களில்மட்டும்...

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு