Aug 11, 2014

கீச்சுகள் தொகுப்பு - 50



சுயசரிதையின் ஒரு முக்கியக் காரணி, அதிலிருப்பதை உண்மையென நம்புமாறு நிர்பந்தம் செய்வது!

-

தன் மீதிருக்கும் சந்தேகம் சில நேரங்களில் பாதுகாப்பு, பல தருணங்களில் பெரும் ’பிணி’

-

நமக்குள்ளிருக்கும் உலகத்தின் எல்லைகளை, தான் நீண்டு செல்லும் பாதையெங்கும் விரிவுபடுத்துகிறது ’விவாதம்’.



-

திட்டமிட்ட சந்திப்புகளைவிட, எதிர்பாராமல், திட்டமிடாமல், முன்முடிவுகளற்று நிகழும் சந்திப்புகள் தரும் சுவை அலாதியானது.

-

ஒரு தனியார் பள்ளியின் அரங்கத்தில் காமராஜர் படம் பெரிதாக ஒட்டப்பட்டிருக்கிறது. சமூகத்திற்கு என்னவோ சொல்ல வர்றாங்க... ஆனா எனக்குப் புரியல!

-

’வாக்கிங் போறேன்’னு கடுப்பேத்தியவனிடம், “நடந்து போ!” எனச் சொல்லி தற்காலிகமாகப் பழி தீர்த்துக் கொண்டேன்! :)

-

இந்த மழை மண் வாசனையைக் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை. தார் ரோட்டில் தேய்ந்த டயர்களின் நாற்றத்தை அகற்றும் அளவிற்கேனும் வந்தால் போதும்!

-

கிளையில் அமரும் பறவை மரத்தின் வேர் குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை!

-

கீழ்நோக்கி வரைந்த கோடு ஒன்றினை முற்றுப்புள்ளி வைத்து நிறுத்தினேன் புள்ளி வழிந்துகொண்டிருக்கிறது

-

நெடுஞ்சாலை ‘டோல்கேட்’களில் வேலை செய்யும் பையனிடம் கட்டணம் குறித்த கோபத்தைக் காமிப்பதும் உலகின் தலைசிறந்த மொக்கைத்தனமே!

-

தராசுத் தட்டுகளில் அமைதியும் கொண்டாட்டமும்! முள்ளொன்றும் நேராக நிற்க வேண்டியதில்லை!

-

அடர் வனமொன்றில் அவசரமாய்த் தொலைந்து போகலாம் வாருங்கள்! அவசரமொன்றுமில்லை ஆற அமரத் தேடிக்கொள்வோம்!

-

டிபன் பாக்ஸ்லயிருந்து திங்கிறது என்ன சோறுனு தெரியாம அள்ளிப் போடுறதும், போன் பண்ணி அதென்ன சோறுனு கேக்காம மறந்து போறதும்கூட ஜென் நிலைதான்!

-

கடந்தோடும் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யங்களை நம் உள்ளங்கையில் வைத்து, விரல்களை மடக்கி மூடி, விரல்களின் மேல் செல்லமாய் தட்டிவிட்டுப் போகின்றன.

-

முரண்களின் மொத்தத் தொகுப்பாகவும், சுவாரஸ்யங்களின் கிடங்காவும் தங்களை தகவமைத்துக் கொள்வதில் மனிதர்களுக்கு நிகர் மனிதர்களே.

-

ஒரு விடியலின் சாயம் குழந்தைக்கு ஒருவிதமாகவும், பெற்றோர்களுக்கு அதன் நேரெதிராகவும், அக்கம்பக்கத்தாருக்கு இன்னொரு விதமாகவும் அமைகின்றது

-

வாழ்க்கையின் ஆகச்சிறந்த சுவாரஸ்யம் நாம் வாழவேண்டிய எந்த ஒரு நாளையும், அது இப்படித்தான் இருக்க வேண்டுமென வடிவமைத்துக்கொள்ள

-

என்னைக் குறித்து நீங்கள் நினைக்கும், கற்பனை செய்யுமளவிற்கு இருக்க, நினைக்க, கற்பனை செய்ய எனக்கு என்னிடம் அனுமதியில்லையென்பதே நிதர்சனம்!

-

நாத்திகன் மேல் ஆத்திகனுக்கு வரும் கோபம், கடவுளை நம்பவில்லையே என்பதைவிட, தன் நம்பிக்கையை நம்பவில்லையே என்பதுதான்! :)

-

எட்டிப்பிடிக்க முடியா முதுகின் மையத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பை நசுக்கவோ/உதறவோ தவிப்புபோல் வாழ்வின் சில சூழல்கள் தவிக்க வைக்கின்றன.

