சகிக்க முடியா சகிப்புத்தன்மை



ஒவ்வொரு நாளும் தொலை தூரத்திலிருந்து வரும் தொடர் வண்டிகளின் மூன்றாம் வகுப்பு கழிவறையோரம் நிச்சயம் அவர்களை நாம் பார்க்கமுடியும். ஒரு கணவன், மனைவி, ஒன்றிரண்டு குழந்தைகள் இருக்கும். கணவன் மனைவி பெரும்பாலும் பேசவே மாட்டார்கள். இரவு முழுதும் பயணப்பட்டாலும் தூக்கம் ஒரு சொட்டுக் கூட அவர்களின் கண்களைத் தழுவாது. விளையாடும் குழந்தைகளை மௌனத்திலேயே அடக்குவார்கள்.

சரியாக முடிச்சிடப்படாத ஒழுங்கற்ற வெள்ளை உரச் சாக்கு மூட்டையில் வாழ்க்கையின் மிச்சம் மீதிகளை பாத்திரங்களாகவும், பண்டங்களாகவும் பதுக்கி இறுகிப்போய் உட்கார்ந்து கிடப்பார்கள்.

பயணச்சீட்டு வாங்கியவர்கள் கழிவறைப் பக்கம் செல்லும் போது அவர்களைக் கண்டு முகம் சுழிப்பதும், சில சமயம் கடிந்து கொள்வதும், அவர்களை திருடன் என்று சொல்வதும் மிக இயல்பாக நடக்கும்.

அவர்களிடம் மட்டும் மௌனம் மிக அடர்த்தியாய், மிகக் கனமாய் படிந்து கிடக்கும், பெரும்பாலும் பயணச்சீட்டு வாங்கியிருக்க மாட்டார்கள், காரணம் அதை வாங்க காசு இருந்திருக்காது. அவர்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே ஏதோ ஒரு காரணத்தினால் அகதியாக்கப் பட்டிருப்பார்கள். வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் ஏதோ ஒன்று அவர்களை வாழவிடாமல் துரத்தியிருக்கும்.

வாழ்க்கையின் மேல் முழுதும் நம்பிக்கையிழந்தவர்கள் பெரும்பாலும் தற்கொலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். ஏதோ ஒரு நுனியில் மட்டும் நம்பிக்கை மெலிதாய் தொடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் இரவோடு இரவாக பெரு நகரங்களை நோக்கிய தொடர் வண்டிகளில் சில மூட்டைகளோடு புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்டது ஒரு மிகச் சிறிய உதாரணம் மட்டுமே. இது போல் இடப்பெயர்வுகள் இந்த தேசத்தில் எல்லா நிமிடங்களிலும் தொடர்ந்து தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது.
இது எதனால்..........

இதற்கான மிக முக்கியக் காரணம் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் வித்தியாசமின்றி வேரூன்றியிருக்கும் சகிப்புத்தன்மையே

ஒரு மனிதனின் வாழ்வு அபகரிக்கப்படுவது சர்வசாதாரணமா நடந்து கொண்டேயிருக்கிறது. அவனின் நம்பிக்கை திருடப்படும்போதும், அவனின் வாழ்வுரிமை அபகரிக்கப்படும் போதும் கண்டும் காணாமல் போகும் புத்தி எங்கிருந்து வந்தது.

“நமக்கேன் இது”

“சரி நம்மால் என்னதான் செய்துவிடமுடியும்”

“அவரவர் தலைவிதி” .................... என பற்பல வார்த்தைகளில் சொத்தைச் சமாதானம் குவிந்து கிடக்கிறது.

இன்னொரு மனிதனைப் பற்றி சிந்திப்பவனை, உரிமை, நியாயம் என்பதற்கு போராடுபவனை வேலையத்தவன் என எப்படி மிக எளிதாக பட்டம் சூட்டி அழைக்க முடிகிறது.

