Showing posts with label போர்க்குற்றம். Show all posts
Showing posts with label போர்க்குற்றம். Show all posts

Apr 27, 2011

போர்க்குற்ற நிரூபணத்தின் பின்னே…

ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு அடுத்த நிமிடங்களில் மறுமுனைக்கு எட்டும் தொடர்புமிகு விஞ்ஞான உலகத்தில்தான் ஒரு பெரும் இனத்தை அழித்தொழித்த அவலம், போர்க்குற்றமாக அறிவிக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் நாட்களை வலியோடு தின்று தீர்க்கவேண்டியிருக்கிறது. ஐ.நா. நிபுணர்குழு புதிதாய் ஒன்றையும் சொல்லவில்லை, நடந்தேறிய அகோரத்தனத்தின் கொஞ்சம் பகுதிகளை ஆம் என ஒப்புகை அளித்திருக்கிறது.

எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு தலைவனும், எந்த ஒரு நாடும் செய்யத்துணியாத இன அழிப்புப் போரை தம் மக்கள் மீதே தொடுத்த இலங்கை அரசின் கயமைத்தனத்தை பல கள்ள மௌனங்களுக்குப் பிறகு உலகம் காதில் வாங்கியிருக்கிறது. நடந்தேறிய கயமைத்தனமே கடைசியாக இருக்கும் வண்ணம், இலங்கை அரசு மேல் உலகம் எடுக்கும் நடவடிக்கை அமையவேண்டும்.

கண்ணுக்குகண், பல்லுக்குப்பல் கேட்கும் நிலையில் யாரும்மில்லை. இலங்கை அரசாங்கம் இழைத்த போற்குற்றத்தில் எம் இனம் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. அதைவிட மிக முக்கியமானது இன்னும் தொடரும் இழப்பு உடனடியாக இத்தோடு நிறுத்தப்படவேண்டும். பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தவர்களை, உலகின் மிகக்கொடூரமானதொரு முகாமிற்குள் அடைத்து வைத்து சிறுகச் சிறுக உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக சிதைக்கும் அவலம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

இன்னும் முகாம்களில் எஞ்சி நிற்கும் மனித இனத்தை மீட்டெடுத்துக் காப்பாற்றவேண்டியது மிக மிக அவசரத்தேவையென்பதை மனிதாபிமானம் கொண்ட உலக நாடுகள் உணரவேண்டும்.

பயன்படுத்தக்கூடாத நச்சுக்குண்டுகளை வீசிய ஒரு அரசாங்கம், சரண் அடைந்தவர்களை உடைகளைந்து கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, மண்டியிட பணித்து, காலால் உதைத்து பின்பக்கமாய் இருந்து சுட்டுக் கொன்ற ஒரு அரசாங்கம், ஆயுதம் தரிக்காத பெண் பிள்ளைகளை வன்புணர்ந்து உறுப்புகளைச் சிதைத்து வீசிய ஒரு அரசாங்கம், அதே மனிதர்களில் மிஞ்சியவர்களை எப்படி பாதுகாக்கும், நல்வாழ்வை அமைத்துக்கொடுக்கும் என நம்பமுடியும். 

ஆறு மாதங்களுக்கு முன்பு வவுனியா, ஓமந்தை முகாம்களை சாலைவழியே கடக்கும்போது கண்டபோதே உடலும் உயிரும் நடுங்கியது. நிழலற்ற மைதானத்தில் ஒரு மனிதன் குனிந்து செல்லும் அளவே இருக்கும் கூடாரத்திற்குள்ளே மழை, வெயில், குளிர் எல்லாவற்றையும் தாங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்து தங்களைத் தொலைத்து ஒரு பித்துப்பிடித்த மனோநிலையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இருக்கும் மனிதர்களை சமகாலத்தில் காண நேர்ந்தது. சில நாட்களுக்கு முன் கேட்டபோதும் அந்த முகாம்கள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன என்பதை அறியும் போது, மீள் குடியேற்றம் என்பது எந்தவிதமான அக்கறையோடும் நடைபெறுவதில்லை என்பதும் தெரிகிறது.

இதுவரை இலங்கை அரசாங்கம் காட்டிக்கொண்டிருந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்தின் கண்கட்டு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. அது  மிகப்பெரிய கயமைத்தனம் நிறைந்த வக்கிர ஆட்டம் என்ற உண்மை சற்றே காலம் தாழ்ந்து நிரூபணமாகியிருக்கிறது, இந்த நேரத்தை, இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உலக நாடுகள் உடனடியாக எஞ்சியிருக்கும் பாவப்பட்ட, பாரம் சுமத்தப்பட்ட அந்த மனித உயிர்களை மீட்டெடுக்க வேண்டும். தடைவிதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டவர் குழுக்களை அனுமதித்து, இன்னும் புதைந்து கிடக்கும் உண்மைகளை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட மக்கள் இனியாவது சுதந்திரக்காற்றை சுவாசிக்கவேண்டும், அத்தோடு இனப்படுகொலை செய்த இராஜபக்‌ஷே (எ) ”இலங்கையின் குடும்ப அரசாங்க நிறுவனம்” அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். காலம் எல்லாவற்றினும் வலிமையானது….. பார்ப்போம்… நல்லதே நடக்க(னு)ம்.
-0-
பொறுப்பி: உலக தமிழ்ச் செய்திகள் வலைப்பக்கத்திற்காக எழுதியது.
-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...