-

Aug 2, 2014

12 வருட அடிமை - 12 Years a Slave



வியந்து நோக்கி ஏங்கித் தவிக்கும் அமெரிக்க தேசத்தின் 1941 – 1953க்கு இடைப்பட்ட காலச் சரித்திரத்தின் ஒரு வலி மிகுந்த பக்கமே “12 வருட அடிமை”

நியூயார்க் நகரில் தன் குடும்பமும், தொழிலும், வயலின் வாசிப்புமென சுதந்திரமாக இருந்த கறுப்பரான சாலமன் நார்த்தப் (எஜியோஃபார்) வயலின் வாசிப்பதற்கென என வாஷிங்டன் அழைத்துச் செல்லப்பட்டு, அன்றிரவு மதுமயக்கத்தில் உறங்கச் செல்கிறார். கண் விழிக்கும்போது கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு எளிதாக ஒரு அடிமையாக மாற்றப்பட்டிருப்பது புரிகிறது. தான் அடிமையில்லை என மறுக்க அடித்து நொறுக்கப்பட்டு தன் அடையாளங்களைத் தொலைத்து ’ப்ளாட்’ எனும் புதுப்பெயரோடு விற்கப்படுகிறார். அதிலிருந்து அவரின் 12 கால அடிமை வாழ்க்கைதான் கதை. உண்மையான கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்



இரத்தமும் சதையுமான என்ற பதத்திற்கு மிகமிகப் பொருத்தமான வாழ்க்கை என்றால் இவர்களின் அடிமை வாழ்க்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆதிக்கம் நிறைந்த ஒரு சக்தி தன்னிடம் அடிமையாக கிடைப்பவர்களை எவ்வளவு மோசமாக நடத்தும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆவணமாக இருக்கும்.

அடிமையாக மாற்றப்பட்ட ஒருவன், தன்னை அடக்கும் சக்தியை எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனையையும் கூட யுக்தியாகவே அடக்கி வைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். சாலமனுக்கும் கூட தான் அடிமை இல்லை என்பதால் விடுவிக்கப்பட வேண்டுமென்று மட்டுமே தோன்றுகிறதேயன்றி, அடிமைத்தனத்தை எதிர்க்கத் தோன்றவேயில்லை. அப்படியான மனநிலையைத்தான் அடிமைகளுக்கு ஆதிக்க சக்தி இயல்பாக புகட்டியிருக்கின்றது. அடிமைகள் ஆடுமாடுகளைப் போல் ஏலம் விடப்படுவதும், அம்மா பிள்ளைகள் பிரிக்கப்படுவதுமென கற்பனை செய்யமுடியாத அளவிலான குரூரங்களைக் கொண்டவை. அடிமைகளை வாங்கிய வெள்ளையர்களில் அத்தனை பேருமே மோசமானவர்களா என்றால் இல்லைதான்.

நம்மூர்களில் இன்றளவும் ஆதிக்க சாதியினரில் சிலர், தீண்டத்தகாத சாதியினர் என வகைப்படுத்தியவர்களோடு எந்த வகையிலும் புழங்க மறுத்துவிடுவதுண்டு. ஆனால் அவர்களிலேயே சிலர் அந்த சாதிப் பெண்களை புணர்வதற்கு மட்டும் மறுப்புகளில் விதிவிலக்கு வைத்துக் கொள்வதுண்டு. அதேபோல் அடிமைகளாக வந்த பெண்களை விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தினாலும், அந்தப் பெண்களை தொடர்ந்து தொடர்ந்து வன்புணர்வு செய்வதற்கு மட்டும் விதிவிலக்குகள் வைத்துக்கொண்டிருப்பதைக் காணும் போது, பெண்ணை வன்புணர்வு செய்வதில் அன்றும் இன்றும் உலகம் பொதுவான அவலத்தையே கடைபிடிக்கிறது என்பது புரிகிறது.

படம் குறித்து எத்தனையெத்தனை அலங்காரச் சொற்களை இங்கு உதிர்த்தாலும், அதில் சாலமனின் வியர்வை வாசத்தை, துளிர்த்த இரத்தத்தின் கவுச்சியை
, எலிசாவின் புத்திர சோகத்தை, ’பாட்சி’யின் வன்புணர்வு வலிகளை, அவள் முதுகில் வழிந்த இரத்தத்தின் கவுச்சியை உணர்த்திவிட முடியாது. படத்தைப் பார்த்தால் கொஞ்சமே கொஞ்சமாக உணரலாம். கூடவே ஆதிக்கத்தின் மரபணு எச்சம் எங்கேனும் நமக்குள் மிச்சம் இருந்தால் மானசீகமாக மன்னிப்புக் கோரலாம். அதே சமயம் சாலமனின் மேல் ஏவிவிடப்பட்ட அடிமைத்தனத்தின் மரபணு இன்றைக்கும் மிகுந்த யுக்தியோடு விதவிதமான வடிவங்களில் ஒவ்வொரு ஆதிக்க சக்திகளின் செயல்பாடுகளின் மூலமும் நமக்குள் தொடர்ந்து புகுத்தப்படுகின்றன என்பதையும் உணரத் துவங்கலாம்!


-

Aug 1, 2014

தகிப்பு





உச்சியில் நின்ற நாளில்
விரல் தொடும் தொலைவில்
நகர்ந்து போன மேகத்தில்
கொஞ்சம் கிள்ளி வந்தேன்

அதே குளிர்ச்சியோடும்
அதே மென்மையோடும்
இன்னும் பத்திரமாகத்தான்
என்னிடம் இருக்கின்றது

கிள்ளி வந்த மேகத்தில்
நனைந்து தணிவது
எதுவெனத் தெரியாமல்
தகித்தபடி நான்!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...