படித்த பகுத்தறிவு(!!!) கொண்ட சமூகம், வசதி படைத்த சமூகம் “ப்ச்” என்ற சின்ன சப்தத்தோடு மிக எளிதாக அவர்களைக் கடந்து, தன் வட்டத்திற்குள் சுகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டேருக்கிறது. எங்கோ விழுந்த சுருக்குக் கயிறு தன்னை நோக்கி நீளும் போது மட்டும் பலவீனமான குரலில் கத்திப் பார்க்கிறது. உடன் ஒருவரும் வராததை அப்போதுதான் பயத்தோடு உணருகிறது.

ஏன் எதைக் கண்டாலும் சகித்துக் கொள்ளும் மனோபாவம் மிக எளிதாய் நம் மனதிற்குள் குடியேறிவிட்டது. தமிழகத்தில்தான் இந்த சகிப்புத் தன்மை மிதமிஞ்சி இருக்கிறதோ?

இந்த அருவறுப்பான சகிப்புத் தன்மையிலிருந்து வெளியில் வந்து, சக மனிதனின் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலை என்று வரும்?

சரி... எப்போது நம் சகிப்புத்தன்மையின் மீது கோபம் வரும்?

வருமா....!!!???

--------------------------------------------------------------

(விகடன் முகப்பிலும், இளமை விகடனின் ஹைலட் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை)

40 comments:

Rajan said...

//சரி... எப்போது நம் சகிப்புத்தன்மையின் மீது கோபம் வரும்?//

அனேகமாக எப்போதும் வரப்போவதில்லை தோழா!

தன் தலையில் குண்டு இறங்கும்போதும்;
தன் உறவுகள் சித்ரவதைக் குட்படும்போதும் ;
தன் பிள்ளைகள் ரணம் கொண்ட வழிகளால் துரத்தப் படும்போதும் ... ஒரு வேளை வரக்கூடும் ...
அது நேரம்
பழங்கதைகள்
சிரம் ஏறும் !

நர்சிம் said...

//விகடன் முகப்பிலும், இளமை விகடனின் ஹைலட் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை//

நிச்சயம் வரவேண்டிய கட்டுரைதானே.நல்லா எழுதி இருக்கீங்க.

வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

//இன்னொரு மனிதனைப் பற்றி சிந்திப்பவனை, உரிமை, நியாயம் என்பதற்கு போராடுபவனை வேலையத்தவன் என எப்படி மிக எளிதாக பட்டம் சூட்டி அழைக்க முடிகிறது.//

மிகச் சரியா சொன்னீங்க.

அவசியாமான இடுகை கதிர். ஒவ்வொரு முறை ரயில் பயணத்தின் போதும் இம்மாதிரியானவர்களைப் பார்க்கும்போது இவர்களின் பிரச்சனை என்னவாக இருக்குமென்று யோசிப்பதுண்டு.அவர்களிடம் பேசியிருக்கின்றீர்களா,சும்மா ஏதாவது சாதாரணமா பேசினாலும் பயந்தே பேசுவார்கள்.கண்டிப்பா நான் சார்ந்த பகுதியிலாவது எதாவது செய்யணும் செய்வேன்.

ஆ.ஞானசேகரன் said...

//விகடன் முகப்பிலும், இளமை விகடனின் ஹைலட் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை//

முதலில் வாழ்த்துகள் கதிர்... அதற்கு தகுதியான கட்டுரையும் கூட...

ஆ.ஞானசேகரன் said...

//சரி... எப்போது நம் சகிப்புத்தன்மையின் மீது கோபம் வரும்? வருமா....!!!??? //


அப்படி வரவேண்டும் என்ற ஆசைகள் எனக்குள்ளும் இருக்கின்றது கதிர்..

நாகா said...

//இந்த அருவறுப்பான சகிப்புத் தன்மையிலிருந்து வெளியில் வந்து, சக மனிதனின் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலை என்று வரும்?//

நிச்சயம் வராது கதிர். இந்தியனின்/தமிழனின் பிறவிக்குணங்களில் ஒன்று இது. காசுக்காக கையேந்தும் வாக்காளர்கள் உள்ள நாட்டில் மற்றவன் உரிமைக்கு குரல் கொடுப்பதாவது..

பிரபாகர் said...

நல்ல சிந்திக்க வைக்கும் இடுகை.

சிவப்பில் இட்ட கேள்விக்கு பதில் கிடைத்தால் உடன் ஒரு புதிய இந்தியா மலரும். யாவும் நன்றாக நடக்கும். கனவு காண்போம் கதிர்.

பிரபாகர்.

Ashok D said...

:)
’smiley’ என்பதை விட ’ப்ரகாசம்’ என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

ஊடகன் said...

//அவர்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே ஏதோ ஒரு காரணத்தினால் அகதியாக்கப் பட்டிருப்பார்கள்.//

நானும் இதை சிந்தித்து பார்த்தது உண்டு.............
நல்ல உணர்வி மிக்க பதிவு...........
அனால் இதற்க்கெல்லாம் ஆரம்பம் மற்றும் முடிவு எங்கிருந்து.............?

V.N.Thangamani said...

விழிப்புணர்வை தூண்டும் அற்புதமான சிந்தனை. நன்றி கதிர்.
வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com

பித்தனின் வாக்கு said...

good article. we can't do nothing in these things.

ஹேமா said...

வாழ்த்துக்கள் கதிர்.சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் மனிதன் எப்போதும் முரடனாக் கோபத்துடனேயே வாழவேண்டிவரும்.சிலர் இப்போதும் அதற்குச் சான்று.

கலகலப்ரியா said...

தலைப்பும்... கட்டுரையும் பிரமாதம் கதிர்..!

கலகலப்ரியா said...

விகடனில் வந்தமைக்கு வாழ்த்துகள்...!

vasu balaji said...

சகித்து சகித்து முடியாமல் எழுந்த கேள்வியிது. விகடனின் அங்கீகாரம் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. விடை கிடைக்கும் என நம்புவதோடு, அவ்வப்பொழுது பொங்கவும் வேண்டும்.
பாராட்டுகள் கதிர்.

ஈரோடு கதிர் said...

@@ rajan RADHAMANALAN
(பகிர்வுக்கு நன்றி)

@@ நர்சிம்
(மிக்க நன்றி நர்சிம்)

@@ நாடோடி இலக்கியன்
//நான் சார்ந்த பகுதியிலாவது எதாவது செய்யணும் செய்வேன்//
(இப்போதைக்கு இதுவாவது நடக்கட்டும் பாரி)

@@ ஞானசேகரன்
(வரவேண்டும் என்ற ஆசை சரிதான், ஆனால் எங்கிருந்து வரும்.... நமக்குள்ளே நாம்தானே கொண்டு வரவேண்டும் நண்பா)

ஈரோடு கதிர் said...

@@ நாகா
(சரிதான் நாகா....)

@@ பிரபாகர்
(சிவப்பில் இட்ட கேள்விக்கு பதில் உங்களிடமும், என்னிடமுமே இருக்கு பிரபா)

@@ D.R.Ashok
(அப்படியே எடுத்துக்கொண்டேன்)

@@ ஊடகன்
(முடிவு நம்மிடமிருந்தே)

@@ வி.என்.தங்கமணி
(நன்றி)

ஈரோடு கதிர் said...

@@ பித்தனின் வாக்கு
(அப்படியா....)

@@ ஹேமா
(ஆனால் சகிப்புத்தன்மே மட்டுமே எல்லா இடத்திலும் விரவி வேறூன்றிக் கிடக்கிறதே)

@@ கலகலப்ரியா
(நன்றி...நன்றி)

@@ வானம்பாடிகள்
(அண்ணா...... பொங்கும் உணர்வு வரவிட்டால்.... வெறும் புழுவாக நெளியும் நாள் வெகு தூரத்தில் இல்லை)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் கதிர்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏன் எதைக் கண்டாலும் சகித்துக் கொள்ளும் மனோபாவம் மிக எளிதாய் நம் மனதிற்குள் குடியேறிவிட்டது. தமிழகத்தில்தான் இந்த சகிப்புத் தன்மை மிதமிஞ்சி இருக்கிறதோ? //

ஆமாம்

இதிலும் மோசமான விடயங்களை தி.நகர் ரங்கநாதன் தெருவிலும், நிறைய ரயில் நிலையங்களிலும் பார்க்க்லாம் :((((((

நமக்கு இதையெல்லாம் பார்க்க கேட்க எங்க நேரமிருக்குது! என்பதும் ஒரு காரணமே !!!!

பின்னோக்கி said...

நல்ல கட்டுரைக்கு நல்ல முறையில் வரவேற்பு. நானும் பல தடவை அந்த மாதிரி குடும்பங்களை பார்த்திருக்கிறேன் :((. நல்ல கேள்வி. பதிலில்லை.

க.பாலாசி said...

மிகச்சிறந்த இந்த சிந்தனைக்கட்டுறைக்கு வாழ்த்துக்கள் அன்பரே.

பலநேரங்களில் இதுபோன்றதொரு பயணங்களில் நானே அவர்களின் அருகில் பயணித்திருக்கிறேன். இதைபோன்ற மனிதர்கள் எப்படி நம்போன்ற சகிப்புத்தன்மை மிக்கவர்களை சகித்துக்கொண்டு தங்களது வாழ்க்கையினை கடந்து செல்கிறார்கள் என்றே எனக்கு தோன்றும். தாங்கள் குறிப்பிட்டதுபோல் விளிம்புநிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் மிகச்சிறிய நம்பிக்கையே அவர்களின் வாழ்க்கையை வழிநடத்துகிறது.

//இன்னொரு மனிதனைப் பற்றி சிந்திப்பவனை, உரிமை, நியாயம் என்பதற்கு போராடுபவனை வேலையத்தவன் என எப்படி மிக எளிதாக பட்டம் சூட்டி அழைக்க முடிகிறது.//

நம்மைச்சுற்றியும் இப்படி பலர் இருக்கிறார்கள்.

//எங்கோ விழுந்த சுருக்குக் கயிறு தன்னை நோக்கி நீளும் போது மட்டும் பலவீனமான குரலில் கத்திப் பார்க்கிறது. உடன் ஒருவரும் வராததை அப்போதுதான் பயத்தோடு உணருகிறது.//

சரியான செய்தி....

//ஏன் எதைக் கண்டாலும் சகித்துக் கொள்ளும் மனோபாவம் மிக எளிதாய் நம் மனதிற்குள் குடியேறிவிட்டது.//

வருந்ததக்க உண்மை. மற்றபடி என்னிடம் பதில் இல்லை.

நல்ல இடுகை...

thiyaa said...

////
சரி... எப்போது நம் சகிப்புத்தன்மையின் மீது கோபம் வரும்?

வருமா....!!!???

////

வரும் ஆனால் வராது காமடி போலத்தான் இதுவும்

தமிழனா ம்கூம் நடக்கவே நடக்காது. கசப்புணர்வுடன் வாழப் பழகியவனுக்கு எங்கே அது புரியும் நானும் அதி ஒருவன் என்பதை நினைக்க வெட்கமாக இருக்கிறது.

என் தலைமீது குண்டோ இடியோ விழாதவரை சரி மற்றவருக்கு எது நடந்தால் எனக்கென்ன என்றிருப்போம் .

"குண்டு விழுந்தான் என்ன
குருதி தெரித்தால் என்ன
பலர்
துண்டு துண்டாய் சிதறி மடிந்தாலென்ன
கண்டும் காணும்
விடுவதெம் இயல்பு
இதை
வாயால் சொல்லு
மனம் தடுக்கும்
உள்ளே வைத்து புழுங்கிச்
சாக மட்டுமே லாயக்கு"

கண்ணகி said...

வாழ்த்துக்கள் கதிர். நாமெல்லாம் மனிதர்கள் என்றா நினைக்கிரீர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு காரணங்கள். வாழ்க்கை ஒடிகொண்டிருக்கிறது.அவ்ரவ்ர் கோணங்களில் நியாயப்படுத்திகொண்டிருகிறொம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//தமிழகத்தில்தான் இந்த சகிப்புத் தன்மை மிதமிஞ்சி இருக்கிறதோ?
//

அப்படித் தோன்றவில்லை கதிர். இது பொதுவான மனித குணம் தான். பிரச்சினைக்குத் தீர்வுகள் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை; யாரோ ஒருவர் இருவர் மூலமாகவும் வாய்ப்பதில்லை. எல்லாவற்றுக்கும் அடிப்படைத்தீர்வு ஒன்றுதான். ஒவ்வொருவரும் உணர்வது அவசியம். உணரவும், உணரச்செய்யவும் நம்மால் முடியுமானால், இதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கும் தேவை இருக்காது.

//இன்னொரு மனிதனைப் பற்றி சிந்திப்பவனை, உரிமை, நியாயம் என்பதற்கு போராடுபவனை வேலையத்தவன் என எப்படி மிக எளிதாக பட்டம் சூட்டி அழைக்க முடிகிறது.//

இதற்கொன்றும் செய்வதற்கில்லை என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது

-ப்ரியமுடன்
சேரல்

காஞ்சனை said...

//சரி... எப்போது நம் சகிப்புத்தன்மையின் மீது கோபம் வரும்?
வருமா....!!!???//

வரும். நடக்கும் எல்லாவற்றையும் ஒரு மெளன சாட்சியாய் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஏதும் செய்ய இயலாத நிலையை நினைத்துக் கோபம் வரும். மனம் கசியும். பிறகு அடுத்த வேலையை நோக்கி கவனம் சென்று விடும். ஆனால் அந்த பாதிப்பு மட்டும், அதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மனதில் கனன்று கொண்டேயிருக்கும்.

வெண்ணிற இரவுகள்....! said...

//அவர்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே ஏதோ ஒரு காரணத்தினால் அகதியாக்கப் பட்டிருப்பார்கள். வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் ஏதோ ஒன்று அவர்களை வாழவிடாமல் துரத்தியிருக்கும்.//
உங்கள் கட்டுரை ராமகிருஷ்ணனின் துணை எழுத்தை போல ஆழமாக இருந்தது
//படித்த பகுத்தறிவு(!!!) கொண்ட சமூகம், வசதி படைத்த சமூகம் “ப்ச்” என்ற சின்ன சப்தத்தோடு மிக எளிதாக அவர்களைக் கடந்து, தன் வட்டத்திற்குள் சுகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டேருக்கிறது. எங்கோ விழுந்த சுருக்குக் கயிறு தன்னை நோக்கி நீளும் போது மட்டும் பலவீனமான குரலில் கத்திப் பார்க்கிறது. உடன் ஒருவரும் வராததை அப்போதுதான் பயத்தோடு உணருகிறது.
//
கேட்டால் பகுத்தறிவு......அவர்களிடம் உழைத்து உண்ண வேண்டும் என்று கருத்து சொல்வார்கள்
உங்களை பின் தொடர்வதில் பெருமை அடைகிறேன் ....வலி உணர்த்தும் எழுத்து நண்பா...........
என்ன செய்ய நம்ம எழுத மட்டுமே முடிகிறது....நேற்று கூட ஒரு பிச்சைகார குழந்தை பாத்தேன் அதற்க்கு
சோறு கிடைக்கும் அன்பை யார் காட்டுவார்கள்...பெண் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம் ...அழுகை வந்தது நாமெல்லாம் எதற்கு எழுதிக்கொண்டிருக்கிறோம்.....வெறுப்பு வருகிறது.....மன்னிக்கவும் உணர்ச்சிவச பட்டுவிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

@@ பிரியமுடன்...வசந்த்
@@ அமிர்தவர்ஷினி அம்மா
@@ பின்னோக்கி
@@ பாலாசி
@@ தியாவின் பேனா
@@ வாத்துக்கோழி
@@ சேரல்
@@ சகாராதென்றல்
@@ வெண்ணிற இரவுகள்
@@ T.V.Radhakrishnan

இந்த இடுகை தங்கள் கருத்து மனதில் ஒரு நம்பிக்கையைத் தருகிறது...

நட்புகளே.... தங்கள் பின்னூட்டப் பகிர்வுகளுக்கு நன்றிகள் பல....

அமர பாரதி said...

//வருமா....!!!???// வராது. நம் சமூகம் எந்த பொறுப்பையுமே தட்டிக் கழிப்பதில் காட்டும் முனைப்பை செய்வதில் என்றுமே காட்டியதில்லை.

Deepa said...

மனசாட்சியோடு நேரடியாகப் பேசும் (ஏசும்) கட்டுரை.

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஷண்முகப்ரியன் said...

உலகத்தில் 90% சகித்துக் கொள்பவர்களே.
சரித்திரங்களை மாற்றுவது மீதி 10% தான்,கதிர்.
அதனால்தான் மீண்டும் பழைய சரித்திரங்களை மாற்ற அவ்வளவு போராட வேண்டி இருக்கிறது.

Radhakrishnan said...

பிரமாதமான கட்டுரை ஐயா.

வரும், அப்படி வந்தாலும் ஒரு பிரயோசனமில்லை.

ஏன்னா ஒன்னு நாம் எழுத்துல அந்த அவலத்தை வைப்போம், இல்லைன்னா புலம்பிட்டுப் போயிட்டே இருப்போம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்.. மிக அருமையான இடுகை. நம் இரத்தத்தில் ஊறிப்போனது சகிப்புத்தன்மை. நம் நாட்டின் பெரிய சாபக்கேடு சகிப்புத்தன்மை என்பது என் கருத்து.

Thamira said...

இன்றைய சூழலில் சரியான‌ கேள்வி. அந்தக் கேள்விக்கான நியாயம் சேர்க்கும் முற்சேர்க்கைகள் மிகப்பொருத்தம், கச்சிதம்.!

Itsdifferent said...

எல்லோரும் இப்படி வருத்தபடுவதை விட ஏதாவது ஒன்று செய்ய முனைவது நன்று. இந்த ஒரு பிரச்சினை மட்டும் அல்ல, நிறைய விஷயத்தில் இப்படி தான், பதிவு செய்வதோடு நம் கடமை முடிவதில்லை. ஏதாவது செய்ய வேண்டும்...நான் என்ன செய்கிறேன் என்று கேட்பவர்களுக்கு, நான் இருக்கும் இடத்தில் இருந்து செய்ய முடிந்த காரியம் - சில சமூக அமைப்புகள் மூலம், நான் ஒரு 20 பிள்ளைகளுக்கு அவர்களின் படிப்பு செலவுகளை ஏற்று கொண்டுள்ளேன்.
தமிழ் பதிவுலகம் சமூக அக்கறை கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி கொண்டு தான் உள்ளேன், ஆனால்...

நிலாமதி said...

நீங்களும் சிந்தித்து , மற்றவர்களையும் சிந்திக்க வைத்த பதிவு .....பாராட்டுக்கள்.

சீமான்கனி said...

மிக நல்ல பதிவு அண்ணே...நானும் நிறைய பயணங்களில் இவர்களை கவனிப்பதுண்டு...நகரவாசிகளிடம் சகிப்பு தன்மை தான், வசிக்க ஒரு பெரிய தகுதி.. சரிதானே...சுயநலம் விஞ்சி இருக்கும் வரை கோபமே வராது ....
நன்றி அண்ணே...தகுதியான கட்டுரை
வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

//உலகத்தில் 90% சகித்துக் கொள்பவர்களே.
சரித்திரங்களை மாற்றுவது மீதி 10% தான்,கதிர்.
அதனால்தான் மீண்டும் பழைய சரித்திரங்களை மாற்ற அவ்வளவு போராட வேண்டி இருக்கிறது.//


ரிப்பீட்டு

ஈரோடு கதிர் said...

@@ அமர பாரதி

@@ Deepa

@@ ஷண்முகப்ரியன்

@@ வெ.இராதாகிருஷ்ணன்

@@ ச.செந்தில்வேலன்

@@ ஆதிமூலகிருஷ்ணன்

@@ Itsdifferent
(சல்யூட்)

@@ நிலாமதி

@@ seemangani

@@Cable Sankar

நட்புகளே.... தங்கள் பின்னூட்டப் பகிர்வுகளுக்கு நன்றிகள் பல....